சிறுகதை கணையாழி ஏப்ரல் 2025 பிரசுரம்
“சமரசம்“
பேப்பர் போட்டானா? – கதவைத் திறந்த
வாகினியைப் பார்த்துக் கேட்டார் சிவமூர்த்தி. வெறுங்கையோடு அவள் வருவதே போடவில்லை என்பதை
உணர்த்தியது.
அதான் சொல்றனே…அவன் கணக்கு இந்த டைம்தான்ங்கிறதே
இல்லை. ஒரு நாளைக்கு ஆறுக்கே கிடக்கும். இன்னொரு நாளைக்கு ஏழரைக்குக் கிடக்கும். வேறொரு
நாளைக்கு எட்டரை, எட்டே முக்கால்னு எறிஞ்சிட்டுப் போவான். எல்லாமும் தப்பித்துன்னா மணி பத்துக்குத்தான். அப்பயும்
போடலைன்னா அன்னிக்கு மொங்கான்னு அர்த்தம்…
ஏற்கனவே அன்றைய கணக்கிற்கு மூன்று முறை
கீழே சென்று பார்த்துவிட்டு வந்ததற்கு அடையாளமாய் அலுத்துக் கொண்டார் சிவா. இதற்கென்றே
தனியே நேரம் ஒதுக்க வேண்டுமென்று தோன்றியது. தோன்றியதென்ன…நேரம் வீணாகிக் கொண்டுதான்
இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இரண்டு மாடி இறங்கி ஏற வேண்டும். காரணம் லிப்ட் சரியாய்
வேலை செய்வதில்லை. பாதியில் நின்று விடும் அபாயம். ஒரு முறை மாட்டி, கீச்சுக் கீச்சென்று
கீச்சி…சத்தம் தாளாமல் அய்யய்யோ…என்று ஆட்கள் ஓடி வந்து கையைப் பிடித்து இழுத்து மேலே
தூக்கி விட்டார்கள். வேட்டி அவுந்து, டவுசரோடு நின்று அசிங்கமாகிப் போனது. அந்தக் கை
வலி, உடம்பு வலி, மன வலி இன்னும்….! இனி ஒரு
முறை அப்படி அசிங்கப்பட முடியுமா? நான் என்ன கிறுக்கா?
லிப்ட் மெஷின் பாட்டரியைத்தான் எவனோ ஒருத்தன்
திருடிக் கொண்டு போய்விட்டானே?அது இருந்தால் கரன்ட் போனாலும் பாதியில் நிற்காது. இரண்டு மாடி பூனை போல் ஏறி திறந்து கிடக்கும் மொட்டை
மாடிக்குப் போய், லிப்ட் கதவைத் திறந்து…சாவகாசமாய்….எவ்வளவு சாமர்த்தியம்? அந்த மாடிக் கதவைப் பூட்டுங்கள், பூட்டுங்கள் என்றால்
எவனாவது கேட்டால்தானே? துணி உலர்த்த வேண்டியது…அப்படியே திறந்து போட்டுவிட்டுப் போய்விட
வேண்டியது…நடை பயில வேண்டியது…மாடியில் கும்மாளம் அடிக்க வேண்டியது..அப்படியே பெப்பரப்பே…ன்னு
போட்டு விட்டுக் கீழே இறங்கி விடுவது…ஒரே குப்பைக் கழிவுகள்…எவன் கூட்டுவது? எல்லாருக்கும்
வயசு மட்டும்தான் ஆகியிருக்கு….ஆனா எதுக்கும் வாயைத் திறக்கப்படாது…பழி சண்டைக்கு வந்து
விடுவார்கள்.
குறிப்பிட்ட டைம்னெல்லாம் போட முடியாது
சார்…பசங்க வேலைக்கு வர்றதப் பொறுத்து இருக்கு…தெனமும் எவனாச்சும் ஒருத்தன் காணாமப்
போயிர்றான்…சின்னப் பசங்கதான…அவிங்கள விரட்டவும் முடியாது…வந்த அன்னிக்கு நிச்சயம்…வராத
அன்னிக்கு நாந்தான் கொண்டாந்து போட்டுக்கிட்டிருக்கேன்…
ஓரொரு நாளைக்கு ஆறரைக்கே கிடக்கே…அது எப்படி?
– சந்தோஷமாய் அவனுக்குத் திருப்தியாய் இருக்கட்டும்
என்றே கேட்டார்.
அது நான் போடுறது சார்…சமயங்கள்ல ஒருத்தன்
கூட வரமாட்டானுங்க…பேசி வச்சிட்ட மாதிரி நின்னுடுவாங்க…பாருங்க…நேத்திக்கு வானுவம்பேட்டைல
கோயில் திருவிழா…மூணு நாளா அல்லோலப் படுது…பாட்டும் கூத்துமா அலறிக்கிட்டுக் கெடக்கு.
பசங்கள எப்டி எதிர்பார்க்க முடியும்? அங்கதான் கெடந்திருப்பானுங்க…நல்லாத் தெரியும்…ராக்கூத்து
அடிக்கிறானுங்க…காலைல இழுத்துப் பொத்திப் படுத்துக்கிறானுங்க…அவுக அம்மாக்களுக்குப்
பேசினா ஃபோனை எடுத்தாத்தானே…? இதுக்குத்தான் இந்தாளு கூப்பிடுவான்னு தெரியும்…கமுக்கமா
இருந்திடுவாங்க…இவிங்கள்லாம் வந்த அன்னிக்குத்தான் சார் நிச்சயம்…அப்டித்தான் சமாளிச்சு
ஓட்டிக்கிட்டிருக்கேன். அத்தக் கூலிதான….மாசச் சம்பளமா கொடுக்கிறோம்?
நீங்க ஒருத்தராவே போட முடியாதா? அந்தக்
காசெல்லாம் மிச்சமாகுமே…?
ஏன் சார்…நீங்க சொல்ற இத நான் யோசிச்சிருக்க
மாட்டேன்னு நினைக்கிறீங்களா? என்னவோ புது யோசனை மாதிரிக் கேட்குறீகளே…? அதெல்லாம் போட்டுப்
பார்த்தாச்சு…ஒண்ணும் பலிக்கலை. இதென்ன ஒரே எடத்துல, குறிப்பிட்ட ஒரு நகர்ல இருக்கிற வீடுகளுக்கு மட்டும் போடுற வேலன்னு
நினைச்சீங்களா? அதான் கிடையாது. யாரு பேப்பர் வாங்குறாங்கன்னு நினைக்கிறீங்க…? எல்லாரும்
டி.வி. நியூஸ் கேட்டுட்டு விட்டுர்றாங்க…அதான் இருபத்து நாலு மணி நேரமும் அப்பப்ப புதுசு
புதுசா செய்தி சேர்த்துச் சேர்த்துச் சொல்றானுங்களே…அப்புறம் அதைப் பேப்பர்ல வேறே படிக்கணுமாக்கும்...ரொம்பக்
கொஞ்சப் பேர்தான் சார்…அதாவது பல வருஷமா விடாமப் படிச்சிட்டு வர்றாகள்ள…அவுக மட்டும்தான்
பிடிவாதமா வாங்குவாங்க…இப்பத்தான் குழந்தைக படிப்புக் கெடுதுன்னு நிறைய வீடுகள்ல டி.வி.யவே
ஆஃப் பண்ணி வச்சிடுறாகளே…? அந்த மனுஷாளையும்
சேர்த்துக்குங்க…! இப்போ உங்க வீட்டுக்கு நான்
போடுறேன்…எப்பருந்து? ஒரு வருஷமா இருக்குமா…? அதுக்கு முன்னாடி யார்ட்ட வாங்கினீங்களோ
தெரியாது…ஆனா பாருங்க…உங்க ஏரியாவுலயே ரெண்டு மூணு வீடுகதான்….அதுக்காகவே நான் உள்ளார
கடைசில இருக்கிற உங்க அபார்ட்மென்டுக்கு வம்படியா வர வேண்டியிருக்கு…சில நாட்கள்ல பேப்பர்
வரலன்னு ஃபோன் பண்ணுறீங்கதானே…அது என்னான்னு நினைக்கிறீங்க…? பசங்க இங்க வர சோம்பேறித்தனப்பட்டுக்கிட்டுத்தான்….இருபது
தெரு நீண்டு கெடக்கு உங்க பகுதில…நீங்க பதிமூணுல கிடக்கீங்க…மெயின் ரோட்டுலர்ந்து
புகுந்து புகுந்து உள்ளே வரணும்ல சார்…இதுல நிறையக் குறுக்குத் தெருக்கள் வேறே…கொஞ்சம்
மாறிச்சின்னா என்னடா வீட்டக் காணலன்னு திரும்பிடுவானுங்க…அவிங்கள எதுவுமே சொல்ல முடியாதாக்கும்…எதாச்சும்
வாய விட்டோம்…முறுக்கிக்கிட்டு மறுநாள்லர்ந்து வரவே மாட்டானுங்க…ஆள் கிடைக்கிறது குதிரக்
கொம்பு சார் இந்த வேலைல…அடிக்கிற பனிக்கு எந்திரிச்சு வரணும்ல…சுருட்டி மடக்கி, இழுத்துப்
பொத்திப் படுத்துட்டானுங்க…எமனே வந்தாலும் எழுப்ப முடியாதாக்கும்….!
அவனின் நீண்ட பேச்சு எனக்கு மிகவும் ஸ்வாரஸ்யமாய்த்தான்
இருந்தது. இதுவரை மூணு ஏஜென்டுகள் மாற்றியாயிற்று. எல்லாமும் ஒரே மாதிரித்தான் என்று
தோன்றியது. வருடாந்திரச் சந்தா கட்டி விடுபவன் நான். ரெண்டு பேப்பருக்கு. அதாவது தமிழொன்று,
ஆங்கிலமொன்று. அப்படிச் செலுத்தும்போது நமக்கு லாபமே. ஒரு பேப்பரைத் தினமும் காசு கொடுத்து வாங்கினால்
என்ன தொகை வருமோ அந்த அளவுக்குத்தான் இரண்டு பேப்பருக்கான வருடச் சந்தா.
ஆனால் பாருங்கள்…பல நாட்கள் பேப்பர் போடாமல்
விடுபட்டுப் போகிறது என்பதுதான் துயரமே. மழை பெய்தால் பேப்பர் வராது. சனி ஞாயிறில் சமயங்களில் பேப்பர் வராது. திடீரென்று சில நாட்களுக்கு காரணமேயில்லாமல்
பேப்பர் வராது. கேட்டால்…அப்டியா…போடச் சொல்றேன்
என்று பதில் வரும். ஆனால் வராது. நாளைக்குச் சேர்த்துப் போடுவான் என்று கூறுவார்கள்.
நாளைக்கு நாளைப் பேப்பர்தான் வரும். வந்தாலும் செய்தி பழசாச்சே என்று ஒதுங்கி விடும்.
ரெண்டில் ஒன்று வந்திருக்கும். அந்த ஒன்றும் வீசியெறியப்பட்டு தாள் தாளாய்ப் பறந்து
கிடக்கும். போதாக் குறைக்கு உள்ளே வந்து போகும் நாய்கள் குதறி வைத்திருக்கும். அல்லது கார் பார்க்கிங்கில் இருக்கும் ஈரத்தில் கிடந்து
இஞ்சியிருக்கும். அதை அலுங்காமல் எடுத்து வந்து கொடியில் உலர்த்தி கிளிப் போட்டு காய்ந்த
பிறகு படிக்கும்முன் ரெண்டு நாட்கள் தாண்டி விடும். தரை அழுக்குகள் சேர்ந்து அப்பிக்
கிடக்கும் பேப்பரை எப்படிக் கையில் வைத்துப் படிக்கத் தோணும். இப்படிப் பல நஷ்டங்கள்
நடை முறையில். ஆனாலும் விட முடியவில்லையே என்பதுதான் இதில் அதிசயம்.
வருஷங்கூடி ஒரு மாசப் பேப்பர் போடாமப்
போவானா…தொலையட்டும்…அப்டியும் நமக்கு லாபந்தான். இந்த மட்டுமாவது போடுறானே… - இது வாகினியின்
ஸ்டேட்மென்ட். அவளுக்கு பேப்பர் இல்லாமல் ஆகாது. வீட்டு வேலைகள் எல்லாமும் முடிந்த
பின் ஆசையாய் அவள் கையிலெடுப்பது செய்தித்தாள்தான். அதோடு கொஞ்சுவாள். அதிலும் ஆங்கிலச்
செய்தித்தாள். அவளுக்காகத்தான் ரெண்டு பேப்பர். மேய்ந்து கட்டி விடுவாள். இண்டு இடுக்கு
ஒன்று விடாது.
தமிழ் பேப்பரை ஒரு புரட்டு. ம்உறீம்…இதெல்லாம்
என் தகுதிக்கு கைனாலயே தொடக் கூடாது…என்பது போல…!
சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள். படித்தவள். ஆங்கில அறிவு அதிகம். வேலை பார்த்த
இடமும் அப்படி. பாவம்…எனக்காகத் தமிழில் பேசக் கற்றுக் கொண்டாள். அப்படித்தான் சொல்லியாக
வேண்டும். அடிக்கடி வந்து விழும் ஆங்கில வார்த்தைகள் கூட அவளிடம் மறைந்துதான் போயின.
அதற்காகத் தமிழ் சிறப்பாய்ப் பேசுவாள் என்று பொருளில்லை. ஏதோ பேசுவாள். வீட்டு அளவுக்கு.
மொழிங்கிறது ஒரு காரணி. பரஸ்பரம் பகிர்ந்துக்கிறதுக்கு
இருக்கிற ஒரு வழிமுறை…இப்படிச் சொல்லிச் சொல்லி அவளைக் குட்டி, பாஷையையே மாற்றி விட்டவன்
நான். அந்த இங்கிலீஷ் பேப்பரை நான் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டேன். என்னோட அலர்ஜி
அது. ஆனால் பாருங்கள்…நானும்தான் முப்பத்து மூணு வருஷம் டிபார்ட்மென்டில் சர்வீஸ் போட்டவன்.
இங்க வேலை செய்றதுக்கு குறைந்த பட்சம் இருநூற்றைம்பது ஆங்கில வார்த்தைகள் தெரிஞ்சாப் போதும்…மொத்த சர்வீசையுமே
ஓட்டிடலாம்…என்று சொல்லியிருக்கிறேன் நான். அதையே வச்சு வளைச்சு வளைச்சு எழுதி வண்டி
ஓட்டி, ரிடையர்டும் ஆயிட்டேன். பயங்கரமா டிராஃப்டிங் எழுதுவாரே சாரு…என்பார்கள் என்னை.
அப்போ அவுங்க என்ன லட்சணம்னு நீங்களே யோசிச்சிக்குங்க…அந்தக் கண்றாவிய நான் வேறே வாய்விட்டுச்
சொல்லணுமா? வெட்கக் கேடு…!
சரி…பிரச்னைக்கு வருவோம்…
வாகினி…நான் வேணும்னா ஒருவாட்டி கீழே போய்
பார்த்திட்டு வரட்டுமா? என்றேன். பேப்பர்
வரலைன்னா அந்த நாள் அவளுக்கு தற்கொலைக்கு சமம்.
இப்பத்தானே நானே மேலே வந்தேன். அதுக்குள்ளேயுமா
போட்டிருப்பான். சித்த கழிச்சுப் போங்க…..! உடனே குடு குடுன்னு ஓடணுமா?
அப்டியில்லை…நீ மேலே வர்றபோதுகூட சர்ர்ர்ன்னு
வந்து வீசியிருப்பான். தோன்றி மறையறதுதானே…! சொத்துன்னு போடுற சத்தமா இங்கே கேட்கப்
போகுது…தொங்க விட்டிருக்கிற பைல போடுங்கன்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு. போடுறானா? வீசித்தான்
எறியறான். அட…தான் போடுறபோதே அது பேப்பர் பேப்பரா பிரிஞ்சிடுச்சின்னு பறக்கிறதப் பார்த்திட்டே
வண்டியை விடுறான். ரெண்டு பேப்பரையும் சுருட்டி, உருட்டிப் பந்து போல உள்ளே எறிப்பா…ன்னும் சொல்லிட்டேன்…கேட்டாத்தானே…!
பையில போடுற பொறுமையெல்லாம் பசங்களுக்கு
இருக்காது சார்….அதெல்லாம் அவிங்ககிட்டே எதிர்பார்க்க முடியாது, சொல்லவும் முடியாது…உள்ளேதான் எறிவாங்க…ன்னே சொல்லிட்டான்.
நாமதான் உடனடியாப் போய் பொறுக்கிக்கணும். பேப்பர் வேணும்னா பட்டுத்தான் ஆகணும். அவுங்களால
முடிஞ்சது அவ்வளவுதான்…இல்லன்னா வேண்டாம்னு நிறுத்தணும்.
தினசரி கடைக்கு ஒரு நடை போயி வாங்கிக்கணும். அப்போ காசு டபுள் பங்கு ஆகும்….பரவால்லியா? டபுள்
பங்கை விடக் கூடத்தான்னு நினைக்கிறேன். கணக்குப் பண்ணிப் பாரு…தெரியும்…அதுக்கும் நமக்கு
மனசாகாது…அப்புறம் என்னதான் செய்றது?
கீழே இறங்கினேன். லிப்டில் போவதில்லை
என்றுதான் முடிவு செய்தாயிற்றே? இறங்கும்போதும் ஏறும்போதும் படு கவனமாய் இருக்க வேண்டியிருக்கிறதுதான்.
கொஞ்சம் பிசகினால் தடுமாறி உருள வேண்டியதுதான். வாழ்க்கையில் தடுமாறாமல் இவ்வளவு தூரத்திற்கு
வந்து கடைசி காலத்தில் போயும் போயும் மாடிப் படியிலா தடுமாறித் தலைகுப்புற விழ வேண்டும்?
பக்கக் கம்பிகளைக் கை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது.
பேப்பர்காரனால் கிடைக்கும் புண்ணியம்.
காலை நடைப் பயிற்சி…. மேலுக்கும் கீழுக்கும்.
நான் இறங்கிப் போய் நிற்க….அந்தப் பேப்பர்
ஏஜென்டே பிரத்தியட்சமாக, சரியாய் இருந்தது. வியர்க்க விறுவிறுக்க…பொறி கலங்கிப் போய்….பார்க்கவே
பரிதாபமாய்த்தான் இருந்தது. ஏனிப்படி படு டென்ஷனாய்?
அமர்த்தலாய் நின்றேன்.
ரெண்டு பேப்பர்….நீங்கதான சார்…இந்தாங்க…என்றவாறே
எடுத்து நீட்டினான்.
பசங்க வரமாட்டேங்கிறாங்க சார்…அவிங்களுக்கு
சர்வீஸ் சார்ஜ் வேணுமாம்…ரொம்ப உள்ளாற இருக்குல்ல…இம்புட்டுத் தூரம் வர முடியாதுங்கிறாங்க…வேலய
விட்டுப் போறேன்கிறானுங்க…சமாளிக்க முடில…
நான் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டு நின்றேன்.
என்ன சொல்ல வருகிறான்?
ஒரு முப்பது ரூபா மட்டும் கொடுத்திடுங்க
சார்…சர்வீஸ் சார்ஜா…ரெகுலராப் போட்டுடச் சொல்லுவோம்….பசங்க ரொம்பச் சடைக்கிறாங்ஞ….ஆளு
கிடைக்கல…..
என்னது முப்பதா? அது எதுக்கு? அதான் மொத்தமாப்
பணம் கட்டிட்டோம்லப்பா….ஆபீஸ்லதான் ஏஜென்டுகளுக்குக் கமிஷன் கொடுப்பாங்கல்ல….?
அப்ப விடுங்க சார்…..இனி பேப்பர் போட
முடியாது…..சொன்னவன் கண் இமைக்கும் முன் பறந்து விட்டான். இப்படிக் கண் நேரத்தில் முறித்து இதுவரை நான் எவனையும் பார்த்ததில்லை.
ஏய்…ஏய்…நில்லுப்பா….! – நான் கத்துவது அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
அடப்பாவி….! கடவுள் மாதிரி மறைஞ்சிட்டானே?
முப்பது ரூபா இந்தக் காலத்துல ஒரு காசா?
இதுக்குப் போய் யாராச்சும் முடியாதும்பாங்களா? அவன் ஃபோன் நம்பரை கொடுங்க…நான் பேசறேன்….
– வாகினி என்னை எகிறினாள்.
நான்தான் “ரெண்டு பேப்பர்“ வீட்லர்ந்து
பேசறேன்…அபார்ட்மென்ட்டு….தெரியுதா?
தெரியுதுங்கம்மா…சொல்லுங்க… - ஸ்பீக்கரில்
அவன் குரல் எனக்கு நன்றாய்க் கேட்டது.
எப்பயும் போல போடுங்க…நிறுத்திடாதீங்க…புரிஞ்சிதா…முப்பதில்ல…அம்பது
வாங்கிக்குங்க…ஓ.கே.யா…? உங்களுக்குக் கொடுக்கிறதுக்கென்ன…?
வாகினியின் குரல் வளமை அவனை மடக்கி விட்டதோ
என்னவோ? பெண்களின் ஆதரவான குரல் தாயின் கனிவையும், அரவணைப்பையும் ஒத்திருக்கிறதே…?
ஆகட்டுங்கம்மா….சந்தோசம்…போடச் சொல்றேன்…பசங்க
தவறாமப் போட்டுடுவாங்க….அய்யாட்டச் சொல்லிடுங்க….காலைல ஒரு டெத்து…அதான் பறந்து ஒடியாந்துட்டேன்….! அய்யா என்னமும் நினைச்சிக்கிடப்
போறாங்க…!
மறுநாள் ஐம்பது கை மாறியது. பேப்பரும் கைக்கு வந்தது. வாகினியின்
வெற்றி.
ஆனால் எப்பொழுதும் போல் சில நாட்கள் பேப்பர்
வராமலிருப்பதும், ஒரு பேப்பர் மட்டுமே வந்து கிடப்பதும், தாள் தாளாய்ப் பறந்து தட்டழிவதும்,
நாய் வாயை வைத்துக் குதறுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இன்றும்….!!
ஆனாலும் அவன்தான் பேப்பர் போடுகிறான்
இன்றும், இப்போதும்…! என்றும்…எப்போதும்…!!!
----------------------------------------------