03 நவம்பர் 2025

 

                                   

சிறுகதை    

“காலம்…கலிகாலம்…!”       தாய்வீடு பிரசுரம்-நவம்பர் 2025 இதழ்





நீ சாதாரணமா இருக்க வேண்டியதுதானே? – என்று கேட்டார் நாராயணன். தான் கேட்டது அந்தப் பெண்ணுக்கு…அதாவது தன் மருமகளுக்குப் புரிந்திருக்கும் என்று தோன்றவில்லை இவருக்கு. சாதாரணமா என்றால் எப்படிச் சொல்வது? யதார்த்தமாய் என்று சொல்லலாமா? அப்படிச் சொன்னால் பிறகு அந்த வார்த்தையை விளக்கியாக வேண்டி வரும். எளிமையாய் என்று சொல்லலாமா? அப்படிச் சொன்னால் நான் ஒண்ணும் படாடோபமா  ரிச்..சா இல்லையே? என்று சொல்ல வாய்ப்பிருக்கு. சாதாரணமா என்று சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு இப்போது இவர் தடுமாறிக் கொண்டிருந்தார்.

            அப்டீன்னா….? – நினைத்ததுபோலவே கேட்டது அது. கொஞ்சம் யோசித்தவர் பிறகு இப்படிச் சொன்னார்.

            உன் வீடு போல….உன்னோட வீட்டுல  நீ எப்டி இருப்பியோ …அது  போல இங்கயும் இருக்கலாமேன்னு சொல்ல வந்தேன்….என்றார்.

            எங்க வீட்டுல நான் இருந்தது போல எங்கயும் வராது. அந்த சந்தோஷம் வேறே எங்கயும் கிடைக்காது, அதுக்கு ஈடே கிடையாதுப்பா – சொல்லும்போதே முகம் மலர்ந்தது மாலாவுக்கு. நல்லவேளை…அப்பா என்றாவது சொல்ல வந்திருக்கிறதே? நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார் நாராயணன்.

            இப்படிச் சொல்கிறோமே என்கிற எண்ணம் இல்லை. சொல்வது சரியா? என்ற நிதானமும் இல்லை. இதைச் சொல்லலாமா வேண்டாமா என்கிற யோசனையும் இல்லை. சொல்லியாகி விட்டது.

            அதற்காக, தான் நிதானத்தை இழக்கலாமா? அப்புறம் அந்தப் பெண்ணுக்கும் வயசாகி முதிர்ந்த தனக்கும் என்னதான்  வித்தியாசம்? சூழலை இறுக்கமாக்கிக் கொள்ள நாராயணன் விரும்பவில்லை. பிறகு அடுத்தடுத்த பேச்சு, சண்டை என்று வளர்ந்து விடும் வாய்ப்புண்டு. நிதானித்தார்.

            கண்டிப்பா….உங்க வீட்டுல நீ இருந்த மாதிரி நிச்சயமா வேறே எங்கயும் இருக்க முடியாது. அது யாருக்குமே சாத்தியமில்லை. அவுங்கவுங்க பிறந்த வீடுன்னா அதுதானே பெரிசு எல்லாருக்கும்? – அரவணைத்தே பேசுவதாக எண்ணி இப்படிக் கூறினார்.

            எல்லாருக்கும் பெரிசோ இல்லையோ…எனக்குப் பெரிசு….!

            இதென்ன சமத்தான பேச்சா என்ன? என்று தோன்றியது நாராயணனுக்கு.

உணரப்பட வேண்டியவைகளை வார்த்தைகளில் வடிக்கும்போது அதில்தான் எத்தனை செயற்கைத் தன்மை  வந்து ஒட்டிக் கொள்கிறது?

(அதான் தெரியுதே…அடிக்கடி அங்க ஓடுறது….)-சொல்லவில்லை…நினைத்துக் கொண்டார்.            

            நான் சொல்ல வந்தது அது இல்லடா கண்ணு…உங்க வீட்டுல நீ இருந்த  மாதிரியே இந்தப் புகுந்த வீட்டுலயும் சுதந்திரமா, சந்தோஷமா இருக்கலாம்…இயங்கலாம்…உன்னை யாரும் எதுவும் சொல்லப் போறதில்லைன்னு சொல்ல வந்தேன்…இனிமே இதுதானே உன் வீடு….நீதான் எங்களுக்கு…நாங்கதான் உனக்கு…எல்லாம் நிறைவா இருக்கு …எதுக்கும் குறைப்பட்டுக்க எதுவுமில்லை… சந்தோஷமா இருந்திட்டுப் போவமே….எதுக்கு அநாவசியமா நேரத்தையும் பொழுதையும் கெடுத்துக்கணும்…அதத்தான் சொல்ல வந்தேன்…. –பூடகமாக, சுருக்கமாகச் சொல்லித் தீர்த்து விட்டோமோ என்றே தோன்றியது நாராயணனுக்கு.

            தையெல்லாம் அவன் சொல்ல வேண்டியது. தன் பிள்ளை குணசீலன். அவன் அவளிடம் பயப்படுகிறானோ என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. எதற்காகப் பயப்பட வேண்டும். சாதாரண, நடுநிலையான வீட்டுப் பெண்தானே? பணக்காரக் குடும்பமில்லயே? நடுத்தரக் குடும்பத்துப் பெண் நடுத்தரமாய் இல்லாமல் குதிக்கிறாள் என்று நினைத்து விட்டானோ? பயப்படுகிறான் என்பதை விட பேசுவதையே தவிர்க்கிறான் என்பதே சரி.

            அவ அவ்வளவுதாம்ப்பா… அவளுக்குத் தெரிஞ்சதெல்லாம் வெளில போகணும், சந்தோஷமா ஊர் சுத்தணும், ஓட்டல்ல திங்கணும், இஷ்டப்பட்ட பொருட்களை வாங்கணும்…ஜாலியா இருக்கணும்…மொபைல்ல சினிமாப் பார்க்கணும்..ரிலீஸ் படங்களைத் தியேட்டர்ல போய்ப் பார்த்தாகணும்…இப்டியே பொழுதைக் கழிக்கணும்…அவ்வளவுதான் அவளுக்குத் தெரியும்.  வேறே ஒண்ணும் பெரிய நாலெட்ஜ் எல்லாம் இருக்கிறதாத் தெரில. அவள் ஐ.டி. ஆபீஸ்ல அவளோட பிராஜக்ட் ஒர்க்கப் பத்தியே டீப் நாலெட்ஜ் இல்ல…நிறையத் திட்டு வாங்குவா போல்ருக்கு…வேறே ஜெனரல் நாலெட்ஜ், உலக நடப்பு, ஆட்சி, அரசியல்னு எதுவும் தெரியாது அவளுக்கு. நியூஸ் பேப்பரைப் பேருக்காவது புரட்டினாத்தானே? அதெல்லாம் சின்ன வயசிலேயிருந்து பழக்கப்படுத்தியிருக்கணும். அப்பத்தான் வரும்…

            இருக்கட்டுமேப்பா…அதனாலென்ன… அவ ஐ.டி. ஆபீஸ் வேலைகளை சமாளிக்க வேண்டியது அவ பொறுப்பு…அதப்பத்தி நாம ஏன் கவலைப்படணும்?-.

            அப்படியில்லப்பா…அவ என்னைப் போட்டு அனத்தறா.  ஒர்க் ஃப்ரம் உறாம் இருக்கச்சே…என்னை சதா சந்தேகம் கேட்டான்னா…நான் என் வேலையைப் பார்க்க வேண்டாமா? இனிமே அவ வீட்டுல இருந்து வேலை செய்கைல…நான் ஆபீஸ் தப்பிச்சுப் போயிடணும்னு இருக்கேன். என் தலவலியே பெரிய தலைவலி. பாதி இவ டியூட்டிய நானே பார்க்க வேண்டிர்க்கும் போல்ருக்கு? அப்புறம் நான் பைத்தியம் பிடிச்சு அலைய வேண்டிதான்….இது இப்டியே போச்சுன்னா கூடிய சீக்கிரம் படுக்கைல விழுந்திடுவேம்ப்பா…அது மட்டும் நிச்சயம்….!

            எல்லாம் போகப் போகச் சரியாப் போகும்ப்பா…கொஞ்சம் பொறுத்துக்கோ…கன்னா பின்னான்னு கற்பனை பண்ணிக்காதே…! -பையனைச் சமனப்படுத்த ஆறுதலாய்ச் சொன்னார் நாராயணன். ஒரு பக்கம் அவன் பழியாய் ஆபீஸ் வேலையே கெதியாய்க் கிடப்பதைப் பார்க்கும்போது அவருக்கே வயிற்றைக் கலக்கியது. இத்தனை மணி நேர வேலை என்று கணக்கே கிடையாதா? நாள் பூராவுமா பார்த்திட்டே இருக்கணும்? ஆபீஸ் போய் பார்த்தாச்சு. அப்புறம் என்ன வீட்டுக்கு வந்த பின்னும்? அந்தக் கம்ப்யூட்டரை மூடித் தொலையாம சதா அதை நோண்டிக்கிட்டே இருக்கணுமா? எவனாவது எதாவது கேட்டுக்கிட்டே இருப்பான்…பதில் சொல்லிட்டே இருக்கணுமா? இந்தியாவுல இது தூங்குற நேரம்னு அவிங்களுக்குத் தெரியாதா? அதான் பன்னெண்டு மணி வரை பார்த்தாச்சே…இன்னும் என்ன ஒண்ணு ரெண்டுன்னு? மரவட்டையாய் மகன் சுருண்டு கிடப்பதைப் பார்க்கையில் இவருக்கு வயிறெரிந்தது.

            எவ்வளவோ சொன்னார் குணசீலனுக்கு. சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப், பாங்க்…..குருப்-2 சர்வீஸ், குருப் 3 சர்வீஸ் என்று முயற்சி செய்து போய்விடு..இந்த ஐ.டி. ஃபீல்டுக்குள்ள  நுழையாதே…நாளைக்கு இது என்னவாகும்னு யாராலயும் சொல்ல முடியாது…என்று ஞானதிருஷ்டியாய் எடுத்துரைத்தார். காதிலேயே வாங்கவில்லையே பயல்? இதோ…இன்று ஏ.ஐ.  வந்து பயமுறுத்துகிறது. பத்துப் பேர் வேலை பார்த்த இடத்தில் மூன்று பேர் போதும் என்கிறார்கள். என்ன கதி ஆகுமோ? வெளியே சொல்ல முடியாமல் மனசுக்குள் கலங்கிக் கொண்டுதான் இருந்தார் நாராயணன். இவன் என்னடாவென்றால் வீட்டிலேயே நிம்மதியில்லாமல் கிடக்கிறானே? மத்தளத்துக்கு எல்லாப் பக்கமும் இடி என்றால்?  இறைவா…இதையெல்லாம் பார்க்கிறதுக்கா நான் உசிரோட இருக்கணும்…என்னைக் கொண்டு போயிடேன்…-மானசீகமாய்க் கடவுளிடம் அவர் வேண்டாத நேரமில்லை. வயசான காலத்தில் என்ன மனச் சுமை இது?

            தாச்சும் பரவால்லப்பா…ஒவ்வொரு சனி ஞாயிறும் ஊர் சுத்தணும்னா என்ன அர்த்தம்? அம்மாதான் பக்குவமா சமைக்கிறால்ல… வீட்டு வேலைகள்ல  உதவி செய்ய வேண்டாம்… செய்து போடுறத கமுக்கமா சாப்பிடலாம்ல…மாட்டாளாம்…ஃபோன் பண்ணி சாப்பாடும், டிபனும் வரவழை ச்சித்தான் சாப்பிடுவாளாம்…அதுதான் பிடிக்குமாம்..அவன் எந்த எண்ணெய்ல பண்ணினானோ, எப்பப் பண்ணினானோ, பழசச் சுட வச்சுக் கொண்டாந்தானோ இல்ல புதுசோ? …எதுவுமே தெரியாதே? வயித்துக்கு ஒத்துக்காததை யெல்லாம் வாங்கி நிரப்புவேன்னா? குப்பைத் தொட்டியா வயிறு?   பணமும் அதிகம்…உடம்புக்கும் கெடுதி…எதுக்கு அநாவசியமா காச விரயம் பண்ணனும்…தேவைக்கு .செலவு பண்ணலாம்..விரயம் பண்ணலாமா? -எது சொன்னாலும் கேட்கிறதில்லப்பா. தீவிரமா முடியாது அது இதுன்னு சொன்னோம்னா உடனே முகத்தைத் தூக்கி வச்சிட்டு மூலைல போய் முடங்கிக்கிறா! அழ ஆரம்பிக்கிறா! அவ சொல்றதுக்கு மறுப்பு சொன்னாலே பிடிக்கலப்பா? உறிஸ்டீரியா பேஷன்டா? நாள் பூராவும் உம்மணாம் மூஞ்சியா வெறி பிடிச்சவ மாதிரி உட்கார்ந்திருக்கிறதுக்கு? சகிக்க முடிலப்பா….கல்யாணமே பண்ணியிருக்க வேண்டாம் போல்ருக்கு….நீதான் சொன்னே…இன்னும் சிலது பார்ப்போம்…அப்புறம் முடிவு பண்ணுவோம்னு…நான்தான் உன்னை அவசரப்படுத்திட்டேன்…இப்பயே போய் சம்மதம் சொல்லிட்டுவான்னு…இப்பத்தான் என் புத்திக்கே உரைக்குது…..

            மனசுக்குள் அழ ஆரம்பித்திருந்தார் நாராயணன். வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார். பையனைச் சமாதானப்படுத்துவதா அல்லது அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறுவதா?

            காலையில் பதினோரு மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்தால்? அதுவே இவருக்குப் பிடிக்கவில்லை. கண்கொண்டு எதையும் பார்க்க வேண்டாம் என்று அறையே கதியாகக் கிடந்தார்.

ரெண்டாம் வகுப்புப் படிக்கும் பையனை ஆறு மணிக்கே எழுப்பி பல்தேய்த்து. குளிப்பாட்டி, யூனிபார்ம் போட்டு ஷூ மாட்டி சாப்பாடு கொடுத்து எட்டு மணிக்கு வந்து நிற்கும் ஆட்டோவில் ஏற்றி அனுப்புவது வரை எத்தனை டென்ஷன்?

பாதி வேலையை இவர் வாங்கிக் கொண்டார். நான் கொடுக்கிறேன் டிபன்…எங்கிட்ட விட்டிடு….யூனிஃபார்ம் போட்டு விடுறேன் என்று பகிர்ந்து கொண்டார். தலைக்கு எண்ணெய் தேய்த்து, சீவி, பொட்டிட்டு தயார் பண்ணி கீழே கொண்டு போய் நிறுத்தி ஆட்டோவில் ஏற்றி விடுவது வரை தனது வேலை என்று சிரமேற்கொண்டு செய்யலானார்.

அந்தந்த நாளின் விடியல் என்பதே பிரம்மப் பிரயத்தனமாய் இருந்தால்? தான் பெற்ற பிள்ளைக்கே எதுவும் செய்யாமல் இப்படி அடிச்சிப் போட்டது போல் அயர்ந்து தூங்கினால்? வீட்டில் நடக்கும் வேலைகளின் சத்தம் கூடவா ஆளை எழுப்பாது? ஒரு பிள்ளை பிறந்த பின்னும் பழையபடியே இருந்தால்?

இறைவா ஏனிந்த சோதனை? இது என்று சரியாகும்? சரியாகுமா அல்லது இப்படியேதான் தொடருமா?

யோசித்து யோசித்து ஒன்றும் தோன்றாமல் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார் நாராயணன். அநாவசியத்திற்கு வீட்டில் ஏன் சண்டை. அது அவருக்குப் பிடிக்கவில்லை. மீனாட்சியைப் போல் தானும் இயன்றவரை வீட்டு வேலைகளை இன்னும் அதிகமாகக் கையிலெடுத்துக் கொண்டு செய்து சமாளிப்பது என்கிற இறுதியை எட்டினார். அந்தப் பெண்ணாய் உணர்ந்து என்று களத்திற்குள் வருகிறதோ அதுவரை பொறுத்திருப்பது என்று முடிவு செய்து கொண்டார். காலம் எல்லாவற்றையும் மாற்றிப் போடாமலா போகும் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டார். எதையும் பொருட்படுத்தாமல் மீனாட்சி மட்டும் தன் வேலையே கதியாகக் கிடக்கிறாளே…அர்ப்பணிப்பு..அவளை மாதிரியே தானும் இருந்துவிட வேண்டியதுதான். எதற்கு பொறுமிக்கொண்டே கிடக்க வேண்டும்? தீர்வு என்று கிடைக்கிறதோ கிடைக்கட்டும்.  காலம் கனியாமலா போகும்?.

ப்போது அந்த ஃபோன் மணி ஒலித்தது. போய் எடுத்தார். எதிர் வரிசையில் மணிவாசகன்தான் பேசினார். சம்பந்தி. என்ன சொல்லப் போகிறாரோ, ஏது நடக்கப் போகிறதோ என்றிருந்தது இவருக்கு. இந்தப் பெண் ஏதேனும் புகார் கொடுத்திருக்குமோ? எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை, புறப்பட்டு வர்றேன் என்று அப்பாம்மாவை விரட்டியிருக்குமோ?

 

சம்பந்தி…நல்லாயிருக்கீங்களா…பேசவேயில்லையே? – அழுத்தமாய் வந்தது வார்த்தைகள்.

எங்க பேசுறதுக்கு நேரம்? அதான் கால்ல சக்கரத்தக் கட்டிட்ட மாதிரி வீட்டு வேலைகள் மென்னியைப் பிடிக்குதே….! மூச்சு விட முடியலை…. – நேரடியாக எதையும் சொல்ல வாய் வராமல் யதார்த்தமான பதிலைச் சொன்னார் நாராயணன்.

ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் பக்குவமாச் சொல்லியனுப்பறேன்…பொறுப்பா நடந்துக்குவா எம் பொண்ணு …நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க….எனக்கு எல்லாம் தெரியும்….

என்ன சொல்றீங்க….புரியலை….- புரியாதமாதிரியே கேட்டார் நாராயணன்.

ஒரு வாரத்துக்கு மாலாவை எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க…எல்லாம் சரியாப் போயிடும்….திரும்பி வர்றபோது பாருங்க…

அப்டியா…சரி….சொல்றேன்….-தயங்கியவாறே கூறினார் நாராயணன்.

எதிர்த் திசையில் ஃபோன் வைக்கப்பட்டது.

அறையை விட்டு வெளியே வந்தார் நாராயணன்.

வாசலில் ஆட்டோ சத்தம்.

அதுக்குள்ளயும் புக் பண்ணியாச்சா…? - நினைப்பதற்குள்

அப்பா…அம்மா….நான் போயிட்டு வர்றேன். ஒரு வாரத்துக்கு அங்க வரச் சொல்லியிருக்கா அப்பா…அவர்ட்ட ஃபோன்லயே சொல்லிட்டேன்…. -கூறியவாறே கையில் பேக்குடன் மாலா கிளம்பியதை வாயடைத்துப் பார்த்துக் கொண்டு நின்றனர் நாராயணனும் மீனாட்சியும். இருவருக்கும் மனசு விச்ராந்தியாய் உணர்ந்தது.

                                    -------------------------------------

 

           

 

           

 

கருத்துகள் இல்லை: