22 மே 2025

 

சிறுகதை    கணையாழி மே 2025  பிரசுரம்

“தூ(பூ)ங்கா நட்பு”




 மாலையில் அந்தப் பூங்காவுக்குச் செல்வோமா வேண்டாமா என்கிற அளவுக்கு யோசிக்க ஆரம்பித்து விட்டார் ஜம்புகேஸ்வரன். தான் குடியிருக்கும் அந்தப் பகுதியில் வேறு எங்கு பூங்காக்கள் உள்ளன என்று அவர் மனம் தேட ஆரம்பித்திருந்தது. அங்கு போனாலும் எப்படியிருக்குமோ?. ஒரே மனக் கிலேசங்கள் அங்கும் உலா வராது என்பது என்ன நிச்சயம்?

                        அந்த நகருக்குள் வந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டனதான். ஆனால் பூங்கா என்று செல்ல ஆரம்பித்தது பணி ஓய்வு பெற்ற பின்புதான். அந்த வழி கூட அவர் போனதில்லை. என்றாவது தப்பித் தவறிப் போயிருந்தால் அங்கிருந்து எப்படி வீட்டுக்கு வந்து சேருவது என்று தடுமாறியிருக்கிறார்.  ஒரே ஒரு முறை அது நிகழ்ந்திருக்கிறது. பலரும் பல வழிகளில் சர்ரு…புர்ரு…என்று வண்டியை விட்டுக் கொண்டு மாற்றி மாற்றி வெவ்வேறு பாதைகளில் போய் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜம்புவுக்கு ஒரு வழிதான். அது அடைபட்டால் அருகில் ஒரு குறுக்குச் சந்து. அதன் வழியாக வெளியேறி விடுவார்.  பெரும்பாலும் அந்த வழியைப் பின்பற்றுவதில்லை. காரணம் அங்கு நாய்கள் அதிகம். குலைத்துக்கொண்டே சட்டென்று பாய்ந்து விட முடியும். அந்த அளவுக்குக் குறுகலானது. வலியப் போய் வம்பை விலைக்கு வாங்குவானேன்?

                        இப்படிப் பொழுதே போகாமல் நாட்கள் கழியும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. ஓய்வு பெற்று இன்னும் ஓராண்டு கூடக் கழியவில்லை. அதற்குள் நாளும் பொழுதும் சித்ரவதையாக இருந்தது அவருக்கு. சர்வீஸ் முடியும் தருவாயில் ஒரு திட்டம் வைத்திருந்தார்.  குறைந்தபட்சம் தமிழ்நாடு முழுவதுமாகவாவது சுற்றிப் பார்த்து விடுவது என்று. முக்கிய ஊர்கள், ஸ்தலங்கள், கோயில்கள் என்று விபரங்களடங்கிய சுற்றுலா நூல் ஒன்றும் வாங்கி பலவற்றை மனதில் ஏற்றி வைத்து ஆவலோடுதான் காத்திருந்தார்.   வீச்சும் விறைப்புமாக  எடுத்த எடுப்பில் ஓய்வுக்கு மறுநாளே கிளம்பி பிள்ளையார்பட்டி சென்று விநாயகரைக் கும்பிட்டு தன் பயணத்தை ஆரம்பித்து வைத்துக் கொண்டார். என்ன காரணத்தினாலோ மறுநாளிலிருந்து அது நின்று போனது. எடுத்த எடுப்பிலேயே அப்படி முடங்கிப் போகும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. புஸ்வானம் ஆகிப்போனது.

                        எதற்காக அப்படி நிறுத்தினோம் என்று இன்றும் யோசித்துப் பார்க்கிறார், புலப்படவில்லை. இருந்த இடத்திலேயே அமர்ந்து புஸ்தகங்கள் படிக்கும் ஆர்வம் தன்னை முடக்கி விட்டதோ?. காலை டிபனை முடித்து விட்டு ஒன்றரை கி.மீ. தூரத்தில் இருக்கும் ஆயுதப்படை நூலகத்துக்குச் சென்று பத்திரிகைகளை, தினசரிகளை மேய்வதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் இல்லை என்று தோன்றிவிட்டது.

                        எதிர்த்தாற்போல் இருக்கும் மாரியம்மன் கோயிலில் பூஜை மணி அடிக்கும் வேளை எழுந்து போய் அங்கு நிற்பதும், பிரசாதம் தரும்போது தொன்னையில் அதை வாங்கி வெளியே வந்து நிதானமாகச் சுவைப்பதுமான சாவகாச சந்தோஷம் அவரை முடக்கி விட்டது. அது முடிந்த கையோடு திரும்பவும் நூலகத்தில் வந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பதும், பதினொன்றரை வரை அங்கேயே கிடப்பதுமான பொழுதுகள் எதற்கு வெட்டிக்கு அலைந்து கொண்டு என்று அவரை ஒரேயடியாக சோம்ப வைத்து விட்டன.. நூலகம் அருகில் ஒரு அடர்ந்து பரந்து முதிர்ந்த மரம். அதைச் சுற்றி வட்டமாய் மேடை கட்டியிருந்தார்கள். ஜிலு ஜிலுவென்றிருந்தது.அங்கு பலரும் வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். சிலர் படுத்து அயர்ந்து தூங்கியும் விடுகிறார்கள். நிற்சிந்தையான உறக்கம். இவருக்கும் ஆசை வந்துவிட்டது. மெல்ல மெல்லப் போய் அங்கு உட்கார ஆரம்பித்தார். புதிதாய்ச் சேர்த்துக் கொள்வார்களோ மாட்டார்களோ என்ற சந்தேகம். யாரும் ஒன்றும் சொல்லவில்லைதான். ஆஉறா…என்ன சுகம். மேடைத் தரை குளுகுளுவென்றிருந்தது. கண்ணைச் சுற்றியது. படுத்தால் ஆளைச்சுருட்டி எங்கோ கொண்டு சென்றுவிடும். தினசரி வரும் ஆள்தான் என்று தன்னை அந்த இடத்திற்குப் பழக்கப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஒன்று கவனித்தார். அங்கு யாரும் யாருடனும் ஒரு வார்த்தை பேசிக் கொள்வதில்லை. தெரிந்தவர்களாகவே காட்டிக் கொள்வதில்லை. இடம் பிடிக்கப் போட்டி. நாடு சுதந்திரம் அடைந்தபோது வந்து படுத்தவங்க…என்று ஏதோவோர் படத்தில் வசனம் வருவதை நினைத்துக் கொண்டார்.யாரும் எதுவும் பேசிக்கொள்ளாதது சற்றுப் புதுமையாக இருந்தது. தன் பயணத் திட்டம் நின்று போனது இப்படி ஒரு இடத்தைக் கண்டு பிடிப்பதற்குத்தானோ? என்று நினைத்துச் சிரித்துக் கொண்டார் ஜம்புகேஸ்வரன். தொடர்ந்திருக்கும்தான். அதற்கு வேறொரு புதிய காரணம் தோன்றியது அவர் மனதில்.

கூட யாராவது இருந்தால் பரவாயில்லை என்பதுதான். தன்னைப்போல் ஆர்வமுள்ள இன்னொருவர் துணைக்குக் கிடைத்தால் தன் பயணம் விடாது தொடரும் வாய்ப்புண்டு என்று அவர் மனம் சொல்லியது. நொண்டிக் கழுதைக்கு சறுக்கினது சாக்கு. மனிதன் தன் செயல்களுக்கு, முடக்கங்களுக்குக் காரணங்களைத் தேடிச் சமாதானமடைகிறான்.  பல முயற்சிகள் இப்படித்தான் வீணடிக்கப்பட்டு விடுகின்றன. அவரை விட இரண்டு வயது பெரியவள் அவர் மனைவி ஜெகதாம்பாள்.  காதல் மனைவி.  வயது தடையில்லாமல் போனது. முன்பே அவளும் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டவள். அவளாவது கூட வருகிறேன் என்றாளா? என்னாலெல்லாம் அப்படி அலைய முடியாது என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டாள். பென்ஷன் வருது, தாராளமா செலவு பண்ணலாம், போற எடத்துல ரூம் போடறேன். வசதியாத் தங்கிக்கலாம், நல்ல ஓட்டலாப் பார்த்து சாப்பிடலாம்…ஒண்ணும் பயமில்லை என்று எல்லாமும் சொல்லித்தான் பார்த்தார்.

இங்க இருக்கிற கோயில் குளங்களுக்குப் போனாப் போதும் எனக்கு..என்று விட்டாள்.  மனமே கோயில்தான். தனிமையில் அமர்ந்து தியானிக்க முடியாதா? பயிற்சியில் அந்தப் பலன் கிட்டாமலா போய்விடும்? இவருக்கும் அப்படித்தான் தோன்றியது.  இசை கேட்பதில், கண்மூடி தியானிப்பதில் எப்பொழுதும் ஆர்வம் இருந்தது.  தனிமையை விரும்பாதவன், தனிமையில் இருக்க முடியாதவன், இருக்கத் தெரியாதவன் ஒரு மனிதனே அல்ல என்பது இவரின் வாதம்.

அந்தத் தனிமை உணர்வுதான் அவரை இப்போது தள்ளி வைத்து விட்டதோ என்று தோன்றியது. இல்லையென்றால் அந்த தண்டீஸ்வரம் பூங்காவிற்குச் செல்லத்தான் வேண்டுமா என்று இப்போது ஏன் தோன்ற வேண்டும்? வெறுமே நடைப் பயிற்சி  செய்து விட்டு ஆசுவாசமாக அமர்ந்தால் அதுவே அரட்டைக்கும் வம்பிற்குமான இடமாகப் பரிணமித்து, இதையெல்லாம் பேசித்தான் ஆக வேண்டுமா? என்று தோன்றுமளவுக்கு அவரை ஒதுக்கி வைத்து விட்டது.

 எப்போதுமே அடுத்தவர்பற்றிப் பேசுவதில், வெட்டி அரட்டை அடிப்பதில் அவருக்கு ஈடுபாடு இருந்ததில்லை. தானுண்டு. தன் வேலையுண்டு…அவ்வளவுதான். மொத்த சர்வீசும் அவர் அப்படித்தான் கழித்திருக்கிறார். அதனாலேயே அவரைப் பலருக்கும் பிடித்திருந்தது. இந்தாளால எந்த வம்பும் இல்லப்பா…பிரச்னையில்லாத ஆசாமி…!

ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதிலும் அதுபற்றி விமர்சித்துப் பேசுவதிலும்தான் இந்த மனிதர்களுக்கு எவ்வளவு ஆர்வம்? எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா வாழ்க்கை அமைந்து விடுகிறது? குடும்பச் சூழ்நிலை வெவ்வேறு மாதிரித்தான் இருக்கிறது. அதற்கேற்றாற்போல் அவரவர் இருப்புகள் மாறுகின்றன. ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் கேலிக்குரியவையா? விமர்சனத்திற்குட்பட்டவையா? என்ன மனிதர்கள்? வேம்பு சாரின் வம்பளப்பு அந்த ரகமாய்த்தான் இருந்தது. அநியாய வாய்…என்று நினைத்து பயந்தார் ஜம்புகேஸ்வரன்.

என்ன ஜம்பு சார்….போதும்…போதும் எத்தனை ரவுன்ட் அடிப்பீங்க…வந்து உட்காருங்க….! - - உட்காரவே வேண்டாம்…நடந்தே கழிப்போம்…அப்படியே யாரும் குறிப்பாக நோக்காத வேளையில் வெளியே நழுவி விடுவோம் என்றிருந்தவரைக் கவனித்து சத்தமாய்க் கூப்பிட்டார் வேம்புநாதன்.

பெயருக்கேற்றாற்போல் கசப்புதான் அவர் பேச்சு. போய் உட்கார்ந்தால் ஒரு நல்லது அவர் வாயிலிருந்து வராது. தன் மன வருத்தங்களை மறைப்பதற்காகவே இப்படியிருக்கிறாரோ என்றும் தோன்றியது இவருக்கு.  சொந்த வாழ்க்கையின் சிக்கல்கள் மனித வக்கிரங்களை உருவாக்குகிறதோ என்று நினைத்தார்.

உங்களுக்கு சங்கதி தெரியுமா? பாலரமணி பையனுக்கு பெங்களூர் மாறுதல் ஆயிடுச்சாம்…இன்னும் ஒரு மாசத்துக்குள்ள போயிடுவானாம். அவன் மட்டுமில்லே….பொண்டாட்டியையும் கூட்டிட்டுப் போறானாம்…இவரைப் பார்த்துத்தான் கூறினார். எப்படிப் பதில் சொல்லாமல் இருப்பது?  

அதெப்படிங்க…ஸ்கூல் ஆரம்பிச்சு நாலு மாசம் ஆகப் போவுது…ஒரு சின்னப் பையன் பேரன் உண்டுல்ல….ரெண்டோ மூணோ படிக்கிறான்னு சொல்லுவாரே…அவன் படிப்பு?  -    ஒரு வருஷம் போனாப் போகுது…பார்த்துக்கலாம்ங்குதாம் பையன் ஒய்ஃப்பு? பெங்களூர் போயே ஆகணும்னு ஒத்தக் கால்ல நிக்குதாம்…..!

உங்க காதுக்கு வந்திருச்சா செய்தி? நீங்கதான் இந்தப் பார்க்குக்கு ரேடியோ….!

அதெல்லாம் எப்டியும் தெரிஞ்சு போகும்ல…!  அந்தத் தெருவுல உள்ளவங்க ரெண்டு பேர் இந்தப் பார்க்குக்கு வர்றாங்கல்ல…அத விடுங்க…இந்த மனுஷன் சதா தன் மருமகளைக் குறை சொல்லிட்டே இருந்திருக்காரு….அது பிரச்னையாயிடுச்சு….அதான் விஷயம்….நாம கவனிக்க வேண்டியது அதுதான்…..

அடுத்தவர் விஷயத்தில் இந்த மனுஷனுக்கத்தான் எம்பட்டு அக்கறை?

அது அவுங்க குடும்ப விஷயம்…நமக்கெதுக்குங்க…நாம எப்பயும் போல சாயங்காலம் இங்க வந்தமா, நடந்தமா, ரெஸ்ட் எடுத்தமா கிளம்பினமான்னு இருக்க வேண்டிதானே? இந்த வம்பெல்லாம் நமக்கெதுக்கு….?

நீங்க என்ன ஒரேயடியாச் சலிச்சிக்கிறீங்க…? என்றார் வேம்புநாதன். தான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. இதையெல்லாம் என்கிட்டே சொல்லாதீங்க…எனக்குப் பிடிக்காது…எதுக்கு அநாவசியமா வம்பு பேசிட்டு….? என்றே வெளிப்படையாய்ச் சொல்லத்தான் நினைத்தார்.  தினசரி அங்கு சந்திக்கும் அவரை ஏன் அநாவசியமாய்ப் பகைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது. அதனால் மேம்போக்காகச் சொன்னார். ஆனால் அதுவே பிடிக்கவில்லையே இந்தாளுக்கு?

என் ஸ்வாரஸ்யத்த நேத்து வந்த நீ கெடுப்பியா?

வெறுமே பேசுறதுல என்ன தப்பு சார்…பொழுது போன மாதிரி இருக்கும்ல? நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இடம் மாறுகிறார். அதச் சொன்னேன்…ரொம்ப நாளாவே மருமகளுக்கும் அவுங்களுக்கும் இடைல புகைச்சல் இருந்திருக்கு…அந்தப் பொண்ணு வீட்டுல ஒரு வேலையும் செய்யாதாம். துரும்பைக் கூட நகர்த்தாதாம். கைக்குழந்தை வேறே. அதயாவது அதுவே பார்த்துக்கிட்டா சரின்னு இவுங்க இருக்க…அது என்ன பண்ணுமாம்…நடு உறால்ல கொண்டு வந்து குழந்தையைத் தரைல விட்டுட்டு, ரூமுக்குள்ள போய்க் கதவை அடைச்சிக்கிடுமாம்.  அப்போ இவுங்க யாராச்சும் எடுத்துத்தானே ஆகணும். இவுரு ஓடி ஓடிப்போய் எடுத்துக்குவாராம். வேறே வழி?

இதிலென்ன தப்பு இருக்கு…வீட்ல இருக்கிற பெரியவங்க குழந்தைகளப் பார்த்துக்கிறதுக்குத்தானே இருக்காங்க…தன்னோட பேரக் குழந்தையைத்தானே பார்த்துக்கிறாங்க…சந்தோஷமாச் செய்ய வேண்டிதானே? – விட்டுக்கொடுக்காமல் பேசினார் ஜம்புகேஸ்வரன். 

வேம்புவின் கெட்ட எண்ணங்களுக்கு ஆதரவு என்று எந்த முனையிலும் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதே அவரது நினைப்பாக இருந்தது. தனக்கு அவரது பேச்சுப் பிடிக்கவில்லை என்பதை அவரது அபிப்பிராயங்களை நிராகரிப்பதன் மூலம் உணர்த்தி, அவரிடமிருந்து விலக்குப் பெற வேண்டும் என்பதே ஜம்புவின் தீர்மானமாயிருந்தது.

இன்னும் தெரியுமா? அந்த மருமகப் பொண்ணு காலைல தினமும் பத்து மணிக்குத்தான் படுக்கையை விட்டே எழுந்திருக்குமாம். அடைச்ச கதவு அடைச்சமேனிக்கே கிடக்கும். அங்கயிருக்கிற டாய்லெட்டை யூஸ் பண்ண முடியாம இவர் ரூமுக்கு வந்து நுழைஞ்சிக்குவானாம் பையன். இவர் என்ன புலம்புறார்னா வயசான எனக்கு ஆத்திர அவசரத்துக்கு சட்டுன்னு ஒண்ணுக்குப் போகக் கூட முடிலங்கங்கிறார். அடக்க முடிலங்க…இவன் போய்க் கதவைச் சாத்திக்கிறான்னு அழறார் பாலரமணி.

வெஸ்டர்ன் டாய்லெட் இவர் ரூம்லதான் இருக்காம்…அவனுக்கும் அடிக்கடி தொடை வலி, கால்வலி வருதுன்னு அங்கதான் வந்து குந்திக்கிறானாம். இதுனால என்ன பிரச்னைன்னா பையனுக்கும் இவருக்கும் சண்டை. வெளிக்குப் போறதுல பிரச்னை…சொல்லிவிட்டு சத்தமாய்ச் சிரித்தார். வாய் நிறைய அவுல்.

குளிக்கிறது கூடவா அந்த பாத்ரூம்ல செய்யக் கூடாது, அதுக்கும் இங்கதானான்னு கேட்டுருக்கார். அவ தூக்கம் கலைஞ்சிடும், குழந்தை எழுந்திரிச்சிடும்னு சொல்லியிருக்கான். அவன் பெண்டாட்டி மேலே இருக்கிற அக்கறை துளிக்கூடத் தன்மேல இல்ல பாருங்க அவனுக்குன்னு என்கிட்டே சொல்லி ஆதங்கப்படுறார். குளிக்கப்போனா அரை மணி நேரம்…அப்டி என்னதான் தேய்ச்சுத் தேய்ச்சுக் குளிப்பானோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்…டாய்லெட் போனா பதினஞ்சு நிமிஷம்னு இவனுக்கே  பாத்ரூம் எங்கேஜ்டா இருந்தா…நான் என் வசதிபோல எப்பப் போறது? வீட்டுல ஒரு வயசான மனுஷன் இருக்கானேங்கிற கரிசனம், மரியாதை  இல்ல பாருங்க…எம் பொண்டாட்டியும் சொல்ல மாட்டேங்கிறா…அப்பா பாவம்டா…அவருக்கு இடைஞ்சல் ஏற்படுறமாதிரி செய்யாதேன்னிருக்கா…அவன் கேட்டாத்தானே…பொண்டாட்டிக்குப் பயந்த பய…ன்னு திட்டுறார். என்கிட்டே புலம்பி என்ன பண்ண? அவன் பையன்டல்ல சொல்லணும்? தாங்கமாட்டாமச் சொல்லித்தான் சண்டை பெரிசாயிடுச்சி போல….இப்போ அது பெங்களூர்ல போய் நிக்குது…!. –

கோர்வையாய் வேம்புநாதன் எடுத்து வைத்தது இவரைப் பெரிதும் சங்கடப்படுத்தத்தான் செய்தது.  அடுத்தவர் கஷ்டங்களை உள்வாங்கித் தன்னுடைய துயரங்களை மறக்கிறாரோ என்றும் தோன்றியது. அவர் வீட்டில் என்ன பிரச்னை என்று யாருக்குத் தெரியும்?  ஒரு நாளும் அவர் அப்படி எதுவும் சொன்னதில்லை. ஒரு மனிதனுக்கு வீட்டில் சதா பிரச்னைகள் இருந்தால் எப்படியும் அது வெளியே வந்து விடும்தான். யாரிடமாவது சொல்லி, தன் மனபாரத்தைக்  குறைத்துக் கொள்ள வேண்டுமென்று முயலுவதுதான் மனித இயற்கை. எதிராளிக்குப் பிடிக்கிறதோ இல்லையோ என்று இறக்கி வைக்க முயலுவது இயல்பு. அதற்கு சரியான,  சமாதானமான எதிர் வினை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, யாரிடமாவது புலம்பித் தீர்ப்பது பரஸ்பரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் உலக நடப்புகள் என்றுதான் ஜம்புகேஸ்வரன் நினைத்தார்.

ஆனால் வேம்புநாதன் அதில் இன்பம் காண்பது போல் தோற்றமளித்ததுதான் இவருக்குப் பிடிக்கவில்லை. இந்த மனிதனிடம் மாட்டினால் நாளைக்கு நம் கதையையும் அரசல் புரசலாகக் கேட்டு, திரித்து வெளியிடுவான்…அந்த அளவுக்கு வம்பு தும்பு பேசித் தன் பொழுதை இன்பமாக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவன் இந்த ஆள் என்று யோசித்தே விலக ஆரம்பித்தார் ஜம்புகேஸ்வரன். வெட்டி அரட்டைக்கு நான்தான் கிடைத்தேனா?

தண்டீஸ்வரம் பூங்காவில் அவருக்குத் தெரிய மற்ற யாரும் வேம்புநாதனைப் போல் வம்பு பேசும் ஆசாமிகளாய்த் தோன்றவில்லை. நடைப் பயிற்சிக்காக வரும் பலரும் அதை முறையே முடித்துவிட்டு வெளியேறிக் கொண்டிருப்பதே வழக்கமாய் இருந்தது. ஏழு மணிக்கு  டிங்…டிங்…டிங்…என்று  மணியடித்துக் கொண்டு வந்து நிற்கும் போளி  விற்பவர் அங்கிருந்த பலரையும் தன் கைபாகத்தால் கட்டிப் போட்டிருந்தார். போளிக்கென்ன பெரிய கைபாகம் வேண்டிக் கிடக்கிறது என்று தோன்றலாம்தான். அதிலும் சில நுணுக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது  என்பது அதைத் தொடர்ந்து வளைச்சுக் கட்டுபவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியாய் இருந்தது. ஜீரா போளி, தேங்காய் போளி, பருப்பு போளி என்ற வகை மாதிரியில் போட்டு முடியாமலும், கொடுத்து முடியாமலும்தான் திணறிக் கொண்டிருந்தார் கடைக்காரர். ராத்திரி பூராவும் போளி போட்டு அடுக்கினாலும் தின்று தீர்ப்பார்கள் போலிருக்கிறது. ஆனாலும் இந்த சீனியர் சிட்டிசன்சுக்கு அநியாய நாக்கு ருசி.

என்றோ ஒரு நாள் ஆசைக்குச் சாப்பிட்டால் சரி. அதுவேவா வழக்கமாய் வைத்துக் கொள்வது? அல்லது  புதிது புதிதாய் அங்கே ஆட்கள் அனுதினமும் பூங்காவுக்கென்று வந்து கொண்டிருக்கிறார்களா? தினசரி வழக்கமாய் அதைத் தின்காவிட்டால் அன்றைய பொழுது சாபல்யமடைந்ததாக ஆகாது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போலல்லவா சென்று மண்டுகிறார்கள். இவர்களுக்கு யார்தான் எடுத்துச் சொல்வது? அவர்கள் வயசுக்கு அந்தத் தீனி ஆகுமா? நாக்கு அப்படியா இழுக்கிறது. ஒரு பக்கம் பாவமாகவும், பரிதாபமாகவும்தான் இருந்தது இவருக்கு. தனக்கு ஏன் இப்படியான ஆசையெல்லாம் இல்லை என்று நினைத்துப் பார்த்தார்.  சிறு வயது முதலே விரும்பியது கிடைத்ததில்லை. வறுமையும், கஷ்டமும், தரித்திரமும் பிடுங்கித் தின்றது. அதனால் எதையும் தின்ன ஆசைப்பட்டதுமில்லை. எனவே அந்தப் பழக்கம் இப்போதுமில்லை.

அப்படி என்னதான் பெரிய டேஸ்டு அது என்று அறிய ஒரு நாள் போய் இவரும் நிற்கத்தான் செய்தார். தீர்ந்திடுச்சு சார்…என்று விட்டார் அவர். முகத்திலறைந்தாற்போல் இருந்தது இவருக்கு. அதோ…ரெண்டு வச்சிருக்காப்ல இருக்கே…? என்று சட்டியில் கிடந்ததைச் சுட்டிக் காட்டினார். அது வீட்டுக்கு சார்…பிள்ளைங்களுக்கு….- என்ற போது இவர் வாய் அடைத்தே போனது. ஆசையும் வடிந்து போனது.

ஆசைப்படாதவன் எதற்குமே. எப்போதுமே ஆசைப்படக்கூடாதுதான். அல்ப விஷயம் என்றாலுமே அவனுக்கு அங்கேயும் ஒரு ஏமாற்றம் காத்துக் கொண்டுதான் இருக்கும். தன்னுடைய இருப்பு என்பது எல்லாவற்றிலுமிருந்தும் விலகி நிற்பதுதான்.  நாக்கு ருசியையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

சர்வீசில் இருக்கும் காலத்திலேயே அவர் அப்படி இருந்ததில்லை. அலுவலகத்திற்கு வந்து போகும் கான்ட்ராக்டர்கள் தங்களின் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக சுதந்திரமாக இயங்குவார்கள். அவர்களுக்கு யார் இந்த அனுமதியைக் கொடுத்தது என்று எண்ணி ஆச்சரியப்படும்முன் சர்வ சகஜமாக எல்லாமும் புழங்க ஆரம்பித்து விடும் அங்கே. அதிகாரத்தை அவர்களே கையில் எடுத்துக் கொள்வார்கள். எல்லாம் பணம் பண்ணும் வேலை.

இந்தாப்பா…மொத்தம் எத்தனை பேருன்னு எண்ணிக்க…எதுத்தாப்ல போய் வெண்மணி டீ ஸ்டால்ல நான் சொன்னேன்னு தனித்தனியாப் பார்சல் போட்டு வாங்கிட்டு வந்திடு. அப்டியே கேத்தல்லா சூடா டீயையும் கொண்டாரச் சொல்லு…..சாருக்கு டீயா…காபியான்னு கேட்டு தனியா வாங்கிக் கொடு…..ஒருத்தர் விடக்கூடாது…

ரொம்ப வருஷமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர்கள். அவர்களை விட்டால், மீறி அங்கே யாரும் நுழைந்து விட முடியாது. திட்டப்பணிகளெல்லாம் அவர்களுக்குத்தான். எப்படிப்பட்ட வேலைகளானாலும் அவர்கள்தான் செய்வார்கள். எல்லாவற்றிற்கும் ஆட்கள் வைத்திருந்தார்கள். ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு கஜகர்ணமடிக்கத் தெரிந்தவர்கள்.

அப்பொழுதெல்லாம் கூடத் தனக்கு வேண்டாம் என்று விடுவார் ஜம்புகேஸ்வரன். கான்ட்ராக்டரே டேபிளுக்கு எதிரே உட்கார்ந்து பரிமாறுவார்.  இலையோடு தள்ளி விட்டிருக்கிறார். அதான் வேணாம்னு சொல்றேன்ல….! என்று கடிந்து கொண்டார் இவர். அதற்குப்பின் அவர்கள் இவரைப் பொருட்படுத்தியதேயில்லை. அவர்களுக்கா காரியமாற்றிக்கொள்ளத் தெரியாது? எப்படியோ தொலையட்டும். நமக்குத் தலைவலி இல்லாமல் இருந்தால் சரி என்று இருந்திருக்கிறார் இவர். ஆபீசே இவரை மதிக்காத தன்மைதான். கிளார்க்குகள் கூட அந்த ஃபைல் என்னாச்சு? இது என்னாச்சு? என்றால் சரியாய் பதில் சொல்ல மாட்டார்கள். இந்தாள் அனத்தல் வேறே?

உடனே பில்லுப் போட்டு இன்னைக்கே டிரஷரிக்கு அனுப்பணும்ங்கிறாங்க…எம்.புக் எழுதியாகணும்னு கான்ட்ராக்டர் உட்கார்ந்திருக்காரு…நாளைக்கே பணம் வேணும்ங்கிறாரு…இல்லன்னா சைட்ல வேலை நின்னு போகும்னு பயமுறுத்துறாரு…நீங்க என்னடான்னா ஃபைலைக் கேட்குறீங்க..ஸ்கீம் ஒர்க் ஃபர்ஸ்ட்…மத்ததெல்லாம் அப்புறம்தான்னு பாஸ் சொல்றார்…எங்களுக்கென்ன பத்துக் கையா இருக்கு…நீங்க வேறே நெருக்கினா எப்படி? – என்று இவரையே மதிக்காமல் அலுத்துக் கொண்டார்கள் எழுத்தர்கள். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது சரிதான் என்று உணர்ந்தார். காசுபுழங்கும் இடத்தில் அது ஒன்றுக்குத்தான் மரியாதை. மனித எத்தனங்களுக்கு மதிப்பேது? என்னவோ நடக்கட்டும் என்று வாளாவிருக்க ஆரம்பித்தார்.

ஒப்பந்ததாரர்களுக்குக் கொடுக்க என்று காசான பட்டியல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. அவைகளுக்குத்தான் முன்னுரிமை. நிதியாண்டு இறுதிக்குள் திட்டப் பணிகள் முடித்தாக வேண்டும். முடித்தாகிறதோ இல்லையோ காசாக்கியாக வேண்டும். பிறகு கூட வேலைகளைச் சாவகாசமாக ஓரிரு மாதங்களில் முடித்துக் கொள்வார்கள். டப்பு இல்லையென்றால் எங்கும் எதுவும் ஆகாது.

பணப்புழக்கம் மிகுந்த அலுவலகத்தில் வந்து இப்படி வகையாய் மாட்டிக் கொண்டோமே என்று பயமாய் இருந்தது ஜம்புவுக்கு. திட்டப் பணிகள் அல்லாமல்  நிர்வாக ரீதியில்  மட்டும் இயங்கும் அலுவலகத்திற்கு எப்படியாவது மாற்றல் வாங்கிக் கொண்டு போயாக வேண்டும் என்று அவர் மனது துடித்தது. அந்த முறைதான் ஒரு அமைச்சர் மூலம் முயற்சித்தார். அதுவும் பணியாளர்கள் சங்கத்து ஆட்கள் பண்ணிக் கொடுத்தது. கொஞ்சம் கைக்காசு செலவாயிற்றுதான். வேறு வழி? யப்பாடா…ஆள விடுங்கப்பா…! என்று ஓடியே வந்து விட்டார். அப்போதிருந்து ஓய்வு பெறும் வரை மாற்றமேதுமில்லை. தலைமை அலுவலகத்திற்கு இவர மாதிரி ஆள்தான் லாயக்கு என்று ஆணியடித்து உட்கார வைத்து விட்டார்கள். நிர்வாகப் புலி. ஒரு மொத்த ஆபீசையே பொறுப்பாய் விட்டு விட்டுகவலைப்படாமல் இருக்கலாம். எல்லாவற்றையும் எடுத்துச் சுமக்கத்தான் இவர் இருக்கிறாரே? என்று மொத்த மாவட்டத்துக்கும் இவரைத்தான் இண்டு இணுக்கு என்று அணுகினார்கள். அத்தனை பேருக்கும் முகம் சுளிக்காமல் வேணுங்கிறதைச் செய்து கொடுத்தார். அவரால் பலனடையாதவர் எவருமில்லை என்றாகிப் போனது. அதுவே அவரின் நிலைத்த புகழுக்குக் காரணமாகி அங்கேயே அவரைச் சிலையாய் உட்கார வைத்து விட்டது.

அப்படியே இருந்து கழித்து  வயது முதிர்வில் வெளியே வந்தவர்தான். போதுண்டாப்பா உங்க சங்காத்தம்? என்று தோன்றிவிட்டது. அதற்குப்பின்னும் ஃபைலைத் தூக்கிக்கொண்டு வீடு தேடி வந்தார்கள்தான். துரும்பை நகர்த்த முடியாது என்று மறுத்து விட்டார். கை வைத்தால் பிறகு வளரும். முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கும். ஓசிக்கு அப்படி மாறடிக்க வேண்டும் என்று என்ன அவசியம்?

இப்போது எவரும் வருவதில்லை. அவரை மறந்தே விட்டார்கள் என்றே சொல்லலாம். தனக்கு ஆக வேண்டிய காரியம் என்று அந்த அலுவலகத்தின் மூலமாக ஏதுமில்லை. எல்லாவற்றையும் தான் இருக்கையிலேயே வழித்தெடுத்துப் பெற்றுக் கொண்டாயிற்று. இனி அவர்களின் சகவாசம் எதற்கு? லஞ்சப் பேர்வழிகளோடு எதற்குத் திரும்பத் திரும்பக் கை கோர்த்துக்கொண்டு? ஒருத்தர் மாற்றி ஒருத்தர் என்று வந்துகொண்டேயிருப்பார்கள். சாருக்கு ஏதாச்சும் காசு கொடுத்துச் சரி பண்ணிக்கலாம் என்று வந்து நிற்பார்கள். மூளையைச் செலவு பண்ணாமல் கெட்டித்து வைத்திருப்பவர்கள். அடுத்தவன் முதுகிலேயே குதிரை ஏறி காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைப்பவர்கள். இவர்களோடு நட்பாய் இருந்தாலென்ன இல்லாவிட்டால்தான் என்ன? – விட்டு உதறி வருஷம் இரண்டாகப் போகிறது.

நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன? என்று இருப்பவருக்கு வேம்பு நாதனின் நட்பே வேண்டாம் என்றுதான் சமீப நாட்களில் தோன்ற ஆரம்பித்திருந்தது. அன்றாடம் பூங்காவில் சந்திக்கும் சாதாரணப் பழக்கம்தான். அதை நட்பு என்று எப்படிச் சொல்லிக் கொள்வது? நட்பு என்பது ஆத்மார்த்தமானது. அப்படி எதுவுமில்லையே? அவ்வாறிருக்கையில் இவர் பேசும் வம்புக்கு நாம் அநாவசியத்திற்குத்  தலையைக் கொடுப்பானேன்?  மதித்துக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்ததே தப்பு என்றல்லவா ஆகிப் போனது. அப்படி நினைக்க ஆரம்பித்த வேளையில்தானே மற்ற யாரும் அவரிடம் நெருங்காததை உணர முடிந்தது இவரால்? சச்சதுரமாய் நடைபயின்று கொண்டிருக்கையிலேயே தூர இருந்து கைதூக்கி ஒரு சல்யூட் அடித்துவிட்டு விலகிச் செல்பவர்கள்தான் இருந்தார்கள். பக்கத்தில் நெருக்கமாய் வந்து தான் மட்டுமே கேனைத்தனமாய் அவரோடு பேசிக் கொண்டிருக்கிறோமோ என்று விபரீதமாய்ப் புரிய ஆரம்பித்திருந்தது இவருக்கு.

கூட உட்கார்ந்து வம்பளக்கிறதுக்கு ஒரு ஆளப் பிடிச்சிட்டார் போல்ருக்கு… என்று யாரோ பேசிக் கொண்டே தலைக்குப் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தது அவர் காதுகளில் விழுந்து விட்டதுதான் இவரைத் துணுக்குறச் செய்து விட்டது. ஏற்கனவே இந்தாள் என்ன இப்படியிருக்காரு என்கிற எண்ணத்தில் பழகிக்கொண்டிருந்தவருக்கு அன்றுதான் கடைசி சந்திப்பு என்று உறுதிப்பட்டது.

ஆனாலும் வேம்புநாதன் வரும் அந்தப் பூங்காவிற்கு அவரால் செல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் வருகிறாரே என்று பூங்காவையே புறக்கணிக்க முடியுமா? அவரோடு பழகிய எத்தனை பேர் இன்னும் விடாமல் அங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களெல்லாம் என்ன சண்டையா போட்டார்கள்? வம்பளக்க நாங்கள் தயாராயில்லை என்றுதானே அவரிடம் சிக்காமல், அருகில் சென்று பேச்சுக்கு உட்காராமல் நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்? அந்தப் பிறரைப் போல் தானும் இருந்துவிட்டுப் போக வேண்டியதுதானே…? பலவாறு நினைத்துக் குழம்பிப் கொண்டிருந்தார் ஜம்புகேஸ்வரன். அடுத்த ரெண்டு நாட்கள் ஏன் பூங்காவிற்குப் போகாமல் இருந்தோம் என்றே அவருக்குத் தெரியவில்லை.  உடம்பில் ரொம்பவும் சோம்பேறித்தனம் வளர்ந்திருந்தது. யாருக்காக யார் முடங்குவது? உலகம் பலவிதம். மனிதர்களும் பலவிதம்தான். ஒருவருக்காக ஒருவர் தன்னை மட்டுப் படுத்திக் கொள்ள வேண்டுமா? இந்த மனுஷன் தன்னை ரொம்பவும் தொந்தரவு பண்ணி விட்டாரே? இருக்கிற சொந்தப் பிரச்னைகள் போதாதென்று இது வேறையா? இறைத்தன்மைத்தான செயல்பாடுகளில் கவனம் செலுத்தினால் இம்மாதிரி மன மாச்சரியங்களெல்லாம் படிப்படியாகக் குறையும் வாய்ப்பு உண்டுதான். அதை நமக்கு நாமேதான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்தான். யாரேனும் வந்து பாடம் நடத்துவார்களா என்ன? தன் அர்த்தமற்ற முடக்கத்துக்காக வருந்தினார் ஜம்புகேஸ்வரன். உடம்பையும் மனதையும் உற்சாகமாய் வைத்துக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது என்று நினைத்து சமாதானம் செய்து கொண்டார்.

என்ன ஜம்பு சார்….கிளம்பலியா பார்க்குக்கு…? – வாசலில் புதுக் குரல் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்தார் ஜம்புகேஸ்வரன். பராசரன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நாலு வீடு தள்ளிக் குடியிருக்கும் நன்மையான நபர். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரை வைத்துத்தான் கணக்குத் திறந்ததும், லாக்கர் பெற்றதும், புதிய சேமிப்புகளை உருவாக்கியதும்…மிகவும் உதவியாய் இருந்திருக்கிறார்தான்.

அதிசயமா இருக்கு…? நீங்களும் வர்றீங்களா….? – என்றார் ஜம்பு.

ஆம்மா….யாராச்சும் துணையிருந்தாத்தான் ஏதேனும் காரியம் ஆகும் போல்ருக்கு…! இல்லன்னா ரொம்ப சோம்பிப் போகுது…வாங்க போவோம்….உங்ககூட நானும் கொஞ்சம் நடை பழகிக்கிறேனே? காலும் கையும் கெஞ்சுதே…

ஓ…தாராளமா….அப்போ தினமும் இந்த டயத்துக்கு வந்திடுங்க…சேர்ந்து கிளம்பிடுவோம்… - உற்சாகமாகச் சொன்னார் ஜம்புகேஸ்வரன்.

தன்னோடெல்லாம் அவர் சேர வாய்ப்பில்லை என்று ஜம்பு நினைத்திருந்தார். அத்தோடு இது நாள்வரை நடைப் பயிற்சிக்கெல்லாம் சென்றவருமில்லை. வீட்டிலேயேதான் அடைந்து கிடப்பார். ஓரொரு நாள் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். இன்று அவரே கிளம்பி வந்து இப்படிக் கேட்டது அதிசயம்தான். வேம்புநாதனின் வம்பளப்பிலிருந்து தப்பிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சட்டென்று மனதில் தோன்றிவிட்டது ஜம்புவுக்கு.

கிளம்புங்க…என்றவாறே உற்சாகமாய் செருப்பை மாட்டிக் கொண்டு புறப்பட்டார் ஜம்புகேஸ்வரன். பார்க்குக்குச் சென்று நடக்க ஆரம்பித்தவர்  வேம்புநாதன் வந்திருக்கிறாரா இல்லையா என்று கூட அவரது வழக்கமான இருக்கைப் பக்கம் திரும்பவேயில்லை. திரும்பிப் பார்த்தால் எங்கே சத்தமாய்க் கூப்பிட்டு விடுவாரோ என்று பயந்தார். அதனாலேயே அவரது இருக்கைக்குப் பின்னால் வரும் நடை வழியைத் தவிர்த்து வளைந்து செல்லும் விலகிய இன்னொரு பகுதியில்…வாங்க இப்படிப் போகலாம்…தூரம் கொஞ்சம் அதிகமாகும்….என்று சொல்லி பராசரனையும் இழுத்துக் கொண்டு திசையை மாற்றி நடந்தார்.

என்னதான் பாதையை மாற்றிக் கொண்டு நடந்தாலும் வேம்புநாதனின் சத்தமான பேச்சும், உரத்த சிரிப்பும் அந்தப் பூங்கா முழுவதும் எதிரொலிக்கும்தான்.. அது பலருக்கும் பரிச்சயமான ஒரு குரல். அப்படியிருப்பவரிடமிருந்துதான், ஒதுங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதும், அந்த மனநிலைக்கு ஆளானதும் சற்றே சங்கடத்தை ஏற்படுத்தத்தான் செய்திருந்தது ஜம்புகேஸ்வரனுக்கு. ஆனால் இப்போது பராசரனின் வருகை அவருக்கு ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அத்தோடு அவர் ஏதோ ஸ்லோகம் ஒன்றை சற்றே சத்தமாய் உச்சரித்துக் கொண்டு கூடவே நடந்தது இவருக்கு இதமாக இருந்தது. மனதுக்குப் பிடித்தும் இருந்தது. காதால் கேட்டாலே புண்ணியம் என்று நினைக்கத் தலைப்பட்டார். சற்று முன்னால், பின்னால் நடப்பவர்கள் என்று ஒரு முறை அவரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள்.  ஸ்லோகத்தின் ஸ்பஷ்டமான உச்சரிப்பு அவர்களை ஈர்த்திருக்க வேண்டும்.

நேரம் போனதே தெரியவில்லைதான். எத்தனை ரௌன்ட் வந்தோம் என்றே எண்ணவில்லை. தான் வேகமா அல்லது பராசரன் வேகமா என்று கண்காணித்ததுபோல் நடை போட்டதில் உடம்பிற்குப் புதிய தெம்பும் உற்சாகமும் கூடியிருப்பதாக ஜம்புகேஸ்வரன் உணர்ந்தார்.

போதும், முடிச்சிக்குவமா? என்று பராசரன் கேட்டபோது மொத்த தூரத்தில்  பாதி கடந்திருப்பதை உணர்ந்தார்கள் இருவரும்.

முக்கால் மணி நேரத்துக்கும் மேலே ஆயிடுச்சு…இல்ல? ஓ.கே….போதும்…போகலாம்…என்றார் ஜம்புகேஸ்வரன்.

வாயிலைக் கடந்து பூங்காவை விட்டு வெளியேறும்போது தெரு விளக்குகள் சட்டுச் சட்டென்று எரிய ஆரம்பித்தன. டிங்…டிங்…டிங்…என்ற மணிச் சத்தத்தோடு போளி வண்டி வேகமாய் வந்து கொண்டிருந்தது.  பின்னால் திரும்பிப் பார்த்தார். பூங்காவில் உள்ள அனைத்து விளக்குகளும் போடப்பட்டிருந்தன. சுற்றிலும் நல்ல வெளிச்சம் பரவியிருந்தது. மனதில் சட்டென்று ஏதோ தோன்ற தள்ளி மூலையிலிருந்த வேம்புநாதனின் இருக்கை நோக்கி அவர் பார்வை போனது. அந்தப் பகுதி சற்றே இருள் சூழ்ந்து தெரியும். கவனித்துக் குறிப்பாய் நோக்க வேண்டும்.

இடம் வெறுமையாயிருந்தது. அப்போ இத்தனை நேரம் அவர் இல்லாமத்தான் சுத்தியிருக்கமா என்று நினைத்துக் கொண்டார் ஜம்பு.

 மறுநாள் காலையில் அந்தச் செய்தி அவர் காதுக்கு வந்தது. வேம்புநாதன் திடீர் உறார்ட் அட்டாக்கில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறார்……!.

அன்று பூங்கா நடைப் பயிற்சிக்குச் செல்லாமல் கிளம்பிப் போய் அவரைப் பார்த்து வர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் ஜம்புகேஸ்வரன்.

பராசரனிடம் இந்த விபரத்தைச் சொன்னபோது, நானும் வரேன்…சேர்ந்து போய்ப் பார்த்திட்டு வருவோம்…எனறு உற்சாகமாய் அவர் கிளம்பியது இவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்தப் பார்க்கோட முதல் மெம்பர் அவர்தானாமே? கார்ப்பரேஷனுக்கு எழுதி லைட்டெல்லாம் போட  வச்சு, ஆழ்துளைக்கிணறு தோண்டி தண்ணிக்கு  ஏற்பாடு பண்ணி…மெயின்டனன்சுக்கு ஆள் போட்டு பலதும் பண்ணியிருக்கார் போல்ருக்கே…!  போயிட்டு வருவோம்…புறப்படுங்க…. –

வேம்புநாதனைப் பற்றி அவர் அறிந்து வைத்திருந்ததில் ஒன்று கூடத் தனக்குத் தெரியாது என்று நினைத்த போது கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது இவருக்கு. பராசரனின் வேகத்தைப் பார்த்து ஆச்சரியமாயிருந்தது. வேம்புநாதனுடன்  கொஞ்சமும் பழகாத அவரின்  மனிதாபிமானப் போக்கும், தன்மையும்,  விட்டு ஒதுங்குவோம் என்றிருந்த ஜம்புகேஸ்வரனின்  மனநிலையைத் தடுமாற வைத்தது.  

                                                --------------------------------------

.

 

 

 

 

 

 

சிறுகதை               பேசும் புதிய சக்தி - மே 2025 இதழ் பிரசுரம் 

“பின்னோக்கிய அதிர்வுகள்“





இப்போது என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்திருந்தது பிரம்மராஜனின் மனம். முதலிலேயே இந்த யோசனை தோன்றாமல் போய்விட்டதே என்றும் வருந்தியது. அவசரக் குடுக்கை என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டார்.

            முதலில் செய்தது சரி. இரண்டாம் முறை செய்ததும் சரிதான். அப்போதைக்குத்தான் சரி அது.   பின்னால் இம்மாதிரி இடைஞ்சலை ஏற்படுத்தக் கூடும் என்பதான யோசனை பிறகுதானே வந்தது. ஏன் அது முதலிலேயே தோன்றவில்லை? இதற்குத்தான் எதற்கும் அவசரப்படக் கூடாது, ஆற அமர யோசித்து, நிதானித்து, ஒரு சரியான முடிவுக்கு வந்து செயலாற்ற வேண்டும் என்பது.

            தன்னுடைய காரியங்கள் எல்லாமும் எப்பொழுதுமே ஒரு அவசர கதியில் நிகழ்ந்து விடுவதாக நினைத்து சங்கடமாயிருந்தது இவருக்கு. நிகழ்ந்து விடுகிறது என்றால், தன்னை மீறி என்றுதானே பொருள்.  அந்தக் குறிப்பிட்ட கட்டத்தில் தனக்கு ஏன் ஒரு நிதானமில்லை? பொறு, அவசரப்படாதே…! என்று அதே மனசு ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அறிவு பத்தாதோ?

            வயதுதான் ஆகிறதேயொழிய இன்னும் பல காரியங்களில் நிதானமின்றித்தான்  செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. அறுபது வயதுக்கு மேல்தான் பலருக்கும் நிதானம் வருகிறது என்று சொல்கிறார்கள். தனக்கு அறுபத்தைந்து என்று எட்டியும் இன்னும் அது கைகூடவில்லை. எதுவுமே கைகூடவில்லை என்றே சொல்லலாம்தான்.

            நளினியிடமாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். கேட்டால்  என்ன சொல்லப்போகிறாள்…வேண்டாம்…வேண்டாம்…அதெல்லாம் தப்பு…பண்ணாதீங்க….என்றுதான் சொல்லியிருப்பாள். அவள் பதில் அதுவாகத்தான் இருக்கும் என்று ஊகிக்க முடிந்த தனக்கு, அதைத் தனக்குத்தானே சொல்லி நிறுத்திக் கொள்ளத் துப்பில்லை.…அதுதான் பரிதாபம்.

            ஒருவர் ஒரு நாவல்தான் அனுப்ப வேண்டும் என்பது விதி. அந்த விதிக்குக் கட்டுப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள் அந்த ஒரு நாவலை அனுப்பியாயிற்று. அத்தோடு முடிந்ததுதானே விஷயம்? விட்டுவிட வேண்டியதுதானே? பிறகும் என்ன நப்பாசை…? நப்பாசையா அது…குசும்பு!! தவறல்லவா? அது ஏன் தோணாமல் போயிற்று?

            ச்சே…! அனுப்பின அந்த நாவலுக்குப் பதிலா இப்ப எழுதி முடிச்ச புதிய நாவலை அனுப்பியிருக்கலாம்…அநியாயமாத் தோணாமப் போச்சு….!!

            -இந்த வயிற்றெரிச்சல் தோன்றியபோதுதானே அந்தப் புதிய யோசனையும் தோன்றியது? புதிய யோசனையா அது? விபரீத யோசனை…அதுதானே சரி.

            இப்போது வலிந்து படித்துப் பார்க்கும்போது தெரிகிறது. அனுப்பிய அந்த முதலை விட இந்த இரண்டாவது பெட்டர் என்று. எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்கிற ஆவல்தானே தன்னை அப்படி உழைக்க வைத்தது. ஊக்கமுற வைத்தது! எத்தனை நாள் ராத்திரி இதற்காகக் கண் முழித்திருப்பேன்? வீட்டு வேலைகளைக் கூடக் கவனிக்காமல் இதே நினைப்பாகத் திரிந்தேனே! உங்களால ஒரு உதவி உண்டா என்று எத்தனை முறை நளினி சலித்துக் கொண்டாள்? கொஞ்ச நாளைக்கு எதுவும் எங்கிட்டச் சொல்லாதே என்று அவள் வாயை அடைத்தேனே? ஏதாவது கேட்க வந்தால்கூட எரிந்து எரிந்து விழுந்தேனே? கோயிலுக்குப் போயிட்டு வரலாம், சினிமாப் போகலாம் என்று கேட்டபோதெல்லாம் கோபப்பட்டேனே?

            நாவல் எழுதுபவர்களெல்லாம் இப்படியா இருந்து கொண்டிருக்கிறார்கள்? பைத்தியம் பிடித்தவன் போலவா அலைகிறார்கள்? சதாசர்வகாலமும் அந்த நினைப்பிலேயேவா பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்? ராத்திரித் தூக்கத்தில் திடுதிப்பென்று விழுந்தடித்து எழுந்து உட்கார்ந்து மற்றவர் தூக்கத்தையும் கெடுத்து, லைட்டைப் போட்டுக்கொண்டு அமர்ந்து பேயாய் டைப் செய்து கொண்டிருப்பவர்கள்தான் எழுத்தாளர்களா?

            எதுக்கு இப்டி மென்டலா அலையுறீங்க? – கேட்டாளே!

            வீட்டிலுள்ளோரின் தூக்கம் கெடுகிறதே என்று என்றேனும் நினைத்திருப்பேனா? அவர்களுக்கான தொந்தரவுபற்றி நினைத்தேனா?  கொக்குக்கு ஒண்ணே மதி என்பதுபோல் நடந்து கொண்டேனே?

            விழுந்து விழுந்து எழுதி, கடைசியில் அதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கையில் யாராவது தப்புப் பண்ணுவார்களா? படைப்பாளிக்கு அவன் எழுத்தில் எப்போதும் பெருமைதான். சரி…இருக்கட்டும். ஆனால் இரண்டில் எது பெஸ்ட் என்பதை நிர்ணயிக்கத் தெரிய வேண்டாமா? அப்புறம் என்ன பெரிய படைப்பாளி?

            ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காமல், ரொம்ப நேரம் யோசித்துக் கடைசியில் கணக்கைத் தப்பாய்ப் போடும் மாணவன்போல் ஆகி விட்டதே என் கதை.

            இத்தனைக்கும் கடைசித் தேதிக்குப் பத்து நாள் மீதமிருந்தது. அதற்குள் என்ன அவசரம்? இ.மெயிலில் அனுப்புவதுதானே? கடைசி நாளைக்குக் கூட அனுப்பிக் கொள்ளலாமே? ராத்திரி பன்னிரெண்டு மணி வரை டைம் உண்டே!

            எல்லாம் இப்போது யோசிக்கத் தெரிகிறது. ஆனால் உரிய காலத்தில் உரிய முறையில் செய்யத் தெரியவில்லை.

            உரிய காலத்தில் செய்தாயிற்றுதான். ஆனால் உரிய முறையில் செய்யவில்லையே?

            ஏற்கனவே எழுதி வைத்திருந்த நாவலை விட, புதிதாய் எழுதிய நாவல்தான் நன்றாய் வந்திருந்தது. அதுவே பரிசுக்கு உரியதாய்த் தேர்வு பெறும் வாய்ப்பை பலமாகக் கொண்டிருக்கிறது என்று மனசு சொல்கிறது. பரிசு என்று கிடைக்காவிட்டாலும் கூட புத்தகமாகப் போடவாகவேனும் தேர்வாகும் தகுதி அதற்குண்டு என்ற நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.

            எவ்வளவோ புதிய எழுத்தாளர்கள் வந்து விட்டார்கள். இளைய தலைமுறை எழுத்தாளர்கள். என்னென்னவோ புதிய புதிய விஷயங்களையெல்லாம் களமாகக் கொண்டு நாவலைப் பின்னுகிறார்கள். இன்றைய பாஷையில் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். அங்கெல்லாம் போய், குறைந்தது ஓராண்டாவது இருந்து ஸ்டடி பண்ணினால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என்று நினைக்குமளவுக்கு  சர்வ சகஜமாக, யதார்த்தமாக, அனுபவ ரீதியாக வார்த்தைகளில்  வித்தை பயின்று நாவலைப் படைக்கிறார்கள். பெருத்த ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. புத்தகங்கள் வரும் வேகத்திற்கு வாங்கிப் படிக்க முடியுமா என்று பிரமிக்க வைக்கிறது இன்று வரும் ஆக்கங்கள். நாம் பின்தங்கி விட்டோமோ என்று பயம் கொள்கிறது மனம். விழுமியங்களான விஷயங்களுக்கு இனிமேல் மதிப்பில்லையோ என்று எண்ண வைக்கிறது.

            முதலில் அனுப்பியது சரி.  அத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். கேட்டதுக்கு ஒரு நாவல் அனுப்பியாச்சு. அது போதும் என்று சிவனே என்று இருந்திருக்கலாம்.

இரண்டாவது முறை செய்ததுதான் தப்பாய்ப் போயிற்று. ஆசை…அது யாரை விட்டது? எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி. அப்படியானால் அதை வேறு ஏதாவது போட்டி அறிவிப்பு வரும்போது அனுப்பியிருக்கலாமே? அதுவரை பொறுக்க ஏன் மனசில்லை?  புதிய நாவலைத் திருத்தித் திருத்தி இன்னும்  மெருகேற்றியிருக்கலாமே? பக்கங்களைக் கூடக் கூட்டியிருக்கலாமே?

            எழுத்தின் மீது நம்பிக்கையிருந்தால், படைப்பு நன்றாக உருப்பெற்றிருக்கிறது என்று திடமானால் காத்திருக்கலாமே. இன்னும் எத்தனையோ வாய்ப்புகள் வருமே? அதற்குள் என்ன அவசரம்?

            பதறாத காரியம் சிதறாது. இப்போது பதறியாயிற்று. சிதறி விட்டது.

            ச்சே…! மரமண்டை…!! என் புத்திய செருப்பால அடிக்கணும்…..!!

            எதுக்கு? இல்ல…எதுக்குங்கிறேன்? கிராமத்து வீட்டு முகவரில, அப்பாவோட பேர்ல…அந்த இரண்டாவது நாவலை அனுப்பினதுல என்ன தப்பு? ஃபோன் நம்பரும் வேறேதானே கொடுத்திருக்கு? இ.மெயிலே வேறையாச்சே? எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? என்னோட அசல் பெயர்தான் தெரியாதே? அப்பாவோட பேரோட கிராமத்து வீட்டு முகவரில  பக்காவா அனுப்பியிருக்கேன். எவன் கண்டு பிடிக்கப் போறான்? ஒருத்தனுக்கும் தெரியப் போறதில்லை. அப்புறம் எதுக்குப் பயப்படணும்?

            நினைப்பெல்லாம் நல்லாத்தான் இருக்குது. ஆனா அந்த நெனப்புதானே பொழப்பைப் கெடுக்குது?

            ஒரு வேளை ரெண்டு நாவலும் செலக்ட் ஆயிடுச்சின்னா?

            கேள்வி வந்து பயமுறுத்திக் கொண்டேயிருந்தது பிரம்மராஜனை. அந்த எண்ணத்தில்    அவருக்குத் தூக்கமேயில்லை. அப்டியுமா தனக்கு ஒரு கௌரவம் கிடைக்கும்? இது எப்படிக் கௌரவம் ஆகும். அவப்பெயரன்றோ வரும்? நினைத்து நினைத்துக் குழம்பினார் பிரம்மராஜன்.

            என்ன ஆள் ஒரு மாதிரி டல்லாவே இருக்கீங்க?  ரெண்டு மூணு நாளாவே உங்க மூஞ்சியே சரியில்லையே? ஏன்…என்ன பிரச்னை? பென்ஷன் இன்னும் அக்கௌன்ட்ல சேரலியா? மெஸேஜ் வந்துதா இல்லையா? நெட்ல போய்ப் பார்ப்பீங்களே, பார்த்தீங்களா இல்லியா? முதல்ல போய்ப் பாருங்க…கிரடிட் ஆகியிருக்கா இல்லையான்னு…!

            கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் நளினி. அவளுக்கு அந்த பயம். எங்கே வரவேண்டிய துட்டு வராமல் போய்விட்டதோ என்று. அவளுக்குத் தவறாமல் இருபத்தஞ்சு இருபத்தாறு தேதியிலேயே அவள் கணக்குக்குப் பென்ஷன் வந்து சேர்ந்து விடுகிறது. தொலைபேசி இலாகாவில் இருந்து ஓய்வு பெற்றவள் அவள்.

            அதெப்படி நாலஞ்சு நாள் முன்னாடியே பென்ஷன அனுப்புறாங்க….? மாதம் முடியுமுன்னே ஆள் மண்டையப் போட்டா? முன்னாடியே அதிகமா வலிய இப்படிக் கொடுக்கிறது சரியா? மாசம் முடிஞ்சு ஒண்ணாம்தேதியோ அல்லது மாசக் கடைசியிலோ தர்றதுதானே முறை….ஒரு வாரம் முன்னமேயே ஓய்வூதியத்தப் பைசல் பண்றது கரெக்டா? தப்பால்ல தெரியுது? என்றார் இவர்.

            அய்யாவுக்கு  வயித்தெறிச்சலா இருக்காக்கும். எங்களுக்கெல்லாம் அப்டித்தான். உங்கள மாதிரி வந்திச்சா, வரல்லியான்னு காத்துக் கெடக்குற ஜென்மங்கள் இல்ல நாங்க….கன் மாதிரி வந்து நிக்குமாக்கும்….-பிகு பண்ணிக் கொண்டாள். அது சரியா, தப்பா என்று யோசிக்க அவள் தயாராயில்லை.

            இப்போது அவளுக்கே என் மூஞ்சியைப் பார்த்து உறுத்தியிருக்கிறது. இந்தாளு முகம் ஏன் இத்தனை வாட்டமாயிருக்கு? என்னவோ இரும்புத் துண்ட முழுங்கினவன் மாதிரிக் கிடக்கானே? என்று  கேட்டு விட்டாள்.

            சொல்வோமா…வேண்டாமா? – யோசனை போனது இவருக்கு. இதிலெல்லாம் படு அலெர்ட்டாக இருக்கும்  மனசு, போட்டிக்கு அனுப்புவதில் ஏன் கோட்டை விட்டது? பின் மண்டையில் பொட்டென்று அடித்துக் கொண்டார்.

            முதலில் அனுப்பிய நாவல் தேர்வாகி விட்டதென்றால் பிரச்னையில்லை. எல்லோருக்கும் தெரிந்த புனை பெயரில் அனுப்பியது அது. விட்டது சனி என்று அப்பாடா….எனப் புறப்பட்டுப் போய், தரும் பரிசை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். அந்த இரண்டாவதைப் பற்றி வாயையே திறக்கவும் வேண்டாம். அதைப்பற்றி எவனும் கேட்கப்போவதுமில்லை. எவனுக்கும் அதுவும் தானே என்பதும் தெரியப் போவதுமில்லை…நானே  சொல்லப் போவதுமில்லை.

            ஒருவேளை இரண்டுமே தேர்வாகிவிட்டால்? பரிசுக்குரியதாக ஆகி விட்டால்?  அல்லது ஒன்று பரிசு பெற்று இன்னொன்று புத்தகம் போட என்று கூடத் தேர்வாகி நின்றால்? மொத்தம் போட்டியில் பதினைந்து நாவல் தேர்வாகப் போகிறதே? முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஐந்து ஆறுதல் பரிசுகளும் போக மீதி ஏழு பிரசுரத் தேர்வாயிற்றே…! அதற்கும் ஒரு மதிப்பு உண்டே? பதினைந்து நாவல்கள் புத்தகங்களாக வெளி வரும் என்று எந்த நிறுவனம் இத்தனை வளமாக அறிவிக்கிறது? அதற்கே அவர்களைப் பாராட்டியாக வேண்டும்தான்.

எவ்வளவு பரந்த மனதோடு அந்தப் பதிப்பகம் இந்தப் போட்டியை அறிவித்திருக்கிறது? எழுத்தை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணம்தானே இதன் அடிப்படை? எழுத்தாளர்களை வளர்த்தெடுக்க வேண்டும், தூக்கிப் பிடிக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் பிறந்ததுதானே இந்தப் போட்டியும் அதன் விரிந்து பரந்த அறிவிப்புகளும்? குறைந்தபட்சம் அந்தப் பதிப்பகத்தையாவது மதிக்க வேண்டாமா?

ஒருவர் ஒரு நாவல்தான் அனுப்பலாம் என்று கறாராகச் சொல்லியிருப்பது என்ன வெறும் விளையாட்டா? தனக்குத் தோன்றிய இந்தக் குயுக்தி, வேறெவருக்கும் தோன்றாமலா போயிருக்கும்? எதிலும் ஒரு ஒழுங்குமுறை இருக்க வேண்டும் என்றுதானே இந்தக் கண்டிஷனையெல்லாம் போடுகிறார்கள். பெரிய பெரிய எழுத்தாளர்களை வைத்துப் பரிசீலித்துத் தேர்வு செய்யப் போகும் இந்தப் போட்டியின் முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டாமா? அதில் ஒரு கண்ணியம் மிளிர வேண்டாமா? அந்தத் தேர்வின் மூலம் சிறந்த நூல்கள் வெளிவந்தன என்ற பெருமை பெற வேண்டாமா? பதிப்பகத்திற்கும் பெருமை, நாவல்களைத் தேர்வு செய்த மூத்த எழுத்தாளர்களுக்கும் பெருமை, பரிசு பெற்றவர்களுக்கும் பெருமையாயிற்றே?

ச்சே…! இப்படியொரு தவறைச் செய்து விட்டோமே? மனசு கிடந்து அடித்துக் கொண்டது பிரம்மராஜனுக்கு. இன்னும் கொஞ்சம் போனால் இந்த நினைப்பிலேயே தான் பிரம்மமாய் உட்கார்ந்து போவோமோ என்றெல்லாம் நினைப்புப் போய் விட்டது அவருக்கு.

வயசானா கூர் கெட்டுப் போகும்னு சொல்வாங்க…ஒரு வேளை தனக்கு அப்டி ஆயிடுச்சோ…? மறை கழன்டு போச்சோ? என்னென்னவோ நினைப்பெல்லாம் கிளர்ந்தது பிரம்மராஜனுக்கு.

இரண்டு நாவலும் தேர்வானால் கிராமத்து முகவரியில் அப்பா பெயர் சேர்த்து எழுதி அனுப்பிய அதைப்பற்றி வாயே திறக்க வேண்டாம். அதற்கான அவசியமேயில்லையே? ஆனால் ஒன்று….

அதை என்றாவது எங்காவது புத்தகமாகப் போட முனைந்தால் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புண்டுதானே! யோசனை கிளர்ந்தது அவருக்கு. என்றாவது என்ன, இவர்களே புத்தகமாகப் போட்டு விட்டால்? யார் போய் வாங்குவது…நான்தான் அவன் என்று? சரி அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்….அதற்கும் சேர்த்து இப்போதே வருத்தப்படுவானேன்? சற்றே தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்றார். ஆனாலும் மண்டை காய்ந்தது பிரம்மராஜனுக்கு.

அன்றிரவு ஒரு கனவு வந்தது அவருக்கு. எதை நினைத்து நினைத்து மாய்கிறோமோ அதுவே கனவாகவும் வந்து பயமுறுத்தும் வாய்ப்பிருக்கிறதுதானே?

என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க…? – கேட்டார் பதிப்பாளர்.

என்ன பண்ணிட்டேன்….?

என்ன பண்ணிட்டேனா? ஒருத்தர் ஒரு நாவல்தான் அனுப்பலாம்னு சொல்லியிருக்கிறபோது இன்னொரு பேர்ல இன்னொரு முகவரிலர்ந்து  இன்னொரு நாவல் அனுப்பியிருக்கீங்களே…இது சரியா?

அது என் அப்பா பெயர் சார்…என்னோட புனை பெயர்ல அனுப்பலே…?

புனை பெயர்லதான் ஒரு நாவல் தனியா அனுப்பிட்டீங்களே?

இது வேறே பேர்தானே…முகவரி கூட வேறேதானே?

ஆள் ஒண்ணுதானே சார்….? வேறே வேறல்லியே?

அப்டீன்னா….? – மேற்கொண்டு பேச்சு எழாமல் விழித்தார் பிரம்மராஜன்.

புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா? ஒருத்தர் ஒரு நாவல்தான் அனுப்பலாம்ங்கிறதுதானே போட்டியோட கண்டிஷன்…ஒருத்தரே வெவ்வேற பேர்ல, வெவ்வேறு முகவரிலர்ந்து நாவல் அனுப்பினா அது சரியா? ஒருத்தரே ரெண்டு நாவல் அனுப்பியதா ஆகாதா?

பதில் சொல்ல முடியாமல் முழி முழியென்று முழித்தார் பிரம்மராஜன். எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டதாய் உணர்ந்தார்.

நீங்கள்லாம் இப்படிப் பண்ணலாமா சார்….அதுவும் நிறைய எழுதியிருக்கீங்க…உங்க பேரைச் சொன்னாலே எல்லாருக்கும் தெரியும்….ஏன் சார் இந்தக் கேவலமான வேலையைப் பண்ணினீங்க…? உங்க ரெண்டாவது நாவல்தான் பெட்டர்னு நீங்க நினைச்சிருந்தீங்கன்னா,  கொஞ்சம் பொறுத்திருந்து அதை மட்டும் அனுப்பியிருக்க வேண்டிதானே?

தலை குனிந்து நின்றார் பிரம்மராஜன்.

இப்போ உங்களோட ரெண்டு நாவலுமே செலக்ட் ஆயிடுச்சின்னு வச்சிக்குங்க….அந்த இன்னொரு நாவலுக்கான பரிசை நீங்களே வந்து வாங்கிக்குவீங்களா? டபுள் ஆக் ஷனா? இல்ல உங்க ஒய்ஃப்பை வந்து வாங்க வைப்பீங்களா? அவருக்கு உடம்பு சரியில்ல…அதனால நான் வந்திருக்கேன்னு சொல்லச் சொல்லி அனுப்புவீங்களோ? செய்தாலும் செய்வீங்க….?

“…………………..“

வெவ்வேறு பேர்ல நாவல் அனுப்பிச்ச நீங்க…இதையும்…இப்படிச் செய்ய மாட்டீங்கங்கிறது என்ன நிச்சயம்? இன்னொருத்தருக்கான வாய்ப்பை நீங்க கெடுக்குறீங்கங்கிறது உங்களுக்குப் புரியலையா? எழுத்தாளர்கள்னா கொஞ்சத்துக்குக் கொஞ்சம் நேர்மையா இருப்பாங்கன்னு நினைப்பு…..அப்டியெல்லாம் இல்ல…அவங்களும் சராசரி மனுஷங்கதான்னு சொல்றீங்க நீங்க….அப்டித்தான சார்? ஆனா ஒண்ணு…சராசரிகள் கூட இப்படி இருப்பாங்களாங்கிறது சந்தேகம்தான்….

என்னை மன்னிச்சிடுங்க…..எனக்குப் பரிசு வேண்டாம்…..என் நாவலைத் தயவுசெய்து ஒதுக்கிடுங்க…ரெண்டையும்தான் சொல்றேன். .பரிசீலனையே பண்ண வேண்டாம்….உங்களை மன்றாடிக் கேட்டுக்கிறேன்….அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் பிரம்மராஜன்.

என்னங்க…என்னங்க….ஏன் இப்டி விசிக்கிறீங்க….கனவா….கெட்ட கனவு கண்டீங்களா….? எழுந்திரிங்க… குழந்த மாதிரி அழறீங்க…அதுக்குத்தான்…சாப்டவுடனே வயித்துல லோடோடு படுக்காதீங்கன்னு சொன்னேன். இப்படித்தான் கன்னா பின்னான்னு கனவு வரும்.  எழுந்திரிங்க…பாத்ரூம் போயிட்டு வந்து படுத்துக்குங்க….குல தெய்வத்த நினைச்சு நெத்தில விபூதி இட்டுக் கும்பிட்டுப் படுங்க….-பிரம்மராஜனை உசுப்பி எழச் செய்தாள் நளினி.  எழுந்தவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

ரெண்டு மூணு நாளாவே நீங்க சரியில்லேன்னு நான் சொன்னது சரியாப் போச்சா இப்போ…? என்று முனகிக் கொண்டாள் நளினி.

ஒரு மாதம் கடந்த பொழுது……

தனது பிரபலமான முகநூல் பக்கத்தில்  அந்தப் பதிப்பகம் நாவல் முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில் கிராமத்து வீட்டு  முகவரியில் தன் தந்தையார் பெயரில்  பிரம்மராஜன் எழுதி அனுப்பியிருந்த அந்த இரண்டாவது நாவல் மட்டும் மூன்றாம் பரிசைப் பெற்றிருந்தது.

  பிரம்மராஜன் அந்தப் பரிசினை வாங்கப் போகிறாரா இல்லையா என்று அறிய  உங்களைப் போல் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்தான் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண…!!! ஆசை யாரை விட்டது? மனிதர்களுடைய தவறுகளுக்கெல்லாம் காரணம் ஆசைதானே? போய் நின்று “நான்தான் அவன்“ என்று துணிந்து சொல்வாரா அல்லது குட்டு வெளிப்பட்டு விடுமே என்று கண்டு கொள்ளாமல் கமுக்கமாய் இருக்கப் போகிறாரா?  அல்லது மனைவியை விட்டு வாங்கச் செய்யப் போகிறாரா?  அல்லது விழா மேடையில் ஏறி எல்லோரும் அறிய என்னை மன்னித்து விடுங்கள், இந்தப் பரிசுக்குத் தகுதியுடையவன் அல்ல நான் என்று கம்பீரமாய் முழங்கி உண்மையே உயர்ந்து நிற்கும் என்று தலைநிமிரச் செய்து விழாவில் எல்லோரையும் அதிரச் செய்து நற்பெயரைத் தட்டிக் கொள்ளப் போகிறாரா?

ஒரு வேளை பூனை போல் விழாவுக்குப் போய் கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து  அமர்ந்து அந்த இரண்டாவது நாவலின் மூன்றாவது பரிசினை யார் வாங்கப் போகிறார்கள் அல்லது என்ன செய்யப் போகிறார்கள் என்ற அறிவிப்பினை எதிர்நோக்கி ரகசியமாய்க் காத்திருக்கப் போகிறாரா?

பிரம்மராஜன் பிரமை பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார். தான் கெட்டதுமில்லாமல் நன்றாய் வந்திருந்த அந்த இரண்டாவது நாவலின் நற்பெயரையும் சேர்த்துக் கெடுத்து விட்டோமோ என்றும் அப்போது அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.  வயசானால் கூர் கெட்டுப் போகும் என்பார்கள். தனக்கும் கெட்டுத்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறோமோ? அவசர புத்தி…ஆசைப் புத்தி…அசிங்க புத்தியாகி விட்டதே?     

அப்போது மேடையிலிருந்து அந்த அறிவிப்பு வெளியானது.

“மூன்றாவது பரிசினைப் பெற்ற “பின்னோக்கிய அதிர்வுகள்”  என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் பிரம்மராஜனைப் பெருமையோடு மேடைக்கு அழைக்கிறோம்…..“

குனிந்து தன்னை முகம் மறைத்துக் கொண்டிருந்த பிரம்மராஜனுக்கு இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாய் இருந்தது. எப்படி? இது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? அப்பா பெயரில் ஊர் முகவரியிலிருந்தல்லவா அனுப்பியிருந்தேன். என் பெயரைச் சொல்லி அழைக்கிறார்களே? கண்டுபிடித்து விட்டார்களா?

உடல் நடுக்கத்தில் அதிர்ந்து போய் எழ முடியாமல் பம்மிப் போய் உட்கார்ந்திருந்தார் பிரம்மராஜன். இன்னும் என்னெல்லாம் கேவலம் நடக்கப் போகிறதோ? ஊர் அறிய அசிங்கமாகப் போகிறதா?

சார்…உங்களத்தான் கூப்பிடுறாங்க…மேடைக்குப் போங்க…காதுல விழலியா? – பின்னாலிருந்து ஒருவர் முதுகைத் தொட்டார். என்னையும் தெரிந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்? ஆச்சரியமாயிருந்தது இவருக்கு.

தட்டுத் தடுமாறி எழுந்தார் பிரம்மராஜன். மேற்கொண்டு என்ன ஆகப் போகிறதோ என்று அவர் மனம் பதை பதைத்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பதற்றத்தோடு மேடையை நோக்கி அடியெடுத்து வைத்தார்.  அந்தப் பெரிய உறாலின் கடைசியில் உட்கார்ந்திருந்த அவருக்கு இப்போது அந்த மேடை வழக்கத்தை விட மிக மிகத் தூரமாய்த் தோன்றியது. எட்டு எடுத்து வைக்க வைக்க நீண்டு கொண்டே போனது.

ஏன் சார்…கடைசிக்குப் போனீங்க…முன்னால வந்து உட்கார்ந்திருக்கலாமே? யாரோ நின்று கொண்டிருந்த ஒருவர் சொன்னார்.

தலை நிமிர்ந்து பார்க்க அஞ்சி, பாதி குனிந்தவாறே மேலே சென்றவர்…விருதினைக் கையில் பிடித்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கும் தலைமையின் அருகில் போனதும், வாங்க…வாங்க…பக்கத்துல வாங்க…என்று அவரை அருகே இழுத்து  நிறுத்தி, வைத்திருந்த சால்வையைப விரித்துப்போர்த்தி, விருதுப் பேழையையும், பரிசுத்தொகைக் கவரையும்  அவர் கையில் வழங்கி, நேரே கூட்டத்தைப் பாருங்க.. என்று நிதானமாய்ச் சொல்ல…கண்கள் மறைத்தது பிரம்மராஜனுக்கு.  

எதுவும் வாய் திறக்கத் தோன்றாமலும், மகிழ்ச்சியாய்ச் சிரிக்கத் தெரியாமலும், கண்களில் ஈரம் கசிய அந்த விருதினை பிரம்மராஜன் பெற்றுக் கொண்டபோது அது மிகவும் கனப்பதாகத் தோன்றியது அவருக்கு.

என் வாழ்நாளில், நாற்பது வருஷ எழுத்து அனுபவத்தில்  எனக்குக் கிடைத்த முதல் விருது இதுதான்…என்று சொல்லி ரத்தினச் சுருக்கமாகத் தன் நன்றியுரையை முடித்துக் கொண்டார் பிரம்மராஜன்.  அதைச் சொன்னதிலும் மனசு வெட்கப்படத்தான் செய்தது.

விழா முடிந்தது. ஆனாலும் பிரமை நீங்கியபாடில்லை அவருக்கு. எப்படி நிகழ்ந்தது இது ? சரியென்று மனதுக்குத் தோன்றவில்லையே? பதில் பேச வக்கில்லாமல், வகையில்லாமல் இப்படி வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறேனே? இது நியாயமேயில்லையே?

அருமையான சிற்றுண்டிக்குப் பின் எல்லோரும் படிப்படியாகக் கலைந்து கொண்டிருந்தார்கள். போட்டி நிறுவனர் அவரை நோக்கி வருவது தெரிந்தது.

என்ன பிரம்மராஜன் சார்…சந்தோஷம்தானே…!  என்றார் அவர்.

எதுவும் தோன்றாமல் இறுகிய முகத்தோடு அவரையே பார்த்தார் இவர்.

இந்தப் பரிசுத் தொகை உங்களுக்கு உபயோகமாய் இருக்கும்னு நம்பறேன்…நீங்க முதல்ல அனுப்பிச்ச நாவலை நாங்க ஒதுக்கிட்டோம்.. போட்டியிலேயே சேர்க்கலைன்னு வச்சிக்குங்களேன்.. இரண்டாவது அனுப்பிச்ச நாவலை உங்கப்பா பெயர்ல அனுப்பிச்சிருக்கீங்க…உங்க சொந்த ஊர் முகவரில…அப்படி செய்திருக்க வேண்டியதில்ல….உங்க பெயர்லயே அனுப்பிச்சதா நாங்க எடுத்துக்கிட்டோம். ஏன்னா கடைசிப் பக்கத்துல சென்னை முகவரியைத்தான் கொடுத்திருக்கீங்க…ஆச்சரியமாயிருந்திச்சு. அப்புறம்தான் அது உங்க நாவல்னு புரிஞ்சிக்கிட்டோம். உங்கப்பாவோட உழைப்பும், வறுமையும், நேர்மையும் ஒன்றின வாழ்க்கையை உருக்கமான அழகிய சித்திரமா வடிச்சிருக்கீங்க…மனசு உருகி உருகிப் படைச்ச அந்தப் படைப்பை ஒதுக்கவே எங்களுக்கு மனசு வரல்லை…அப்புறம்தான் உங்க முதல் நாவலைப் போட்டியிலிருந்தே ஒதுக்கிடுறதுங்கிற முடிவுக்கு நாங்க வந்தோம். எங்க பரிசீலனைக் குழு ஒருமனதா செய்த முடிவு அது. எல்லோரும் மனமுவந்து ஏத்துக்கிட்டுத்தான் இதைச் செய்திருக்கோம்…உங்களைக் கௌரவப்படுத்தணும்ங்கிறதுதான் எங்களோட ஒரே நோக்கமாய் இருந்தது.

இருந்தாலும்….. – ஏதோ சொல்ல முயன்றார் பிரம்மராஜன். வார்த்தைகள் வரவில்லை. என்னையறியாமல் நாவல் முடிவுக்குப் பின் கீழே என் முகவரியையே கொடுத்திருக்கிறேனா? இதுநாள் வரை இது மண்டையில் உறைக்கவேயில்லையே? தப்பு செய்றவன் ஏதேனும் ஒரு அடையாளத்தைத் தானறியாமல் விட்டுட்டுப் போவான்ங்கிறது இதுதானோ?

அதுமட்டுமில்லே…உங்க ரெண்டு ஃபோன் நம்பரும் எங்ககிட்டே இருக்கே…ஏற்கனவே புக்ஸெல்லாம் நிறைய வாங்கியிருக்கீங்கதானே…அத வச்சும் உறுதி செய்துக்கிட்டோம்…

உங்களோட விடாத உழைப்புக்காக எங்களோட விதிகளை நாங்களே எங்களுக்குள்ளே தளர்த்தி இந்தப் பரிசை உங்களுக்கே கொடுத்துடுறதுங்கிற முடிவுக்கு ஏகமனதா வந்தோம். செய்து முடிச்சிட்டோம். எங்களுக்குப் பரம சந்தோஷம்…அதுபோல உங்களுக்கும் இந்தப் பரிசு சந்தோஷத்தை அளிக்கும்னு நம்பறோம்…ஆல் த பெஸ்ட்….தொடர்ந்து எழுதுங்க…எங்களோட பதிப்பகம் சார்பா மனமார்ந்த வாழ்த்துக்கள். நாவல் புஸ்தகமா வந்தவுடனே உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்….ஒரு விஷயம்…நாவல் உங்க பெயர்லதான் புக்கா வரும்…வாழ்த்துகள்….

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றோ…? எந்தக் கிருஷ்ணனின் கால் பெருவிரல், தேரை அழுத்தி என் தலையைக் காப்பாற்றியது? புரிந்தும் புரியாதவராய் நடந்து கொண்டிருந்தார் பிரம்மராஜன்.

ஐயா….ஆட்டோ வேணுங்களா…எங்க போகணும்? கேட்டவாறே சர்ர்ர்ரென்று உறுமிக்கொண்டு இரைச்சலோடு அருகே வந்து  நின்ற அதில் பதிலெதுவும் சொல்லத் தோன்றாமல் பிரம்மமாய் ஏறி உட்கார்ந்தார் பிரம்மராஜன்

எங்க போகணுங்கய்யா….? –டிரைவர் திரும்பிப் பார்த்துக் கேட்டார்.

மகாத்மாகாந்தி நகர்…..என்றார் பிரம்மராஜன்.

                                                ---------------------------------

 

                       

           

           

05 ஏப்ரல் 2025


பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2025 இதழில்   “கடைநிலை“  நாவல் அறிமுகம்




                                                        
 


02 ஏப்ரல் 2025

 

சிறுகதை                கணையாழி   ஏப்ரல் 2025   பிரசுரம்            

“சமரசம்“




            பேப்பர் போட்டானா? – கதவைத் திறந்த வாகினியைப் பார்த்துக் கேட்டார் சிவமூர்த்தி. வெறுங்கையோடு அவள் வருவதே போடவில்லை என்பதை உணர்த்தியது.

            அதான் சொல்றனே…அவன் கணக்கு இந்த டைம்தான்ங்கிறதே இல்லை. ஒரு நாளைக்கு ஆறுக்கே கிடக்கும். இன்னொரு நாளைக்கு ஏழரைக்குக் கிடக்கும். வேறொரு நாளைக்கு எட்டரை, எட்டே முக்கால்னு எறிஞ்சிட்டுப் போவான்.  எல்லாமும் தப்பித்துன்னா மணி பத்துக்குத்தான். அப்பயும் போடலைன்னா அன்னிக்கு மொங்கான்னு அர்த்தம்…

            ஏற்கனவே அன்றைய கணக்கிற்கு மூன்று முறை கீழே சென்று பார்த்துவிட்டு வந்ததற்கு அடையாளமாய் அலுத்துக் கொண்டார் சிவா. இதற்கென்றே தனியே நேரம் ஒதுக்க வேண்டுமென்று தோன்றியது. தோன்றியதென்ன…நேரம் வீணாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இரண்டு மாடி இறங்கி ஏற வேண்டும். காரணம் லிப்ட் சரியாய் வேலை செய்வதில்லை. பாதியில் நின்று விடும் அபாயம். ஒரு முறை மாட்டி, கீச்சுக் கீச்சென்று கீச்சி…சத்தம் தாளாமல் அய்யய்யோ…என்று ஆட்கள் ஓடி வந்து கையைப் பிடித்து இழுத்து மேலே தூக்கி விட்டார்கள். வேட்டி அவுந்து, டவுசரோடு நின்று அசிங்கமாகிப் போனது. அந்தக் கை வலி, உடம்பு வலி, மன வலி இன்னும்….!  இனி ஒரு முறை அப்படி அசிங்கப்பட முடியுமா? நான் என்ன கிறுக்கா?

லிப்ட் மெஷின் பாட்டரியைத்தான் எவனோ ஒருத்தன் திருடிக் கொண்டு போய்விட்டானே?அது இருந்தால் கரன்ட் போனாலும் பாதியில் நிற்காது.  இரண்டு மாடி பூனை போல் ஏறி திறந்து கிடக்கும் மொட்டை மாடிக்குப் போய், லிப்ட் கதவைத் திறந்து…சாவகாசமாய்….எவ்வளவு சாமர்த்தியம்?  அந்த மாடிக் கதவைப் பூட்டுங்கள், பூட்டுங்கள் என்றால் எவனாவது கேட்டால்தானே? துணி உலர்த்த வேண்டியது…அப்படியே திறந்து போட்டுவிட்டுப் போய்விட வேண்டியது…நடை பயில வேண்டியது…மாடியில் கும்மாளம் அடிக்க வேண்டியது..அப்படியே பெப்பரப்பே…ன்னு போட்டு விட்டுக் கீழே இறங்கி விடுவது…ஒரே குப்பைக் கழிவுகள்…எவன் கூட்டுவது? எல்லாருக்கும் வயசு மட்டும்தான் ஆகியிருக்கு….ஆனா எதுக்கும் வாயைத் திறக்கப்படாது…பழி சண்டைக்கு வந்து விடுவார்கள்.

            குறிப்பிட்ட டைம்னெல்லாம் போட முடியாது சார்…பசங்க வேலைக்கு வர்றதப் பொறுத்து இருக்கு…தெனமும் எவனாச்சும் ஒருத்தன் காணாமப் போயிர்றான்…சின்னப் பசங்கதான…அவிங்கள விரட்டவும் முடியாது…வந்த அன்னிக்கு நிச்சயம்…வராத அன்னிக்கு நாந்தான் கொண்டாந்து போட்டுக்கிட்டிருக்கேன்…

            ஓரொரு நாளைக்கு ஆறரைக்கே கிடக்கே…அது எப்படி? – சந்தோஷமாய்  அவனுக்குத் திருப்தியாய் இருக்கட்டும் என்றே கேட்டார்.

            அது நான் போடுறது சார்…சமயங்கள்ல ஒருத்தன் கூட வரமாட்டானுங்க…பேசி வச்சிட்ட மாதிரி நின்னுடுவாங்க…பாருங்க…நேத்திக்கு வானுவம்பேட்டைல கோயில் திருவிழா…மூணு நாளா அல்லோலப் படுது…பாட்டும் கூத்துமா அலறிக்கிட்டுக் கெடக்கு. பசங்கள எப்டி எதிர்பார்க்க முடியும்? அங்கதான் கெடந்திருப்பானுங்க…நல்லாத் தெரியும்…ராக்கூத்து அடிக்கிறானுங்க…காலைல இழுத்துப் பொத்திப் படுத்துக்கிறானுங்க…அவுக அம்மாக்களுக்குப் பேசினா ஃபோனை எடுத்தாத்தானே…? இதுக்குத்தான் இந்தாளு கூப்பிடுவான்னு தெரியும்…கமுக்கமா இருந்திடுவாங்க…இவிங்கள்லாம் வந்த அன்னிக்குத்தான் சார் நிச்சயம்…அப்டித்தான் சமாளிச்சு ஓட்டிக்கிட்டிருக்கேன். அத்தக் கூலிதான….மாசச் சம்பளமா கொடுக்கிறோம்?

            நீங்க ஒருத்தராவே போட முடியாதா? அந்தக் காசெல்லாம் மிச்சமாகுமே…?

            ஏன் சார்…நீங்க சொல்ற இத நான் யோசிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா? என்னவோ புது யோசனை மாதிரிக் கேட்குறீகளே…? அதெல்லாம் போட்டுப் பார்த்தாச்சு…ஒண்ணும் பலிக்கலை. இதென்ன ஒரே எடத்துல, குறிப்பிட்ட ஒரு  நகர்ல இருக்கிற வீடுகளுக்கு மட்டும் போடுற வேலன்னு நினைச்சீங்களா? அதான் கிடையாது. யாரு பேப்பர் வாங்குறாங்கன்னு நினைக்கிறீங்க…? எல்லாரும் டி.வி. நியூஸ் கேட்டுட்டு விட்டுர்றாங்க…அதான் இருபத்து நாலு மணி நேரமும் அப்பப்ப புதுசு புதுசா செய்தி சேர்த்துச் சேர்த்துச் சொல்றானுங்களே…அப்புறம் அதைப் பேப்பர்ல வேறே படிக்கணுமாக்கும்...ரொம்பக் கொஞ்சப் பேர்தான் சார்…அதாவது பல வருஷமா விடாமப் படிச்சிட்டு வர்றாகள்ள…அவுக மட்டும்தான் பிடிவாதமா வாங்குவாங்க…இப்பத்தான் குழந்தைக படிப்புக் கெடுதுன்னு நிறைய வீடுகள்ல டி.வி.யவே  ஆஃப் பண்ணி வச்சிடுறாகளே…? அந்த மனுஷாளையும் சேர்த்துக்குங்க…!  இப்போ உங்க வீட்டுக்கு நான் போடுறேன்…எப்பருந்து? ஒரு வருஷமா இருக்குமா…? அதுக்கு முன்னாடி யார்ட்ட வாங்கினீங்களோ தெரியாது…ஆனா பாருங்க…உங்க ஏரியாவுலயே ரெண்டு மூணு வீடுகதான்….அதுக்காகவே நான் உள்ளார கடைசில இருக்கிற உங்க அபார்ட்மென்டுக்கு வம்படியா வர வேண்டியிருக்கு…சில நாட்கள்ல பேப்பர் வரலன்னு ஃபோன் பண்ணுறீங்கதானே…அது என்னான்னு நினைக்கிறீங்க…? பசங்க இங்க வர சோம்பேறித்தனப்பட்டுக்கிட்டுத்தான்….இருபது தெரு நீண்டு கெடக்கு உங்க பகுதில…நீங்க பதிமூணுல கிடக்கீங்க…மெயின் ரோட்டுலர்ந்து புகுந்து புகுந்து உள்ளே வரணும்ல சார்…இதுல நிறையக் குறுக்குத் தெருக்கள் வேறே…கொஞ்சம் மாறிச்சின்னா என்னடா வீட்டக் காணலன்னு திரும்பிடுவானுங்க…அவிங்கள எதுவுமே சொல்ல முடியாதாக்கும்…எதாச்சும் வாய விட்டோம்…முறுக்கிக்கிட்டு மறுநாள்லர்ந்து வரவே மாட்டானுங்க…ஆள் கிடைக்கிறது குதிரக் கொம்பு சார் இந்த வேலைல…அடிக்கிற பனிக்கு எந்திரிச்சு வரணும்ல…சுருட்டி மடக்கி, இழுத்துப் பொத்திப் படுத்துட்டானுங்க…எமனே வந்தாலும் எழுப்ப முடியாதாக்கும்….!

            அவனின் நீண்ட பேச்சு எனக்கு மிகவும் ஸ்வாரஸ்யமாய்த்தான் இருந்தது. இதுவரை மூணு ஏஜென்டுகள் மாற்றியாயிற்று. எல்லாமும் ஒரே மாதிரித்தான் என்று தோன்றியது. வருடாந்திரச் சந்தா கட்டி விடுபவன் நான். ரெண்டு பேப்பருக்கு. அதாவது தமிழொன்று, ஆங்கிலமொன்று. அப்படிச் செலுத்தும்போது நமக்கு லாபமே.  ஒரு பேப்பரைத் தினமும் காசு கொடுத்து வாங்கினால் என்ன தொகை வருமோ அந்த அளவுக்குத்தான் இரண்டு பேப்பருக்கான  வருடச் சந்தா.

            ஆனால் பாருங்கள்…பல நாட்கள் பேப்பர் போடாமல் விடுபட்டுப் போகிறது என்பதுதான் துயரமே. மழை பெய்தால் பேப்பர் வராது.  சனி ஞாயிறில் சமயங்களில்  பேப்பர் வராது. திடீரென்று சில நாட்களுக்கு காரணமேயில்லாமல்  பேப்பர் வராது. கேட்டால்…அப்டியா…போடச் சொல்றேன் என்று பதில் வரும். ஆனால் வராது. நாளைக்குச் சேர்த்துப் போடுவான் என்று கூறுவார்கள். நாளைக்கு நாளைப் பேப்பர்தான் வரும். வந்தாலும் செய்தி பழசாச்சே என்று ஒதுங்கி விடும். ரெண்டில் ஒன்று வந்திருக்கும். அந்த ஒன்றும் வீசியெறியப்பட்டு தாள் தாளாய்ப் பறந்து கிடக்கும். போதாக் குறைக்கு உள்ளே வந்து போகும் நாய்கள் குதறி வைத்திருக்கும்.  அல்லது கார் பார்க்கிங்கில் இருக்கும் ஈரத்தில் கிடந்து இஞ்சியிருக்கும். அதை அலுங்காமல் எடுத்து வந்து கொடியில் உலர்த்தி கிளிப் போட்டு காய்ந்த பிறகு படிக்கும்முன் ரெண்டு நாட்கள் தாண்டி விடும். தரை அழுக்குகள் சேர்ந்து அப்பிக் கிடக்கும் பேப்பரை எப்படிக் கையில் வைத்துப் படிக்கத் தோணும். இப்படிப் பல நஷ்டங்கள் நடை முறையில். ஆனாலும் விட முடியவில்லையே என்பதுதான் இதில் அதிசயம்.

            வருஷங்கூடி ஒரு மாசப் பேப்பர் போடாமப் போவானா…தொலையட்டும்…அப்டியும் நமக்கு லாபந்தான். இந்த மட்டுமாவது போடுறானே… - இது வாகினியின் ஸ்டேட்மென்ட். அவளுக்கு பேப்பர் இல்லாமல் ஆகாது. வீட்டு வேலைகள் எல்லாமும் முடிந்த பின் ஆசையாய் அவள் கையிலெடுப்பது செய்தித்தாள்தான். அதோடு கொஞ்சுவாள். அதிலும் ஆங்கிலச் செய்தித்தாள். அவளுக்காகத்தான் ரெண்டு பேப்பர். மேய்ந்து கட்டி விடுவாள். இண்டு இடுக்கு ஒன்று விடாது.

            தமிழ் பேப்பரை ஒரு புரட்டு. ம்உறீம்…இதெல்லாம் என் தகுதிக்கு கைனாலயே தொடக் கூடாது…என்பது போல…!  சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள். படித்தவள். ஆங்கில அறிவு அதிகம். வேலை பார்த்த இடமும் அப்படி. பாவம்…எனக்காகத் தமிழில் பேசக் கற்றுக் கொண்டாள். அப்படித்தான் சொல்லியாக வேண்டும். அடிக்கடி வந்து விழும் ஆங்கில வார்த்தைகள் கூட அவளிடம் மறைந்துதான் போயின. அதற்காகத் தமிழ் சிறப்பாய்ப் பேசுவாள் என்று பொருளில்லை. ஏதோ பேசுவாள். வீட்டு அளவுக்கு.

            மொழிங்கிறது ஒரு காரணி. பரஸ்பரம் பகிர்ந்துக்கிறதுக்கு இருக்கிற ஒரு வழிமுறை…இப்படிச் சொல்லிச் சொல்லி அவளைக் குட்டி, பாஷையையே மாற்றி விட்டவன் நான். அந்த இங்கிலீஷ் பேப்பரை நான் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டேன். என்னோட அலர்ஜி அது. ஆனால் பாருங்கள்…நானும்தான் முப்பத்து மூணு வருஷம் டிபார்ட்மென்டில் சர்வீஸ் போட்டவன். இங்க வேலை செய்றதுக்கு குறைந்த பட்சம் இருநூற்றைம்பது  ஆங்கில வார்த்தைகள் தெரிஞ்சாப் போதும்…மொத்த சர்வீசையுமே ஓட்டிடலாம்…என்று சொல்லியிருக்கிறேன் நான். அதையே வச்சு வளைச்சு வளைச்சு எழுதி வண்டி ஓட்டி, ரிடையர்டும் ஆயிட்டேன். பயங்கரமா டிராஃப்டிங் எழுதுவாரே சாரு…என்பார்கள் என்னை. அப்போ அவுங்க என்ன லட்சணம்னு நீங்களே யோசிச்சிக்குங்க…அந்தக் கண்றாவிய நான் வேறே வாய்விட்டுச் சொல்லணுமா? வெட்கக் கேடு…!

            சரி…பிரச்னைக்கு வருவோம்…

            வாகினி…நான் வேணும்னா ஒருவாட்டி கீழே போய் பார்த்திட்டு வரட்டுமா? என்றேன்.   பேப்பர் வரலைன்னா அந்த நாள் அவளுக்கு தற்கொலைக்கு சமம்.

            இப்பத்தானே நானே மேலே வந்தேன். அதுக்குள்ளேயுமா போட்டிருப்பான். சித்த கழிச்சுப் போங்க…..! உடனே குடு குடுன்னு ஓடணுமா?

            அப்டியில்லை…நீ மேலே வர்றபோதுகூட சர்ர்ர்ன்னு வந்து வீசியிருப்பான். தோன்றி மறையறதுதானே…! சொத்துன்னு போடுற சத்தமா இங்கே கேட்கப் போகுது…தொங்க விட்டிருக்கிற பைல போடுங்கன்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு. போடுறானா? வீசித்தான் எறியறான். அட…தான் போடுறபோதே அது பேப்பர் பேப்பரா பிரிஞ்சிடுச்சின்னு பறக்கிறதப் பார்த்திட்டே வண்டியை விடுறான். ரெண்டு பேப்பரையும் சுருட்டி, உருட்டிப் பந்து போல  உள்ளே எறிப்பா…ன்னும் சொல்லிட்டேன்…கேட்டாத்தானே…!

பையில போடுற பொறுமையெல்லாம் பசங்களுக்கு இருக்காது சார்….அதெல்லாம் அவிங்ககிட்டே எதிர்பார்க்க முடியாது,  சொல்லவும் முடியாது…உள்ளேதான் எறிவாங்க…ன்னே சொல்லிட்டான். நாமதான் உடனடியாப் போய் பொறுக்கிக்கணும். பேப்பர் வேணும்னா பட்டுத்தான் ஆகணும். அவுங்களால முடிஞ்சது அவ்வளவுதான்…இல்லன்னா வேண்டாம்னு நிறுத்தணும்.

தினசரி கடைக்கு ஒரு நடை போயி வாங்கிக்கணும்.  அப்போ காசு டபுள் பங்கு ஆகும்….பரவால்லியா? டபுள் பங்கை விடக் கூடத்தான்னு நினைக்கிறேன். கணக்குப் பண்ணிப் பாரு…தெரியும்…அதுக்கும் நமக்கு மனசாகாது…அப்புறம் என்னதான் செய்றது?

கீழே இறங்கினேன். லிப்டில் போவதில்லை என்றுதான் முடிவு செய்தாயிற்றே? இறங்கும்போதும் ஏறும்போதும் படு கவனமாய் இருக்க வேண்டியிருக்கிறதுதான். கொஞ்சம் பிசகினால் தடுமாறி உருள வேண்டியதுதான். வாழ்க்கையில் தடுமாறாமல் இவ்வளவு தூரத்திற்கு வந்து கடைசி காலத்தில் போயும் போயும் மாடிப் படியிலா தடுமாறித் தலைகுப்புற விழ வேண்டும்? பக்கக் கம்பிகளைக் கை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது.

பேப்பர்காரனால் கிடைக்கும் புண்ணியம். காலை நடைப் பயிற்சி…. மேலுக்கும் கீழுக்கும்.

நான் இறங்கிப் போய் நிற்க….அந்தப் பேப்பர் ஏஜென்டே பிரத்தியட்சமாக, சரியாய் இருந்தது. வியர்க்க விறுவிறுக்க…பொறி கலங்கிப் போய்….பார்க்கவே பரிதாபமாய்த்தான் இருந்தது. ஏனிப்படி படு டென்ஷனாய்?

அமர்த்தலாய் நின்றேன்.

ரெண்டு பேப்பர்….நீங்கதான சார்…இந்தாங்க…என்றவாறே எடுத்து  நீட்டினான்.

பசங்க வரமாட்டேங்கிறாங்க சார்…அவிங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் வேணுமாம்…ரொம்ப உள்ளாற இருக்குல்ல…இம்புட்டுத் தூரம் வர முடியாதுங்கிறாங்க…வேலய விட்டுப் போறேன்கிறானுங்க…சமாளிக்க முடில…

நான் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டு நின்றேன். என்ன சொல்ல வருகிறான்?

ஒரு முப்பது ரூபா மட்டும் கொடுத்திடுங்க சார்…சர்வீஸ் சார்ஜா…ரெகுலராப் போட்டுடச் சொல்லுவோம்….பசங்க ரொம்பச் சடைக்கிறாங்ஞ….ஆளு கிடைக்கல…..

என்னது முப்பதா? அது எதுக்கு? அதான் மொத்தமாப் பணம் கட்டிட்டோம்லப்பா….ஆபீஸ்லதான் ஏஜென்டுகளுக்குக் கமிஷன் கொடுப்பாங்கல்ல….?

அப்ப விடுங்க சார்…..இனி பேப்பர் போட முடியாது…..சொன்னவன் கண் இமைக்கும் முன் பறந்து விட்டான். இப்படிக் கண் நேரத்தில்  முறித்து இதுவரை நான் எவனையும் பார்த்ததில்லை.

  ஏய்…ஏய்…நில்லுப்பா….! – நான் கத்துவது அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.   அடப்பாவி….! கடவுள் மாதிரி மறைஞ்சிட்டானே?

முப்பது ரூபா இந்தக் காலத்துல ஒரு காசா? இதுக்குப் போய் யாராச்சும் முடியாதும்பாங்களா? அவன் ஃபோன் நம்பரை கொடுங்க…நான் பேசறேன்…. – வாகினி என்னை எகிறினாள்.

நான்தான் “ரெண்டு பேப்பர்“ வீட்லர்ந்து பேசறேன்…அபார்ட்மென்ட்டு….தெரியுதா?

தெரியுதுங்கம்மா…சொல்லுங்க… - ஸ்பீக்கரில் அவன் குரல் எனக்கு நன்றாய்க் கேட்டது.

எப்பயும் போல போடுங்க…நிறுத்திடாதீங்க…புரிஞ்சிதா…முப்பதில்ல…அம்பது வாங்கிக்குங்க…ஓ.கே.யா…? உங்களுக்குக் கொடுக்கிறதுக்கென்ன…?  

வாகினியின் குரல் வளமை அவனை மடக்கி விட்டதோ என்னவோ? பெண்களின் ஆதரவான குரல் தாயின் கனிவையும்,  அரவணைப்பையும் ஒத்திருக்கிறதே…?  

ஆகட்டுங்கம்மா….சந்தோசம்…போடச் சொல்றேன்…பசங்க தவறாமப் போட்டுடுவாங்க….அய்யாட்டச் சொல்லிடுங்க….காலைல ஒரு டெத்து…அதான்  பறந்து ஒடியாந்துட்டேன்….! அய்யா என்னமும் நினைச்சிக்கிடப் போறாங்க…!

மறுநாள் ஐம்பது கை மாறியது. பேப்பரும் கைக்கு வந்தது. வாகினியின் வெற்றி.

ஆனால் எப்பொழுதும் போல் சில நாட்கள் பேப்பர் வராமலிருப்பதும், ஒரு பேப்பர் மட்டுமே வந்து கிடப்பதும், தாள் தாளாய்ப் பறந்து தட்டழிவதும், நாய் வாயை வைத்துக் குதறுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இன்றும்….!!

ஆனாலும் அவன்தான் பேப்பர் போடுகிறான் இன்றும், இப்போதும்…! என்றும்…எப்போதும்…!!!

                                    ----------------------------------------------