13 மே 2023

 

 

“சொல்லப்படாத கதைகள்“ – சிறுகதைத் தொகுப்பு – ஜனநேசன். வெளியீடு – பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை-18.

-------------------------------------------------------------------------------------------------------




இத்தொகுதியின்  முதல் கதையில் நாம் கவனிக்க வேண்டியது இதன் தலைப்புதான்.

குருகும் உண்டு மணந்த ஞான்றே….

இது குறுந்தொகையின் 25-வது பாடலின் கடைசி வரி.

யாருமறியாமல் நான் தலைவனோடு கூடிய காலையில் அங்கே ஓடிக் கொண்டிருந்த நீரிலே ஆரல் மீனின் வருகையும், அதைப் பார்த்துக் கொண்டிருந்த தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் மட்டுமே இருந்தன.  அவைகளை எப்படி சாட்சிகளாக்க முடியும்? தலைவன் என்னோடு கூடியதற்கு சாட்சிகள் இல்லையே? அவன் தன் உறுதியிலிருந்து தவறினால் நான் என் செய்வேன்?  என்று பதறுகிறாள் தலைவி. இது இப்பாடலின் கருத்தாக மிளிர்கிறது என்று அறியப்படுகிறது.

            கதையின் நாயகி படித்தவள். நிதானமாய் அணுகுகிறாள் விஷயத்தை. அவனோடு சினிமா திரையரங்கில் நுழைந்த காட்சிக்கான சாட்சியும், பிள்ளையார் சிலைக்கு எதிரிலான விளக்குக் கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த காமிரா வழியும், சாட்சிகளைச் சேகரிக்கிறாள்.

            காதலித்தவன் கைவிட்ட நிலையில் அவனது பெற்றோரிடம் நேரில் சென்று உண்மையுரைக்கிறாள்.  அவர்களும் படித்தவர்கள். நேர்மையாக கண்ணியமான குடும்பம். அணுகுமுறை நிதானமாய் இருக்கிறது.

நடப்பு உலகத்தின் பராபரியான ஊடகச் சூழலை மனதில் வைத்து வெட்ட வெளிச்சமாய்  எதையும் செய்து கேவலப்படுத்தாமல், நேரில் வந்து தங்களிடமே சொன்னதற்கு நன்றி  என்று அப்பெண்ணின் பண்பாடு குறித்து  மெச்சி, அவளை ஏற்றுக் கொள்கிறார்கள். 

சொல்ல நினைத்த கதைக்கு எவ்வகையிலான வடிவம் கொடுத்து  எடுத்துரைத்தால் சிறக்கும் என்று சரியாக முடிவெடுத்து இச்சிறுகதையை வடிவமைத்திருக்கிறார் ஜனநேசன். அதனால் எளிய விஷயமாயினும் இக்கதை சிறப்புப் பெறுவதான தோற்றம் கொள்கிறது. 

அந்தவகையில் ஜனநேசனுக்கு நம் பாராட்டுக்கள்.

இது போல் கருத்து மிகுந்த எட்டுக்கதைகள் இத்தொகுதிக்குப் பெருமை சேர்க்கின்றன. மாதிரிக்கு ஒன்று. அப்போதுதான் வாங்கிப் படிக்கும் ஆர்வம் மிகும்.

இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளின் ஆன்மாவைக் குறிக்கிறது இந்த “சொல்லப்படாத கதைகள்“ தலைப்பின் கதை என்கிறார் ஆசிரியர். தலைப்பு வைப்பதிலும் அதைப் பொருள் கொள்ளும்படி செய்வதிலும் படைப்பாளியின் அக்கறை முக்கியமே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், போதும் என்கிற மனம் வந்துவிட வாய்ப்புண்டு. புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படித்தால்தான் இலக்கியச் சுவை கூடும்.

கதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று படைப்பாளியின் பயணம் வெற்றிகரமாய்த் தொடர்கிறது. அவருக்கு நம் பாராட்டுக்கள். மனமார வாழ்த்துவோம்.

                                                ----------------------

 

12 மே 2023

 

“யா…ரப்பே…” – சிறுகதை – ஜவ்வாது முஸ்தபாவின் “ஆறாம் விரல்”  வாசிப்பனுபவம். சிறுகதைத் தொகுப்பு – நன்னூல் பதிப்பகம், மணலி-திருத்துறைப்பூண்டி. (தொடர்புக்கு - 99436 24956)

------------------------------------------------------------------------------------------------------




          மூக நல்லிணக்கம் இன்றைய முக்கியத் தேவை. அதற்கே கேடு வந்துவிடுமோ என்பதாக பயப்படும் காலமாக இருக்கிறது இன்றைய சூழல். இலக்கியம் இந்த நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுதல் என்பது மிகவும் அவசியம். இலக்கியத்தைப் பயனுள்ள முறையில் அடையாளப்படுத்தும் படைப்புக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சமுதாய மேம்பாட்டிற்கான தூண்டுகோலாக நாம் அவற்றைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

            அம்மாதிரியான படைப்புக்களை நாம் ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் உண்டுதான். அது எந்த மதத்தைப்பற்றி யார் எழுதியிருந்தாலும், படைப்பு என்ன சொல்கிறது என்பதை மட்டும் உற்று நோக்கி அதன் அவசியத்தை இலக்கியப் பரப்பிற்குள் கொண்டு வந்து கவனப்படுத்த வேண்டியது கடமையாகிறது. இலக்கிய வாசகர்களின் உள்ளத்தில் நன்னெறிகளை ஆழப் பதிய வைத்து அம்மாதிரியான படைப்புக்களின் அவசியத்தை மேலெடுத்துச் செல்ல வெளிப்படையாகவோ, இலக்கியப் பயன்பாட்டிலோ பணியாற்ற வேண்டியிருக்கிறது.

            “ஆறாம் விரல்” சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஜவ்வாது முஸ்தபா அந்தப் பணியைத் தன் கடமையாகச் செய்திருக்கிறார். ஒரு படைப்பாளிக்குள்ள சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.

            மதக் கோட்பாடுகளை வலியுறுத்தும் அதே நேரம் அவற்றைப் பின்பற்றுவதில் நடைமுறை வாழ்க்கையின் வறுமையின்பாற்பட்ட சிக்கல்கள் மனித உயிர்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை மையமிட்டு, அதனால் ஏற்படும் சொந்த பந்தங்களுக்கிடையிலான உறவு விரிசல்களையும், மன வருத்தங்களையும், சுமுகமின்மையையும் அங்கங்கே தொட்டுத் தொட்டுச் சுட்டிக் காட்டிச் செல்லும் இவர் எழுத்தின் இயல்பான ஓட்டம் நம் மனதை நெருடி நெருடி வேதனையுறச் செய்கிறது. எத்தனையோ வாழ்க்கைச் சிக்கல்களுக்கிடையில், மன ஊனங்களுக்கிடையில்  இறை நம்பிக்கை நம்மை எப்படி வழி நடத்துகிறது என்பதையும் வலியுறுத்தி இவர் கதை சொல்லும் விதம் நமக்கு ஆறுதலளிக்கிறது.

            மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம் என்பது எத்தனை அவசியமாக முன்னிற்கிறது என்பதற்கு தன் கதைகளின் கதாபாத்திரங்களுக்கு இவர் வைத்துள்ள பெயர்களும் அதன் மூலம் உருவாக்கி நிறுத்தும் குண நலன்களும் அன்பையும், அரவணைப்பையும், ஒற்றுமையையும் நிலை நிறுத்தி அவற்றின் என்றைக்குமான அவசியத்தை ஆழப் பதியச் செய்து முன்னேறும் கதைக்களன் நிகழ்வுகளும் படைப்பாளியின் மீதான மதிப்பை உயர்த்திப் பிடித்து மதிப்புறச் செய்கிறது.

            “யா…ரப்பே…“ – என்ற இந்த முதல் கதையே நம் மனதை வெகுவாகப் பிழிந்தெடுத்து விடுகிறது எனலாம். இக்கதையைப் படித்தபோது இன்னொரு குடும்பத்தில் நடந்த ஆயுளுக்குமான ஒரு பேரதிர்ச்சி அந்த மொத்தக் குடும்பத்தையும் காலத்துக்கும் எப்படிச் சீரழித்து சின்னாபின்னப் படுத்தியது என்கிற நினைவு எழுந்து என் மனதை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கி விட்டது.

            அந்த அளவிற்கான பாதிப்பை இத்தொகுப்பின் இந்த முதல் கதையே ஏற்படுத்தி படைப்பாளியின் கருணை மிகுந்த மனநிலையையும், எண்ண ஓட்டங்களையும் உணர்த்தி தொகுப்பின் மீதான மரியாதையை மேம்படுத்தியது என்றால் அதில் வியப்பில்லை என்றுதான் கூற வேண்டும்.

             யா…ரப்பே….என்றால் “கடவுளே…” என்றுதான் பொருள். ஆனால் எம்மாதிரியான சூழலில் இந்த வேண்டுதல் நிகழ்கிறது என்பதுதான் கவனிக்கத் தக்கதாகிறது.  வெறும் உதட்டளவில் வெளிப்படும் வார்த்தைகளா அவைகள். எவ்வளவு துன்பங்களை, மன பாரங்களை  உள்ளடக்கி அதன் உருவகமாக அடிவயிற்றிலிருந்து பீறிடுகிறது இந்த மாயச் சொல்…! தீராத துயரங்களை எதிர்நோக்கும் எளிய மனிதர்கள் யாரிடம் போய் வேண்டி நிற்பார்கள்? கடவுள் நம்பிக்கை மனிதனின் உயிர்நாடி போன்றதாய் விளங்கி அவனுக்கு ஆறுதலளித்து மேலும் சோர்வடைந்து விடாமல் அவனை இயக்குகிறது. என்றேனும் விடிவு பிறக்கும் என்பதன் தணியாத நம்பிக்கையே கடவுள்.

            ரகமத் அப்படித்தான் தன கணவன் ரகீமிற்காக வேண்டி நிற்கிறாள். அவளின் மனத் துயரம் அளவிடற்கரியது. மருத்துவர் லூயிஸ்  தன்னாலியன்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறார். ஆனால் ரகீமின் கைப் புண் ஆறுவதாயில்லை. மணிக்கட்டுவரை எடுத்த பின்பும் தொடர்கிறது. தொடர்ந்து அழுகிக் கொண்டேயிருக்கிறது.  என்ன காரணத்தினால் இது நிகழ்கிறது என்பதை உறுதி செய்ய முடியா நிலை. தர்உறாவிற்கு சென்று ஓதுதல் முடித்த பின்பும் விடிவு ஏற்படாமல் வேதனை தொடர்கிறது. செவிலித்தாய் சுந்தரவள்ளி அவ்வளவு அக்கறையோடு கவனித்துக் கொள்கிறாள்.  ஆனால் கடைசிவரை ரகீமின் கைப்புண்ணிற்கு முடிவே இல்லாமல் போகிறது. அறுவை சிகிச்சைக்குப்பின்பு கட்டப்பட்ட கட்டை மீறி புழுத்து நெளிகிறது. இரு மகள்களோடு சேர்ந்து நிற்கும் கடைசி நிமிடங்கள். மொத்த மாத்திரைகளையும் விழுங்கி முடிவைத் தேடிக் கொள்கிறான் ரகீம். செய்வினையின்பாற்பட்ட சோதனைதான் இது என்று உறவுகளின் மேல் கொண்ட சந்தேகங்கள் கோபத்தையும், பழியையும் மனதிற்குள் விதைத்து  அதனை மீறிய இறை நம்பிக்கை அவர்களை வழி நடத்திச் சென்று… ஏமாற்றமாகி இறுதி முடிவின்சொல்லொணா வேதனை நம்மை கதி கலங்கச் செய்து விடுகிறது. இறைவா…யாருக்கும் இந்தத் துயரம் நிகழக் கூடாது என்று ரகமத்தோடு சேர்ந்து நாமும் இறைவனை வேண்டி நிற்கும் நிர்க்கதியான நிலையே ஏற்படுகிறது.

            இத்தனை துயரமிக்க சோக காவியத்தை மனம் சுமந்து நிற்கும்போது நாமும் நிலை குலைந்து போகிறோம். என்றுதான் ஆதரவற்றவர்களுக்கு விடிவு? எப்படித்தான் அந்த விடிவு? யார் மூலம்தான் அந்த விடிவு? யா ரப்பே…! (றப்பே…என்பதுதான் சரியோ…!) என்று அகன்ற வானத்தைப் பார்த்து நாமும் வேண்டி நிற்கிறோம்.

            ஜவ்வாது முஸ்தபாவின் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட சூழ லியல் மக்களின் அனுபவம் சார்ந்த இந்தத் தொகுப்பின் கதைகளில் சில பாராட்டத்தகுந்த பரிசுகளையும் வென்றுள்ளன என்கிற செய்தி நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு தொகுதியின் மூன்று நான்கு கதைகள் சிறப்பாக இருந்தாலே அதைச் சிறந்த தொகுப்பு என்று பாராட்டும் வகைமையில் இத்தொகுதியின் மொத்தப் பதினாக்கு கதைகளின் பத்துக்கும் மேற்பட்ட கதைகள் நம் சிந்தையைப் புரட்டிப் போடும் வலிமை வாய்ந்தவையாய்த் திகழ்தல் படைப்பாளியின் ஆளுமை மிக்க எழுத்துத் திறனை வெளிப்படுத்தும் சாட்சிகளாய் மிளிர்கின்றன.

            அடுத்தடுத்த தொகுதிகளில் ஜவ்வாது முஸ்தபா இன்னும் இன்னும் மேலே சென்று தன் எழுத்துத் திறனை உச்சியில் நிறுத்துவார் என்பது திண்ணம்.

                                                ---------------------------------------

11 ஏப்ரல் 2023

 

“வனம் புகுதல்“ -  18-வது சிறுகதைத் தொகுப்பு-மணிவாசகர் பதிப்பகம்-சென்னை -  



பொருளடக்கம்

1)   எதிர்பார்ப்புகள்

2)   மௌனம் சம்மதம்

3)   மாறுதடம்

4)   ரயிலில் ஏறிய ரங்கன்

5)   நீக்(ங்)குதல்

6)   தன்னை வென்றவன்

7)   பென்னி

8)   அதிகாரம்

9)   வனம் புகுதல்

10) மனோ-ரஞ்சிதம்

11) மிரட்டும் தனிமை

12) பால்தாத்தா

13) எளியோரைத் தாழ்த்தி

14) எனக்கே எனக்கு

15) பேப்பர் பையன்

16) நேற்றுப் பால்

17) அந்தக் கரணம்

18) விலகல்

------------------------------

 

 

 

 

 

 

10 ஏப்ரல் 2023

 

சிறுகதை                                           “ஏகாந்தம்”        திண்ணை இணைய இ.தழ் 02.04.2023   






மணன், தான் தனிமைப் படுத்தப்படுவதாக உணர்ந்தார். தனிமைப்படுத்தப்படுகிறோமா அல்லது தனிமைப்படுத்திக் கொள்கிறோமா என்றும் ஒரு சந்தேகம் வந்தது. நமக்கு நாமே அப்படிச் செய்து கொண்டு, வீணாய் அடுத்தவர் மேல் சந்தேகப்பட்டால்? அது முட்டாள்தனமில்லையா? அநாவசியமான சண்டைகளுக்கு, மனத் தாங்கல்களுக்கு வழி வகுக்காதா?  தனிமைப் படுத்திக் கொள்வதினால்தான் அதை உணர முடிகிறதோ என்று நினைத்தார். வசதியாய் உணரப்பட்டதனால், அதை நிலைக்கச் செய்யும் முகமாகச் சில நடந்து வருகிறதோ?

      ஏம்ப்பா இப்டித் தனிக்கட்டையா உட்கார்ந்திருக்கே? எங்களையெல்லாம் பார்க்கப் பிடிக்கலையா? எங்களோட பேசப் பிடிக்கலையா? பேசவே மாட்டேங்கிறியே?

      யாரும் இந்நாள் வரை கேட்கவில்லை. கேட்க வேண்டும் என்று என் மனம் விழைகிறதா? பொருட்படுத்தவில்லையே என்கிற வருத்தம் எழுகிறதா? அப்படியானால் அந்தத் தனிமைக்கு ஏது பெருமை? அதன் மகத்துவம்தான் என்ன? தனிமை என்பது விரும்பி ஏற்றுக் கொள்வதல்லவா? தனிமையை, அமைதியை அனுபவிப்பது என்பது ஒரு யோக மனநிலையல்லவா? அலைபாயும் மனதை வைத்துக் கொண்டு தனிமையில் இருந்தென்ன பயன்? எல்லா இக பர இயக்கங்களிலிருந்து, சராசரிகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு மோன நிலையை எட்டுவதற்கான முயற்சியல்லவா அது? அந்த முயற்சிகளை மேற்கொள்வதும், அதில் தனித்துப் பயணிப்பதுமே ஒரு தனி சுகமல்லவா? இந்த லௌகீக எண்ணங்களிலிருந்து எப்படி விடுபடுவது? என்று விடுபடுவது? அதன் ஆரம்பப் படிநிலை அமைதியை, தனிமையை எட்டுவதல்லவா?

      அறைக் கதவை யாரோ மெல்லத் தயங்கித் தயங்கித் திறக்கும் சத்தம். தன் இருப்பு அறிந்து சுவடின்றி மறைதல்.  இதுவே ஒரு தொந்தரவுதான். தனிமை என்பது என்ன? அமைதி என்பதும்தான் என்ன? குறுக்கு நெடுக்கே யாரும் வராத, எந்தச் சத்தமும் எழாத அமைதி, தனிமை. அது கிடைக்க வேண்டாமா? ஒருங்கிணைந்த அல்லது ஒருங்கிணைக்க முயற்சிக்கும் தியானத்தைக் கலைக்க ஸ்தூல வடிவுத் தொந்தரவுகள்!

      தனியே உட்கார்ந்திருந்தால், தனிமைப் படுத்திக் கொண்டால், யாரையும் கண்கொண்டு பார்க்காதிருந்தால், யாருடனும் ஏறெடுத்து ஒரு வார்த்தை பேசாதிருந்தால் எல்லாம் கிட்டிவிட்டதா ஆகுமா? அது எதன் மீதும், எவை மீதும், யார் மீதும் எந்த ஒட்டுதலும், பகைமையும் கொள்ளாத தன்மையல்லவா? எல்லாமும் சமநிலை. ஏற்ற இறக்கங்கள் என்பதற்கு அங்கே இடம் ஏது? தனிமையும், அதற்கான பயிற்சியும் தரும் மோனநிலை எத்தகைய மகத்துவமான ஒரு விலகல்?

யாரை யார் தனிமைப்படுத்துவது? அவரவர் சுதந்திரம் அவரவருக்கு. அந்தந்த வயசிற்கேற்றாற்போல் மனம் நாடும் சுதந்திரத்தை ஒருவன் மேற்கொள்ளக் கூடாதா? கடைசிவரை லௌகீகமாய் இருந்து கழித்துதான் மண்டையைப் போட வேண்டுமா? வெவ்வேறு படி நிலைகள் என்று பிறகு ஏன் வைத்திருக்கிறார்கள்? அந்தந்த வயதிற்கு அந்தந்த மனநிலை ஏற்படும் என்பதைக் கணித்துத்தானே? அந்த மனநிலையைப் பக்குவமாய் எய்துபவன் அதை நோக்கி நகர்வதில், நகர்த்திக் கொள்வதில், தன்னை நிறுத்திக் கொள்வதில் என்ன தவறு? மனம் ஒரு சீரான பயணத்தில் இருந்து கடந்து வந்திருந்தால்தானே உரிய காலத்திலான அந்த இடம் வந்து சேர்ந்திருக்கும்? தானே வந்து சேர்ந்த அந்த இடத்தை ஒருவன் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்வதில் என்ன முறைமை கெடுகிறது? அது காலம்வரை கடந்து வந்த தூரத்தை விட, அந்த இடம் ஒருவனை அதீதமாய் ஈர்க்கும்போது, ஆகர்ஷிக்கும்போது அவன் அங்கே நிலைப்பதில் யார் எதைச் சுட்ட முடியும்? என்ன குறைகாண முடியும்?

பக்குவமற்றவர்கள் ஒருவனைத் தனிமைப் படுத்தி விட முடியுமா? தனிமை என்பதும், தனிமைப்படுத்திக் கொள்தல் என்பதும் அத்தனை சராசரியாய் உணரப்பட வேண்டியவைகளா? இன்னொருவன் தன்னைத் தனிமைப்படுத்தி அதில் அவன் வெற்றி கண்டுவிட முடியுமா? சில  எளிய முடிவுகளுக்கு ஒரு மதிப்பார்ந்த விலை உண்டா என்ன? தோன்றி மறையும் சில, வந்து போகும் பல காலத்தால் காணாமல் போகும் மின் மினிகள். அதையெல்லாம் நினைந்து ஒருவன் தன்னை இளக்கிக் கொள்ள இயலுமா?

      தனிமை ஒரு தனி இன்பம். அங்கே எதிர்ப்பு என்பது இல்லை. இணக்கம் என்பதும் இல்லை. எதிர்ப்பைத் தானே உருவாக்கிக் கொண்டால்தான். அதற்கான எதிர்வினைகளை ஏற்படுத்தி அதில் இன்பமுறுவதும், திருப்தியடைவதும் தனி சுகம். தனிமைக்கு ஒரு நியாயம் வேண்டும். அந்த நியாயத்திற்கு ஒரு அர்த்தம் வேண்டும். அந்த நியாயம் தனக்கு மட்டுமே ஆனது. மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. அந்த நியாயத்தின் அர்த்தம் மற்றவர்களால் உணரப்பட வேண்டும் என்கிற தேவையுமில்லை. அது தனக்கானது. தன்னால் உருவாக்கப்பட்டது. தனக்குத்தானே இன்பம் காணுவது. அதன் மதிப்பை எதிராளி அறிவதற்கில்லை. அறிந்து மதிக்கப்பட வேண்டும் என்கிற அவசியமுமில்லை.

      ஆனாலும் நான்கு பேரோடு சேர்ந்து ஜீவிக்கும்போது அந்தத் தனிமை அநியாயமாய்ப் பழிக்கப்படுகிறது. வெவ்வேறு காரணங்களால் அலட்சியப்படுத்தப்படுகிறது.  உருத் தெரியாமல் அலைக்கழிக்கப்படுகிறது. சிதைக்கப்படுகிறது. அதன் இருப்பு மற்றவர்களால் உறுதி செய்யப்படுகிறது. வெறுத்து ஒதுக்கப்படுகிறது. அழிக்க முடியாமல் சீண்டச் செய்கிறது. அல்லது கண்ணிலிருந்து மறைக்கச் செய்கிறது. கேலி கொள்கிறது. எள்ளி நகையாடப்படுகிறது.

      தான் ஆரம்பித்து வைத்தது, இப்போது தனக்கே எதிராகப் பாய்கிறதோ?. தனிமை பகையாக உருமாறுகிறதோ என்ற சந்தேகம் கிளர்ந்தது. தனிமையை யாரும் விரும்புவதில்லை. தனியாய் இருப்பவன் உட்பட. ஆனால் ஒருவனைத் தள்ளுகிறது அது. ஒதுங்கு என்று விரட்டுகிறது. ஏதோ ஒரு சூழல் அவனைக் கை பிடித்து அழைத்துச் செல்கிறது. இணக்கம் காண்பிக்கிறது.  யார் கண்ணிலும் படாதே என்று மறைய வைக்கிறது.  தனியாய் இருப்பவனைக் காண விருப்பமில்லை எவருக்கும். அதற்கான அவசியம் இல்லை என்று கருதப்படுகிறது. தனியாய் இருப்பவன் தண்டச் சோறு என்ற கருத்து நிலவுகிறது. சிலாக்கியமான தொடுதல் கூட இல்லாதவன் இருந்தென்ன போயென்ன என்ற கருத்து பரவலாகிறது. சுற்றிலும் எளிய மக்கள், உறவுகள்...சராசரிகள்...பலரும் அப்படி இருக்கவே விரும்புகிறார்கள்.

      தனிமையே எதிராளிக்கு உபத்திரவமாய் இல்லாது இருப்பதுதான் என்பதற்கு எதிராக வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட நேரம் தவிர்த்து இருப்பின் தொலையட்டும் என்று ஏற்கப்படுகிறது.  .  தனிமையும் அமைதியும் விலையற்றுப் போய்க் கிடக்கிறது. அதன் மகத்துவம் உணரப்படுவதில்லை. சராசரியாய் இருந்து தொலைப்பதுதான் எல்லோர்க்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. தனிமையை அலட்சியப்படுத்துதலிலும், தனித்திருப்பவனும் அலட்சியப்படுத்தப்படுகிறான். ஆனால் அது அவனால் பொருட்படுத்தப்படுவதில்லை. அதுபற்றி அவனுக்குக் கவலையில்லை. ஏனெனில் அவன் உலகம் தனி உலகம். அங்கே அவனை உணர்ந்தவர்கள் மட்டுமே காலடி வைக்க முடியும். அவனுக்கு ஒத்துழைக்க நினைப்பவர்கள் மட்டுமே அருகில் செல்ல முடியும். யாருமே இல்லையாயினும் தனித்திருப்பவன் எந்தவித மனத்தாங்கலுக்கும் ஆளாவதில்லை. எவரையும் நினைந்து நோவதில்லை. எதையும் நினைத்துக் குறைபட்டுக் கொள்வதில்லை. அவனியக்கம் அவன் உணர, தடையின்றி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

      தனிமைப் படுத்திக் கொள்வதும், தனிமையாய்க் கழிப்பதும் என்னுடைய முழு சுதந்திரத்தின்பாற்பட்டது. அதற்குள் யாரும் உள் நுழைய முடியாது. அந்தக் கோட்டையில், பரந்த உலகத்தில் நான் மட்டுமே இருக்கிறேன். அதை யாரும் சீர் குலைக்க முடியாது. அதை விமர்சிக்க முடியாது. அதன் மேன்மையை உணருவதற்குத் தனிப் பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் இருந்தால்தான் அதை மதிக்க இயலும். அதன் மகத்துவத்தை உணர இயலும்.

      என்னை விட்டு விடுங்கள். என் தனிமையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோர்க்கும் ஒரு நிலை உண்டு. அந்த நிலையை அவன் எய்துவதை உணருங்கள். அதன் மகத்துவத்தை அவன் தன் இருப்பின் மூலம் பிறருக்கு உணர்த்துகிறான். அதை ஆத்மார்த்தமாய் உணரப் பழகிக் கொள்ளுங்கள். அவன் தனிமையில், அதன் மோனத்தில் யாரும் இம்சிக்கப்படுவதில்லை. யாரும் எள்ளி நகையாடப் படுவதில்லை. எவரும் குறைத்து மதிப்பிடப் படுவதில்லை. எவரும் நெருக்கமோ, விலகலோ இல்லை. எதுவும் அங்கே சமம். எல்லாமும் அங்கே பரம். இல்லாதிருப்பதை நோக்கிச் செல்லும் ஏகாந்தம்.

      அவனை அவனாக இருக்க விடுங்கள். அந்த முயற்சியைக் குலைக்காதீர்கள். அந்த அமைதிக்குப் பங்கம் விளைவிக்காதீர்கள். அந்தப் பயணத்தைத் தடுக்காதீர்கள். அவன் போகட்டும். எதுவரை முடியுமோ அதுவரை போய்ப் பார்க்கட்டும். எங்கே நிலைக்குமோ அங்கே நின்று நிலைக்கட்டும். எந்த நிலை அவனை அடையாளப்படுத்துமோ அந்த நிலையை அவனாகவே எய்தட்டும். அங்கே பரிபூர்ணம் பிறக்கட்டும். அந்த முழுமையில் அவன் தன்னைக் கரைத்துக் கொள்ளட்டும்.

      ரமணன் தன் அமைதியை, தனிமையை, தியானத்தைத் தொடர்கிறான். அது அவனை இந்த இக பர இயக்கங்களிலிருந்து கைகோர்த்து, எங்கோ அழைத்துச் செல்கிறது. அங்கே அவன் தனியனாகிறான். எடையற்ற, இலகுவான, கண்ணுக்குத் தெரியாத, காதால் உணர முடியாத இயக்கமாகித் தன்னை அந்தக் ககனவெளியில் கரைத்துக் கொள்கிறான்.

      கதவு  மீண்டும் திறக்கிறது. தட்டில் பரிமாறப்பட்ட சாப்பாடு முன்னே வைக்கப்படுகிறது. அவர்கள் அவனை, அவன் தனிமையை, அமைதியை மதிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள்.

                                    --------------------------------

 

     

 

 

 

 

 

'நிற்பதுவே-நடப்பதுவே” -சிறுகதை-திண்ணை-09.04.2023 பிரசுரம்







            ன்னாங்க…நிறையத் தண்ணி இருக்கிறதாப் பார்த்து வெட்டுங்கன்னா….இப்டி சீவிக் கொடுக்குறீங்களே? …. ஒரு டம்ளர் அளவு கூட இல்ல….

            சின்னாண்டி தலையைக் குனிந்தவாறே நின்றான். சமயங்களில் அவன் கணக்கு தப்பி விடுகிறதுதான். அது பிரச்னையாகிவிடுகிறது. ஒன்றும் சொல்லாமல் இளநீரை இரண்டாய் வெட்டிப் பிரித்தான். ஒரே வழுக்கை.   பார்த்ததும் திக்கென்றது. வழுக்கையாய் இருந்தால் நீர் அதிகம் இருக்க வேண்டும்.  அதுவுமில்லை.

            ஆனால் இளநீர் என்று வெட்டினால் முப்பது ரூபாய்தான். ஒன்று முப்பது, ஒன்று நாற்பது, ஒன்று இருபத்தைந்து என்றெல்லாம் விற்பதற்கில்லை. ஒரே விலை. அப்படியானால் ஒரே பலன் என்றிருக்க வேண்டும்தானே? அது மாறுபட்டு விடுகிறது. பாதிக்கும் மேலானோர் அதிருப்தியில்தான் செல்கிறார்கள். சிலருக்கு  வெறும் தேங்காயாய் வந்து விடுகிறதே…? இந்தக் கடை சரியில்ல…என்று ஒதுங்கி விட்டால்?

            ஏன்யா….இளநியக் கேட்டா….தேங்காய வெட்டுற….தண்ணி ஜாஸ்தியாப் பார்த்து வெட்டத் தெரியாதா? தேங்காய்க்குள்ள இருக்கிற அளவுக்கே தண்ணி இருந்தா அது எப்படிய்யா இளநி ஆகும்?

            கேள்விகளை நன்றாய்த்தான் கேட்கிறார்கள்.  கொள்முதல் செய்யும் இடத்தில் இதெல்லாம் பேச முடிகிறதா? அவனாய் எண்ணி எண்ணித் தூக்கிப் போடுவதுதான். பெரிசும், சிறிசுமாகத்தான் வருகிறது.

            அண்ணே…! கொஞ்சம் பொறுக்கிப் போடுங்கண்ணே….சரியா வியாபாரம் பார்க்க முடில…..! பயந்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

            என்னாது? பொறுக்கிப் போடவா? சர்தான்….இப்டி ஆளாளுக்குப் பொறுக்கிப் போட்டா அப்புறம் நாங்க பொறுக்கிட்டுப் போவேண்டிதான்…!

            என்னாண்ணே இப்டிச் சொல்றீக…? வருஷக் கணக்கா ஒங்ககிட்டதான வாங்குறேன்…எனக்கு அந்தச் சலுக தரக் கூடாதா? இப்டிக் கறாராப் பேசுறீகளே…?

            இந்தா பாரு சின்னாண்டி….பொள்ளாச்சிலர்ந்து லோடு வருது…வண்டிச் சத்தம், ஆட்கூலி, டிரைவர் சம்பளம், ஏத்துக் கூலி எறக்குக் கூலி….பெட்ரோலு, டீசலு, டோல் கேட்டுன்னு நூறு இருக்கு…எல்லாம் போகத்தேன் நாங்க காசு பார்க்கணும்…ஆகையினால பொத்திட்டு வாங்கிட்டுப் போ…நீ என்னா வெலைக்கு விக்கற, எம்புட்டு லாபம் பார்க்குற…என்னா விவரம்னு  நாங்க ஏதும் கேட்டமா? பெறவென்ன?

            அதற்கு மேல் பேசினால் மறுநாளைக்கு  சரக்கு இல்லையென்று கூறி விடுவார்கள். இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது சின்னாண்டியின் அன்றாட வாழ்க்கை. சமயங்களில் காய்க்கு ஏற்றாற்போல் விற்றால்தான் சரக்கைத் தள்ள முடியும் என்கிற சொந்தச் சுய உணர்வு முடிவில் கடை விரித்தவுடன் பெரிசு, சிறிசு என்று பிரித்துப் போட்டு வியாபாரத்தையும் நடத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்படிப் பிரித்த நாட்களில் கிறு கிறுவென்று இளநீர்கள் விற்றுத் தீர்ந்துமிருக்கின்றன. ஆனால் கடைசியில் காசை எண்ணும் போது முதலுக்கே மோசமாய்த்தான் இருந்திருக்கின்றன.

            வாடிக்கையாளரையும் அனுசரித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. உழவர் சந்தை ஆபீசில் கெஞ்சிக் கூத்தாடி சந்தைக்குள்ளேயே ஒரு இடம் பிடித்தான் ஆரம்பத்தில். அந்தா…கடோசில இருக்குல்ல…அங்க போட்டுக்க உன் கடையை… என்று ஒரு மூலையைக் காட்டினார்கள் ஆரம்பத்தில்.  மதியம் ஒரு மணியைப் போல் வந்து வாய் இழக்காமல் ஓசி இளநீருக்கு நின்றார்கள்.  சமயங்களில் ஆபீசர் இன்சுபெக் ஷனுக்கு வந்திருக்காகய்யா…ரெண்டு இளநீ வெட்டு என்று அதிகாரமாய்க் கேட்டார்கள்.

            அவர்களை அன்றாடம் பிச்சாண்டி கவனித்துக் கொண்டுதான் இருந்தான். தினமும் சரியாக மணி ஒன்று நெருங்கும்போது ஒரு பெரிய படுதாப் பையை எடுத்துக் கொண்டு வந்து கடை கடையாய் நீட்ட, அவர்களும் கைக்கு வந்ததை அள்ளி அள்ளிப் போட “அடப் பாவிகளா…ஒரு வாரத்துக்குத் தேறுமேய்யா….?” என்று முனகியவர்கள் பலர். காசு கொடுத்து வாங்கினால் ஐநூறு செலவழித்தாலும் அந்தப் பை நிறையாது. அது ஓசியிலேயே அன்றாடம் நிறைகிறது என்றால்?  வாங்கிக் கொண்டு போய் இவர்கள் வீட்டு வாசலில் கடை போட்டு விடுகிறார்களோ? இம்புட்டு காய்கறி ஒரு குடும்பம் திங்கணும்னா…பத்து நாளானாலும் தீராதே….? என்று வயிறெரிந்தார்கள்.

            இந்த ஓசிக்கு சம்மதிக்கவில்லையென்றால் மறுநாள் கடை போட டோக்கன் கிடைக்காது. வாயை மூடிக்கொண்டு கொடுத்துத் தீர்த்தால்….மீதிக் காயைச் சாக்கில் கட்டி அதே எண்ணுள்ள கடையில்  பாதுகாப்பாய் வைத்து விட்டும் செல்லலாம்.மறுநாள் டோக்கனும் இடமும் அன்றே உறுதி. வந்தபின்தான் தண்ணீரைத் தெளித்து புதுக்காய்கள் போலாக்கி விடலாமே…? தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி, பழனி என்று வந்து சேரும் காய்கள் இத்தனை நாட்கள் எந்த வாட்டமும் காணாமல் எப்படி நிமிர்ந்து நிற்கின்றன? எல்லாம் மருந்தடிக்கும் யோகம்தான். வாடிப் போன கீரையே அந்த சாயத் தண்ணீரில் முக்கி எடுத்தால் நிமிர்ந்து மலர்ந்து சிரிக்கிறது.  அப்போதே பறித்து வந்த கீரை கூட அத்தனை பளபளப்பாய் இருந்து கண்டதில்லை.   கேட்டால் எல்லாம் தோட்டத்துக் காயு, காலைல கைவிட்டுப் பறிச்ச வீட்டுத் தோட்டத்துக் கீரைக….சாமி….என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.   மக்களும் அதைத்தானே நம்பி வாங்கித் தின்று   வியாதி வெக்கை என்று அலைகிறார்கள்? எளிய மக்கள் எப்படி இப்படி மாறினார்கள்?

அட என் கிராமத்து அன்பான ஜனங்களே…நீங்கள் எப்போது இப்படி பொய் சொல்லக் கற்றுக் கொண்டீர்கள்? நிறுத்த நிறுவை போக ஒரு கை தாராளமாய் அள்ளிப் போட்ட உங்கள் தாராள மனசு எங்கே போய் மறைந்து கொண்டது? அரை கிலோ இருபத்தெட்டு என்றால் முப்பதுக்குப் போட்டுர்றேன் என்று பிடுங்கி விடுகிறீர்கள். கால் கிலோ பன்னெண்டு என்றால் பதினஞ்சுக்குப் போடுறேன்…என்று சில்லரைத் தட்டுப்பாடு காரணம் சொல்லி ரவுன்ட் ரவுன்டாய்ப் பிடுங்குகிறீர்களே? இதெல்லாம் உங்களுக்கு யார் கற்றுக் கொடுத்தது? வெள்ளந்தியாய் இருந்த உங்கள் விகல்பமற்ற மனதை இந்த உலக நடப்புகள்தான் இப்படி மாற்றி விட்டதா? 

சின்னாண்டியும் அவர்களோடேயே அன்றாடம் கழித்து விடலாம் என்றுதான் பார்த்தான். காய் வாங்க வருபவர்கள் மாய்ந்து மாய்ந்து அங்கே இன்னொரு மூலையில் வைத்திருக்கும் பத்து ரூபாய்க் காளான் சூப்பைத்தான் மண்டி மண்டிக் குடிக்கிறார்களே தவிர முப்பது நாற்பது கொடுத்து ஒருத்தனும் தைரியமாய் வந்து இளநீர் கொடுங்க என்று கேட்க மாட்டேங்கிறானே?  தினசரி கடை போட்டு, ஆபீசுக்கு ஓசிக்கு வெட்டி நீட்டவா இங்கே வியாபாரம் செய்ய வந்தேன்?

சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டான் சின்னாண்டி. அதே உழவர் சந்தையின் வெளிச் சாலையில் சற்றுத் தள்ளி ரோட்டோரமாய்  தன் கடையை விரித்தான்.  ஆரம்பத்தில் நன்றாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. டவுனில் அலைந்து திரிந்து சாமான்செட்டுகள் வாங்கி வரும் புருஷன் பெண்டாட்டி முதற்கொண்டு அவன் கடைக்கு முன் வந்து வண்டியை நிறுத்தினார்கள்.  கூல் டிரிங்கும், பழ ரசமும் சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ மேல், அலைந்த அலைச்சலுக்கு உடம்புச் சூடும் குறையும் என்று நின்று நிதானித்து உறிஞ்சி, பிட்டு விடாமல் வழுக்கையையும் வழிச்சு வாங்கி ஆயாசமாய் உள்ளே தள்ளிவிட்டுப் போனார்கள். சமயங்களில் இன்னொண்ணு குடுங்க…என்று கூட வாங்கிக் குடித்து விட்டுப் போனார்கள்.

பரவால்லியே…இந்தப் பக்கத்து ஆளுங்க…நல்ல வசதியானவுக போல்ருக்கு …என்று எண்ணி வியந்திருக்கிறான் சின்னாண்டி. ஆடி ஓடி அங்கே ஒரு நல்ல இடம் அமைந்ததே என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே அதற்கும் ஒரு வினை வந்தது. பக்கத்தில் செக்கச் செவேல் என்று ஒரு பெரிய வணிக வளாகத்தைத் திறந்திருந்தார்கள்.பேச்சுக்குப் பேச்சு எல்லாம் “ஃப்ரெஷ்ஷா” கிடைக்குது என்றார்கள். அரசு டெப்போவில் கிடைக்கும் அன்றாடப் பால் பாக்கெட் கூட அம்பது பைசா அங்கே கம்மி என்றார்கள். போதாக்குறைக்கு நாளைக்குப் பால் நாளைய தேதி போட்டு இன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்கே வந்திடுது என்று குஷிப்பட்டார்கள்.

இந்தியா பூராமைக்கும் மாநிலத்துக்கு மாநிலம் மாவட்டத்துக்கு மாவட்டம்  கடை போட்டிருக்கும் அந்த “ஃப்ரெஷ் “  ஏன் ஒரு பொருளைப் பாதி விலைக்கு விற்க முடியாது? அடப் பாவி…அதற்காக இளநீரைக் கூடவா நீ விற்க வேண்டும்? தண்ணிப் பழம் முதற்கொண்டு இப்டியா லாரி லாரியாக் கொண்டு அடுக்கணும்? மலை மலையாய் இப்படிக் கொண்டு வந்து இறக்கினால்…என்னை மாதிரி சிறு வியாபாரி என்னதான் செய்வான்? அன்றாடங் காய்ச்சியாய் இருக்கும் என் வயிற்றிலா நீ அடிக்க வேண்டும்? இன்னைக்குப் பூரா இந்த இளநீ வித்தாத்தான்யா ராவுக்கு வீட்டுல போய் வயிறார நான் சாப்பிட முடியும்? அப்பத்தான்யா பொழுது புலர நா போய் கொள் முதல் பண்ண முடியும்? என்ன மாதிரி செத்துப் பிழைக்கிறவன் வயித்துல அடிக்கவா நீ இப்படிக் கடை பரப்பினே? நாங்கள்லாம் உயிரோட இருக்கணுமா வேணாமா? திருவிழாக் கூட்டம்மாதிரி வருதேய்யா சனம் உன்னத் தேடி…அதுல நாலு ஆளுகதானே என்னத் தேடி வந்திட்டிருந்தாக….அதுக்குமா வென? இப்டியே போச்சுன்னா எதுக்கு இந்த உசிர வச்சிக்கிட்டுன்னு எங்கள மாதிரி ஆளுகளெல்லாம் கடல்ல போய் விழுந்து மாய்ஞ்சு போக வேண்டிதானா? அந்தக் கடலத் தேடிப் போயி உயிர மாய்ச்சிக்கிறதுக்கும் எனக்கு ரூபா ஐநூறு இருந்தாத்தானய்யா முடியும்? தற்கொலதான் பண்ணிக்கணும் செலவில்லாம…!

இப்டி ஏழைக வயித்துல தேடித் தேடி…பார்த்துப் பார்த்து அடிக்கிறீகளே…இது நியாயமா? எங்களயெல்லாம் கடவுள் ஏன்தான் படைச்சாருன்னு நினைக்க வச்சிட்டீகளே?

நகரில் இப்படி நாலஞ்சு இடம் மாற்றியிருக்கிறான் சின்னாண்டி. எல்லா இடமும் ஆரம்பத்தில் சூடு பிடித்தாற் போலிருக்கும். பிறகு படுத்து விடும். ஆனால் ஒன்று. விற்காமல் நிற்கும் இளநிகளை தென்னை மட்டைகளை வைத்து வெளித்தெரியாமல் அழுத்தமாய் மூடி வைத்துவிட்டுப் போய் விடுவான் சின்னாண்டி. ஒரு நாளும் அது திருடு போனதில்லை. அந்த மட்டும் அந்தப் பகுதி மக்களே அதற்குப் பாதுகாப்பு. விடிகாலை நாலு மணிக்கு காந்தி மியூசியம் வாசலில் ப்ளாட்பாரம் ஓரமாய்க் கொண்டு ஐநூறு இளநிகளை இறக்கி விட்டுப் போகிறதே ஒரு வேன். அந்த நாகு அண்ணன் எட்டரை மணியைப் போல்தானே வியாபாரத்திற்கு என்றே வருகிறார். அதுவரை அது பாதுகாப்பாக இருக்கிறதே…! மக்களிடம் இன்னும் நல்லதனம் முற்றிலும் அழிந்து படவில்லை.  நம்பினால்தான் வாழ்க்கையோ….!

நாகுண்ணே…நானும் வந்து அப்டிக் கொஞ்சம் தள்ளி கடை போட்டுக்கிறேண்ணே என்று கேட்ட அன்றைக்கு என்ன கோபம் வந்தது அண்ணாச்சிக்கு?

ஏய்…இதென்ன ஓசிக்கு வச்சிருக்கேன்னு நினைச்சியா? கார்ப்பரேஷனுக்கு வாடகை கொடுக்குறன்ப்பா….இந்த வரிசைல நெட்டுக்கப் பாரு….கொய்யாப் பழம், வெள்ளரிக்காய்…பதநீ….மாம்பழம், நுங்குன்னு உட்கார்ந்திருக்காக பார்த்தியா…அவுகளெல்லாம் தர்மத்துக்கு உட்கார்ந்திருக்காகன்னு நெனச்சியா? ஒவ்வொண்ணும் காசாக்கும்….! இங்கயே ஒக்காந்து பாரு…ஆளுக வந்து கையை நீட்டுறத…இந்த ஒலகத்துல எங்கயும், எதுவும் ஓசியில்ல….மறைவான்னாலும் ஏதாச்சும் நடந்திட்டிருக்குமாக்கும்…ஒலகமே காசுலதாம்ப்பா மெதக்குது….!

அந்த இடத்தையும் மாற்றி இதோ பாலத்துக்கடியில், கீழ்ப்பாலம் ஓரமாய் இப்போது கடையை விரித்திருக்கிறான் சின்னாண்டி. மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்று செய்தி வருகிறது. பெரியார் அணைப் பக்கம், தேனி, திண்டுக்கல் என்று மழை பிய்த்துக் கொண்டு அடிக்கிறதாம்.வைகைக் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் என்று உஷார்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். வைகையில் எந்நேரம் வெள்ளம் வரும் என்று தெரியாத நிலை. திறந்து விட்ட தண்ணீர் எப்போது கரை புரண்டு இந்தக் கீழ்ப்பாலத்தைமூழ்கடிக்கும் என்று கதி கலங்கிக் கிடக்கும் சிறு வியாபாரிகள். போலீஸ் வந்து வந்து விரட்டிக் கொண்டிருக்கிறது. ஆட் புழக்கம் அந்தப் பக்கம் வெகுவாகக் குறைந்து விட்டிருக்கிறது.

அண்ணே…நாளைக்கு இந்த எடம் நமக்கு நிச்சயமா….? – கேட்டான் பருத்திப்பால் விற்கும்  அய்யணனிடம்.

இன்னைக்கே ஒண்ணுமில்லயேப்பா….கீழ்ப்பாலத்துல கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஏறிக்கிட்டு இருக்கு பாரு….இன்னும் கொஞ்சம் போச்சுன்னா சுத்தமா நிப்பாட்டிருவாக….பெறகு எப்டி இந்தப் பக்கம் வந்து வியாபாரம் பார்க்குறது?

காலையில் இந்தப் பக்கம் வர முடியாதென்றால் மீதி இளநீரை எங்கு வைத்து விட்டுப் போவது? -முகத்தில் கவலை தோய செய்வதறியாது நின்றிருந்தான் சின்னாண்டி. நாளைக்கு புதிய கொள் முதல் இல்லையென்று அப்பொழுதே முடிவாகிப்போனது.

நீ ஒண்ணும் கவலப்படாதண்ணே…இந்த வண்டிக்கு அடில ஒரு சாக்கக் கட்டி அதுல பாரத்த ஏத்திருவோம். ரெண்டு பேரும் சேர்ந்து உருட்டிக் கொண்டு போயிருவோம்…என்ற அய்யணனை நன்றியோடு பார்த்தான் சின்னாண்டி. அய்யணனும் அவன் பகுதி ஆள்தான். ஆகையால் கொண்டு சேர்ப்பதில் அத்தனை சிரமம் இருக்காது. ஏரியா திரும்புகையில் கொஞ்ச தூரம் இளநி மூட்டையைச் சுமக்க வேண்டியிருக்கும். அவ்வளவே…

எப்பொழுதும் லாலா மிட்டாய்க் கடை வாசலில் பொழுது விடிகையிலேயே கடை போட்டு விடுவான் அய்யணன். சுடச் சுட அவனிடம் பருத்திப்பால் குடிக்கும் வாடிக்கை நிறைய இருந்தார்கள். அந்தப் பக்கம் யோகா பயிற்சி வகுப்பு நடக்கும் ஒரு கூடம் இருந்தது. பயிற்சி முடித்து வரும் அவர்கள் நேரே அவனிடம்தான் வருவார்கள். அங்கு வள்ளிசாக வியாபாரம் பார்த்தபிறகுதான் இந்தப் பாலத்தடிக்கு வருவான். அருகிலுள்ள மில்லில் வேலை முடித்து வருபவர்களால் கொஞ்சம் மறு வியாபாரம் பார்க்க முடியும். ஆக ஒரு நாளைக்கு பெருங்குடத்துக்கு ஒன்றும், சிறு குடத்துக்கு ஒன்றுமாக அவன் வியாபாரம் நிச்சயப்பட்டிருந்தது.

ய்யணண்ணே…இன்னைக்கு ஒங்களாலதான் எம் பொருளப் பத்திரப்படுத்த முடிஞ்சிச்சு….நீங்க மட்டும் ஒதவலண்ணா….இம்புட்டு கனமுள்ள இளநிகள நா எப்டிக் கொண்டாந்திருக்க முடியும்? ரிக் ஷாவோ ஆட்டோவோ பிடிச்சு வாடகை கொடுத்து நா என்ன காசு பார்த்திருக்க முடியும்? மொதலுக்கே மோசமால்ல போயிருக்கும்…! ஒங்க ஒதவிதான் இன்னைக்கு என் கையக் கடிக்காமப் பண்ணியிருக்கு…..ரொம்ப நன்றி ஒங்க ஒபகாரத்துக்கு….

நீ என்னப்பா இதுக்கெல்லாம் போயி நன்னி சொல்லிக்கிட்டு….நம்மள மாதிரி ஆளுக ஒருத்தருக்கொருத்தர் ஒதவாம பெறவு யாரு வந்து செய்வாக…அந்தப் பாலத்தடிக்கு வியாபாரம்னு போயி நின்னதே தப்பாப் போச்சு….நாந்தேன் யோசிக்காம ஏமாந்து வந்திருக்கேன்னா…நீயும் வந்து திடுதிப்னு நிக்கிறே?….எத்தன எடம்தான் மாத்துவ….நானும் ஒன்னைக் கவனிச்சிக்கிட்டுத்தேன் இருக்கேன்….ஒரு குறிப்பிட்ட எடம்னு தெகையாம அலையா அலையுற…நானாவது சட்டுச் சட்டுனு வண்டிய உருட்டிட்டு நகர்ந்திடுவேன்….எந்தெந்த எடம் எந்தெந்த நேரம் வியாபாரத்துக்குப் பலிதமாகும்னு எனக்குத் தெரியும்….அட…காலேஜ் பொம்பளப் புள்ளைக கூட விரும்பிக் குடிக்குதுப்பா…..சூப்பு செய்து கொண்டாங்கண்ணேன்னு கேட்குதுங்க…வண்டிய இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தில்ல அதச் செய்யணும்….அதான் ரோசனயா இருக்கு…அதப்போல  உனக்குத் தெரிஞ்ச இந்த இளநி வியாபாரத்த எப்படி சுலபமாக்கிக்கிறதுன்னு யோசிங்கண்ணே….சட்டுச் சட்டுன்னு எடம் மாத்திப் போயிட்டேயிருக்கணும்….ஆனா வெட்டி அலச்சலா இருக்கப்படாது. போய் நின்னா பத்துக் காயாச்சும் வெட்டணும். அஞ்சு கிலோமீட்டர் சுத்துல ஒரு நாள்ல அத்தனையையும் வித்துப் புட மாட்டீகளா…? உங்களால முடியாதா என்ன….? நல்லா ரோசன பண்ணுங்க…அலையுறது பிரயோசனமா இருக்கணும்னு சொல்ல வந்தேன்….வேறே ஒண்ணு தப்பா நெனச்சிக்கிடாதீக….

அய்யணனின் அறிவுரைகள் சின்னாண்டியை உசுப்பித்தான் விட்டது.  பாங்காய்த்தான் சொல்கிறான். பதவாகமாய்த்தான் எடுத்து வைக்கிறான். அவரவர் வியாபாரத்தில் அவரவர் நிமிர வேண்டும் என்பதே அவனின் அறிவுரையாயிருக்கிறது.

சரிண்ணே….நாளைக்கு முடிஞ்சாப் பார்ப்போம்….சந்திச்சிக்கிட்டம்னா பேசுவோம்….

மூட்டையை முதுகில் சுமந்து பிரிந்து நடந்தான் சின்னாண்டி. எதிர்பாரா வேகமாய் சர்ர்ரென்று ஒரு வண்டி இவனைக் கடந்தது. மூன்று முக்குகள் சந்திக்கும் அந்த இடம் வெளிச்சமில்லாமல் கிடந்தது.  மூட்டையோடு திரும்பிப் பார்க்க முடியாது என்பதால் பொருட்படுத்தாமல் நடந்தான்.

யாருப்பா….சின்னாண்டியா…..என்னய்யா….கண்டுக்காமப் போற……?

அட…தெரிந்த குரலாய் இருக்கிறதே….ஐயோ…அந்த மவராசனா இருக்குமோ….? மனசுக்குள் ஏற்பட்ட பதட்டத்தில் சற்றே தயங்கி நின்று மூட்டையைக் கீழே இறக்கினான் சின்னாண்டி. திரும்பிப் பார்த்தான். ஐயா….நீங்களா……? என்னங்கய்யா இந்த நேரத்துல? இம்புட்டு லேட்டாப் போறீக…..?

ஆமய்யா…. ஒரு வாரம் பேங்கு லீவுல்ல… பூஜா லீவெல்லாம் முடிச்சு இன்னைக்குத்தான வந்தோம்…அதான் வேல ஜாஸ்தி…..எல்லாருமே இப்பத்தான் கௌம்பினோம்…..அது கெடக்கட்டும்….நா சொன்னது என்னாச்சு….? ஏன் வரல…..?

என்னாதுங்கய்யா….? – ஒன்றும் புரியாமல் தலையைச் சொரிந்தான் சின்னாண்டி.

என்னாய்யா…மறந்திட்டியா….? ஒனக்கு ஏதாச்சும் வசதி பண்ணுவம்னு பார்த்தா…நீயே இப்டி சோம்பேறியா இருந்தீன்னா எப்டிங்கிறேன்…?

ஐயா என்ன சொல்றீகன்னு புரியலீங்க….? எதுவும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது…?

சரியாப் போச்சு…..ஏன்யா…வெறுமே ஒன்னோட ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கொண்டான்னு சொன்னதையா இப்டி மறந்திட்டே….? அதுக்கு ஒனக்கு வலிக்குதா?  ஒரு வண்டி வாங்க ஏற்பாடு செய்றன்யா….அதுல இளநிகளப் போட்டுக்கிட்டு உருட்டு….வியாபாரம் சுலபமாயிடும்….அம்புட்டையும் வௌக்கிச் சொன்னாதான் உனக்கு மண்டைல ஏறுமா?

ஐயா…மன்னிச்சிருங்க சாமி…இந்தத் தர்க்குறி அத மறந்திட்டன்….நாளைக்குக் கட்டாயம் எடுத்தாந்து ஒங்ககிட்ட ஒப்படைச்சிடுதேன்….நீங்க நல்லாயிருக்கணும்…..

அதெல்லாம் கெடக்கட்டும்…முதல்ல அதுகளக் கொண்டாந்து குடு…புரிஞ்சிதா? ஒரு ஏற்பாடு பண்ணிருவோம்……

ரொம்ப நன்றிங்கய்யா……உங்க கால்ல விழுந்து கும்பிடுறேன்…….

அது காதில் விழுந்ததோ என்னவோ….போய்க் கொண்டிருந்தார்.

இன்னொன்றும் அந்தக் கணத்தில் மனதில் மின்னலாய்த் தோன்ற ஐயா…ஐயா….என்று சத்தமெடுத்துப் பலமாய்க் கத்தியபோது  வண்டி வெகு தூரம் போயிருந்தது. அடடா…மர மண்டைல எதுவும் நிக்கவும் மாட்டேங்குது. சட்டுனு ஞாபகமும் வரமாட்டேங்குது…

நாளை ரேஷன் அட்டையையும், ஆதார் அட்டையையும் அவரிடம் கொடுக்கும்போது அய்யணனுக்கும் ஒரு அகலமான பருத்திப் பால் வண்டிக்கு அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி கடனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் சின்னாண்டி. அதற்கு முன் அய்யணனையும் ஒரு முறை பார்த்து அவன் சம்மதத்தையும் பெற வேண்டும் என்றும் அவன் மனசு சொல்லியது.

                                                ---------------------------------------

 

 

29 மார்ச் 2023

 

  “கட்டற்ற  சுதந்திரம்”   கட்டுரை - காற்றுவெளி பங்குனி 2023 இதழ்   




               

      ரு சமயம் நான் பார்த்த இந்த நிகழ்வோடு இந்தக் கட்டுரையைத் துவங்குவது பொருத்தமென்று நினைக்கிறேன். அது இன்றைக்குச் சாதாரணமாய், மதிப்பற்றதாய்க் கூடத் தோன்றலாம். இதென்ன பெரிசு? என்று. ஆனால் அன்றைக்கு அது பெரிசுதான். மதிப்பு மிக்கதுதான். காரணம் அந்த நிகழ்வின்போது அந்த மக்கள் காத்த அமைதி. அதைவிடக் கண்ணியமாக, எதிர்த்தரப்பினரும் பொறுமையுடன் அமைதி காத்து, அதை அளித்தவருக்கு, சுற்றியிருந்த அந்தக் கூட்டத்திற்கு மதிப்பளித்துக் கடந்து போன கண்கொள்ளாக் காட்சி. பண்பாட்டின் உச்சம்.

      மக்களிடம் அத்தனை மேன்மை படிந்திருந்த காலம். இன்னும் இங்கு நல்லவைகள், நன்மைகள் முற்றிலுமாக அழிந்துபடவில்லை என்பதை உணர்த்திய காலம். அது இன்றைக்கும் இருக்கிறதா என்பதே கேள்வி. இல்லாமல் போகுமா? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நான் சொல்வது அதே நிகழ்வைச் சுட்டி அல்ல. அந்த மேன்மையும் மதிப்பும் மிக்க நடப்பியல்களை.

      அது ஒரு அரசியல் பொதுக் கூட்டம். இரவு எட்டு மணி தாண்டி பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களின் எதிரே மேடையிட்டிருந்த இடத்தில், அமர்ந்த நிலையில் ஓங்கிக் குரலெடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் அவர். மொத்த ஜனமும் பேச்சை ஊன்றிக் கேட்டு லயித்திருக்கிறது. அவ்வப்போது நகைச்சுவை வெடிகள் சரளமாக வந்து விழுகின்றன. அர்த்தமுள்ள, அசிங்கமில்லாத  அந்த நகைச்சுவையை, அதில் பொதிந்துள்ள உண்மையை உணர்ந்து, அடங்கிச் சிரிக்கிறது ஜனக் கூட்டம். வெறும் கூடிக் கலையும் கும்பலல்ல, கூடிச் சிந்திக்கும் கூட்டம் என்பதாய் அந்த ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர் சொல்லும் தியாக நினைவுகளை தங்கள் எண்ண அடுக்குகளிலிருந்து வெளியே எடுத்து,  அவர் சொன்ன உண்மைகளின் தாத்பர்யத்தை உணர்ந்து இறுக்கமான மனநிலையில் கட்டுக்கோப்பாகக் கருத்தூன்றி நிற்கிறது ஜனம்.      

      அது திரு நெல்லை ஜெபமணி அவர்களின் பொதுக் கூட்டம். இன்றைய இளைய தலைமுறைக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், முதிய தலைமுறையிலேயே பலருக்கும் தெரிந்திருக்காதுதான். அவர் பேசியது பெருந்தலைவர் காமராஜர் காலத்து ஆட்சி பற்றி. அப்போதைய அரசியல் நிகழ்வுகள்பற்றி. ஒரு நாட்டின் தலைவன் எப்படி சுயநலமற்று இருந்தான் என்பது பற்றி. எப்படியிருந்தால் இந்த நாடு முன்னேறும் என்பது பற்றி.

      அந்த நீண்ட அகண்ட சாலையின் இரு மருங்கிலும் நெடுக ஒலி பெருக்கிக் குழாய்கள் கட்டப்பட்டுள்ளன. நேர் எதிர்ச்சாரியிலிருந்த பகுதியிலும் அவரது குரல் கம்பீரமாய் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அப்போது அந்தச் சாலையின் நுனிப் பகுதியில் ஒரு சவ ஊர்வலம். இறந்தவரின் சடலம் பாடையில் ஏந்தி வர முன்னும் பின்னுமாகப் பெருந்திரளான ஆட்கள் சாலையில் மலர் தூவியவாறே பட்டாசு  வெடித்துக் கொண்டும், கோவிந்தா…கோவிந்தா என்று கோஷமிட்டுக் கொண்டும் அந்தப் பகுதியை மெல்லக் கடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

      ரொம்பவும் ஆழ்ந்தும், ஸ்வாரஸ்யமாயும், மொத்தக் கூட்டத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையிலும் வசீகரமாய்ச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த பெருந்தகை திரு ஜெபமணி அவர்கள், அவரது பேச்சை அந்தக் கணமே நிறுத்திக் கொள்கிறார். சொல்ல வந்த விஷயம் முழுமையடையாமல் ஏன் திடீரென்று பேச்சு நின்று போனது என்று கூட்டம் ஒரு கணம் திகைக்கிறது. சொற்பொழிவாளரின் பார்வை பக்கவாட்டில் சற்று தூரத்தில் வந்து கொண்டிருக்கும் இறுதி ஊர்வலத்தை நோக்கி அமைதியோடு பதிந்திருப்பதைப் பார்த்துப் புரிந்து கொள்கிறது. நிசப்தம்….நிசப்தம்…சுற்றிலும் மயான அமைதி. மொத்தக் கூட்டமும் கப்சிப் என்று கிடக்கிறது.  அந்த ஊர்வலத்திற்கான அமைதி அஞ்சலி இங்கே.

இதை விடவா வானுலகம் செல்லும் அந்த மனிதனுக்கு ஒரு மா மரியாதை வேண்டும்? சுற்றமும் சுழலும், அங்கே கூடியிருந்த கூட்டமும்  சற்றும் நினைத்துப் பார்த்திராத அந்தப் பொன்னான  நிமிஷங்கள்.  அந்தப் பெயர் தெரியாத மனிதனுக்கு அன்று அங்கே கிடைத்த மரியாதையும் மௌனாஞ்சலியும்….நான் கால காலத்திற்கும் கண்டறியாத காட்சி. அது அந்த மனிதர்களுக்கான சாட்சி.

      முன்னும் பின்னும் திரளாக, வரிசையாக நடந்து கொண்டிருந்த அந்தக் கூட்டமும், தாங்கள் கோஷமிடுவதையும், மலர் தூவுவதையும், பட்டாசு வெடிப்பதையும் அந்தக் கணமே நிறுத்திக் கொண்டு அமைதியாகத் தங்கள் ஊர்வலத்தைத் தொடர்ந்து, அந்த மேடைப் பகுதியையும், சுற்றியுள்ள, அதைத் தாண்டிய ஜனத் திரளையும், நடுவே விரிந்திருந்த பாதை நெடுகக் கடந்து, சற்று தூரத்தில் தொடங்கும் வேறொரு சாலையில் திரும்பி தங்கள் கோவிந்தா கோஷத்தையும், பட்டாசுக் குதூகலத்தையும் தொடர ஆரம்பிக்கிறது.

அய்யா ஜெபமணி அவர்கள், பார்வையிலிருந்து ஊர்வலம் மறைந்ததைக் கண்டு விட்டு,  எங்க விட்டேன்…..ஊம்……சரி… ….என்று நினைவுபடுத்திக் கொண்டு தனது பேச்சைத் தொடர்கிறார்.

      நமக்கான சுதந்திரம் என்பது இப்படியான கட்டுப்பாடான, அதன் முழுத் தாத்பர்யத்தை உணர்ந்த ஒன்றாகத் திகழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உண்மை நிகழ்வோடு துவங்கினேன். சுதந்திரம் என்பது அதற்காகப் பாடுபட்ட தியாகிகள், பெரியவர்கள் நமக்காகப் பெற்றுத் தந்த  உரிமைகளை சுய கட்டுப்பாட்டோடும், ஒழுக்க நெறியோடும், கண்டிப்பாக வரையறுத்துக் கொண்டு அனுபவிப்பதற்காகத்தானேயொழிய இஷ்டம்போல் விட்டேற்றியாக, எப்படி வேண்டுமானாலும் என்கிற ரீதியில், அவிழ்த்து விட்ட காளையைப் போல் இருப்பதற்காக அல்ல. எப்படியும் இருக்கலாம், எம்மாதிரியும் வாழலாம் என்பதாக நினைத்துக் கொண்டு, கட்டறுத்துத் திரிவதற்காக அல்ல. சுதந்திரம் என்ற புனிதமான வார்த்தைக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது அதுதான்.

      ன்னொரு சம்பவம் சொல்கிறேன். அது புற நகர்ப் பகுதி. நகரத்தோடு ஒட்டி படிப்படியாக வளர்ந்து வரும் இடம். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வீடுகளும், கடைகளும், தோன்றியவண்ணம் இருந்தன. குடியிருப்போர் அதிகரிக்க அதிகரிக்க, அது நகர்ப்புறத்தின் தவிர்க்க முடியாத பகுதியாய் மெல்ல மெல்லத் தன்னை உறுமாற்றிக் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதிக்கென்று குடியிருப்போர் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து, போக்குவரத்து, சாலை வசதி, தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, சுகாதார வசதி, பேருந்து நிலையம் என்று ஒவ்வொன்றாக முயன்று ஒற்றுமையாக அதனை மேலெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

      ஓரளவு நல்ல நிலைக்கு வந்து விட்ட வேளையில் பேருந்துகள் தங்கு தடையின்றி வந்து செல்ல ஆரம்பிக்கின்றன. ஒரே சமயத்தில் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அங்கே அடுத்தடுத்து வந்து நிற்கும்போது இட நெருக்கடி ஏற்பட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.  

      எதிரே ஒரு சுடுகாடு. வெட்டவெளிப் பகுதி. ஒரு சிறு தகரக் கொட்டகை மட்டும்.  ஒரு காலத்தில் அதிகக் குடியிருப்புகள் இல்லாத காலத்தில், இரவு நேரங்களில் கூட என்றும் பாராமல், தப தபவென எரியும் பிணங்களைக் கடந்து பயந்தும், நடுங்கியும், பலரும் போய் வந்து கொண்டிருந்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கியதுமே கண்ணில் படும் இந்தக் காட்சியை மனதில் கொள்ளாமல் ஆண்களும், பெண்களும், சிறுவர் சிறுமியரும், விடுவிடுவென நடந்து தங்கள் இல்லங்களை அடைவது ஒரு தந்திரோபாயக் காட்சியாக இருக்கும். சுற்றிலும் இருக்கும் வீடுகளின் ஜன்னல்கள் எந்நேரமும் அடைபட்டிருக்கும். திறந்து வைத்தால் வீட்டிற்குள் புகை மண்டும். எதிரே சுடுகாடு என்று தெரிந்தேதான் இடம் வாங்கி, வீடு கட்டினார்கள், மறுப்பதற்கில்லை. நாளாவட்டத்தில் போய்விடும் என்ற நம்பிக்கையோடு. அதுவரையிலான சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளலாம் என்கிற பொறுமையோடு.

ஆனால் இன்றைய அப்பகுதியின் முன்னேறிய நிலையில் அந்த சுடுகாட்டுப் பகுதியும் பேருந்து நிலையத்திற்கென்று கிடைக்குமாயின் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களின் விரிவாக்கம் என்பது எளிதாகும் என்பதும், வந்து, நின்று, பயணிகள் அனைவரும் அருகருகேயுள்ள சிறு சிறு காலனிகளிலிருந்து வந்து வசதியாகத் தங்களின் நகர்ப்புறப் பயணங்களை மேற் கொள்ள ரொம்பவும் ஏதுவாக அமையும் என்கிற நன்நோக்கில் புறநகர்ப் பகுதியின் தவிர்க்க இயலாத வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு   அந்தச் சுடுகாட்டை அங்கிருந்து எடுப்பதுதான் சிறந்தது என்ற முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தார்கள். மனுவுக்கான நடவடிக்கையில் -

நாட்கள் கடந்தன. மாதங்கள் கடந்தன. வருஷங்களும் கடந்து விட்டன. இன்றுவரை அந்த மயானம் அங்கேயேதான் இருக்கிறது. நம் இன மக்களின் ஒரு பகுதியினருக்கான சுடுகாடு அது என்று அறிந்து, அதன் அவசியம் உணர்ந்து, மாற்று இடம் தரப்படும் என்று ஆட்சியரலுவலகத்தால் சொல்லப்பட்டும், இடம் சுட்டப்பட்டும், அந்த  மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விஷயம் கிடப்பில் போய் விட்டது. இன்று அது ஆறின கஞ்சி. பழங்கஞ்சி.

இப்போதும் அங்கே பிணங்கள் எரிகின்றன. புகை மண்டலம் சுற்றிலும் உள்ள வீடுகளில் பரவிக் கொண்டிருக்கின்றன. மொட்டை மாடியில் இதற்காகவே எவரும் எட்டிப் பார்ப்பதில்லை. வளர்ந்துவிட்ட நகரின் நடுவே ஒரு மயானம்.  எல்லோரும் ஒரு நாள் போவதுதான். எனினும் இந்த வருத்திக் கூட்டி அனுபவிக்கும் சங்கடம் எதற்கு என்று மக்கள் பெருத்த சகிப்போடுதான் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை சரி.

 ஆனாலும் அங்கே அடிக்கடி வரும் பிணங்களின் ஊர்வலத்தின் போதும், எரியூட்டின்போதும், கூடியிருக்கும் கூட்டமும், அந்தக் கூட்டத்திற்கு நடுவேயான ஒருவகைக் கலவரமான சூழலும், சுற்றிலும் குடியிருக்கும் ஜனங்களைப் பயப்படுத்துவது போலான தடாலடி நடவடிக்கைகளும் என்னென்று சொல்வது? இன்றுவரை அந்தப் பகுதி மக்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன தலையெழுத்து?

சாவு என்பது இயற்கை. அவரவர் உறவினர்களின் மறைவு என்பது வருத்தமளிக்கக் கூடியதுதான். மறுப்பதற்கில்லை. அதை எந்த மனிதனும் மதிப்பதுதான். நமக்குச் சொந்தமில்லை என்பதற்காக அதை யாரும் இழிவாய் நினைப்பதில்லை, அம்மாதிரி நடந்து கொள்வதுமில்லை. அதுதான் நமது நேர்த்தியான பண்பாடும் கூட. அவர்கள் அவ்வகையினர்தான். எந்த உயிர் போனாலுமே, அடப் பாவமே…! என்கின்ற மனப்பான்மை உள்ள பண்பாளர்கள்தான்.

அப்படியிருக்கையில் சம்பந்தமில்லாது, வரைமுறையற்ற வகையில்  அந்தப் பகுதியையே பயப்பிராந்திக்கு ஆளாக்கினால்…? கேட்பதற்கு ஆளே இல்லை என்பதுபோல் நடந்து கொண்டால்? எவன் வர்றான் பார்க்கிறேன் என்றும் என்ன செய்திடுவான் பார்ப்போம் என்கிற ரீதியிலும் அச்சமூட்டினால்?

நாலாபுறமும் இருக்கும் கடைகளுக்கு முன் சென்று, சத்தமிட்டு பயமுறுத்தி அடைக்கச் சொல்வது, கல்லை விட்டு எறிவது, தடியால் அடிப்பது, அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளைத் திசை திருப்பி விடுவது, நின்று முகத்துக்கு முகம் பார்ப்பவர்களை, என்ன முறைக்கிறே? என்று கேட்டு விரட்டுவது,    மோட்டார் பைக்குகளில்  வந்து நின்று கொண்டு அவைகளை விர்ர்ர்ர்ர்ர்……விர்ர்ர்ர்ர்ர் என்று ரேசுக்குச் செல்வதுபோல் சத்தமாய்க் கிளப்பிக் கொண்டு புயலாய்ப் பாய்ந்து பறந்து முன்னும் பின்னுமாக மின்னலாய் ஓட்டிச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்கு அந்தப் பகுதியையே கலங்கடிப்பது, ஸ்தம்பிக்கச் செய்வது…. இப்படியெல்லாம் செய்தால்? இதிலென்ன வீரமிருக்கிறது? எந்தப் பெருமை நிலைநாட்டப்படுகிறது? அந்த மக்கள் இப்பொழுதெல்லாம் பழகி விட்டார்கள். அங்கு சடலம் வந்தவுடனேயே கடைகளை அடைத்து விடுகிறார்கள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு…! ஆனாலும் இது சரியா? அஞ்சலி செலுத்துவவதற்கு வந்து நிற்கும் அன்பான கூட்டமாயிற்றே அய்யா…! அவர்களை இப்படிக் கலவரப்படுத்தலாமா? எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை. எதற்கு இந்த அவலம்?

இதுதான் சுதந்திரமா? இது விட்டேற்றியான சுதந்திரமல்லவா? கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது எவ்வளவு அநாகரீகமாய்ப் போகிறது? நமக்கான சுதந்திரம் என்பது யாரையும் துன்புறுத்தாததாய் இருக்க வேண்டாமா? நமக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ, அடுத்தவனைப் பயப்படுத்துவதுபோல் இருக்கலாமா? நமக்கான சுதந்திரத்தை நாம் இப்படியெல்லாம்தான் பயன்படுத்துகிறோம் என்றால் அது எத்தனை வெட்கக்கேடு? இன்றுவரை யாரும் தட்டிக் கேட்கவில்லை. ஒரு நாள் இரண்டு நாள் கூத்துதானே என்று எத்தனை விஷயங்களை அவிழ்த்து விட்டாயிற்று இந்த நாட்டில்? ஒவ்வொன்றாய்க் கெட்டுச் சீரழிந்து…..முடிவுதான் என்ன? அழிந்துபடுதல் தானா?  சற்றே உங்கள் சிந்தனையைக் கடன் கொடுங்கள் இதற்காக.

பேருந்தில் வெளியூருக்குச் செல்கிறோம். சந்தோஷமான நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் இருப்பார்கள். வருத்தமான நிகழ்வுகளுக்குச் செல்வோரும் இருப்பார்கள். உடம்பு முடியாதவர்கள் இருப்பார்கள். வயதானவர்கள் இருப்பார்கள். அமைதியாகத் தூங்கிப்  போவோமே என்று புறப்பட்டு வந்து அயர்ச்சியில் பயணிப்பார்கள். குழந்தைகள் இருக்கும். சிறுவர் சிறுமியர்கள் இருப்பார்கள். பஸ்ஸின் கொஞ்ச தூர ஓட்டத்தில் அவை அயர்ந்து தாயின் மடியில் உறங்கக் கூடும். இம்மாதிரி எதையுமே மனதில் கொள்ளாமல், எதைப்பற்றியும் சிந்திக்காமல், சினிமாப் பாட்டை அலற விட்டுக் கொண்டு செல்கிறார்களே…அது எந்தவகையிலான சுதந்திரம்? என்ன நல்ல யோசனையின்பாற்பட்டு இது நடைமுறைக்கு வந்தது?  பாட்டுக் கேட்டுக் கொண்டே சந்தோஷமாய்ப் பயணிக்கட்டும் என்று நீங்களே மொட்டையாய் முடிவு செய்து கொள்வீர்களா? அப்படியானால்தான் ஓட்டுநர் உறங்காமல், அயர்ச்சி தெரியாமல் நேரத்திற்கு வண்டியைக் கொண்டு செல்வார் என்றால், அந்தக் காலத்தில் இப்படித்தான் நடந்ததா? பஸ்கள் அப்படியா ஓடிக் கொண்டிருந்தன?  சொல்லப் போனால் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பை விட இந்தக் காலத்தில்தானே போக்குவரத்தும், ஜன நெருக்கடியும், ஆபத்துக்களும்  அதிகம்? இந்தக் கால கட்டத்தில்தானே கவனமாய், கருத்தாய், வண்டியை இயக்க வேண்டும்? அதை விட்டு விட்டு உங்களுக்காக இல்லை, இது எனக்காக என்ற கணக்காயும், உங்களுக்காகவும்தான் என்ற பொருளிலும், தொலைக்காட்சியையும் சேர்த்து அலற விட்டுக் கொண்டு விரும்பியும், விரும்பாமலும்  பயணிக்கச் செய்வது விபத்துக்கு வழி வகுக்குமா அல்லது நிம்மதியான பயணத்தைத் தருமா? பஸ்னா அப்டித்தான்…என்று சகிக்கப் பழகிக்கொண்டுவிட்ட பாவப்பட்ட ஜனங்கள்…..வீட்டை விட்டு வெளியில் இறங்கினால், அவர்கள் முதுகில் இந்தமாதிரி என்னவெல்லாம்  சுமைகள்?

நம் நாட்டில் அவிழ்த்து விட்ட கழுதையாய், சுதந்திரம் எவ்வளவு அலங்கோலமாய் பாழ்பட்டுக் கிடக்கிறது? எதையுமே கன்ட்ரோல் பண்ண முடியாது, எதையும் கட்டுப்படுத்துவதற்கில்லை, எல்லாமும் அப்படி அப்படியே தறிகெட்டுப் போய் எங்கே, எந்த இடத்தில் சென்று முட்டி மோதி நிற்கட்டுமோ நிற்கட்டும் என்று கட்டவிழ்த்து விட்ட அவல நிலையைத்தானே இன்றுவரை பலவற்றிலும்  நாம் காண்கிறோம்?

ஒரு தலைவனின் பிறந்த நாளுக்கோ,  நினைவு நாளுக்கு மாலை போட்டு மரியாதை செய்வதானாலுமோ இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் ஒன்று குறைகிறதா சொல்லுங்கள்? மக்களைப் பயப்பிராந்திக்குள்ளாக்குவதில் அப்படி என்ன சந்தோஷம்? யாருக்கு யார் பயப்பட வேண்டும்? ஏன் பயப்பட வேண்டும்? அப்பொழுதுதான் தலைவனின் பெருமை தெரியும் என்று இவர்களுக்கு யார் சொன்னது? அந்தத் தலைவர்களே விரும்பினதாகத் தெரியவில்லையே…! மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. எல்லாத் தலைவர்களின் அருமை பெருமைகளையும் அறிந்தவர்கள்தான்…! அவர்களுக்கு நல்லதும் தெரியும், கெட்டதும் தெரியும். எதைச் செய்ய வேண்டும் என்றும் தெரியும், செய்யக் கூடாது என்றும் தெரியும்தான். எந்த வேண்டாததையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியும்.  அதையெல்லாம் இம்மாதிரிச் செய்கைகளால் யாராலும் இம்மியும் மாற்ற முடியாது.

கோயிலில் சாமி கும்பிடுவதானாலும் நாலு தெருவுக்கு ஒலி பெருக்கி கட்டுதல், ராத்திரி பகலாய் அலற விடுதல், பிடித்த நடிகரின் பிறந்த நாளுக்கென்று ஊரையே ரெண்டு பண்ணுதல், எந்தப் போராட்டமானாலும் கற்களை வீசுவது, பஸ்களை எரிப்பது, பொது இடங்களில் தயக்கமின்றி எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, புகைபிடிப்பது, கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவது என்று எத்தனையெத்தனை ஒழுங்கீனங்கள் இந்த நாட்டில்?  

இதுவா சுதந்திரம்? இதுவா மானம்? இதுவா கௌரவம்? இதுவா விவேகம்? இல்லை இது அவமானம்…பெருத்த அவமானம்…..!!

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து தேச பக்தியும், தெய்வ பக்தியும் மிகுந்த இந்த தேசத்து மக்களை நினைந்து நினைந்து என்னவெல்லாம் எண்ணியெண்ணிப் பெருமிதம் கொண்டோமோ, அதெல்லாவற்றிற்கும் நேர்மாறாய் நாம் வருத்தம் கொண்டு நொந்து வேதனையடையும் நிலையில்தான் பாடுபட்டுத் தேடிச் சேர்த்த இந்த சுதந்திரத்தை இன்று நாம் கட்டறுத்துப்  பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சற்றே சிந்தியுங்கள். மேலே சொன்னவற்றில்  உண்மைக்குப் புறம்பானவை ஏதேனும் உண்டா? உங்கள் மனசாட்சியே உங்களுக்கு சாட்சி…!!!

 

                              -----------------------------------------------