20 பிப்ரவரி 2022

“செய்திகள் வாசிப்பது... “எனக்கே எனக்கு”-தாத்தா” சிறுகதை - “எனக்கே எனக்கு” என்ற பெயரில்.....

 

சிறுகதை                                                                                                                      “எனக்கே எனக்கு”                                                            -------------------------------------------




                   

       குட் மார்னிங்“- என்று அந்தப் பெரியவரின் வாய் முனகியது. கை உயர்ந்தது. பதில் வணக்கம் சொன்னான் இவன். தினசரி காலையில் வாசல் கதவு திறந்ததும் கண்ணில் படுபவர் அவர்தான். நேர் எதிர் வீடு. திண்ணைக்கு அடுத்த வெளி வராண்டாவில் குத்திட்டு அமர்ந்திருப்பார். தள்ளாத வயதில் எப்படி அவரால் அப்படிக் கீழே கால்களை மடித்துக் குத்திட்டு  அமர முடிகிறது என்று ஆச்சரியமாய் இருக்கும். வாயிலிருந்து எச்சில் வழிந்து கொண்டேயிருக்கும். வழியாமல் உள் நிறுத்தும் அல்லது எகிறிப் பக்க வாட்டில் இருக்கும் மணல் பகுதியில் துப்பும் சக்தி அவருக்குக் கிடையாது. நெஞ்சிழுப்பு உண்டு.  திணறும் சத்தம் கேட்டது.  ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. கைகளால் விரட்டிக் கொண்டிருந்தார். கண்களில் உள்ள பீழையை நிமிண்டி எடுத்து வேட்டியில் துடைத்துக் கொண்டார். நீர் வழிந்து கொண்டேயிருப்பதால் அழுக்கை எடுப்பது சுலபமாய் இருந்தது அவருக்கு. வழக்கமாய் காலையில் கொஞ்ச நேரத்திற்கு அப்படித்தான் அவஸ்தைப் படுவார். வெயில் ஏறி மூச்சு சமனப்பட்டதும் திண்ணையில் போய் அமர்ந்து கொள்வார். தினமும் இந்த தரிசனம் உண்டு இவனுக்கு...!

       அதோடு அதாய்த்தான் அவர் அவனுக்கு வணக்கம் சொல்கிறார். ஒரு சிறிய மன நெருக்கப்  புன்னகை. ஏனோ இவனைப் பிடித்திருக்கிறது. தெம்போடு நடந்து கொண்டிருந்த காலத்திலே வெளி கேட் வரை இறங்கி வந்து பேசுவார். இங்கே வா என்று அழைத்ததில்லை. இறங்குவது தனக்காகத்தான் என்று அருகில் சென்று விடுவான். எடுத்த எடுப்பில் தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பார். அது ஏன் என்று சிலிர்ப்பாகவே இருக்கும். கண்கள் கலங்கி விடும். வேறு ஒன்றும் பேசியதில்லை. இடுங்கிய கண்களின் வழியே  அன்பு வழியும்.

       அப்பகுதியில் வீடு கட்டிக் குடி வந்தபோதிலிருந்தே அறிவான். அப்போது அவர்கள் வீடு மட்டும்தான் அங்கே கட்டப்பட்டிருந்தது. அவர் மகன் கட்டியது. அவர் யாருடனும் பேசுவது கிடையாது. பார்ப்பதோடு சரி. ஒரு சிறு புன்னகை கூடக் கிடையாதுதான்.  கிணறு வெட்டும் முன் அவர்கள் போரிலிருந்துதான் ரப்பர் குழாய் இழுத்து தண்ணீர் உபயோகித்தது. உதவிக்கு மறுக்காமல் ஒத்துக் கொண்டார் மகன்.  வெறும் தொண்ணூறு அடிதான் வெட்டினோம்...கைக்கெட்டுற மாதிரி தண்ணி வந்திடுச்சு...என்று சந்தோஷப்பட்டார்.. அதைப்பார்த்துத்தான் இவனும் தன் வீட்டுக்கு ஒரு கிணறை வெட்டிக் கொண்டான். அதிலும் நீர் கொப்பளித்தது. எழுபது அடியோடு நிறுத்திக் கொண்டான்.

கிணற்றடியில் வாளி வாளியாக இறைத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதில் ஒரு அலாதியான சந்தோஷம். கிராமத்தில் வயற்காட்டுக் கிணற்றுக்குக் குளிக்கப் போவது உண்டு. கடவுளே, மோட்டார் போட்டு இறைச்சு, தண்ணி கம்மியா இருக்கணுமே...என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டே போனதும்....நாலடி ஆழத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற..ஊற... இடுப்பு,  மார்பு, கழுத்து என்று வந்து ஆள் முங்கும் அளவுக்கு ஆகி, அதில் தினமும் நீச்சல் பழகியதை மறக்கவே முடியாது. பக்கவாட்டுத் திட்டில் நின்று கொண்டு எதிர்த் திட்டுக்குச் செல்வது. பயத்தில் ஒரே பாய்ச்சலில் பாய, காலுக்குத் திட்டு அகப்படாத நிலையில் பக் பக் என்று தண்ணீர் குடித்து,  கையைப் பிடித்து ஒரு இழு இழுப்பார்கள் நண்பர்கள். பயந்து சாகுறியேடா...என்று திட்டியவாறே எதிர்த் திட்டுக்கு சென்று நின்று கொண்டு, ம்...வா...என்று மறுபடியும் அழைப்பார்கள். இப்படியே பாய்ந்து பாய்ந்து...பயந்து பயந்து.....டப்பு டுப்பு...டப்பு என்று காலையும், கையையும் அடித்து...அடித்து, தண்ணீரை மடக்கு மடக்கு என்று குடித்து... மூக்கில் ஏறி, விழி பிதுங்கி, ஒரு வழியாய் நீச்சல் கைக்கு வந்து சேர...பிறகு பண்ணிய ஆர்ப்பாட்டங்கள் சொல்லி மாளாது....மோட்டார் ரூமுக்கு மேலேயிருந்து குதிக்கும் அளவுக்குத் திண்ணக்கம் வந்தாயிற்று.

தண்ணிப் பாம்பு மேல் டபால் என்று குதிப்பதும், சட்டென்று அதைத் தூக்கிக் கரை நோக்கி வீசுவதும், அங்கு தயாராய் நிற்கும் பசங்கள், சகதியைக் கொண்டு அதை அடித்து, வாலிலிருந்து ஒரு குச்சியால் அமுக்கிக் கொண்டே வந்து வாய் பிளக்கும்போது அது முழுங்கியிருந்த  தவளை வெளியே வருவதும்....அந்த விளையாட்டெல்லாம் மறக்கவே முடியாதவைகள்....அந்தக் கிணறே இல்லை இப்போது..அப்படிப் பல வயற்காட்டுக் கிணறுகள் காணாமல் போயின....அவை காணாமல் மறைந்ததுபோல் நாமும் சொந்த ஊருக்கு அந்நியமாகிப் போனோம்... ஊரும் பேரும் உரு அற்றுப் போனது. உருவெளி மாறிப்போய் எங்கோ  கிடக்கிறோம்.

இப்போதெல்லாம் அந்தப் பெரியவர் நிமிர்ந்தே பார்ப்பதில்லை. பார்க்க முடியவில்லை. தலை குனிந்தமேனிக்கேதான் இருக்கும். சாப்பிடும் நேரத்திற்குத் தட்டில் உணவு திண்ணையில் வைக்கப்படும். சத்தம் கேட்டு வராண்டாவில் இருந்து உள்ளே செல்வார். மாமா...டிபன் வச்சிருக்கேன்...- அவ்வளவுதான். அந்த வார்த்தையே அதிகம்...!

இப்படித் துப்பித் துப்பி வச்சா.. ஒரு நாளைக்கு எத்தனை வாட்டிதான் பெருக்கறது, சுத்தம் பண்றது....? ஒரு சட்டி வச்சிக்குங்கன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க...உங்க அப்பாவுக்கு நீங்கதான் சொல்லணும்..இல்லன்னா இனிமே நீங்களே கழுவிச் சுத்தம் பண்ணுங்க.என்னால ஆகாது..!..முடிந்தது விஷயம்.

..நா கழுவிக்கிறேன்...நீ கவலப்படாதே...இது அவர் மகனின் பதில். தாசானுதாசன்.

அருகே, எதிரே உள்ள வீடுகளுக்குக் கேட்குமே என்று யோசிப்பதெல்லாம் இல்லை. என் வீடு, என் புருஷன், என் மாமனார்.......நா பேசுறதுக்கு யார்ட்டக் கேட்கணும்... – என்பது போலிருக்கும் அந்தப் பொருட்படுத்தாத குரல். அதற்கும் ஒரு தைரியம் வேண்டும்தானே...! ஆளுமை அங்கே கொடி கட்டிப் பறந்தது.

அந்த மாதிரி நேரங்களில் இவன் உள்ளே வந்து விடுவான். நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அங்கு பார்ப்பதாகத்தான் அர்த்தப்படும்.. இங்கென்ன வேடிக்கை? என்றால் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வது? எதுக்கு வம்பு?  இவனாக நினைத்துக் கொள்வதுதான். அந்த அம்மாள் ஒரு நாளும் ஒரு வார்த்தை இவனிடம் பேசியதில்லை. தன்னை ஒரு பொருட்டாகத் திரும்பி நோக்கினால்தானே? கௌரவம் ஜாஸ்தி....!

முதலில் மாடியில் இருந்தார்கள் அவர்கள். கீழே வாடகைக்கு விட்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெரியவர் பால்கனி வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். கிழக்குப் பார்த்த வீடு. காலை வெய்யில் சுள்ளென்று ஏறின பின்பும் அங்கேயேதான் இருப்பார். உடம்போடு தலையாகத் துணியைப் போர்த்திக் கொண்டு யார் என்று அறிய முடியாத வண்ணம் அமர்ந்திருப்பார். ஒரு முறை அடக்க முடியாமல் ஒன்றுக்கிருந்து விட்டார். அது கீழே வழிய, கீழ் வீட்டில் இருந்தவர்கள் அந்த நேரம் பார்த்து வாசல் பக்கம் வர ஒரே அமர்க்களம். தீர்த்தவாரி முடிந்து சண்டை ஓய ஒரு நாள் ஆகிப் போனது.

அவர்கள் காலி பண்ணிக் கொண்டு போய் விட்டார்கள். பிறகுதான் இவர்கள் கீழே. எந்த நிலையிலும் அவரின் கண்கள் எதிரே இவனைப் பார்த்துக் கொண்டேயிருக்கும். இவன் மீதான பார்வைக்கு மட்டும் சலுகையுண்டு. தன் பையனிடம் நிறையப் பேச ஆவல் கொண்டிருப்பாரோ என்று நினைத்துக் கொள்வான் இவன். அப்பாவிடம் வந்து அமர்ந்து நாலு வார்த்தை மகன் பேசிப் பார்த்ததேயில்லை. வீட்டுக்குள்ளேயேதான் கிடப்பார். டி.வி., டி.வி., சதா காட்சிகள்தான். டிஸ்கஷன் கேட்கிறாராம். விளங்கினாப்போலதான் என்று நினைத்துக் கொள்வான். இங்கிருந்து பார்த்தால் அந்த .டி.வி. நாள் பூராவும் ஒடுவது தெரியும். வாயிருந்தால் அழும். முடியாவிட்டால் யாரும் எதிர்பாராத ஒரு நன்னாளில் கண் மூடும். அதற்கு ஓய்வு என்பதே இரவு இவர்கள் தூங்கும்போதுதான்.

       இவன் தன் வீட்டு வெராண்டாவில் அமர்ந்துதான் தினசரி படிப்பான். தவறாமல் பேப்பரை ஒரு அலசு அலசி விடுவான். அவனது தீவிர வாசிப்பைக் கவனித்துக் கொண்டேயிருந்தவர் நீ படிச்சிட்டு எனக்குக் கொடு என்று சைகை மூலம் ஒரு நாள் சொன்னார். அவர் காட்டியதை அப்படித்தான் புரிந்து கொண்டான்.

நடந்து கொண்டிருந்த காலங்களில் நடை பயணமாகக் கிளம்பி ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொது நூலகத்திற்கு வருவதைப் பார்த்திருக்கிறான். அங்கு நுழைந்து ஒரு நாளிதழைக் கையில் எடுத்தாரென்றால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வேறு யாரும் அதைப் படிக்க முடியாது. மூழ்கி முக்குளித்துக் கிடப்பார். அவருக்கென்று ஓர இருக்கை ஒன்று உள்ளது. அதில்தான் உட்காருவார். அங்கே ஜன்னல் வெளிச்சம் கிடைக்கும். ஆனால் .ஃபேன் காற்று சரியாக வராது. அது ஒரு பொருட்டில்லை என்பது போல் செய்திகளை விழுங்கத் தொடங்கி விடுவார்.

இது ஒரு நாள் சர்ச்சை ஆனது. முன் ஷீட்டைப் படிக்கும்போது உள் தாளை வேறொருத்தருக்குக் கொடுக்கலாமில்ல.....நீங்களே மணிக்கணக்காப் படிச்சிட்டிருந்தா மத்தவங்க படிக்க வேண்டாமா? என்று ஒருவர் பொருதுக்கு நின்றார். ரொம்ப நாள் கவனித்திருந்து, தாங்க மாட்டாமல் கேட்டது போலிருந்தது. அதைக் காதில் வாங்காதது போலவே பேப்பருக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு அதி தீவிரமாய்ப் படித்துக் கொண்டிருந்தார். இவனை அங்கே தெரியும். காட்டிக் கொள்ளமாட்டார். தினமும் நூலகம் வருகிறான்...இவனெல்லாம் ஒரு ஆளா எனக்கு? என்பது போல்தான் இருப்பார். அந்த இடத்தில் ஒரு முறை கூட தெரிந்ததாகவே காட்டிக் கொண்டதில்லை என்பதுதான் விநோதம். அதற்கான அவசியமும் இல்லை என்றே வையுங்கள். அவர்தான் பேசவே மாட்டாரே...!

அவர் செய்கை இவனுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் எப்படிச் சொல்வது? எதிர் வீட்டில் அன்றாடம் முகம் பார்க்கும் பெரியவரை எப்படிப் பகைத்துக் கொள்வது? அந்தச் சாபம் வேறு வேண்டுமா?  கண்டு கொண்டதே இல்லை. அப்படிப் பேப்பரை ஒரு தாள் பிரித்துக் கொடுப்பது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை.. மொத்தமுள்ள தாள்கள் அத்தனையையும் அந்தப் பிரின்டிங் மசி மூக்கில் மணக்க மணக்க கையில் பிடித்துக் கொண்டு  படிக்க வேண்டும் அவருக்கு. பக்கங்கள் சிதறிப் போனால் செய்திகள் விட்டுப் போகும் என்று நினைத்தாரோ என்னவோ...சின்னக் குழந்தை, தான் எடுத்துக் கொண்டதை அல்லது வைத்திருப்பதை  மற்ற யாரும் கேட்டால் தராதுதானே...அல்லது அழும்...அதுபோல்தான் இவரது செய்கையும்.

அதற்கு அடுத்தவாரம் ஒன்று நிகழ்ந்தது. ஒவ்வொரு தினசரி இடது மேல் நுனியிலும் மொத்தத் தாள்களையும் ஒன்றிணைத்து “ ட“ வைத் திருப்பிப்  போட்டாற்போல் நூலால் தையல் போட்டு பிரிக்க முடியாதபடி ஆக்கப்பட்டிருந்தது. அதுநாள்வரை அந்த நடைமுறை இல்லை. அம்மாதிரி ஒன்றிணைத்துத் தைத்து ஒரு தினசரியைப் பிரிக்க முடியாதபடி பராமரிப்பதை நகரின் தலைமை நூலகத்தில்தான் பார்த்திருக்கிறான். அங்கே நின்றமேனிக்கே படிக்கும் வகையில் சாய்வுப் பலகையில் தினசரிகள் வரிசையாகத் தொங்க விடப்பட்டிருக்கும். உட்கார்ந்து படிக்கும் இந்தச் சிறிய கிளை நூலகத்திலும் அந்தத் தையல் நடைமுறையைக் கொண்டு வந்தது அவர்களைப் பொறுத்தவரை சரிதான் என்றாலும், அது இந்தப் பெரியவரின் ஏற்பாடோ  அல்லது அவருக்கு வசதியாய் இது அதுவாகவே இயல்பாய் அமைந்து விட்டதோ என்று தோன்றியது.

அப்போதும் ஒரு பிரச்னை கிளம்பத்தான் செய்தது. ஒரு புரட்டுப் புரட்டிட்டுக் கொடுப்பீங்களா...மணிக்கணக்கா நீங்களேவா படிக்கிறது...மத்தவங்க பார்க்க வேண்டாமா...? என்றார் ஒருவர். அவரும் வயசானவர்தான். ஆனாலும் விறைப்பான கோபமிருந்தது. இவர் படிக்கிற அந்தப் பேப்பரை நான் படிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று முறைத்துக் கொண்டு பழியாய் நின்றார். வீம்புக்கு வீம்பு...!

பொதுவாகவே மனிதர்களுக்கு அறுபது வயதுக்கு மேல்தான் கொஞ்சம் நிதானம் வருகிறது என்று சொல்கிறார்கள். அது உடம்பு முடியாமல் போவதால். மைன்ட் மெச்சூரிட்டியால் அல்ல என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. நகத்து நுனி காமம் இருக்கிறவரை வீரியமும் இருக்கத்தான் செய்யும் என்று அறியப்படுகிறது.

வெறுமே புரட்டிட்டுத் தரணும்னா வீட்டுல டி.வி. லயே நியூஸ் கேட்டுக்கலாமே....! அது போதுமே...! இங்க வந்து ஏன் படிக்கணும்....பொறுங்க...படிச்சிட்டுத் தர்றேன்....எத்தனை பேப்பர் கிடக்கு...அதை எடுத்துப் படிங்க....என்று ஒரு போடு போட்டார் பெரியவர். வேறு யாரும் இவர் படிக்க நினைக்கும் தினசரியை வைத்திருந்தால் அவர்கள் படித்து முடிக்கும்வரை காத்திருப்பதை இவன் பார்த்திருக்கிறான். அந்தப் பொறுமை யாருக்கும் வராதுதான். ஆனால் அவர் அதிர்ஷ்டம் நூலகத்திற்குள் நுழைந்ததும்  அந்த தினசரி அவர் கைக்குக் கிடைத்து விடுவதுதான். ஒரு வேளை இந்த டையத்துக்கு அந்தப் பெரியவர் வருவார்...அதனால அது கெடக்கட்டும்...நாம தொட வேண்டாம்.... என்று மற்றவர்கள் விட்டுக் கொடுக்கிறார்களோ என்னவோ? இல்லையென்றால் தினசரி அந்த செய்தித்தாள் அவரிடம் அப்படித் தடையின்றிச் சிக்குமா? வேறு செய்தித்தாளையோ, வார, மாத சஞ்ஜிகைகளையோ அவர் தொட்டு இவன் பார்த்ததில்லை.

ஒரு நாள் அதே எதிராளி இவர் படித்துக் கொண்டிருக்கும்போது ஆத்திரம் வந்தவராய்ப் பட்டென்று தாளுக்கு முன் பக்கம் வந்து நடுவே கையை விரித்து ஒரு தட்டுத் தட்டி அந்தச் செய்தித்தாளைப் பறித்தார். பெரியவர் வெல வெலத்துப் போனார். ஏறக்குறையக் கைகலப்பு மாதிரிதான் அது. அதிரடி என்றால் அதுதான். இப்படியா ஒரு மனுஷனுக்குக் கோபம் வரும்?

பார்த்து சார்...உங்க சண்டைல பேப்பரக் கிழிச்சிடாதீங்க........ நான் ஃபைன் கட்டணுமாக்கும்....என்றது அந்த நூலகர் பெண்மணி. இருக்கையிலிருந்து பதறி எழுந்து வந்து விட்டது.

நீங்கதான ஒரே பேப்பரா தைச்சுப் போட்டிருக்கீங்க....தனித் தனியா இருந்தா என்ன கெட்டுப் போகுது...ஆளுக்கு ஒரு தாளாப் படிக்கலாமில்ல...இந்த மாதிரி, தான் மட்டும் படிச்சாப் போதும்னு நினைக்கிற ஆளுங்க கைல மாட்டினா....நாள் பூராவும் வேறே யாரும் தொட்டுக் கூடப் பார்க்க முடியாதாக்கும்....எதுக்காக இந்த நடைமுறையைக் கொண்டு வந்தீங்க....? நான் தினமும் இப்டிக் கேட்குறேனேன்னா? இல்ல  அந்தாளுக்கு வசதி செய்யவா? சொல்லுங்க......? அவருக்காக மட்டும்தான் லைப்ரரி நடத்துறீங்களா? இது பொது நூலகம்தானே...? -  அடேயப்பா...எத்தனை கேள்விகள்?

இதென்னடா வம்பாப் போச்சு...? என்று தலையில் கையை வைத்துக் கொண்டு அந்தப் பெண் உட்கார்ந்து விட்டது. ஒவ்வொரு பேப்பரும் இத்தனைன்னு கணக்கு வேணும் சார் எங்களுக்கு...அடுக்கி வச்சி, எண்ணிக் கொடுக்கணும். அதுக்காகத்தான் இந்தத் தையல். இல்லன்னா எங்களைக் கேள்வி கேட்பாங்க...நாங்க வீட்டுக்கு எடுத்திட்டுப் போறமோன்னு சந்தேகப்படுவாங்க...அதனால இதெல்லாம் நீங்க கேள்வி கேட்காதீங்க...எங்களுக்கு அப்பப்ப என்ன சொல்றாங்களோ அதுப்படிதான் நாங்க செய்ய முடியும்...!...அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் படிக்கப் பாருங்க...இங்க வர்றவங்களெல்லாம் வயசுல பெரியவங்களா இருக்கீங்க...சீனியர் சிட்டிசன்ஸே இப்படிச் சண்டை போட்டீங்கன்னா எப்டி சார்...? அமைதி தவழ வேண்டிய எடத்துல இப்டி கச்சடா பண்ணினா என்னதான் சார் பண்றது? அழாத குறை...! “அமைதி காக்கவும்“ என்று எழுதிய அட்டை காற்றில் அலமந்து ஆடிக் கொண்டிருந்தது. ஃபேன் காற்றில் அது எப்போதும் ஆடிக் கொண்டேதான் இருக்கும். அது இப்போது கனப் பொருத்தமாய் இருந்தது.

என்னத்த அட்ஜஸ்ட் பண்றது? கச்சடா அது இதுங்கிறீங்க?  கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா அவருக்கு? தான் மட்டுமே படிச்சாப் போதும்னு நினைக்கிறாரே...? அதைச் சொல்ல மாட்டீங்களா? இங்க யாராச்சும் அப்டி இருக்காங்களா? ஏதோ அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம் படிப்பாங்க...அட...அரைமணி நேரம்தான் படிக்கட்டுமே...யாரு வேண்டாம்னாங்க...அதுக்காக ரெண்டு மணி நேரத்துக்கு ஒருத்தரே ஒரு நியூஸ் பேப்பரை வச்சிட்டு மோந்து பார்த்திட்டிருந்தா எப்டி? ...லைப்ரரி டைமே எட்டரைலர்ந்து பதினொன்றரை வரைக்கும்தானே? பிறகு சாயந்தரம் நாலரைக்குதானே? இந்த த்ரீ அவர்ஸ்ல ரெண்டு மணி நேரம் இவருக்கே போயிடுச்சின்னா...மத்தவங்க எப்பப் படிக்கிறதாம்? நாங்க எத்தனை பேர் இருக்கோம்...? இது தெரிய வேண்டாமா அவருக்கு? என்ன அநியாயமா இருக்கு?

இவ்வளவு பெரிதாய் இந்தச் சண்டை ஆகும் என்று அந்த நூலகர் எதிர்பார்க்கவேயில்லை. அப்படியும் அது ஒரு யோசனை சொன்னது. சாயங்காலம் வந்து படியுங்களேன் சார்...? யதார்த்தமாய்ச் சொல்லும் சிலவும் சமயங்களில் பிரச்னை ஆகிவிடும்தான். ஒன்றைச் சொல்லும்முன் இதைச் சொன்னால் சரியா வருமா என்று ஆயிரம் முறை யோசித்தாக வேண்டும். அதுதான் பக்குவம். அதுவும் தன் வயசுக்கு இதைச் சொல்லலாமா என்றும் நினைத்துப் பார்க்க வேண்டும். முடியுமானால் சிவனே என்று இருந்து விடுவதுதான் உத்தமம். ஒன்றைச் சொல்வதை விட சொல்லாமல் விட்ட காரியங்கள்தான் பிரச்னையில்லாமல் போயிருக்கிறது.  தானே ஓயும் என்று விட்டுவிடுவதுதான் நல்லது. சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டது அந்தப் பெண். இதுவே பெரிய ஆம்பிளையா ஒரு லைப்ரரியன் இருந்தா இப்டி நடக்குமா? வேதனையுடன் நினைத்துக் கொண்டது, சின்னப் பெண் ஆகையால் லேசாக அழுதது போல் கூட இருந்தது.

இப்டியெல்லாம் இந்தக் கிளை இருக்குன்னு காதுக்குப் போனா...நான் சரியில்லைன்னு என்னை மாத்தினாலும் மாத்திப்புடுவாங்க சார்...வீட்டுக்குப் பக்கத்துலன்னு இவ்வளவு நாள் கழிச்சு இப்பத்தான் வந்திருக்கேன்...கெடுத்திடாதீங்க ஐயா....-அதன் வேண்டுதல் அவர்களை அசைத்ததாய்த் தெரியவில்லையே?

ஏன் அவர் வந்து படிக்கட்டுமே சாயங்காலம்...! நாங்கதான் வரணுமா? என்னங்க இது நியாயம்? எங்களுக்கும் காலைலதான் வசதி...அவரப்போல....என்ன பேசறீங்க நீங்க? அவரென்ன உங்க தாத்தாவா? இம்புட்டு வக்காலத்து வாங்குறீங்க...? – கேட்டவர் விடுவதாயில்லை. சண்டைக்கு அடிபிடி மாடு பிடி என்று நின்றார். அவரும் வெகு நாளாய் அந்த நூலகத்திற்கு கதியே என்று வந்து கொண்டிருப்பவர்தான். தொடர்ந்து வந்து ஆதரவு தருவதனாலேயே ஒரு  உரிமை கிடைத்து விடுகிறதுதானே? அல்லது ஒரு தைரியம் வந்து விடுகிறது. நியாயத்தைத் தட்டிக் கேட்காமல் எப்படி இருப்பது? வயது போனால்தான் இந்தப் பிடிவாதமே தலை தூக்குகிறது....! பித்தம் தலைக்கேறி உச்சியை விட்டு இறங்க மறுக்கிறது...!

வயசானவர் சார்...பாவம்....இந்தத் தள்ளாத வயசுல அவர் நடந்து லைப்ரரிக்கு வர்றதே பெரிசு.....போகட்டும் சார்...விடுங்க...இதப் போய் பிரச்னை ஆக்காதீங்க.....-

இதெல்லாம் அவர் காதில் விழுந்ததா தெரியவில்லை. செவிடு போல் தேமேனென்று படித்துக் கொண்டிருந்தார்...சற்றே முன்பு வரை....

என்னம்மா இப்டிச் சொல்றீங்க? நாங்களும்தான் வயசானவங்க....நாங்க என்ன எளவட்டமா...? போக்கத்துப் போயா இங்க வர்றோம்? ஏதோ நம்ம பகுதில ஒரு லைப்ரரி இருக்கே...ஆதரவு கொடுப்போம்னு வந்திட்டிருக்கோம்...இவர் அதைக் கெடுத்துடுவார் போல்ருக்கே...! எங்களுக்கும் பொழுது போகணும்ல?   –சொல்லிவிட்டு,  படிப்பவர்கள் பக்கம் திரும்பிய போது அந்தப் பெரியவர் அங்கே இல்லை.

வெளியே வட்டமேஜை போல் சிமிண்ட் தளம் போட்டிருந்த பெரிய அடர்ந்த நிழல் கொண்டிருந்த  மரத்தைச் சுற்றிய பகுதியில், தரைத் தளத்தில், உடம்பைச் சுருக்கிக் கொண்டு படுத்துக் கண் மூடியிருந்தார். நாடு சுதந்திரம் அடைஞ்ச போது வந்து படுத்தவங்க...என்று ஏதோவோர் படத்தில் வசனம் வரும். அது நினைவு வந்தது இவனுக்கு. பலரும் உறங்கிக் கொண்டிருந்தனர் அங்கே. அந்த நிழலும்  இதமான காற்றும் பெரியவர் கண்களைச் செருகியிருந்தன. அயர்ந்த தூக்கம்.

னக்குத் தெரிய அதுதான் அவர் கடைசியாக நூலகம் வந்த நாள். அதற்குப் பின் அந்தப் பக்கமே ஆளைக் காணவில்லை. நமக்காக இவர்கள் ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்றோ, அல்லது வரப் பிடிக்காமலோ, அல்லது தள்ளாமையோ....எதுவோ ஒன்று அவரைத் தடுத்து விட்டது. ஆனால் ஒரே தினசரியை அவ்வளவு நேரம் தானே வைத்துக் கொண்டு படிப்பதை, மற்றவர்களும் படிக்கக் கொடுக்காமையை, எதுக்குப் பிரச்னை என்று விட்டுக் கொடுக்காமையை அவர் கொஞ்சமேனும் உணர்ந்தாரா தெரியவில்லை. அதற்குப் பின் அந்த லைப்ரரியே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாரா அல்லது உண்மையிலேயே உடம்பு முடியலையா என்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.

என்னங்க அந்த மனுஷன ஆளையே காணலை...என்றார் அந்த சண்டை போட்டவர். பரிதாபப்பட்டது போல்தான் இருந்தது. ஆனால் அந்தக் குறிப்பிட்ட தினசரி படிக்கப் படிக்க ஆள் மாறிக் கொண்டேயிருந்தது.

வர்கள் கீழ் வீட்டிற்கு  வந்தாயிற்று. இவருக்காகவே வந்தது போல்தான் இருந்தது. வராண்டாவில் இருந்தால் பக்கச் சந்து வழியாகப் பின் கழிப்பறைக்குச் சென்று விடலாம். என்ன...அதுவரை அடக்க முடியணும்...பாவம்...! காம்பவுன்ட்டுக்குள்ளேயே கொஞ்சம் நடக்கலாம்...! ஆஸ்த்மா தொந்தரவு இருந்தது அந்தப் பெரியவருக்கு. அதுதான் தாங்க முடியாமல் எச்சில் வழிவது கூடத் தெரியாமல் அலமந்து அமர்ந்திருக்கும் நேரம். வெயில் ஏறும்வரை பொடி நடை போடுவார். அது முடிந்து வெராண்டா உள் பக்கத் திண்ணைக்குச் சென்று விடுகிறார். அங்கேயே அமர்ந்து கண்ணில் காணும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே...என்று இங்கு எதிர்த் திசையில் நிற்கும் இவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். வேறு வண்டிகள், ஆட்கள் ஏதேனும் தெருவில் குறுக்கே போனால் தட்டுப்படும். கணத்தில் மறைந்து விடும். மற்றப்படி இவனை நோக்கியே அந்தப் பார்வை. ஏதோ கேட்காமல் கேட்பது போல....!

ப்போதெல்லாம்...அங்கே...அந்தத் திண்ணையில்... அவருக்காகக் காத்திருக்கிறது அந்தத் தினசரி. உள்ளே இருந்து வெளிப்படும் கணங்களில் அவர் முகம் மலர்கிறது. ஆசை ஆசையாய் ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வதுபோல் அதைக் கையில் ஏந்துகிறார். எனக்கே எனக்கு என்று நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார். நூல் தொங்கும் மூக்குக் கண்ணாடியைக் காதில் மாட்டிக் கொண்டு செய்திகளை மேய ஆரம்பிக்கிறார். இழுப்பு நின்ற பிறகு பிடிக்கும் வேகம்.  இங்கே அவருக்கு எந்தத் தடையும் இல்லை. யாரும் அவரை எதுவும் கேட்கப் போவதில்லை. எவ்வளவு நேரம் வேணுமானாலும் அவர் அதைப் படிக்கலாம். மனனம் கூடச் செய்யலாம். ஊன்றி அழுந்திப் படிக்கையில், முகத்தைப் புதைத்துக் கொண்டு செய்திகளில் புதைகையில், நேரம் காலம் இன்றிப் படிக்கப் படிக்க செய்திகள் அழிந்து போகும் அபாயம் உண்டு அங்கே!!. அத்தனை தீவிரம். அவ்வளவு ஆர்வம் அந்த உயிருக்கு.! படித்து முடித்து எப்போது திருப்தி வருகிறதோ அப்போது அதை மடித்துக் கீழே போடலாம்.. அதற்கும் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அன்றாடம் அவர் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதே அந்த செய்தித்தாள்தான். உளவியல் ரீதியாக,  அது அவர் உயிரைப் பற்றிக் கொண்டிருக்கிறது. நீட்டித்துக் கொண்டிருக்கிறது...!

அவருடைய ஆசை அவருடைய முழு விருப்பத்தின்படி எந்தவித இடையூறுமில்லாமல் அங்கே நிறைவேறிக் கொண்டிருக்கிறது. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி...என்ற அந்தப் பழைய வானொலிக்  கம்பீரக் குரல் இப்போதும் நம் காதுகளில் ஸ்பஷ்டமாக ஒலித்துக் கொண்டுதானேயிருக்கிறது. அமைதியாய், அணுக்கமாய் வாசித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் அந்தப் பெரியவர். எதிர்ப்பாளர்கள் இல்லை. ஏமாந்தோரும் இல்லை. ஏதேனும் மன வியாகூலத்தில், அந்தப் பேப்பரை மடித்துக் கசக்கித் தூக்கி எறிந்தாலும் கூட யாரும் கேட்கப் போவதில்லை.  அந்தக் கணங்கள், அந்த நேரம் அவருக்கான உரிமை. அந்த அளவுக்கான தீவிரம் அந்தக் ககன வெளியில்.!. புயல் தினமும் அங்கே விடாமல்  மையம் கொள்கிறது. விலகுகிறது. திரும்பவும் மையம் கொள்கிறது.

இங்கிருந்தமேனிக்கே இவன் அந்தக் காட்சியை அனுதினமும் முழுமையாகப் பார்த்து உள் வாங்கிக் கொண்டிருக்கிறான். ஓரொரு சமயம் பேப்பருக்குள் முகம் புதைத்துக் கொண்டு எதையேனும் மனதில் நினைத்துத் தனக்குத்தானே குமைந்து அழுது கொண்டிருக்கிறாரோ என்றுகூடத் தோன்றத்தான் செய்கிறது இவனுக்கு. மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவரின் வாழ்வின் கடைசி மிச்சமான அந்த ஆசை அனுதினமும் எந்தவிதத் தடங்கலுமின்றி அங்கே பலிதமாகி, நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதில் அவனுக்கு அலாதி திருப்தி. நிறைவு.

பேப்பர் முழுசா உங்ககிட்டத் திரும்பி வருமான்னு சொல்ல முடியாது...கொடுக்கும்போது இருந்தாப்ல சுத்தமா, கிழியாம, கசங்காம இருக்குமாங்கிறதுக்கும் நாங்க  கியாரண்டி இல்ல.....இதுக்காக நீங்க எப்பவும் எதுவும் எங்க கிட்டப் புகார் சொல்லக் கூடாது....சொல்லிப்புட்டேன்...உங்க விருப்பத்துக்கு நீங்க செய்றீங்க...எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.....சரிதானா? . – இது அந்த அம்மாளின் என்னை நோக்கிய தீர்மானமான அழுத்தமான பேச்சு....

ஆஉறா...எவ்வளவு ஜாக்கிரதையுணர்வு? எப்படியான ஒரு சுயநலம்?  என்ன ஒரு நேசமான ஆதரவு?  இப்படியாப்பட்ட ஆட்கள்தான் எதிலாவது திகிடு முகடாக மாட்டுவார்கள். தவிர்க்க முடியாமல் நினைத்துக் கொண்டான். நன்றாய் இருக்கட்டும். நலமே பெறட்டும் என்று பிறகு சமாதானமும் செய்து கொண்டான்.

ரொம்ப சந்தோஷம்மா...ஒண்ணும் பிரச்னையில்ல...என்றான் அவர்களை நோக்கி.

வீட்டிலுள்ள சொந்தங்களே இப்படியென்றால் வெளியே இருப்பவர்களை என்னவென்றுதான் சொல்வது? உலகம் பலவிதம்...! சிலர் ஒருவிதம்....!

அந்தச் செய்தித்தாள் அனுதினமும் அதன் நேரத்துக்கு, அந்தப் பெரியவர் இஷ்டத்துக்கு அங்கே அடைக்கலம் புகுந்து அவரைத் திருப்திப்படுத்தி, பூரணத்துவம் பெற்ற பிறகு  தன் வீடு அடைய இங்கே   திரும்பி வந்து,  வழக்கமான தீவிர வாசிப்பின்றி, நேரம் கடந்தும் ஆன ஆதர்ஸ நிலையில் செய்திகளை வெறுமே ஒரு புரட்டுப் புரட்டுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான் இவன்.

                                  ------------------------------------

 

     

 

13 பிப்ரவரி 2022

 உறங்காக் கடல்   கட்டுரைத் தொகுதி   மற்றும் கால்விலங்கு-குறுநாவல் தொகுதி

ஜீவா படைப்பகம், வேளச்சேரி, சென்னை.



30 ஜனவரி 2022

சிறுகதை “பிணக்கு என்கிற வினைச்சொல்” - ்கல்கி வார .இதழ் - 28.01.2022

 

 

         சிறுகதை                  “பிணக்கு என்கிற வினைச்சொல்”      





       ன் நண்பனோட இறப்புச் செய்திய பேப்பர்ல பார்த்ததும் அதிர்ச்சியாத்தான் இருந்திச்சு எனக்கு. ஆனா நா அதை யார்ட்டயும் சொல்லல. குறிப்பா என் பெண்டாட்டிகிட்ட. என்னிக்கும் போல ஆபீசுக்குக் கிளம்பிட்டேன். ஆனா மைதிலிகிட்ட அந்தச் செய்தியைச் சொல்லாதது எனக்கு மனசுக்குள்ள உறுத்திக்கிட்டேதான் இருந்திச்சு. நல்லவேளை...வீட்டுல தினசரி வாங்குறதில்லை. வாங்கியிருந்தா நிச்சயம் அவளுக்கும் செய்தி தெரிஞ்சிருக்கும். வீடே களேபரமாகியிருக்கும். நான் பதில் சொல்ல முடியாமத் தலை குனிஞ்சி கிடந்திருப்பேன். இல்லன்னா கோபத்துல காட்டுமாட்டுக்குக் கத்தியிருப்பேன். வேறென்ன தெரியும் உங்களுக்குன்னு அவளும்  சொல்லி அழ உட்கார்ந்திருப்பா...!

      அவ கத்துனான்னா அதுல நியாயம் இருக்கு. ஏன்னா முத முதல்ல என் நண்பனோட கடனை அடைக்க அவதான் தன் நகையைக் கொடுத்து உதவினா...! கல்யாணம் ஆகி வந்த புதுசு. எங்க நட்போட இறுக்கத்தப் பார்த்து, நண்பனோட நடத்தையைப் பார்த்து, இரக்கப்பட்டு, அவருக்கு நீங்க உதவலேன்னா வேற யாரு உதவுவாங்க...பரவால்ல...இதைக் கொண்டு போய் அடகு வச்சுப் பணத்தை வாங்கி, அவர் கடனை அடைங்க...முதல்ல .ன்னா...!

வந்ததும் வராததுமா அவ நகையை வாங்கி அடகு வைக்கிறதுல எனக்குக் கொஞ்சங்கூட இஷ்டம் இல்ல. என்னோட ஏதானும் பணமுடைன்னாக்கூடப் பரவால்ல. ஃப்ரெண்டுக்காக நானே கொடுத்தாக் கூடப் பரவால்ல. எங்கிட்டப் பணம் இல்லாத நிலைமைல இல்லைன்னு சொல்லிட்டுப் போக வேண்டிதானே? பொண்டாட்டி நகையை அடகு வச்சுக் கொடுக்கிறதுங்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர்ன்னுதான் நான் நினைச்சேன். அவன்னா நமக்குச் செய்வானா இப்படி? அதையும் நினைச்சுப் பார்க்கணும்ல? ஆனா மைதிலியோட மனசு என்னை ஆச்சரியப்படுத்திச்சு. அந்த பயத்துலயே அதை அடுத்த மாசமே திருப்பிட்டேன்னு வச்சுக்குங்க...ரொம்ப சின்சியராக் கொடுத்துட்டான். வேறே எங்கேயோ கடன் வாங்கித்தான் கொடுத்திருப்பான் போல. அதப்பத்தி நமக்கென்ன? அப்டியெல்லாம் கவலப்பட்டு முடியுமா? நமக்குக் காரியம் ஆகணும்...! ரொம்ப மனபாரமாப் போச்சு எனக்கு. இந்தா பிடி....என்று மீட்ட நகையை அவளிடம் திருப்பிக் கொடுத்தபின்தான் மனசே சரியாயிற்று.

ஆனந்துக்கு அடிக்கடி இப்படிப் பண முடை இருந்திட்டுத்தான் இருந்திச்சு. அதுக்காக ஒவ்வொருவாட்டியும் நாமளே உதவிட்டு இருக்க முடியமா? வேறே எங்கயாச்சும் பார்த்துக்க வேண்டிதான்...அவனும் அடிக்கடி கேட்கக் கூடாதுங்கிற முடிவுல இருக்கத்தான் செய்தான். ஆனா அவன் நடவடிக்கைகள் கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கிறதா எனக்குத் தோணிச்சு. ஆக்டோபஸ் மாதிரி நாலா பக்கமும் கையை நீட்டிட்டிருக்கான்னு புரிய ஆரம்பிச்சிது. நான் விலக ஆரம்பிச்சேன். அடிக்கடி கொடுத்து உதவுறதுக்கு என்கிட்டயும் வேணும்ல...? நானே இன்னும் ரெண்டு தங்கச்சிகளுக்குக் கல்யாணம் பண்ணனும்னு இருக்கிறவன்...!

நானும் அவனும் ஒண்ணாத்தான் அரசாங்கப் பரீட்சை எழுதினோம். ஆனா எனக்கு மட்டும்தான் வேலை கிடைச்சிது. தன்னோட வருத்தத்த வெளில காண்பிச்சிக்காம என்னோட வேண்டுதலுக்காக பழனிக்குக் கூட வந்தான் அவன். வேலைல சேர்றதுக்காக நான் திருச்சி போயிட்டப்போ, எனக்காக ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தனுப்பிச்சான். பஸ் டாப்புல வண்டியைப் போட்டுட்டு பத்திரமா கொண்டு வந்து என்கிட்ட சேர்ப்பிச்சாரு அவனோட நண்பர் ஒருத்தர். அந்த வண்டிக்கான காசைக் கூட நான் கொடுத்ததா நினைவில்லை. அவனும் கேட்கலைன்னுதான் நினைக்கிறேன். பிறகுதான் ரெண்டு வருஷத்தில் நான் உள்ளூர் வந்தேன்.

அரசாங்க வேலைக்கான வயசு கடந்து போச்சு அவனுக்கு. அதுக்குப் பின்னாடிதான் அவன் தன் க்வாலிஃபிகேஷனை ஏத்தியிருந்தான். பி.காம்...கரெஸ்ல படிச்சிட்டிருந்தான். அதுல அக்கௌன்டன்சி பேப்பர்லாம் பிரமாதமாப் பாஸ் பண்ணிட்டான். பாலன்ஸ் ஷீட் அவ்வளவு க்விக்கா போட்டு டாலி பண்ணுவான்.  ஆனா வேறே சில சப்ஜெக்ட்கள்ல அரியர்ஸ் வச்சிருந்து, பின்னாடி அதுகளயும் எழுதி முடிக்கணும்ங்கிற இன்ட்ரஸ்ட் அவனுக்கு இல்லாமப் போச்சு. இதுக்கிடைல ரெண்டு குழந்தைகள் வேறே ஆயிப் போச்சு அவனுக்கு. உறவுஸ் ஒய்ஃப் வேறே..இவன் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் வைக்க, அந்தம்மா சத்துணவு ஆயா வேலையை யாரையோ பிடிச்சு எப்டியோ வாங்கிடுச்சு. ஓரளவுக்குப் பரவால்லங்கிற நிலமைதான். ஆனாலும் பற்றாக்குறை இருக்கத்தான் செய்தது. காரணம் -

இவன்தான் கைவீசி செலவு செய்ற ஆளாச்சே. அப்டி இருந்து முடியுமா? பேச்லரா இருந்தபோது இருந்தமாதிரியே இப்பவும் இருக்க முடியுமா? கை சுருக்கம் வேணாம்? அந்த ஆரம்பத்துல இன்ஸ்டிட்யூட்டுக்கு மிஷின் வாங்கணும்னுதான் ஒரு எடத்துல லோன் வாங்கி அதைக் கொடுக்க முடியாமே ஆகி, அதுக்காகத்தான் எங்கிட்டே வந்து நின்னான். அப்பத்தான் நகையை அடகு வச்சுப் பணம் கொடுத்த கதை. ஆனா அதை மறுமாசமே அவன் திருப்பிக் கொடுத்ததுல ரொம்பவும் ஒரு சின்சியாரிட்டியை உணர்ந்தேன் நான். புதுசா வந்த மனைவி நகையை அடகு வச்சுக் கொடுத்திருக்கானே....அந்தப் பொண்ணும் நமக்காக மனமுவந்து இந்த உதவியைச் செய்திருக்கேன்னு ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டுட்டான்.

சிஸ்டர்...என் வாழ்நாள்ல இதை நான் மறக்கவே மாட்டேன்னான் அப்போ. என்னத்தையோ சொல்லிட்டுப் போகட்டும்...பணம் திரும்பி வந்தாச் சரின்னு இருந்தேன் நான். நல்லவேளை...கரெக்டாத் திருப்பிக் கொடுத்திட்டான். எதுக்குச் சொல்றேன்னா...அப்போ அவன்கிட்டே வேறு ஒரு பழக்கம் புதுசா வந்திருந்திச்சு. தீர்த்தமாடுறது....என்னையே ஒரு நா இழுத்துட்டுப் போயிட்டான்னா பார்த்துக்குங்களேன். எனக்கும் என்னதான் அதுன்னு ஒருவாட்டி பார்த்திடுவோமேன்னு ஒரு சின்ன சபலம். என்னடா ஒரே மடக்குல குடிச்சிட்டே...கொஞ்சம் கொஞ்சமா சிப் பண்ணி அனுபவிச்சுக்  குடிறா....என்றான் ஆனந்த். எனக்கு ஒண்ணுமே தெரில. போகப் போகத்தான் கால் தடுமார்றதக் கவனிச்சேன். ஆனா நிறுத்த முடில...! .சே...இது நல்லால்லியே...ன்னு தோணிச்சு. அந்த ஒருவாட்டியோட என் சபலம் முடிந்தது.

.      அன்னைக்கு செகன்ட் ஷோ சினிமா வேறே. நல்லவேளை. போய் ஒரு இடத்துல சிவனேன்னு உட்கார்ந்தாச்சு. இல்லன்னா... இருந்த போதைக்குக் கதை கந்தலாகியிருக்கும். எவன் படம் பார்த்தது. ஒரே தூக்கம்தான். படம் முடிஞ்சப்போ நல்லா தெளிஞ்சிருந்தது..   போற வழிக்கு...தெருக்குழாய்ல அவனைத் தண்ணியடிக்கச் சொல்லி மூஞ்சியை நல்லாக் கழுவி, திரும்பத் திரும்ப வாய் கொப்பளிச்சி, அவன்ட்ட ஊதிக் காண்பிச்சு...வாடை சுத்தமா இல்லாம இருக்கிறாப்படி தியேட்டர்ல வாங்கின  ரெண்டு சூட மிட்டாய வாய்ல அடக்கிக்கிட்டு...வீடு போய்ச் சேர்ந்தேன் நான்.  நேரா போய் படுக்கைல விழுந்திட்டேன். தேவையா இது?ன்னு மைதிலி திட்டினது லேசா காதுல விழுந்தது. அவ செகன்ட் ஷோ சினிமா பார்த்ததைச் சொல்லியிருக்கா...நல்லவேளை...தப்பிச்சேன்...

அதுக்குப் பிறகுதான் நான் சுதாரிச்சேன்...ச்சே....இது நல்லாயில்லையே...! இனி இவனோட சுத்துறதக் கட் பண்ணனும்...அப்டீன்னுட்டு அன்னைக்கே முடிவு செஞ்சேன். என்னடா வர்றதேயில்ல...ன்னபோதெல்லாம் ஆபீஸ்ல வேலை ஜாஸ்தின்னு சொல்லிடுவேன். ஆனா சனி, ஞாயிறுன்னா அவன் இன்ஸ்டிட்யூட்ல போய் உட்கார்ற வழக்கமிருந்திச்சு. பன்னென்டு மிஷினோ என்னவோ வச்சிருந்ததா நினைவு. அது போக அக்கௌன்டன்சி எடுத்தான். ஷார்ட்உறான்ட் க்ளாஸ் எடுத்தான். அவன் பாஸ் பண்ணியிருக்கானான்னா இல்லதான். ஆனா வகுப்பு நல்லா எடுப்பான். அதுல கூட்டம் வந்திச்சு. இதுல மேல்நிலை தேர்ச்சி பெற்றுத்தானே நானே வேலையைக் கேட்ச் பண்ணினேன். என்னோடவே அவனும் பாஸ் பண்ணியிருந்தான்னா என்ன மாதிரியே கவர்ன்மென்ட் வேலைக்கு வந்திருப்பான். அப்ப அவன் சுதாரிக்கல. இப்பவாச்சும் க்வாலிஃபை பண்ணினானே...? பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவாச்சும் உதவுதேன்னு நினைச்சிக்கிட்டேன். அவன் அக்கௌன்டன்சி சொல்லிக் கொடுத்துதான் நானே பாஸ் பண்ணினேன்னா பார்த்துக்குங்களேன். நான் எப்பவுமே கணக்குல வீக்...!

சிக்கனமா இருந்து, கொஞ்சம் கொஞ்சமாப் பணம் சேர்த்து, சேரச் சேர ஒவ்வொரு மிஷினா வாங்கி, ஸ்கூலைப் பெரிசாக்கணும்ங்கிற நினைப்பில்லை அவனுக்கு. ஒரே நைட்ல எல்லாம் மாறிடணும்...பார்க்கிறவங்க பிரமிக்கிற மாதிரி வளர்ச்சி இருக்கணும்னு நினைச்சான். அதுக்காக எங்கயும் கடன் வாங்க தயங்கல்லே அவன். அதுதான் அவன்ட்ட இருந்த பெரிய கோளாறு. அதுக்கு நானும் பலியானேன். அதுதான் பெரிய மைனஸ். என்னை வம்படியா இழுத்திட்டுப் போய் ஒரு சீட்டுக் கம்பெனில ச்யூரிட்டி போட வச்சிட்டான். அரைக் காசானாலும் அரசாங்கக் காசுன்னு அந்தாளும் என்னை நம்பிப் பணம் கொடுத்திட்டான். வசமா மாட்டினேன் நான். தலைகீழ நின்னும் பிரயோஜனமில்ல. அவன்கிட்டயிருந்து தம்பிடி பேரல. என்னைப் போல இன்னும் சில பேரை மடக்கி வேறே சில நிறுவனங்கள்லயிருந்தும் கடன் வாங்கியிருக்கான். ஆனா அவன் வாங்கின அளவுக்கு இங்க இன்ஸ்டிட்யூட் பெரிசாகியிருக்கான்னா இல்ல.

ஏண்டா...நீ வாங்கியிருக்கிற கடனுக்கு இந்நேரம் முப்பது மிஷினாவது இங்க இருக்கணும். வெறும் இருபதுக்குள்ளதான் இருக்கும் போல்ருக்கு. மிச்சப் பணத்தையெல்லாம் என்ன பண்ணினன்னு கேட்டா....இங்க வாங்கி அங்க கொடுத்தேன்...அதை வாங்கி இதுல போட்டேன்னுவான். ஆனா வீட்டுல பார்த்தா ரூமுக்கு ரூம் ஃபேன்,, உறீட்டர், வாஷிங்மிஷின், பெரிய அகலமான டி.வி. இப்டி ஒரே படாடோபம்தான். அவன் பொண்டாட்டியோட அரிப்புத் தாங்காம, .இல்லன்னா அவளுக்கே தெரியாம அவகிட்டயே பந்தா காண்பிக்க வேண்டி இப்டியெல்லாம் செய்திருப்பானோன்னு தோணிச்சு எனக்கு. புருஷனோட தொழில், வரவு செலவு தெரியாம ஒரு பொண்ணு இருந்தென்ன பிரயோஜனம்? வீட்டுப்பாடு ஒழுங்கா கழிஞ்சா சரின்னு ஒரு பொம்மனாட்டி இருக்கலாமா?

என் பைசா இனிமே திரும்பி வராதுன்னு...அதாவது நான் ஸ்யூரிட்டி போட்ட கடனை அவன் நிச்சயமா அடைக்கப் போறதில்லங்கிற பயம் வந்திடுச்சி எனக்கு. நினைச்சாப்லயே அந்தச் சீட்டுக் கம்பெனிக்காரன் ஒரு நாளைக்கு ஆபீசுக்கு வந்து நின்னுட்டான். எனக்கா அவமானமாப் போச்சு. என்ன சார்....இந்தாளு உங்களத் தேடி வர்றாரு...? என்று பிரபலமான அவரை விளித்து எங்கிட்டக் கேட்க ஆரம்பிச்சாங்க ஆபீஸ்காரங்க....போனாலும் போகுதுன்னு அன்னைக்கே என் சேவிங்ஸ்லருந்து பணத்தை எடுத்து ஆனந்தயும் கூட்டிட்டுப் போய் அந்தக் கடனை வட்டியோட அடைச்சு, அந்த ஸ்யூரிட்டி பாண்டை வாங்கி அங்கயே கிழிச்சிப் போட்டுட்டு வந்தேன். இவனுக்கெல்லாம் ஏன் சார் கையெழுத்துப் போடுறீங்க...ன்னான் அந்த கம்பெனி முதலாளி ரொம்ப யோக்யன் போல. தனிமைல சொன்னான். அதனால தப்பிச்சான். அவனையும் வச்சிட்டுச் சொல்லியிருந்தான்னா, எட்டி அடிச்சிருப்பான் ஆனந்த்....

எதுக்குடா மோகன் மொத்தத்தையும் கொடுத்த...பாதி கொடுத்திட்டு, மீதி கடன் வச்சிருக்கலாம்ல...? எனக்குச் செலவு இருக்குடா...!  என்றானே ஒழிய, இப்டியொரு சங்கடத்த எனக்குக் கொடுத்துட்டமேன்னு வருத்தமேயில்ல. அவனுக்கு அப்போ அந்த ஊர்ல கடன் வாங்குற எல்லா வழிகளும் அடைபட்டுப் போய்க் கிடந்திச்சு. இனி எந்த எடத்துலயும் அவன் கைநீட்டி  பைசா வாங்க முடியாது. ஒழுங்கா இன்ஸ்டிட்யூட்ட நடத்தி, காசைக் கருத்தா சேமிச்சு, கொஞ்சம் கொஞ்சமா இருக்கிற கடனை அடைக்கிறது ஒண்ணுதான் வழி. ஆனா அவன் அதுக்குத் தயாரா இல்லன்னு தோணிச்சு. அவன்ட்டக் குடி அதிகமாயிருந்த நேரம் அது. போதாக் குறைக்கு ஐயா ஒரு பையனை வேலைக்கு வேறே வச்சாரு. அந்தப் பையன்தான் இன்ஸ்டிட்யூட்டக் கவனிச்சிக்கிட்டான். இவரு அக்கௌன்டன்சி, ஷார்ட்உறான்ட் எடுக்கிற நேரம் மட்டும் விசிட் பண்ணுவாரு. என்ன ஏதுன்னு மத்த விபரங்கள் ஏதுமிருந்தா முதலாளி கணக்கா அந்தப் பையன்ட்ட தகவல் கேட்டுட்டு வீட்டுக்கு வந்திடுவாரு....ஒரு ஆள வேலைக்கு வச்சி சம்பளம் கொடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டாருன்னு  சுத்தியிருக்கிறவங்க நினைக்கணுமாம்.. அந்தச் சம்பளக் காசை மிச்சம் பண்ணினா, தானே இருந்து உழைச்சா, லோன் ட்யூ கட்டலாமேங்கிற அறிவு இல்ல அந்தக் கழுதைக்கு...!

கடன் கொடுத்த ஆளுக வந்து வந்து போனாங்க. வீடு தேடி வந்து ஏமாந்தாங்க. ஆள் எவனுக்கும் அகப்படுறதேயில்ல. இதப் பயன்படுத்திக்கிட்டு வேலைக்கிருந்த பையனும் நல்லா துட்டு அடிக்க ஆரம்பிச்சான். அங்க ஜாப் டைப்பிங் நிறைய வரும். அந்தக் காசையெல்லாம் ஆட்டையப் போட ஆரம்பிச்சான். முன்னூறு நானூறுன்னு வந்திச்சின்னா, நூறு நூத்தம்பது மட்டும்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சான். இவ்வளவுதான் சார் வந்திச்சு...என்னை என்ன பண்ணச் சொல்றீங்க...? நீங்க வேணா இருந்து பாருங்க...அப்பத் தெரியும்...தேவையில்லாம என்னைச் சந்தேகப்பட்டீங்கன்னா எப்டி? என்று நிமிர்ந்து பேசினான்.

அந்தப் பையனை மலைக்கோயில்ல ஒரு பொண்ணோட பார்த்ததா ஒருத்தர் வந்து என்கிட்டே சொன்னபோது நான் அதிர்ந்து போனேன். அங்க படிக்கிற ஒரு பொண்ணுதான் கூடச் சுத்துதுன்னு தெரிஞ்சிது. அதெல்லாம் அவனோட பர்சனல்...நாம எப்படி அதுல தலையிட முடியும்?ன்னான் ஆனந்த். தலையிட வேண்டாம்..அவனை வேலையை விட்டு நிறுத்தலாம்ல...? என்றதற்கு....நிறுத்திட்டு? என்று பதில் கேள்வி கேட்டான். ஜோடிப் பொருத்தம் நல்லாத்தாண்டா இருக்கு...ரசிடா....என்று வேறு அட்வைஸ்.   இது வௌங்காது என்று அப்பொழுதே எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. நீயாவது அடிக்கடி இன்ஸ்டிட்யூட்டுக்கு விசிட் பண்ணுடா...அப்பத்தான் அவனுக்கும் ஒரு பயம் இருக்கும். கையும் களவுமா ஒரு நாளைக்குப் பிடிச்சு, கண்டிச்சு வையி. இருந்தா இருக்கான், போனாப் போறான்...உன் எண்ணப்படி வேறே ஆளா கிடைக்காது? என்று சொன்ன என் சொல் அவன் காதுகளில் ஏறவேயில்லை. இன்னும் கொஞ்சம் சொன்னால், நீ வேணும்னா ஸ்கூலுக்கு வர்றத நிறுத்திக்கோன்னு என்கிட்டயே சொல்லுவான் போல்ருக்குன்னு எனக்குத் தோணிச்சு......

என்னதான் ஆனாலும் அவனோட நட்பை விட எனக்கு மனசில்லை. காரணம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவ்வளவு ஊர் சுத்தியிருக்கோம். ரொம்ப வருஷப் பழக்கம் எங்களோடது. ஊர் ஊரா சுத்தியிருக்கோம். ஒவ்வொரு ஊர்லயும் எதெது விசேஷம்னு கேட்டு, தேடிப் போய்ப் பார்ப்போம். சாப்பிடுவோம். அந்த ஊர்ல இறங்கினதும், குறிப்பேடு வாங்கிக்கிடுவோம். ஒரு ஆட்டோவப் பிடிப்போம். கிளம்பிடுவோம். அந்த ஊர் எதுக்குப் பேர் போனதுன்னு கேட்டு அந்த ஸ்வீட்டை இல்ல பழத்தை மறக்காம வாங்கி சாப்பிடுவோம். மாம்பழம்னு போய் நின்னா வெரைட்டிக்கு ஒண்ணுன்னு எடுத்து அத்தனையையும் டேஸ்ட் பண்ணிட்டுத்தான் நகருவோம். மாம்பழத்தை ஆனந்த் சாப்பிடுற விதமே தனி. அதைக் கைல பிடிச்சி உருட்டிக்கிட்டே இருப்பான். உருட்டி உருட்டி உள்ளே கூழாக்கி, ஒரு ஓட்டையப் போட்டு ஜூஸ் ஆக்கி உறிஞ்சிடுவான். அவனப் பார்த்து நானும் அப்டியே சாப்பிடக் கத்துக்கிட்டேன். அந்த டேஸ்டே தனி.

 சிவாஜி படமா சேர்ந்து சேர்ந்து பார்த்திருக்கோம். செகன்ட் ஷோவா பார்த்துத் தள்ளியிருக்கோம். ஆர்ட் ஃபிலிம் வரிசைல கூட என் விருப்பத்துக்கு கூடவே வந்திருக்கான் அவன். ஊருக்கு வெளில அந்த பிரம்மாண்டத் தியேட்டர். அங்க பெரும்பாலும் இங்கிலீஷ் படம்தான் போடுவாங்க. அப்புறம் ஒரு கட்டத்துல ஆர்ட் ஃபிலிம்ஸ் போட ஆரம்பிச்சாங்க. பூரா  பணக்காரங்கதான் வருவாங்க...காரா நிற்கும் ரோடு வரைக்கும். அந்தப் பக்கமே தல காட்ட முடியாது. சாதா டிக்கெட்தானே நாங்க...அதனால எங்களுக்குக் கிடைச்சிடும். இந்த மாதிரிப் படங்களுக்கு லோயர் க்ளாஸ் பெரும்பாலும் காலியாத்தானே கிடக்கும். அதுதான் எங்களுக்கு வசதி. அடூர், வாசுதேவன் நாயர், சிபிமலயில், அரவிந்தன், ஜி.வி.ஐயர், கிரீஷ் கர்னாட், ஷ்யாம் பெனகல், சத்யஜித்ரே...ன்னு அப்பப்போ போடுற படத்துக்கெல்லாம் தவறாமப் போயிடுவோம். ஒரு சீனை நகர்த்துறதுக்கு ஏன்டா இந்தப் பாடு படுறாங்க...என்னதான் சொல்றான் இந்தக் காட்சில....அப்டி என்னதான் கண்டே இதுல...? என்று ஏதாவது கேட்டுக் கொண்டேயிருப்பான். நான் காட்சிகளின் அர்த்தங்களை அவனுக்கு விளக்கிக் கொண்டேயிருப்பேன். அப்படியே அவனும் கொஞ்சம் கொஞ்சமாய் ஆழ்ந்த ரசனைக்கு வந்து, பிறகு சிவாஜி படங்கள் தவிர வேறு கமர்ஷியல் படங்களை இனி பார்ப்பதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டான்.

பெரிய கற்பனை வளம் உள்ளவன் ஆனந்த். பாவம்...அவனுக்கும் ஒரு வேலை கிடைத்திருந்தால் என்னைப் போல் செட்டில் ஆகியிருப்பான். அதற்கு அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு என்னென்னவோ செய்து உருட்டிப் புரட்டிக் கொண்டிருந்தான். கஜகர்ணம் போட்டான் என்றே சொல்லலாம்.

இந்தக் கட்டத்தில்தான் அரசாங்க லோன் வாங்கி நான் கட்டியிருந்த வீட்டின் கிரகப்பிரவேசம் வந்தது. அவன் வீட்டிலிருந்து ஏழு கி.மீ.க்குக் குறையாது. நகரில் அது ஒரு தூரமில்லைதான்.  அந்த புதுமனைப் புகு விழாவுக்கு ஒரு பிள்ளையார் படம் வாங்கிக் கொடுத்தான். ஓவியத்திலான படம் அது. அதை இன்றும் எங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கிறேன் நான். ஒரு சிறந்த ரசிகனால்தான் அதைத் தேர்வு செய்ய முடியும். ஆனந்த அப்படி ஒரு அற்புதமான படத்தை எனக்குப் பரிசளிப்பான் என்று நான் நினைக்கவேயில்லை. எந்நிலையிலும் காசைப் பார்க்க மாட்டான். எதிராளியைத் திருப்திப்படுத்துவதே அவன் நோக்கமாக இருக்கும். அந்த மாதிரி ஒரு பரந்த மனசு அவனுக்கிருந்தது.

அங்கு நான் குடி பெயர்ந்த பிறகு அவனுடனான தொடர்பு பெரும்பாலும் விட்டுப் போனது என்றுதான் சொல்ல வேண்டும். நானுண்டு என் வேலையுண்டு என்று நான் இருக்க, அவனும் அவனுண்டு அவன் வேலையுண்டு என்று இருக்க ஆரம்பித்து விட்டான். இடம்தான் எங்களைப் பிரித்தது. ஆனால் அவன் எனக்குத் தர வேண்டிய பணத்திற்கு விடாமல் அவனுக்கு நான் தபால் கார்டு எழுத ஆரம்பித்தேன். நாலு வரி...நாலு வரி....என்று நினைவுபடுத்தி எழுதிப் போட்டுக் கொண்டேயிருப்பேன். எதற்கும் அவனிடமிருந்து பதில் வராது. நாலு வரி பிறகு எட்டு வரியானது. கார்டின் இரு பக்கமும் நிரப்பி பிறகு எழுத ஆரம்பித்தேன். கண்ட கண்ட கெட்ட வார்த்தைகளையெல்லாம் பிரயோகித்து எழுதினேன். வெட்கமில்லையா, சூடு சொரணை இல்லையா, நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே....என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். எதுக்கும் அசைந்து கொடுத்ததில்லை அவன். நேரில் ஒரு வார்த்தை இதைப்பற்றிக் கேட்க மாட்டான். சரியான கல்லுளிமங்கன்.

இடையில் அவன் கடன் வாங்கிய நிறுவனத்தார் அவன் வீட்டுக்கு வந்து கொடுத்த கடனுக்கு ஃபேன், டி.வி. என்று கழற்றிக் கொண்டு போய்விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். வாஷிங் மிஷின், கிரைன்டர் என்றும் கிடைத்தவரை லாபம் என்று ஒரு நிறுவனம் எடுத்துக் கொண்டு போனதாக அவன் தட்டச்சுப் பள்ளியில் படித்த ஒரு பையன் என்னிடம் கூறினான். ஒரு சினிமா அரங்கில் அந்தப் பையனைப் பார்த்த போது, எனக்கே கேட்க வேண்டும் என்று ஆவல் உந்த, விசாரித்தேன். ஏன் சார் இப்பல்லாம் வர்றதில்ல....என்று கேட்டுக் கொண்டே அவன் சொல்ல ஆரம்பித்தான். வேலை பார்த்த பையன் அவன் காதலித்த பெண்ணோடு ஓடிப் போய்விட்டதாகவும், பெற்றோர்கள் ஆனந்தின் பள்ளிக்கு வந்து கலாட்டா பண்ணியதாகவும் சொன்னான். அவங்க காதலிச்சது எனக்குத் தெரியாது என்றும் தெரிஞ்சிருந்தா தடுத்திருப்பேன் என்றும், அந்தப் பையனையே வேலையை விட்டு நிறுத்தியிருப்பேன் என்றும் ஸ்திரமாக ஆனந்த கூற அவர்கள் போய் விட்டார்கள் என்றான். இப்போது அவன்தான் பள்ளியைப் பார்த்துக் கொள்கிறான் என்றான் அந்தப் பையன். இதை அன்று நான் எச்சரித்தபோதே செய்திருக்கலாமே என்று தோன்றியது எனக்கு. தொட்டபின் பாம்பு. சுட்டபின் நெருப்பு...!

நான் போட்ட ஒரு கார்டுக்கும் எந்த பதிலும் வராத நிலையில், மற்றவர்களைப் போல் நாமும் ஒன்று செய்தாலென்ன என்று தோன்றியது எனக்கு. என் மனைவிக்குத் தெரிய நான் ஏமாந்து நிற்பது  படு கேவலமாய் இருந்தது. எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்துக்கு ஒரு டைப்ரைட்டர் மிஷினைக் கொடுத்திடு என்று போய் நின்றேன் ஒருநாள். ஆனால் அத்தனையும் ட்யூ கட்டிக் கொண்டிருக்கும் தட்டச்சுப் பொறிகள் என்றும், அல்லாதது பழசுதான் என்று சில பழையை மிஷின்களைக் காண்பித்தான். அவை புதிதாகப் பழக வருபவர்களுக்கு என்று இருந்தவை. அதில் ஒன்றை எடுத்துப் போவதனால் எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. புதிய மிஷின்களைத் தொட முடியாதபடி அதற்கு ஒரு செக் வைக்கிறானே என்றிருந்தது எனக்கு. உன் இஷ்டம், வேணும்னா எடுத்திட்டுப் போ...ஆனா டியூ கட்டலன்னு ஆளுக தூக்க வந்தா உன் வீட்டுக்குத்தான் வர வேண்டியிருக்கும் என்றான். பயமுறுத்துகிறானோ என்றிருந்தது எனக்கு. தலைக்கு மேலே வெள்ளம் போன நிலையில் இனி ஜாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என்கிற நிலைக்கு வந்து விட்டான் அவன். என்னையே ஏமாற்றும் மனநிலை.ஆத்திரம் பொங்கியது எனக்கு. பலன்? தலையைக் கொடுத்தாயிற்று. மெல்லத்தானே எடுத்தாக வேண்டும் என்றிருந்தேன் நான்.

உன் லெட்டரையெல்லாம் சேர்த்து வச்சிருக்கேன் என்றான். எம்பொண்டாட்டி படிச்சா...என்றும் கூறினான். என்ன சொன்னாங்க...? என்று எனக்குக் கேட்க விருப்பம்தான். ஆனால் கேட்கவில்லை. அவன் என்னை ஏமாற்றுகிறான் என்று என் மனதில் எண்ணம் விழுந்த பிறகுதான் நான் அப்படி கண்டமேனிக்கு எழுத ஆரம்பித்தேன். ஆனால் அவனுக்கோ எந்தச் சுரணையும் இல்லை. நானாகத்தான் ஒவ்வொரு நாள் போய்ப் பார்த்தேனேயொழிய அவன் என்னைத் தேடி அவ்வளவுதூரம் என்றும் வந்ததேயில்லை. வந்தால் ரூபாயோடு வர வேண்டுமே? அதற்கு ஏது வழி? ஒரு வகைக்கு வராதது நல்லதுதான். அவன் என் வீட்டிற்கு வருவதை ஏனோ என் மனம் விரும்பவில்லை. அதற்கான காரணத்தை என்னால் இன்னும் சரியாக ஊகிக்க முடியவில்லை. முதன் முதலாக நகையைக் கழற்றிக் கொடுத்து நண்பன் கடனை அடையுங்கள் என்று மைதிலி சொன்ன நாள் அன்று மனதில் விழுந்த புள்ளி அது. ஆனால் அதற்குப் பின் ஒரு முறை கூட ஆனந்தைப்பற்றி விசாரித்ததில்லை அவள். அவள்பாட்டுக்குத்தான் இருக்கிறாள். எனக்குத்தான் பிடிக்கவில்லை அவன் என் வீட்டில் காலடி எடுத்து வைப்பது. எதற்கும் துணிந்தவன் என்ன செய்வான் என்று யார் கண்டது? எல்லாவிதத்திலும் நான் அவனை மோசமாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன். என் மனநிலை அப்படியாகிவிட்டது.

எனது எல்லாக் கடிதங்களும் விலையற்றுப் போயின. சிலமுறை ஃபோன் பேசியதும் (அப்போது பக்கத்து மருந்துக் கடைக்குப் பேசி அவனை வரவழைப்பேன்) பலனளிக்கவில்லை. அந்தக் கடை ஆட்கள் முன் விரிவாக எதையும் பேச மாட்டான். நான் அப்புறம் பேசறேண்டா...இல்லன்னா வீட்டுக்கு வர்றேன் என்று சொல்லி உடனே கட் பண்ணி விடுவான்.

ஏறக்குறைய எனக்கு வரவேண்டிய பணத்தை நான் மறந்தே விட்டேன் என்று சொல்லலாம். இந்த மட்டுக்கும் அவன் தொடர்பு விட்டதே என்றுதான் இருந்தேன். மேற்கொண்டு வந்து அரிக்காமல் இருந்தால் சரி என்று நானுண்டு, என் குடும்பமுண்டு என்று இருக்க ஆரம்பித்து விட்டேன். மனநிலை கொஞ்சம் கொஞசமாக சமனப்பட்டு வந்தது.

இப்படியான நிலையில்தான் இன்று இந்தச் செய்தி...! வருந்துகிறோம் என்று போட்டு அவன் படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது.  சாவுக்குப் போய் வருவது என்கிற எண்ணத்தைக் கைவிட்டேன். போனால் நிச்சயம் பிரச்னை வரும். அவன் மனைவி என்னைத் திட்டி ஊரைக் கூட்டலாம். உங்களால்தான் அவர் இறந்தார் என்றும் சொல்லலாம். உறவினர்கள் கூடியிருக்கும் இடத்தில் தனியே போய் அகப்பட்டுக் கொள்வது என்பது அத்தனை புத்திசாலித்தனமில்லை என்று தோன்றியது எனக்கு. இன்னும் பணத்தைக் கொண்டா என்றால் நான் எங்கே போக?

காலைல அந்தப் பக்கமாத்தான் ஒரு வேலையா போயிட்டு வந்தேன் மச்சான்....மருந்தக் குடிச்சுச் செத்துட்டாருன்னு பேச்சு அடிபட்டுச்சு....இந்த ஸ்டாப்புல இறங்கி நம்ப கடைக்கு அடிக்கடி டீ குடிக்க வருவாருல்ல....உனக்கு ஞாபகமில்ல? அட என்னப்பா....இந்தப் பக்கத்து ஸ்கூல்ல டைப் பரிட்சை நடக்கும்ல....அப்பல்லாம் இங்கருந்துதான பார்சல் போகும்....மறந்திட்டியா?......இந்த ஸ்கூல் சென்டருக்கு அவர்தான்யா எல்லாம் கவனிப்பாரு...! sள

காலை நடைப்பயிற்சியில் சற்று தூரம் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த நான் வழக்கம்போல் டீ குடிக்க அந்தக் கடையில் நிற்க வேண்டியிருந்த வேளையில், அந்தப் பேச்சு என் காதில் விழுந்தது. பக்கத்து ஸ்கூல், டைப் பரீட்சை என்ற வார்த்தைகள்தான் அவன்தானோ என்று என்னை நினைக்க வைத்தது.

வழக்கம்போல் கிளம்பி ஆபீஸ் போய்விட்டேன் நான். ஏறக்குறைய ஆனந்தின் சாவையே மறந்துவிட்டேன் எனலாம். பணப் பிரச்னை எங்கள் இருவரின் நட்பைப் பிரித்து நிறுத்தி விட்டது. ஒருவருக்கொருவர் சண்டை, பகை என்று இல்லாவிட்டாலும், பரஸ்பரம் சந்திப்பதே வேண்டாம் என்றுதானே காலம் பிரித்துப் போட்டிருந்தது எங்களை?

பொழுது சாய்ந்து இருட்டத் தொடங்கியிருந்த வேளையில் வீட்டிற்குள் நுழைந்த போது வியர்க்க விறுவிறுக்க ஓடோடி வந்தாள் மைதிலி. இங்க பார்த்தீங்களா... சேதியை...? என்றவாறே நீட்டினாள். இப்பத்தான் ஆபீஸ்லர்ந்து நீயும் வந்தியா? என்றேன். அது ஆனந்தின் இறப்புச் செய்தி. காலையில் நான் டீக்கடையில் பார்த்த அதே செய்தி. ஆனால் வேறொரு செய்தித் தாள் அது.  அடடா...! என்பதற்கு பதிலாக ஐய்யய்யோ...! என்றது என் வாய். அது இயற்கையாய் இருந்ததா தெரியவில்லை..! இத எங்க பார்த்த...? எனக்குத் தெரியாமப் போச்சே....! என்றேன் விதிர்த்தவனாய். ஆபீஸ்ல... என்றாள். பிறகு தொடர்ந்தாள் -

தெரிஞ்சிருந்தா? என்ன பண்ணுவீங்களாம்? போய் கடனை வாங்கிட்டு வந்திடுவீங்களா? போனாப் போகுது விடுங்க.....நீங்க அங்க போகாம இருந்ததே நல்லது....என்றாள் அவள். கடன் வராமல் போனதைப் பற்றிக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை. இந்த மட்டுக்கும் தொல்லை விட்டது என்று நினைத்து விட்டாளோ என்னவோ? வாழ்க்கைல நிம்மதிதான் முக்கியம்s...பணம் ரெண்டாம் பட்சம்தான் என்றாள். அத்தோடு எல்லாவற்றையும் நான் மறந்து விட்டேன். ஆனந்தின் சாவு இயற்கையா அல்லது தற்கொலையா என்பதைக் கூட அறிந்து உறுதி செய்ய மனமில்லை எனக்கு. தினை விதைத்தவன் தினையறுப்பான், வினை விதைத்தவன்? நான் என்ன வினையை விதைத்தேன், அறுப்பதற்கு?

மைதிலிக்கும் தெரியாமல் நான் ஆனந்திற்குக் கொடுத்திருந்த இன்னொரு ஐம்பதாயிரம் ரூபாயும் போய்விட்டது என்பதை அவள் அறிய மாட்டாள். அதை இனி அவளிடம் சொல்வதாயும் உசிதமில்லை. என் சேமிப்புப் பழக்கத்தில், அது திருமணம் ஆவதற்கு முன்பாகவே என் அலுவலகத்திற்குப் பக்கத்தில் உள்ள நாங்கள் சம்பளப் பணம்  வாங்கும் வங்கியில் கணக்குத் துவங்கி, நான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த அக்கறையான சேமிப்புப் பணம். அதுவும் போயிற்று.  இப்போது அந்தக் கணக்கை உடன் மூடியாக வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தேன் நான். சில பிணக்குகள், சில கணக்குகள் வாழ்க்கையில் எப்போதுமே டேலியாவதில்லை, நேர் செய்யப்படுவதில்லை என்பதுதான் எல்லோருக்குமான நிஜம்....!!!

                              ----------------------------------------------

 

 

       

25 ஜனவரி 2022

ரயிலில் ஏறிய ரங்கன் - சிறுகதை - சொல்வனம் இணைய இதழ்-263-நாள் 23.01.2022 கதை மற்றும் ஒலிவடிவில்

 

சிறுகதை                                            ரயிலில் ஏறிய ரங்கன்





       நானும் ரொம்ப நாளா இந்த ட்ரெய்ன்ல வந்திட்டிருக்கேன். சுண்டல் வியாபாரம் பண்ணிட்டிருக்கேன். ரயில்வே ஸ்டேஷன் வாசல்லதான் வச்சு வித்திக்கிட்டிருந்தேன். பெரிஸ்ஸா வியாபாரம் ஏதும் ஆகல...எல்லாரும் பார்த்திட்டு, பார்த்திட்டுப் போறாங்களே தவிர யாரும் வாங்குறதில்ல. காலங்கார்த்தால சுண்டல்  வித்தா யாரு வாங்குவாங்க...? ன்னு வண்டி ஸ்டான்டுல இருக்கிற  தாத்தாதான் சொன்னாரு...

காலைல ஏழு நாற்பதுக்கு ஒரு ட்ரெய்ன் கிளம்புது...அஞ்சாவது ப்ளாட்பாரம் போ...அதுல ஆபீஸ் போறவுகல்லாம் வருவாங்க...அதுல ஏறிக்கோ....போய்ச் சேர இரண்டரை மணி நேரம் ஆகும். அதுக்குள்ள உன் சுண்டல்லாம் நிச்சயம் வித்துப் போகும்... வண்டிலயே எல்லாரும் காலை டிபன் சாப்பிடுவாங்க...சில பேரு மத்தியானச் சாப்பாட்டுக்கும் வாங்கிக்குவாங்க......அது மீட்டர் கேஜ் வண்டி..வெளியூர் வேலைக்குப் போறவுகளுக்காகவே ஓடிக்கிட்டிருக்கு. எல்லாம் பாஸ் வச்சிருப்பாங்க......செக்கிங்கு யாரும் வரமாட்டாங்க... நீபாட்டுக்குப் போய் ஏறி ஒரு ஓரமா குந்திக்கோ...வண்டி கௌம்பினப் பெறவு உன் வியாபாரத்த ஆரம்பி...பெட்டி பெட்டியா போய் நில்லு.   நிச்சயம் மொத்தமும் வித்துப் போகும்...ன்னாரு....

அவர் சொன்னபடியே செய்தேன்...இன்னிவரைக்கும் நல்லபடியா ஓடிட்டிருக்குன்னுதான் சொல்லணும். கலெக்டர் ஆபீஸ் பியூன்லர்ந்து பாங்கு மானேஜர் வரைக்கும் பலபேரு வருவாங்க அந்த ட்ரெய்ன்ல....ரெண்டு மூணு டாக்டர்கள் கூட வர்றாங்க...அதுல நிறையப் பேரு  வண்டிலயே ஆபீஸ் வேலயப் பார்த்திட்டு வருவாங்க......ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க மாட்டாங்க...யார் கூடவும் பேசவும் மாட்டாங்க.......எனக்கா அவுகளப் பார்க்கப் பார்க்க ஆசையா இருக்கும். நாமளும் இவுக மாதிரி ஒரு நா வருவமான்னு நெனச்சிக்குவேன்.

நாந்தான் பெரிய பள்ளிக்கூடமே போகலயே...பஞ்சாயத்துப் பள்ளில அஞ்சோட நிப்பாட்டிட்டாகளே.....எங்கப்பாருக்கு வருமானமே பத்தாது. பொழுது விடிஞ்சா சித்தாள் வேலைக்குக் கிளம்பிடுவாரு...பன்ட் ஆபீஸ் கட்டட கேட் வெளில காத்துக் கெடப்பாங்க...நிறையப் பேரு....அவுகள ஒரு வேன் வந்து ஏத்திட்டுப் போவும்...எங்கப்பாரும் அதுல ஏறிப் போயிடுவாரு....ரொம்ப வருஷமா தட்டுத் தூக்குறவராத்தான் இருந்தாரு...இப்பத்தான் கொத்தனாரா வேல பழகி இருக்காரு.... அவருக்கு ஒரு நா ஐநூறு கெடைக்கும்...எல்லா நாளும் வேல இருக்காது....அதனால வருமானம் எங்க வீட்டுக்குப் பத்தாது...அம்மா நானும் வேலைக்கு வரட்டான்னு கேட்டுப் பார்த்தாக...அப்பா மாட்டேன்னுட்டாரு....நா கொண்டு வந்து கொடுக்கிறத வச்சிக்கிட்டு, ஒரு வேளயோ, ரெண்டு வேளையோ....கஞ்சி காய்ச்சிக் குடிச்சிட்டு மானமா இருப்போம் அது போதும்னுட்டாரு...அத்தோட இன்னொண்ணும் சொன்னாரு....அதான் அம்மாவுக்குப் பயமாப் போயிடுச்சி....தலமைக் கொத்தனாரு, மேஸ்திரின்னு புதுசா வர்றவுகள அமுக்கப் பார்ப்பாங்க...அதெல்லாம் நமக்கு வேணாம்...னாரு அப்பா. அதச் சொல்லவும்தான் அம்மா பயந்திட்டாக..எதுக்கு அம்மா பயந்திச்சுன்னு தெரில.....நீ வருத்தப்படாதம்மா...நா வியாபாரத்துக்குப் போறேன்...நீதான் சுண்டல் நல்லா ருசியாப் பண்ணுவியே...போட்டுக் குடு...நா போய் வித்துட்டு வர்றேன்னேன்.......அன்னைக்கு இந்தக் கூடையத் தூக்கினவன்தான்.... ....

பார்த்திகளா....இந்த ட்ரெய்ன் கதவ யாருமே சாத்த மாட்டேங்கிறாங்க...நின்னு வேடிக்கை பார்க்குறாங்களே தவிர திரும்ப உட்கார வரும்போது கதவச் சாத்திட்டு வரவேணாம்....அப்டியேவா விட்டிட்டு வர்றது. இவுகளெல்லாம் ஆபீஸ்ல நல்லா வேல செய்வாகளா...? நானுந்தான் எத்தனவாட்டி போய்ப் போய் சாத்துவேன்....டம்மு....டம்முன்னு அடிச்சிக்கிடுது....என்னா சத்தம்.....கதவே தனியாக் கழன்டு விழுந்திடும் போல்ருக்கு....டாக்டர்தான் சொன்னாரு...போய் அந்தக் கதவச் சாத்துடா தம்பின்னு...அவர் என்னப் பார்த்து சொன்னது எனக்கு ரொம்பப் பெருமையா இருந்திச்சு....அதுக்காக எத்தன தடவை என்னால சாத்த முடியும்...பெட்டி பெட்டியாப் போறவன் நான்.... சாயங்காலம் திரும்பைல மீதி வித்திரும். எல்லாரையும் மாதிரி நானும் ராத்திரிதான் வீடு போய்ச் சேருவேன்.

பார்த்தீகளா அந்த இன்னொரு ஐயாவ.......அவரு சிகரெட் பிடிப்பாரு....ரயில்ல சிகரெட், பீடி பிடிக்கக் கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்கு....யாரு கேட்கிறா? டாக்டரே ஒரு வாட்டி எழுந்து போய்ச் சொல்லிட்டு வந்தாரு.....ஓ.கே. சார்...ஓ.கே.சார்னு பதறுனாப்ல சொல்லிட்டு அடுத்த பெட்டிப்பக்கம் போய் ஊதிட்டு வந்தாரு....அதுலர்ந்து அவர் உட்கார்ற எடத்த மாத்திக்கிட்டாரு........நமக்கென்ன வந்தது...எனக்கு சுண்டல் வித்தா சரி....அந்த ரயில்ல போறதே ரொம்ப சந்தோஷமானதுங்க...அது ஒரு காரணம் எனக்கு பிடிச்சிப் போனதுக்கு...

என்னப்போல இன்னும் சில பேரும் உண்டு. யூனிவர்சிடி ஸ்டாப்புல கொய்யா விக்குற ஒரு அம்மா ஏறும்...நல்ல குண்டு குண்டு கொய்யாவா இருக்கும். செவப்புக் கொய்யா வேற வச்சிருக்கும். அத வெல ஜாஸ்தியாச் சொல்லும்...ரொம்பக் கறாரு அந்தம்மா....நானாச்சும் ஒரு கை சுண்டல அள்ளிப் போட்ருவேன்...அது பைசா குறைக்காது...சொன்னாச் சொன்னதுதான்... கொய்யாவ பூப்போல நறுக்கி அப்டியே உள்ளாற மொளகாப் பொடியத் தூவிக் கொடுக்கும்....அதப் பார்க்கவே நாக்குல தண்ணி ஊறும்...இந்த்ரா..வாங்கிக்கோன்னு யாராச்சும் ஒரு துண்டு கொடுப்பாக...அம்புட்டுத்தான். நா என்னைக்கும் காசு கொடுத்து வாங்கினதுல்ல....விற்கிற காசை அப்டியே அம்மாட்டக் கொண்டு கொடுக்கணும் எனக்கு. அப்போ அம்மா மொகத்துல ஒரு சந்தோஷம் வருமே...அதுதான் எனக்கு வேணும்....என் தங்கம்...என் தங்கம்னு என்னக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுப்பாங்க...அதவிடவா இந்தக் கொய்யா டேஸ்டு.....?

அது போல போளி விக்குறவரு ஒருத்தர் வருவாரு....என்னடாது....இப்டி போட்டி அதிகரிச்சிட்டே போகுதேன்னு பயம் வந்திடுச்சி எனக்கு....அவரானா தேங்கா போளியா, பருப்பு போளியான்னு கேட்டுக் கேட்டு வித்துத் தள்ளிடுவாரு....அதெல்லாம் அப்பப்ப திங்கலாமேயொழிய சாப்பாட்டுக்கு வச்சிக்க முடியாதுல்ல...அதுக்கு என் சுண்டல வாங்கித்தான ஆகணும்....அதுனால என் பொழப்புல இன்னைவரைக்கும் மண்ணு விழல....ஏதோ நிக்காம ஓடிட்டிருக்கு....இந்த ட்ரெய்ன் மாதிரி....!

அந்த ரயிலிருக்கே...அது ஒரு லொடக்கு...வண்டி...எங்க எதுக்காக நிக்குதுன்னே தெரியாது....திடீர்னு ஆட்டு மந்தை குறுக்கே போய்ட்டிருக்கும்....மாடுகளா தண்டவாளத்துல படுத்துக் கெடக்கும்....என்ன உறாரன் அடிச்சாலும், அலறினாலும் நகரவே நகராது. வண்டிய நிறுத்திப்புட்டு டிரைவரும், லைன் மேனும்...ஓடிப் போய் வெரட்டுவாக...பக்கத்துக் குடிசைக, வீடுகளப் பார்த்துக் கத்துவாங்க...

ஒங்களுக்கெல்லாம் அறிவே இல்லயா...இப்டி மாடுகள அவுத்து விட்டா...அதுக செத்துத் தொலைஞ்சிதுன்னா யாரு பொறுப்பாகுறது....எத்தனை வாட்டி சொன்னாலும் தெரியாதா ஒங்களுக்கு....தெனம் இதே ரோதனையாப் போச்சு...ஒங்களோட...இனிமே இப்டிப் படுத்துக் கெடந்திச்சின்னா ரயில்வே போலீசக் கூட்டிட்டு வந்து....இழுத்து வேன்ல அனுப்பிச்சிடுவேன்.னு.. என்னென்னவோ சொல்லி மெறட்டித்தான் பார்ப்பாரு....ஆனா யாரும் கேட்குறதில்ல.

.மறுநாளும் மாடுக அப்டித்தான் கெடக்கும்...அதுல இன்னொரு பிரச்னை என்னன்னா...சாயங்காலம் வண்டி திரும்பைல....அங்க வண்டி வரும்போது பொழுது சாய்ஞ்சு இருட்டு கவியுற நேரமா இருக்கும். அப்போ சர்ரு...சர்ருன்னு கல்லுக வந்து விழும் வண்டில....நல்லா பெரும் பெரும் சரளக் கல்லுக...ஒரு பத்துப் பொடிப் பசங்க...நின்னிட்டு விருட் விருட்னு எறிஞ்சிட்டே இருப்பானுங்க...ஒருவாட்டி ஒரு வாத்தியாருக்கு மூக்கே தெறிச்சிப் போச்சு. ரத்தமானா கொட்டுது....துண்டை வச்சு அமுக்கியும் நிக்கல....அப்டியே மயங்கிட்டாரு அவுரு....அதுலர்ந்து சன்னக் கதவல்லாம் சாத்திடுவாங்க...அந்த ஏரியா தாண்டினதும் தெறந்துக்குவாங்க...போலீஸ்ல சொல்லி ஒருதரம் வண்டிய விட்டு எறங்கி வெரட்டுனாங்க....ஓரே ஓட்டம்....ஓடியே போய்ட்டாங்க அந்தப் பசங்க...

 இதுல ஒரு வேடிக்க இருக்கு...அதச் சொன்னா சிரிப்பீக...வண்டி திடீர் திடீர்னு நிக்குறதுக்குக் காரணமாயிருக்கு? தண்டவாளம் ரெண்டு பக்கத்துலயும் வெள்ளரிக்கா போட்டிருப்பாங்க...பிஞ்சு பிஞ்சா வௌஞ்சு பள பளன்னு .....என்னை எப்பப் பறிக்கப் போறன்னு கேட்குற மாதிரி இருக்கும்...அதென்ன ரயில்வே எடந்தான...சும்மாக் கெடக்குறத...இப்டிப் பண்ணினா என்னங்கிற மாதிரி கிராமத்து ஆளுக பயிரிட்டிருப்பாங்க...போனது போக மிச்சம்னு நல்ல வௌச்சலுக்குப் பெறவு பறிச்சு வியாபாரம் பண்றது....தலைய வெளிய நீட்டி எதுக்காக வண்டி நின்னுச்சின்னு பார்த்தா...ரயில்வே ஆளுக...தண்டவாளத்துக்கு கல் அணைக்க வேலைக்குன்னு  வந்திருக்கிறவுகன்னு...எறங்கி அறுவடை பண்ணிடுவாங்க....ஏய்...ஏய்...கொஞ்சம் விட்டு வைங்கய்யா...பாவம்....னு டிரைவர் கத்துவாரு....

ஒரு நாட்டு வைத்தியர் வண்டில வர்றதப் பார்த்திருக்கேன்...அவரு என்னடான்னா...இந்தச் செடி...அந்தச் செடின்னு மருந்துச் செடியாக் கண்டு பிடிச்சு...வேரோட பிடுங்கிட்டிருப்பாரு...மருந்து தயாரிக்கன்னுவே இவரு தெனமும் இந்த வண்டில வர்றாரோ..? எல்லா நேரமும் வண்டி கண்ட எடத்துல நிக்கிறதில்லயே...அப்புறம் எப்டி இவருக்கு வேண்டியதப் பறிப்பாருன்னு ரோசனை போகும் எனக்கு....நெறயப் பேரு...பார்த்தீங்களா சார்...இதுதான் ராமர் துளசி....இது எங்கயும் கிடைக்காது....காட்டுத் துளசிதான் கெடைக்கும்...இதுதான் ராமர் துளசி...கொண்டு போங்க..போய் வீட்டுல வைங்க....தெனம் ரெண்டு எலையப் பறிச்சு சாப்பிடுங்க...ஒடம்புக்கு நல்லது...ன்னு நண்பர்களுக்கு பிடுங்கிக் கொடுப்பாங்க...தன்னிச்சையா வளர்ந்த செடியா...அவ்வளவு மணம் இருக்கும் அந்த துளசில... ரயில் அலறிட்டுக் கௌம்புறதே சூப்பரா இருக்கும்...ஆளாளுக்கு அடிச்சுப் பிடிச்சு ஏறுவாங்க....உறாரன்தான் அலறுமேயொழிய வண்டி மெதுவாத்தான் நகரும்.நம்ம வசதிக்கு விட்ட வண்டிய்யா...நம்மள ஏத்தாமப் போயிறுமா....ன்னு சொல்லிச் சிரிச்சிக்குவாங்க...

 பசி தாங்காம பல பேரு காலைல எட்டு மணிக்கே பொட்டணத்த அவுத்துடுவாங்க...தோச, இட்லி, உப்புமான்னு கொண்டு வந்திருப்பாங்க....ரயில் பெட்டி பூராவும் சட்னி, சாம்பார் மணமா இருக்கும்...அந்த நேரம்தான் எனக்கு விக்கிற நேரம்....சுண்டல்...சுண்டல்...பட்டாணி சுண்டல்....பாசிப்பருப்பு சுண்டல்...கடலப்பருப்பு சுண்டல்னு போய் நிப்பனா.... நிறையப் பேரு வாங்கிடுவாங்க...அதுலயும் குறிப்பா பட்டாணி சுண்டல்னா ரொம்பப் பேருக்குப் பிடிக்கும்....உங்கம்மா நல்லா வைக்குறாகடா...ரொம்ப டேஸ்ட்... பெரும்பாலும் பட்டாணி சுண்டல்தான் கொண்டுட்டு வருவேன்...அதான் சீக்கிரமா வித்துப் போகும்...என்னா ஒரு சங்கடம்னா...இன்னம் ரெண்டு போடு...ஒரு கை போடுன்னு அனத்தி எடுத்திடுவாங்க...நானா பொட்டணம் போட்டு நீட்டுறது...திருப்தியே ஆகாது ஒருத்தருக்கும்...ஒருவேளை நா சின்னப் பயங்கிறதுனால என் கைல கொஞ்சமா வருதோன்னு எனக்கே சந்தேகம் வந்திடும்...ரெண்டு எடுத்துப் போடலேன்னா பிறகு வாங்க மாட்டாகளோன்னு பயம் வரும். எல்லாரும் இப்டிச் சொல்றாகளேம்மா...நீ பாரு...ன்னு அம்மாட்டக் கூட ஒரு நா நாலஞ்சு பொட்டணம் போட்டுக் காண்பிச்சேன்....சரியாத்தாண்டா இருக்கு என் கண்ணு....அவுக அப்டித்தான் கேட்பாக...நீ சின்னப் பயல்ல...ஏமாத்தி வாங்கப் பார்ப்பாக...அன்பா கேட்டுப் பார்ப்பாக....யார்ட்டயும் சண்ட போட்டுறாத கண்ணு....அப்புறம் வியாபாரம் படுத்துப் போகும் ராசா...கவனமா இருந்துக்க....எந் தங்கம்ல....

அம்மா சொல்வது மிகச் சரி என்றுதான் என் மனதுக்கு சொன்னது. அந்த ரயில்ல வர்ற அத்தன பெட்டிக்காரவுகளும் எனக்கு ஃப்ரென்ட்ஸ்.....அவுகளப் பிடிச்சி என்னைக்காச்சும் ஒரு வாட்ச்மேன் வேலையாச்சும் வாங்கிப்புட மாட்டேன்? அட...கூட்டிப் பெருக்கி, தண்ணி எடுத்து வைக்கிற வேலையாச்சும் கிடைக்காமயா போய்டும்...? அஞ்சாங் க்ளாஸ்வரைக்கும் படிச்சவன்தான நான்...பெறவுதான போதுண்டான்னுட்டாக வீட்ல...எட்டு க்ளாஸ் படிக்கணுமாமுல்ல...பியூனாகுறதுக்கு....வாட்ச்மேன் ஆகி அப்புறம் உயருமாமுல்ல...அதுல பியூன் ஆகலாம்னு ஒருத்தர் சொன்னாரு....அந்த அய்யா கூட கலெக்டர் ஆபீஸ்ல தாசில்தாரா இருக்காருன்னு சொன்னாங்க....அவுரு உடம்பு சரியில்லாதவரு போல்ருக்கு....ஒரு நா சாயங்காலம் வீடு திரும்பறச்சே...அவுரு திடீர்னு சரிஞ்சி விழுந்திட்டாரு....கையும் காலும் விலுக் விலுக்குன்னு இழுத்துக்குது...கூட இருந்தவுகளெல்லாம் சேர்த்துப் பிடிச்சி....சார்...சார்னு ஆதரவா அணைச்ச அன்னைக்கு அதப் பார்த்து என் கண்ணு கலங்கிப் போச்சு.....எவ்வளவு ஒத்துமையா இருக்காங்க....அந்த ஐயா மயக்கம் தெளிஞ்சி எழுந்தப்போ..மயங்கிட்டனா...ன்னு கேட்டாரு...பார்க்கவே பரிதாபமா இருந்திச்சி....வாய்ல நுரை வழிஞ்சி..அத அவர் துடைச்சிக்கிட்டே ரொம்ப நன்றின்னாரு...சுத்தியிருக்கிறவுகளப் பார்த்து...

..அப்டியே அவரப் படுக்க வச்சி. தண்ணி குடுத்து, விசிறி விட்டு ஆசுவாசப்படுத்தி......ஊர் வந்ததும் ஒரு ஆட்டோ பிடிச்சி ரெண்டு மூணு பேரு வீட்டுல கொண்டு விட்டிட்டு  வந்தாக...அப்புறம் ஸ்டேஷனுக்கு வந்து ராத்திரி பன்னெண்டு மணியப் போல அவுகவுக வண்டிய எடுத்திட்டு வீடு போனதாச் சொன்னாக....காலைல ஸ்டேஷன் வர்றதுக்கு வண்டி வேணும்ல....

அந்த ஐயாவப் பிடிச்சா காரியம் ஆகும்னு சொன்னாங்க...நா சின்னப் பயலால்ல இருக்கேன்...இன்னும் நாலஞ்சு வயசாகணும்டா...பொறு...பொறு...பார்த்து செய்வோம்னார் ஒரு சார்...அவரு ஐயரு..... விபூதி பூசிட்டு  நெத்தில சந்தனம், குங்குமமெல்லாம் வச்சிட்டு பளிச்சினு வருவாரு...எல்லார்ட்டயும் கலகலன்னு பேசுறவர் அவருதான். அவரு இருந்தா அந்தப் பொட்டியே சிரிப்பும் கூத்துமா இருக்கும்....சதா எதாச்சும் புஸ்தகத்தப் படிச்சிட்டே வருவாரு..அதுவும் உண்டு....ஒண்ணு சொல்ல மறந்திட்டனே...அந்த ரயில்ல மொதப் பெட்டிலர்ந்து, கடைசிப் பெட்டி வரைக்கும்....படிக்கிறதுக்கு புஸ்தகம் சப்ளை பண்றவரு அவருதான்...எலக்கியப் பத்திரிகையாம்...மாசா மாசம் வருமாம்....வெலையப்பார்த்தா நாப்பது, அம்பதுன்னு இருக்கும்...எதுக்கு இம்புட்டுக் காசு செலவு பண்ணி இத்தனையையும் வாங்குறாருன்னு தோணும்....வண்டி ஊர்ல கிளம்பறதுக்கு முன்னாடியே நிறையப் பேரு வந்து வந்து அவர்ட்ட புத்தகத்த வாங்கிட்டுப் போயிடுவாங்க...சாயங்காலம் தர்றேன் சார்...நாளைக்குத் தர்றேன் சார்ன்னு சொல்லி எடுத்திட்டுப் போயிடுவாங்க....ஆபீஸ்ல வச்சிப் படிப்பாங்களோ...ஆபீஸ்ல வேலதான பார்க்கணும்....?

அது போக வெவ்வேற புத்தகங்களும் அவர் கூட வரும். அதெல்லாம் வாங்கி என்னன்னாவது பார்க்கணும்னு எனக்குக் கொள்ளை ஆசை. சுமக்க முடியாம ஒரு ஜோல்னாப் பைல போட்டுட்டு வருவாரு. அதச் சுமந்து சுமந்து அவரு தோளு சரிஞ்சே போச்சோன்னு தோணும். அந்த ரயில்ல எல்லாரும்  புஸ்தகம் படிக்கிற பழக்கத்த ஏற்படுத்தினவரு அவுருதான். கண்ணாடி போட்டு, முடி நரைச்சு...இன்னொண்ணு.... அந்த நரைச்ச முடிக்கு சாயம் பூசி நா பார்த்ததேயில்ல...கூட வர்றவுக எல்லாரும் அப்டித்தான் வருவாக...கன்னங்கரேர்னு...அவுரு மட்டும் வெள்ளவெளேர்னு....தும்பப் பூவா பறந்திட்டிருக்கும் முடி..

 அந்த ஐயா ஒரு புத்தக்கத்தப் படிச்சு முடிச்சிட்டா....அன்னைக்கு அதப் பத்தி கூட இருக்கிறவங்ககிட்டச் சொல்ல ஆரம்பிச்சிடுவாரு..போச்சுடான்னு வெலகிப் போறவங்களும் உண்டு...ரொம்பவும் ஆசையாப் படிப்பாரு போல்ருக்கு....அவுரு சொல்றதக் கேட்கணுமே...அப்டியே சினிமா மாதிரி இருக்கும்....ரொம்ப ஞாபக சக்தி அவருக்கு....இப்டி மனசுல இருக்கிறத மழையாக் கொட்டுறாரேன்னு எனக்கா அதிசயமா இருக்கும்....கண்ணு கலங்கச் சொல்லுவாரு....கேட்குறவுகளுக்கு அது சினிமாப் படமா கண் முன்னால ஓடும்...கதையெல்லாம் வேறே எழுதுவாராம் அவுரு....இதுல வந்திருக்கு...அதுல வந்திருக்குன்னு பெருமையா எல்லார்ட்டயும் காண்பிப்பாரு...அப்டியா...ம்பாகளே தவிர...யாரும் உடனே வாங்கிக் கையோட படிச்சி நா பார்த்ததில்லே...இம்புட்டு ஆசையாச் சொல்றாரு.. பார்த்திட்டுப் பார்த்திட்டுத் திருப்பிக் கொடுத்தா எப்டின்னு தோணும் எனக்கு. படிக்கிற பொறுமை அங்க யாருக்கும் இல்லன்னு தோணிச்சு....

அவருதான் அந்த டாக்டர்கிட்ட விடாமப் பேச்சுக் கொடுக்கிறவரு....டாக்டரும் அந்த ஐயா கிட்டதான் பலதும் சொல்வாரு...ஒரு நா...இந்தா பார்த்தீங்களா...போலி டாக்டர்கள் லிஸ்ட்னு ஒரு பேப்பரக் காண்பிச்சாரு....இவ்வளவு பேரா....? எங்க...எந்த ஊர்ல....?  மாவட்டத்துலயா....இல்ல ஒரு ஊர்ல மட்டுமான்னு அந்த ஐயா கேட்டாரு.....டவுன்ல மட்டும்- இங்க மட்டுமே இத்தன பேரு இருக்கிறாங்க....ன்னு அவுக அத்தன பேரையும் கண்டு பிடிச்சிட்டதாவும் போலி கிளினிக்குகள மூட வச்சிட்டதாவும் சொன்னாரு...இவருக்கு எதுக்கு இந்த வம்புன்னு எனக்குத் தோணிச்சு....ஆனா அவருக்கு வேலையே அதுதானாம்...அரசாங்க உத்தரவாம்...அவரென்ன பண்ணுவாரு...சொன்னதச் செய்யத்தான அவுரு.........இந்தப் பெரிய டவுன்லயே இத்தன பேரு போலியா இருந்தாகன்னா...பெரிய பெரிய சிட்டில, மெட்ராஸ் மாதிரி பெரிய நகரத்துல  எவ்வளவு பேர் இருப்பாக...அவுகளெல்லாம் எப்டி ஒழிக்கிறதாம்?னு நா நினைச்சிக்கிட்டேன். படிக்காத இவுக எப்டி வியாதிக்கு மருந்து கொடுக்கிறாங்கன்னு தோணும்...

 அந்த டாக்டரய்யா...ஒரு வாட்டி தன் கோஷ்டியோட கண்ணகி கோயில் திருவிழாவுக்கு மருத்துவ குழுன்னு போனதாகவும், வழி மாறி, காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டு அவஸ்தைப் பட்டுப் போயி கடைசில ஏதோ ஒரு காட்டு இலாகா ஜீப் வந்து காப்பாத்தினதாவும் அனுபவத்தச் சொன்னாரு...அசல் சினிமாப் பார்க்கிறது போலவே இருந்திச்சி அன்னைக்கு.... யானை வந்து போன தடத்தப் பார்த்ததும், அது சாணி போட்டிருக்கிறது சூடா இருந்ததுனால அப்பத்தான் அந்த எடத்தக் கடந்து போயிருக்குன்னும் தெரிஞ்சி ஒளிஞ்சி, மறைஞ்சி இருந்த எடத்தைச் சொன்னதும், அங்க அவுக அறியாம அட்டை ஒடம்புல ஏறிக் கடிச்சிட்டிருந்ததும், ரத்தம் உறிஞ்சி, அதப் பிரிச்சி எறிய முடியாமக் கஷ்டப்பட்டதையும் அவுரு சொன்னப்ப, செவப்பா கொழு கொழுன்னு இருக்கிற டாக்டரு என்ன பாடு பட்டிருப்பாருன்னு எனக்கு பரிதாபமா இருந்திச்சி.....சனங்களுக்கு மருத்துவம் பார்க்கப் போன குழுவுக்கே மருத்துவம் பார்க்க வேண்டியதாயிடுச்சின்னு அவரே சொல்லிச் சிரிச்சிக்கிட்டாரு...ஆனா அது மறு பிறப்புத்தானுங்க...ன்னபோது அவர் கண்ணுல இருந்த பயம்...! அவரும் மனுஷன்தான....ன்னு நெனச்சிக்கிட்டேன்....

பஸ்ஸூக்குத்தான் அங்கங்க ஸ்டாப்பு உண்டு...ரயிலுக்கு ஸ்டாப்பு உண்டா? பார்த்திருக்க மாட்டீங்க... ஸ்டேஷன்தான உண்டு...ஆனா நாங்க போகுற அந்த ரயிலுக்கு ஸ்டாப் உண்டு...அதாவது கலெக்டர் ஆபீஸ் ஸ்டாப்...ஊருக்குள்ள நுழையும்போதே ஆரம்பத்துலயே கலெக்டர் ஆபீஸ் கட்டடம் வந்திடும்...அதுக்கு நேரா வண்டி நிக்கும். அங்க வேல பார்க்குறவுக...அப்புறம் அந்தப் பகுதில இருக்கிற மத்த ஆபீசுல வேல பார்க்குறவுக இப்டி நிறையப் பேரு அங்கயே எறங்கிடுவாங்க....ஏறக்குறைய வண்டி காலியாகிடும்...

காலைல போற அந்த ரயிலு....ஸ்டேஷன்லயேதான் நிக்கும். சாயங்காலம்தான் திரும்பும். அப்போ கடைசி ரெண்டு பெட்டில ஏலக்கா மூட்டைய ஏத்திக்கிட்டு வரும்.  அடிக்கிற ரயில் போக்குக் காத்துல வண்டி பூராவும் ஒரே ஏலக்கா மணம் கம கமன்னு வீசும்....அந்தச் சாயங்காலப் பயணத்தோட சுகமே தனிதான். நாந்தான் சாப்பாடு கட்டிக்கிட்டுப் போயிடுவேன்ல....கலெக்டர் ஆபீஸ்ல இறங்குறவுகளோட நானும் சேர்ந்து இறங்கிக்குவேன். கலெக்டர் ஆபீஸ்லவும் சுண்டல் வியாபாரம் உண்டு. அதான் ரெண்டு தூக்குல கொண்டு போறனே?...அம்மாட்ட நாந்தான் சொன்னேன் அந்த ஐடியாவ....பாவம் அம்மா...அதுக்காக ராத்திரியே பருப்பு ஊறப்போட்டு காலைல நாலு மணியப்போல எழுந்து சுண்டல செய்து வைக்கும். அப்பத்தான நா ஏழுக்குள்ளாற கொண்டு போக முடியும். அலைச்சதான்...அதுனால என்ன...ஊர்ல ரயில்வே ஸ்டேஷன்லயே உட்கார்ந்திருந்தா... ஒரு தூக்கு சுண்டல் தீரவே மதியத்துக்கு மேல ஆயிடுமே...சமயங்கள்ல மிஞ்சியும் போயிடுமே...ஊசிப் போச்சுன்னா வேஸ்ட்தான...ஆனா இது க்யாரண்டி... சுமக்க முடியாதுதான்...வேறே வழி...தீர்ந்து போனப்புறம் காலித் தூக்குதானேன்னு நினைச்சு சமாதானப்படுத்திக்குவேன்.....

....ஒரே மாதிரியே போயிட்டிருக்குமா...ஏதாச்சும் வேறே வரத்தான செய்யும்....நெனச்சாப்லயே வந்திடுச்சிங்க...ஆனா இப்டியா வினையா வரணும்....?

ச்சு....இப்போ அந்த ரயில நிறுத்திப் புட்டாக திடீர்னு....என் பொழப்பே கழண்டு போச்சு...பழைய குருடி கதவத் தெறடின்னு ரயில்வே ப்ளாட்பாரத்துலதான் உட்கார்ந்திட்டிருக்கேன்...அதுல போயிட்டிருந்தவுக எல்லாரும் இப்போ பஸ்ல போறாக....மூணு மாசத்துக்கு வெறும் இருநூறு ரூபா கொடுத்திட்டிருந்தவுக...இப்போ ஒரு நாளைக்குப் போக வர எழுபது கொடுக்கிறாங்க....என்னாச்சு செலவு.?...ஏதோ அகல ரயில்பாதை போடுறாங்களாம்...சொல்லிக் கிட்டாக...மூணு மாசத்துக்கு மேல ஆச்சு...வேல ஒண்ணும் ஆரம்பிச்ச மாதிரித் தெரில....அந்த அண்ணனுக யாரையும் இப்பப் பார்க்க முடியறதில்ல...எல்லாரும் எவ்வளவு அன்பானவுக....பஸ் ஸ்டான்டு எங்கயோ இருக்கு...அதனால யாரும் இந்தப் பக்கம் வர்றதில்ல...என் கண்ணுல படுறதும் இல்ல....என் சுண்டல் கிடைக்காம ஏங்குவாங்களேன்னு இருக்கு எனக்கு...! ஒரு நாளாவது அங்க போய் எல்லாரையும் பார்த்திட்டு வரணும்னு தோணுது....

ஆனா ஒண்ணு பாருங்க...அந்தக் கடைசி நாள் என்னால மறக்கவே முடியாதுங்க....எங்கம்மா செய்த புண்ணியம்தான் நான் அன்னைக்குத் தப்பிச்சது....என்னை மாதிரியே முறுக்கு, தட்டை, அப்பம், அதிரசம்னு  வித்திட்டு வந்த இன்னொரு பய.... எதிர்பாராம  மாட்டிக்கிட்டான்....என்னைக்குமில்லாம அன்னைக்கு திடீர்னு டி.டி.ஆர் வந்துட்டாரு....அவர அப்டித்தான் எல்லாரும் சொன்னாக...அந்த ஞாபகத்துல சொல்றேன்...கூட்டமான கூட்டம்...ஏதோ கோயில் திருவிழாவாம்...சனமானா எக்கச் சக்கமா ஏறிப் போச்சு....அந்த நெரிசலப் பார்த்தாலே எல்லாரும் டிக்கெட் எடுத்திருப்பாகளான்னு நிச்சயம் சந்தேகம் வரும். பாதிக்கு மேல எடுத்திருக்க மாட்டாக...வண்டிலயானா ஒரே கூச்சல் கொழப்பம்....மால போட்டுக்கிட்டு, மஞ்சத் துணி கட்டிக்கிட்டு, வேலும் கம்பும் எடுத்துக்கிட்டு...எந்தச் சாமிக்கு இந்தப் பூசன்னு பலரும் கேட்டுட்டிருந்தாங்க...போதாக் கொறைக்கு ஆடு, கோழின்னு வேறே ஏத்தியிருந்தாங்க...ஏத்த விடமாட்டாகளே...எப்டி இது நடந்திச்சுன்னு ஆளுக்கு ஆள் கேட்டிட்டிருந்தாக....பின்ன எப்டிக் கொண்டுட்டுப் போறதாம்? ஒரு நாளைக்குக் கொண்டு போனா இவுக ரயிலே நஷ்டப்பட்டு போகுமோ? அட போய்யா...ன்னு யாரோ எடுத்தெறிஞ்சு பேசிட்டிருந்தது காதுல விழுந்திச்சு....வழில ஏத்தியிருப்பாகளோன்னு பேச்சு....இருக்கிற கூட்டத்துல ஆள வெளியேத்துறதா, அதுகள வெளியேத்துறதான்னு சொல்லி ஒரே சிரிப்பு, கும்மாளம்....

அந்தக் களேபரத்துல நா அன்னைக்கு எப்டித் தப்பிச்சேன்னு எனக்கே தெரில. டிக்கெட் செக் பண்றவர் கண்ணுல நா படவேயில்ல....ஆனா அந்த முறுக்கு விக்கிற பய  வசமா மாட்டிக்கிட்டான்.....டி.டி.ஆரப் பார்த்திட்டு பயந்து நடுங்கி வண்டிக்குள்ளயே பிடி படாம ஓட ஆரம்பிச்சான்....நில்றா...நில்றா....ன்னு பின்னாடியே வெரட்டினாரு அவுரு...எங்கயாவது விழுந்து தொலைக்கப் போறான்னு கூட விரட்டியிருக்கலாம்தான்...என்ன நினைச்சானோ....கூடைய அப்டியே வண்டில போட்டுட்டு ஒரே தாவு.....ஓடுற வண்டிலர்ந்து வெளிய குதிச்சிட்டான்.....ஒரே செடி கொடி..சரளைக் கல்லு.முள்ளு..பொதரு...உருண்டு...உருண்டு....உருண்டு...என்னானான்? யாருக்குத் தெரியும்?

.வண்டியானா கடந்து போயிடுச்சி....கதவுப் பக்கம் நின்னு அவரானா கோபத்தோடவும் பயத்தோடவும் பார்த்திட்டே நின்னாரு....வண்டிய நிறுத்தவும் வைக்கல....நிறுத்தினா பிரச்ன பெரிசாயிடும்னு நினைச்சாரோ என்னவோ...? இத்தன சனத்துக்கு நடுவுல மாட்டிக்கிட்டா நிலமை என்னாவுறது?

என்னாச்சு...என்னாச்சுன்னு நம்மாளுக எல்லாரும் எழுந்து எட்டிப் பார்க்க ஆரம்பிச்சாங்க.. அம்புட்டுத் தலயும் சன்னல் வழி வெளில....யாரோ  சின்னப் பையன் வண்டிலர்ந்து குதிச்சிட்டானாம்...டி.டி.ஆர் வெரட்டினாராம்...பயந்திட்டுக் குதிச்சிட்டான்.....போல....யாருன்னு தெரில.....

ஐயையோ...வண்டி ஸ்பீடால்லங்க இருந்திச்சி....ஆளு பொழச்சிருப்பானா...? பயங்கரமா அடி பட்டிருக்குமே...!

என்னாச்சு தெரிலயே....? அடக் கடவுளே....தெரிஞ்சிருந்தா நாம சொல்லியிருக்கலாமேங்க...டிக்கெட் கூட எடுத்திருக்கலாமே...அதுக்குள்ளே ஏன் வெளில குதிச்சான்...? யாரு அந்தப் பய...? இந்தக் கூட்டத்தோட வந்தவனா?

புதுப் பையங்க...அரண்டுட்டாம் போல....

வழக்கமா சுண்டல் விக்கிற பையனா இருக்கப் போறாங்க...நல்லா பார்த்தீகளா....?

யாரு...ரங்கன்தானே....?

என்னது... ரங்கனா...? யாரச் சொல்றீங்க நீங்க...?

அட...அந்த சுண்டல் விக்கிற பயதாங்க...அவன் பேருதான் ரங்கன்....தெரியாதா உங்களுக்கு...? சரியாப் போச்சு....

ஆஉறா...அழகாப் பேரு வச்சிருக்கார் பாருங்க அவங்கப்பா...!..படிக்காத மேதை ரங்கன் ஞாபகம் வருது...!.....அந்தப் பய வண்டிலதான் இருக்கான்....அந்த சைடு, கூட்டத்துல ஒண்டியிருக்கான்.....இவன் புதுசு.....-

வர்கள் பேசிக் கொண்டது காதில் விழ, அது  கேட்டு டிக்கெட் சரிபார்ப்பவர் திரும்பவும் வந்து விடுவாரோ என்று பயந்து ஒடுங்கியிருந்தேன் நான். அதுநாள் வரை நானே வாய் விட்டுச் சொல்லாத என் பெயர் யாருக்கோ தெரிந்திருக்கிறதே...எப்படி...? என்றேனும் யாரிடமேனும் பேச்சு வாக்கில் என்னை மறந்து சொல்லியிருப்பேனோ? ஞாபகமே இல்லை....!

ரயிலே...ரயிலே...ரயிலே....கர கர கரவெனச் சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலே....- அப்பா பாடிக்கொண்டே இருப்பாரே... இந்தப் பழைய ரயிலும் அப்படித்தானே போகுது...-

அந்த இன்னொரு சிறுவன் விட்டுச் சென்ற சரக்குக் கூடை சீந்துவாரின்றி அநாதையாய் மூலையில் இருந்தது. பையன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை. வண்டி சில மைல் தூரம் கடந்திருந்தது. அதைப்பற்றி பிறகு யாரும் இப்போது பேசவுமில்லை. ஆனால் ஒரு அமைதி குடியிருந்ததை உணர முடிந்தது.

அன்றோடு என் வியாபாரமும் முடிந்தது. பிழைப்பில் மண் விழுந்தது. அந்த ரயில் ஓடிக் கொண்டிருந்த நாட்களில் காலையில் வண்டி கிளம்பியபோது பின்புற வாசல் கேட்டிலிருந்து  ரயில்வே தண்டவாளங்களுக்குக் குறுக்கே எதையும் கவனிக்காமல் ஓடி எங்கள் வண்டியைப் பிடிக்க வந்த வழக்கமான ஒரு ஊழியர்....பிளாட்பாரத்து பக்கச் சுவருக்கும் வண்டிக்கும் இடையில் நெருக்குதலாய் மாட்டிக் கொண்டதும், அவர் வயிறு அப்படியே அறுபட்டு அந்த இடத்திலேயே அவர் தலை  சாய்ந்ததும்....அப்போதும் எங்கள் வண்டி  அதனை அறியாமல் நிற்காமல் போய்க் கொண்டிருந்ததும், பலரின் குரல்கள்....சம்பந்தம்...சம்பந்தம்...ஐயோ சம்பந்தம்...இப்டி மாட்டிக்கிட்டியே....என்று  அலறியதும்.....அடுத்தாற்போல உள்ள கல்லூரி ஸ்டாப்பில் நிறையப் பேர் இறங்கி அவரைப் பார்க்க ஊர் திரும்பியதும்...-கண்ணீரும் துக்கமுமான என் உடன் பிறவாச் சகோதரர்களின், அண்ணன்மார்களின்,  பெரியவர்களின் அந்த நாட்கள்தான் இப்போதும் மறக்காமல், மறையாமல்  என் நினைவில் வந்து கொண்டேயிருக்கின்றன.

                           -------------------------------------------------------------