30 ஜனவரி 2022

சிறுகதை “பிணக்கு என்கிற வினைச்சொல்” - ்கல்கி வார .இதழ் - 28.01.2022

 

 

         சிறுகதை                  “பிணக்கு என்கிற வினைச்சொல்”      





       ன் நண்பனோட இறப்புச் செய்திய பேப்பர்ல பார்த்ததும் அதிர்ச்சியாத்தான் இருந்திச்சு எனக்கு. ஆனா நா அதை யார்ட்டயும் சொல்லல. குறிப்பா என் பெண்டாட்டிகிட்ட. என்னிக்கும் போல ஆபீசுக்குக் கிளம்பிட்டேன். ஆனா மைதிலிகிட்ட அந்தச் செய்தியைச் சொல்லாதது எனக்கு மனசுக்குள்ள உறுத்திக்கிட்டேதான் இருந்திச்சு. நல்லவேளை...வீட்டுல தினசரி வாங்குறதில்லை. வாங்கியிருந்தா நிச்சயம் அவளுக்கும் செய்தி தெரிஞ்சிருக்கும். வீடே களேபரமாகியிருக்கும். நான் பதில் சொல்ல முடியாமத் தலை குனிஞ்சி கிடந்திருப்பேன். இல்லன்னா கோபத்துல காட்டுமாட்டுக்குக் கத்தியிருப்பேன். வேறென்ன தெரியும் உங்களுக்குன்னு அவளும்  சொல்லி அழ உட்கார்ந்திருப்பா...!

      அவ கத்துனான்னா அதுல நியாயம் இருக்கு. ஏன்னா முத முதல்ல என் நண்பனோட கடனை அடைக்க அவதான் தன் நகையைக் கொடுத்து உதவினா...! கல்யாணம் ஆகி வந்த புதுசு. எங்க நட்போட இறுக்கத்தப் பார்த்து, நண்பனோட நடத்தையைப் பார்த்து, இரக்கப்பட்டு, அவருக்கு நீங்க உதவலேன்னா வேற யாரு உதவுவாங்க...பரவால்ல...இதைக் கொண்டு போய் அடகு வச்சுப் பணத்தை வாங்கி, அவர் கடனை அடைங்க...முதல்ல .ன்னா...!

வந்ததும் வராததுமா அவ நகையை வாங்கி அடகு வைக்கிறதுல எனக்குக் கொஞ்சங்கூட இஷ்டம் இல்ல. என்னோட ஏதானும் பணமுடைன்னாக்கூடப் பரவால்ல. ஃப்ரெண்டுக்காக நானே கொடுத்தாக் கூடப் பரவால்ல. எங்கிட்டப் பணம் இல்லாத நிலைமைல இல்லைன்னு சொல்லிட்டுப் போக வேண்டிதானே? பொண்டாட்டி நகையை அடகு வச்சுக் கொடுக்கிறதுங்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர்ன்னுதான் நான் நினைச்சேன். அவன்னா நமக்குச் செய்வானா இப்படி? அதையும் நினைச்சுப் பார்க்கணும்ல? ஆனா மைதிலியோட மனசு என்னை ஆச்சரியப்படுத்திச்சு. அந்த பயத்துலயே அதை அடுத்த மாசமே திருப்பிட்டேன்னு வச்சுக்குங்க...ரொம்ப சின்சியராக் கொடுத்துட்டான். வேறே எங்கேயோ கடன் வாங்கித்தான் கொடுத்திருப்பான் போல. அதப்பத்தி நமக்கென்ன? அப்டியெல்லாம் கவலப்பட்டு முடியுமா? நமக்குக் காரியம் ஆகணும்...! ரொம்ப மனபாரமாப் போச்சு எனக்கு. இந்தா பிடி....என்று மீட்ட நகையை அவளிடம் திருப்பிக் கொடுத்தபின்தான் மனசே சரியாயிற்று.

ஆனந்துக்கு அடிக்கடி இப்படிப் பண முடை இருந்திட்டுத்தான் இருந்திச்சு. அதுக்காக ஒவ்வொருவாட்டியும் நாமளே உதவிட்டு இருக்க முடியமா? வேறே எங்கயாச்சும் பார்த்துக்க வேண்டிதான்...அவனும் அடிக்கடி கேட்கக் கூடாதுங்கிற முடிவுல இருக்கத்தான் செய்தான். ஆனா அவன் நடவடிக்கைகள் கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கிறதா எனக்குத் தோணிச்சு. ஆக்டோபஸ் மாதிரி நாலா பக்கமும் கையை நீட்டிட்டிருக்கான்னு புரிய ஆரம்பிச்சிது. நான் விலக ஆரம்பிச்சேன். அடிக்கடி கொடுத்து உதவுறதுக்கு என்கிட்டயும் வேணும்ல...? நானே இன்னும் ரெண்டு தங்கச்சிகளுக்குக் கல்யாணம் பண்ணனும்னு இருக்கிறவன்...!

நானும் அவனும் ஒண்ணாத்தான் அரசாங்கப் பரீட்சை எழுதினோம். ஆனா எனக்கு மட்டும்தான் வேலை கிடைச்சிது. தன்னோட வருத்தத்த வெளில காண்பிச்சிக்காம என்னோட வேண்டுதலுக்காக பழனிக்குக் கூட வந்தான் அவன். வேலைல சேர்றதுக்காக நான் திருச்சி போயிட்டப்போ, எனக்காக ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தனுப்பிச்சான். பஸ் டாப்புல வண்டியைப் போட்டுட்டு பத்திரமா கொண்டு வந்து என்கிட்ட சேர்ப்பிச்சாரு அவனோட நண்பர் ஒருத்தர். அந்த வண்டிக்கான காசைக் கூட நான் கொடுத்ததா நினைவில்லை. அவனும் கேட்கலைன்னுதான் நினைக்கிறேன். பிறகுதான் ரெண்டு வருஷத்தில் நான் உள்ளூர் வந்தேன்.

அரசாங்க வேலைக்கான வயசு கடந்து போச்சு அவனுக்கு. அதுக்குப் பின்னாடிதான் அவன் தன் க்வாலிஃபிகேஷனை ஏத்தியிருந்தான். பி.காம்...கரெஸ்ல படிச்சிட்டிருந்தான். அதுல அக்கௌன்டன்சி பேப்பர்லாம் பிரமாதமாப் பாஸ் பண்ணிட்டான். பாலன்ஸ் ஷீட் அவ்வளவு க்விக்கா போட்டு டாலி பண்ணுவான்.  ஆனா வேறே சில சப்ஜெக்ட்கள்ல அரியர்ஸ் வச்சிருந்து, பின்னாடி அதுகளயும் எழுதி முடிக்கணும்ங்கிற இன்ட்ரஸ்ட் அவனுக்கு இல்லாமப் போச்சு. இதுக்கிடைல ரெண்டு குழந்தைகள் வேறே ஆயிப் போச்சு அவனுக்கு. உறவுஸ் ஒய்ஃப் வேறே..இவன் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் வைக்க, அந்தம்மா சத்துணவு ஆயா வேலையை யாரையோ பிடிச்சு எப்டியோ வாங்கிடுச்சு. ஓரளவுக்குப் பரவால்லங்கிற நிலமைதான். ஆனாலும் பற்றாக்குறை இருக்கத்தான் செய்தது. காரணம் -

இவன்தான் கைவீசி செலவு செய்ற ஆளாச்சே. அப்டி இருந்து முடியுமா? பேச்லரா இருந்தபோது இருந்தமாதிரியே இப்பவும் இருக்க முடியுமா? கை சுருக்கம் வேணாம்? அந்த ஆரம்பத்துல இன்ஸ்டிட்யூட்டுக்கு மிஷின் வாங்கணும்னுதான் ஒரு எடத்துல லோன் வாங்கி அதைக் கொடுக்க முடியாமே ஆகி, அதுக்காகத்தான் எங்கிட்டே வந்து நின்னான். அப்பத்தான் நகையை அடகு வச்சுப் பணம் கொடுத்த கதை. ஆனா அதை மறுமாசமே அவன் திருப்பிக் கொடுத்ததுல ரொம்பவும் ஒரு சின்சியாரிட்டியை உணர்ந்தேன் நான். புதுசா வந்த மனைவி நகையை அடகு வச்சுக் கொடுத்திருக்கானே....அந்தப் பொண்ணும் நமக்காக மனமுவந்து இந்த உதவியைச் செய்திருக்கேன்னு ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டுட்டான்.

சிஸ்டர்...என் வாழ்நாள்ல இதை நான் மறக்கவே மாட்டேன்னான் அப்போ. என்னத்தையோ சொல்லிட்டுப் போகட்டும்...பணம் திரும்பி வந்தாச் சரின்னு இருந்தேன் நான். நல்லவேளை...கரெக்டாத் திருப்பிக் கொடுத்திட்டான். எதுக்குச் சொல்றேன்னா...அப்போ அவன்கிட்டே வேறு ஒரு பழக்கம் புதுசா வந்திருந்திச்சு. தீர்த்தமாடுறது....என்னையே ஒரு நா இழுத்துட்டுப் போயிட்டான்னா பார்த்துக்குங்களேன். எனக்கும் என்னதான் அதுன்னு ஒருவாட்டி பார்த்திடுவோமேன்னு ஒரு சின்ன சபலம். என்னடா ஒரே மடக்குல குடிச்சிட்டே...கொஞ்சம் கொஞ்சமா சிப் பண்ணி அனுபவிச்சுக்  குடிறா....என்றான் ஆனந்த். எனக்கு ஒண்ணுமே தெரில. போகப் போகத்தான் கால் தடுமார்றதக் கவனிச்சேன். ஆனா நிறுத்த முடில...! .சே...இது நல்லால்லியே...ன்னு தோணிச்சு. அந்த ஒருவாட்டியோட என் சபலம் முடிந்தது.

.      அன்னைக்கு செகன்ட் ஷோ சினிமா வேறே. நல்லவேளை. போய் ஒரு இடத்துல சிவனேன்னு உட்கார்ந்தாச்சு. இல்லன்னா... இருந்த போதைக்குக் கதை கந்தலாகியிருக்கும். எவன் படம் பார்த்தது. ஒரே தூக்கம்தான். படம் முடிஞ்சப்போ நல்லா தெளிஞ்சிருந்தது..   போற வழிக்கு...தெருக்குழாய்ல அவனைத் தண்ணியடிக்கச் சொல்லி மூஞ்சியை நல்லாக் கழுவி, திரும்பத் திரும்ப வாய் கொப்பளிச்சி, அவன்ட்ட ஊதிக் காண்பிச்சு...வாடை சுத்தமா இல்லாம இருக்கிறாப்படி தியேட்டர்ல வாங்கின  ரெண்டு சூட மிட்டாய வாய்ல அடக்கிக்கிட்டு...வீடு போய்ச் சேர்ந்தேன் நான்.  நேரா போய் படுக்கைல விழுந்திட்டேன். தேவையா இது?ன்னு மைதிலி திட்டினது லேசா காதுல விழுந்தது. அவ செகன்ட் ஷோ சினிமா பார்த்ததைச் சொல்லியிருக்கா...நல்லவேளை...தப்பிச்சேன்...

அதுக்குப் பிறகுதான் நான் சுதாரிச்சேன்...ச்சே....இது நல்லாயில்லையே...! இனி இவனோட சுத்துறதக் கட் பண்ணனும்...அப்டீன்னுட்டு அன்னைக்கே முடிவு செஞ்சேன். என்னடா வர்றதேயில்ல...ன்னபோதெல்லாம் ஆபீஸ்ல வேலை ஜாஸ்தின்னு சொல்லிடுவேன். ஆனா சனி, ஞாயிறுன்னா அவன் இன்ஸ்டிட்யூட்ல போய் உட்கார்ற வழக்கமிருந்திச்சு. பன்னென்டு மிஷினோ என்னவோ வச்சிருந்ததா நினைவு. அது போக அக்கௌன்டன்சி எடுத்தான். ஷார்ட்உறான்ட் க்ளாஸ் எடுத்தான். அவன் பாஸ் பண்ணியிருக்கானான்னா இல்லதான். ஆனா வகுப்பு நல்லா எடுப்பான். அதுல கூட்டம் வந்திச்சு. இதுல மேல்நிலை தேர்ச்சி பெற்றுத்தானே நானே வேலையைக் கேட்ச் பண்ணினேன். என்னோடவே அவனும் பாஸ் பண்ணியிருந்தான்னா என்ன மாதிரியே கவர்ன்மென்ட் வேலைக்கு வந்திருப்பான். அப்ப அவன் சுதாரிக்கல. இப்பவாச்சும் க்வாலிஃபை பண்ணினானே...? பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவாச்சும் உதவுதேன்னு நினைச்சிக்கிட்டேன். அவன் அக்கௌன்டன்சி சொல்லிக் கொடுத்துதான் நானே பாஸ் பண்ணினேன்னா பார்த்துக்குங்களேன். நான் எப்பவுமே கணக்குல வீக்...!

சிக்கனமா இருந்து, கொஞ்சம் கொஞ்சமாப் பணம் சேர்த்து, சேரச் சேர ஒவ்வொரு மிஷினா வாங்கி, ஸ்கூலைப் பெரிசாக்கணும்ங்கிற நினைப்பில்லை அவனுக்கு. ஒரே நைட்ல எல்லாம் மாறிடணும்...பார்க்கிறவங்க பிரமிக்கிற மாதிரி வளர்ச்சி இருக்கணும்னு நினைச்சான். அதுக்காக எங்கயும் கடன் வாங்க தயங்கல்லே அவன். அதுதான் அவன்ட்ட இருந்த பெரிய கோளாறு. அதுக்கு நானும் பலியானேன். அதுதான் பெரிய மைனஸ். என்னை வம்படியா இழுத்திட்டுப் போய் ஒரு சீட்டுக் கம்பெனில ச்யூரிட்டி போட வச்சிட்டான். அரைக் காசானாலும் அரசாங்கக் காசுன்னு அந்தாளும் என்னை நம்பிப் பணம் கொடுத்திட்டான். வசமா மாட்டினேன் நான். தலைகீழ நின்னும் பிரயோஜனமில்ல. அவன்கிட்டயிருந்து தம்பிடி பேரல. என்னைப் போல இன்னும் சில பேரை மடக்கி வேறே சில நிறுவனங்கள்லயிருந்தும் கடன் வாங்கியிருக்கான். ஆனா அவன் வாங்கின அளவுக்கு இங்க இன்ஸ்டிட்யூட் பெரிசாகியிருக்கான்னா இல்ல.

ஏண்டா...நீ வாங்கியிருக்கிற கடனுக்கு இந்நேரம் முப்பது மிஷினாவது இங்க இருக்கணும். வெறும் இருபதுக்குள்ளதான் இருக்கும் போல்ருக்கு. மிச்சப் பணத்தையெல்லாம் என்ன பண்ணினன்னு கேட்டா....இங்க வாங்கி அங்க கொடுத்தேன்...அதை வாங்கி இதுல போட்டேன்னுவான். ஆனா வீட்டுல பார்த்தா ரூமுக்கு ரூம் ஃபேன்,, உறீட்டர், வாஷிங்மிஷின், பெரிய அகலமான டி.வி. இப்டி ஒரே படாடோபம்தான். அவன் பொண்டாட்டியோட அரிப்புத் தாங்காம, .இல்லன்னா அவளுக்கே தெரியாம அவகிட்டயே பந்தா காண்பிக்க வேண்டி இப்டியெல்லாம் செய்திருப்பானோன்னு தோணிச்சு எனக்கு. புருஷனோட தொழில், வரவு செலவு தெரியாம ஒரு பொண்ணு இருந்தென்ன பிரயோஜனம்? வீட்டுப்பாடு ஒழுங்கா கழிஞ்சா சரின்னு ஒரு பொம்மனாட்டி இருக்கலாமா?

என் பைசா இனிமே திரும்பி வராதுன்னு...அதாவது நான் ஸ்யூரிட்டி போட்ட கடனை அவன் நிச்சயமா அடைக்கப் போறதில்லங்கிற பயம் வந்திடுச்சி எனக்கு. நினைச்சாப்லயே அந்தச் சீட்டுக் கம்பெனிக்காரன் ஒரு நாளைக்கு ஆபீசுக்கு வந்து நின்னுட்டான். எனக்கா அவமானமாப் போச்சு. என்ன சார்....இந்தாளு உங்களத் தேடி வர்றாரு...? என்று பிரபலமான அவரை விளித்து எங்கிட்டக் கேட்க ஆரம்பிச்சாங்க ஆபீஸ்காரங்க....போனாலும் போகுதுன்னு அன்னைக்கே என் சேவிங்ஸ்லருந்து பணத்தை எடுத்து ஆனந்தயும் கூட்டிட்டுப் போய் அந்தக் கடனை வட்டியோட அடைச்சு, அந்த ஸ்யூரிட்டி பாண்டை வாங்கி அங்கயே கிழிச்சிப் போட்டுட்டு வந்தேன். இவனுக்கெல்லாம் ஏன் சார் கையெழுத்துப் போடுறீங்க...ன்னான் அந்த கம்பெனி முதலாளி ரொம்ப யோக்யன் போல. தனிமைல சொன்னான். அதனால தப்பிச்சான். அவனையும் வச்சிட்டுச் சொல்லியிருந்தான்னா, எட்டி அடிச்சிருப்பான் ஆனந்த்....

எதுக்குடா மோகன் மொத்தத்தையும் கொடுத்த...பாதி கொடுத்திட்டு, மீதி கடன் வச்சிருக்கலாம்ல...? எனக்குச் செலவு இருக்குடா...!  என்றானே ஒழிய, இப்டியொரு சங்கடத்த எனக்குக் கொடுத்துட்டமேன்னு வருத்தமேயில்ல. அவனுக்கு அப்போ அந்த ஊர்ல கடன் வாங்குற எல்லா வழிகளும் அடைபட்டுப் போய்க் கிடந்திச்சு. இனி எந்த எடத்துலயும் அவன் கைநீட்டி  பைசா வாங்க முடியாது. ஒழுங்கா இன்ஸ்டிட்யூட்ட நடத்தி, காசைக் கருத்தா சேமிச்சு, கொஞ்சம் கொஞ்சமா இருக்கிற கடனை அடைக்கிறது ஒண்ணுதான் வழி. ஆனா அவன் அதுக்குத் தயாரா இல்லன்னு தோணிச்சு. அவன்ட்டக் குடி அதிகமாயிருந்த நேரம் அது. போதாக் குறைக்கு ஐயா ஒரு பையனை வேலைக்கு வேறே வச்சாரு. அந்தப் பையன்தான் இன்ஸ்டிட்யூட்டக் கவனிச்சிக்கிட்டான். இவரு அக்கௌன்டன்சி, ஷார்ட்உறான்ட் எடுக்கிற நேரம் மட்டும் விசிட் பண்ணுவாரு. என்ன ஏதுன்னு மத்த விபரங்கள் ஏதுமிருந்தா முதலாளி கணக்கா அந்தப் பையன்ட்ட தகவல் கேட்டுட்டு வீட்டுக்கு வந்திடுவாரு....ஒரு ஆள வேலைக்கு வச்சி சம்பளம் கொடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டாருன்னு  சுத்தியிருக்கிறவங்க நினைக்கணுமாம்.. அந்தச் சம்பளக் காசை மிச்சம் பண்ணினா, தானே இருந்து உழைச்சா, லோன் ட்யூ கட்டலாமேங்கிற அறிவு இல்ல அந்தக் கழுதைக்கு...!

கடன் கொடுத்த ஆளுக வந்து வந்து போனாங்க. வீடு தேடி வந்து ஏமாந்தாங்க. ஆள் எவனுக்கும் அகப்படுறதேயில்ல. இதப் பயன்படுத்திக்கிட்டு வேலைக்கிருந்த பையனும் நல்லா துட்டு அடிக்க ஆரம்பிச்சான். அங்க ஜாப் டைப்பிங் நிறைய வரும். அந்தக் காசையெல்லாம் ஆட்டையப் போட ஆரம்பிச்சான். முன்னூறு நானூறுன்னு வந்திச்சின்னா, நூறு நூத்தம்பது மட்டும்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சான். இவ்வளவுதான் சார் வந்திச்சு...என்னை என்ன பண்ணச் சொல்றீங்க...? நீங்க வேணா இருந்து பாருங்க...அப்பத் தெரியும்...தேவையில்லாம என்னைச் சந்தேகப்பட்டீங்கன்னா எப்டி? என்று நிமிர்ந்து பேசினான்.

அந்தப் பையனை மலைக்கோயில்ல ஒரு பொண்ணோட பார்த்ததா ஒருத்தர் வந்து என்கிட்டே சொன்னபோது நான் அதிர்ந்து போனேன். அங்க படிக்கிற ஒரு பொண்ணுதான் கூடச் சுத்துதுன்னு தெரிஞ்சிது. அதெல்லாம் அவனோட பர்சனல்...நாம எப்படி அதுல தலையிட முடியும்?ன்னான் ஆனந்த். தலையிட வேண்டாம்..அவனை வேலையை விட்டு நிறுத்தலாம்ல...? என்றதற்கு....நிறுத்திட்டு? என்று பதில் கேள்வி கேட்டான். ஜோடிப் பொருத்தம் நல்லாத்தாண்டா இருக்கு...ரசிடா....என்று வேறு அட்வைஸ்.   இது வௌங்காது என்று அப்பொழுதே எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. நீயாவது அடிக்கடி இன்ஸ்டிட்யூட்டுக்கு விசிட் பண்ணுடா...அப்பத்தான் அவனுக்கும் ஒரு பயம் இருக்கும். கையும் களவுமா ஒரு நாளைக்குப் பிடிச்சு, கண்டிச்சு வையி. இருந்தா இருக்கான், போனாப் போறான்...உன் எண்ணப்படி வேறே ஆளா கிடைக்காது? என்று சொன்ன என் சொல் அவன் காதுகளில் ஏறவேயில்லை. இன்னும் கொஞ்சம் சொன்னால், நீ வேணும்னா ஸ்கூலுக்கு வர்றத நிறுத்திக்கோன்னு என்கிட்டயே சொல்லுவான் போல்ருக்குன்னு எனக்குத் தோணிச்சு......

என்னதான் ஆனாலும் அவனோட நட்பை விட எனக்கு மனசில்லை. காரணம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவ்வளவு ஊர் சுத்தியிருக்கோம். ரொம்ப வருஷப் பழக்கம் எங்களோடது. ஊர் ஊரா சுத்தியிருக்கோம். ஒவ்வொரு ஊர்லயும் எதெது விசேஷம்னு கேட்டு, தேடிப் போய்ப் பார்ப்போம். சாப்பிடுவோம். அந்த ஊர்ல இறங்கினதும், குறிப்பேடு வாங்கிக்கிடுவோம். ஒரு ஆட்டோவப் பிடிப்போம். கிளம்பிடுவோம். அந்த ஊர் எதுக்குப் பேர் போனதுன்னு கேட்டு அந்த ஸ்வீட்டை இல்ல பழத்தை மறக்காம வாங்கி சாப்பிடுவோம். மாம்பழம்னு போய் நின்னா வெரைட்டிக்கு ஒண்ணுன்னு எடுத்து அத்தனையையும் டேஸ்ட் பண்ணிட்டுத்தான் நகருவோம். மாம்பழத்தை ஆனந்த் சாப்பிடுற விதமே தனி. அதைக் கைல பிடிச்சி உருட்டிக்கிட்டே இருப்பான். உருட்டி உருட்டி உள்ளே கூழாக்கி, ஒரு ஓட்டையப் போட்டு ஜூஸ் ஆக்கி உறிஞ்சிடுவான். அவனப் பார்த்து நானும் அப்டியே சாப்பிடக் கத்துக்கிட்டேன். அந்த டேஸ்டே தனி.

 சிவாஜி படமா சேர்ந்து சேர்ந்து பார்த்திருக்கோம். செகன்ட் ஷோவா பார்த்துத் தள்ளியிருக்கோம். ஆர்ட் ஃபிலிம் வரிசைல கூட என் விருப்பத்துக்கு கூடவே வந்திருக்கான் அவன். ஊருக்கு வெளில அந்த பிரம்மாண்டத் தியேட்டர். அங்க பெரும்பாலும் இங்கிலீஷ் படம்தான் போடுவாங்க. அப்புறம் ஒரு கட்டத்துல ஆர்ட் ஃபிலிம்ஸ் போட ஆரம்பிச்சாங்க. பூரா  பணக்காரங்கதான் வருவாங்க...காரா நிற்கும் ரோடு வரைக்கும். அந்தப் பக்கமே தல காட்ட முடியாது. சாதா டிக்கெட்தானே நாங்க...அதனால எங்களுக்குக் கிடைச்சிடும். இந்த மாதிரிப் படங்களுக்கு லோயர் க்ளாஸ் பெரும்பாலும் காலியாத்தானே கிடக்கும். அதுதான் எங்களுக்கு வசதி. அடூர், வாசுதேவன் நாயர், சிபிமலயில், அரவிந்தன், ஜி.வி.ஐயர், கிரீஷ் கர்னாட், ஷ்யாம் பெனகல், சத்யஜித்ரே...ன்னு அப்பப்போ போடுற படத்துக்கெல்லாம் தவறாமப் போயிடுவோம். ஒரு சீனை நகர்த்துறதுக்கு ஏன்டா இந்தப் பாடு படுறாங்க...என்னதான் சொல்றான் இந்தக் காட்சில....அப்டி என்னதான் கண்டே இதுல...? என்று ஏதாவது கேட்டுக் கொண்டேயிருப்பான். நான் காட்சிகளின் அர்த்தங்களை அவனுக்கு விளக்கிக் கொண்டேயிருப்பேன். அப்படியே அவனும் கொஞ்சம் கொஞ்சமாய் ஆழ்ந்த ரசனைக்கு வந்து, பிறகு சிவாஜி படங்கள் தவிர வேறு கமர்ஷியல் படங்களை இனி பார்ப்பதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டான்.

பெரிய கற்பனை வளம் உள்ளவன் ஆனந்த். பாவம்...அவனுக்கும் ஒரு வேலை கிடைத்திருந்தால் என்னைப் போல் செட்டில் ஆகியிருப்பான். அதற்கு அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு என்னென்னவோ செய்து உருட்டிப் புரட்டிக் கொண்டிருந்தான். கஜகர்ணம் போட்டான் என்றே சொல்லலாம்.

இந்தக் கட்டத்தில்தான் அரசாங்க லோன் வாங்கி நான் கட்டியிருந்த வீட்டின் கிரகப்பிரவேசம் வந்தது. அவன் வீட்டிலிருந்து ஏழு கி.மீ.க்குக் குறையாது. நகரில் அது ஒரு தூரமில்லைதான்.  அந்த புதுமனைப் புகு விழாவுக்கு ஒரு பிள்ளையார் படம் வாங்கிக் கொடுத்தான். ஓவியத்திலான படம் அது. அதை இன்றும் எங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கிறேன் நான். ஒரு சிறந்த ரசிகனால்தான் அதைத் தேர்வு செய்ய முடியும். ஆனந்த அப்படி ஒரு அற்புதமான படத்தை எனக்குப் பரிசளிப்பான் என்று நான் நினைக்கவேயில்லை. எந்நிலையிலும் காசைப் பார்க்க மாட்டான். எதிராளியைத் திருப்திப்படுத்துவதே அவன் நோக்கமாக இருக்கும். அந்த மாதிரி ஒரு பரந்த மனசு அவனுக்கிருந்தது.

அங்கு நான் குடி பெயர்ந்த பிறகு அவனுடனான தொடர்பு பெரும்பாலும் விட்டுப் போனது என்றுதான் சொல்ல வேண்டும். நானுண்டு என் வேலையுண்டு என்று நான் இருக்க, அவனும் அவனுண்டு அவன் வேலையுண்டு என்று இருக்க ஆரம்பித்து விட்டான். இடம்தான் எங்களைப் பிரித்தது. ஆனால் அவன் எனக்குத் தர வேண்டிய பணத்திற்கு விடாமல் அவனுக்கு நான் தபால் கார்டு எழுத ஆரம்பித்தேன். நாலு வரி...நாலு வரி....என்று நினைவுபடுத்தி எழுதிப் போட்டுக் கொண்டேயிருப்பேன். எதற்கும் அவனிடமிருந்து பதில் வராது. நாலு வரி பிறகு எட்டு வரியானது. கார்டின் இரு பக்கமும் நிரப்பி பிறகு எழுத ஆரம்பித்தேன். கண்ட கண்ட கெட்ட வார்த்தைகளையெல்லாம் பிரயோகித்து எழுதினேன். வெட்கமில்லையா, சூடு சொரணை இல்லையா, நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே....என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். எதுக்கும் அசைந்து கொடுத்ததில்லை அவன். நேரில் ஒரு வார்த்தை இதைப்பற்றிக் கேட்க மாட்டான். சரியான கல்லுளிமங்கன்.

இடையில் அவன் கடன் வாங்கிய நிறுவனத்தார் அவன் வீட்டுக்கு வந்து கொடுத்த கடனுக்கு ஃபேன், டி.வி. என்று கழற்றிக் கொண்டு போய்விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். வாஷிங் மிஷின், கிரைன்டர் என்றும் கிடைத்தவரை லாபம் என்று ஒரு நிறுவனம் எடுத்துக் கொண்டு போனதாக அவன் தட்டச்சுப் பள்ளியில் படித்த ஒரு பையன் என்னிடம் கூறினான். ஒரு சினிமா அரங்கில் அந்தப் பையனைப் பார்த்த போது, எனக்கே கேட்க வேண்டும் என்று ஆவல் உந்த, விசாரித்தேன். ஏன் சார் இப்பல்லாம் வர்றதில்ல....என்று கேட்டுக் கொண்டே அவன் சொல்ல ஆரம்பித்தான். வேலை பார்த்த பையன் அவன் காதலித்த பெண்ணோடு ஓடிப் போய்விட்டதாகவும், பெற்றோர்கள் ஆனந்தின் பள்ளிக்கு வந்து கலாட்டா பண்ணியதாகவும் சொன்னான். அவங்க காதலிச்சது எனக்குத் தெரியாது என்றும் தெரிஞ்சிருந்தா தடுத்திருப்பேன் என்றும், அந்தப் பையனையே வேலையை விட்டு நிறுத்தியிருப்பேன் என்றும் ஸ்திரமாக ஆனந்த கூற அவர்கள் போய் விட்டார்கள் என்றான். இப்போது அவன்தான் பள்ளியைப் பார்த்துக் கொள்கிறான் என்றான் அந்தப் பையன். இதை அன்று நான் எச்சரித்தபோதே செய்திருக்கலாமே என்று தோன்றியது எனக்கு. தொட்டபின் பாம்பு. சுட்டபின் நெருப்பு...!

நான் போட்ட ஒரு கார்டுக்கும் எந்த பதிலும் வராத நிலையில், மற்றவர்களைப் போல் நாமும் ஒன்று செய்தாலென்ன என்று தோன்றியது எனக்கு. என் மனைவிக்குத் தெரிய நான் ஏமாந்து நிற்பது  படு கேவலமாய் இருந்தது. எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்துக்கு ஒரு டைப்ரைட்டர் மிஷினைக் கொடுத்திடு என்று போய் நின்றேன் ஒருநாள். ஆனால் அத்தனையும் ட்யூ கட்டிக் கொண்டிருக்கும் தட்டச்சுப் பொறிகள் என்றும், அல்லாதது பழசுதான் என்று சில பழையை மிஷின்களைக் காண்பித்தான். அவை புதிதாகப் பழக வருபவர்களுக்கு என்று இருந்தவை. அதில் ஒன்றை எடுத்துப் போவதனால் எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. புதிய மிஷின்களைத் தொட முடியாதபடி அதற்கு ஒரு செக் வைக்கிறானே என்றிருந்தது எனக்கு. உன் இஷ்டம், வேணும்னா எடுத்திட்டுப் போ...ஆனா டியூ கட்டலன்னு ஆளுக தூக்க வந்தா உன் வீட்டுக்குத்தான் வர வேண்டியிருக்கும் என்றான். பயமுறுத்துகிறானோ என்றிருந்தது எனக்கு. தலைக்கு மேலே வெள்ளம் போன நிலையில் இனி ஜாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என்கிற நிலைக்கு வந்து விட்டான் அவன். என்னையே ஏமாற்றும் மனநிலை.ஆத்திரம் பொங்கியது எனக்கு. பலன்? தலையைக் கொடுத்தாயிற்று. மெல்லத்தானே எடுத்தாக வேண்டும் என்றிருந்தேன் நான்.

உன் லெட்டரையெல்லாம் சேர்த்து வச்சிருக்கேன் என்றான். எம்பொண்டாட்டி படிச்சா...என்றும் கூறினான். என்ன சொன்னாங்க...? என்று எனக்குக் கேட்க விருப்பம்தான். ஆனால் கேட்கவில்லை. அவன் என்னை ஏமாற்றுகிறான் என்று என் மனதில் எண்ணம் விழுந்த பிறகுதான் நான் அப்படி கண்டமேனிக்கு எழுத ஆரம்பித்தேன். ஆனால் அவனுக்கோ எந்தச் சுரணையும் இல்லை. நானாகத்தான் ஒவ்வொரு நாள் போய்ப் பார்த்தேனேயொழிய அவன் என்னைத் தேடி அவ்வளவுதூரம் என்றும் வந்ததேயில்லை. வந்தால் ரூபாயோடு வர வேண்டுமே? அதற்கு ஏது வழி? ஒரு வகைக்கு வராதது நல்லதுதான். அவன் என் வீட்டிற்கு வருவதை ஏனோ என் மனம் விரும்பவில்லை. அதற்கான காரணத்தை என்னால் இன்னும் சரியாக ஊகிக்க முடியவில்லை. முதன் முதலாக நகையைக் கழற்றிக் கொடுத்து நண்பன் கடனை அடையுங்கள் என்று மைதிலி சொன்ன நாள் அன்று மனதில் விழுந்த புள்ளி அது. ஆனால் அதற்குப் பின் ஒரு முறை கூட ஆனந்தைப்பற்றி விசாரித்ததில்லை அவள். அவள்பாட்டுக்குத்தான் இருக்கிறாள். எனக்குத்தான் பிடிக்கவில்லை அவன் என் வீட்டில் காலடி எடுத்து வைப்பது. எதற்கும் துணிந்தவன் என்ன செய்வான் என்று யார் கண்டது? எல்லாவிதத்திலும் நான் அவனை மோசமாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன். என் மனநிலை அப்படியாகிவிட்டது.

எனது எல்லாக் கடிதங்களும் விலையற்றுப் போயின. சிலமுறை ஃபோன் பேசியதும் (அப்போது பக்கத்து மருந்துக் கடைக்குப் பேசி அவனை வரவழைப்பேன்) பலனளிக்கவில்லை. அந்தக் கடை ஆட்கள் முன் விரிவாக எதையும் பேச மாட்டான். நான் அப்புறம் பேசறேண்டா...இல்லன்னா வீட்டுக்கு வர்றேன் என்று சொல்லி உடனே கட் பண்ணி விடுவான்.

ஏறக்குறைய எனக்கு வரவேண்டிய பணத்தை நான் மறந்தே விட்டேன் என்று சொல்லலாம். இந்த மட்டுக்கும் அவன் தொடர்பு விட்டதே என்றுதான் இருந்தேன். மேற்கொண்டு வந்து அரிக்காமல் இருந்தால் சரி என்று நானுண்டு, என் குடும்பமுண்டு என்று இருக்க ஆரம்பித்து விட்டேன். மனநிலை கொஞ்சம் கொஞசமாக சமனப்பட்டு வந்தது.

இப்படியான நிலையில்தான் இன்று இந்தச் செய்தி...! வருந்துகிறோம் என்று போட்டு அவன் படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது.  சாவுக்குப் போய் வருவது என்கிற எண்ணத்தைக் கைவிட்டேன். போனால் நிச்சயம் பிரச்னை வரும். அவன் மனைவி என்னைத் திட்டி ஊரைக் கூட்டலாம். உங்களால்தான் அவர் இறந்தார் என்றும் சொல்லலாம். உறவினர்கள் கூடியிருக்கும் இடத்தில் தனியே போய் அகப்பட்டுக் கொள்வது என்பது அத்தனை புத்திசாலித்தனமில்லை என்று தோன்றியது எனக்கு. இன்னும் பணத்தைக் கொண்டா என்றால் நான் எங்கே போக?

காலைல அந்தப் பக்கமாத்தான் ஒரு வேலையா போயிட்டு வந்தேன் மச்சான்....மருந்தக் குடிச்சுச் செத்துட்டாருன்னு பேச்சு அடிபட்டுச்சு....இந்த ஸ்டாப்புல இறங்கி நம்ப கடைக்கு அடிக்கடி டீ குடிக்க வருவாருல்ல....உனக்கு ஞாபகமில்ல? அட என்னப்பா....இந்தப் பக்கத்து ஸ்கூல்ல டைப் பரிட்சை நடக்கும்ல....அப்பல்லாம் இங்கருந்துதான பார்சல் போகும்....மறந்திட்டியா?......இந்த ஸ்கூல் சென்டருக்கு அவர்தான்யா எல்லாம் கவனிப்பாரு...! sள

காலை நடைப்பயிற்சியில் சற்று தூரம் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த நான் வழக்கம்போல் டீ குடிக்க அந்தக் கடையில் நிற்க வேண்டியிருந்த வேளையில், அந்தப் பேச்சு என் காதில் விழுந்தது. பக்கத்து ஸ்கூல், டைப் பரீட்சை என்ற வார்த்தைகள்தான் அவன்தானோ என்று என்னை நினைக்க வைத்தது.

வழக்கம்போல் கிளம்பி ஆபீஸ் போய்விட்டேன் நான். ஏறக்குறைய ஆனந்தின் சாவையே மறந்துவிட்டேன் எனலாம். பணப் பிரச்னை எங்கள் இருவரின் நட்பைப் பிரித்து நிறுத்தி விட்டது. ஒருவருக்கொருவர் சண்டை, பகை என்று இல்லாவிட்டாலும், பரஸ்பரம் சந்திப்பதே வேண்டாம் என்றுதானே காலம் பிரித்துப் போட்டிருந்தது எங்களை?

பொழுது சாய்ந்து இருட்டத் தொடங்கியிருந்த வேளையில் வீட்டிற்குள் நுழைந்த போது வியர்க்க விறுவிறுக்க ஓடோடி வந்தாள் மைதிலி. இங்க பார்த்தீங்களா... சேதியை...? என்றவாறே நீட்டினாள். இப்பத்தான் ஆபீஸ்லர்ந்து நீயும் வந்தியா? என்றேன். அது ஆனந்தின் இறப்புச் செய்தி. காலையில் நான் டீக்கடையில் பார்த்த அதே செய்தி. ஆனால் வேறொரு செய்தித் தாள் அது.  அடடா...! என்பதற்கு பதிலாக ஐய்யய்யோ...! என்றது என் வாய். அது இயற்கையாய் இருந்ததா தெரியவில்லை..! இத எங்க பார்த்த...? எனக்குத் தெரியாமப் போச்சே....! என்றேன் விதிர்த்தவனாய். ஆபீஸ்ல... என்றாள். பிறகு தொடர்ந்தாள் -

தெரிஞ்சிருந்தா? என்ன பண்ணுவீங்களாம்? போய் கடனை வாங்கிட்டு வந்திடுவீங்களா? போனாப் போகுது விடுங்க.....நீங்க அங்க போகாம இருந்ததே நல்லது....என்றாள் அவள். கடன் வராமல் போனதைப் பற்றிக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை. இந்த மட்டுக்கும் தொல்லை விட்டது என்று நினைத்து விட்டாளோ என்னவோ? வாழ்க்கைல நிம்மதிதான் முக்கியம்s...பணம் ரெண்டாம் பட்சம்தான் என்றாள். அத்தோடு எல்லாவற்றையும் நான் மறந்து விட்டேன். ஆனந்தின் சாவு இயற்கையா அல்லது தற்கொலையா என்பதைக் கூட அறிந்து உறுதி செய்ய மனமில்லை எனக்கு. தினை விதைத்தவன் தினையறுப்பான், வினை விதைத்தவன்? நான் என்ன வினையை விதைத்தேன், அறுப்பதற்கு?

மைதிலிக்கும் தெரியாமல் நான் ஆனந்திற்குக் கொடுத்திருந்த இன்னொரு ஐம்பதாயிரம் ரூபாயும் போய்விட்டது என்பதை அவள் அறிய மாட்டாள். அதை இனி அவளிடம் சொல்வதாயும் உசிதமில்லை. என் சேமிப்புப் பழக்கத்தில், அது திருமணம் ஆவதற்கு முன்பாகவே என் அலுவலகத்திற்குப் பக்கத்தில் உள்ள நாங்கள் சம்பளப் பணம்  வாங்கும் வங்கியில் கணக்குத் துவங்கி, நான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த அக்கறையான சேமிப்புப் பணம். அதுவும் போயிற்று.  இப்போது அந்தக் கணக்கை உடன் மூடியாக வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தேன் நான். சில பிணக்குகள், சில கணக்குகள் வாழ்க்கையில் எப்போதுமே டேலியாவதில்லை, நேர் செய்யப்படுவதில்லை என்பதுதான் எல்லோருக்குமான நிஜம்....!!!

                              ----------------------------------------------

 

 

       

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...