25 ஜனவரி 2022

ரயிலில் ஏறிய ரங்கன் - சிறுகதை - சொல்வனம் இணைய இதழ்-263-நாள் 23.01.2022 கதை மற்றும் ஒலிவடிவில்

 

சிறுகதை                                            ரயிலில் ஏறிய ரங்கன்





       நானும் ரொம்ப நாளா இந்த ட்ரெய்ன்ல வந்திட்டிருக்கேன். சுண்டல் வியாபாரம் பண்ணிட்டிருக்கேன். ரயில்வே ஸ்டேஷன் வாசல்லதான் வச்சு வித்திக்கிட்டிருந்தேன். பெரிஸ்ஸா வியாபாரம் ஏதும் ஆகல...எல்லாரும் பார்த்திட்டு, பார்த்திட்டுப் போறாங்களே தவிர யாரும் வாங்குறதில்ல. காலங்கார்த்தால சுண்டல்  வித்தா யாரு வாங்குவாங்க...? ன்னு வண்டி ஸ்டான்டுல இருக்கிற  தாத்தாதான் சொன்னாரு...

காலைல ஏழு நாற்பதுக்கு ஒரு ட்ரெய்ன் கிளம்புது...அஞ்சாவது ப்ளாட்பாரம் போ...அதுல ஆபீஸ் போறவுகல்லாம் வருவாங்க...அதுல ஏறிக்கோ....போய்ச் சேர இரண்டரை மணி நேரம் ஆகும். அதுக்குள்ள உன் சுண்டல்லாம் நிச்சயம் வித்துப் போகும்... வண்டிலயே எல்லாரும் காலை டிபன் சாப்பிடுவாங்க...சில பேரு மத்தியானச் சாப்பாட்டுக்கும் வாங்கிக்குவாங்க......அது மீட்டர் கேஜ் வண்டி..வெளியூர் வேலைக்குப் போறவுகளுக்காகவே ஓடிக்கிட்டிருக்கு. எல்லாம் பாஸ் வச்சிருப்பாங்க......செக்கிங்கு யாரும் வரமாட்டாங்க... நீபாட்டுக்குப் போய் ஏறி ஒரு ஓரமா குந்திக்கோ...வண்டி கௌம்பினப் பெறவு உன் வியாபாரத்த ஆரம்பி...பெட்டி பெட்டியா போய் நில்லு.   நிச்சயம் மொத்தமும் வித்துப் போகும்...ன்னாரு....

அவர் சொன்னபடியே செய்தேன்...இன்னிவரைக்கும் நல்லபடியா ஓடிட்டிருக்குன்னுதான் சொல்லணும். கலெக்டர் ஆபீஸ் பியூன்லர்ந்து பாங்கு மானேஜர் வரைக்கும் பலபேரு வருவாங்க அந்த ட்ரெய்ன்ல....ரெண்டு மூணு டாக்டர்கள் கூட வர்றாங்க...அதுல நிறையப் பேரு  வண்டிலயே ஆபீஸ் வேலயப் பார்த்திட்டு வருவாங்க......ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க மாட்டாங்க...யார் கூடவும் பேசவும் மாட்டாங்க.......எனக்கா அவுகளப் பார்க்கப் பார்க்க ஆசையா இருக்கும். நாமளும் இவுக மாதிரி ஒரு நா வருவமான்னு நெனச்சிக்குவேன்.

நாந்தான் பெரிய பள்ளிக்கூடமே போகலயே...பஞ்சாயத்துப் பள்ளில அஞ்சோட நிப்பாட்டிட்டாகளே.....எங்கப்பாருக்கு வருமானமே பத்தாது. பொழுது விடிஞ்சா சித்தாள் வேலைக்குக் கிளம்பிடுவாரு...பன்ட் ஆபீஸ் கட்டட கேட் வெளில காத்துக் கெடப்பாங்க...நிறையப் பேரு....அவுகள ஒரு வேன் வந்து ஏத்திட்டுப் போவும்...எங்கப்பாரும் அதுல ஏறிப் போயிடுவாரு....ரொம்ப வருஷமா தட்டுத் தூக்குறவராத்தான் இருந்தாரு...இப்பத்தான் கொத்தனாரா வேல பழகி இருக்காரு.... அவருக்கு ஒரு நா ஐநூறு கெடைக்கும்...எல்லா நாளும் வேல இருக்காது....அதனால வருமானம் எங்க வீட்டுக்குப் பத்தாது...அம்மா நானும் வேலைக்கு வரட்டான்னு கேட்டுப் பார்த்தாக...அப்பா மாட்டேன்னுட்டாரு....நா கொண்டு வந்து கொடுக்கிறத வச்சிக்கிட்டு, ஒரு வேளயோ, ரெண்டு வேளையோ....கஞ்சி காய்ச்சிக் குடிச்சிட்டு மானமா இருப்போம் அது போதும்னுட்டாரு...அத்தோட இன்னொண்ணும் சொன்னாரு....அதான் அம்மாவுக்குப் பயமாப் போயிடுச்சி....தலமைக் கொத்தனாரு, மேஸ்திரின்னு புதுசா வர்றவுகள அமுக்கப் பார்ப்பாங்க...அதெல்லாம் நமக்கு வேணாம்...னாரு அப்பா. அதச் சொல்லவும்தான் அம்மா பயந்திட்டாக..எதுக்கு அம்மா பயந்திச்சுன்னு தெரில.....நீ வருத்தப்படாதம்மா...நா வியாபாரத்துக்குப் போறேன்...நீதான் சுண்டல் நல்லா ருசியாப் பண்ணுவியே...போட்டுக் குடு...நா போய் வித்துட்டு வர்றேன்னேன்.......அன்னைக்கு இந்தக் கூடையத் தூக்கினவன்தான்.... ....

பார்த்திகளா....இந்த ட்ரெய்ன் கதவ யாருமே சாத்த மாட்டேங்கிறாங்க...நின்னு வேடிக்கை பார்க்குறாங்களே தவிர திரும்ப உட்கார வரும்போது கதவச் சாத்திட்டு வரவேணாம்....அப்டியேவா விட்டிட்டு வர்றது. இவுகளெல்லாம் ஆபீஸ்ல நல்லா வேல செய்வாகளா...? நானுந்தான் எத்தனவாட்டி போய்ப் போய் சாத்துவேன்....டம்மு....டம்முன்னு அடிச்சிக்கிடுது....என்னா சத்தம்.....கதவே தனியாக் கழன்டு விழுந்திடும் போல்ருக்கு....டாக்டர்தான் சொன்னாரு...போய் அந்தக் கதவச் சாத்துடா தம்பின்னு...அவர் என்னப் பார்த்து சொன்னது எனக்கு ரொம்பப் பெருமையா இருந்திச்சு....அதுக்காக எத்தன தடவை என்னால சாத்த முடியும்...பெட்டி பெட்டியாப் போறவன் நான்.... சாயங்காலம் திரும்பைல மீதி வித்திரும். எல்லாரையும் மாதிரி நானும் ராத்திரிதான் வீடு போய்ச் சேருவேன்.

பார்த்தீகளா அந்த இன்னொரு ஐயாவ.......அவரு சிகரெட் பிடிப்பாரு....ரயில்ல சிகரெட், பீடி பிடிக்கக் கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்கு....யாரு கேட்கிறா? டாக்டரே ஒரு வாட்டி எழுந்து போய்ச் சொல்லிட்டு வந்தாரு.....ஓ.கே. சார்...ஓ.கே.சார்னு பதறுனாப்ல சொல்லிட்டு அடுத்த பெட்டிப்பக்கம் போய் ஊதிட்டு வந்தாரு....அதுலர்ந்து அவர் உட்கார்ற எடத்த மாத்திக்கிட்டாரு........நமக்கென்ன வந்தது...எனக்கு சுண்டல் வித்தா சரி....அந்த ரயில்ல போறதே ரொம்ப சந்தோஷமானதுங்க...அது ஒரு காரணம் எனக்கு பிடிச்சிப் போனதுக்கு...

என்னப்போல இன்னும் சில பேரும் உண்டு. யூனிவர்சிடி ஸ்டாப்புல கொய்யா விக்குற ஒரு அம்மா ஏறும்...நல்ல குண்டு குண்டு கொய்யாவா இருக்கும். செவப்புக் கொய்யா வேற வச்சிருக்கும். அத வெல ஜாஸ்தியாச் சொல்லும்...ரொம்பக் கறாரு அந்தம்மா....நானாச்சும் ஒரு கை சுண்டல அள்ளிப் போட்ருவேன்...அது பைசா குறைக்காது...சொன்னாச் சொன்னதுதான்... கொய்யாவ பூப்போல நறுக்கி அப்டியே உள்ளாற மொளகாப் பொடியத் தூவிக் கொடுக்கும்....அதப் பார்க்கவே நாக்குல தண்ணி ஊறும்...இந்த்ரா..வாங்கிக்கோன்னு யாராச்சும் ஒரு துண்டு கொடுப்பாக...அம்புட்டுத்தான். நா என்னைக்கும் காசு கொடுத்து வாங்கினதுல்ல....விற்கிற காசை அப்டியே அம்மாட்டக் கொண்டு கொடுக்கணும் எனக்கு. அப்போ அம்மா மொகத்துல ஒரு சந்தோஷம் வருமே...அதுதான் எனக்கு வேணும்....என் தங்கம்...என் தங்கம்னு என்னக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுப்பாங்க...அதவிடவா இந்தக் கொய்யா டேஸ்டு.....?

அது போல போளி விக்குறவரு ஒருத்தர் வருவாரு....என்னடாது....இப்டி போட்டி அதிகரிச்சிட்டே போகுதேன்னு பயம் வந்திடுச்சி எனக்கு....அவரானா தேங்கா போளியா, பருப்பு போளியான்னு கேட்டுக் கேட்டு வித்துத் தள்ளிடுவாரு....அதெல்லாம் அப்பப்ப திங்கலாமேயொழிய சாப்பாட்டுக்கு வச்சிக்க முடியாதுல்ல...அதுக்கு என் சுண்டல வாங்கித்தான ஆகணும்....அதுனால என் பொழப்புல இன்னைவரைக்கும் மண்ணு விழல....ஏதோ நிக்காம ஓடிட்டிருக்கு....இந்த ட்ரெய்ன் மாதிரி....!

அந்த ரயிலிருக்கே...அது ஒரு லொடக்கு...வண்டி...எங்க எதுக்காக நிக்குதுன்னே தெரியாது....திடீர்னு ஆட்டு மந்தை குறுக்கே போய்ட்டிருக்கும்....மாடுகளா தண்டவாளத்துல படுத்துக் கெடக்கும்....என்ன உறாரன் அடிச்சாலும், அலறினாலும் நகரவே நகராது. வண்டிய நிறுத்திப்புட்டு டிரைவரும், லைன் மேனும்...ஓடிப் போய் வெரட்டுவாக...பக்கத்துக் குடிசைக, வீடுகளப் பார்த்துக் கத்துவாங்க...

ஒங்களுக்கெல்லாம் அறிவே இல்லயா...இப்டி மாடுகள அவுத்து விட்டா...அதுக செத்துத் தொலைஞ்சிதுன்னா யாரு பொறுப்பாகுறது....எத்தனை வாட்டி சொன்னாலும் தெரியாதா ஒங்களுக்கு....தெனம் இதே ரோதனையாப் போச்சு...ஒங்களோட...இனிமே இப்டிப் படுத்துக் கெடந்திச்சின்னா ரயில்வே போலீசக் கூட்டிட்டு வந்து....இழுத்து வேன்ல அனுப்பிச்சிடுவேன்.னு.. என்னென்னவோ சொல்லி மெறட்டித்தான் பார்ப்பாரு....ஆனா யாரும் கேட்குறதில்ல.

.மறுநாளும் மாடுக அப்டித்தான் கெடக்கும்...அதுல இன்னொரு பிரச்னை என்னன்னா...சாயங்காலம் வண்டி திரும்பைல....அங்க வண்டி வரும்போது பொழுது சாய்ஞ்சு இருட்டு கவியுற நேரமா இருக்கும். அப்போ சர்ரு...சர்ருன்னு கல்லுக வந்து விழும் வண்டில....நல்லா பெரும் பெரும் சரளக் கல்லுக...ஒரு பத்துப் பொடிப் பசங்க...நின்னிட்டு விருட் விருட்னு எறிஞ்சிட்டே இருப்பானுங்க...ஒருவாட்டி ஒரு வாத்தியாருக்கு மூக்கே தெறிச்சிப் போச்சு. ரத்தமானா கொட்டுது....துண்டை வச்சு அமுக்கியும் நிக்கல....அப்டியே மயங்கிட்டாரு அவுரு....அதுலர்ந்து சன்னக் கதவல்லாம் சாத்திடுவாங்க...அந்த ஏரியா தாண்டினதும் தெறந்துக்குவாங்க...போலீஸ்ல சொல்லி ஒருதரம் வண்டிய விட்டு எறங்கி வெரட்டுனாங்க....ஓரே ஓட்டம்....ஓடியே போய்ட்டாங்க அந்தப் பசங்க...

 இதுல ஒரு வேடிக்க இருக்கு...அதச் சொன்னா சிரிப்பீக...வண்டி திடீர் திடீர்னு நிக்குறதுக்குக் காரணமாயிருக்கு? தண்டவாளம் ரெண்டு பக்கத்துலயும் வெள்ளரிக்கா போட்டிருப்பாங்க...பிஞ்சு பிஞ்சா வௌஞ்சு பள பளன்னு .....என்னை எப்பப் பறிக்கப் போறன்னு கேட்குற மாதிரி இருக்கும்...அதென்ன ரயில்வே எடந்தான...சும்மாக் கெடக்குறத...இப்டிப் பண்ணினா என்னங்கிற மாதிரி கிராமத்து ஆளுக பயிரிட்டிருப்பாங்க...போனது போக மிச்சம்னு நல்ல வௌச்சலுக்குப் பெறவு பறிச்சு வியாபாரம் பண்றது....தலைய வெளிய நீட்டி எதுக்காக வண்டி நின்னுச்சின்னு பார்த்தா...ரயில்வே ஆளுக...தண்டவாளத்துக்கு கல் அணைக்க வேலைக்குன்னு  வந்திருக்கிறவுகன்னு...எறங்கி அறுவடை பண்ணிடுவாங்க....ஏய்...ஏய்...கொஞ்சம் விட்டு வைங்கய்யா...பாவம்....னு டிரைவர் கத்துவாரு....

ஒரு நாட்டு வைத்தியர் வண்டில வர்றதப் பார்த்திருக்கேன்...அவரு என்னடான்னா...இந்தச் செடி...அந்தச் செடின்னு மருந்துச் செடியாக் கண்டு பிடிச்சு...வேரோட பிடுங்கிட்டிருப்பாரு...மருந்து தயாரிக்கன்னுவே இவரு தெனமும் இந்த வண்டில வர்றாரோ..? எல்லா நேரமும் வண்டி கண்ட எடத்துல நிக்கிறதில்லயே...அப்புறம் எப்டி இவருக்கு வேண்டியதப் பறிப்பாருன்னு ரோசனை போகும் எனக்கு....நெறயப் பேரு...பார்த்தீங்களா சார்...இதுதான் ராமர் துளசி....இது எங்கயும் கிடைக்காது....காட்டுத் துளசிதான் கெடைக்கும்...இதுதான் ராமர் துளசி...கொண்டு போங்க..போய் வீட்டுல வைங்க....தெனம் ரெண்டு எலையப் பறிச்சு சாப்பிடுங்க...ஒடம்புக்கு நல்லது...ன்னு நண்பர்களுக்கு பிடுங்கிக் கொடுப்பாங்க...தன்னிச்சையா வளர்ந்த செடியா...அவ்வளவு மணம் இருக்கும் அந்த துளசில... ரயில் அலறிட்டுக் கௌம்புறதே சூப்பரா இருக்கும்...ஆளாளுக்கு அடிச்சுப் பிடிச்சு ஏறுவாங்க....உறாரன்தான் அலறுமேயொழிய வண்டி மெதுவாத்தான் நகரும்.நம்ம வசதிக்கு விட்ட வண்டிய்யா...நம்மள ஏத்தாமப் போயிறுமா....ன்னு சொல்லிச் சிரிச்சிக்குவாங்க...

 பசி தாங்காம பல பேரு காலைல எட்டு மணிக்கே பொட்டணத்த அவுத்துடுவாங்க...தோச, இட்லி, உப்புமான்னு கொண்டு வந்திருப்பாங்க....ரயில் பெட்டி பூராவும் சட்னி, சாம்பார் மணமா இருக்கும்...அந்த நேரம்தான் எனக்கு விக்கிற நேரம்....சுண்டல்...சுண்டல்...பட்டாணி சுண்டல்....பாசிப்பருப்பு சுண்டல்...கடலப்பருப்பு சுண்டல்னு போய் நிப்பனா.... நிறையப் பேரு வாங்கிடுவாங்க...அதுலயும் குறிப்பா பட்டாணி சுண்டல்னா ரொம்பப் பேருக்குப் பிடிக்கும்....உங்கம்மா நல்லா வைக்குறாகடா...ரொம்ப டேஸ்ட்... பெரும்பாலும் பட்டாணி சுண்டல்தான் கொண்டுட்டு வருவேன்...அதான் சீக்கிரமா வித்துப் போகும்...என்னா ஒரு சங்கடம்னா...இன்னம் ரெண்டு போடு...ஒரு கை போடுன்னு அனத்தி எடுத்திடுவாங்க...நானா பொட்டணம் போட்டு நீட்டுறது...திருப்தியே ஆகாது ஒருத்தருக்கும்...ஒருவேளை நா சின்னப் பயங்கிறதுனால என் கைல கொஞ்சமா வருதோன்னு எனக்கே சந்தேகம் வந்திடும்...ரெண்டு எடுத்துப் போடலேன்னா பிறகு வாங்க மாட்டாகளோன்னு பயம் வரும். எல்லாரும் இப்டிச் சொல்றாகளேம்மா...நீ பாரு...ன்னு அம்மாட்டக் கூட ஒரு நா நாலஞ்சு பொட்டணம் போட்டுக் காண்பிச்சேன்....சரியாத்தாண்டா இருக்கு என் கண்ணு....அவுக அப்டித்தான் கேட்பாக...நீ சின்னப் பயல்ல...ஏமாத்தி வாங்கப் பார்ப்பாக...அன்பா கேட்டுப் பார்ப்பாக....யார்ட்டயும் சண்ட போட்டுறாத கண்ணு....அப்புறம் வியாபாரம் படுத்துப் போகும் ராசா...கவனமா இருந்துக்க....எந் தங்கம்ல....

அம்மா சொல்வது மிகச் சரி என்றுதான் என் மனதுக்கு சொன்னது. அந்த ரயில்ல வர்ற அத்தன பெட்டிக்காரவுகளும் எனக்கு ஃப்ரென்ட்ஸ்.....அவுகளப் பிடிச்சி என்னைக்காச்சும் ஒரு வாட்ச்மேன் வேலையாச்சும் வாங்கிப்புட மாட்டேன்? அட...கூட்டிப் பெருக்கி, தண்ணி எடுத்து வைக்கிற வேலையாச்சும் கிடைக்காமயா போய்டும்...? அஞ்சாங் க்ளாஸ்வரைக்கும் படிச்சவன்தான நான்...பெறவுதான போதுண்டான்னுட்டாக வீட்ல...எட்டு க்ளாஸ் படிக்கணுமாமுல்ல...பியூனாகுறதுக்கு....வாட்ச்மேன் ஆகி அப்புறம் உயருமாமுல்ல...அதுல பியூன் ஆகலாம்னு ஒருத்தர் சொன்னாரு....அந்த அய்யா கூட கலெக்டர் ஆபீஸ்ல தாசில்தாரா இருக்காருன்னு சொன்னாங்க....அவுரு உடம்பு சரியில்லாதவரு போல்ருக்கு....ஒரு நா சாயங்காலம் வீடு திரும்பறச்சே...அவுரு திடீர்னு சரிஞ்சி விழுந்திட்டாரு....கையும் காலும் விலுக் விலுக்குன்னு இழுத்துக்குது...கூட இருந்தவுகளெல்லாம் சேர்த்துப் பிடிச்சி....சார்...சார்னு ஆதரவா அணைச்ச அன்னைக்கு அதப் பார்த்து என் கண்ணு கலங்கிப் போச்சு.....எவ்வளவு ஒத்துமையா இருக்காங்க....அந்த ஐயா மயக்கம் தெளிஞ்சி எழுந்தப்போ..மயங்கிட்டனா...ன்னு கேட்டாரு...பார்க்கவே பரிதாபமா இருந்திச்சி....வாய்ல நுரை வழிஞ்சி..அத அவர் துடைச்சிக்கிட்டே ரொம்ப நன்றின்னாரு...சுத்தியிருக்கிறவுகளப் பார்த்து...

..அப்டியே அவரப் படுக்க வச்சி. தண்ணி குடுத்து, விசிறி விட்டு ஆசுவாசப்படுத்தி......ஊர் வந்ததும் ஒரு ஆட்டோ பிடிச்சி ரெண்டு மூணு பேரு வீட்டுல கொண்டு விட்டிட்டு  வந்தாக...அப்புறம் ஸ்டேஷனுக்கு வந்து ராத்திரி பன்னெண்டு மணியப் போல அவுகவுக வண்டிய எடுத்திட்டு வீடு போனதாச் சொன்னாக....காலைல ஸ்டேஷன் வர்றதுக்கு வண்டி வேணும்ல....

அந்த ஐயாவப் பிடிச்சா காரியம் ஆகும்னு சொன்னாங்க...நா சின்னப் பயலால்ல இருக்கேன்...இன்னும் நாலஞ்சு வயசாகணும்டா...பொறு...பொறு...பார்த்து செய்வோம்னார் ஒரு சார்...அவரு ஐயரு..... விபூதி பூசிட்டு  நெத்தில சந்தனம், குங்குமமெல்லாம் வச்சிட்டு பளிச்சினு வருவாரு...எல்லார்ட்டயும் கலகலன்னு பேசுறவர் அவருதான். அவரு இருந்தா அந்தப் பொட்டியே சிரிப்பும் கூத்துமா இருக்கும்....சதா எதாச்சும் புஸ்தகத்தப் படிச்சிட்டே வருவாரு..அதுவும் உண்டு....ஒண்ணு சொல்ல மறந்திட்டனே...அந்த ரயில்ல மொதப் பெட்டிலர்ந்து, கடைசிப் பெட்டி வரைக்கும்....படிக்கிறதுக்கு புஸ்தகம் சப்ளை பண்றவரு அவருதான்...எலக்கியப் பத்திரிகையாம்...மாசா மாசம் வருமாம்....வெலையப்பார்த்தா நாப்பது, அம்பதுன்னு இருக்கும்...எதுக்கு இம்புட்டுக் காசு செலவு பண்ணி இத்தனையையும் வாங்குறாருன்னு தோணும்....வண்டி ஊர்ல கிளம்பறதுக்கு முன்னாடியே நிறையப் பேரு வந்து வந்து அவர்ட்ட புத்தகத்த வாங்கிட்டுப் போயிடுவாங்க...சாயங்காலம் தர்றேன் சார்...நாளைக்குத் தர்றேன் சார்ன்னு சொல்லி எடுத்திட்டுப் போயிடுவாங்க....ஆபீஸ்ல வச்சிப் படிப்பாங்களோ...ஆபீஸ்ல வேலதான பார்க்கணும்....?

அது போக வெவ்வேற புத்தகங்களும் அவர் கூட வரும். அதெல்லாம் வாங்கி என்னன்னாவது பார்க்கணும்னு எனக்குக் கொள்ளை ஆசை. சுமக்க முடியாம ஒரு ஜோல்னாப் பைல போட்டுட்டு வருவாரு. அதச் சுமந்து சுமந்து அவரு தோளு சரிஞ்சே போச்சோன்னு தோணும். அந்த ரயில்ல எல்லாரும்  புஸ்தகம் படிக்கிற பழக்கத்த ஏற்படுத்தினவரு அவுருதான். கண்ணாடி போட்டு, முடி நரைச்சு...இன்னொண்ணு.... அந்த நரைச்ச முடிக்கு சாயம் பூசி நா பார்த்ததேயில்ல...கூட வர்றவுக எல்லாரும் அப்டித்தான் வருவாக...கன்னங்கரேர்னு...அவுரு மட்டும் வெள்ளவெளேர்னு....தும்பப் பூவா பறந்திட்டிருக்கும் முடி..

 அந்த ஐயா ஒரு புத்தக்கத்தப் படிச்சு முடிச்சிட்டா....அன்னைக்கு அதப் பத்தி கூட இருக்கிறவங்ககிட்டச் சொல்ல ஆரம்பிச்சிடுவாரு..போச்சுடான்னு வெலகிப் போறவங்களும் உண்டு...ரொம்பவும் ஆசையாப் படிப்பாரு போல்ருக்கு....அவுரு சொல்றதக் கேட்கணுமே...அப்டியே சினிமா மாதிரி இருக்கும்....ரொம்ப ஞாபக சக்தி அவருக்கு....இப்டி மனசுல இருக்கிறத மழையாக் கொட்டுறாரேன்னு எனக்கா அதிசயமா இருக்கும்....கண்ணு கலங்கச் சொல்லுவாரு....கேட்குறவுகளுக்கு அது சினிமாப் படமா கண் முன்னால ஓடும்...கதையெல்லாம் வேறே எழுதுவாராம் அவுரு....இதுல வந்திருக்கு...அதுல வந்திருக்குன்னு பெருமையா எல்லார்ட்டயும் காண்பிப்பாரு...அப்டியா...ம்பாகளே தவிர...யாரும் உடனே வாங்கிக் கையோட படிச்சி நா பார்த்ததில்லே...இம்புட்டு ஆசையாச் சொல்றாரு.. பார்த்திட்டுப் பார்த்திட்டுத் திருப்பிக் கொடுத்தா எப்டின்னு தோணும் எனக்கு. படிக்கிற பொறுமை அங்க யாருக்கும் இல்லன்னு தோணிச்சு....

அவருதான் அந்த டாக்டர்கிட்ட விடாமப் பேச்சுக் கொடுக்கிறவரு....டாக்டரும் அந்த ஐயா கிட்டதான் பலதும் சொல்வாரு...ஒரு நா...இந்தா பார்த்தீங்களா...போலி டாக்டர்கள் லிஸ்ட்னு ஒரு பேப்பரக் காண்பிச்சாரு....இவ்வளவு பேரா....? எங்க...எந்த ஊர்ல....?  மாவட்டத்துலயா....இல்ல ஒரு ஊர்ல மட்டுமான்னு அந்த ஐயா கேட்டாரு.....டவுன்ல மட்டும்- இங்க மட்டுமே இத்தன பேரு இருக்கிறாங்க....ன்னு அவுக அத்தன பேரையும் கண்டு பிடிச்சிட்டதாவும் போலி கிளினிக்குகள மூட வச்சிட்டதாவும் சொன்னாரு...இவருக்கு எதுக்கு இந்த வம்புன்னு எனக்குத் தோணிச்சு....ஆனா அவருக்கு வேலையே அதுதானாம்...அரசாங்க உத்தரவாம்...அவரென்ன பண்ணுவாரு...சொன்னதச் செய்யத்தான அவுரு.........இந்தப் பெரிய டவுன்லயே இத்தன பேரு போலியா இருந்தாகன்னா...பெரிய பெரிய சிட்டில, மெட்ராஸ் மாதிரி பெரிய நகரத்துல  எவ்வளவு பேர் இருப்பாக...அவுகளெல்லாம் எப்டி ஒழிக்கிறதாம்?னு நா நினைச்சிக்கிட்டேன். படிக்காத இவுக எப்டி வியாதிக்கு மருந்து கொடுக்கிறாங்கன்னு தோணும்...

 அந்த டாக்டரய்யா...ஒரு வாட்டி தன் கோஷ்டியோட கண்ணகி கோயில் திருவிழாவுக்கு மருத்துவ குழுன்னு போனதாகவும், வழி மாறி, காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டு அவஸ்தைப் பட்டுப் போயி கடைசில ஏதோ ஒரு காட்டு இலாகா ஜீப் வந்து காப்பாத்தினதாவும் அனுபவத்தச் சொன்னாரு...அசல் சினிமாப் பார்க்கிறது போலவே இருந்திச்சி அன்னைக்கு.... யானை வந்து போன தடத்தப் பார்த்ததும், அது சாணி போட்டிருக்கிறது சூடா இருந்ததுனால அப்பத்தான் அந்த எடத்தக் கடந்து போயிருக்குன்னும் தெரிஞ்சி ஒளிஞ்சி, மறைஞ்சி இருந்த எடத்தைச் சொன்னதும், அங்க அவுக அறியாம அட்டை ஒடம்புல ஏறிக் கடிச்சிட்டிருந்ததும், ரத்தம் உறிஞ்சி, அதப் பிரிச்சி எறிய முடியாமக் கஷ்டப்பட்டதையும் அவுரு சொன்னப்ப, செவப்பா கொழு கொழுன்னு இருக்கிற டாக்டரு என்ன பாடு பட்டிருப்பாருன்னு எனக்கு பரிதாபமா இருந்திச்சி.....சனங்களுக்கு மருத்துவம் பார்க்கப் போன குழுவுக்கே மருத்துவம் பார்க்க வேண்டியதாயிடுச்சின்னு அவரே சொல்லிச் சிரிச்சிக்கிட்டாரு...ஆனா அது மறு பிறப்புத்தானுங்க...ன்னபோது அவர் கண்ணுல இருந்த பயம்...! அவரும் மனுஷன்தான....ன்னு நெனச்சிக்கிட்டேன்....

பஸ்ஸூக்குத்தான் அங்கங்க ஸ்டாப்பு உண்டு...ரயிலுக்கு ஸ்டாப்பு உண்டா? பார்த்திருக்க மாட்டீங்க... ஸ்டேஷன்தான உண்டு...ஆனா நாங்க போகுற அந்த ரயிலுக்கு ஸ்டாப் உண்டு...அதாவது கலெக்டர் ஆபீஸ் ஸ்டாப்...ஊருக்குள்ள நுழையும்போதே ஆரம்பத்துலயே கலெக்டர் ஆபீஸ் கட்டடம் வந்திடும்...அதுக்கு நேரா வண்டி நிக்கும். அங்க வேல பார்க்குறவுக...அப்புறம் அந்தப் பகுதில இருக்கிற மத்த ஆபீசுல வேல பார்க்குறவுக இப்டி நிறையப் பேரு அங்கயே எறங்கிடுவாங்க....ஏறக்குறைய வண்டி காலியாகிடும்...

காலைல போற அந்த ரயிலு....ஸ்டேஷன்லயேதான் நிக்கும். சாயங்காலம்தான் திரும்பும். அப்போ கடைசி ரெண்டு பெட்டில ஏலக்கா மூட்டைய ஏத்திக்கிட்டு வரும்.  அடிக்கிற ரயில் போக்குக் காத்துல வண்டி பூராவும் ஒரே ஏலக்கா மணம் கம கமன்னு வீசும்....அந்தச் சாயங்காலப் பயணத்தோட சுகமே தனிதான். நாந்தான் சாப்பாடு கட்டிக்கிட்டுப் போயிடுவேன்ல....கலெக்டர் ஆபீஸ்ல இறங்குறவுகளோட நானும் சேர்ந்து இறங்கிக்குவேன். கலெக்டர் ஆபீஸ்லவும் சுண்டல் வியாபாரம் உண்டு. அதான் ரெண்டு தூக்குல கொண்டு போறனே?...அம்மாட்ட நாந்தான் சொன்னேன் அந்த ஐடியாவ....பாவம் அம்மா...அதுக்காக ராத்திரியே பருப்பு ஊறப்போட்டு காலைல நாலு மணியப்போல எழுந்து சுண்டல செய்து வைக்கும். அப்பத்தான நா ஏழுக்குள்ளாற கொண்டு போக முடியும். அலைச்சதான்...அதுனால என்ன...ஊர்ல ரயில்வே ஸ்டேஷன்லயே உட்கார்ந்திருந்தா... ஒரு தூக்கு சுண்டல் தீரவே மதியத்துக்கு மேல ஆயிடுமே...சமயங்கள்ல மிஞ்சியும் போயிடுமே...ஊசிப் போச்சுன்னா வேஸ்ட்தான...ஆனா இது க்யாரண்டி... சுமக்க முடியாதுதான்...வேறே வழி...தீர்ந்து போனப்புறம் காலித் தூக்குதானேன்னு நினைச்சு சமாதானப்படுத்திக்குவேன்.....

....ஒரே மாதிரியே போயிட்டிருக்குமா...ஏதாச்சும் வேறே வரத்தான செய்யும்....நெனச்சாப்லயே வந்திடுச்சிங்க...ஆனா இப்டியா வினையா வரணும்....?

ச்சு....இப்போ அந்த ரயில நிறுத்திப் புட்டாக திடீர்னு....என் பொழப்பே கழண்டு போச்சு...பழைய குருடி கதவத் தெறடின்னு ரயில்வே ப்ளாட்பாரத்துலதான் உட்கார்ந்திட்டிருக்கேன்...அதுல போயிட்டிருந்தவுக எல்லாரும் இப்போ பஸ்ல போறாக....மூணு மாசத்துக்கு வெறும் இருநூறு ரூபா கொடுத்திட்டிருந்தவுக...இப்போ ஒரு நாளைக்குப் போக வர எழுபது கொடுக்கிறாங்க....என்னாச்சு செலவு.?...ஏதோ அகல ரயில்பாதை போடுறாங்களாம்...சொல்லிக் கிட்டாக...மூணு மாசத்துக்கு மேல ஆச்சு...வேல ஒண்ணும் ஆரம்பிச்ச மாதிரித் தெரில....அந்த அண்ணனுக யாரையும் இப்பப் பார்க்க முடியறதில்ல...எல்லாரும் எவ்வளவு அன்பானவுக....பஸ் ஸ்டான்டு எங்கயோ இருக்கு...அதனால யாரும் இந்தப் பக்கம் வர்றதில்ல...என் கண்ணுல படுறதும் இல்ல....என் சுண்டல் கிடைக்காம ஏங்குவாங்களேன்னு இருக்கு எனக்கு...! ஒரு நாளாவது அங்க போய் எல்லாரையும் பார்த்திட்டு வரணும்னு தோணுது....

ஆனா ஒண்ணு பாருங்க...அந்தக் கடைசி நாள் என்னால மறக்கவே முடியாதுங்க....எங்கம்மா செய்த புண்ணியம்தான் நான் அன்னைக்குத் தப்பிச்சது....என்னை மாதிரியே முறுக்கு, தட்டை, அப்பம், அதிரசம்னு  வித்திட்டு வந்த இன்னொரு பய.... எதிர்பாராம  மாட்டிக்கிட்டான்....என்னைக்குமில்லாம அன்னைக்கு திடீர்னு டி.டி.ஆர் வந்துட்டாரு....அவர அப்டித்தான் எல்லாரும் சொன்னாக...அந்த ஞாபகத்துல சொல்றேன்...கூட்டமான கூட்டம்...ஏதோ கோயில் திருவிழாவாம்...சனமானா எக்கச் சக்கமா ஏறிப் போச்சு....அந்த நெரிசலப் பார்த்தாலே எல்லாரும் டிக்கெட் எடுத்திருப்பாகளான்னு நிச்சயம் சந்தேகம் வரும். பாதிக்கு மேல எடுத்திருக்க மாட்டாக...வண்டிலயானா ஒரே கூச்சல் கொழப்பம்....மால போட்டுக்கிட்டு, மஞ்சத் துணி கட்டிக்கிட்டு, வேலும் கம்பும் எடுத்துக்கிட்டு...எந்தச் சாமிக்கு இந்தப் பூசன்னு பலரும் கேட்டுட்டிருந்தாங்க...போதாக் கொறைக்கு ஆடு, கோழின்னு வேறே ஏத்தியிருந்தாங்க...ஏத்த விடமாட்டாகளே...எப்டி இது நடந்திச்சுன்னு ஆளுக்கு ஆள் கேட்டிட்டிருந்தாக....பின்ன எப்டிக் கொண்டுட்டுப் போறதாம்? ஒரு நாளைக்குக் கொண்டு போனா இவுக ரயிலே நஷ்டப்பட்டு போகுமோ? அட போய்யா...ன்னு யாரோ எடுத்தெறிஞ்சு பேசிட்டிருந்தது காதுல விழுந்திச்சு....வழில ஏத்தியிருப்பாகளோன்னு பேச்சு....இருக்கிற கூட்டத்துல ஆள வெளியேத்துறதா, அதுகள வெளியேத்துறதான்னு சொல்லி ஒரே சிரிப்பு, கும்மாளம்....

அந்தக் களேபரத்துல நா அன்னைக்கு எப்டித் தப்பிச்சேன்னு எனக்கே தெரில. டிக்கெட் செக் பண்றவர் கண்ணுல நா படவேயில்ல....ஆனா அந்த முறுக்கு விக்கிற பய  வசமா மாட்டிக்கிட்டான்.....டி.டி.ஆரப் பார்த்திட்டு பயந்து நடுங்கி வண்டிக்குள்ளயே பிடி படாம ஓட ஆரம்பிச்சான்....நில்றா...நில்றா....ன்னு பின்னாடியே வெரட்டினாரு அவுரு...எங்கயாவது விழுந்து தொலைக்கப் போறான்னு கூட விரட்டியிருக்கலாம்தான்...என்ன நினைச்சானோ....கூடைய அப்டியே வண்டில போட்டுட்டு ஒரே தாவு.....ஓடுற வண்டிலர்ந்து வெளிய குதிச்சிட்டான்.....ஒரே செடி கொடி..சரளைக் கல்லு.முள்ளு..பொதரு...உருண்டு...உருண்டு....உருண்டு...என்னானான்? யாருக்குத் தெரியும்?

.வண்டியானா கடந்து போயிடுச்சி....கதவுப் பக்கம் நின்னு அவரானா கோபத்தோடவும் பயத்தோடவும் பார்த்திட்டே நின்னாரு....வண்டிய நிறுத்தவும் வைக்கல....நிறுத்தினா பிரச்ன பெரிசாயிடும்னு நினைச்சாரோ என்னவோ...? இத்தன சனத்துக்கு நடுவுல மாட்டிக்கிட்டா நிலமை என்னாவுறது?

என்னாச்சு...என்னாச்சுன்னு நம்மாளுக எல்லாரும் எழுந்து எட்டிப் பார்க்க ஆரம்பிச்சாங்க.. அம்புட்டுத் தலயும் சன்னல் வழி வெளில....யாரோ  சின்னப் பையன் வண்டிலர்ந்து குதிச்சிட்டானாம்...டி.டி.ஆர் வெரட்டினாராம்...பயந்திட்டுக் குதிச்சிட்டான்.....போல....யாருன்னு தெரில.....

ஐயையோ...வண்டி ஸ்பீடால்லங்க இருந்திச்சி....ஆளு பொழச்சிருப்பானா...? பயங்கரமா அடி பட்டிருக்குமே...!

என்னாச்சு தெரிலயே....? அடக் கடவுளே....தெரிஞ்சிருந்தா நாம சொல்லியிருக்கலாமேங்க...டிக்கெட் கூட எடுத்திருக்கலாமே...அதுக்குள்ளே ஏன் வெளில குதிச்சான்...? யாரு அந்தப் பய...? இந்தக் கூட்டத்தோட வந்தவனா?

புதுப் பையங்க...அரண்டுட்டாம் போல....

வழக்கமா சுண்டல் விக்கிற பையனா இருக்கப் போறாங்க...நல்லா பார்த்தீகளா....?

யாரு...ரங்கன்தானே....?

என்னது... ரங்கனா...? யாரச் சொல்றீங்க நீங்க...?

அட...அந்த சுண்டல் விக்கிற பயதாங்க...அவன் பேருதான் ரங்கன்....தெரியாதா உங்களுக்கு...? சரியாப் போச்சு....

ஆஉறா...அழகாப் பேரு வச்சிருக்கார் பாருங்க அவங்கப்பா...!..படிக்காத மேதை ரங்கன் ஞாபகம் வருது...!.....அந்தப் பய வண்டிலதான் இருக்கான்....அந்த சைடு, கூட்டத்துல ஒண்டியிருக்கான்.....இவன் புதுசு.....-

வர்கள் பேசிக் கொண்டது காதில் விழ, அது  கேட்டு டிக்கெட் சரிபார்ப்பவர் திரும்பவும் வந்து விடுவாரோ என்று பயந்து ஒடுங்கியிருந்தேன் நான். அதுநாள் வரை நானே வாய் விட்டுச் சொல்லாத என் பெயர் யாருக்கோ தெரிந்திருக்கிறதே...எப்படி...? என்றேனும் யாரிடமேனும் பேச்சு வாக்கில் என்னை மறந்து சொல்லியிருப்பேனோ? ஞாபகமே இல்லை....!

ரயிலே...ரயிலே...ரயிலே....கர கர கரவெனச் சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலே....- அப்பா பாடிக்கொண்டே இருப்பாரே... இந்தப் பழைய ரயிலும் அப்படித்தானே போகுது...-

அந்த இன்னொரு சிறுவன் விட்டுச் சென்ற சரக்குக் கூடை சீந்துவாரின்றி அநாதையாய் மூலையில் இருந்தது. பையன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை. வண்டி சில மைல் தூரம் கடந்திருந்தது. அதைப்பற்றி பிறகு யாரும் இப்போது பேசவுமில்லை. ஆனால் ஒரு அமைதி குடியிருந்ததை உணர முடிந்தது.

அன்றோடு என் வியாபாரமும் முடிந்தது. பிழைப்பில் மண் விழுந்தது. அந்த ரயில் ஓடிக் கொண்டிருந்த நாட்களில் காலையில் வண்டி கிளம்பியபோது பின்புற வாசல் கேட்டிலிருந்து  ரயில்வே தண்டவாளங்களுக்குக் குறுக்கே எதையும் கவனிக்காமல் ஓடி எங்கள் வண்டியைப் பிடிக்க வந்த வழக்கமான ஒரு ஊழியர்....பிளாட்பாரத்து பக்கச் சுவருக்கும் வண்டிக்கும் இடையில் நெருக்குதலாய் மாட்டிக் கொண்டதும், அவர் வயிறு அப்படியே அறுபட்டு அந்த இடத்திலேயே அவர் தலை  சாய்ந்ததும்....அப்போதும் எங்கள் வண்டி  அதனை அறியாமல் நிற்காமல் போய்க் கொண்டிருந்ததும், பலரின் குரல்கள்....சம்பந்தம்...சம்பந்தம்...ஐயோ சம்பந்தம்...இப்டி மாட்டிக்கிட்டியே....என்று  அலறியதும்.....அடுத்தாற்போல உள்ள கல்லூரி ஸ்டாப்பில் நிறையப் பேர் இறங்கி அவரைப் பார்க்க ஊர் திரும்பியதும்...-கண்ணீரும் துக்கமுமான என் உடன் பிறவாச் சகோதரர்களின், அண்ணன்மார்களின்,  பெரியவர்களின் அந்த நாட்கள்தான் இப்போதும் மறக்காமல், மறையாமல்  என் நினைவில் வந்து கொண்டேயிருக்கின்றன.

                           -------------------------------------------------------------

 

      

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...