10 டிசம்பர் 2019

“தண்ணி - பட்ட பாடு....“சிறுகதை” -தினமணி கதிர்-8.12.19



“சிறுகதை”                                       -----                                       .
“தண்ணி - பட்ட பாடு....!!?”
      குழாயை அழுத்தி மூடினான் சுப்பிரமணி. தண்ணீர் நிற்கவில்லை. அடியில் உள்ள நட்டு கழன்றிருக்குமோ என்று சந்தேகித்து இடது கையால் அடிப்பகுதி நட்டை நன்றாக டைட் செய்தான். திருகிக் கொண்டேயிருந்தது. கையால் அதைப் பிடித்துக் கொண்டே குழாயைச் சரி செய்ய முயற்சித்தான். கீழேயும் இறுக்கி, மேலேயும் இறுக்கினாலும் தண்ணீர் ஒழுகத்தான் செய்தது. வாஷர் மாற்ற வேண்டும். தண்ணீர் ஒழுகி அருகிலுள்ள துளை வழியே மூடிய சாக்கடையில் வீணாய் இறங்கிக் கெண்டிருந்தது.
      வாரத்தில் இரண்டு நாள் அந்தத் தொட்டிக்குத் தண்ணீர் நிரப்புவார்கள். தண்ணீர்  லாரிக்காரர்கள் ஒழுகுவதைப் பார்த்துக் கொண்டே போய்விடுகிறார்கள். குழாய் ரிப்பேர் எங்கள் வேலையில்லை என்று. சற்றுத் தள்ளி இருக்கும் அடுக்ககத்தின் இரண்டாவது மாடியில் இவன் குடியிருக்கிறான். அங்கிருந்து பார்க்கும்போதெல்லாம் தண்ணீர் தரையில் வீணாய்ப் போய்க் கொண்டிருப்பது மனதைச் சங்கடப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. பாதித் தொட்டித் தண்ணீர்தான் பிடிக்கப்படுகிறது, மீதிப் பாதி விரயம்தான்.
அருகிலேயே ஒரு வீடு. தனி  கீழ் வீடுதான். அவர்களாவது ஏதேனும் ஒரு பிளாஸ்டிக் குடத்தைக் கொண்டு வந்து வைத்து, அதில் ஒழுகட்டும் என்று  வீணாகாமல் தடுக்கலாம். வணையமாய்த் தண்ணீர் பிடித்துக் கொள்ள மட்டும் தெரிகிறது. சுயதேவைப் பூர்த்தி…அல்ல…அல்ல…சுயநல தேவைப் பூர்த்தி.   
ஒரு நாள் இரவு பத்து மணிக்கு மேல் தற்செயலாய் இவன் கண்ணில் பட்டது அது. குழாயில் ஒரு ட்யூப் மாட்டி, அவர்கள் வீட்டு பிளாஸ்டிக் தொட்டிக்கு இழுத்திருந்தார்கள். என்ன அநியாயம்? தெருவுக்குச் சொந்தமான அந்தப் பொதுத் தொட்டியில் தண்ணீர் நிரப்புவது அந்தப் பகுதிப் பொது மக்களின் பயன்பாட்டிற்குத்தானே….! எல்லாத் தண்ணியையும் இவர்களே பிடித்துக் கொண்டால் மற்றவர்களின் உபயோகத்திற்கு வேண்டாமா? மனசாட்சி என்ற ஒன்று உண்டா இல்லையா?
.இன்னிக்குத்தானே தண்ணி விட்டிருக்காங்க…நாளைக் காலைல பிடிப்போம்…என்றிருக்கலாம்.
ஆபீஸ் போயிட்டு வந்து சாயங்காலமாப் பிடிப்போம்…என்று போகலாம்…
வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டுப் பிடிப்போம் வீட்டு வேலைக்காரம்மா வந்தபின்பு பிடிக்கச் சொல்லலாம் என்றிருக்கலாம்.
அவரவருக்கு வசதிப்படும் நேரம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? வீட்டுக்கு வீடு அடிபிடியான வேலைகள்.  இப்படி மொத்தத் தண்ணீரையும் காலி செய்தால்? தங்கள் பாடு கழிந்தால் சரி என்று?
ஏங்க…உங்க ஒரு குடும்பத்துக்காகவா இந்தத் தொட்டில தண்ணி நிரப்புறாங்க…? ஒரே நாள் ராத்திரில நீங்களே அவ்வளவையும் பிடிச்சித் தொட்டியைக் காலி பண்ணிட்டீங்கன்னா, மத்தவங்களுக்கு வேண்டாமா? பக்கத்துல உங்க வீடு இருக்குதுங்கிறதுக்காக இப்டியா அநியாயம் பண்றது? உங்கள மாதிரித்தானே மத்தவங்களும்?
யாரு மத்தவங்களப் பிடிக்க வேண்டாம்னு சொன்னது…? அவுகளா வந்து பிடிச்சிக்கிட வேண்டிதான…? யாரு தடுத்தாக…? கார்ப்பரேஷன்ல தண்ணி நிரப்புறது எங்களுக்கும்தானே? எங்க நேரத்துக்குத் தகுந்த மாதிரி நாங்க பிடிச்சிக்கிறோம்… கேட்க வந்துட்டாரு…..!
உங்களுக்கும்தான்…ஆனா உங்களுக்கு மட்டுமே இல்லையே?
என்ன சார் பேசுறீங்க? நாங்களேவா அம்புட்டையும் பிடிக்கிறோம்…? அவ்வளவு தண்ணி எங்களுக்கெதுக்கு?
பின்னே…? எத்தனை பேர் வந்து வந்து குழாயைத் திறந்து பார்த்திட்டு ஏமாந்து போறாங்க…?  பாதித் தொட்டியாவது விட்டு வைக்கலாமில்ல…?
சாவகாசமால்லாம் பிடிக்க முடியாது சார்….தண்ணி வர்றதப் பார்த்து, உடனுக்குடனே பிடிச்சிக்கிடணும்….தண்ணி கிடைக்கிறது அத்தனை கஷ்டமாயிருக்குது…நாங்க அலெர்ட்டா இருக்கிறோம்….அவுங்களும் வந்து பிடிச்சா, வேண்டாம்னா சொல்லப் போறோம்….
 அதான் மொத்தத் தண்ணியையும் இறக்கி, தொட்டியக் காலி பண்ணிடுறீங்களே…அப்புறம் எங்கேயிருந்து பிடிக்கிறது….?
யாரு சார் காலி பண்ணினா…? தண்ணி கெடக்கு சார் தொட்டில…..என்னவோ உள்ள பூந்து பார்த்த மாதிரிச் சொல்றீங்க…?
நீங்க ரெண்டு மருமகளோட இருக்கீங்க…அவுங்க பிடிச்சிக் கொண்டாந்து நெரப்பிடுறாங்க….போதாக் குறைக்கு ட்யூப் போட்டு இறக்குறீங்க….பொதுக் குழாய்ல இப்டி ட்யூப் மாட்டி தனி வீட்டுக்கு இழுக்கலாமா? தப்பில்லயா…?
யார் சார் இழுத்தா? என்னவோ பார்த்தா மாதிரிச் சொல்றீக….ஏதாச்சும் தண்ணி கெடந்தா வருதா பார்ப்போம்னு மாட்டிப் பார்த்தோம்… ….
இவ்வளவும் இவனாக அவர்களுடன் சண்டைபோட்டதுபோல் நினைத்துக் கொண்டதே தவிர இன்றுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை. இவனோ ஊருக்குப் புதுசு. இதெல்லாம் கேட்க விருப்பம்தான். ஆனால் மனது தயங்குகிறது. ஏனோ பயப்படுகிறது.
யாராவது பாதிக்கப்படுபவர்கள் கேட்பார்கள் என்று பார்த்தால் ஒரு ஆள் வாயைத் திறப்பதாய்  இல்லை. அவர்களுக்கும் தன்னை மாதிரி பயம்தானோ என்று நினைத்துக் கொண்டான். தண்ணீர் இல்லாமல் வெறுங்குடத்தோடு திரும்புகிறார்களேயொழிய, காலைலதான் தண்ணி விட்டிருக்கான்…அக்குள்ளேயுமா காலியாகும்? இதென்ன உங்க வீட்டுக்குன்னு எழுதி வச்ச தொட்டியா…? பொதுக் குழாய்மா….எல்லாரும் பிடிக்கணும்…பயன்பெறணும்…நீங்க பண்றது நல்லால்லே….என்று யாராவது சொல்ல வேண்டுமே…! ஊறீம்….அத்தனை அப்பாவிகளா இப் பகுதி மக்கள்?
ஒரு நாள் ஒரு வீட்டுப் பெண்மணி தன் பெண்ணோடு வந்து நாலைந்து குடங்கள் பிடித்த போது அந்தம்மாள் சொல்லியது…
பார்த்துப் பிடிங்க…எல்லாருக்கும் தண்ணி வேணும்….இதோட நிறுத்திக்குங்க…நாங்களும் பிடிக்கணும்…..சும்மாச் சும்மா வரக் கூடாது…..
இந்த தைரியத்தை யார் கொடுத்தது இவர்களுக்கு?  இது தைரியமா அல்லது அடாவடியா?
அந்தப் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு மேல் மூடி இல்லாமல் எத்தனை நாள் கிடந்தது. செத்தை குப்பைகள்…ஏதேனும் பறவைகள் விழுந்து செத்தால்…? யாரோ ஒரு புண்ணியவான்…யாருக்கு ஃபோன் செய்தானோ. என்ன சொன்னானோ….ஒரு நாள் ரெண்டு பேர் வந்து அதற்கு ஒரு மூடியைப் போட்டு விட்டுப் போனார்கள். அது காற்றில் பறந்து விடாமல் இருக்க ஒரு கல்லையும் பாரமாக வைத்தார்கள். நம்மாட்களின் மூளையே மூளை…! ரொம்பவும் லேவுடியாய் இருந்தது அந்தமூடி. சற்று கனமாய் வாங்கக் கூடாதோ? எவ்வளவு பெரிய தொட்டி? அதற்கேற்ற மூடி போட்டால்தானே பொருத்தம்?
விடுங்க…நமக்கென்ன வந்தது…? என்ற விமலாவின் பேச்சு இவன் வாயை அடைத்திருந்தது. இவன் வீட்டுக்குத் தேவை ரெண்டு குடம். மற்றப்படி காசுக்கு வாங்கும்  கேன் தண்ணீர்தான். அதையே கொதிக்க வைத்துக் குடித்துக் கொள்கிறார்கள்.
அடுக்கக இரண்டாம் மாடி வீட்டின் இவன் அறை அந்தத் தண்ணீர்த் தொட்டியைப் பார்த்தே இருக்கும். குழாய்க்குக் கீழே படிந்திருக்கும் ஈரம் காட்டிக் கொடுத்து விடும். தண்ணீர் விட்டுட்டான் போல்ருக்கே….என்று குடத்தோடு கிளம்பிப் போய்ச் சட்டென்று பிடித்துக் கொண்டு வந்து விடுவான்.
கடைக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கையில் பக்கத்துத் தெருவில் இருக்கும் அந்த இன்னொரு  தண்ணீர்த் தொட்டி இவன் கண்ணில் பட்டது அங்கேயும் இதே மாதிரி ஜமாபந்தி நடந்து கொண்டிருந்தது
இவர்கள் ரெண்டு இடத்திலும் வீடு கட்டிய பிறகு அங்கு தண்ணீர்த் தொட்டி வந்ததா?  அல்லது தண்ணீர்த் தொட்டி கட்டிய இடம் பார்த்து நிலம் வாங்கி அங்கு வீடு கட்டினார்களா?
அவன் சொந்த ஊரில் இருக்கையில் சாலை சரியில்லை, தெரு விளக்கு எரியவில்லை சாக்கடை ஓடவில்லை, குப்பைத் தொட்டி இல்லை…தெருக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று பலவற்றிற்கும் அஞ்சலட்டையில் புகார் எழுதிப் போட்டுக் கொண்டேயிருப்பான். பொது விஷயங்கள் அவன் கண்ணில் படும்போது என்னமாவது செய்தேயாக வேண்டும் என்கிற உறுத்தல் அவனுக்கு சிறுவயது முதற்கொண்டே உண்டு. எத்தனையோ செய்திருக்கிறான். யாரிடமும் எதுவும் சொல்லிக் கொண்டதில்லை. மணி ஆர்டர் பாரம் பூர்த்தி செய்து கொடுப்பது, கடிதம், முகவரி எழுதிக் கொடுப்பது, ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பம் தயார் செய்து கொடுப்பது, பிறப்பு இறப்புச் சான்று பெற உதவுவது, வாரிசுச் சான்றிதழ் பெற அலைவது…என்று எத்தனையோ….உண்டுதான். அவனின் இலவச உதவிகளைப் பயன்படுத்திக் கொண்டோர் பலர். எதற்கும் பிரதி உபகாரம் எதிர்பார்த்ததில்லை.
இந்த சென்னைக்கு வந்த பின்புதான் அதெல்லாம் நின்று போயிற்று. அந்த உணர்வு என்னானது, செத்துவிட்டதா?  இன்னும் ஊரே மனதில் படியவில்லை... கடந்த ஓராண்டில் கண்ணில் பட்டு உறுத்திய விஷயம் இது ஒன்றுதான். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதான். அநியாயத்தைத் தினமும் கண்கொண்டு கண்டுவிட்டுப் பேசாமல் வாய்மூடி மௌனியாகக் கோழையாக எப்படிப் போய்க் கொண்டிருப்பது? இருக்கவும் முடியவில்லை. மென்று முழுங்கவும் மறுக்கிறது மனம். நாட்களும் வீணே கடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சுப்பிரமணி என்ன செய்வது என்று யோசித்தான். தண்ணீர் நிற்காது ஒழுகிக் கொண்டேயிருந்தது. ஒன்று அதற்கு வாஷர் மாற்ற வேண்டும். அல்லது குழாயையே மாற்ற வேண்டும். கார்ப்பரேஷன் குழாய்…நம் இஷ்டத்திற்குத் தொட முடியாது.. வெயிலில் மாசக் கணக்காய் காயும் ப்ளாஸ்டிக் தொட்டி டப்பென்று விரிந்தாலும் போச்சு….
 சரி…என்று முடிவுக்கு வந்து ஃபோன் நம்பர் இருக்கிறதா என்று தேடினான். கவுன்சிலர் பெயர் எழுதப்பட்டிருந்தது. கீழே குறிக்கப்பட்டிருந்த ஃபோன் நம்பரை மறைத்து ஏதோவோர் போஸ்டரை ஒட்டியிருந்தார்கள். ரிப்பேர் ஆனால் அது அரசாங்கப் பொறுப்பு. தண்ணீர் பிடிப்பது மட்டும்தான் எங்கள் பொறுப்பு. இதென்ன நியாயம்? பொதுச் சொத்தைப் பாதுகாப்பதும் அதை உபயோகிக்கும் நம்மின் கடமைதானே?

சுப்ரமணி ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் ஃபோன் எண்களில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடினான். கவுன்சிலர் எண் இல்லை. ஒரு முறை வெள்ள நிவாரணம் பெற வேண்டி விண்ணப்பம் எழுதிக் கொண்டு அவரிடம் போய் நின்றது நினைவுக்கு வந்தது. அடுக்ககத்தில் அத்தனை பேரிடமும் வி்ண்ணப்பம் சேகரித்திருந்தான்.  யாரோ கொஞ்சப் பேருக்கு ஆரம்பத்தில் கொடுத்ததோடு சரி…மற்றதெல்லாம் ஸ்வாகாதான். பழியாய்க் காத்துக் கிடந்த மக்கள், நாள் தவறாமல் அலைந்த மக்கள் கடைசியில் ஏமாந்துதான் போனார்கள். நேரடியாகவே சொல்லிப் பார்ப்போமே என்று தோன்றியது. - போய் நின்றவனுக்கு அதிர்ச்சி. கவுன்சிலரின் ஆபீஸ் பூட்டியிருந்தது. வாசலில் போட்டிருந்த நீள பெஞ்சில் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார்.
நீங்க எந்தக் காலத்துல சார் இருக்கீங்க….? இப்பத்தான் கவுன்சிலரெல்லாம் கிடையாதுல்ல…. ….கார்ப்பரேஷன் ஆபீசுக்குப் போய்த்தான் சொல்லணும்.இப்டி அலையுறதுக்கு நீங்களே போனாப் போவுதுன்னு ஒண்ணு வாங்கி மாட்டிடுங்க சார்….யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க….ஒரு ப்ளம்பரக் கூட்டிட்டுப் போங்க….அவன் பைப் லைனப் பார்த்திட்டு எத்தனை இஞ்ச் கொழா வாங்கணும்னு சொல்லுவான்…வாங்கிக் கொடுங்க…அவன் கேட்குற கூலியக் கொடுங்க…செய்திட்டுப் போயிடுவான்….தெருக்கள்லெல்லாம் அவுங்களேதான்செய்துக்கிறாங்க.உங்க நகருக்குன்னு நலச் சங்கம் இருக்குமில்ல சார்…அவுங்ககிட்டக் கூடச் சொல்லுங்க…செய்திருவாங்க….
சுப்ரமணிக்கு அது நல்ல யோசனையாய்த் தோன்றியது. இத்தனை நாள் அப்படி ஒன்று தனக்குத் தோன்றவில்லையே?  …தினமும் காலையில் வாக்கிங் போகும்போது ஒரு இடுக்கு மாதிரி சின்ன இடத்தில் ஒரு போர்டு இருந்ததைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அங்கு போய் அவர்களிடம் சொல்லி- விடுவோம்…முடிவுக்கு வந்தான் சுப்ரமணி.
பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. அங்கங்கே  சாலை விளக்குகள் ஒளி விட ஆரம்பித்திருந்தன. நெடுகப் பார்வையைச் செலுத்திய போது வரிசையாக விளக்குகள் இடை விடாமல் எரிவது அந்த நீண்ட வீதிக்கு அழகைக் கூட்டியது. திட்டமிட்டு நகரை வடிவமைத்திருக்கிறார்கள்தான்…
 தெரு நாய்கள் சில அங்கங்கே நின்று முன்னும் பின்னுமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தன. வீதி நாய்கள் அதிகம் இருப்பதை நினைத்துக் கொண்டான். வழக்கமாய் அவன் வீடு நெருங்குகையில் இரண்டு நாய்கள் வாலாட்டிக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து வரும்.., அருகிலுள்ள கடைக்குள் நுழைந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டான். தினமும் வாக்கிங் போய்விட்டு வரும்போதெல்லாம் அவைகளுக்குப் போட்டுவிட்டுத்தான் வீட்டுக்குள் நுழைவான். அந்தப் பழக்கத்தில் ஓடி ஓடி வந்து கால்களைத் தூக்கி இவன் மேல் வைத்து நிற்கும். அந்தக் கண்கள்தான் என்னமாய்ப் பேசுகின்றன?
ஒண்ணும் பிரச்னையில்ல சார்...நீங்களே ஒரு பிளம்பரப் பார்த்து , புதுக் குழாய் ஒண்ணை மாட்டி விட்டிடுங்க...அவ்வளவுதான்..  - இயல்பாய்ச் சொன்னார் செக்ரட்டரி.
எடுத்த எடுப்புல புகாரோட நுழைஞ்ச முதல் மெம்பர் நீங்கதான்...-சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டார்.
ரெண்டு ப்ளாட்டுக்கிடைல வெறும் மூணு சென்ட்ல அவுங்க மாட்டிக் கிட்டாங்களே...அதைக் கவனிச்சீங்களா...?  
சட்டென்று புரியாமல் விழித்தான் இவன்.
அதான் சார்...தண்ணியப் பூராவும் அவுங்க வீட்டுக்கே பம்ப் போட்டு இழுத்திடுறாங்கன்னு சொன்னீங்களே... அந்தப் பிரச்னை இனி இல்லைங்கிறேன்..
எப்டி..சொல்றீங்க...?
வலது இடது ரெண்டு சைடுமே பெரிய்ய்யய பில்டர்ஸ்...நடுவுல இவுங்க...நிக்குமா...இல்ல நிலைக்குமா...? கூடாரத்தத் தூக்க வேண்டிதான்....
வித்துட்டாங்களா...?
விற்கல....விரட்டிட்டாங்க...! அது பெரிய்ய்ய கை சார்.. நிக்க முடியுமா எதுத்து?
அப்டீன்னா...?
அப்டீன்னா அப்டித்தான்......இந்த வாரத்துல அவுங்க போயிடுவாங்க...அந்தச் ஓட்டு வீட்ட ப்ளாட்டுக்காரன் தூக்கிடுவான்......மொத்த இடமும் பெரிய அபார்ட்மென்ட்டா ஆகுது...அதனால தண்ணித் தொட்டிக்கு எந்த பாதகமும் இனி இருக்காது இப்போதைக்குப் பிரச்னை தீர்ந்ததுல்ல...விடுங்க... அவ்வளவுதான்...பேச்சை முடித்துக் கொண்டார் செக்ரட்டரி.
செய்தி இவனுக்குள் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருப்பதை உணர்ந்தான். அவர்கள் எங்கே போவார்கள்? அந்த இன்னொரு வீட்டுக்குப் போய் விடுவார்களோ...? பாவம்...!
தொட்டிக்கும் தண்ணீர்ப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் அங்கிருந்து விரட்டப்படுவதான செய்தியை மனசு ஏனோ ஏற்க மறுத்தது.
பொழுது விடிந்த வேளையில் அந்த வீட்டின் முன்னால் லாரி நின்றிருக்க, விரைசலாக சாமான்கள் அதில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த காட்சி இவன் மனதை மேலும் சங்கடம் கொள்ள வைத்தது. அதனிலும் மேலாக அடுத்த சில நாட்களில் நடந்ததுதான் க்ளைமாக்ஸ்.
                அந்த ஓட்டு வீடு இடிக்கப்பட்டு அந்த இடத்தையும் வளைத்து அடுக்ககம் கட்ட வானம் தோண்டப்பட்டபோது அந்தத் தண்ணீர்த் தொட்டியும் அங்கிருந்து வேக வேகமாய்  அகற்றப்பட்டதுதான் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொட்டியை மேடையிலிருந்து இறக்கி, பாதிக்கும் மேலாக இருந்த நீரை அப்படியே சாலையில் கவிழ்த்து விட்டதுதான் பார்க்க மனதை மிகவும் சங்கடப்படுத்திய காட்சி. எங்க ஆட்டம் ஆரம்பிச்சாச்சு என்பது போலிருந்தது அச்செய்கை.
                சொந்த ஊரில் விட்ட வேலையை இங்கே திரும்பவும் துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அந்தக் கணத்தில் உணர்ந்தான் சுப்ரமணி. அந்தத் தெருவுக்கு உடனடியாக ஒரு தண்ணீர்த் தொட்டி நிறுவியாக வேண்டும் என்று வலியுறுத்தி விண்ணப்பம் எழுதி வீடு வீடாகச் சென்று கையொப்பம் பெற்றான்.
      தொட்டித் தண்ணி முழுவதையும் அந்த ஓட்டு வீட்டுக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தியபோது எதிர்த்துக் கேட்கத் துணியாத தெருக்காரர்கள், உள்ளதும் போச்சே என்று  இந்த விண்ணப்பத்தில் சரி சரியென்று அவசர அவசியமாய்க் கையொப்பமிட்டார்கள்.
                மறுநாள் காலையில் அவர்களில் சிலரையும் உடன் அழைத்துக்  கொண்டு கார்ப்பொரேஷன் அலுவலகம் நோக்கி ஊர்வலமாய் நடையைக் கட்டினான் சுப்ரமணி.
                                                                                ------------------------------------------------

               


                                                 






             

தினமணி-சிறுவர் மணி-அரங்க நாடகம்-7.12.19 இதழ் -வாசிப்பும் நேசிப்பும்




அரங்கம்                                                                            காட்சி – 1                                                                                                                -                                                                                                                                    
“வாசிப்பும் நேசிப்பும்”
தேவகி – (அடுப்படியிலிருந்து அந்த அறையை நோக்கி வந்து கொண்டே) இதுக்குத்தான் சொன்னேன்…அவனுக்கு லீவு நாளைன்னிக்கு தூசியத் தட்டாதீங்கன்னு….பாருங்க…வந்து நின்னுட்டு தும்முறான்…
தியாகராஜன் – எனக்கு இன்னிக்குத்தானே டைம்..என் லீவன்னிக்குதானே நானும் செய்ய முடியும்….
 தேவகி –…போய் படி…இல்ல விளையாடு.. …இங்க தூசி முன்னால நிற்கக் கூடாது….
தியாகராஜன் – அவனுக்கு இந்த ஜாதிக்காய்ப் பெட்டி மேலே ரொம்ப நாளா ஒரு கண். …எங்கப்பா சேர்த்து வச்ச புத்தகங்களைக் காண்பிக்கப் போறேன்… ….
தேவகி –…அதுல பார்க்கிறதுக்கு என்ன இருக்கு…அப்டியே மொத்தமாத் தூக்கி …திண்ணைல கொண்டு கொட்டினா…பேப்பர்காரன் தூக்கிட்டுப் போறான்…
சதீஷ் – என்னம்மா நீ இப்டிச் சொல்றே…தாத்தா அருமையான புக்ஸையெல்லாம் வச்சிட்டுப் போயிருக்கிறதா அப்பா சொல்றாங்க…நீ தூக்கி எறிங்கிறியே…?
தேவகி –அத்தனையும் இத்துக் கிடக்கு…இத இன்னம் வேறே பாதுகாக்கணுமாக்கும்….? ஒரே பிசுக்கு நாத்தம்…மூக்கப் பொத்திக்கோ….
தியாகராஜன் – நீ சொல்றது உண்மைதான்…எல்லாப் புத்தகங்களையும் படிக்க முடிலதான்…ஆனா நல்லாயிருக்கிறவைகளை  இவனுக்காவது கொடுக்கலாம்தான்…
சதீஷ் – கண்டிப்பா படிப்பேன்ப்பா….எங்க ஸ்கூல் லைப்ரரில உட்கார்ந்து படிக்கைல எந்தப் புத்தகம் கேட்டாலும் டக்கு டக்குன்னு எடுத்துத் தருவாங்க… …படிக்கிற புத்தகங்கள ஓரத்துல மடிக்கக் கூடாது….அன்டர்லைன் பண்ணக் கூடாது… …எந்த வரிசைல எடுத்தமோ அதே இடத்துல ஞாபகமாக் கொண்டு … வைக்கணும்…அடுக்கு குலையக் கூடாதுன்னு…சொல்வாங்க…
தியாகராஜன் – கேட்டியா அவன் சொல்றதை…? படிக்க ஆசைப்படுற குழந்தைகளைத் தடுக்கக் கூடாது…அது நல்ல பழக்கம்தானே…
தேவகி – என்னவோ பண்ணுங்க…. இதுதான் மிச்சம் இந்த வீட்ல…..
தியாகராஜன் –படிக்கப் படிக்க அறிவு வளரும்…விசாலமடையும்…விரும்பி வந்து நிற்கிற பையன்ட்ட தடை போடலாமா?
காட்சி – 2   இடம் – வீடு    மாந்தர் – சதீஷ் மற்றும் அப்பா தியாகராஜன் (அறைக் கதவை அடைக்கிறார்)
தியாகராஜன் – இந்தா…இதப் பாரு…இது ராஜாஜி   எழுதின “சக்ரவர்த்தித் திருமகன்” பழைய புத்தகம். இது இப்போ இராமாயணம்ங்கிற பேர்ல வந்திருக்கு. இது வியாசர் விருந்து…அதாவது மகாபாரதம். இது ….உ.வே.சா.வோட  “என் சரித்திரம்” .  இது பார்…முக்கியமான புத்தகம்…வள்ளலாரோட திருஅருட்பா…. …எல்லாமே ரொம்ப முக்கியமான புத்தகங்கள். இந்தா…இது ஒண்ணு….திருக்குறள் உரை…மு.வரதராசனார்னு ஒரு பேராசிரியர், தமிழறிஞர் இருந்தார்…அவர் எழுதினது… முக்கியமான புத்தகம்…கொஞ்சம் கொஞ்சமா படிக்க ட்ரைப் பண்ணு…
சதீஷ் – கண்டிப்பாப்பா…தாத்தா எவ்வளவு புக்ஸ் சேர்த்து வச்சிருக்கார்? அப்போ எவ்வளவு படிச்சிருப்பார்?  …
தியாகராஜன் – நல்ல புத்தகங்களை தேடி எடுத்துப் படிக்கிறதும், சேர்த்து வைக்கிறதும் முக்கியம்.  … வீட்டுக்கு வீடு லைப்ரரி  இருக்கணும்…புது வீடு கட்டிக் குடி போறாங்களே…அப்போ…புத்தகங்களுக்குன்னு அலமாரியா வச்சு, ஒரு அறையவே தனியா கட்டணும்…புத்தகங்கள் பொக்கிஷங்கள்….அறிவுச் செல்வமில்லையா…? நல்லா கவனம் வச்சிக்கோ….பாடங்களுக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ்…அப்புறம்தான் இதெல்லாம்..ஓ.கே…..?
சதீஷ் – ஓ.கே.ப்பா….நான் எப்பயுமே க்ளாஸ் ஃபர்ஸ்ட்தாம்ப்பா…
தியாகராஜன் – குட் பாய்…குட் பாய்….ஓடு….அம்மா கூப்பிடுறா….சாப்பிடப்போ….. (சதீஷ் டைனிங் டேபிளை நோக்கி ஓடுகிறான்)
காட்சி 3 -    நேரம் – இளம் காலைப் பொழுது. சூரியன் உதித்து மெல்லத் தன் கிரணங்களை விரிக்கும்  காட்சி. மாந்தர் – சதீஷின் அம்மா தேவகி, சதீஷ்….. மற்றும் அப்பா தியாகராஜன்
மொட்டை மாடிக்குப் போக படியில் ஏறுகிறாள்.
சதீஷ் – படித்துக் கொண்டிருந்த பாடப் புத்தகத்தைக்  கீழே வைத்து விட்டு ஓடுகிறான்…அம்மா…அம்மா…நானும் வர்றேன்…நானும் வர்றேன்…..
தேவகி –வேண்டாம்…பேசாம உட்கார்ந்து பாடத்தைப் படி…
சதீஷ் – வரத்தான் செய்வேன்….நீ என்ன செய்றேன்னு பார்க்கணும் ….
தியாகராஜன் – வந்தா வந்துட்டுப் போறான்… …குழந்தைகளுக்கு மாடில ஓடியாடுறதுல ஒரு சந்தோஷம்…
தேவகி – சரி….வந்து தொலை…..உங்கப்பாவே சொல்லியாச்சு… அதுக்கு மேலே நீ கேட்கவா போறே….
சதீஷ் – ஏம்மா இப்டிச் சொல்றே…தொலைன்னு….போம்மா…..
தேவகி –சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டா கண்ணு  உன்னைப் போய் திட்டுவேனா….என் தங்கமாச்சே நீ…வா…வா….
சதீஷ் – என்னம்மா செய்யப்போறே…..     ?
தேவகி – வந்துதான் பாரேன்…அதுக்குள்ளேயும் என்ன அவசரம்? – சொல்லிக் கொண்டே மாடிக் கதவைத் திறக்கிறாள்.
ஒரு புதிய உலகத்திற்குள் நுழைவது போல் உற்சாகமாய் முகம் மலர அடியெடுத்து வைக்கிறான் சதீஷ். பரந்த வானத்தைப் பார்க்கிறான். தொலைவில் தன் கதிர்களை விரிக்கும் இளஞ்சூரியனை நோக்குகிறான். கூட்டம் கூட்டமாய்ப் உயரத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கிறான். அவனறியாமல் ஒண்ணு…ரெண்டு என எண்ணுகிறது மனம்.   சே….சே…அப்டி எண்ணக் கூடாது…பார்த்த ஜோர்ல…மொத்தம் எத்தனைன்னு டக்குனு சொல்லணும்….–எதிர்ப்புறத்தில் பறக்கும் இன்னொரு பறவைக் கூட்டத்தைப் பார்த்து  அப்படி சட்டென்று கணிக்கிறது மனம். ஒன்பது…..சரியா….? கூர்ந்து நோக்குகிறான். ஒன்று கூட….பத்து…..இட்ஸ் ஓ,கே….திரும்பவும் ட்ரை பண்ணலாம்…சிரித்துக் கொள்கிறான்.
தேவகி – சதீஷ்…அங்க என்ன பண்ற? இங்க வா…..
சதீஷ் – இதோ வந்திட்டேம்மா…..ஆவலோடு ஓடுகிறான்.
மாடித் திட்டுக்குக் கீழே இருந்த இரண்டு மூன்று மண் சட்டிகளைச் சுத்தம் செய்து  தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறாள் தேவகி.
சதீஷ் – எதுக்கும்மா இது…? புதுசா இருக்கு…..இத்தன நாள் சொல்லவே இல்ல எங்கிட்ட….?
தேவகி – இது சம்மர் டைம் இல்லயா….பறவைகளெல்லாம் தண்ணி கிடைக்காமத் தவிக்கும்…அதுகள் தாகம் தீர்க்கத்தான் இந்த ஏற்பாடு…….எப்டி…..? எங்க பார்த்தாலும் தண்ணிக் கஷ்டமாத்தானே இருக்கு…நம்மள மாதிரிதானே அதுகளும்….
சதீஷ் – அப்டியா….? இங்க பேர்ட்ஸ் வருமாம்மா…? எப்டிச் சொல்றே….எல்லாம் பறந்தில்ல போயிட்டிருக்கு…..?
தேவகி -  சொல்றேல்ல… அதுக கூட்டமா எங்க போயிட்டு வருது சொல்லு பார்ப்போம்….?
சதீஷ் – தெர்லயேம்மா……எங்க போகுதுங்க…?
தேவகி – நீர் நிலைகளைத் தேடிப் போகும்….தண்ணீர் அருந்த…. ….இங்க நாம பழக்கம் ஏற்படுத்தினா எல்லாம் தானா வருமாக்கும்…
சதீஷ் – சூப்பர்ம்மா….என்னது அது….? இது எங்கே வாங்கினே…..?
தேவகி – நெல்லு மணி….அரிசிக் கடைக்குப் போகைல வாங்கினது
சதீஷ் – சரி…இத என்ன செய்வே….?
தேவகி – பாரேன்  என்ன செய்றேன்னு……(சொல்லிக் கொண்டே மாடித் திட்டுச் சுவர்களில் அந்த நெல்மணிகளை இறைக்கிறாள் தேவகி – அப்படியே தண்ணீர் சட்டிகளின் அருகிலும் கொஞ்சம் சிதற விடுகிறாள்.
சதீஷ் – எதுக்கும்மா இப்டி….இதுக்கு அரிசியாவே போடலாமே…..!
தேவகி – இந்தப் பகுதில புறாக்கள்தான் அதிகம்….சுற்றிவரப் பாரு….எத்தனை வீட்டு மாடிகள்ல உட்கார்ந்திருக்குதுன்னு…அதுகளுக்கு நெல்மணிதான் இஷ்டம்…அரிசியும் போடலாம்தான்…..பறவைகள் மேலே கருணை வச்சு எத்தனை வீடுகள்ல அதைப் போஷிக்கிறாங்க பார்த்தியா…? நாமளும் அப்படி இருக்கப் பழகணும்….
சதீஷ் – கண்டிப்பாம்மா…இனிமே இந்த வேலையை நானே செய்றேன்….சரியா…?.
 தேவகி –…இப்பப்பாரு…..-சொன்னவள் சதீஷின் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வந்து அந்த நிழலில் சற்று மறைவாக நின்று கொண்டாள். அடுத்த கணம்….புறாக் கூட்டமொன்று எங்கிருந்துதான் வந்ததோ….ஒன்றன் பின் ஒன்றாக  அப்படிச் சூழ்ந்து கொண்டன…..பக்….பக்….பக்…..ம்ம்…ம்ம்…ம்ம்…என்ற அவைகளின் படிந்த ஓசை  சதீஷை குஷிப்படுத்தியது.
. அன்றைய கைவினை வகுப்பில் அம்மாவின் அந்த தண்ணீர் வைக்கும்  வழிமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் சதீஷ்.
                                         ---------------------------------------------------



      

04 டிசம்பர் 2019

''இலக்கியச் சாதனையாளர்கள்”-க.நா.சுப்ரமண்யம்-


''இலக்கியச் சாதனையாளர்கள்”-க.நா.சுப்ரமண்யம்-
 வாசிப்பனுபவம் - உஷாதீபன்                                                       
 வெளியீடு:- சந்தியா பதிப்பகம், சென்னை-83.
        எழுத்துலக ஆளுமை க.நா.சு. அவர்களின் விமர்சனங்களில் எப்பொழுதும் உண்மையின் ஒளி இருக்கும். வேண்டுபவர், வேண்டாதவர் என்கிற பாகுபாடு கிடையாது. மனதில் பட்டதை எழுதி விடுவது.  அதிலிருக்கும் உண்மையை உணர்ந்து விருப்பமிருந்தால் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டியது எதிராளியின் பணி. அல்லது  அதனிலிருந்து ஒதுங்குவது. அப்படித்தான் அவரது கட்டுரைகள். உரிய சகிப்புத் தன்மையோடு படிக்க வேண்டியது நமது பொறுப்பு. இத்தனை கறாராகச் சொல்கிறாரே என்று நினைத்தால் அதிலுள்ள உண்மை புலப்படாமல் போகும் அபாயம் நிச்சயம். யார் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, என் மனதில் தோன்றியதை உங்கள் முன் வைக்கிறேன். அதை நேர் கோட்டில் பார்த்துப் புரிந்து கொண்டாலும் அல்லது கோணலாக உணர்ந்து கொண்டாலும் சரி அதுபற்றி எனக்குக் கவலையில்லை. இது என் கருத்து. இலக்கியம் சார்ந்த என் அசலான பார்வை. இதுவே நிஜம் என்னைப் பொருத்தவரை....இதுதான் அவர் முன் வைத்த பாணி.
      இப்படியானவராக இலக்கிய வெளியில் இவரும் திரு.வெங்கட்சாமிநாதன் அவர்களும் தென்படுகிறார்கள். இவருடையதாவது சற்று நெகிழ்ச்சியோடு. அவரது கட்டுரைகள் எல்லாமும் சுட்டுரைகள்தான். சுடத்தான் செய்யும். அந்த எழுத்தின் நேர்மை நம்மை அவர்கள் மீது, அவர்களின் எழுத்தின், விமர்சனங்களின்  மீது ஈர்ப்பு கொள்ளச் செய்கிறது. மதித்துப் போற்றத் தக்கதாகிறது.
      தன் மனதுக்கு நேர்மையாக இருக்கும் எழுத்தாளன் இவர்களின் விமர்சனங்களை ஒதுக்க மாட்டான். அப்படியான தெளிந்த, சார்பு நிலையற்ற விமர்சனப் பார்வையோடு இலக்கியச் சாதனையாளர்களை் சிலரைப் பற்றி இந்தப் புத்தகத்தில் தன் கருத்துக்களை முன் வைக்கிறார் திரு.க.நா.சு. இவரின் கருத்துக்கள் அந்தக் கால ஜாம்பவான்களுக்கே அலர்ஜியாக இருந்திருக்கிறது. தங்கள் படைப்புக்களைப் பற்றிய அவரது கருத்து அவர்களுக்கு ஒவ்வாததாக இருந்திருக்கிறது. பொருட்படுத்தாமலோ அல்லது பொருட்படுத்தித் திட்டியோ பதிலிறுத்திருக்கிறார்கள். யார் கேட்டது என்னைப் பற்றி எழுதச்சொல்லி இவரை...என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் அவர் ஏதாவது நம்மைப்  பற்றிச் சொல்கிறாரா என்று கவனித்திருக்கிறார்கள். அதையெல்லாமும் மனதில் வாங்கிக் கொண்டு கோபம் கொள்ளாமல் நிதானமான, பதமான சிந்தனையில் என் மனதில் தோன்றியவைகளைத் தெரிவித்தேன். ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் அவர்கள் பொறுப்பு. அதுபற்றிக் கவலை ஒன்றுமில்லை -  இலக்கியத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்கிற கேள்வி எழவில்லை  என்றார் இவர். இவரது இலக்கிய ஆளுமையை மதித்துக் கொண்டே, இந்த மனுஷன்ட்டப் போய் மாட்டிக்கிட்டமே என்று அவரின் புகழுரைக்காக ஏங்கியிருக்கிறார்கள். சாதனை படைத்தவர்களாகக் கருதுபவர்களின் சொந்த குணாதிசயங்களை, அவர்கள் மீதான அன்பும் நட்பும் கருதி வெளிப்படையாக, அன்பொழுக, உரிமையோடு  அவர்களது எழுத்து சார்ந்து சொன்ன கருத்துக்களும் க.நா.சு.வின் எழுத்தில் விரவியிருக்கின்றன.
  நகுலனின் ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது.                                      

இவர் முறையாகத் தமிழ் படித்தவரல்ல /  இலக்கணம் இவரை மீறியது / கவிதை இவருக்குக் கை வராத கலை / சிறுகதையோ நாவலோ சுத்தமாகப் பிரயோசனம் இல்லை / விமர்சனமோ ஒழுங்காக நான்கு வார்த்தை எழுதத் தெரியாது மனுஷனுக்கு / அது போகட்டும்...இவர் என் கதைபற்றி என்ன சொன்னார்?
      எப்படி முடிகிறது பார்த்தீர்களா? குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் பட வேண்டும் என்பது போல,  பெரிய பெரிய எழுத்தாளர்களே இவரை எதிர்நோக்கி நின்றிருக்கிறார்கள். அதுதான் க.நா.சு.வின் பெருமை. நினைவிலிருந்து சொல்வதாக அசோகமித்திரன் சொன்ன நகுலன் கவிதை இது.
      இந்நூலில் பெரிய பெரிய ஆகிருதிகளைப்பற்றி, அவர்களது முக்கியமான படைப்புக்கள் பற்றிய தனது கருத்துக்களை விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் க.நா.சு. பக்குவமாயும், சார்பின்றியும். . அறுபதுக்கு முந்திய தமிழ் எழுத்தாளர்கள், பிற மொழி எழுத்தாளர்கள் மற்றும் பிற தேச எழுத்தாளர்கள் என்று. அத்தனையும் விவரிக்க ஏலாது என்றாலும் க்ளாசிக் ரைட்டர்ஸான சில மூத்த  தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய அவரது கருத்துக்களை ஸ்வாரஸ்யமான அனுபவமாக உணர முடிந்தது.
      புதிதாக எழுத வந்தவனை எழுதாதே, உருப்பட மாட்டாய்...எழுத்தை நம்பி வாழ முடியாது...நான் சீரழிவது உன் கண்களுக்குத் தெரியவில்லையா...என்று விரட்டியடித்தார் அந்த எழுத்தாளர். அதே சமயம் யாரையும் நட்பு முறித்துப் பிரிவதில்லை. எவ்வளவு பெரிய புஸ்தங்களைக் கையில் கொடுத்தாலும், ஆரம்பத்தில் கொஞ்சம், நடுவில் கொஞ்சம், கடைசியில் கொஞ்சம் என்று முகர்ந்து விட்டு, அதன் உள்ளார்ந்த ஓட்டத்தைக் கிரஉறித்துக் கொண்டு மூடி வைத்து விடுவார். அந்தளவுக்கான உள் மன ஓட்டம், ஆழ்ந்த புரிதல் கொண்ட திறமைசாலி. ஒரு பத்து வருடங்கள் அமைதி தராத நட்பு நீடித்தது, அவரிடம் சவால் விட்டுச் சென்றுதான் ஒரே மாதத்தில் சர்மாவின் உயில் நாவலை எழுதி முடித்தேன் என்று மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறார் க.நா.சு.. தமிழில் எழுத ஆரம்பித்து தொடர்ந்து எழுதியது அவரது பாதிப்பினால்தான் என்று க.நா.சு. கூறுகிறார். கலாமோஉறினி என்ற பத்திரிகை அவரை அட்டைப் படம் போட வேண்டும் என்று ஒரு படம் கேட்டபோது, தன் இருதயத்தை ஸ்கேன் செய்த எலும்புக்கூட்டுப் படத்தைக் காண்பித்து இதைப் போடுங்கள் என்றாராம். கடைசி நொடிகளில் மருந்துச் செலவுக்குக்கூடப் பணமின்றி தவித்த நாட்கள் அவை. ரகுநாதன் என்ற நண்பர் சொ.வி.க்கு மருந்துச் செலவுக்குப் பணம் வேண்டும் என்று எழுதிய வரிகளை அடித்துவிட்டு, இன்று புதுமைப் பித்தன் காலமானார் என்று வந்திருந்த போஸ்ட்கார்டு மனத்தை சுமையாக்கியது என்று வருந்துகிறார். புதுமைப் பித்தனைப் பற்றிய இந்தக் கட்டுரை அத்தனை மன நெருக்கத்தைப் புரிய வைக்கிறது நமக்கு.
      மௌனியைப் புகழ்ந்து சொன்ன ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன். சென்னையில் அவர் வசிக்கவில்லையே, அனுதினமும் அவரோடு சம்பாஷிக்க இயலவில்லையே என்று வருந்துகிறார். பெயர்தான் மௌனியே தவிர, மணிக்கணக்காகப் பேச அவருக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் க.நா.சு. மௌனி தன் எழுத்துக்களைப் பற்றி மட்டும்தான் பேசுவாராம். 1960 க்குப் பிறகு மாறிவிட்டார் என்கிறார்.  காதல் மௌனியின் கதைகளில் சிறப்பான அடிநாதம். மனித மனோ தத்துவத் தேடல் அவரது விசேஷம். ஐம்பது ஆண்டு காலப் பழக்கம் எனக்கும் அவருக்கும். நாங்கள் சந்திக்கும்போது மனித வாழ்வின் நோக்கம், போக்கு, இவற்றில் மத சிந்தனைகளின் ஆதிக்கம் இப்படியாகத்தான் பேசியிருக்கிறோம். புதுமைப்பித்தன் சொன்னதுபோல் மௌனி ஸ்வாரஸ்யமான மனிதர், அவரது கதைகள் அமர இலக்கியத் தன்மை பெற்றவை. அவர் இறந்த போது ஒரு சகாப்தம், ஒரு யுகம் முடிந்து விட்டது என்றுதான் எனக்குத் தோன்றியது.
      சண்முகசுந்தரத்தோடான என் நட்பு என் வாழ்க்கை வளத்துக்கும், இலக்கிய வளத்துக்கும் உதவியது என்கிறார் க.நா.சு. இந்தக் கட்டுரையில். இலக்கிய விவாதம் என்பதை அறிவு பூர்வமாகவும் அணுகலாம், அனுபவ பூர்வமாகவும் அணுகலாம் என்று எனக்குச் சொன்னவர் சண்முக சுந்தரம். அவர் அனுபவபூர்வமாக அணுகியவர். குடும்பத்தை நடத்திச் செல்ல பணத் தேவைக்காகவே எழுதினார் அவர். நீங்கள் காசிக்குப் போய்ச் சம்பாதிக்கிற புண்ணியத்தை விட ஒரு குழந்தையின் படிப்புக்குச் செலவு செய்தால் அதிகப் புண்ணியம் கிடைக்கும் என்று ஒரு நண்பரிடம் இருந்து சாமர்த்தியமாய்ப் பேசி ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார் என்று ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார். வாழ்க்கைக்கு ஆதாரமான நம்பிக்கையை அவர் என்றும் இழந்ததே கிடையாது. உரிய காலத்தில் ரயிலில் கிளம்ப முடியவில்லையென்றால் நாளை பிளேனில் போய்விடலாம் என்று சொல்லுவார். அந்த அளவுக்கான நம்பிக்கையான பேச்சு அவருடையது. வெற்றிலை போடுவார். என்னைத் தேடி வந்து நான் வீட்டில் இல்லையென்றால், கதவில் ஒரு வெற்றிலையைச் செருகிவிட்டுச் சென்று விடுவார். தான் வந்து போனதற்கு அடையாளமாய். நாகம்மாள், அறுவடை, சட்டி சுட்டது ஆகிய அவரது நாவல்களை மறக்கும் தமிழர்கள் துரதிருஷ்டக்காரர்கள். எழுத்தாளர் சண்முகசுந்தரத்தைப்பற்றி க.நா.சு.வின் இந்த அபிப்பிராயங்கள் எத்தனை தரமானவை?
      எங்க சீமையைச் சேர்ந்த புள்ளையாண்டான் பிரசண்ட விகடனில் எழுதறான்....இது புதுமைப் பித்தன் அழகிரிசாமியைப் பற்றிக் க.நா.சு.விடம் சொன்னது. பிரசண்ட விகடனிலா? என்று கேட்டுவிட்டுப் பேசாமல் இருந்தேன் நான். அதில் நல்ல இலக்கியம் வந்ததில்லை என்பது என் அபிப்பிராயம். ஆனால் அதைப் பொய்யாக்கியவர் கு.அழகிரிசாமி என்று புகழுரைக்கிறார் க.நா.சு. நான் படித்து உயர்வாக நினைத்த சில நூல்களைப் பற்றி அவரோடு விவாதித்தபோது அவர் சொன்னார். எந்தப் புத்தகத்தையும் வாசித்து முடித்து, உடனடியான பலனை வைத்து மதிப்பிடக்கூடாது...     அப்படி மதிப்பதென்றால் வாய்ப்பாடுதான் நல்ல புத்தகம். அதற்குத்தான் முதல் இடம். கு.அழகிரிசாமியின் இந்தக் கருத்து என்னை ஈர்த்தது. நம் அறிவிலே காலிப் பிரதேசங்கள் என்று இருக்கத்தான் இருக்கும். நான் அதை அடைக்க, எதையும் தேடி ஓட மாட்டேன் என்றேன் அவரிடம். அவர் சொன்னார்...அறிவுத் துறைபற்றிய புத்தகங்களைத் தேடி ஓடிப் படித்து அந்தப் பொத்தல்களை அடைத்துக் கொள்வதில் என்ன தவறு? என்றார்.அனுபவங்களைப் புதிது புதிதாகப் பெற நான் லைப்ரரியைத் தேடிப் போவேன். அவரோ பழைய புத்தகக் கடைகளைத் தேடி அடைவார். போன வேறு காரியத்தை மறந்துவிட்டு நாள் பூராவும் அங்கேய கிடப்பார். இது அவர் பழக்கம். மௌனி, லா.ச.ராமாமிர்தம் இவர்களை அவருக்குப் பிடிக்காது. எழுத்தில் ஏதோ பம்மாத்துப் பண்ணுகிறார்கள் என்பார். அவருக்கு ஏதாவது ஆராய்ச்சி செய்து நூல் எழுத மான்யம் வாங்கிக் கொடுங்களேன் என்று மு.வ.விடம் நான் கேட்டேன்...வெறும் பிஏ., கூடப் படிக்க வில்லையே அவர் நான் என்ன செய்ய? என்று மறுத்துவிட்டார் மு.வரதராசனார்.
      குவாலாலம்பூரில் எடிட்டராக இருந்த வேங்கிடராஜூலு நாயுடு ஒரு முறை என்னிடம் சொன்னார். அவர் படைப்பைப்பற்றி நீங்கள் உறிண்டுவில் எழுதிய விமர்சனத்தைக் காட்டித்தான் கல்யாணம் செய்து கொண்டார் கு.அழகிரிசாமி....என் எழுத்து அப்படி ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்பட்டிருக்கிறதே என்று சந்தோஷமடைந்தேன் நான். இது க.நா.சு.வின் கூற்று.
      மணிக்கொடி என்கிற சிறு பத்திரிகையைப் பற்றிப் பேசிய அளவு அதைத் திறம்பட நடத்திய அதன் ஆசிரியர் திரு பி.எஸ்.ராமையா பேசப்படவில்லை என்கிறார் க.நா.சு. நான் தமிழில் எழுத வந்ததற்குக் காரணமே ராமையாதான் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார். அதில் கண்ட இன்பம், உற்சாகம் இன்றுவரை தொடர்கிறது எனக்கு. காந்தி என்கிற இதழில் வந்த “அவரின் “வார்ப்படம்“ என்ற கதையைப் படித்தபிறகுதான் அந்த ஆவல் எனக்கு ஏற்பட்டது என்கிறார். சந்திப்பவர் யாருடைய உள்ளத்திலும் ஆழ்ந்த சலனம் ஏற்படுத்தக் கூடியவர். வாழ்க்கையின் அனுபவ ரேகைகள் அவர் முகத்தில் ஆழமாய் ஓடிக் கொண்டேயிருக்கும் ஏழ்மையுடன் போராடி அப்படியொரு வெற்றி கண்டவர் அவர். அவருடனான முதல் சந்திப்பிலேயே ஒன்றைத் தெளிவாக்கினார் எனக்கு.
      “பணம் வரவேண்டும், எழுதுகிறவற்றிற்குப் பணம்தான் முக்கியம் என்றால் பிராட்வேயைத் தேடிக் கொண்டு போய்விடுங்கள். இங்கு இலக்கியமும் தரமும்தான் முக்கியம். பணம் கொடுத்துத் தன் கதையை மணிக்கொடியில் போடச் சொல்லவே பலர் தயாராக இருக்கிறார்கள்”
      குதிரைப் பந்தயங்களில் பயங்கரமான நம்பிக்கையுள்ளவர். குதிரைகள் கடைசி நிமிடத்தில் ஓடி பணம் கட்டியிருப்பவர்களின் ஆசையையும், நம்பிக்கையையும் தூண்டுவதை இலக்கியபூர்வமாக விவரிப்பார். அவர் மாதிரி பரபரப்பாக அதைச் சொல்ல வேறு யாராலும் முடியாது. ஒரு சினிமா ப்ரொட்யூசருடன் இங்கிலாந்து சென்று வந்த அவர் அங்கு என்ன பார்த்தீர்கள் என்றபோது டெர்பி குதிரைப் பந்தயம் பார்த்தேன் என்றார்.
      ஆனந்தவிகடன் பொன்விழாக் காலத்தில் உங்களைக் கூப்பிட்டு கௌரவிக்கவில்லையே என்றபோது அதுதான் என் படைப்புக்களுக்குப் பிரசுரத்திற்குப் பணம் கொடுத்து முன்பே கௌரவித்து விட்டார்களே...என்றார். விடாமல் விகடனில் இரண்டாண்டுகள் தொடர்ந்து கதைகள் எழுதிய ஒரே எழுத்தாளர் பி.எஸ்.ராமையா....பணத்தின் தேவைக்காகவே அப்படி எழுதினார். அத்தனையும் தகுதியுடையதாகவே இருந்தன என்பதுதான் இங்கே கவனிக்கப்படத்தக்கது.
      ஐந்தே ஐந்து எழுத்தாளர்களைப் பற்றிய க.நா.சு.வின் கருத்துக்களை மிகச்  சுருக்கமாக ஸ்வாரஸ்யம் கருதி இங்கே பகிர்ந்துள்ளேன். இவர்களைப் பற்றிய மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ளவும் மற்றும் ராஜாஜி, வ.ரா., கல்கி., கு.ப.ரா.,ஆர்,கே.நாராயண், தகழி, டி.கே.சி, சிதம்பர சுப்ரமணியம், கி ரா., தி.ஜா., கொத்தமங்கலம் சுப்பு, கம்பதாஸன், கே.எஸ்.வேங்கடரமணி, பிற மொழி எழுத்தாளர்கள் என்று மொத்தம் 41 படைப்பாளிகளுடனான அனுபவங்கள், அவர்களது எழுத்துக்கள் பற்றி க.நா.சு அருமையாய்ச் சொல்லி விளக்கியிருக்கும் சின்னச் சின்னக் கட்டுரைகள் இப்புத்தகத்தில் விரவியிருக்கின்றன. இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டிய பெட்டகம் இது.
                              ---------------------------------------------