10 செப்டம்பர் 2026

 

சிறுகதை            பேசும் புதிய சக்தி மாத இதழ் (செப்டம்பர் 2026) பிரசுரம்

“மனசே…கொஞ்சம் ரிலாக்ஸ்…!”




            ந்தப் பெண் கொஞ்சம் அனுசரணையாய் நடந்து கொண்டால் தேவலை என்றிருந்தது ரத்னகிரிக்கு.

            அனுசூயா…அனுசரணை…அனுசரணை…என்று கத்த வேண்டும் போலிருந்தது.

            அனுசரணைன்னா என்னன்னு சொல்ற? அட்ஜஸ்ட்மென்ட்…அதானே…? அது நான் பார்த்துக்கிறேன்ப்பா…யூ டோன்ட் ஒர்ரி….-என்றான் விஸ்வம்.

            அனுசரணைன்னா வீட்டுக் காரியங்களுக்கு, உனக்கு என்று ஒத்துழைப்பது.கோபப்படாம, சுமுகமா, சிரிச்ச முகத்தோட வீட்டுக் காரியங்கள்ல பங்கெடுத்துக்கிறது…எனக்கென்னன்னு இல்லாம இருக்கிறது…-சொல்ல நினைத்தார்.  முடியவில்லைதான்.

            பல சமயங்களில் அவன் பேச்சுக்கு அவள் மறுத்து மறுத்துப் பேசுவதை சகித்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். அவரால் அதைச் சகிக்க முடியவில்லை.  கேட்டுக்கொண்டு கம்மென்று தான் இருப்பதுதான் அனுசரணை என்று அவன் நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது இவருக்கு.

            அவன் ஒண்ணு சொன்னான்னா அதுக்கு சரின்னு கேட்டுக்கிட்டா என்னம்மா? அத உடனே மறுத்துப் பேசியாகணுமா? எல்லாத்தையும் எதிர்த்து எதிர்த்துப் பேசணுமா?  – என்றார் ஒரு நாள்.

            அதற்கு அந்தப் பெண் ஒன்றும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லாததே அதில் தனக்கு ஒப்புதலில்லை என்பதாகத்தானே அர்த்தம் என்று இவர் புரிந்து கொண்டார். இதுவே பலதடவையானால் தன்னையும் அந்தப் பெண் எதிர்த்துப் பேசக் கூடும் என்றுதான் தோன்றியது. தன் கௌரவத்தைத் தான்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? எனவே ஜாக்கிரதையாய் இருந்தார்.

சும்மா நச்சு நச்சுன்னுக்கிட்டு? என்று ஒரு சவுண்டு விட்டால் போதாதா? சின்ன வயசு…சொல்லாது என்பது என்ன நிச்சயம்?

            ரொம்பச் சாதாரணமான விஷயங்களில் கூட அனுசூயா தன் விருப்பப்படிதான் நடக்க வேண்டுமென்பதுபோல் பிடிவாதம்  கொள்வது இவருக்கு ஆச்சரியமாயிருந்தது.

            கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போவோம்னா இல்ல…நங்கநல்லூர் அனுமார் கோயிலுக்குப் போயிட்டு வருவோம்ங்கிற…வடபழனி கோயிலுக்குப் போவோம்னா இல்ல…இங்க இருக்கிற ராமர் கோயிலுக்குப் போனாப் போதும்னு மாத்துற…நான் எதச் சொல்லி நீ சரின்னிருக்க? இது என்ன உறாபிட்….எல்லாத்தையும் மறுத்து மறுத்துப் பேசறது?  நான் சொல்றத ஓகேன்னு கேட்டுட்டா குறைஞ்சு போவியா? உன் தலக் கிரீடம் இறங்கிடுமா? ச்சும்மா….இப்டியே பேசிக்கிட்டு…எரிச்சலாயிருக்கு…!

            சண்டை பெரிதாவதைக் கவனித்துக் கொண்டேயிருந்தார் ரத்னகிரி. தான் குறுக்கே புகுவது சரியில்லை என்றே அமைதி காத்தார். அவர்களே பேசி அவர்களே தீர்த்துக் கொள்ளட்டுமே! நாம் எதற்குக் குறுக்கே? இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்…!

            போய்ச் சொல்லுங்க…அப்பத்தான் அந்தப் பொண்ணுக்கு மண்டைல ஏறும்…இதென்ன பேச்சு அவன் சொல்றதைக் கேட்டுக்காம, எல்லாத்தையும் எதிர்த்து எதிர்த்துப் பேசுறது? லூசா இது? என்று கோபம் பொங்க வந்து நின்றாள் பார்கவி.

            தொட்டதுக்கெல்லாம் நாம குறுக்க போய் நிற்கக்கூடாது…அவுங்களாப் பேசி ஒரு முடிவு பண்ணிக்கட்டும்…அவுங்க ரெண்டு பேருக்குள்ள சமனமானாச் சரி…விடு….என்றார் இவர்.

               இந்தக் கஷ்டமெல்லாம் எதற்கு? அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு. நமது மீதி வாழ்க்கை நமக்கு. எதற்காகக் கூட இருந்து கழுத்தறுக்க வேண்டும்? இது இவர் கருத்து.

            கழுத்தறுப்பு அது இதுன்னு எதையாச்சும் வாயில வந்ததைப் பேசாதீங்க…என்று அடக்கினாள் பார்கவி.

பையன் காதுல விழுந்தா வருத்தப்படுவான். அப்பா அம்மாவக் கூட வச்சிக்கணும்னு நான் இருக்கேன். இப்படிச் சொன்னா எப்படி? என்று ஒரு முறை அவன் வருத்தப்பட்டது இவர் காதில் விழுந்திருந்ததுதான். ஆனாலும் அப்படி ஒட்டிக் கொண்டிருப்பது சரியில்லை என்பதுதான் இவர் கருத்தாயிருந்தது. எப்படியோ விருப்பம்போல இருந்துட்டுப் போகட்டுமே. நாம எதுக்குக் குறுக்க நிற்கணும்.?

விடிந்திருந்த இக்காலைப் பொழுதில் இதென்ன சிந்தனை? என்று ஜன்னல் வழி வானத்தைப் பார்த்தார் ரத்னகிரி. வெண்மை மேகங்கள் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தன. மங்கலாகத் தெரிந்த நிலவை மறைத்து வேகமாய் அவை விரைந்தபோது அவற்றோடு சேர்ந்து தானும் காற்றில் பறந்து வானத்தில் கலந்து விடக் கூடாதா என்று மனம் ஆதங்கப்பட்டது. போதுமே…எல்லாம் பார்த்தாச்சு…இன்னும் என்னத்துக்கு…பூமிக்கு பாரமாய்?

பணி  ஓய்வுக்குப்பிறகான தன் வாழ்க்கை அத்தனை ஸ்வாரஸ்மாய் இல்லை என்றே தோன்றியது இவருக்கு. பத்தாண்டுகள் கழிந்து போன இவ்வேளையில் என்னென்னவோ நடந்து விட்டதுதான். ஓய்வு பெற்ற  ஒரு வாரத்தில் காந்தி மியூசியத்தில் பதிவு செய்து கொண்டு ரெகுலராக யோகா வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்ததை நினைத்துக் கொண்டார். எத்தனை அற்புதமான நாட்கள் அவை.  விடிகாலை நான்கு மணிக்குஎழுந்து பல தேய்த்து, ஒரு காபியை ஊற்றிக் கொண்டு (யோகாவுக்கு முன் வெறும் வயிறாய்த்தான் இருக்க வேண்டும் என்பது விதிதண்ணீர் குடிக்கலாம்ஆனால் பழக்க தோஷம் விட முடியவில்லையேசூடாய் உள்ளே இறக்கினால்தான் சுறுசுறுப்பே வருகிறது. மாஸ்டரே வரும் வழியில் விசாலத்தில் காஃபின்னா…? நரசுஸ்தான்….என்று இறக்கிக் கொண்டுதானே வருகிறார்) அந்த தமுக்கம் சாலையில் நான்கு நண்பர்களுடன் ஐந்து ரவுன்ட் நடைப் பயிற்சியும், பின்னர் வகுப்பு நடக்கும் பூங்காவிற்குள் போய் மேட் விரித்து சவாசனத்தில் பத்து நிமிடங்கள் கிடப்பதும், பிறகு வகுப்புகள் ஆரம்பிப்பதும் எவ்வளவு ஆரோக்கியமான நாட்கள்? இத்தனை லேசாகவா காற்றாய் மாறிப் போகும் இந்த உடம்பு? ஆச்சரியப்பட்டிருக்கிறார். அதிசயப்பட்டிருக்கிறார். அதுவே அவரை அங்கேயே கிடக்க வைத்தது.

            மாஸ்டர்…உங்க உடம்பு ரப்பர் பேன்ட் மாதிரி இருக்கு. எந்த ஆசனமானாலும் ரொம்ப ஈஸியா வளைச்சு நெளிச்சு நிமிர்ந்து குனிஞ்சு சொல்லிக் கொடுத்துடறீங்க…எங்களுக்கு அந்தளவுக்கு உடம்பு  வளைய மாட்டேங்குதே…? என்று ஆரம்பத்தில் புலம்பினார் இவர். பின்னர் தொடர் பயிற்சியில் தானா அப்படி மாறினோம் என்று அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு, மாஸ்டர் வராத நாட்களில் வகுப்பு எடுக்கும் நிலைக்கு வந்ததும், யோகா மேளா நடந்த போது போட்டியில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றதும்…தான் குடும்பத்தோடு மதுரையை விட்டு இந்தச் சென்னைக்கு வந்தது மாபெரும் தவறு என்று இப்போது உணர்வதுமாய்த் தன் பொழுதுகள் கழிவதை நினைத்துக் கொண்டார் ரத்னகிரி.

            பையன் ரூம்ல தங்கி, கண்ட கண்ட இடத்துல சாப்டுக்கிட்டு, உடம்பக் கெடுத்துக்கிட்டு ஒரு ரெகுலாரிட்டி இல்லாமக் கழிக்கிறான். நாளைக்குக் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட சந்தோஷமா வாழ வேண்டியவன். அதுக்கு முன்னாடி கட்டு செட்டா வளர்ந்து கிண்ணுன்னு நிமிர்ந்து நிற்க வேண்டாமா? என்று பார்கவியிடம் ஒரு நாள் விவரிக்க ஆரம்பித்தபோதுதான் அந்த முடிவு பிறந்தது இவரிடம்.

            எதுக்கு அவன் அங்கே தனியே கிடந்து ஓட்டல்ல சாப்டுக்கிட்டு கஷ்டப்படணும்? நாம போய்க் கூட இருந்திடுவோம். வீட்டுச் சாப்பாடு அவன் உடம்பைத் தேத்தும். நாம கூட இருக்கிறது அவனுக்குப் பெரும் துணையா இருக்கும்…என்று சொல்லி இந்தச் சென்னைக்கு வந்து சேர்ந்தே விட்டார்.

            எல்லாம் சரிதான்.  ஆனால் அவனுக்குப் பெண் பார்த்து வைத்ததுதான் தப்பாய்ப் போயிற்றோ என்று இப்போது தோன்றுகிறது. சென்னை தவிர்த்து உள் மாவட்டங்களில் ஜாதகம் தேடிப் பார்த்திருந்தால் இன்னும் அவனுக்குப் பொருந்தி, குடும்பத்திற்கும் அனுசரணையாய்  ஒன்று அமைந்திருக்குமோ என்கிற ஆதங்கம் அவரிடம் தொக்கி நின்றது. தப்ப பண்ணி விட்டோமோ என்று மனது உறுத்திக் கொண்டேயிருக்கிறது.

            வீட்டுக் காரியங்களில் உதவியாய் இருப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது தன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போவதே பெரும்பாடு என்றுதான் தோன்றியது. சாவகாசமாய் ஏழு மணிக்குப் படுக்கையை விட்டு எழுவதும், அடிச்சுப் பிடிச்சு குளிச்சும் குளிக்காமலும் ஆபீஸ் கிளம்புவதும் அறவே அவனுக்குப் பிடிக்கவில்லைதான்.

            அதென்ன தினசரி சாயங்காலம் வந்து குளிக்கிறது? ஏன் அஞ்சு மணிக்கு எழுந்தா குறைஞ்சு போவியா? குளிச்சிட்டு ஃப்ரெஷ்ஷா ஆபீஸ் போகத் தெரியாதா? குளிக்காமயே ஆபீஸ் போய், டிபன் சாப்பிட்டு, மதியம் சாப்பாட்டையும் உள்ளே தள்ளி என்ன கெட்ட பழக்கம் இது? இப்படித்தான் உங்க வீட்டுல சொல்லிக் கொடுத்தாங்களா? ஏதோ ஒரு நாள்னா பரவால்ல…தினமும் அப்படியே செய்தேன்னா? ஆரோக்கியக் கேடாக்கும்… - சொல்லித்தான் பார்த்தான். கேட்டால்தானே? அதென்ன அப்படி ஒரு தூக்கம்? திங்க…தூங்க…பாத்ரூம் போக…இப்படியேவா இருப்பாங்க? என்று எகிறினான்.

            வயசான எங்கம்மாவுக்கு உதவியா இருப்பேன்னு பார்த்தா, இப்படி அடிச்சிப் போட்ட மாதிரித் தூங்கிறியே? இதுக்கா உன்னை இந்த வீட்டுக்கு மருமகளாக் கொண்டு வந்தது? என்று புலம்பினான்.

            காலைல சீக்கிரம் எழுந்திரிச்சி பால் காய்ச்சி, டிகாக் ஷன் போட்டு வெந்நீர் போட்டு, இப்டி ஏதாச்சும் சில்லரை வேலைலயாவது உதவியா இருக்கலாமுல்ல…துரும்ப நகர்த்த மாட்டேங்கிறே? இப்படியே இருந்தீன்னா உடம்
புல வியாதிதான் மிஞ்சும் பார்த்துக்கோ… - சொல்லத்தான் செய்தான் விஸ்வம்.

            ஏதாவது பதில் சொன்னால்தானே? மூஞ்சியை மட்டும் கடு கடு என்று வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய்ப் பாய்ந்தது அந்தப் பெண்.

            காபியைக் குடித்துவிட்டு வட்டா டம்ளரை அப்படியே மேஜை மீது வைத்துவிட்டுப் போனது. பழத்த உரித்து, தோல் டேபிளிலேயே கிடந்தது. துணி மணிகள் அங்கங்கே தரையில் சிதறிக் கிடந்தன. குழந்தைக்கான விளையாட்டு சாமான்கள் கால்களில் தடுக்கின. எது விழுப்பு, எது துவைத்தது என்கிற வித்தியாசம் தெரியாமல் ஆடைகள் கிடப்பது அருவருப்பை எற்படுத்தின.

            வேலைக்காரி இதையெல்லாம் எடுத்து வைப்பான்னு போட்டது போட்டமேனிக்கே போறியா? எல்லாத்தையும் ஒழுங்கா எடுத்து அந்தந்த எடத்துல அடுக்கி வைக்கணும்னு நீ பழகவேயில்லையா? அப்போ உங்க வீட்ல என்னதான் சொல்லிக் கொடுத்தாங்க? வேளா வேளைக்கு வயிறு நிறையக் கொட்டிக்கிறது மட்டும்தானா? – கோபத்தில் பொரிந்து கொட்டினான் விஸ்வம்.

            கம்மென்று கல்லுப் பிள்ளையார் மாதிரி அது உட்கார்ந்திருப்பதைப் பார்க்க சகிக்கவில்லை இவருக்கும் பார்கவிக்கும். இருவரும் மனதுக்குள் அழுதார்கள். இப்படியொரு உதவாக்கரையை அவனுக்குக் கல்யாணம் பண்ணி அவன் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோமே? என்று மனதுக்குள் மறுகினார்கள்.

            சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலிதானே நீங்க…பணக்காரக் குடும்பமா? அப்புறம் எப்படி இப்படி எனக்கென்னன்னு இருக்கே? உங்க வீட்டுல நீ வேலை செய்ததே இல்லையா? அங்கயும் இப்படியே உட்கார்ந்து தின்னுதான் பழக்கமா? நல்லா வளர்த்திருக்காங்க உன்னைய…அவமானம்…!

            எவ்வளவோ சொல்லித்தான் இருக்கிறான். பொழுது பொழுதாய்ச் சண்டைதான் மிச்சம். இங்கே நடப்பது அத்தனையையும் தன் தகப்பனிடம் அப்படியே ஃபோனில் கொட்டுவது. அந்தாளுக்கோ எந்தப் பொறுப்பான புரிதலும் இல்லை. அவனே ஒரு தறுதலை போலும் என்று நினைத்தார் ரத்னகிரி. எதையும் கணிக்காமல் நிச்சயம் பண்ணியதும், திருமணம் பண்ணி வைத்ததும் தங்களுடைய தவறுதான் என்று எண்ணி நொந்து கொண்டார். தனக்கு வாய்த்த சம்பந்தி இப்படியா இருக்கணும்?

            புகுந்த வீட்டுல நடக்கிறதைப் பொறந்த வீட்டுக்குச் சொல்றவ பொம்பளையே இல்லை…அதக் கேட்டுட்டு தப்புத் தப்பாச் சொல்லித் தர்றவன் ஒரு நல்ல தகப்பனும் இல்லை…சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை மாதிரி அது உளற, இவன் பதிலுக்குக் கத்த, இடையில் இவர் பூற…வீடே அல்லோல கல்லோலப்பட்டது சமயங்களில்.  சமயங்களிலென்ன, பல நாளும் அப்படித்தான் கழிந்தது.

            அவ ஆபீஸ் போற பொண்ணு சார்…ஆபீஸ் வேலையையும் பார்த்துட்டு வந்து வீட்டு வேலையையும் செய்யணும்னா எப்படி சார்? – என்று நீட்டி முழக்கிச் சொல்லிக் கொண்டு வந்து நின்றார் ஒரு நாள்.

            அது எங்களுக்கும் தெரியும். நீரொண்ணும் சொல்ல வேண்டியதில்லை. கொஞ்சத்துக்குக் கொஞ்சம் உதவியா இருக்கலாமேங்கிறதுதான் எங்க தரப்பு. அதுக்கே வழியில்லயே? புகுந்த வீட்டுல ஒரு பொண்ணு இப்படியாய்யா இருக்கும்? பொறுப்பா நடந்துக்க வேண்டாம்? ஏதாச்சும் அதுக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா இல்லையா? இல்ல…உட்கார்த்தி வச்சே சோத்தமுக்கியா வளர்த்து தள்ளி விட்டுட்டீங்களா? அட, சுமுகமான ஒரு பேச்சு இல்லய்யா உம்ம பொண்ணுகிட்ட? நாங்க என்ன செய்றோம் அதை? எப்பப் பார்த்தாலும் அதென்ன கடு கடுன்னு ஒரு மூஞ்சி? அந்த முகத்துல ஒரு சாந்தம், சிரிப்பு இன்னிவரைக்கும் ஒரு நாள் கூடப் பார்க்கலய்யா…!  ஏதோ உறாஸ்டல்ல தங்கியிருக்கிற மாதிரி இருக்குது…கெஸ்ட் மாதிரி எதையும் கண்டுக்காம, அலுங்காமக் குலுங்காமக் கழிச்சா…? எவன்தான்யா சகிப்பான்?

            எல்லாம் போகப் போகச் சரியாகும் சம்பந்தி…கோபப்படாதீங்க…! என்றார் கங்காதரன் என்ற அனுசூயாவின் தகப்பன். எதையுமே சீரியஸாக அவர் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அவருக்குப் பழகிப் போயிருக்கும். அத்தனையையும் அனுபவித்து விட்டுத்தானே இங்கே தள்ளிவிட்டிருக்கிறார்? ஒருவேளை மனதுக்குள் சிரித்துக் கொள்வாரோ என்னவோ? தப்பிச்சம்யா ஒரு வழியா…சரியான ஆளுங்களா வகையா மாட்டினானுங்க…!- மனதுக்குள் நிம்மதிப் பெருமூச்சு விடுவாரோ என்னவோ?

            எல்லாம் போகப் போகச் சரியாகுமாம்? எங்க சரியாகுறது? வருஷம் அஞ்சாச்சுய்யா…ஒரு குழந்தையை வேறே பெத்துப் போட்டாச்சு… நான்தான் கேட்குறேன்…நீங்க என்ன பெரிய ராயல் ஃபேமிலியா? சாதாரண மிடில் கிளாஸ்தான? ஒரு நடுத்தரக் குடும்பத்துல நாளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போற ஒரு பொண்ணை இப்படியாய்யா வளர்ப்பாங்க.? இன்னொரு வீட்டுக்குப் போகுற பொண்ணை எவ்வளவு அக்கறையா, பொறுப்பா வளர்த்தெடுக்கணும்? அதென்ன எப்பவும் பெரிய கெத்து மாதிரித் திரியறது? எதாச்சும் உம்ம பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறீரா இல்லையா? நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கியிருக்கா உம்ம பொண்ணு? பெரிய திறமைசாலியா? அதோட ஆபிஸ் வேலையைப் பல சமயங்கள்ல எம் பையன் பார்த்துக் கொடுக்கிறான்யா…! திடீர்னு வேலை போயிடுச்சின்னா, ரெஸ்யூம் போட்டு இன்னொரு கம்பெனிக்கு மாறிக்கிற திறமையுண்டாய்யா உம்ம டாட்டருக்கு? வீட்டுல இருந்து வேலை செய்ற நாட்கள்ல அதோட மேலிடத்துலர்ந்து எவ்வளவு திட்டு வாங்குதுன்னு எங்களுக்குத்தான் தெரியும்? மக்கு போல்ருக்குன்னு நாங்க நினைக்க வேண்டியிருக்கு…இவ்வளவு மைனஸ் பாயின்ட்ஸ் இருக்கைல என்ன கெத்துக் காண்பிக்கிறது? பொத்திக்கிட்டு சும்மாக் கிடக்க வேண்டிதானே? தொட்டதுக்கெல்லாம் எதிர்த்து எதிர்த்துப் பேசினா எவனுக்குத்தான்யா பிடிக்கும்? திறமையும் காரியக் கெட்டியும் உள்ள பொண்ணு வாய் பேசினாக்கூடப் பொறுத்துக்கலாம். எதுவுமேயில்லை. வாய் ஜாலம் மட்டும் தெறிக்குது…எவன்யா சகிச்சிப்பான்?

            கங்காதரன் தலையைக் குனிந்து கொண்டு அமைதியாய்த்தான் கிடந்தார். தான் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை என்பது போலிருந்தது அந்த அமைதி. இம்மாதிரி எத்தனை முறை சண்டை போட்டாயிற்று? எவ்வளவு சொல்லியாயிற்று? ஒரு மாற்றமும் இல்லை. பொழுது பொழுதாய்ச் சண்டை சச்சரவு. ஒரு பிசாசைக் கொண்டு வந்து நடு வீட்டிற்குள் வைத்து விட்டோமோ என்று உள்ளுக்குள் புழுங்கி மறுகினார் ரத்னகிரி. எப்படித்தான் இதற்குத் தீர்வு காண்பது? யோசித்துக் கொண்டேயிருந்தார். தன் வீட்டு மருமகளை இப்படியெல்லாமும் நினைக்க வேண்டி வந்துவிட்டதே, இது என்ன தலைவிதி? என்றும் புழுங்கினார்.

            அந்தக் குழந்தைக்கு ஆய் அலம்பி விடுவதிலிருந்து அதைக் காலடியில் கிடத்திக் குளிப்பாட்டித் துவட்டி, டிரஸ் மாட்டி விடுவது வரை அவனே செய்து கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க இவருக்கு வயிறெரிந்தது.  எல்லாம் தன் விதியென்று வரித்துக் கொண்டு விட்டானோ? அடக்கத் தெரியாமல் அ டங்கியல்லவோ போகிறான். இதைத்தான் அட்ஜஸட்மென்ட் என்று நினைக்கிறானா? அப்படியானால் அதன் பங்கு என்ன? படுக்கையில் இடம் கொடுப்பது மட்டும்தானா? அந்த ஆளுமைக்கே அத்தனையும் அடங்கிக் காணாமல் போகுமா?

            ப்பா…அவளைக் கொண்டு ஆபீசுக்கு  வண்டியேத்தி விட்டுட்டு வர்றேன்… குழந்தையைப் பார்த்துக்குங்க…!-இதெல்லாம் தெளிவாத்தான் வருது….கடமையைச் செய்றானாம்! அவன் பொண்டாட்டிக்கும் கடமையுண்டுன்னு தெரியாது போல்ருக்கு?

            குடும்பத் தலைவன் குடும்பத்தைச் சுமக்க வேண்டியதுதான். அதுதான் நியாயமும் கூட. ஆனால் கூடத் தோள் கொடுக்க ஆளே இல்லையென்றால்? அதற்குத்தானே திருமணம் பண்ணி வைப்பது? கல்யாணத்திற்கு முன் எப்படி எப்படியோ விட்டேற்றியாய் இருந்திருக்கலாம்தான். ஆனால் ஆஃப்டர் மாரேஜ் கொஞ்சமாவது பொறுப்பாய் வளைய வர வேண்டாமா? பிறந்த வீட்டில் துள்ளித் திரிந்ததுபோலவேவா அப்படியே கிடப்பது? தான்தோன்றியாய் இருக்கும் ஆம்பளைக்குத்தான் ஒரு கால் கட்டுப் போட்டால் எல்லாம் சரியாய்ப் போகும் என்பார்கள். இங்கென்னடாவென்றால் பொம்பளைக்கு அதைச் செய்யணும் போலிருக்கு. அதுதான் செய்தாயிற்றே…..கால் கட்டுப் போட்ட இடத்தில் அது தானே கைக்கட்டும் போட்டுக்கொண்டு எனக்கென்ன என்று வலம் வருகிறது.

            குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்தார் ரத்னகிரி.

            எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே…அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே…

            சத்தம் போட்டு இந்த வரிகளை அவர்  அனுபவித்துப் பாடிய போது குழந்தை இவரையே கூர்மையாய்ப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. வேறே வழியில்லாமப் பாடுறியா தாத்தா? அட…கேள்விதான் எத்தனை கூர்மை?

            நீயாவது சிறப்பா வந்தாச் சரிதான்….என்று அதைப் பார்த்து ஆதுரத்துடன் சொன்னார் ரத்னகிரி.

            அவனுக்கென்ன ராஜ்ஜாவாக்கும்…முகத்துல இருக்கிற தேஜஸ்ஸே சொல்லலியா? என் பேரன் உலகையே ஆளுவானாக்கும்…-என்று சொல்லிக் கொண்டே வந்து குழந்தையை அவரிடமிருந்து வாரி எடுத்துக் கொணடாள் பார்கவி.

            குழந்தைச் செல்வம் கொண்டாடும் இடத்திலே….- இதுவும்  இல்லாம இந்த உலகத்துல எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க…வேதனைப்படுறாங்க! கடவுள் நம்மை நல்லாத்தான் வச்சிருக்கான்…! – என்று மனதைத் தேற்றிக் கொள்வதுபோல் பகன்றார் ரத்னகிரி.

ஆமாம்…அதிலென்ன சந்தேகம்? தாமரைப் பூப்போல பேரன்…சிரிப்பப் பாருங்க…கொள்ளை போகுது… என்று கூடவே திருப்தியாய் ஒத்து ஊதினாள் பார்கவி.

                                                                        ----------------------------

 

 

 

           

 

சிறுகதை                                                 “வெளியே-உள்ளே…!”              பிரசுரம் - தாய்வீடு - செப்.2026 இதழ்       





பிறகு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத் தோன்றியது. தனது ஒவ்வொரு பதில் கண்டும் ஊடகவியலாளர் தொடர் கேள்வி கேட்கத் தயங்குவதிலிருந்து அது புரிந்தது.

ஒன்றிலிருந்து ஒன்று பிறப்பதாகத்தான் பேட்டி அமைய வேண்டும். அதுதான் உண்மையான பேட்டிக்கு அழகு. அம்மாதிரியான கேள்விகளைக் கேட்பதும், அதற்கான தகுதியோடிருப்பதும் பேட்டியாளரின் சாமர்த்தியம். அதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பேட்டி கொடுப்பவரின் பதில்கள் தெளிவாக அமைவது அதைவிடச் சாமர்த்தியம். ஆனால் ஒன்று அம்மாதிரிக் கேள்விகளும், பதில் வருவதின் எதிர்வினையான குறுக்குக் கேள்விகளும் அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும்தான் பொருந்தும். தனக்கு அந்த முறையைக் கடைப்பிடித்தால் பேட்டி எடுப்பவர் அத்தனை சிரமப்பட வேண்டியதில்லைதான். ஆனாலும் அதற்கும் ஒரு பயிற்சி வேண்டும்தான்.

அல்லாமல் இம்மாதிரியான கேள்விகள்தான் கேட்கப்படும் என்று முன்னரே அறிவித்து, அவற்றை அப்பொழுதுதான் கேட்பதுபோல் கேட்டாலும் பார்வையாளர்களுக்கு அது வெட்ட வெளிச்சமாகி விடும் வாய்ப்பு உண்டு. தயாரிக்கப்பட்டவையில் ஒன்றுக்கொன்றான தொடர்பு பெரும்பாலும் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அது பேட்டி கொடுப்பவரை திருப்தி செய்யும் கேள்விகளாகவே அமையக் கூடும் அபாயம் உண்டு.

எப்படி இருந்தால்தான் என்ன? இது தேவையா? என்று ஆரம்பத்திலேயே மனதுக்குத் தோன்றிவிட்டது பிரதீப்பிற்கு. ஆனாலும் மறுக்க முடியவில்லை. மறுத்தால் ஊடகங்களின் ஆதரவு கிடைக்காது. குறிப்பாக ஒதுக்கப்படும் அபாயமுண்டு. அதனால் தன் தொழில் படிப்படியாகப் பாதிக்கப்படும். இதுதான் பிழைப்பு என்று வந்தாயிற்று. வாழ்க்கைக்கு ஆதாரமே இனி இவைதான் என்று காலம் கவனமாய்க் கழிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து பிறழ்ந்து விடக் கூடாது. தொழிலைக் கெடுத்துக் கொண்டதுபோல் ஆகிவிடக் கூடாது.

யோசனையிலேயேதான் உட்கார்ந்திருக்கிறான். உடம்பு சரியில்லையா சார் என்று கரிசனையோடு கேட்கிறார் பேட்டியாளர். அதெல்லாம் ஒண்ணுமில்ல….என்கிறான் இவன். அப்போது காமிரா வேறு திசையில்.

மனசுதான் சரியில்லை….என்று சொல்லலாம்தான். சொன்னால், ஏன்என்னாச்சு? என்று அடுத்த கேள்வி வரும். பின் அதற்குப் பதில் சொல்ல வேணும். அந்த பதிலை அங்கு சொல்ல முடியாது. அது மனதுக்குள் தனக்கு மட்டுமே சொல்லிக் கொள்ளும் பதில். வெளியே சொன்னால் விபரீதம்தான். அப்படிச் சொல்வதற்கு இங்கே வந்திருக்கவே வேண்டாமே என்று ஆகி விடும். வந்த இடத்திலும் போலியாய்த்தான் உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் யதார்த்தமாய் இருப்பதுபோல் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்களும் நானும் ஒண்ணுதான் என்பதைப்போல. அதுவே நடிப்புதான் என்று தோன்றுகிறது. மனதுக்கு நியாயமில்லை. அப்பொழுது அது நடிப்புதானே என்று நினைத்துக் கொள்கிறான்.

இன்று ஏதோ கொஞ்சம் காசு சேர்ந்து விட்டது என்பதற்காக, காரில் வந்து போகிறோம் என்பதற்காக அவர்களை விட உசத்தி என்று ஆகி விடுமா? காசு சேர்ந்தால் உசத்தியா? கல்வியும், கேள்வியும்தானே செல்வங்கள்? அறிவு மெய்ப்படுவதுதானே வெளிச்சம். அதுதானே அழியாச் செல்வம்? என்னவோ வாழ்வாதாரம் கொஞ்சம் தாராளம் என்றால் எல்லாத்தரமும் உயர்ந்து விட்டது என்ற பொருளா?

வேகத்தடை படத்துல அசுர வேகத்தைக் காண்பிச்சிருக்கீங்களே…? கேள்வி வந்து விழுந்தது அரங்கில். யார் கேட்டது என்று பார்த்தான். எதிரே இருந்த கூட்டத்தில் மேல் வரிசையில் ஒரு பையன் கையைத் தூக்கினான்.

அது காமிராமேனோட, எடிட்டரோட திறமைங்க….சொல்லத்தான் நினைத்தான். வாய் நுனிவரை வந்து விட்டது. சொல்லாமல் நிறுத்தினான். பொய்மை தடுக்கிறது. மனசாட்சி நிறுத்துகிறது. சொல்லாதே…!

டைரக்டரோட எதிர்பார்ப்பு அதுதானேஅதைப் பூர்த்தி செய்தாகணுமில்லையா? அதைவிட நீங்களெல்லாரும் அப்டித்தானே விரும்புறீங்க….உங்க விருப்பம்தான் என் விருப்பம். அதாவது உங்கள் விருப்பத்தைப் புரிந்து கொண்டு உங்கள் நேரத்தை, பணத்தை நீங்கள் மயங்கிய வேளையிலே பிடுங்கி, நான் என்னை உயர்த்திக் கொள்வது. உங்களை ஏமாற்றி நிற்பது

சொல்லி முடித்ததும், கையொலி அரங்கத்தைப் பிளந்தது. உறாய்ய்ய்ய்என்று பலரும் இருக்கையிலிருந்து எழுந்து குதித்தார்கள்.

பிரதீப், பார்த்துங்கவிழுந்துடப் போறீங்கஎன்று இங்கிருந்து கத்தினான். உண்மையான கரிசனத்தில் வந்த வார்த்தைகள் அவை.

உண்மையிலேயே அந்த ஷாட் மெல்ல எடுத்ததுதான். ஆனால் அதற்கு முதல் காட்சியின் தொடர்ச்சியாக அந்த சீனில் அப்படி வந்துதான் குதித்தாக வேண்டும். அது தொழில் நுட்பக் கலைஞர்களின் கை வண்ணம். அது தன்னை உயரத்தில் கொண்டு வைக்கிறது.

முத முதல்ல உறீரோயினை நீங்க சந்திக்கிற எடத்துல ஒரு மாதிரி உதட்டை மடக்கி நாக்க சுழட்டுவீங்களே? அதக் கொஞ்சம் செய்து காண்பீங்களேன்….? யாரோ ஒரு பெண் ரசிகை கேட்டது. உடனே உற்உறா….என்று சத்தமெழுந்தது. பிரதீப்பிற்கு வெட்கமாக இருந்தது. இதையெல்லாம் எதற்குக் கேட்கிறார்கள் என்று தோன்றியது. அது ஏதோ அந்த நேரத்திய காட்சிக்காக தான் செய்தது. அதையே நாலு படத்தில் செய்தால் அதுவும் அலுத்து விடும். பிறகு வேறு என்னமாதிரி செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். இதைக் கண்டு மயங்கியது போல் பேசுகிறதே இந்தப் பெண். பெற்றோர்கள் இது இப்படி இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் வயிற்றெரிச்சல் கொள்ள மாட்டார்களா? இதற்காகவா பெற்றோம் என்று நினைக்க மாட்டார்களா? இந்தப் பெண்ணைப் படிக்க பட்டணம் அனுப்பியது இந்தக் கண்றாவிக்காகவா என்று வேதனையடையமாட்டார்களா? அசட்டுப் பிசட்டு என்று இதென்ன கேள்வி?

தன்னையே நான் காதலிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுமோ? கைக்கிளையாக நினைத்துக் கொண்டிருக்குமோ? இப்படி எதையாவது நினைத்துக் கொண்டு, மயங்கிச் சரிந்து கொண்டிருந்தால் இதன் படிப்பு என்னாவது? பெற்றோர்கள் இதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னாவது? நான் ஏற்கனவே கல்யாணமானவன் என்பதாவது இதற்குத் தெரியுமா?யார் யாரையோ காதலிப்பது போல் படங்களில் நடிக்கும் நான் உண்மை வாழ்க்கையில் ஒரு மனைவியை அரணாகக் கொண்டிருப்பவன் என்பதாவது இதற்குப் புரியுமா? சத்தியமாக அவளுக்குத் துரோகம் செய்யாதவன் என்ற நேர்மை அறியுமா?

இதை நினைத்தபோது இதே மாதிரி கடந்த தீபாவளிக்கு நடந்த இன்னொரு பேட்டியின் போது வேறொரு ரசிகை தன்னுடன் கை கோர்த்து ஆடியதும், மயங்கியதுபோல் நழுவி தன் மேல் வேண்டுமென்றே விழுந்ததும், தவிர்க்க முடியாமல் தான் அதைப் பிடித்துக் கீழே படுக்க வைத்ததும், அதைத் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்துவிட்டு தன் மனைவி உண்மைலயே அந்தப் பொண்ணு மயங்கிருச்சா? இல்ல பாவலாவா என்று கேட்டதும், ச்சேநா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல்ருக்கே….என்று சற்றுக் கலங்கிப் போனதும்….இப்போது அந்த மாதிரி ஏதும் நடந்து விட இடம்கொடுக்கக் கூடாது என்று பிரதீப்பின் மனம் அந்தக் கணத்தில் சுதாரித்தது. வெறுமே படத்தில் உதட்டைச் சுழித்ததற்கே இப்படியென்றால் நேரில் ஏதாவது அதீதமாக சேஷ்டைகள் செய்தால் எல்கை மீறி விடும் போலிருக்கிறதே….!

அந்தக் காலத்திலும் நடிகர் நடிகைகளை ரசிகர்கள் விரும்பினார்கள்தான். ஆனால் இந்த அளவுக்கா? வெறியர்களாயிருந்தார்கள். அது அவர்களின் நடிப்பிற்காகவும், ஏற்றுக் கொண்ட பாத்திரங்களின் வாயிலாக அவர்களுக்கு ஏற்பட்டிருந்த இமேஜ் காரணமாகவும்தான். ஆனால் சொந்த வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்ளும் அளவுக்கு இப்படியா? இதனால் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளனவே? ஏன் வெறும் சினிமா என்று பார்க்க மாட்டேன் என்கிறார்கள்? வாசலோடு விட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அப்படியென்ன தேசத் தொண்டா ஆற்றுகிறார்கள் இங்கே? கேளிக்கை ஆக்குவதன் மூலமாக ஒரு வகையான வியாபாரம்தானே செய்கிறார்கள்? இதைப் போய் இத்தனை சீரியசாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லையே? ஏன் இந்த இழிநிலை?

நடிப்பு என்கிற தொழிலில் இப்படியெல்லாம் எதையாவது புதுசு புதுசாகச் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. அது இவர்களுக்குப் பிடித்ததாக ஆகி விடுகிறது. அதனால் தன் பிழைப்பில் மெருகு கூடுகிறது. இன்னும் கொஞ்ச காலம் தள்ளலாம்தான். ஓடுற மட்டும் ஓடட்டும். பிறகு பார்த்துக்கலாம்.

உள் மனதுக்குள் இப்படியான எண்ணங்கள்தான் இருக்கின்றன. எதற்காக இப்படி வந்து பழி கிடக்கிறார்கள்? இவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? அவரவர் வீடுகளுக்கு என்று செய்ய வேண்டிய காரியங்களே இருக்காதா? அவரவர் கல்வி, வேலை என்று எதுவும் கிடையாதா? வேலை வெட்டி என்று எதுவுமில்லையாயினும், பொழுதை இப்படியா போக்க வேண்டும்? என் தொழில் இது, நான் பார்க்கிறேன். அதுபோல் அவர்கள் தொழிலை அவர்கள் பார்க்க வேண்டாமா?

எங்க தொழிலே இன்னைக்கு உங்களை நேர்ல பார்க்கிறதுதான் சார்

அடக் கடவுளே…! ஏன்யா உங்க பொன்னான நேரத்தை இப்டி வேஸ்ட் பண்ணிட்டு இங்க வந்து இப்டி உட்கார்ந்து கிடக்கீங்க? இப்டியெல்லாம் நேரத்தை ஒதுக்கிட்டு வந்து ஒரு சினிமா நடிகனைப் பார்க்கிறதும், அவனோட பேசணும்னு ஆசைப்படுறதும், உங்களுக்கு வெட்கமா இல்லையா? இது என் தொழில், நான் பார்க்கிறேன்அதுபோல் உங்க பிழைப்பை நீங்க பாருங்கஏன் உங்க காலத்தை விரயம் பண்ணுறீங்க…?

இதை நினைத்தபோது இவனுக்கே சுருக்கென்றது. உன்னை யாரு இந்த டி.வி. நிகழ்ச்சிக்கு வரச் சொன்னது? என்னால முடியாது. நான் நடிகன். நடிக்கிறேன். படங்களைப் பார்க்கிறது மக்களோட பொழுதுபோக்கு. அதோட முடிஞ்ச போச்சுஅப்புறம் அவுங்கவுங்க சொந்த வேலையைப் பார்க்க வேண்டிதானேஎதுக்காக என்னைப் பார்க்க இங்க வரணும்? டி.வி.க்காரன் கூப்டபோதே நான் வரலைன்னு சொல்லியிருக்கணும்ஏதோ வந்திட்டேன். இனிமே இப்டி வரமாட்டேன்இதுதான் கடைசி….ரசிகர்கள்ங்கிற பேர்ல மக்களை, இளைஞர்களை ஏமாத்த நான் தயாரில்லை.

பார்த்திட்டீங்கல்லபோயிட்டு வாங்கஎன்று சொல்லி எழுந்து விடலாமா என்று தோன்றியது பிரதீப்பிற்கு. தொலைக்காட்சிகளுக்கு அவர்கள் பிழைப்பு ஓடியாக வேண்டும். இப்படி ஏதாவது வருஷத்திற்கும் செய்து கொண்டிருந்தால்தான் ஆயிற்று. அதற்கு நம்மையும் டிஸ்டர்ப் பண்ணுகிறார்கள். சும்மா இருக்க விட மாட்டேன் என்கிறார்கள். பிழைப்பிற்கு நடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அக்கடா என்று கிடப்போம் என்றால் விடுவதில்லை.

சிறு வயதில் ஊரை விட்டு ஓடி வந்ததே நடிப்பதற்காகத்தான். ஊரில் இருந்த காலத்திலேயே நடிகனை ஓடிப் போய்ப் பார்ப்பது என்பது பிடிக்காது. ஆனாலும் நாமும் நடிகன் ஆக வேண்டும் என்கிற ஆசை மட்டும் மனதில் ஏனோ கொழுந்து விட்டு எறிந்துகொண்டேயிருந்தது. வந்து, நாய் பட்ட பாடு பட்டு எப்படியோ தப்பிக் கிப்பி நடிகனாகியாயிற்று. அத்தோடு விடுகிறார்களா? ரசிகர் மன்றம் வைக்கவா என்று வந்து நிற்கிறாரகள். தயவுசெய்து இதை மட்டும் கேட்காதீர்கள் என்று சொல்லியாயிற்று. எப்படித்தான் அந்தத் துணிச்சல் வந்ததோ? ரசிகர்கள்தாங்க உங்களை ஃபீல்டுல நிறுத்துறவங்க….அவுங்க இல்லன்னா நீங்க இல்ல….அவுங்கள வச்சிதான் நீங்கரசிகர் மன்றம் இருந்தாத்தான் ஊருக்கு ஊர் உங்க கட் அவுட்டுக்கு மாலை போட்டு, பாலாபிஷேகம் பண்ணி, கொடி, தோரணம் கட்டி, ஒண்ணுமில்லாத குப்பைப் படத்தக் கூட என்னவோ இருக்கு போலிருக்குங்கிற மாதிரி ஓட வச்சு, வசூல் திரட்டி, ஆளுகளத் தியேட்டருக்கு இழுத்திடுவாங்கஅடிச்சுப் பிடிச்சு அவுங்களோட முயற்சியினாலதான் வசூலாகும் படம். உங்க மார்க்கெட்டும் டவுனாகாம நட்டமா நிக்கும்….

எல்லாஞ் சரிதான். என்னவோ என் மனசாட்சி ஒத்துக்கலையோசிப்போம்….. – சொல்லி அனுப்பியவன்தானே…..பிறகு யாரும் வரவில்லையே….படங்கள் நல்ல தரமாய்த் தானாகவே அமைந்து விடுகின்றன. அதனால் பிழைத்துக் கொண்டிருக்கிறது. தான் செய்தது சரியா, தவறா?

தரமாய்த்தான் அமைந்து விடுகின்றனவா அல்லது என்னவோ ஒரு நேரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கின்றனவா? அந்தக் காலத்தில் ஊரில் அப்பாவிடம் அடி வாங்கிக் கொண்டேனும் திருட்டுத்தனமாய் விடாமல் ரெண்டாம் ஆட்டம் சினிமா போய்விட்டு வந்து படுத்துக் கொண்டு அந்த ராத்திரி ரெண்டு மணியிலும் கூடத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு பார்த்த சினிமாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தோமே, அந்த மாதிரித் தூங்க விடாமல் தொந்தரவு செய்த படங்களா இன்றைய படங்கள்? அப்படிப் படங்களா என்னுடைய படங்கள்?

மனிதச் சிந்தனையை, அவனுடைய குணாதிசயங்களை, ஒழுக்கத்தை, பண்பாட்டை மேன்மைப் படுத்தும் திரைப்படங்களாகவல்லவா அன்று வந்து கொண்டிருந்தன? தான் இது வரை அப்படி ஒரு படத்திலாவது நடித்திருக்கிறோமா? எந்தத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு மனசைப் படாத பாடு படுத்தியதோ அதே மாதிரித் திரைப்படங்கள் ஒன்றாவது இன்று வருகின்றனவா? தான் இத்தனை புகழ் பெற்ற பின்பும் அம்மாதிரி ஒரு படத்திலாவது நடித்தாக வேண்டும் என்ற துணிச்சல் தனக்கு வருகிறதா? இன்று வரை தன் விருப்பத்திற்கு ஒரு படத்திலாவது நடித்திருக்கிறோமா?

என்ன எக்ஸ்பிரஷன் காண்பிக்கிறேன் என்று என் படத்தை இப்படிப் பார்க்கிறார்கள்? எந்தக் காட்சியில் தத்ருபமாக நடித்திருக்கிறேன் என்று இப்படிப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்? இந்த சமுதாயத்திற்கான என்ன செய்தியை என் படங்கள் சொல்லுகின்றன என்று இப்படி ஓட வைக்கிறார்கள்? இன்னும் பத்து வருஷத்திற்கு நான் ஃபீல்டில் தாங்க வேண்டும் என்பது போலல்லவா வசூலை அள்ளிக் கொட்டுகிறார்கள்?

நன்றாக மனசாட்சிப்படி யோசித்தால் இது இந்த சமூகத்திற்குச் செய்யும் பெரிய துரோகமல்லவா? திரைப்படம் என்பது இந்த மக்களிடம் எத்தனை எளிதாகப் போய்ச் சேரும் ஊடகம்? அவர்கள் மனதில் எத்தனை மகிழ்ச்சியாய் இடம் பிடிக்கும் ஒரு கருவி? அதை இப்படிக் கன்னா பின்னாவென்று பயன்படுத்தலாமா? எனக்குத் தொழில்தான் அது. ஆனாலும் அதிலும் கொஞ்சமேனும் ஒரு தொண்டு மனப்பான்மை வேண்டாமா? இப்படியா இளைய சமுதாயமும், சமூகமும், எண்ணங்களாலும், சிந்தனைகளாலும், கெடுவதற்கு வழி வகுப்பது?

அவனவன் பாட்டை அவனவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் இவர்களை வந்து பார்க்கச் சொன்னார்கள்? குப்பையாய்த்தான் படம் எடுக்கிறார்கள் என்று வராமல் இருக்க வேண்டிதானே? வந்து, காசையும் வீணாக்கி, நேரத்தையும் வீணாக்கி, உடலையும் கெடுத்துக் கொண்டு, எதற்காக இப்படி ஒரு நஷ்டத்தை வலிய எதிர் கொள்ள வேண்டும். குப்பையை எடுத்தால் பார்க்க மாட்டோம் என்று ஒட்டு மொத்தமாய் ஒதுக்கினால் எல்லாம் மாறிப் போகிறது. அப்பொழுதாவது என்னை வைத்து கொஞ்சம் நல்ல படமாய் எடுப்பார்கள் இல்லையா? நானும் என் ஆழ்மனதில் உள்ள ஆதங்கப்படி நடிக்க வந்ததின் அர்த்தத்தை நிலை நிறுத்தலாமில்லையா?

இப்படி டி.வி. பேட்டி, பத்திரிகைப் பேட்டி, என்று என் நேரத்தையும் வீணாக்கி, அவர்கள் நேரத்தையும் வலிய வீணாக்கி இந்த சமுதாயத்தையும் அறிந்தோ அறியாமலோ கெடுத்துக் குட்டிச் சுவராக்கி ஏனிப்படி எல்லாமும் கெட்டவைகளாய் நடக்கின்றன இங்கே?

என்று இவையெல்லாம் மாறும்? என்று மனிதர்கள் எல்லோரும் நற்சிந்தனையை மட்டும் அடிப்படையாய்க் கொண்டு வாழ்வார்கள்? என்று இந்த சமுதாயம் உருப்படும்?

சார்….சார்பிரதீப் சார்…..என்னாச்சு இன்னைக்கு உங்களுக்குமுடிச்சிக்குவோம் சார்வேறொரு நாளைக்குப் பார்த்துக்குவோம்காமிரா சுற்றியுள்ள மேடையின் அமைப்பை படிப்படியாகக் காட்டிக் கொண்டே விலகுகிறது.

ஏதோவொரு வகையில் தனது எதிர்ப்பை இன்று மௌனமாகவேனும் பதிவு செய்து விட்டதான திருப்தியில் மெல்லிய புன்னகையோடு ஸாரி….என்றவாறே இருக்கையிலிருந்து எழுகிறான்.

எதிரே அமர்ந்திருந்த ரசிகர்கள் கூட்டம் பிரதீப்பையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. லைவ் ரிலேயாகத் துவங்கிய நிகழ்ச்சி சட்டென்று மாறிய அவனது அப்போதைய வெளியீடான திரைப்படத்தின் ஒரு பாடலோடு காட்சியாய் விரிகிறது. படத்தின் பெயரே நிகழ்ச்சிக்கும் ஆகிப் போனதாய் இவன் மனத்தில் தோன்ற அதுநாள்வரை இல்லாத என்னவோ ஒரு திருப்தி மனதில் பரவுவதை உணர்கிறான் பிரதீப் என்கிற அந்த மகா  நடிகன்.

 -------------------------------------

on ஜூன் 15, 2012 

இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்