15 ஜூன் 2012

”வேகத்தடை“ சிறுகதை

(உயிரோசை இணை இதழ் – 11.06.2012) 

ஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத் தோன்றியது. தனது ஒவ்வொரு பதில் கண்டும் ஊடகவியலாளர் தொடர் கேள்வி கேட்கத் தயங்குவதிலிருந்து அது புரிந்தது.

ஒன்றிலிருந்து ஒன்று பிறப்பதாகத்தான் பேட்டி அமைய வேண்டும். அதுதான் உண்மையான பேட்டிக்கு அழகு. அம்மாதிரியான கேள்விகளைக் கேட்பதும், அதற்கான தகுதியோடிருப்பதும் பேட்டியாளரின் சாமர்த்தியம். அதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பேட்டி கொடுப்பவரின் பதில்கள் தெளிவாக அமைவது அதைவிடச் சாமர்த்தியம். ஆனால் ஒன்று அம்மாதிரிக் கேள்விகளும், பதில் வருவதின் எதிர்வினையான குறுக்குக் கேள்விகளும் அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும்தான் பொருந்தும். தனக்கு அந்த முறையைக் கடைப்பிடித்தால் பேட்டி எடுப்பவர் அத்தனை சிரமப்பட வேண்டியதில்லைதான். ஆனாலும் அதற்கும் ஒரு பயிற்சி வேண்டும்தான்.

அல்லாமல் இம்மாதிரியான கேள்விகள்தான் கேட்கப்படும் என்று முன்னரே அறிவித்து, அவற்றை அப்பொழுதுதான் கேட்பதுபோல் கேட்டாலும் பார்வையாளர்களுக்கு அது வெட்ட வெளிச்சமாகி விடும் வாய்ப்பு உண்டு. தயாரிக்கப்பட்டவையில் ஒன்றுக்கொன்றான தொடர்பு பெரும்பாலும் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அது பேட்டி கொடுப்பவரை திருப்தி செய்யும் கேள்விகளாகவே அமையக் கூடும் அபாயம் உண்டு.

எப்படி இருந்தால்தான் என்ன? இது தேவையா? என்று ஆரம்பத்திலேயே மனதுக்குத் தோன்றிவிட்டது ரஞ்சித்திற்கு. ஆனாலும் மறுக்க முடியவில்லை. மறுத்தால் ஊடகங்களின் ஆதரவு கிடைக்காது. குறிப்பாக ஒதுக்கப்படும் அபாயமுண்டு. அதனால் தன் தொழில் படிப்படியாகப் பாதிக்கப்படும். இதுதான் பிழைப்பு என்று வந்தாயிற்று. வாழ்க்கைக்கு ஆதாரமே இனி இவைதான் என்று காலம் கவனமாய்க் கழிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து பிறழ்ந்து விடக் கூடாது. தொழிலைக் கெடுத்துக் கொண்டதுபோல் ஆகிவிடக் கூடாது.

யோசனையிலேயேதான் உட்கார்ந்திருக்கிறான். உடம்பு சரியில்லையா சார் என்று கரிசனையோடு கேட்கிறார் பேட்டியாளர். அதெல்லாம் ஒண்ணுமில்ல….என்கிறான் இவன். அப்போது காமிரா வேறு திசையில்.

மனசுதான் சரியில்லை….என்று சொல்லலாம்தான். சொன்னால், ஏன்…என்னாச்சு? என்று அடுத்த கேள்வி வரும். பின் அதற்குப் பதில் சொல்ல வேணும். அந்த பதிலை அங்கு சொல்ல முடியாது. அது மனதுக்குள் தனக்கு மட்டுமே சொல்லிக் கொள்ளும் பதில். வெளியே சொன்னால் விபரீதம்தான். அப்படிச் சொல்வதற்கு இங்கே வந்திருக்கவே வேண்டாமே என்று ஆகி விடும். வந்த இடத்திலும் போலியாய்த்தான் உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் யதார்த்தமாய் இருப்பதுபோல் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்களும் நானும் ஒண்ணுதான் என்பதைப்போல. அதுவே நடிப்புதான் என்று தோன்றுகிறது. மனதுக்கு நியாயமில்லை. அப்பொழுது அது நடிப்புதானே என்று நினைத்துக் கொள்கிறான்.

இன்று ஏதோ கொஞ்சம் காசு சேர்ந்து விட்டது என்பதற்காக, காரில் வந்து போகிறோம் என்பதற்காக அவர்களை விட உசத்தி என்று ஆகி விடுமா? காசு சேர்ந்தால் உசத்தியா? கல்வியும், கேள்வியும்தானே செல்வங்கள்? அறிவு மெய்ப்படுவதுதானே வெளிச்சம். அதுதானே அழியாச் செல்வம்? என்னவோ வாழ்வாதாரம் கொஞ்சம் தாராளம் என்றால் எல்லாத்தரமும் உயர்ந்து விட்டது என்ற பொருளா?

வேகத்தடை படத்துல அசுர வேகத்தைக் காண்பிச்சிருக்கீங்களே…? கேள்வி வந்து விழுந்தது அரங்கில். யார் கேட்டது என்று பார்த்தான். எதிரே இருந்த கூட்டத்தில் மேல் வரிசையில் ஒரு பையன் கையைத் தூக்கினான்.

அது காமிராமேனோட, எடிட்டரோட திறமைங்க….சொல்லத்தான் நினைத்தான். வாய் நுனிவரை வந்து விட்டது. சொல்லாமல் நிறுத்தினான். பொய்மை தடுக்கிறது. மனசாட்சி நிறுத்துகிறது. சொல்லாதே…!

டைரக்டரோட எதிர்பார்ப்பு அதுதானே…அதைப் பூர்த்தி செய்தாகணுமில்லையா? அதைவிட நீங்களெல்லாரும் அப்டித்தானே விரும்புறீங்க….உங்க விருப்பம்தான் என் விருப்பம். அதாவது உங்கள் விருப்பத்தைப் புரிந்து கொண்டு உங்கள் நேரத்தை, பணத்தை நீங்கள் மயங்கிய வேளையிலே பிடுங்கி, நான் என்னை உயர்த்திக் கொள்வது. உங்களை ஏமாற்றி நிற்பது…

சொல்லி முடித்ததும், கையொலி அரங்கத்தைப் பிளந்தது. உறாய்ய்ய்ய்…என்று பலரும் இருக்கையிலிருந்து எழுந்து குதித்தார்கள்.

ரஞ்சித், பார்த்துங்க…விழுந்துடப் போறீங்க…என்று இங்கிருந்து கத்தினான். உண்மையான கரிசனத்தில் வந்த வார்த்தைகள் அவை.

உண்மையிலேயே அந்த ஷாட் மெல்ல எடுத்ததுதான். ஆனால் அதற்கு முதல் காட்சியின் தொடர்ச்சியாக அந்த சீனில் அப்படி வந்துதான் குதித்தாக வேண்டும். அது தொழில் நுட்பக் கலைஞர்களின் கை வண்ணம். அது தன்னை உயரத்தில் கொண்டு வைக்கிறது.

முத முதல்ல உறீரோயினை நீங்க சந்திக்கிற எடத்துல ஒரு மாதிரி உதட்டை மடக்கி நாக் சுழட்டுவீங்களே? அதக் கொஞ்சம் செய்து காண்பீங்களேன்….? யாரோ ஒரு பெண் ரசிகை கேட்டது. உடனே உற்உறா….என்று சத்தமெழுந்தது. ரஞ்சித்திற்கு வெட்கமாக இருந்தது. இதையெல்லாம் எதற்குக் கேட்கிறார்கள் என்று தோன்றியது. அது ஏதோ அந்த நேரத்திய காட்சிக்காக தான் செய்தது. அதையே நாலு படத்தில் செய்தால் அதுவும் அலுத்து விடும். பிறகு வேறு என்னமாதிரி செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். இதைக் கண்டு மயங்கியது போல் பேசுகிறதே இந்தப் பெண். பெற்றோர்கள் இது இப்படி இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் வயிற்றெரிச்சல் கொள்ள மாட்டார்களா? இதற்காகவா பெற்றோம் என்று நினைக்க மாட்டார்களா? இந்தப் பெண்ணைப் படிக்க பட்டணம் அனுப்பியது இந்தக் கண்றாவிக்காகவா என்று வேதனையடையமாட்டார்களா? அசட்டுப் பிசட்டு என்று இதென்ன கேள்வி?

தன்னையே நான் காதலிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுமோ? கைக்கிளையாக நினைத்துக் கொண்டிருக்குமோ? இப்படி எதையாவது நினைத்துக் கொண்டு, மயங்கிச் சரிந்து கொண்டிருந்தால் இதன் படிப்பு என்னாவது? பெற்றோர்கள் இதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னாவது? நான் ஏற்கனவே கல்யாணமானவன் என்பதாவது இதற்குத் தெரியுமா?யார் யாரையோ காதலிப்பது போல் படங்களில் நடிக்கும் நான் உண்மை வாழ்க்கையில் ஒரு மனைவியை அரணாகக் கொண்டிருப்பவன் என்பதாவது இதற்குப் புரியுமா? சத்தியமாக அவளுக்குத் துரோகம் செய்யாதவன் என்ற நேர்மை அறியுமா?

இதை நினைத்தபோது இதே மாதிரி கடந்த தீபாவளிக்கு நடந்த இன்னொரு பேட்டியின் போது வேறொரு ரசிகை தன்னுடன் கை கோர்த்து ஆடியதும், மயங்கியதுபோல் நழுவி தன் மேல் வேண்டுமென்றே விழுந்ததும், தவிர்க்க முடியாமல் தான் அதைப் பிடித்துக் கீழே படுக்க வைத்ததும், அதைத் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்துவிட்டு தன் மனைவி உண்மைலயே அந்தப் பொண்ணு மயங்கிருச்சா? இல்ல பாவலாவா என்று கேட்டதும், ச்சே…நா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல்ருக்கே….என்று சற்றுக் கலங்கிப் போனதும்….இப்போது அந்த மாதிரி ஏதும் நடந்து விட இடம்கொடுக்கக் கூடாது என்று ரஞ்சித்தின் மனம் அந்தக் கணத்தில் சுதாரித்தது. வெறுமே படத்தில் உதட்டைச் சுழித்ததற்கே இப்படியென்றால் நேரில் ஏதாவது அதீதமாக சேஷ்டைகள் செய்தால் எல்கை மீறி விடும் போலிருக்கிறதே….!

அந்தக் காலத்திலும் நடிகர் நடிகைகளை ரசிகர்கள் விரும்பினார்கள்தான். ஆனால் இந்த அளவுக்கா? வெறியர்களாயிருந்தார்கள். அது அவர்களின் நடிப்பிற்காகவும், ஏற்றுக் கொண்ட பாத்திரங்களின் வாயிலாக அவர்களுக்கு ஏற்பட்டிருந்த இமேஜ் காரணமாகவும்தான். ஆனால் சொந்த வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்ளும் அளவுக்க இப்படியா? இதனால் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளனவே? ஏன் வெறும் சினிமா என்று பார்க்க மாட்டேன் என்கிறார்கள்? வாசலோடு விட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அப்படியென்ன தேசத் தொண்டா ஆற்றுகிறார்கள் இங்கே? கச்சா பிலிமைப் புகைப்படங்கள் ஆக்குவதன் மூலமாக கேளிக்கை ஆக்குவதன் மூலமாக ஒரு வகையான வியாபாரம்தானே செய்கிறார்கள்? இதைப் போய் இத்தனை சீரியசாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லையே? ஏன் இந்த இழிநிலை?

நடிப்பு என்கிற தொழிலில் இப்படியெல்லாம் எதையாவது புதுசு புதுசாகச் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. அது இவர்களுக்குப் பிடித்ததாக ஆகி விடுகிறது. அதனால் தன் பிழைப்பில் மெருகு கூடுகிறது. இன்னும் கொஞ்ச காலம் தள்ளலாம்தான். ஓடுற மட்டும் ஓடட்டும். பிறகு பார்த்துக்கலாம்.

உள் மனதுக்குள் இப்படியான எண்ணங்கள்தான் இருக்கின்றன. எதற்காக இப்படி வந்து பழி கிடக்கிறார்கள்? இவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? அவரவர் வீடுகளுக்கு என்று செய்ய வேண்டிய காரியங்களே இருக்காதா? அவரவர் கல்வி, வேலை என்று எதுவும் கிடையாதா? வேலை வெட்டி என்று எதுவுமில்லையாயினும், பொழுதை இப்படியா போக்க வேண்டும்? என் தொழில் இது, நான் பார்க்கிறேன். அதுபோல் அவர்கள் தொழிலை அவர்கள் பார்க்க வேண்டாமா?

எங்க தொழிலே இன்னைக்கு உங்களை நேர்ல பார்க்கிறதுதான் சார்…

அடக் கடவுளே…! ஏன்யா உங்க பொன்னான நேரத்தை இப்டி வேஸ்ட் பண்ணிட்டு இங்க வந்து இப்டி உட்கார்ந்து கிடக்கீங்க? இப்டியெல்லாம் நேரத்தை ஒதுக்கிட்டு வந்து ஒரு சினிமா நடிகனைப் பார்க்கிறதும், அவனோட பேசணும்னு ஆசைப்படுறதும், உங்களுக்கு வெட்கமா இல்லையா? இது என் தொழில், நான் பார்க்கிறேன்…அதுபோல் உங்க பிழைப்பை நீங்க பாருங்க…ஏன் உங்க காலத்தை விரயம் பண்ணுறீங்க…?

இதை நினைத்தபோது இவனுக்கே சுருக்கென்றது. உன்னை யாரு இந்த டி.வி. நிகழ்ச்சிக்கு வரச் சொன்னது? என்னால முடியாது. நான் நடிகன். நடிக்கிறேன். படங்களைப் பார்க்கிறது மக்களோட பொழுதுபோக்கு. அதோட முடிஞ்ச போச்சு…அப்புறம் அவுங்கவுங்க சொந்த வேலையைப் பார்க்க வேண்டிதானே…எதுக்காக என்னைப் பார்க்க இங்க வரணும்? டி.வி.க்காரன் கூப்டபோதே நான் வரலைன்னு சொல்லியிருக்கணும்…ஏதோ வந்திட்டேன். இனிமே இப்டி வரமாட்டேன்…இதுதான் கடைசி….ரசிகர்கள்ங்கிற பேர்ல மக்களை, இளைஞர்களை ஏமாத்த நான் தயாரில்லை.

பார்த்திட்டீங்கல்ல…போயிட்டு வாங்க…என்று சொல்லி எழுந்து விடலாமா என்று தோன்றியது ரஞ்சித்திற்கு. தொலைக்காட்சிகளுக்கு அவர்கள் பிழைப்பு ஓடியாக வேண்டும். இப்படி ஏதாவது வருஷத்திற்கும் செய்து கொண்டிருந்தால்தான் ஆயிற்று. அதற்கு நம்மையும் டிஸ்டர்ப் பண்ணுகிறார்கள். சும்மா இருக்க விட மாட்டேன் என்கிறார்கள். பிழைப்பிற்கு நடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அக்கடா என்று கிடப்போம் என்றால் விடுவதில்லை.

சிறு வயதில் ஊரை விட்டு ஓடி வந்ததே நடிப்பதற்காகத்தான். ஊரில் இருந்த காலத்திலேயே நடிகனை ஓடிப் போய்ப் பார்ப்பது என்பது பிடிக்காது. ஆனாலும் நாமும் நடிகன் ஆக வேண்டும் என்கிற ஆசை மட்டும் மனதில் ஏனோ கொழுந்து விட்டு எறிந்துகொண்டேயிருந்தது. வந்து, நாய் பட்ட பாடு பட்டு எப்படியோ தப்பிக் கிப்பி நடிகனாகியாயிற்று. அத்தோடு விடுகிறார்களா? ரசிகர் மன்றம் வைக்கவா என்று வந்து நிற்கிறாரகள். தயவுசெய்து இதை மட்டும் கேட்காதீர்கள் என்று சொல்லியாயிற்று. எப்படித்தான் அந்தத் துணிச்சல் வந்ததோ? ரசிகர்கள்தாங்க உங்களை ஃபீல்டுல நிறுத்துறவங்க….அவுங்க இல்லன்னா நீங்க இல்ல….அவுங்கள வச்சிதான் நீங்க…ரசிகர் மன்றம் இருந்தாத்தான் ஊருக்கு ஊர் உங்க கட் அவுட்டுக்கு மாலை போட்டு, பாலாபிஷேகம் பண்ணி, கொடி, தோரணம் கட்டி, ஒண்ணுமில்லாத குப்பைப் படத்தக் கூட என்னவோ இருக்கு போலிருக்குங்கிற மாதிரி ஓட வச்சு, ஆளுகளத் தியேட்டருக்கு இழுத்திடுவாங்க…அடிச்சுப் பிடிச்சு அவுங்களோட முயற்சியினாலதான் வசூலாகும் படம். உங்க மார்க்கெட்டும் டவுனாகாம நட்டமா நிக்கும்….

எல்லாஞ் சரிதான். என்னவோ என் மனசாட்சி ஒத்துக்கலை…யோசிப்போம்….. – சொல்லி அனுப்பியவன்தானே…..பிறகு யாரும் வரவில்லையே….படங்கள் நல்ல தரமாய்த் தானாகவே அமைந்து விடுகின்றன. அதனால் பிழைத்துக் கொண்டிருக்கிறது. தான் செய்தது சரியா, தவறா?

தரமாய்த்தான் அமைந்து விடுகின்றனவா அல்லது என்னவோ ஒரு நேரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கின்றனவா? அந்தக் காலத்தில் ஊரில் அப்பாவிடம் அடி வாங்கிக் கொண்டேனும் திருட்டுத்தனமாய் விடாமல் ரெண்டாம் ஆட்டம் சினிமா போய்விட்டு வந்து படுத்துக் கொண்டு அந்த ராத்திரி ரெண்டு மணியிலும் கூடத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு பார்த்த சினிமாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தோமே, அந்த மாதிரித் தூங்க விடாமல் தொந்தரவு செய்த படங்களா இன்றைய படங்கள்? அப்படிப் படங்களா என்னுடைய படங்கள்?

மனிதச் சிந்தனையை, அவனுடைய குணாதிசயங்களை, ஒழுக்கத்தை, பண்பாட்டை மேன்மைப் படுத்தும் திரைப்படங்களாகவல்லவா அன்று வந்து கொண்டிருந்தன? தான் இது வரை அப்படி ஒரு படத்திலாவது நடித்திருக்கிறோமா? எந்தத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு மனசைப் படாத பாடு படுத்தியதோ அதே மாதிரித் திரைப்படங்கள் ஒன்றாவது இன்று வருகின்றனவா? தான் இத்தனை புகழ் பெற்ற பின்பும் அம்மாதிரி ஒரு படத்திலாவது நடித்தாக வேண்டும் என்ற துணிச்சல் தனக்கு வருகிறதா? இன்று வரை தன் விருப்பத்திற்கு ஒரு படத்திலாவது நடித்திருக்கிறோமா?

என்ன எக்ஸ்பிரஷன் காண்பிக்கிறேன் என்று என் படத்தை இப்படிப் பார்க்கிறார்கள்? எந்தக் காட்சியில் தத்ருபமாக நடித்திருக்கிறேன் என்று இப்படிப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்? இந்த சமுதாயத்திற்கான என்ன செய்தியை என் படங்கள் சொல்லுகின்றன என்று இப்படி ஓட வைக்கிறார்கள்? இன்னும் பத்து வருஷத்திற்கு நான் ஃபீல்டில் தாங்க வேண்டும் என்பது போலல்லவா வசூலை அள்ளிக் கொட்டுகிறார்கள்?

நன்றாக மனசாட்சிப்படி யோசித்தால் இது இந்த சமூகத்திற்குச் செய்யும் பெரிய துரோகமல்லவா? திரைப்படம் என்பது இந்த மக்களிடம் எத்தனை எளிதாகப் போய்ச் சேரும் ஊடகம்? அவர்கள் மனதில் எத்தனை மகிழ்ச்சியாய் இடம் பிடிக்கும் ஒரு கருவி? அதை இப்படிக் கன்னா பின்னாவென்று பயன்படுத்தலாமா? எனக்குத் தொழில்தான் அது. ஆனாலும் அதிலும் கொஞ்சமேனும் ஒரு தொண்டு மனப்பான்மை வேண்டாமா? இப்படியா இளைய சமுதாயமும், சமூகமும், எண்ணங்களாலும், சிந்தனைகளாலும், கெடுவதற்கு வழி வகுப்பது?

அவனவன் பாட்டை அவனவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் இவர்களை வந்து பார்க்கச் சொன்னார்கள்? குப்பையாய்த்தான் படம் எடுக்கிறார்கள் என்று வராமல் இருக்க வேண்டிதானே? வந்து, காசையும் வீணாக்கி, நேரத்தையும் வீணாக்கி, உடலையும் கெடுத்துக் கொண்டு, எதற்காக இப்படி ஒரு நஷ்டத்தை வலிய எதிர் கொள்ள வேண்டும். குப்பையை எடுத்தால் பார்க்க மாட்டோம் என்று ஒட்டு மொத்தமாய் ஒதுக்கினால் எல்லாம் மாறிப் போகிறது. அப்பொழுதாவது என்னை வைத்து கொஞ்சம் நல்ல படமாய் எடுப்பார்கள் இல்லையா? நானும் என் ஆழ்மனதில் உள்ள ஆசைப்படி நடிக்க வந்ததின் அர்த்தத்தை நிலை நிறுத்தலாமில்லையா?

இப்படி டி.வி. பேட்டி, பத்திரிகைப் பேட்டி, என்று என் நேரத்தையும் வீணாக்கி, அவர்கள் நேரத்தையும் வலிய வீணாக்கி இந்த சமுதாயத்தையும் அறிந்தோ அறியாமலோ கெடுத்துக் குட்டிச் சுவராக்கி ஏனிப்படி எல்லாமும் கெட்டவைகளாய் நடக்கின்றன இங்கே?

என்று இவையெல்லாம் மாறும்? என்று மனிதர்கள் எல்லோரும் நற்சிந்தனையை மட்டும் அடிப்படையாய்க் கொண்டு வாழ்வார்கள்? என்று இந்த சமுதாயம் உருப்படும்?

சார்….சார்…ரஞ்சித் சார்…..என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு…முடிச்சிக்குவோம் சார்…வேறொரு நாளைக்குப் பார்த்துக்குவோம்…காமிரா சுற்றியுள்ள மேடையின் அமைப்பை படிப்படியாகக் காட்டிக் கொண்டே விலகுகிறது.

ஏதோவொரு வகையில் தனது எதிர்ப்பை இன்று மௌனமாகவேனும் பதிவு செய்து விட்டதான திருப்தியில் மெல்லிய புன்னகையோடு ஸாரி….என்றவாறே இருக்கையிலிருந்து எழுகிறான் ரஞ்சித்.

எதிரே அமர்ந்திருந்த ரசிகர்கள் கூட்டம் இவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. லைவ் ரிலேயாகத் துவங்கிய நிகழ்ச்சி சட்டென்று மாறிய அவனது அப்போதைய வெளியீடான திரைப்படத்தின் ஒரு பாடலோடு காட்சியாய் விரிகிறது. படத்தின் பெயரே நிகழ்ச்சிக்கும் ஆகிப் போனதாய் இவன் மனத்தில் தோன்ற அதுநாள்வரை இல்லாத என்னவோ ஒரு திருப்தி மனதில் பரவுவதை உணர்கிறான் ரஞ்சித்குமார் என்கிற அந்த நடிகன். -------------------------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...