“ஒரு நாள் கூத்து” சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு மாத இதழ்-ஜூன்2026.
“ஆர்த்தி…! என்ன இந்நேரத்துல…? – ஆச்சரியத்துடன்
கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தாள் பிரேமா.
பதில் சொல்லாமல் வீட்டுக்குள் போனவளைப் பின்
தொடர்ந்தாள்.
ஆபீசுக்குப் போகாமே இங்கே வந்திருக்கே…? லீவு போட்டுட்டியா? – கேள்வி மேலும் தொடர்ந்தது.
உறாலில் இருந்த காற்றாடியை உயிர் பெறச் செய்து
விட்டு ஸ்ஸ்ஸ்….என்று ஆசுவாசப்பட்டவாறே அங்கிருந்த சோபாவில் சாய்ந்தாள் ஆர்த்தி.
அருகில் வந்து அமர்ந்து தலையைத் தடவிக் கொடுத்தாள்
பிரேமா. எதும் பிரச்னையா? என்றாள்.
அக்கா….கொஞ்ச நேரத்துக்கு எதுவும் கேட்காதே….முடியுமானா
எனக்கு ஒரு ஸ்டாராங்க் காஃபி கொடு….. –கேட்டுக் கொண்டே சட்டென்று அவள் மடியில் படுத்துவிட்டாள்
ஆர்த்தி. நண்பனின் மனைவி. எவ்வளவு நெருக்கம்…!
பிரேமாவின் மனம் இளகியது. ஏண்டீ இப்டீ…? சரி,
படுத்திரு… எடுத்திட்டு வர்றேன்…. என்றவாறே அவள் தலையைத் தூக்கி ஒரு தலையணையை அண்டக்
கொடுத்து எழுந்தாள் பிரேமா.
நல்ல சூடா இருக்கணும்….இல்லன்னா வேண்டாம்…..
சரீடீ…சரி…..என்றவாறே உள்ளே போனாள் பிரேமா. அதற்குள்
ஆர்த்தி அசந்து விட்டதுபோல் இருந்தது.
உடம்பு எதுவும் சரியில்லையோ? லீவு போட்டு, வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே? அந்த மூன்று
நாளின் முதல் நாளில் வயிற்று வலி, வயிற்று வலி என்று பிதற்றுவாளே? அதுவாய் இருக்குமோ?
தொலைபேசி அலறியது. யாராய் இருக்கும்? அடுப்பில்
கொதித்துக் கொண்டிருந்த பாலை சிம்மில் வைத்து விட்டு, போய் எடுத்தாள்.
பிரேமா…நான்தான்…அங்க டேபிள் டிராயர்ல என் பர்ஸ்
இருக்கா பாரு…? – ரவீந்திரன் பதற்றத்தோடு கேட்டான்.
போச்சு, மறந்திட்டீங்களா? சமீபமா உங்களுக்கு
இதே வேலையாப் போச்சு….எங்கிருக்கீங்க….?
பர்ஸ் இருக்கா பாருன்னா? ரோட்டுலதான் நிக்கிறேன்….திடீர்னு
டிக்கெட் பாக்கெட்டைப் பார்க்கிறேன்…பர்ஸைக் காணோம்….பயந்திட்டேன்…
சரி, பதறாதீங்க…..ஒரு நிமிஷம்…. – போனை வைத்துவிட்டுப்
போய்ப் பார்த்தாள்.
ஏ.டி.எம்.
டெபிட் கார்டு பர்ஸில்தான் இருக்கும். எடுத்து உபயோகித்துவிட்டு அப்படியே மறந்து வைத்து
விட்டுப் போயிருக்கிறான். கொண்டு வந்து டிராயரில் வைத்தாள். கிளம்புவதற்கு முன் தேவையானவற்றை
டேபிளில் கண்பார்வையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று எத்தனையோ முறை சொல்லிப் பார்த்திருக்கிறாள். அவன் செய்வதாயில்லை.
இப்படித்தான் வழியில் பதறிக்கொண்டு நிற்பதா?
ஃபோனை எடுத்தாள். லைன் துண்டிக்கப்பட்டிருந்தது.
அவன் செல்லுக்கு அடித்தாள். ரிங் போய்க்கொண்டேயிருந்தது. டிராபிக்கில் இருப்பான். ஆபீஸ்
போய்ச் சேரட்டும், பிறகு சொல்லலாம் என்று நினைத்து வைத்தாள். அதற்குள் அவனிடமிருந்தே
மீண்டும் போன்.
இருக்கு…..என்றாள். கண்டேன் சீதையை என்பதுபோல்
சொன்னால்தான் அவனுக்குப் பிடிக்கும்.
நல்லவேளை…அதுல
ரெண்டாயிரம் பணம் இருக்கும். அதை எடுத்து பீரோவுல வை. பணத்தோட டிராயர்ல வைக்காதே….பயந்தே
போயிட்டேன்… -சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டான். ஆர்த்தி வந்திருப்பதைச் சொல்ல வாயெடுத்தாள்.
ஏனோ சொல்லவில்லை. ஆபீஸ் போகாம இங்கே வந்து என்ன பண்றா? அவுங்க வீட்ல சத்தம் போடப் போறாங்க…என்பான்.
யக்கா….என்னாச்சு
காபி…? – கத்தினாள் ஆர்த்தி.
இதோ
வந்துட்டேண்டி…..- சொன்னவாறே அடுப்படியை நோக்கி ஓடினாள் பிரேமா. நல்லவேளை சிம்மில்
வைத்திருந்ததால் பால் மெல்லப் பொங்கி சாவகாசமாய் மேலே வந்து கொண்டிருந்தது. அணைத்து,
ஆர்த்தி கேட்டதுபோல் ஸ்டாராங்க் காபி கலந்து எடுத்து வந்தாள்.
ஆர்த்திக்குப்
பிடித்தது அவள் வீட்டின் காபிதான். எப்போது வந்தாலும் முதலில் அதை நீட்டிவிட வேண்டும்
அவள் முன்.
ஆனாலும்
தொழில் சுத்தம்கா உங்கிட்டே…எப்டி இப்டி ஒரு காபி போடறே…? பாலுக்குச் சொட்டுத் தண்ணி
கலக்க மாட்டே போலிருக்கு…கள்ளிச் சொட்டா டிகாக் ஷன் இறக்கிடுறே…அப்புறம் உன் காபியை
எப்படித் தவிர்க்க முடியும்? இந்தக் காபியைக் கொடுத்தே ரவியை உங்க முந்தானைல முடிஞ்சி
வச்சிருக்கீங்க…. சீ…போடி….அதெல்லாமில்லை….அவர் ஒரு
சுதந்திரப் பறவை….அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது…..
அப்டியா?
வேறே எங்கேயாச்சும் கூடு கட்டிடப் போறார்க்கா… - சொல்லி விட்டுச் சிரித்தாள் ஆர்த்தி.
விளையாட்டுக்குத்தான்
சொன்னாள் என்றாலும் அந்த வார்த்தைகள் பிரேமாவுக்கு சற்றுக் கலக்கத்தைத்தான் தந்தன.
என்னக்கா...நானும்
வந்ததுலேர்ந்து பார்க்கிறேன்...உன்கிட்டே ஒரு கலகலப்பே இல்ல இன்னிக்கு...? அங்க என்னடான்னா
எங்கம்மா பால் உறைல தண்ணிய விட்டு விட்டு அலசுவாங்க…அதுவே நூறு மிலி கலந்திடும். அப்புறம்
எப்டி காபி நல்லாயிருக்கும்? சொன்னாக் கேட்க
மாட்டாங்க….? பிரேமாக்கா மாதிரிப் போடு அப்பத்தான் எனக்குப் பிடிக்கும்னு ஆயிரந்தடவை
சொல்லிட்டேன்…அப்போ அங்கயே போய் குடிச்சிக்கோன்னுவாங்க….அம்புட்டுக் கோபம் வருமாக்கும்…..
அந்தக்காலத்துப்
பெரியவங்க அப்டித்தாண்டீ இருப்பாங்க… அவுங்களுக்கு எதையும் பொட்டுக்கூட வீண் பண்ணப்
பிடிக்காதாக்கும்….அவுங்ககிட்டேயிருந்து நாம நிறையக் கத்துக்கணும்….நீ இத்தனை ஸ்டாராங்கா
குடிக்கிறது சரியில்லை. அவ்வளவும் பித்தமாக்கும். ஒரு நாளைக்குத் தலையைச் சுத்திக்
கிறு கிறுன்னு வரப்போவுது…. வாமிட் பண்ணப்போறே….ஜாக்கிரதை….
என்னக்கா,
காபியையும் கொடுத்திட்டு, இப்டியும் சொல்றே…என்னை அனுபவிச்சுக் குடிக்க விடு….அடா…அடா…அடா….கா.பின்னா
நரசுஸ்தான்…அதோட சுவையும் மணமுமே தனி…….- விளம்பரத்தில் வருவதைச் சொல்லிக்கொண்டே அவள்
அனுபவித்துக் குடிப்பதை ரசித்துப் பார்த்துக்
கொண்டிருந்தாள் பிரேமா. அதெல்லாம் இருக்கட்டும்….இப்போ
திடீர்னு இங்கே ஏன் வந்தே…? ஏன் ஆபீஸ் போகலை…?
ஆபீசுக்கு
இன்னைக்கு லீவு போட்டுட்டேன்……
அப்போ
வீட்டுலதானே இருக்கணும்…கரெக்டா ஆபீஸ் டயத்துக்குக் கிளம்பினாப்ல இருக்கு நீ இங்கே
வந்திருக்கிறது…?
வர்ற
வழில திடீர்னு வயித்து வலி…அதான் அப்டியே இங்க ஒதுங்கிட்டேன் - எவ்வளவு உரிமையோடு சொல்கிறாள்?
ஏய்ய்ய்ய்…!
பொய் சொல்ற பார்த்தியா? அப்போ ஆபீசுக்குன்னு கிளம்பிட்டே…அப்டித்தானே?
அதாங்க்கா…கிளம்பி
போறச்சே…வயித்து வலி வந்துட்டதுனால இங்க வந்திட்டேன்ங்கிறேன்ல…- அவள் முழிக்கும் முழி
சந்தேகத்தைக் கிளப்பியது இவளுக்கு.
சரி,
அப்பக் கிளம்பு வீட்டுக்கு…போய் நல்லா ரெஸ்ட் எடு…எல்லாம் சரியாப் போயிடும்…..
ஏன்,
இங்கே ஓய்வெடுத்தா ஒத்துக்க மாட்டியா? எதுக்கு விரட்டறே…? படுத்திருந்திட்டு சாயங்காலமாப்
போறேன்….
அப்போ
மதியச் சாப்பாடு…? இங்கதான்….நீதான் போடணும். ஏன் போட மாட்டியா?
இதிலேர்ந்தே
நீ சொல்றது பொய்ன்னு தெரியிதுல்ல….ஆபீசுக்குக் கிளம்பியிருந்தேன்னா சாப்பாடு எங்கே?
உன் டிபன் பாக்ஸைக் காட்டு…..இல்லன்னா கேரியரைக் கொண்டா பார்ப்போம்….
யக்கா,
போட்டு அறுக்காதே…வீட்டுல சமையல் ஆகலை….அதான் கிளம்பி வந்துட்டேன்…!
எப்பவும்
எட்டரைக்கெல்லாம் ரெடியாகிடும் உங்க வீட்டுல…எனக்கு நல்லாத் தெரியும்…அப்டியிருக்கைல,
இன்னைக்குத் தயாராகலைன்னு சொன்னா என்னா அர்த்தம்? அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா?
அப்டீன்னா உங்கப்பா சமைக்க ஆரம்பிச்சிடுவாரே…! உங்கம்மாவுக்கு முன்னே சமையலைச் செய்து
முடிச்சிடுவாரே…? உள்ளதைச் சொல்லு….நீ எதையோ மறைக்கிறே…?
விட
மாட்டே போலிருக்கே….ஒரு காபியைக் கொடுத்துப்பிட்டு, என்னல்லாம் கேள்வி கேட்கிறே? உன்னோட
பெஸ்ட் காபிக்காகவே உன்கிட்டே பொய் சொல்லக் கூடாதுதான்….சொல்லிப்புடறேன்……
சொல்லு…என்ன
விஷயம்…ஏனிப்படி இங்கே ஓடி வந்தே?
இதை
நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமாக்கும்….எல்லாம் வழக்கம் போலத்தான்….
என்னாச்சு…!
உன்னைப் பெண் பார்க்க வர்றாங்களா? எந்தூர்லேர்ந்து?
சென்னையிலேர்ந்து………
சென்னையா…?
அப்டீன்னா காலைலயே வந்திருக்கணுமே …?
காலைலயே
வந்திட்டாங்கதான்… காலேஜ் உறவுஸ்ல ரூம் எடுத்துத் தங்கியிருக்காங்களாம்…..கோயிலுக்குப்
போயிட்டு வருவாங்க போலிருக்கு….
ஆர்த்தி
சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கே பாலாமணி அலறிக் கொண்டிருந்தாள்.
பார்த்தீங்களா
உங்க பொண்ணு செய்திருக்கிறதை…? எப்போ வெளியேறினான்னு கூடத் தெரியலை…யாருகிட்டயும் சொல்லிக்கவும்
இல்லே…அவபாட்டுக்குக் கிளம்பிப் போயிருக்காளே….இப்போ பன்னெண்டு மணிக்குள்ளே அவங்க வந்திடுவாங்களே…நான்
என்ன செய்வேன்….
மனைவிக்கு
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றார் சந்திரசேகர். உறாலிலிருந்து
அவரைக் கடந்துதான் ஆர்த்தி வெளியேறியாக வேண்டும். அவர் குளிக்கப் போன நேரத்தைப் பயன்படுத்திக்
கொண்டு கிளம்பியிருக்கிறாள்.
முதல்
நாள் விபரம் சொன்னபோது சரிப்பா என்று ஒப்புதலாகப் பதில் சொன்னாளே…? நான் நம்பியதுதான்
தவறோ? என்னவோ மனதில் தோன்ற செல்லில் எண்களை இணுக்கினார்.
எதிர்முனையில்
எடுத்தது பிரேமா…!
உறலோ
என்றவுடனேயே பேசுவது யாரென்று தெரிந்து போனது பிரேமாவுக்கு.
ஏம்மா…ஆர்த்தி
அங்கே வந்திருக்காளா? – சந்திரசேகரிடமிருந்து வந்த முதல் கேள்வியிலேயே சுதாரித்துக்
கொண்டாள் பிரேமா.
இல்லையே
அங்கிள்….இங்க எதுக்கு வர்றா? இன்னிக்கு ஆபீஸ் உண்டுதானே…? - தன் குரல் எத்தனை இயல்பாய்
இருக்கிறது? அவளுக்கே ஆச்சரியமாயிருந்தது.
ஆபீஸ்
உண்டும்மா…யாரு இல்லேன்னு சொன்னா….அங்க வந்திருக்காளான்னு கேட்டேன்….
என்ன
அங்கிள் இப்டி கேட்கிறீங்க…? ஆபீசுக்குக் கிளம்பினா அங்கதானே போயிருப்பா…இங்கே ஏன்
வரணும்?
டிமிக்கி
கொடுத்திட்டு அங்க வந்திட்டாளோன்னுதான்…அவளை நம்ப முடியாது...அதான் கேட்டேன்...
வரல்லை
அங்கிள்….அப்டியெல்லாம் வரமாட்டா…வந்தான்னா எதாச்சும் சொல்லணுமா…. வேணும்னா சொல்லுங்க…
இன்னைக்கு அவளைப் பெண் பார்க்க வர்றாங்கம்மா….சரின்னு சொல்லிப்புட்டு,
திடீர்னு கிளம்பிப் போயிட்டா….இப்டியெல்லாம் பண்ணினா எப்படி சொல்லு? வயசான காலத்துல
ஒரு பொண்ணை வச்சிக்கிட்டு படாத பாடு பட வேண்டிர்க்கு….இன்னும் கொஞ்ச நேரத்துல அவுங்க
வந்துடுவாங்க….சரி, நான் ஆபீசுக்கே பேசறேன்…
அங்கிள்…அங்கிள்…-
போனை வைத்து விடுவாரோ என்று பதறினாள் பிரேமா. என்ன, சொல்லும்மா…? நான் பதட்டத்துல இருக்கேன்…சீக்கிரம்
சொல்லு…
நான்
வேணும்னா ஆபீசுக்குப் பேசிப் பார்க்கட்டுமா…? எதுக்கும்மா உனக்கு சிரமம்…நானே பேசிக்கிறேன்….என்ன
ஒரு சங்கடம்னா செல்லுல பேசினா எடுக்க மாட்டா….ஆபீஸ் லேன்ட் லைனுக்குப் பேசினா அது எங்கேஜ்ட்டாகவே
இருக்கும்…லைன் கிடைச்சாலும் யாரும் வாங்கிக் கொடுக்க மாட்டாங்க…
அதான்
அங்கிள், என் நம்பர்னு தெரிஞ்சிதுன்னா எடுப்பால்ல….நான் பேசி வரச்சொல்றேன் அங்கிள்….நீங்கள்
கவலைப்படாதீங்க…..
ஓ.கே.ம்மா…
சரியான ஐடியா...ரொம்ப தேங்க்ஸ்…வச்சிடட்டுமா? – லைன் துண்டிக்கப்பட்டது.
…உன்
பொண்ணு ஒரு வேளை அவ க்ளாஸ்மேட் ஃப்ரெண்டு அந்த ரவீந்திரன் வீட்டுக்குப் போயிருப்பாளோன்னு
கேட்டேன். அங்கே வரல்லியாம்….
பொண்ணு
பார்க்கிற நாளும் அதுவுமா அங்க போய் உட்கார்ந்தா நல்லாத்தான் இருக்கும்? எல்லாம் என்
தலையெழுத்து… யாராவது கேள்விப் பட்டாங்கன்னா மானம் போகும்...
அங்க
போகலையாம்டீ…அதுக்கு எதுக்கு டென்ஷனாகிறே? அப்போ ஆபீசுக்குப் போடுங்க…. ஆபீசுக்குப் போட்டாத்தான் கிடைக்காதே…..செல்லுக்குப்
பேசினா எடுக்கமாட்டா உன் பொண்ணு….ஆபீஸ் லைன் கிடைக்கவே கிடைக்காது….
அவ
ஆபீசுக்குப் போயிருக்க மாட்டா….அந்த பிரேமா வீட்டுக்குத்தான் போயிருப்பா…எனக்கு நல்லாத்
தெரியும்…..
அவதான்
அங்க வரலேங்கிறாளே…
அப்டித்தான்
சொல்லுவா…எல்லாம் கூட்டுக் களவாணிங்க…..வேறே போக்கிடம் ஏது அவளுக்கு. அந்த பிரேமாதான் இவளை ஆட்டி வைக்கிறா…..போனை திரும்ப அவள் லைனுக்குப்
போட்டு எங்கிட்டக் கொடுங்க சொல்றேன்…. – படபடத்தாள் பாலாமணி.
எண்களைச்
சொடுக்கினார் சந்திரசேகர். பாலாமணியிருக்கும் பதட்டத்தில் எண்களை மாற்றி அமுத்தி விட்டார்.
அது எதுவோ ஆஸ்பத்திரிக்குப் போனது. சாரி….சாரி…..என்றுகொண்டே மீண்டும் அழுத்தினார்.
லைன்
கிடைக்கும் முன் சந்திரசேகரிடமிருந்து கோபமாய்ப் பிடுங்கி, உறலோ…என்று கர்ஜித்தாள்
பாலாமணி.
எதிர்முனையில்
பிரேமா.
இந்த
பார், என் பொண்ணு அங்கே வந்திருந்தான்னா உடனே அவளை நல்ல வார்த்தை சொல்லி இங்கே அனுப்பிச்சு
வை….அநாவசியமா அவளுக்கு எதையாவது அட்வைஸ் பண்ணிட்டிருக்காதே….இன்னைக்கு அவளைப் பெண்
பார்க்க வர்றாங்க…அவ அங்கேயிருந்தான்னா இன்னும் அரை மணி நேரத்துல இங்கே இருந்தாகணும்…ஞாபகம்
வச்சிக்கோ…இல்லைன்னா நான் போலீசுக்குப் போக வேண்டிர்க்கும்……என்னடா இப்டி பேசறேனேன்னு
நினைக்காதே…சொன்னா செய்வேன்…..-பாலாமணி போனை வைத்துவிட்டாள்.
சந்திரசேகரன்
அசந்து விட்டார். ரொம்பவும் பழகியவர்களிடம் எப்படி இந்த மாதிரித் திடீரெனக் கோபமாய்ப்
பேசுகிறாள். ஆர்த்தி அங்குதான் சென்றிருப்பாள் என்று உறுதியாய் நினைத்து இப்படிப் பேசுகிறாளோ?
எப்படி இத்தனை உறுதியாய் ஊகிக்கிறாள்?
என்ன
பாலா இப்டி, போலீஸ் அது இதுன்னு? நல்லாவாயிருக்கு? சாதாரணமாக் கேட்க வேண்டிதானே….பழகினவங்ககிட்டே
போய் திடீர்னு இப்டியா பேசறது…? பரவால்ல, ஒண்ணும் கெட்டுப் போகாது.
வீட்டுல உங்களுக்கு அடங்கிப் போறது போதும்…..வெளிலயும் என்னை அடக்காதீங்க…..
தன்னால்
இப்படியெல்லாம் முடியாது என்றுதான் தோன்றியது சந்திரசேகருக்கு. நாளைப் பின்ன முகம்
பார்க்க வேண்டாமா? இப்படியா முறித்துப் பேசுவது இங்கிதமில்லாமல்? அந்த ரவீந்திரன் எவ்வளவு
நல்ல பையன்? அவனுக்காகவாவது இவள் சாந்தமாய்ப் பேசலாமே? - நினைத்துக் கொள்ளத்தான் முடியும்.
சொன்னால் சண்டை வரும்...பெரிதாகும்...பிறகு தலையில் அடித்துக் கொண்டு டென்ஷனாகி படுக்கையில்
விழுந்து விடுவாள். பெண்களே ஏனிப்படி எல்லாவற்றிற்கும் நிதானமில்லாமல் திரிகிறார்கள்?
எந்த விஷயத்தையும் ஆர அமரக் கடந்து செல்ல வேண்டும் என்ற பக்குவம் ஏன் இல்லை இவர்களுக்கு?
என்னடீ,
உங்கம்மா என்னென்னமோ பேசறாங்க…? – ஆர்த்தியைப் பார்த்துக் கேட்டாள் பிரேமா.
நாந்தான்
உன்னைப் பிடிச்சு வச்சிட்டிருக்கிறதா நினைச்சிட்டுப் பேசறாங்க….ஏற்கனவே உங்கம்மாவுக்கு
என்னை அவ்வளவாப் பிடிக்காது. இதுல நீவேறே இப்டி
வந்து உட்கார்ந்திருக்கே…இதுக்கு மேலே என்னால சமாளிக்க முடியாது. நீ கிளம்பு உன் வீட்டுக்கு…இங்கே
வந்ததாச் சொல்லாதே…
போயீ?
என்னக்கா இப்டி வெரட்டுறே?
போயி,
அலங்காரம் பண்ணிட்டு நில்லு. வர்றவனுக்கு உன்னைப் பிடிச்சிருந்தா சம்மதம் சொல்லு….
நாந்தான்
சொல்லியிருக்கேன்லக்கா….எனக்கு வெளிநாட்டுல வேலை பார்க்கிற மாப்பிள்ளைதான் வேணும்னு….அதில்லாம
ஏன் பார்க்கிறாங்க….?
நல்லாயிருக்குடி….நீ
இங்க வேலை பார்க்கிறே…? வர்றவன் வெளிநாட்டுலன்னா, நீ என்ன செய்வே?
என்
வேலையை ரிசைன் பண்ணிட்டுப் போவேன்….
அப்படி
என்னடி வெளிநாட்டு மோகம்? நம்ம நாட்டுல இல்லாத பெருமையா?
அதெல்லாம்
எனக்குத் தெரியாது. ரொம்ப நாளா, ஏன் ரொம்ப வருஷமான்னு கூடச் சொல்லலாம்….என் மனசுல இருக்கிற
ஆசை இதுதான். கல்யாணம் பண்ணினா வெளிநாட்டுல வேலை பார்க்குற பையன்தான். என் வேலையைப்
பார்க்காமே, என் அழகைப் பார்த்திட்டு விரும்பி என்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிக்கிட்டுப்
போகணும்….ராணி மாதிரி நான் சந்தோஷமா இருக்கணும்….எனக்குப் பிடிச்சிருந்தா அங்க ஒரு
வேலையைத் தேடிக்குவேன்...சம்பாதிப்பேன்....
நீ
சொல்றது அதீதக் கற்பனையாயிருக்கே…விரலுக்கேத்த வீக்கமாத் தெரிலயே? அப்டித்தான்…வருதா இல்லையா பாரு…..எனக்குன்னு
ஒருத்தன் நான் நினைக்கிறமாதிரியே வருவான் …. நீ என்னமோ விளையாட்டாப் பேசற
மாதிரி இருக்கு….சீரியஸா மனசில சிந்திச்சு முடிவு பண்ணிப் பேசற மாதிரித் தெரிலயே….? எல்லாம் அதிரடிதான். எங்கப்பா
அம்மாவ இப்டித்தான் ஒரு ஆட்டு ஆட்டப் போறேன்…..
நீ
அயல்நாட்டுக்குப் போனேன்னா, உங்கப்பா, அம்மா?
அவங்க
எங்க ரெண்டு அண்ணன்ல யாரோடயாச்சும் போய் இருக்கட்டும்…பெத்த பிள்ளைகதானே வச்சிக் காப்பாத்தணும்….அவங்களுக்குத்தானே
கடமையிருக்கு. நான் வேறொரு குடும்பத்துல போய் வாழப் போறவதானே?
மீண்டும்
போன் மணி அடித்தது. எடுத்தாள் பிரேமா. எதிர் வரிசையில் பாலாமணி.. அவளை முந்திக் கொண்டு
இவள் பேச ஆரம்பித்தாள்.
இந்த
பாருங்கம்மா…நான் ஒண்ணும் உங்க பெண்ணை இங்கே பிடிச்சு வைக்கலை….அவ இங்கேயிருந்தான்னா
நீங்க வந்து தாராளமாக் கூட்டிட்டுப் போகலாம். திடீர்னு போன் பண்ணி இப்படி அநாவசியமா
மிரட்டிட்டிருந்தீங்கன்னா அது நல்லாயில்லே. எதோ பெரியவங்களாச்சேன்னு பார்க்கிறேன்…
அப்புறம் நானும் போலீசுக்குப் போக வேண்டிர்க்கும்….உங்க பொண்ணு இங்கே வரல்லை…அவ்வளவுதான்…. என்னக்கா இப்டிப் பேசிட்டே போலீசு அது இதுன்னு? சாரீடீ…கோபத்துல..சரியா
யோசிக்கலை… …உங்கம்மாவும் அப்டிப் பேசினாங்களா…எனக்கும் பதிலுக்கு அப்டியே வந்திடுச்சு….உளறல்னு
வச்சிக்கயேன்…இந்த டி.வி. சீரியல்கள்ல பொம்பளைக்குப் பொம்பளை சவால் விட்டுக்கிறாங்களா….அதப்
பார்த்துப் பார்த்து நமக்கும் அந்த வேகந்தான் வருது….இதுக்குத்தான் அந்த அசட்டுப் பிசட்டு
சீரியல்களையெல்லாம் பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறது….பொழுது போகணுமேன்னு போட்டு விட்டா…அது
பைசாசம் மாதிரி நம்மளப் பிடிச்சிக்கிது. ஐயையோ, அடுத்தாப்ல உங்கம்மா முகத்துல நான்
எப்டி முழிப்பேன்? இப்டி உளறிட்டேனே….? பேசாம மன்னிப்புக் கேட்ற வேண்டிதான்…. -கையைப் பிசைந்தாள் பிரேமா. அதெல்லாம்
ஒண்ணும் ஒர்ரிப் பண்ணாதே…எல்லாத்தையும் ரவி சரி பண்ணிப்பார்…..எனக்காக அவளை மன்னிச்சிடுங்கன்னு
ஒரே வார்த்தைல ப்ளேட்டையே திருப்பிடுவார் கவலைப்படாதே….-ஆர்த்தி சமாதானப்படுத்தினாள்.
ஆர்த்திக்கு ரவீந்திரனுடனான நட்பு பால்ய காலத்திலிருந்தானது.
இருவரும் ஒரே ஊர். ஒரே பள்ளி. சிறு பிராயத்திலிருந்து பழகிய பழக்கம் அவன் கல்யாணம்
ஆகி மனைவியோடு தனிக் குடித்தனம் வந்தபோது மேலும் நெருக்கமாகியது. பிரேமா இவளைத் தன்
தங்கைபோல்தான் நினைத்தாள். பாலாமணி கூட அடிக்கடி அங்கெல்லாம் போகக் கூடாது என்று தடுத்திருக்கிறாள்.
ஆர்த்திதான் கேட்பதில்லை. ஆரம்பத்தில் பிரேமாவுக்கே
சற்று சங்கடமாய்த்தான் இருந்தது. ஆனால் அதை முற்றிலும் தகர்த்தவன் ரவீந்திரன்தான்.
அவனது பக்குவமான பேச்சில் அவளுக்கு நம்பிக்கை வந்தது. உனக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம்…யாரையும் நீ நம்ப மாட்டே….ரவீந்திரனைப்பத்தி
எனக்கு நல்லாத் தெரியும்….அவருக்கு நான் ஒரு நல்ல தோழி மாதிரி. ஒண்ணும் தப்புத் தண்டா
நடந்துடாது….என்பாள் இவள். அவளது விகல்பமில்லாத பேச்சை பிரேமாவும் ரசிக்க ஆரம்பித்தாள்.
நாளடைவில் அவளைத் தன் தங்கையாகவே வரிக்க ஆரம்பித்து விட்டாள். அவ்வளவு சுதந்திரம் அவள்
வீட்டில் ஆர்த்திக்கு.
அப்பாவும்
அம்மாவும் சென்னைக்கு ஒரு முறை சுதாகரன் அண்ணாவைப் பார்க்கப் போயிருந்த போது, நான்
வரலை என்று விட்டு ரவீந்திரன் வீட்டில்தான் இருந்தாள் ஆர்த்தி. அம்மா எவ்வளவோ சொல்லிப்
பார்த்தாள். வயசுக்கு வந்த பொண்ணை இப்படி இன்னொரு வீட்டுல விட்டிட்டு நான் வரலை என்று
மறுத்தாள். அப்பாதான் தடுத்தார். ரவீந்திரனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும் என்று
சொன்னவர் அவர்தான். அந்த நம்பிக்கை இன்றுவரை காப்பாற்றப்பட்டுத்தான் வருகிறது. அப்படியான
ஒரு கண்ணியமான குடும்பத்தில் உள்ளவர்களோடு பாலாமணி சர்வ சாதாரணமாய் வார்த்தையை விட்டுப்
பேசி விடுகிறாளே….? பெண் கல்யாணம் இப்படித் தள்ளிப்
போகிறதே என்கிற ஆதங்கம் அவளுக்கு. ஆர்த்தியின் விருப்பப்படி வெளிநாட்டில் வேலை பார்க்கும்
பையன் வரன் ஒன்றிரண்டு வரத்தான் செய்தது. போய் ரெண்டு நாள்ல விபரம் சொல்றோம் என்று
போனவர்கள் தகவல் எதுவுமே தெரிவிக்கவில்லை. இவ வாயை வச்சிட்டு சும்மா இருந்தாத்தானே...?
அந்தப் பையன்ட்ட என்ன பேசினாளோ? அவன் என்ன நினைச்சானோ? யம்மாடீ...இவளைச் சமாளிக்க முடியாதுப்பான்னு
கம்முனு போயிட்டான். பதில் வரலை....ஊருல அவனவன் விருப்பத்துக்குப் பொண்ணா இல்லை...அதெல்லாம்
கிடைக்கும். இந்த மாதிரி வாயாடிகளுக்குத்தான் கிடைக்காது....எல்லாம் நம்ம தலையெழுத்து.....
- பாலாமணி கோபமும், கொந்தளிப்பமாய்ப் புலம்பினாள். எங்க அம்மா எப்பவுமே அப்டித்தான்…உங்களுக்குத்தான் தெரியுமே அக்கா…அதைப்
பொருட்படுத்தாதீங்க…..இவள்தான் சமாதானம் செய்தாள். அங்கிருந்து கிளம்பும்போது, சாயந்தரம்
நான் திரும்பவும் வருவேன்…ஒரு முக்கியமான விஷயத்தை ரவி கூடப் பேசணும்….என்னோட இந்தப்
பெண் பார்க்கப் போகிற நாடகத்தில் நீங்க ரெண்டு பேரும்தான் பிரதானப் பாத்திரம்…ஞாபகம்
வச்சிக்குங்க…..ரவிகிட்டே சொல்லிடுங்க…நான் என்ன சொன்னாலும் கேட்பான் அவன்…..உங்களைத்தான்
நான் கெஞ்ச வேண்டிர்க்கும்….கால்ல கூட விழறேன்…உங்க வீட்டுக்காரர் கூடச் சேர்ந்து நீங்கதான்
இதை முடிச்சு வைக்கணும்…… என்ன,
என்னென்னவோ புதிர் போடுகிறாள்? என்ன திட்டம் வைத்திருக்கிறாள்?– பிரேமா விழித்தாள்.
அர்த்தம் பொருத்தம் இல்லாமல், தான் கோபப்பட்டு
விட்டோமோ என்று அங்கே பாலாமணி நினைத்துக் கொண்டிருந்த அதே வேளையில், வாசலில் நுழைந்தாள்
ஆர்த்தி.
எங்கடீ
கிளம்பிப் போயிட்டே….இன்னைக்கு அவுங்க வர்றாங்கன்னு உனக்குத் தெரியுமில்லே…ஏன் அநாவசியமா
இப்படி எங்களைப் படுத்தறே?
உனக்கு
அது மட்டும்தான் தெரியும்…வேறென்ன தெரியும்…காலைலேர்ந்து எனக்கா ஒரே வயித்துவலி…ஏதாச்சும்
கேட்டியா நீ? உன் காரியந்தான் உனக்குக் குறி….
வயித்து
வலியா? இன்னைக்குன்னு அந்தச் சனியன் வந்து தொலைச்சிடுச்சா? இல்ல பொய் சொல்றியா?
ஆமா
பொய் சொல்றேன்…..இதோ பார்…டாக்டர் சீட்டு…..கொஞ்சமாச்சும் எனக்கு நாள் எப்படி? ஒத்துவருமா?
வரச்சொல்லலாமான்னு ஏதாச்சும் என்கிட்டக் கேட்டியா? நீபாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எல்லாம்
செய்வே…அதுக்கு நான் ஒத்துப் போகணும்….அதானே…? கல்யாணம் எனக்கா உனக்கா? எதை எடுத்தாலும்
தாம் தூம்னு கிளம்பிடுவியா? எப்படியாவது என்னை ஒருத்தன்ட்டப் பிடிச்சுக் கொடுத்தி்ட்டு
சனியன் ஒழிஞ்சிதுன்னு நிம்மதியா இருக்கணும் உனக்கு...அதானே...?
உன்கிட்டக்
கேட்டுட்டுத்தானேடீ சொன்னோம்…..நாங்களா எங்கே செய்தோம்….? ஆமா, இதுக்காக நான் நாளை எண்ணிட்டே இருக்கணுமாக்கும்…என்ன
கண்றாவி…? வர்ற ஒதுக்கம் சொல்லிட்டா வருது...இல்ல நம்ம உடம்பு ஒரே மாதிரியா வருஷம்
பூராவும் இயங்கிட்டிருக்கு? அப்பப்போ மாறுதல் ஏற்படுதுதானே? நீயும் பொம்பளைதானே? தாயாருக்குத்
தெரியாதா, பொண்ணோட பாடு? என்னடி தப்பு? என்னென்னவோ பேசறே? உன்கிட்டே கேட்டுட்டுத்தானே
இறங்கினோம்...இப்ப வந்து என்னென்னவோ சொல்றே?
என்ன
கேட்டீங்கங்கிறேன்….வர்றவன் ஒரு காலேஜ் லெக்சரர்….எத்தனை பெரிய சம்பளம் இருக்கப் போகுது…?
அப்டியே இருந்தாலும் போஸ்ட் நிரந்தரமா? பார்த்தீங்களா? எனக்கு வேணாம்னு சொன்னேன்ல…யாராச்சும்
கேட்டீங்களா? நீ எப்பவுமே நான் சொல்றதைக் கேட்கமாட்டே…அப்பாவாச்சும் கேட்டாரா? அவர்
நீ சொல்றதைத்தான் கேட்பாரு…வேறே எதுவும் அவர் காதுலயே ஏறாது….எதாச்சும் ஒண்ணை முடிச்சு
என்னை வெளில தள்ளி விடணும்…இதுதானே உங்க ரெண்டு பேரோட குறிக்கோள்….இந்த வரன் எனக்குப்
பிடிக்கலை…அதான் வெளில போனேன்…
அப்போ
இப்போ எதுக்கு திரும்பி வந்தே?
மனசு
கேட்கலை… வந்தேன்….டாக்டர்ட்டப் போயி, காட்டிட்டு, ஆபீசுக்கு லீவு சொல்லிட்டு, கடனேன்னு
வர்றேன்…..
தொலைபேசி
மணி அடித்தது. ஓடிப்போய் எடுத்தார் சந்திரசேகர். எதிர் முனையில் அவர்கள்.
சார்,
நான் பரமநாயகம் பேசறேன்…நாங்க இப்போ கோயில் முடிச்சிட்டு வந்திட்டிருக்கோம்….இன்னும்
அரை மணி நேரத்துல கிளம்பிடுவோம்…ரூமுக்குப் போயிட்டுக் கொஞ்ச நேரத்துல புறப்படுறோம்….
சார்,
நான் வேணும்னா டாக்ஸி அனுப்பட்டுமா…..புது ஊராச்சே…..
புது
ஊருன்னா என்ன? கேட்கிற காசைக் கொடுத்தா வர்றான்….இங்க லாட்ஜ் வாசல்லயே டாக்ஸி ஸ்டான்ட்
இருக்கு….ஒண்ணும் சிரமமில்லே….
ஓ.கே.சார்…..கிளம்பினவுடனே
போன் பண்ணுங்க….
கண்டிப்பா….சொல்லாம
வருவனா? டாக்ஸிக்காரனுக்கு சரியா வழி தெரியலைன்னா உங்ககிட்டேதானே கேட்கணும்…வச்சிடறேன்…
லைன்
துண்டிக்கப்பட்டது.
அவுங்க
சரியா இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள வந்திடுவாங்கம்மா…நம்ம கச்சேரியை அப்புறமா வச்சிக்கலாம்….அது
என்னைக்குந்தான் இருக்கு…நீ கொஞ்சம் உன்னை ரெடி பண்ணிக்கோ…..
இப்போ
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் என்னைப் படுத்தறீங்க….எனக்கு உடம்பு முடியாத நாள்ல
இதென்ன கூத்து? – சொல்லிக் கொண்டே பாத்ரூமுக்குள் போய் கதவைப் படாரென்று அடைத்துக்
கொண்டாள் ஆர்த்தி.
அவள் உடல்
நலத்தை மேலும் அல்லது மறுபடியும் உறுதி செய்யாமல் முடிவு செய்தது தவறுதானோ என்று நினைத்து
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
--------------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக