சிறுகதை “பச்சை மை…!” பிரசுரம்-“தாய்வீடு” மாத இதழ்
செப்டம்பர் 2024
நீங்கதான் சார் எனக்குச் செய்யணும்…வேறே
யாரும் உதவ மாட்டாங்க இந்த வளாகத்துல…!….- இப்படிச் சொல்லிக் கொண்டுதான் என் முன்னே
வந்து அமர்ந்தார் கோபாலகிருஷ்ணன். முகத்தில் அப்படியொரு கவலை. எதையோ நினைத்துப் பதறிக்
கொண்டிருப்பவர் போலான தோற்றம். அப்படி நேருக்கு நேர் அமருவது அபூர்வம்…அப்படியே அமர்ந்தாலும் கண்களை நேரடியாகப் பார்த்துப் பேச மாட்டார். அது
ஏன் என்று எனக்குத் தெரியும். அவருக்கும் தெரியும்தான்….குற்றமுள்ள நெஞ்சு….
என்னிடம் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
நான் கண்களுக்குச் சேணம் பூட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவன். என் மேஜையில் என் முன்னே
இருக்கும் ஃபைல்தான் என் பார்வைக்குத் தெரியும். மற்ற எதையும் நான் கண்டு கொள்வதில்லை.
பரந்து விரிந்த அந்த மாவட்ட அலுவலகங்களின்
வளாகத்தில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவருக்கு.
எத்தனையோ வருடப் பழக்கம். மாடிக்கு மாடி, அலுவலகத்துக்கு அலுவலகம் எங்கு நுழைந்தாலும்
அவருக்கு வரவேற்பு உண்டுதான். அதெல்லாம் உதட்டளவில் என்று இப்போது நிரூபணமாகி விட்டதோ?
போயும் போயும் என்னிடம் வந்து நிற்கிறாரே! நானெல்லாம் ஒரு ஆளா அவருக்கு? என்னை லட்சியமே
பண்ணாத அவருக்கு தன்னின் அலட்சியத்தை ஒதுக்கி என்னிடம் வந்து நிற்க வேண்டிய ஒரு தருணம்
வந்திருக்கிறது பாருங்கள்…அதுதான் காலத்தின் கட்டாயம்.
வருஷம் போன கடைசியில் அவர் இப்படி என்னைத்
தேடிக்கொண்டு வருவானேன்? ஆளா இல்லை? இத்தனைக்கும் அவருக்கு அடுத்த கீழ் ராங்க்தான்
நான். எனக்குச் சம்பளத்திற்குக் கையெழுத்திடுபவரே அவர்தான். அவர் நினைத்தால் ஏதேனும்
ஒரு கிளார்க்கைக் கூட ஏற்பாடு செய்து கொள்ள முடியும்தான். முடியவில்லையோ? அல்லது நம்பிக்கையில்லையா?
என்னையெல்லாம் அவர் மதித்ததேயில்லை. அதுபற்றி
நான் கவலைப்பட்டதுமில்லை. இவர்களெல்லாம் மதித்தால் என்ன, மதிக்காவிட்டால்தான் என்ன?
மதிப்பதனால் ஏதேனும் பெருமை கூடிவிடப் போகிறதா அல்லது மதிக்காததினால் ஏதேனும் குறைந்து
விடப்போகிறதா? இரண்டும் இல்லை. அவர் வேலை அவருக்கு.
என் வேலை எனக்கு. என் மதிப்பு எனக்கு அவர் (அவ)மதிப்பு அவருக்கு.
ஆனாலும் கூடுதல் பொறுப்பில் இருக்கும்
அந்த எதிர் அலுவலகத்தில் என் முகம் பார்க்க அமர்ந்து கொண்டு, வேலையைக் கவனிக்கிறாரோ
இல்லையோ…என்னைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் இருக்கையில் இருக்கிறேனா
என்று பார்க்கிறார். வேலை செய்கிறேனா இல்லை
அரட்டை அடிக்கிறேனா என்று பார்க்கிறார். எங்கே போகப் போகிறேன். நான்தான் காலையில் வந்து
அமர்ந்தால் அசையாமல் பேனாவும் கையுமாகக் குத்துக்கல் போலக் கிடக்கிறேனே? அவருக்கென்ன
தெரியாதா?
நான் என்ன செய்கிறேன் என்பதுதான் அவரது முக்கியமான
வேலை. அவர் கவனிக்கிறார் என்பது எனக்குத் தெரியும்தான் என்றாலும், எத்தனை நேரத்துக்கு
அதையே நினைத்துக் கொண்டிருப்பது அல்லது பார்ப்பது? நான் வேலை செய்ய வந்தவன். அவர் வேவு
பார்க்க வந்தவர். இப்படித்தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது.
அவருக்கு வேலை முக்கியமில்லை. எல்லாம்
குருட்டுக் கையெழுத்துதான். அதுதான் பணியாளர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்து விடுகிறார்களே!
பிறகென்ன நீட்டின இடத்தில் கையொப்பம் இட்டால் சரி. எதற்குக் கையொப்பமிட்டோம் என்று
கூட மண்டையில் ஏறுமோ ஏறாதோ? சதா அந்த “இன்னொன்றிலேயே“ கவனமாயிருந்தால்? ஆபீஸ் வருவதே
அதற்குத்தான் என்றிருந்தால்? பிறகு எதுதான் விளங்கும்? புத்தியை மழுங்கச் செய்யும்
அந்த இன்னொன்று!
எனக்கு என் வேலைதான் கவனம். இன்று எதையெல்லாம்
முடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தோடுதான் தினமும் அலுவலகத்திற்குள்ளேயே நுழைகிறேன்
நான். இந்தந்தக் கோப்பையெல்லாம் புட் அப் பண்ணுங்க…என்று வந்ததும் சொல்லி விடுவேன்.
மதியம் வரை பார்ப்பேன். வரவில்லையெனில் நானே கோப்பினை வாங்கி அல்லது பீரோவைத் திறந்து
நானே எடுத்து எழுதி விடுவேன். எவனை எதிர்பார்த்தும் நான் இல்லை. எனக்குத்
தேவை என்னை எவரும் குறை கூறக் கூடாது. அவ்வளவே…! நினைத்த நேரம் நினைத்த வேலை முடியணும்…எது
கேட்டாலும்…இதோ உங்க டேபிள்ல…என்று சொல்லணும். எதிராளி தலை குனியணும்.
…கொஞ்சம் தாமதிச்சா அப்புறம் அவரே செய்துக்குவாரு…என்று
இருந்து விட்டால்…? அதற்கு விடுவதில்லை. புரிந்தவர்கள்
என்னிடம் வேலை கற்றுக் கொள்ளலாம். புரியாதவர்கள் தடுமாறலாம்.
அவருக்கு நேர் எதிர் அலுவலகத்தில் வாயிலுக்கு
நேரே என் இருக்கை இருப்பது எனக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. எதிர்த்தாற்போல் இருந்து,
சதா என்னையே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் இந்த மனுஷனின் பார்வையிலிருந்து முதலில்
மறைய வேண்டும். அதென்ன அப்படி ஒரு பார்வை? தன்னைப் போலவே மற்றவரையும் நினைக்கும் சந்தேகப்
பார்வை அது!
பேசாமல் தன் வேலையைக் கவனிப்பாரா…நான்
என்ன செய்கிறேன் என்பதைக் கவனிப்பதா அவர் வேலை? இடம் மாற்ற எவ்வளவோ முயன்றேன்.. அமையவில்லை.
காரணம் அந்தக் கட்டடங்கள் தனித் தனியாக ரயில்
கூபே போல ஒவ்வொரு திட்ட அலுவலகங்களுக்கும் பிரித்து விடப்பட்டிருந்தன. அதிகபட்சம் இரண்டு
அறைகள். அதற்குள்தான் எல்லாமும். உறால் போல் ஒன்று. அலுவலரின் அறை இன்னொன்று. அந்த
அலுவலரின் அறையிலும் கூட ஓரமாய் டைப்ரைட்டர்,,
கம்ப்யூட்டர் பிரின்டர்..என்று இருந்தது. இடவசதி
நெருக்கடி. அலுவலகம் எப்படி நெருக்கடியாயிருந்தால் என்ன? வரவுதான் பிரதானம்!
அப்படி அமைந்ததுதான் நான் வேலை பார்க்கும்
அலுவலகமும். ஒரிஜினலாக நான் அதுநாள் வரை பணியாற்றிய துறையே வேறு. முப்பத்து மூன்று
ஆண்டு காலம் சர்வீஸ் போட்டுவிட்டு, கடைசி ஒரு வருடத்திற்கு பதவி உயர்விற்கு ஆசைப்பட்டு
இங்கே விருப்பம் தெரிவித்து வந்து சேர்ந்தவன் நான். அந்தத் தகுதி இங்குதான் கிடைத்தது.
அதில் அலாதி சந்தோஷம் எனக்கு. பச்சை இங்க்கில் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஆசை.
சர்டிபிகேட்டுகளுக்கு அட்டெஸ்ட்டேஷன் போடும் தகுதி பெற வேண்டும். கெஜடட் ராங்க் அலுவலர்களுக்கே
அது சாத்தியம்.. அந்த இடத்தை வேறு துறைக்கு மாறிக்கொள்வதன் மூலம் அடைய முடியுமானால்
தவறென்ன? என்னுடைய மூலத் துறையிலேயே நீட்டித்து, பதவி உயர்வு வரும் வரும் என்று காத்திருப்பதை
விட அல்லது காத்திருந்து ஏமாறுவதை விட, எனது கணக்கியல் கல்வித் தகுதியை வைத்துக் கணித்து,
இந்தா பிடி…வந்து வேலையைப் பார்…என்று வரவேற்றுக் காத்திருக்கும் பரிச்சயமில்லாத இன்னொரு
துறைக்குச் சென்று என் சர்வீசை அங்கே முடித்துக் கொள்வதில் என்ன தவறிருக்க முடியும்?
பச்சை இங்கில் கையெழுத்துப் போடுபவரெல்லாம் யோக்கியர்களா? மனுஷனின் அடிப்படை குணத்தை
இந்த இங்க் மாற்றிவிடுமா என்ன? அந்த இங்கிற்கான கௌரவம் அவரவர் கையில்…செயலில். பச்சை மையில் கையெழுத்துப் போட்டே
தீருவது…அதற்கான இந்த வாய்ப்பை எவ்வகையிலும் நழுவவிடுவதில்லை…எதற்காகவும் இழக்கத் தயாராக
இல்லை..என் மனம் உறுதி செய்து கொண்டது. என் மூலமாக அந்தப் பச்சை மை கையெழுத்திற்கு
ஒரு தனிப்பட்ட கௌரவத்தை அளிப்பது என்று உறுதி செய்து கொண்டேன். என்னைப் போலவேயான சிந்தனையிலும்,
செயல்பாட்டிலும் இன்னும் பலரும் இருந்திருக்கலாம் தானே? நான் மட்டும் என்ன கொம்பா? ஆனாலும் அதில் அப்படி
ஒரு மோகம்…!
வேணாம் சார்…போகாதீங்க…கடைசி ஒரு வருஷத்துக்கு
எதுக்கு முகம் தெரியாதவங்க நடுவுல போய் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படுறீங்க…? பேசாம இங்கயே
இருந்து நிம்மதியா ரிடையர்ட் ஆகுங்க…அதான் நல்லது…அது பெரிய கடல் சார்…அங்கெல்லாம்
உங்களால சமாளிக்க முடியாது. அகடித கடனா சாமர்த்தியம் வேணும் அதுக்கெல்லாம்….துட்டு
இஷ்டத்துக்குப் புழங்குற இடம் சார்…சபலமில்லாத, திரும்பிக் கூடப் பார்க்காத நீங்கள்லாம்
அதுக்கு லாயக்கில்ல…உங்களுக்குப் பொருந்தவே பொருந்தாதாக்கும்…-பெண் பணியாளர்கள் ரொம்பவும்தான்
வருத்தப்பட்டார்கள்.
ஏய்…சார் போயிருவார் போலிருக்குடி…அடுத்து
எந்த கடுவம்பூனை வருதோ? எப்டிச் சமாளிக்கப் போறோமோ? நம்ம பாடு திண்டாட்டம்தான்.. -
பேசிக் கொண்டார்கள்.
சார்…நீங்கல்லாம் சுணங்கலாமா சார்…நம்ம
டிபார்ட்மென்ட்ல பிரமோஷனுக்கு லேட் ஆகும் சார்…அடுத்த மார்ச்லதான் வரும். நீங்க டிசம்பரோட
வெளில வந்துடறீங்க…எதிர்பார்த்து…எதிர்பார்த்து ஏமாந்து நிக்கப் போறீங்களா…? பேசாமப்
போங்க சார்….அப்புறம் எதுக்காக அக்கௌன்டன்ஸி படிச்சீங்களாம்? ஒருவேளை இங்கே கிடைக்கலேன்னா
அதையாவது பிடிப்போம்னுதானே…? இன்னும் கூட ஒரு வருஷம் உங்களுக்கு சர்வீஸ் இருந்திச்சுன்னா
நானே உங்கள இங்கயே இருங்க சார்னுதான் சொல்லுவேன். ஒன் இயர்தானே இருக்கு…சம்பளத்துல
ஒரு அப் கிடைக்கும்ல சார்…ஸ்கேல் ஆப் பே…யே மாறிடும் சார்….எப்டியும் ரெண்டாயிரத்துக்குக்
குறையாது…சம்பளம் கூடிடும்…எங்கயோ போயிடுவீங்க…எதுக்காக சார் விடுறீங்க…அதுக்கேத்தாப்ல
பென்ஷனும் கூடும்ல சார்…வேலை தெரியாதவங்கதான் பயப்படணும்…நீங்கள்லாம் எங்க போனாலும்
சமாளிச்சிடுவீங்க…அப்புறம் ஏன் சார் தயங்குறீங்க…?
பல்லக் கடிச்சிட்டு ஒரு வருஷம் ரயில்ல
போயிட்டு வந்திட்டீங்கன்னா… ஃபினான்ஷியலா உங்களுக்குப் பெரிய லாபம்தானே சார்…வெளியூர்னு
பார்க்காதீங்க….! ஒரு ரூம்கூட எடுத்திட்டு
அங்கயே தங்கிடுங்க…வெள்ளிக்கிழமை ராத்திரி வீட்டுக்கு வந்தாப் போதும்…லட்டு மாதிரிச்
சான்ஸ் சார்….நம்ப சாரு ஆபீசர் ஆயிட்டாருன்னு எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கும்..வீட்டுக்கு
வந்து மாமிட்ட சொல்லட்டுங்களா சார்…நாங்க வர்றோம்…மாமி சம்மதிப்பாங்க….புருஷனுக்கு
பதவி உயர்வை எந்த மனைவிதான் சார் வேண்டாம்பாங்க…அது அவங்களுக்குப் பெருமையில்லையா?
கண்ணை மூடிட்டுக் கிளம்புங்க சார்….
அதையும் இதையும் இஷ்டத்துக்குச் சொல்லி
ஆளைக் கிளப்பியே விட்டார்கள். இனி இங்கிருந்தா பழைய மதிப்பு இருக்காது போல்ருக்கே,
பிரமோஷன வேண்டாம்னு சொன்ன லூசு…என்று திட்டுவார்களோ…என எனக்கே தோன்ற ஆரம்பித்து விட்டது.
ஊக்கப்படுத்தியவர்களின் வார்த்தைகளே நின்றது.
நானென்ன சொங்கியா? பயந்து நடுங்கறதுக்கு? ரெண்டுல ஒண்ணு பார்த்திடுவோம்…அப்டியென்ன
மலைய முழுங்கற வேலை? அது நம்மள முழுங்கறதுக்குப் பதிலா…நாம அதை முழுங்கிட வேண்டிதான்…சரண்டராகி
கால்ல விழ வச்சிட வேண்டிதான்…-முடிவு செய்து கொண்டுதான் வந்து அமர்ந்திருந்தேன். பச்சை
மைப் பேனா என் சட்டைப் பையில்!
கொஞ்ச நாளைக்கு ஒன்றுமே பிடிபடவில்லை என்பது
என்னவோ உண்மைதான். திடீர் திடீரென்று மீட்டிங் நடந்தது. பொது மக்கள் சந்திப்பு, குறை
கேட்டல், மனுப் பெறுதல்…துறை வாரியாகப் பிரித்தளித்தல்…அதில் இருபத்து நாலு மணி நேரத்தில்
முடிக்க வேண்டியவை, மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டியவை…என்று ஒரே அமர்க்களமாய்
இருந்தது. இங்கிட்டு அங்கிட்டு என்று அசைய முடியவில்லை என்பதுதான் உண்மை. எந்நேரமும்
பரபரப்பா….இதென்னடா இது பெரிய வம்பாப் போச்சு….? தினமுமா ஆபீஸ் இப்படி மூச்சைப் பிடிக்கும்?
ஒரு நாளாச்சும் ரிலாக்ஸ்டா இருந்தோம்ங்கிறது இல்லையே? தப்புப் பண்ணிட்டமோ? சிவனேன்னு
நம்ப டிபார்ட்மென்ட்லயே பெஞ்சைத் தேய்ச்சிட்டு இருந்திருக்கலாமோ? இந்தப் பாடு படுத்துறாங்க…?
சஞ்சலம் வந்து விட்டது மனதுக்கு. பச்சை
மை கையெழுத்து பயப்பட வைத்தது. அப்பொழுதுதான்
முடிவு செய்தேன். இனி அஞ்சரை ஆனால் ரயிலுக்குக் கிளம்புவதில்லை என்று. ஆறு மணிக்கு
டாண் என்று ஆடி அசைந்து அந்த மீட்டர் கேஜ் வண்டி வந்து நிற்கும். ரயிலுக்கு எங்காவது
ஸ்டாப் உண்டா? அங்கு உண்டு. அது ஆட்சியர் தன் அதிகாரத்தில் பணியாளர்களுக்கென வாங்கிக்
கொடுத்த சலுகை. இல்லையானால் டவுனுக்குள் ஸ்டேஷன் வரை போய்த் திரும்பி வர வேண்டும்.
சிட்டி பஸ் பிடிக்க பஸ் ஸ்டான்ட் நடக்க வேண்டும். ஆபீஸ் வந்து சேர பத்தரை ஆகி விடும்.
ஏன் பதினொண்ணு கூட ஆகும்தான். அதனால் உண்டான
ஏற்பாடு அது. ரயில்வே நிர்வாகம் அதை ஏற்றுக் கொண்டு ஊருக்குள் நுழையும்முன் அந்த ஸ்டாப்பில்
நின்று பணியாளர்களை இறக்கி விட்டுச் சென்றது.
ஒருவருக்கொருவர் டாட்டா காண்பித்து விடைபெற்றுக்
கொள்ளும் கண் கொள்ளாக் காட்சி மறக்க முடியாதது. டவுனுக்குள் சென்று இறங்கி அங்கேயுள்ள
வங்கி, அலுவலகங்கள் என்று செல்லும் மீதிப் பணியாளர்களும் இருந்தார்களே…! அவர்களுக்குத்தான் இந்த விடை கொடுத்தல்.
மாலை அதுபோல் அவர்கள் முதலில் ஏறி வர,
இங்கு வந்து நிற்கும் ரயிலில் நாங்கள் ஏறிக் கொள்வோம். எங்களுக்குள் புத்தகங்கள் பறிமாறிக்
கொள்வதுண்டு. விஷய ஞானமுள்ள எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? ஒன்றுமே தெரியாத ஆளாய் இருந்திருக்கிறோமே
என்று நான் என்னைப்பற்றி நினைத்ததுண்டு.
இனி மாலை ரயிலுக்குக் கிளம்புவதில்லை என்று
நான் முடிவெடுத்த வேளையில்தான்…பலரும் சொன்னார்கள்.
எல்லா நாளும் இருக்கணும்ங்கிறதில்லை….கேம்ப்
முடிச்சிட்டு சீஃப் சில நாளைக்கு சாயங்காலம் வருவாரு….உடனே மீட்டிங் போடுவாரு….டெண்டர்
இருக்கும் சில நாளைக்கு….அது ஓப்பன் பண்ணி…கான்ட்ராக்டர்களுக்கு ஒதுக்கீடு ஆணை கொடுத்தாகணும்…அந்த
மாதிரி முக்கியமான நாள்ல மட்டும் இருங்க…போதும்….எதுக்கு அநாவசியமா அலட்டிக்கிறீங்க…புதுசுதானே
நீங்க…கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடும்…கடல் அலை என்னைக்கு ஓயறது…? எல்லாம் அப்டி அப்டித்தான்னு
மைன்ட் பண்ணாமப் போயிட்டேயிருக்க வேண்டிதான்….பி…ரிலாக்ஸ்…நோ டென்ஷன்….நானும் அந்தக்
குட்டையில் ஐக்கியமானேன். அதாவது நேரம் காலம் இல்லாமல் வேலை பார்ப்பது. கெதியாய்க்
கிடப்பது.!. என் பேனாவிற்கு பங்கம் வராமல் பாதுகாப்பது. அதாவது என் கையெழுத்தை கௌரவப்படுத்துவது.!
அவர் போட்டுட்டாருல்ல…அப்புறம் என்ன? கண்ணை
மூடிட்டு அப்ரூவ் பண்ணலாம்… - அதுதான் நான்.
சார்…உங்களுக்கு டயமாச்சு….கிளம்பலயா…?
பெறவு ரயில் போயிடும்…-கருணாகரன் என்ற அந்த சீனியர் மோஸ்ட் அஸிஸ்டென்ட் என்னை உசுப்ப
ஆரம்பித்தார். ஒருவேளை இதற்கு மேலும் நாம் இங்கிருப்பது இவர்களுக்கு ஏதேனும் இடைஞ்சலாய்
இருக்குமோ…அதுதான் இப்படி விரட்டுகிறார்களோ என்றும் தோன்றியது எனக்கு.
நானும் அந்தச் சூழ்நிலைக்குப் படிப்படியாகப்
பழகிக் கொண்டேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன். இருக்கும் நேரத்தில் துளி நேரத்தையும்
வீணாக்காமல், கருமமே கண்ணாக வேலை பார்க்க ஆரம்பித்தேன். என் வேகத்திற்கு ஆபீசில் இருப்பவர்களால்
ஃபைல் போட முடியவில்லை என்றே சொல்லலாம். அரசுக்கு அனுப்ப வேண்டிய பிரேரணைகளை அத்தனை
சுடிதமாகத் தயார் பண்ணினேன் நான்.
என்னா சார்…இந்த டிபார்ட்மென்ட்லயே பழம்
தின்னு கொட்டை போட்ட ஆள் மாதிரி….ஆனாலும் ஜெட் வேகம் சார் உங்க வேல…எங்களால ஈடு கொடுக்க
முடில….. – என் மனம் மானசீகமாகப் பெருமைப் பட்டது.
தாமதங்கள் எதுவுமின்றி கோப்புகள் நகர்ந்து
கொண்டிருந்தன. பழைய பென்டிங்கெல்லாம் கரைய ஆரம்பித்திருந்தன. எதுக்கு இப்படித் தோண்டித்
தோண்டி எடுக்கிறாரு? நாமளா தூக்கி நட்டமா நிறுத்தப் போறோம் டிபார்ட்மென்ட்டை…? என்றும்
முனகிக் கொண்டார்கள். மனிதர்கள் சராசரிகள்தானே என்பதையும் அவ்வப்போது நிரூபித்தார்கள்.
இதனால்தான் அந்த மனுஷன் அந்த ஆபீசே கதின்னு
கிடக்காரோ…? இங்க எட்டியே பார்க்க மாட்டேங்கிறாரே…? காலைல வந்து அட்டன்டென்சை சைன்
பண்ணிட்டுப் போறதோடு சரி…டேபிள்ல ஏதாச்சும் இருந்தா கையெழுத்துப் போடுறாரு.மத்தப்படி
எதிர்த்தாப்லதான் கதியாக் கிடக்காரு ?
அங்கதான சார் இத விடப் பைசா…அடிஷனல் சார்ஜ்ல
இருக்கைல அடிச்சாத்தான முடியும்…? இங்க வழக்கமா உள்ளது எப்டியும் கைக்கு வந்து சேர்ந்துரும்..அங்க
கூடுதல் பொறுப்புல உள்ளது கைய விட்டுப் போயிடக் கூடாதுல்ல…? அதிலெல்லாம் சாரு ரொம்பக்
கவனமா இருப்பாரு…நீங்க வேறே அவருக்கேத்தாப்லா அமைஞ்சிட்டீங்களா..எதுக்கு இந்த ஆபீசப்
பத்திக் கவலப்படப்போறாரு? அதான் மூக்குல வேர்த்த மாதிரி உங்களயே பார்த்திட்டிருக்காருன்னு
வேறே சொல்றீங்க….! அவருக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா…சார்…எம்டன் சார்….இதுலயே ஊறித்
திளைச்சவரு சார்…எது…எது…எப்டி எப்டி…ன்னு கரைச்சுக் குடிச்சவரு சார்…..கில்லாடியாக்கும்….
தங்கள் அலுவலகத் தலைமையைப்பற்றி அந்தப்
பணியாளர்களே எவ்வளவு பெருமையாய்க் கூறுகிறார்கள்? இவர்களை அவர் கண்டு கொள்வதில்லை…அதனால்
அவரை இவர்கள் கண்டு கொள்வதில்லை. அங்கங்கே கை மாற வேண்டியவைகள் முறையே கால நிர்ணயமாய்
நடந்தேறிக் கொண்டிருக்கின்றன…பின் யார்தான் எதைப்பற்றித்தான் கவலைப்பட்டாக வேண்டும்?பரஸ்பர மதிப்பற்றுப் போன இடம்.
கவலையெல்லாம் வேலையை மட்டும் செய்து…வந்து
போய்க் கொண்டிருப்பவனுக்குத்தான். பயப்படுபவன் பயந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
உதறிச் செல்பவன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கடந்து போக வேண்டியதுதான்….அதற்கு
மேல் சொல்வதற்கு அங்கு பெரிதாக ஒன்றுமில்லை.
சார்..வேலையெல்லாம் முடிச்சிட்டீங்கல்ல…ஃப்ரீயாத்தான
இருக்கீங்க…?-எதிரில் அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணனின் கேள்வியின் குரல் தணிந்து சோகமாய்
வெளிவருவதை உணர்ந்தேன் நான்.
ஏன் சார்…? என்ன பிரச்னை…? உங்களுக்கு
என்ன வேணும்? சொல்லுங்க…
ஒண்ணுமில்லே…இந்தக் காம்ப்ளெக்ஸ் பூராவும்
உங்களப்பத்தித்தான் பேசிக்கிறாங்க…
என்னன்னு சார்…? ஏதாச்சும் தப்பா…..!
ஐயையோ…அதுக்குத்தான் நாங்க இருக்கமே…ரொம்பப்
புகழ்ந்து பேசிக்கிறாங்க…அதைச் சொல்ல வந்தேன்….-லேசாய்ச் சிரித்துக் கொண்டார். அதில்
கூட ஒரு சிறு வேதனை இருப்பதாய்த் தோன்றியது. …தன்னிரக்க நகைச்சுவை.
இன்னும் என்னன்னே நீங்க சொல்லலை…புதிர்
போட்டுட்டே இருக்கீங்க…? –
என்ன இருந்தாலும் மேலதிகாரி…
.சொல்லியனுப்பினால் நானே வந்திருப்பனே
சார்…நீங்க ஏன் வந்தீங்க…? கனிவோடு கேட்டேன்.
இதுவும் என் ஆபீஸ்தானே…ரெகுலர் போஸ்ட்
இதுதானே…அதுதானே அடிஷனல் சார்ஜ்…அங்கல்லாம் நீங்க வர வேண்டாம்ன்னுட்டுத்தான் நானே புறப்பட்டு
வந்தேன்….இப்ப என்னடான்னா நிலைமை திடீர்னு மாறிடுச்சு…! –
தன் ஆபீசர் இருக்கையில் உட்கார்ந்து என்னை
அழைத்திருக்கலாம். பதிலாக எனக்கு எதிராக வந்து யதார்த்தமாய் அமர்ந்து வி்ட்டாரே!
எதையோ சொல்லத் தயங்குகிறார் என்று புரிந்தது எனக்கு.
அங்கெல்லாம் நான் வரக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? அதென்ன பாபப்பட்ட இடமா? எல்லாமும்
ஆபீஸ்தானே? அங்கேயும் இதே பணியாளர்கள்தானே இருக்கிறார்கள். தலைமையாக இவர் இருக்கிறார்.
கூடுதல் பொறுப்பு…அவ்வளவுதானே?
ஏன் சார் நான் வந்தா என்ன? நீங்க கூப்டீங்கன்னா
வந்துட்டுப் போறேன்.
வேண்டாம்ங்க….அங்க ஆளுக சரியில்லை…யாரும்,
எவனும் நம்பிக்கைக்குரிய ஆளுகளா தெரில….பயமா இருக்கு. எந்த நேரம் என்ன பண்ணுவாங்களோன்னு…தந்திரக்கார
ஆசாமிங்க அங்க இருக்கிறவங்க…ஆனா பாருங்க…அத்தனை பேரும் சீனியர்ஸ்…அதுனாலதான் பயப்பட
வேண்டியிருக்கு …!.நீங்க அங்க வந்தீங்கன்னா ஒருவேளை நீங்களும் மாறினாலும் போச்சு…!
– சிரித்துக் கொண்டார்.
நீங்க எதுக்கு சார் பயப்படணும்… அவுங்களுக்கு
பாஸ்… இதச் செய்…அதச் செய்ன்னா செய்துட்டுப் போறாங்க… …Do what I say..ன்னுட்டுப் போங்க…அவ்வளவுதானே…?
அப்டியெல்லாம் அவங்ககிட்ட கட்டன்ரைட்டாப்
பேச முடியாதுங்க…-அது ஒரு மாதிரி ஆபீசாக்கும். ஏண்டா அடிஷனல் சார்ஜ்ன்னு நொந்து கிடக்கேன்
நான். குரலில் அலுப்புத் தெரிந்தது.
எங்கள் பேச்சை எழுத்தர்கள் கவனியாததுபோல்
கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. பார்த்தால் அவரவர் வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல்தான்
தெரியும். ஆனால் கவனம் முழுதும் இங்கே…!
ஆபீஸ் வேலைக்குத்தானே சார் சொல்றீங்க…சொந்த
வேலைக்கா?-அப்புறம் என்ன தயக்கம்?
அதுக்கே அவுங்ககிட்டல்லாம் ஸ்டிரிக்டா
பேச முடியாது சார்…இந்த பாருங்க ஆர்டர….நேத்தே சாயங்காலம் வந்திருச்சு… இங்க வந்திருக்கணுமே
வரல்லையா…? …என் நேரத்தப் பாருங்க……? எல்லாம் என் தலைவிதி….!
அவரின் இயலாமையை, திறனற்ற தன்மையை நினைத்து
எனக்குச் சிரிப்பும் வந்தது…அதே சமயம் பரிதாபமாயும் இருந்தது. என்னவோ ஆர்டர் என்கிறாரே…?
வாங்கிப் பார்த்த எனக்கு ஆச்சரியம்…
என்ன சார் இப்டி…? திடீர்னு? என்று அதிர்ந்தேன்
நான்.
திடீர் திடீர்னுதான் இங்கே எல்லாமும்
நடக்குது….வேலை செய்றதை விட கோள் மூட்டி விடுறவனும், புறம் சொல்றவனும்தான் சார் இங்க
கெட்டிக்காரங்க.. புரிஞ்சிக்குங்க…வேலை ரெண்டாம் பட்சம்தான்….யார் யாரு சீஃப்புக்கு
நெருங்கியிருக்கான்ங்கிறதுதான் முக்கியம்…அரசியல்வாதி வந்தா நம்மள ஒதுங்குங்க…ஒதுங்குங்கன்னு
விலக்குவாரு…கவனிச்சிருக்கீங்களா?
அப்ப இனிமே இங்கே நீங்க அடிஷனல் சார்ஜா…?
அது ரெகுலரா….? – அதிர்ந்து போய்க் கேட்டேன்.
உங்களப்பத்தி சீஃப்கிட்டே யாரோ சொல்லியிருக்காங்க
போல்ருக்கு…அப்போ இந்தாள அங்க ரெகுலராப் போட்டுட்டு இதை கூடுதல் பொறுப்பாக்கிடுங்க…ன்னுட்டாராம்
பாஸ்…
ஆமா சார்…ஆர்டர் வந்திருக்கு….தபால்ல
வச்சிருக்கனே…-என்றவாறே எழுந்து வந்தார் கருணாகரன் அசிஸ்டன்ட்.
முக்கியமான தபால்னா உடனே சொல்ல மாட்டீங்களா?
டேபிள்ல வச்சாப் போதுமா? என்ன நீங்க? – கடிந்து கொண்டேன் அவரை.
நல்லாப் பைசாக் கிடைக்கும் என்று அங்கு
கூடுதல் பொறுப்பை சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட ஆசாமி இப்பொழுது அதுவே ரெகுலர் என்றாகும்போது
ஏன் சடைத்துக் கொள்கிறார்? எதற்காகப் பயப்படுகிறார்? இன்னும் உரிமையோடு அள்ளலாமே? பகிர்ந்து
உண்டு பல்லுயிர் ஓம்புக….என்கிற நன்னெறி தெரியவில்லையோ?
சரி..நீங்க இன்னும் தபாலே பார்க்கல போல்ருக்கு….பார்த்து
வைங்க…நான் அப்புறமா வர்றேன்…இந்த ஆபீஸ் அடிஷனல் சார்ஜ் எனக்கு. சி..டி.சி. ரெடி பண்ணனும்.
நீங்கதான் முழுசாப் பார்த்துக்கணும். அந்த தைரியத்துலதான் நான் அங்க உட்கார்ந்திருக்கேன்…அப்புறம்
பார்க்கலாம்….-சொல்லிக் கொண்டே எழுந்து கிளம்பினார் கோபால கிருஷ்ணன். வந்த விஷயம் முடிவதற்குள்
மனதில் என்னவோ உறரிபரி வந்து விட்டது. ஆள் பதட்டமாகவே இருந்தார். அவருக்கு இன்னும்
நான்கு மாதங்களோ ஆறு மாதங்களோதான் இருந்தன
ஓய்வு பெறுவதற்கு. வம்பு தும்பு எதுவுமில்லாமல் ஓய்வு பெற வேண்டுமே என்கிற பயம் வந்து
விட்டது போலும். எல்லோருக்கும் உள்ளதுதான் அது. கடைசி நேர டென்ஷன். எதிலும் மாட்டிக் கொள்ளாமல், எந்தக்
கறையும் படாமல், கறையிருந்தாலும் வெளிப்படாமல், எந்த குற்றச்சாட்டு நடவடிக்கையும் இல்லாமல் வெளியேற
வேண்டுமே!
எவன் பி.ஏ. சார்னு கூப்பிடுறான்…எல்லாப்
பயலுகளும் கோபாலகிருஷ்ணன்…கோபாலகிருஷ்ணன்னுதான் ரகசியமாக் கூப்பிடுறாய்ஞ்ஞ… - இந்தக்
குறை அவர் மனதில் ஆழமாய் வேறூன்றியிருந்தது.
ஓய்வு பெறும் நாளன்று மாலை ஐந்து மணிக்கு
மேல்தான் “வயது மூப்பில் ஓய்வு பெற அனுமதியளிக்கப்படுகிறது“ என்கிற ஆணை வந்து சேரும்.
அதுவரை வயிற்றைக் கலக்கும். கெதம்…கெதம் என்றிருக்கும்…எவனாவது, என்னத்தையாவது மொட்டையைப்
போட்டு நிறுத்தி விடுவானோ, நிறுத்தியிருப்பானோ என்கிற உதறல் மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும்.
இது தப்பு செய்தவனுக்கும் சரி, செய்யாதவனுக்கும் சரி…காரணம் மர்மமான நடவடிக்கைகள் பலவும்
புழங்கும் இடம் அது.
ஓய்வு பெற அனுமதி என்று ஆணை கிடைத்து
விட்டாலும் அதற்குப் பிறகும் ஏதேனும் பாதகம் நேரக் கூடுமோ என்றெல்லாம் மனம் பதைக்கும்.
இதற்கெல்லாவற்றிற்கும் நடுவிலேதான் “கெட் டுகெதர்” ஃபங்ஷனும் நடந்தேறும். மனது விட்டு
மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல், உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டே பார்ட்டியை அட்டென்ட்
பண்ண வேண்டியிருக்கும். பகைத்துக் கொண்டவன், முறுக்கிக் கொண்டவன், முணுக்கென்றவன்,
மனதுக்குள் திட்டியவன், ஒத்துழைக்காதவன், விருப்பமில்லாமல் வந்தவன்,மரியாதையில்லாமல்
முனகியவன், முதுகுக்குப்பின்னே கேலி செய்தவன் என எல்லாத் தரப்பினரும் வேறு வழியின்றி
வந்து அமர்ந்து இனிப்பு, காரம், காப்பி என்று அருந்தி, புகழ்ந்து நாலு வார்த்தைகள்
பொய்யாய்ப் பேசி , கைகுலுக்கி அசடு வழிந்து
மாலை போட்டு, துண்டு போர்த்தி மரியாதையோடு அனுப்பி வைத்துப் பிரிந்து செல்வார்கள்.
ஃபாக்ஸ் வந்திச்சா…ஃபாக்ஸ் வந்திச்சா…?
என்பதற்குத் தகவல் சொல்ல அமர்த்திய ஆள் இன்னும் வரவில்லையே என்று துடிதுடித்துக் கொண்டிருக்கும்
வேளையில்…கையில் அந்த ஜெராக்ஸ் நகலோடு ஆள் பரபரத்து வந்து கொண்டிருக்கையிலும் கூட அது
ஓய்வு பெற அனுமதியளித்த ஆணைதானா இல்ல வேறேதாவதா? என்கிற சந்தேகம் உதித்து வயிற்றைக்
கலக்க….சார் ஆர்டர் வந்திடுச்சு…என்று கொண்டு வந்தவன் குரலெடுத்து, சிரித்த முகத்தோடு
கொடுத்த பின்னால்தான் உயிரே நிலைக்கும்.
யப்பாடா…இருங்க…முத்ல்ல பாத்ரூம் போயிட்டு
வந்திடறேன்…என்று ஓடுவார் அந்த ஓய்வு பெறும் அலுவலர். ஓய்வு பெற்றவர்களின் நடவடிக்கைகளைக்
கண்ணுற்றிருந்த எனக்கு இதையெல்லாம் புரிய வைத்திருந்தது.
சார்….குட் மார்னிங் சார்…..மெல்ல அழைத்துக்
கொண்டே அருகில் வந்து அமர்ந்தார் கருணாகரன். யாரானாலும் பக்கத்தில் வந்தால் நிற்கக்
கூடாது என்று சொல்லியிருந்தேன் நான். அது பியூனானாலும், டிரைவரானாலும், நேற்றுப் பணியில்
சேர்ந்த கிளார்க் ஆனாலும் அப்படித்தான் என்னைப் பொறுத்தவரை. கௌரவம், மரியாதை என்பதெல்லாம்
நாம் இருப்பதைப் பொறுத்து…தானே அமையும் என்பது என் நம்பிக்கை.
சொல்லுங்க கருணா….என்றவாறே அவர் முகத்தைப்
பார்த்தேன்.
கோபாலகிருஷ்ணன் நேத்து வந்தார் சார்…நீங்க
போனப்புறம்….
எவ்வளவு சர்வ சாதாரணமாக தன் உயர் அதிகாரியைப்
பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? மூன்றாம் நபரிடம்தான் எனினும் பெயர் சொல்லலாமா? பி.ஏ.சார்…என்று
சொல்ல வேண்டியதுதானே? இதைத்தான் சொல்லி நேற்று வருத்தப்பட்டாரோ?
எதுக்காக? – சற்று உன்னிப்பாய்க் கேட்டேன்.
அவருக்கு உங்களால காரியம் ஆக வேண்டியிருக்காம்.
அந்த ஆபீஸ்ல யாரும் செய்ய மாட்டேங்கிறாங்களாம்…!
ஏன்? அவர்தானே அவங்களுக்கு பாஸ்…அவர்
சொன்னாச் செய்துதானே ஆகணும்…..?
அதெல்லாம் சின்னச் சின்னத் தனி ஆபீஸ்கள்ல
நடக்கும் சார்…இந்த மாதிரிக் கடல்ல நடந்தேறுமா சார்….இது பெரிய கிடங்கு சார்….
என்ன சொல்ல வர்றீங்க…புரியல…? – உண்மையிலேயே
அந்தப் பூடகம் எனக்குப் புரியவில்லைதான்….
வந்தவுடனே, சார் போயிட்டாரா…அதுக்குள்ளயுமா…டிரெயினுக்கு
கரெக்டா கிளம்பிடுறாரு தவறாம….கொஞ்சம் இருக்கக் கூடாதான்னு சலிச்சிக்கிட்டார் சார்….
அப்புறம்? – மனதுக்குள் சிரித்துக் கொண்டே
கேட்டேன் நான்.
அவுரு டெய்லி அப்படித்தான சார் போறாரு…அஞ்சரை
ஆனா பையத் தூக்கிடுவாரு…டெண்டர் ஓப்பனிங், மீட்டிங்னு இருக்கிற அன்னைக்கு மட்டும்தான்
இருப்பாருன்னேன் சார். அதுக்கு என்ன சொன்னார்ங்கிறீங்க…?
என்ன சொன்னாரு? – பதறாமல் கேட்டேன். முதல்
முறையாக உதவியாளர் கருணாகரன் அப்பொழுதுதான் என்னிடம் மனம் விட்டுப் பேசுகிறார் என்று
தோன்றியது எனக்கு.
ஏன்யா…பைசா வர்ற எடத்துல அப்டியெல்லாம்
நேரத்துக்குக் கிளம்ப முடியுமா? ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் கூட இருந்திட்டுத்தான்
போகணும்…ட்ரெயின் போனாப் போகுது…பஸ்ல போயிக்க வேண்டிதான்..அப்புறம் சாதாரண கிளார்க்குக்கும்
இவருக்கும் என்னய்யா வித்தியாசமின்னுட்டார் சார்….
. அவுரு காசு வாங்க மாட்டாரு சார்…அதத்
தெரிஞ்சிக்குங்க…ன்னேன் சட்னு…அதிர்ந்து போனாரு உடனே…!
என்னது? காசு வாங்க மாட்டாரா? காசு வாங்க
மாட்டாரா? ன்னு திருப்பித் திருப்பிக் கேட்டுட்டேயிருந்தாரு சார்…அந்தச் செய்தியே அவருக்கு
அதிர்ச்சியா இருந்திச்சு ….முகத்துல புது பயம் வந்த மாதிரி ஆயிட்டாரு…
வந்த புதுசுலயே அதக் காண்பிச்சிட்டாரு…கான்ட்ராக்டர்
ஒருத்தரு உள்ளே நுழையும் போது ரூபா நோட்ட இவர்
சட்டைப் பையில எதிர்பாராமத் திணிச்சிட்டார் …அதுக்கே பழி சண்டைக்குப் போயிட்டாரு…வச்ச
நீங்களே எடுத்திடுங்கன்னு அந்த ரூபாயக் கையாலக் கூடத் தொடலன்னு சொன்னேன் சார்…அவுரு
என்ன கேட்டார் தெரியுமா சார்? அதான் சார் படு ஜோக்…?
என்ன கேட்டாரு…? முழுவதும் சொல்லுங்க…என்றேன்.
நான் கேட்பதை விட, இந்த மாதிரிச் செய்திகளைப் பிறரிடத்தில் வாய்விட்டுச் சொல்வதில்
ஒரு தனி உற்சாகம் அவர்களுக்குள் பொங்குவதாய் உணர்ந்தேன் நான். வம்பு பேச யாருக்குத்தான்
பிடிக்காது? அதிலும் இது துட்டு பகிரும் விஷயம்…!
அப்போ அவருக்கு சேர வேண்டிய காசெல்லாம்
என்னாச்சுன்னு கேட்டுட்டார் சார். கூடவே நீங்க பிரிச்சு எடுத்துக்கிட்டீங்களா?ன்னு
எங்களக் கொக்கி போடுறார் சார்….கான்ட்ராக்டரே வச்சிக்கிட்டாரு…நாங்க ஒண்ணும் தொடலன்னு
சொல்லிட்டோம்…அதுல நம்பிக்கையே வல்ல அந்தாளுக்கு. இப்போ எப்டி வந்து நிக்கிறாரு பார்த்தீங்களா
சார்? காரியக்கார ஆளு சார்…தன் காரியக் கெட்டி…! இந்தாளுக்கு எதுவுமே செய்யக் கூடாது
சார்…படு மோசமான ஆளு….அதான் சார் எல்லாரும் போட்டுப் பார்க்கிறாங்க…!
அது சரி…எதுக்கு வந்தாரு? சொல்லாமயே போயிட்டாரே…ஆளு
பதட்டமாவே இருந்தாருங்கிறீங்க…? ஏன்னே புரியலையே…? – விடாமல் கேள்வி போட்டேன்.
அது வேறொண்ணுமில்ல சார்….அவருக்குப் பென்ஷன்
ப்ரபோசலை அந்தாபீஸ்ல போடாம இழுக்கிறாங்க…ஏ.ஓ.கிட்ட எத்தனையோ வாட்டி சொல்லிப் பார்த்துட்டாராம்…செய்றேன்…செய்றேன்ங்கிறாரேயொழிய
யாரும் செய்றாப்ல இல்ல….குறைஞ்சது மூணு மாசத்துக்கு முன்னாடியாவது பென்ஷன் ப்ரபோசல்
ஏ.ஜி.க்குப் போயாகணுமில்லையா சார்….அங்க ஆளத் தவிக்க விடுறாங்க… ….இவரால ஆட்சியர்ட்டயும்
போய் நிற்க முடியாது ஏன்னா இந்தாளு வண்டவாளம் பெரிசுக்கு நல்லாத் தெரியும். …மல முழுங்கின்னு…அதான் சமயம் வரற்போது வசம்மா…போட்டுப்
பார்க்குறாங்க….
அதுக்காக…ஒருத்தர் ஓய்வு பெறுவதற்கு முன்னால
ப்ரபோசல் போய்ச் சேர வேண்டாமா? அப்புறம் பென்ஷன் எப்டி வாங்குவாரு? ரெகுலர் சார்ஜ்
அங்கதான ப்ரபோசல் போடணும்…கடைசி ஸ்டேஷன் அதுதானே?
அந்தாபீஸ்ல பயங்கர சில்ர சார்… கொழிக்கிற
இடம்.….கேம்ப் போகுற இடமெல்லாம் வாரி வளைக்கிறாராம். லம்ப்பா அடிக்கிறாராம். ஒரு கான்ட்ராக்டர
விட மாட்டார் சார்…தேடித் தேடிப் போவாரு…ஆபீஸ் ஸ்டாஃப் யாருக்கும் பங்கு கொடுக்கிறதில்லயாம்.
ஏ.ஓ.வே புலம்புறாரு. தனக்கானதையும் சேர்த்து
அவரே சுருட்டிர்றாருன்னு….அவுங்கவுங்களுக்குன்னு உள்ள பர்சன்டேஜ்ஜைக் கொடுத்திட்டாத்தான
சார் பிரச்னையில்லாம இருக்கும்…இல்லன்னா சிக்கல்தான சார்…நீங்க இந்த வளாகத்துல இருக்கிற
பியூன்கள், டிரைவர்கள், கிளார்க்குகள்னு எல்லாருக்கும் சம்பள நிர்ணயம், லீவ் சாங்ஷன்,
அரியர் பில்னு போட்டுக் கொடுத்தீங்கல்ல…அதனால் எல்லாரும் உங்களப் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டாங்க…அது காதுல விழுந்து போச்சு
போல்ருக்கு.…ஐயா வந்து நிக்கிறாரு….அநேகமா அதுக்காகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்
சார்…
எதுக்கு? பென்ஷன் ப்ரபோசலுக்கா? என்று
புரியாமல் கேட்டேன் நான். ஒரு அலுவலருக்கே இந்த நிலைமையா? அது சரி…அலுவலர் அலுவலராய்
இருந்தால்தானே? – நினைத்துக் கொண்டேன்.
அது மட்டுமில்ல சார்….அவருக்கு இன்னும்
பே கமிஷன் ஃபிக்கேஷனே போடலை சார்….சம்பளமே நிர்ணயிக்கலே…..அதப் போட்டுட்டுல்ல பென்ஷனுக்கு
அனுப்பணும்….அது வந்தப் பிறகுதானே மத்த பெனிஃபிட்ஸ்….சிக்கல்தான் சார்….ஓய்வு பெற்று
வெறுங்கையோட வீட்டுக்குப் போக வேண்டிதான்…
அய்யய்ய….அப்படீன்னா சம்பள நிர்ணயம் அப்ரூவ்
ஆகி அப்புறம்தானே பென்ஷனுக்கு பிரேரணையே அனுப்ப முடியும்? இன்னும் எவ்வளவோ இருக்கே…!
ஆள் வசமா மாட்டிக்கிட்டார் போலயே…!
அதான் சார்..மனுஷன் எதுவும் ஓடாம பதட்டமா
உங்க கிட்ட வந்து நிக்கிறாரு…ஒண்ணு தெரியுமா சார்…முக்கியமானது சொல்றேன்…அவுரு ப்ளூ
இங்க்லதான் சார் எப்பவும் கையெழுத்துப் போடுவாரு…பச்சை இங்க்கே தொட மாட்டாரு …அந்தப்
பேனாவே நமக்கு ஆகாதும்பார்…பச்சை இங்கைப் பார்த்தாலே அவருக்கு அலர்ஜி சார்…
இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? எதுக்காக அப்டி?
இனம் புரியாத பயம்தான்…வேறென்ன சார்? மனசாட்சி உறுத்துது.
எல்லாரும் ப்ளூ இங்க் பேனாலதான் எழுதறோம். ஆனா ஆபீசர்ஸ் பச்சை இங்க் பேனாத்தான் யூஸ்
பண்ணுவாங்க. பார்த்திருக்கோம்.இவரு அதத் தொடக்கூட மாட்டாரு சார்… கீழேயிருந்து படிப்படியா
ப்ரமோஷன்ல வந்தவர் …அந்தத் தயக்கமாக் கூட இருக்கலாம்….கேட்டா வேணாம்யா…கலெக்டர் பர்ப்பிள்ல
போடுறாரு…நாம சைடுல பச்சைன்னா சரிக்கு சமமாத் தெரியும்..…அது சரி வராதுன்னு சொல்லிடுவார்
சார்…நீங்களும் படிப்படியா பிரமோஷன்ல வந்தவர்தான சார்? நான் பச்சைலதான் போடுவேன்னுல்ல
நீங்க பிடிவாதம் பண்றீங்க….? அந்த தைரியம் அவருக்குக் கிடையாது சார்… அதுக்கு ஒரு தனி
மரியாதை எப்பவும் உண்டு சார்…ரொம்பக் கவனமா இருப்பார் … இந்த வளாகத்துல இருக்கிற ஆபீஸ்கள்ல
பலரும் அப்படித்தான்…எல்லாம் ப்ளூ இங்க்தான்…அவுங்கவுங்க செயலே அவுங்கவுங்க மனசு…அவ்வளவுதான்…அதுக்கு
ஒரு கௌரவத்த ஏற்படுத்துறது அந்தந்த நபரோட பொறுப்பு…அப்டித்தான் சொல்லியாகணும்….மனசுதான
சார் கோயில்? -நான் கருணாகரனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனசுதான் கோயிலென்றால் நூறு சதவிகிதம்
இங்கே சுத்தமாகவல்லவா இருந்தாக வேண்டும்? அப்படியா இருக்கிறது? கீழிருந்து மேலே வரை
மனிதர்கள் சராசரிகள்தான் என்பதையல்லவா உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்? அத்தி பூத்தாற்போல்
ஓரிருவர் தங்களை நேர்கோட்டில் நிறுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதானே? பெரும்பாலோர்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று கைகோர்த்துத்தானே அலைகிறார்கள்?
தங்களுக்குப் பாஸாக இருந்த ஒரு அலுவலரைப்
பற்றிப் பணியாளர்கள் என்னவெல்லாம், எப்படியெல்லாம் புகார் சொல்ல வேண்டிய நிலை வந்து விடுகிறது? ஆற்றோடு போகும்
நீர்…அய்யா குடி…அம்மா குடி….அதுதானே?
இந்த எல்லாவற்றிற்கும் எது காரணம்? நேர்மையற்ற
செயல்பாடுகள். மனிதனின் ஆசை…! முரணான ஆசைகள். தெரிந்தே செய்யும் தவறுகள். அதுவே அவரவர்
துன்பத்திற்கான காரணங்கள்…!! நான் இப்படித்தான்
எண்ணிக் கொண்டேன்.
மறுநாள் அலுவலகம்
வந்து சேர்ந்த போது என் இருக்கைக்கு எதிரே முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தார் கோபாலகிருஷ்ணன்.
முகம் மிகுந்த வாட்டமாயிருந்தது. இதென்ன…சோகமே உருவாய் இப்படி…?
வணக்கம்…சத்தியமூர்த்தி சார்….எனக்கு
நீங்கதான் செய்யணும். என் பணி ஓய்வுப் பலன்களையெல்லாம் நீங்கதான் வாங்கித்தர ஏற்பாடு
பண்ணனும். பிரபோஸல் அனுப்பணும். உங்களத்தான்
நான் நம்பியிருக்கேன். உங்கள விட்டா இங்க வேறே
யாரும் எனக்கு செய்து தர மாட்டாங்க…நான் பீஸ்ஃபுல்லா ரிடையர்ட் ஆவது உங்க கைலதான் இருக்கு…என்றவாறே
என் இரு கரங்களையம் இறுகப் பற்றி இழுத்து முகம் புதைத்துக் கொண்டார் கோபாலகிருஷ்ணன்.
கை விரல்களில் ஈரம் படர்ந்த போது அவர் அழுகிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. அவர்
உடம்பு குலுங்கியது. என் மனம் இரங்கியது. அவருக்கு உதவ வேண்டும் என்றுதான் இசைந்தது.
-------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக