”மதிப்பு” சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024
---------------
எதுக்குக்
கிடந்து இப்படித் துடிக்கிறே? என்று கேட்டார்
சுகவனம்.
இப்போதுதான்
அறிவிப்பே வந்திருக்கிறது. விழா வைப்பதற்கு இன்னும் தேதி குறிக்க வேண்டும். இன்னும்
சில போட்டிகளில் முடிவு அறிவித்தாக வேண்டும். எல்லாப் போட்டிகளுக்கும் முடிவு அறிவித்த
பின்பே விழாவைப் பற்றி யோசிப்பார்கள். இப்பத்தானே முடிவே அறிவிச்சிருக்கோம் என்கிற
அயர்ச்சி அவர்களுக்கும் நிச்சயம் இருக்கும். விழா என்பது பெரிய எடுப்பு.
இப்போதே
பரிசுத் தொகை கைக்கு வந்துவிட்டதுபோல் இவள் ஏன் கிடந்து துடிக்கிறாள்? – மேகலாவைக்
கூர்ந்து நோக்கினார் சுகவனம்.
அவளின்
உற்சாகம் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தது இவருக்கு. இந்தப் பத்தாயிரம் ஒரு பெரிய தொகையா?
என்று நினைத்தார். ஏதோ ஒரு லட்சம் கிடைத்ததுபோல் சந்தோஷிக்கிறாளே? இதைப் போல் எத்தனை
பத்தாயிரங்களுக்குப் புத்தகங்களை வாங்கிக் குவித்திருப்பேன்? அது இவளுக்குத் தெரியுமா?
தெரிஞ்சதுனாலதானே
பிரச்னையே? அது மனசுல கிடந்து அழுத்திட்டிருக்கிறதுனாலதானே இந்தப் பேச்சே வருது!-இப்படியும்
நினைத்துக் கொள்ளத் தலைப்பட்டார். புத்தகமா வாங்கிக் குவிங்க…படிக்கிறீங்களோ? அடுக்கி
வச்சு அழகு பார்க்கிறதுக்கா? - மனசுக்குள் கிடந்து புகைந்து கொண்டிருக்கும் ஆறா நெருப்பு.!
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்….திக்கித் திணறி…! எதுடா சமயம் என்று காத்திருந்ததுபோல்…இப்போது.கணக்கில்
வரவு வைக்கிறாள்.
இருந்திருந்தும்
ஒரு பரிசு கிடைச்சிருக்கு….செக் கைக்குக் கிடைச்சவுடனே நேரா என்கிட்டே கொண்டு வந்து
கொடுத்திடணும்…தெரிஞ்சிதா? - புதிய அதிகாரம்
இது.
அதென்ன
இருந்திருந்தும்? இதற்கு முன்பு வாங்கிய நான்கைந்து பரிசுகளை வரவு வைக்கவில்லையோ? வருஷங்கள்
ஆயிற்றே என்று மறந்து விட்டாளோ?
அதெல்லாம்
ஆரம்பத்துல, நீங்க இவ்வளவு கணக்கில்லாமப் புத்தகங்கள் வாங்கிக் குவிக்கிறதுக்கு முன்னே
வந்தது…அது இந்தக் கணக்கிலே வராது…!! – அவள் சொல்லாவிட்டாலும் ஓங்கிக் குரலெடுத்துச்
சொல்வது போலவே இருந்தது சுகவனத்திற்கு.
காசோலையை
பத்திரமா வச்சிக்காம, தொலைச்சிடுவேன் என்று நினைத்து விட்டாளோ? பொருத்தமில்லாமல் நினைப்பதில்
பெண்களுக்கு நிகர் அவர்களேதான். நான் என்ன சின்னப் பையனா காத்துல பறக்க விட்டிட்டு
வர்றதுக்கு? என்ன கேட்கிறாள் இவள்?
தங்கள்
உத்தரவு…அடியேன் சித்தம்…..- பொறுமையோடு பதிலை இப்படித்தான் பகர்ந்தேன். அதிலிருந்த
கேலியை உணர்ந்தாளோ என்னவோ? - சொன்னபோது திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.
அது
சரி…செக் என் பெயருக்குத்தானே தருவாங்க…அதை உன்கிட்டே கொண்டு வந்து காண்பிக்கத்தானே
முடியும்…உன் வங்கிக் கணக்குலயா போட முடியும்? திரும்ப எங்கிட்டேதானே தந்தாகணும்? – என்னதான் சொல்கிறாள் பார்ப்போம் என்றுதான் இதைச்
சொன்னார் சுகவனம்.
அது
எனக்குத் தெரியாதா? நீங்க என்ன பெயர்ல செக் வாங்கியிருக்கீங்கன்னு பார்க்க வேண்டாமா?
அதுக்குத்தான் சொல்றேன்…-முன் யோசனை இல்லாமல் நான் வாங்கி வருவேன் என்று என்னைப் பற்றி
அவநம்பிக்கையாகவே நினைப்பதில் அவளுக்குத் தனி முனைப்பு. ஒரு குரூர சந்தோஷம்.
அது
கூட எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டியா? புனை பெயர்லயா வாங்குவேன்? என்னுடைய ஒரிஜினல்
நேம்லதான் செக் போடச் சொல்லுவேன். என்கிட்டயே கொடுங்கன்னு வாங்கி “பே-டூ” ங்கிற இடத்துல
கே.ஆர்.சுகவனம்னு நானே எழுதிக் கொடுத்திடுவேனாக்கும்.அதெல்லாம்கவனமாயிருப்பேன்….கவலைப்படாதே…!
சில பத்திரிகைகள்லேர்ந்து பணம் வருதே. வர்ற செக் பூராத்துலயும் என்னோட “யோகி“ங்கிற
புனை பெயரா போட்டிருக்கு? என் சொந்தப் பெயர்தானே போட்டு வருது…பார்க்கிறேல்ல…செக் எழுதக்
கையெடுக்கிறவனுக்கே எடுத்த எடுப்புல இந்த சந்தேகம் வந்திருமாக்கும். யோகின்னு எழுதினா
சரியா வருமான்னு பாமரன் கூட யோசிப்பான்ல….! பிழை திருத்தி, கன கச்சிதமா எடிட் பண்ணி
பிரசுரம் பண்ற பத்திரிகைக்காரங்க…இத யோசிக்க
மாட்டாங்களா? அவுங்களுக்கு நாம ஒண்ணும் சொல்லித் தர வேண்டாம். அவுங்க நமக்குச் சொல்லித்
தருவாங்களாக்கும்…!
எப்படியும்
இன்னும் ரெண்டு மூணு மாசத்துல விழா வச்சிடுவாங்க…அதுக்குள்ளே மறந்திடாதீங்க..எப்பயாச்சும்
ஃபோன்ல கூப்டாங்கன்னா…? அதுக்குத்தான் முன்னமே உஷாராச் சொல்லி வைக்கிறேன்…கே.ஆர்.சுகவனம்ங்கிற
பெயருக்குச் செக் போடுங்கன்னு கவனமாச் சொல்லிடுங்க…முடிஞ்சா ஸ்பெல்லிங் கூடச் சொல்லிடலாம்.
நீங்க sugavanam-னு கணக்கு வச்சிருக்கீங்க…அவுங்க sukavanam-னு செக்குல எழுதிடப் போறாங்க….ஏற்காது
திரும்பி வந்திடும். போதாக் குறைக்கு பாங்குல ஃபைன் வேறே போட்டாங்கன்னா? நம்ப காரியத்துல
நாமதான் கவனமாயிருக்கணும். ஊரானுக்கு என்ன வந்தது? என்ன….நான் சொல்றது புரிஞ்சிதா?
-போடு போடென்று போட்டாள் மேகலா.
இப்டியே
ஒவ்வொண்ணையும் பரிஞ்சு பரிஞ்சு இவ நினைச்சிட்டிருந்தான்னா…இவளுக்கு B.P. ஏறாம என்ன செய்யும்? ஒருவகையில் எனக்கு அவள்
மீது பரிதாபமாகவே இருந்தது. இப்படி ஒரு அசட்டு மனுஷனக் கல்யாணம் பண்ணிட்டு நான் படுற
பாடு?-ன்னு நினைத்துக் கொண்டிருப்பாளோ? நாம படிக்கிறது, எழுதுறதெல்லாம் ஒரு பொருட்டே
இல்ல போல்ருக்கு? அது மேல துளி மரியாதையில்லயே?
யார்
சிந்தனையை யார்தான் தடுக்க முடியும்? தனக்குத்தானே உண்டாக்கிக் கொள்வதுதானே மனித மனம்.
அதை யாரால்தான் தடுக்க முடியும்? மனப் போராட்டம் என்பது அவரவரே ஏற்படுத்திக் கொண்டு
அலைபாயும் செயல். தங்களின் ஈகோவைத் தானே பாராட்டிக் கொள்வதும், சீராட்டிக் கொள்வதுமாக.
என்
மனது இப்போதே திட்டமிட ஆரம்பித்திருந்தது. அந்த விழாவில் எப்படியும் ஸ்டால்கள் போடுவார்கள்.
அப்போது அதுநாள்வரை வாங்காத புத்தகங்களையெல்லாம் வாங்கி விட வேண்டும்…வாங்கிவிடலாம்தான்.
அதை இவளுக்குத் தெரியாமல் வீடு கொண்டுவந்து
சேர்ப்பது எப்படி? இப்போதே யோசனை நீண்டது சுகவனத்திற்கு.
வீட்டுக்குத்
தெரிந்து வாங்கியதைவிட, தெரியாமல் வாங்கிச் சேர்த்ததுதான் அதிகம். இருங்க…இருங்க…கீழேயே இருங்க…நான்
வர்றேன்…என்று.போனில் சொல்லிவிட்டு, இரண்டாம் மாடியிலிருந்து தரை தளத்திற்கு ஓடுவார்.
அருகிலுள்ள ஒரு புத்தக விற்பனை நிறுவனம் இவருக்கு எக்காலத்திலும் பத்து சதவிகிதக் கழிவில்
புத்தகங்களைத் தந்து கொண்டிருந்தது. அதன் மூலமாகத்தான விரும்பும் புத்தகங்களை வாங்கிக்
கொண்டிருந்தார். சலுகைகளையும் கொஞ்சம் நீட்டிப் பார்த்தார். பலித்தது.
பக்கத்துலதானங்க
இருக்கீங்க…ஒரு ஆள டூ வீலர்ல அனுப்பினீங்கன்னா, கொண்டு வந்து கொடுத்திட்டுப் போறான்…உங்களுக்கும்
கூரியர் சார்ஜ் மிச்சம்தானே…? பலித்தது பஞ்சாங்கம்…! ஆன் லைனில் தவறாமல் பணம் அனுப்பி, விடாமல் புத்தகங்கள்
வாங்கும் ரெகுலர் கஸ்டமருக்கு இதுகூடச் செய்யவில்லையென்றால் எப்படி? ஓ.கே.சார்…ட்ரை
பண்றேன் என்றார்கள். செய்தே விட்டார்கள். எழுபது, எண்பது. நூறு,நூற்றிருபது என்று பைசா
மிச்சம்தானே? மனுஷன்…வகையா ஐடியாக் கொடுக்கிறான்யா…?
தரை
தளம் போய் பையோடு வாங்கி வரும் புத்தகக் கட்டை முதுகுக்குப் பின்னால் மறைத்து விடுவிடுவென்று
நுழைந்து தன் அறைக்குச் சென்றுவிடுவார் சுகவனம். அந்தச் சமயம் பார்த்து மேகலா அடுப்படியில்
இருந்தால் (பெரும்பாலும் அங்கேதானே நிற்கிறாள்) பிரச்னையே இல்லை.
யாரு
வந்தாங்க…? என்று கேட்டாளானால்….ஒரு நண்பர்…என்று பல சமயங்களில் பொய் சொல்லியிருக்கிறார்.
இல்லையெனில் ஏதாச்சும் தபால் வந்திருக்கான்னு பார்க்கப் போனேன் என்பார். புத்தகமா? என்றும் கேட்டு விடுவதுண்டு. சந்தேகம்
இல்லாமல் இருக்குமா? புத்தகத்தோடு சேர்த்து என்னை நினைத்துப் பார்ப்பதே அவள் வேலையாயிற்றே?
என் பிம்பம் அவளிடம் அப்படித்தான் பதிந்திருந்தது.
அவுங்களா
அனுப்புறாங்க… நான் என்ன பண்றது? என்று சற்று குரலை உயர்த்தி விடுவார். விமர்சனம் எழுதச்
சொல்றாங்க..மாட்டேன்னு சொல்ல முடியுமா? ஓசில கிடைக்கிற புத்தகத்தை வேணாம்னு சொல்லச்
சொல்றியா? காசு போட்டு வாங்கினா நூத்தம்பது, இருநூறு, முன்னூறுன்னு எத்தனைக்குக் கொடுக்கிறது?
வாங்கி மாளுமா இல்ல கொடுத்துதான் ஆகுமா? படிச்சிப்புட்டு அதப் பத்தி எழுதுங்கன்னு வற்புறுத்தினா
மறுக்க முடிலயே? என் விமர்சனம் அவுங்களுக்குப் பிடிச்சிருக்கு….அதனால
அவுங்க நாலு பேருக்குச் சொல்றாங்க…அவுங்களும் என் புத்தகத்துக்கும் விமர்சனம் எழுதுங்க
சார்னுட்டு வலிய அனுப்புறாங்க….எனக்கு டைம் இல்லீங்க…என்னால அதெல்லாம் முடியாதுன்னு
எப்படி முறிச்சு சொல்றது? அது முடியாது. மத்தவங்க
மனசு சங்கடப்படுற மாதிரிப் பேச என்னால ஆகாது, என் விமர்சனத்தையே நான் அப்படிக் கறாரா
வச்சிக்கிறதில்லையே? சாஃப்ட்டாதானே எழுதுவேன்.
வாழப் பழத்துல ஊசி இறக்குற மாதிரிக் கூடக் குத்த மாட்டனே? அவனவன் படிக்கிறான். ஒரு
ஆர்வத்துல எழுதுறான்…சொந்த முயற்சில புத்தகம் கொண்டு வர்றான். செலவழிச்சு செய்றான்.
இல்லன்னா எதுவோ ஒரு பதிப்பகம் இலவசமாப் போடுது…நமக்கென்ன
வந்தது. நம்பளை மதிச்சுக் கேட்டாங்களா…ரெண்டு வார்த்தை புகழ்ந்து எழுதினமா…அதுல அவுங்களுக்கு
ஒரு சந்தோஷம், திருப்தி..…நமக்கும் ஒரு வரவு….வரவுன்னா பைசா ஒண்ணும் வரப்போறதில்ல…புத்தகம்
ஃப்ரீயாக் கிடைக்குதே…அதச் சொல்றேன்…அப்படிச் சேர்த்ததுதாண்டீ என் ரூம்ல இருக்கிற முக்கால்
வாசிப் புத்தகம்….காசு போட்டு வாங்கினா உனக்குத் தெரியாம நடந்திடுமா? துணிந்து அடிப்பார்
சுகவனம்.
ஒரு துரும்பையாச்சும் இந்த வீட்டுக்குள்ள நீ அறியாமக்
கொண்டாந்திட முடியுமா? உன்கிட்டேதானே ராஜ்ஜியமே இருக்கு? -நான் சொன்ன நீண்ட யதார்த்த நடைமுறை நியாயங்களில்
மயங்கிப்போய் திருப்திப்பட்டு விட்டது அவள்
வெள்ளை மனம்.
உண்மையில்
பார்க்கப் போனால் பத்துக்கு மூணு நாலுதான் இலவசமாக வந்தவை. மற்றவையெல்லாம் அடியேன்
காசு போட்டு வாங்கியதுதான். எனக்கே பல சமயங்களில் இம்புட்டுக் காசு செலவிக்கிறோமே…இது
சரியா…? என்று வதக் வதக்கென்றுதான் இருக்கும். அவளிடம் ஓசி…ஓசியென்று ஓங்கி ஓங்கிச் சொல்லி நம்ப
வைத்து விடுவேன். வாங்கும் வேகத்திற்குப் படிக்கிறேனா என்றால் இல்லை. “என்னிடம் உள்ள
புத்தகங்கள்“ என்று பட்டியல் போடவா? படிக்கவல்லவா வேண்டும்? என்னிடம் இருக்கும் புத்தகங்களுக்கு
விடிய விடிய…குறைந்தது தினசரி ராத்திரி ரெண்டு மணி வரை படித்தால்தான் கடைசி மூச்சுக்குள்
எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியும். அவ்வளவு சேர்ந்து போய் விட்டதுதான். அது
சேர்ந்து விட்டது. நான் சோர்ந்து போனேனே? ஆனாலும் புதிய வரவுகளை நிறுத்த முடியவில்லை
என்பதுதான் பைத்தியம் பிடித்த கதை.
ஓ…இவரா…போனவாரமே
போன்ல சொல்லியிருந்தாரு…புக் அனுப்பறேன் சார்…கொஞ்சம் உங்க விமர்சனம் வேணும்னு கேட்டிருந்தாரு…ஓகேன்னேன்.
அனுப்பிச்சிருக்கார் போல்ருக்கு…மதிச்சுக் கேட்கிறவங்களுக்கு எப்படி மறுக்க முடியும்?
.என்று சொல்லிக்கொண்டே காலிங் பெல் சத்தம் கேட்டவுடனே…நான் போறேன்…நான் போறேன்…நீ உட்கார்ந்திரு…எதுக்குப்
பதட்டப்படுறே…என்று அவளை அடக்கிவிட்டு நானாகவே ஓடிப் போய் கையெழுத்திட்டு வாங்கிய கூரியர்
தபால்கள்தான் அதிகம்.
என்னா
சார்…புஸ்தகமா வந்திட்டிருக்கு..லைப்ரரி வச்சிருக்கீங்களா? லென்டிங் லைப்ரரியா? – என்ன
மாதிரிப் புஸ்தகங்கள் சார்…? – கூரியர்காரனும், போஸ்ட்மேனும் தவறாமல் கேட்ட கேள்விகள்
இவை. அவர்களிலும் நிறையப் படிப்பவர்கள் இருக்கிறார்களே? ஓரிரு முறை கொடுத்து வாங்கியும்
இருக்கிறேனே? வரும் பார்சல் ஒழுங்கா டெலிவரி ஆனால் சரி…!
நாலைந்து
நூல்களுக்கு விமர்சனம் எழுதத்தான் செய்தேன். இல்லையென்று சொல்லவில்லை. பிறகு ஒரு அலுப்பு
வந்து விட்டது. ஓசி வேலைய எவ்வளவு நாள் தீவிரமாப் பார்க்குறது? இதுதான் எப்பவும் என்
பொழப்பா?படிக்கிறதும் எழுதறதும்? இருக்கும்
நூல்களை முழுவதுமாக என்று படித்துத் தீர்ப்பது? அதில் இவ்வளவு தீவிரம் இல்லையே?
எதுக்கு
இப்படி ஓசிப் புத்தகத்துக்கு அலையுறீங்க? பிராணன விடறீங்க? இதென்ன இராமாயணமா, மகாபாரதமா?
மாஞ்சு மடிஞ்சு படிக்கிறதுக்கு…? காலத்துக்கும் திரும்பத் திரும்பப் படிக்கவும், புதிசு
புதிசாப் புரிஞ்சிக்கவும் உள்ள இதிகாசங்கள் அதுதான். ஒருவாட்டி படிச்சுத் தூக்கி எறியறதுதானே
மத்ததெல்லாம். படிக்காட்டாலும் என்ன நஷ்டம்? இப்போ நீங்க வாங்கித் தொலைச்சிட்டமேன்னு
படிக்கிறீங்களா…இல்ல விதியேன்னு, படிச்சுத் தொலைக்கணுமேன்னு படிக்கிறீங்களா? இதுக்குப் போய் இப்டி உசிரை விடணுமா? நீங்க பண்றது
ஒண்ணும் எனக்குப் பிடிக்கலே…!
விட்டுச்
சொல்லிவிட்டாள் ஒரு நாள். அவள் கருத்தில் அவள் என்றும் ஸ்திரம். நான்தான் தடுமாற்றத்தில்
உள்ளவன். புலிவாலைப் பிடித்தவன் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து இருக்கவும்
பிடிக்காமல், விட்டு ஓடவும் ஏலாமல்…! ஏண்டா
இந்த உலகத்துல புகுந்தோம்?
இந்த
புக் வந்திருக்கே…அந்த புக் வந்திருக்கே என்று தகவல்கள் எனக்கு விடாமல் வர இதென்னடா
பெரிய வம்பாப் போச்சு…? என்று ஆகிவிட்டது எனக்கு. எது வந்தா எனக்கென்னய்யா? என்கிட்டே
எதுக்கு சொல்லித் தொலையுறீங்க? நான் என்ன கேட்டனா? வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க
மாட்டீங்க போலயே? என்று மனதுக்குள் புகைந்து தள்ளினேன். புதிய புத்தகங்களின் வரவு என்னைத்
தொல்லைப்படுத்திக் கொண்டேயிருந்தது. என்னதான் முடிவு?
ஏய்…!
கேட்டியா சேதியை…பரிசுத் தொகையை புக்ஃபேர்ல வச்சே தந்துர்றாங்களாம்…அடுத்தவாரம் 5-ம்
தேதி மாலை 3-4 ன்னு போட்டிருக்காங்க…வாட்ஸப் அனுப்பியிருக்காங்க பார்….- சொல்லிக் கொண்டே
வந்த செய்தியை அவளிடம் காண்பித்தேன்.
நாட்கள்
கடந்துவிட்ட நிலையில், ஏன் மாதங்கள் என்றே சொல்லலாம். நான் அதை மறந்தே போன வேளையில்தான்
அந்தச் செய்தி வந்திருந்தது. ஆம்மா…அத மறந்தே போனமே…!
அப்டியா…சுருக்க
முடிச்சிட்டாங்க போல்ருக்கு….அது அவுங்க இஷ்டம்…நாம ஒண்ணும் சொல்றதுக்கில்லே….என்னிக்காம்…?
-எனக்கேட்டுக்கொண்டே வந்து என் மொபைலை வாங்கிப் பார்த்தாள் மேகலா.
நல்லதாப்
போச்சு….உள்ளூர்லயே காரியம் முடியப் போறது. போய் வாங்கிட்டு வந்திடுங்க…செலவு மிச்சம்..
நீயும்
வர்றியா? -கேட்டேன். ஒரு வார்த்தை என்னைக் கேட்டீங்களா? என்று நாளைக்குக் கேட்டுவிடக்
கூடாதே?
வேண்டாம்…எனக்குக்
கூட்டத்தக் கண்டாலே அலர்ஜி. நா வரலை…இந்தப் பத்தாயிரத்த வாங்குறதுக்குப் படையோட போகணுமா?
அடுத்த தெருவுல இருக்கிற உங்க அக்கா, அத்திம்பேர்னு கூப்பிட்டுடாதீங்க…சிரிக்கப் போறாங்க…ப்ராபகேன்டா
பண்ணாம நீங்க மட்டும் கமுக்கமாப் போயிட்டுவாங்க
போறும்….என்றாள் மேகலா.
அவள்
பதிலில் எனக்கு உடன்பாடில்லைதான். பத்தாயிரத்தைக் கவனமாகப் பிடுங்கி கணக்கில் வரவு
வைத்துக் கொள்வாளாம். ஆனால் சொல்லும்போது மட்டும் இந்தப் பிசாத்துத் துட்டை வாங்க நான்
வேறே வரணுமாக்கும் என்று பிகு பண்ணுவாளாம்? எப்படியிருக்கிறது பாருங்கள்?
என்னைப்
பொறுத்தவரை எழுதுவதும், பரிசு பெறுவதும் என்றும்
மதிப்புடையதுதான். கதைகளை எழுதி முடித்து, திருத்தி வடிவமைத்து, ஒரு திருப்தி
வந்த பிறகு பத்திரிகைக்கு அனுப்பி அது பிரசுரமாகும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதே
ஒரு சவால்தான். அது ஏற்கப்பட்டு பிரசுரமாகி விட்டால் அதுவே எனது முதல் வெற்றி. என்
எழுத்து ஜெயிக்கிறது…!
அப்படியாகப்
பத்துப் பதினைந்து கதைகள் சேர்ந்து அதைப் புத்தகம் போட வேண்டி ஒரு போட்டி அறிவித்த
அமைப்பிற்கு அனுப்பி, ஐவர் கொண்ட குழு அதனை
மீண்டும் பரிசீலித்து, ஓகே… இதை ஏற்கலாம் என்று பரிந்துரைத்ததும், அது புத்தகமாக வந்ததும்
எனது இரண்டாவது வெற்றி. அப்படித்தான் இப்போது பரிசு வாங்கியுள்ள எனது நூல் தேர்வு பெற்றுள்ளது.
புத்தகமான
அந்த நூல், பரிசுப் போட்டி அறிவித்த வேறொரு நிறுவனத்தின் அல்லது பதிப்பகத்தின் தேர்வுக்
குழுவால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, மறுபடியும் அங்கீகரிக்கப்பட்டு, பரிசுக்குரிய
நூலாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுகிறதென்றால் அது எனது மூன்றாவது வெற்றி என்றே நான்
கருதுகிறேன். ஒரு சிறந்த புத்தகத்திற்கான தொடர்ந்த அங்கீகாரம் என்றும் சொல்லலாம்தானே?
அதன் மூலம் ஒரு எழுத்தாளன் அடையாளப்படுத்தப்படுவது நல்ல விஷயம்தானே?
பத்தாயிரம்
என்பது ஒன்றும் குறைவான தொகையல்லவே? ஒரு லட்சத்தை ஒருவருக்கே கொடுப்பதற்குப் பதிலாக,
பத்துப் பத்தாகப் பத்துப் பேருக்குப் பிரித்துக் கொடுக்கும்போது பரிசு கிடைத்தது என்று
பத்துப் பேர் மகிழ்ச்சியடைந்து ஊக்கம் பெறுகிறார்களே? அவர்கள் இன்னும் நன்றாக எழுத
வேண்டும், மேலும் பரி
சுகளைப் பெற வேண்டும், நல்ல ஆக்கங்களை எதிர்காலத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஊக்கம்
பெறுவார்களே...? அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவரை மதிப்புறு நிலையில் நோக்குவார்களே?
(மேகலா அப்படியில்லையே என்பது எனக்கு வருத்தம்தான்)
இதையெல்லாம்
விலாவாரியாகச் சொல்லப் புகுந்தால் நிச்சயம் மேகலா ஏற்றுக் கொள்ளப் போவதில்லைதான். அவளுக்கு
நான் வாங்கிக் குவித்திருக்கும் அறையடங்காத புத்தகங்கள்மேல் அப்படியொரு வெறுப்பு. வீட்டில்
குறுக்கும் நெடுக்கும் போகையில் கண்ணில் படும்
அவைதான் அவள் மனதை விடாது உறுத்திக் கொண்டேயிருக்கிறது என்பதுதான் சத்தியமான
நிஜம்.
வாசிப்பு
ரசனை என்பது வேறு. அது எல்லோருக்குமா அமைந்து விடுகிறது. அந்த உலகில் பயணிப்பவர்கள்
புதிது புதிதாக அல்லது திரும்பத் திரும்ப வெவ்வேறு நூல்களையும், ஒரே நூலையும்கூட படித்துப்
படித்து உள்வாங்கிக் கொண்டு தங்களைப் பதப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கான
பக்குவம் என்பதே தனி. அந்த உலகமே வேறு. அவர்கள் மிகப் பெரிய விவேகிகள்.
அந்தப்
பழக்கம் அவளுக்கு இல்லாதது என்பது ஒன்றும்
பெரிய குற்றமில்லைதான் எனினும், சராசரி மக்கள்தான் இந்த உலகில் அதிகம் என்பதும் நாம்
அறிந்ததே. வாழ்க்கை அனுபவங்கள் கைகூடி பக்குவப்பட்ட நபர்களாக குடும்பத்தில் ஒரு பாந்தமான
அங்கமாக வளைய வருகிறார்களே அதுதான் மிக மிக
முக்கியம்.
அந்தவகையில்
மேகலாவை ஒன்றும் நான் குறையுள்ளவளாக நோக்கவில்லைதான். ஆனாலும் கொஞ்சத்துக்குக் கொஞ்சமேனும்
தன் கணவன் ஒரு படைப்பாளி என்கிற மதிப்பான-என்பது கூட வேண்டாம்…நல்லெண்ணம் இருந்தால்
கூடப் போதும்தான். அதுகூட அவளிடம் இல்லையென்பதுதான் என் துரதிருஷ்டம். ஒருவேளை மனதின்
அடியாழத்தில் இருக்குமோ என்னவோ?
இந்தா…நீ
கேட்ட காசோலை. சரியா இருக்கா பார்த்துக்கோ…விழாவுக்குப் போயிட்டு வந்தாச்சு. செக்கை
வாங்கிட்டு வந்தாச்சு…உங்கிட்டக் ஒப்படைச்சாச்சு…முதல்ல பிடி இதை….என்றவாறே நீட்டினேன்
அவளிடம்.
ஓ.கே…ரொம்ப
சந்தோஷம்…என்று சற்றே செயற்கையாகக் கூறியவாறே அதை பவ்யமாக வாங்கிப் பார்த்தவள் முகம் மலர உடனடியாக ஒன்றைக் கேட்டாள்.
அது
சரி…“பெண்ணியம்“ -ங்கிற பத்திரிகைல உங்க கதை ஒண்ணு ஆறுதல் பரிசு வாங்கித்தே…அந்தக்
கதை வந்திடுச்சா? அதுக்கான சன்மானம் ரெண்டாயிரம்
ரூபாய் எப்பக் கிடைக்கும்?
என்னோடு
சேர்ந்து நீங்களும் மேகலாவையே கூர்ந்து நோக்குகிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது!!!
-----------------------------------