29 ஏப்ரல் 2024

 

சிறுகதை பிரசுரம் - சொல்வனம் இணைய இதழ் 28.04.2024. www.soolvanam.com

“எதிர் (பாரா) வினை“   உஷாதீபன்ப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்நோக்கித்தான் காத்திருந்தார் ஞானமூர்த்தி. அதற்கான பதிலையும் மனதில் தயார் படுத்தி வைத்திருந்தார். எப்படிச் சொன்னால் இவர்களுக்கு சரி வரும் என்பது அவர் மனதில் தீர்மானப் பட்டிருந்தது. எந்த லெவலுக்கு அவர்களின் கேள்வி இருக்கும் என்பதும் அறிவார்தான்.  மொத்தத் துறையின் ஞானமே அந்த அளவுதான், ஓரு சிலரைத் தவிர என்பதில் அவருக்கு அதீத நம்பிக்கையிருந்தது. யாரும் ஸ்ட்ரெயின் பண்ணி ஆழ உள் நுழைந்து வேலை பார்க்கும் திறனில்லாதவர்கள். மூளைச் சோம்பல் நிறைந்தவர்கள். சுருக்கமாய்க் சொன்னால் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள்.

            நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க…நான் பார்த்துக்கிறேன்…என்று அலுவலருக்குச் சொல்லியிருந்தார். அப்படிச் சொன்னது நடந்ததை  மறைப்பதற்காக அல்ல. அதை அதன் நியாயப்படி எதிர்நோக்குவதற்காக. செய்து முடிப்பதற்காக. அவரை அந்த வார்த்தை எவ்வளவு நிம்மதிப்படுத்தியிருக்கும் என்று இவருக்குத் தெரியும். தன் மீதான நம்பிக்கை. அதற்கு பங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் தன்னுடைய தன்மை.

  பாவம்…அப்பாவி….பயந்து பயந்து அதிகாரியாயிருப்பவர். தப்பு செய்யத் தெரியாது. எதெல்லாம் சரி என்பதிலும் தெளிவில்லை. தன் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தன்னை ஏமாற்ற மாட்டார்கள் என்கிற அதீத நல்லெண்ணம்.  நல்ல ஸ்டாஃப்…நிம்மதியான ஆபீஸ்…!

            அறையில் தன் இருக்கைக்கு எதிரே மாலை மரியாதையோடு தொங்கும் சாமி படங்கள். குங்குமம், சந்தனம் பதித்து, பத்தி ஏற்றி வைத்து  நெற்றியிலும் துலங்க பய பக்தியோடு அமர்ந்திருக்கும் காட்சி.  பெருமாள்சாமி, பி.இ.,(மெக்) ஏஎம்ஐஇ., எம்.ஐ.எஸ்.ஏ.இ., !  நேம் போர்டு பளபளத்தது.

            நீங்க கொஞ்சம் இங்கயே இருங்க…!. ஏதேனும் ஒரு சந்தேகமோ, பயமோ அதில். முகத்தில் தீராத சோகம். இது சரியா? என்று தொக்கி நிற்கும் கேள்வி. படிப்பிற்கும் பயத்திற்கும் ஏது சம்பந்தம்? எது பிழைப்போ…எது சோறு போடுகிறதோ…அதை நன்றாகக் கற்க வேண்டாமா? மேலோட்டமாகவே ஓட்டிக் கழித்துவிடலாம் என்று காலத்துக்கும் பெஞ்சைத் தேய்க்க முடியுமா?

            ன்ன இப்டித் தொடர்ந்து அப்ளிகேஷன் கொடுத்திட்டே இருக்காங்க…? அசோசியேஷன் லெட்டர் பேடுல வேறே எழுதிக் கோரிக்கையா வைக்கிறாங்க…? இன்டிவீஜூவல் அப்ளிகேஷனுக்கு ஆபீஸ்ல நடவடிக்கை எடுப்பாங்கன்னு தெரியாதா? இந்த ஒர்க் ஷாப் ஸ்டாஃப்தானே அவுங்க…அவுங்களுக்குக் குறை உண்டுன்னா தன் பேரைப் போட்டு எழுதிக் கொடுத்தா ஆச்சு….எதுக்கு இந்த சங்கத்துப் பெயர்லெல்லாம் விண்ணப்பம்?  பயமுறுத்துறாங்களா? நெருக்கடி கொடுக்கிறாங்களா? இங்க எப்பயுமே இப்டித்தானா? – வந்து ஒரு ஆண்டு கூட இன்னும் முடியவில்லை. அந்தச் சூழல் இன்னும் அவருக்குப் பொருந்தி வரவில்லை. முழு ஈடுபாட்டோடு இயங்க விடவில்லை. எந்த நேரம் எவன் என்ன பிரச்னை பண்ணுவானோ என்கிற நடுக்கத்துடன் கூடிய பயம்.

            பயப்படுகிறாரோ இல்லையோ…பயமுறுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டிருந்தார். அவரவர் கோரிக்கை விண்ணப்பமும், சங்க ரீதியிலான கேட்பும் சேர்ந்து நெருக்கிப் பிடிக்கிறது. இவர்ட்டயாவது வாங்கிப்புடணும் எப்படியாவது! எவ்வளவு செய்தாலும் தீராத குறைகள். வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைக்காத மனநிலை.

            ஒவ்வொரு மூணு மாசத்துக்கும் இப்டி எதையாச்சும் கொடுத்திட்டேதான் சார் இருப்பாங்க…விதி முறைப்படி நாம அவுங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைத்தானே செய்ய முடியும்…? அவுங்க அப்ளிகேஷனை நிறுத்தி வச்சாத்தானே தப்பு? அதைத்தான் ஃபார்வேர்டு பண்ணிடுறமே…சென்னைல இருக்கிற துறைத் தலைமைதானே இதையெல்லாம் பரிசீலிக்கணும்? லோக்கல்லயே இன்னும் ரெண்டு ஆபீஸ் தாண்டணுமே…! பதில் வரட்டும்னு சொல்லுவோம்….இங்கேயிருந்து நகண்டிருச்சுன்னு அவுங்களுக்கு சொல்லிட்டாப் போச்சு…! நாம இருத்தி வச்சாத்தானே சங்கடம்?

            அது சொல்லலாம் ஞானம்…ஆனாலும் அவுங்க அதை நம்பத் தயாரில்லை. நாமளே செய்ய வேண்டியதை, அநாவசியமா அங்க தள்ளி விடுறோம்னு நினைக்கிறாங்க…! அது மட்டுமில்லே…நீங்க செய்றேன்னு வேறே சொன்னீங்களாம்…! அதையும் ஞாபகப்படுத்துறாங்க….! – இப்படிச் சொல்லிவிட்டு அவரையே கூர்ந்து பார்த்தார் பெருமாள்சாமி.

என்னைக் கேட்காமல் ஏன் இப்படியெல்லாம் வாக்குறுதி கொடுக்கிறீர்கள்? அவர்கள் கேட்பதெல்லாம் இந்த அலுவலக அளவில் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா? -இந்தக் கேள்விகளெல்லாம் அவரது பார்வையில் தொக்கி நிற்பதாக ஞானமூர்த்தி உணர்ந்தார். அதிகார இருக்கையை எதிர்நோக்கி நிற்கும் நானும் ஒரு பணியாளன். அப்படியிருக்கையில் நான் எப்படி வாக்குறுதி கொடுக்க முடியும்? மொட்டையாக, மேம்போக்காக அவர்கள் சொல்வதை இவரும் அப்படியே நம்பினால்?

அப்போ நீங்க என்னை நம்பலயா சார்…? – எதிர்க்கேள்வி போட்டார் ஞானமூர்த்தி. அப்போதுதான் அவரை சலனப்படுத்த முடியும்.

அப்டிச் சொல்லலை…எதுக்கு அநாவசியமா அவுங்ககிட்டே பேச்சுக் கொடுத்திட்டுன்னு சொல்றேன்….வாயக் கிளறி எதையாச்சும் வாங்கிடுவாங்கல்ல….? – தள்ளியே நில்லுங்க என்று சொல்லாமல் சொல்கிறார்.

விண்ணப்பங்களை ரிட்டர்ன் பண்ண முடியாது சார்….கூட்டமா வந்து முற்றுகையிடுவாங்க …வேலை செய்ய விடாமத் தடுப்பாங்க….பிரச்னையாகும்…அதனாலதான் இங்கயிருந்து தள்ளிவிட்றது. இதுக்கு முன்னாடியும் இதான் நடைமுறை. லோக்கல்லயே மத்த ரெண்டு பெரிய ஆபீசுக்கும் இது தெரியும். இவங்களுக்கு வேறே வேலையில்ல…ன்னு அவுங்களும் கொஞ்ச நாள் வச்சிருந்து திருப்பிடுவாங்க….இதான் நடந்திட்டிருக்கு….இவங்க பெரிய ஆபீஸ் வளாகத்துலயும் போய் நின்னு கோஷம் போடுவாங்க…முன்னறிவிப்பே இருக்காது….கோஷம் போட்டுட்டு அவுங்களே கலைஞ்சு போயிடுவாங்கன்னு அங்கயும் கண்டுக்காம இருந்திடுவாங்க….!

ஒரு புன்னகை அவரிடம் மலர்ந்தாற்போல் இருந்தது. ம்ம்ம்…தலவலிதான்….முடியாதுன்னு தெரிஞ்சும் இப்படி டார்ச்சர் கொடுக்கிறாங்களே?  – முனகிக் கொண்டார்.

உங்களுக்கு நியாயமாக் கிடைக்க வேண்டியது உரிய காலத்துல கண்டிப்பாக் கிடைக்கும் அதுக்கு நான் பொறுப்பு…அதை ஆபீசரிடம் விளக்கி அல்லது வாதாடி வாங்கிக் கொடுக்கிறேன். அதுல தாமதம் இருந்தாச் சொல்லுங்க….மற்றப்படி இந்த அலுவலக அளவுல செய்ய முடியாததை ரெக்கமன்ட் பண்ணி வேணும்னா தலைமையகத்துக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பாம நிறுத்தி வச்சாச் சொல்லுங்க…ஏன் நிறுத்தினீங்கன்னு? – இதான் சார் நான் அவுங்ககிட்டச் சொன்னது. உங்க சார்பா நான் இதச் சொன்னதுல என்ன சார் தப்பு? அதுக்கு எனக்கு உரிமையில்லையா சார்?

எதிர்த்தரப்பில் அமைதி. உரிமை எடுத்துக் கொள்வது பிடிக்கவில்லையோ? தன்னிடம் பேசியதையே பிடிப்பாக வைத்துக் கொண்டு அவர்களிடம் போய் என்ன வாக்குறுதி கொடுப்பது? அப்படியென்ன தன்னதிகாரம்? – என்று நினைக்கிறாரோ?

கண்ண மூடிட்டு அனுப்பிடுவீங்களா? நேர்ல அழைச்சு விளக்கிச் சொல்ல வேண்டிதானே? ம்பாங்க…அதுதான் பெரிய ஆபீஸ் வழக்கம். சொல்லிட்டு கொஞ்ச நாள்ல அவுங்களும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க….உங்க ஆபீச உங்க கன்ட்ரோல்ல வச்சிக்க முடியாதான்னும் கேட்பாங்க…வெறும் ஆபீஸ் ஸ்டாஃப்வோட மட்டும் ஒரு அலுவலகம் இயங்குறதுக்கும் ஐம்பது அறுபது தொழிலாளிங்களோட ஃபங்ஷன் பண்றதுக்கும் உள்ள வித்தியாசத்த உணர மாட்டாங்க…பிராக்டிகல் டிஃபிகல்டீஸ் தெரிஞ்சிருந்தாலும் காட்டிக்க மாட்டாங்க…இது பெரியண்ணன் நடைமுறை….நமக்கும் இதெல்லாம் தெரியும்தானே?

இவ்வளவையுமே ஏன் இப்பவே வலியச் சொல்லணும்…? அதது வர்ற போது பார்த்துக்கலாமே…? –மேலிடத்துல கேட்டா வேறே வழியில்ல…அனுப்பித்தான் ஆகணும்னுவோம்….நாம என்ன பண்றது?

ஏன்யா தலவலிய உண்டாக்குற? – என்று கேட்கிறாறோ…? இவரே இப்படிச் சொன்னால்? அங்கு போனால் திருகுவலி ஆரம்பிக்கலாம் என்கிற கவலையோ என்னவோ?

சார்…அப்ப ஒண்ணு செய்ங்க…ஒரு டாய்லெட்டும், பாத்ரூமும் முன் பக்கத்துல வலது பக்கம் ஓரமாக் கட்டுறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க…ஆபீஸ் ஸ்டாஃபும், நீங்களும் உபயோகப்படுத்திக்கிறதுக்கு….அதுக்குன்னு பின்னாடி தொலைவாப் போக வேண்டியிருக்காது…அவுங்களையும் பார்க்க வேண்டி வராது. கேள்வி கேட்க வேண்டி வராது….இப்டியே வந்து ஆபீஸ்ல உட்கார்ந்து வேலைகளைப் பார்த்திட்டு, இப்டியே வெளியே போயிடலாம். அவுங்க மூஞ்சியப் பார்த்தாத்தானே பிரச்னை?

என்ன சொல்றீங்க ஞானமூர்த்தி? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இல்லன்னா இதுக்குன்னு வந்து இங்கே கூட்டம் போடுறதுக்கு அவுங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

சம்பந்தம் இல்லாமயா...சார்? நீங்க அதிகாரி….பின்னாடி பாத்ரூம் பக்கம் போகைல ஒதுங்கி மறைஞ்சு நின்னுக்குவாங்க…கண்ணுல பட மாட்டாங்க…அது ஒரு மரியாதை….ஆனா மானேஜரான நான் அப்டியா? ஆபீஸ் ஸ்டாஃப்பும் போகைல, வர்றைல…பிடிச்சிக்கிறாங்களே…அதுலயும் கிளார்க்குகள ஒண்ணும் கண்டுக்கிறதில்ல…என்னத்தான் சுத்தி வளைச்சிடுறாங்க…! கேள்வி மேல கேள்வியாக் கேட்குறாங்க…அந்த நேரம் எவ்வளவு பொறுமை தேவைப்படும்னு நீங்களே யோசியுங்க! எத்தனை நிதானத்தை நான் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் தெரியுமா? இல்லைன்னா அடி விழும் சார்…அடி விழும்….நிலைமை பெரிய சிக்கலாயிடும்….

அதிகாரியின் பார்வை கூர்மையாய்த் தன் மீது படிந்திருப்பதை உணர்ந்தார் ஞானமூர்த்தி. தொடர்ந்தார்…அடி விழுமா? என்ன சொல்கிறார் இவர்? அவ்வளவு மோசமானவர்களா தொழிலாளிகள்? அவர்களின் தேவைகளைக் கேட்பதில் என்ன தவறிருக்க முடியும்? நாம அந்த இடத்துல இருந்தாலும் அவுங்கள மாதிரித்தானே இருப்போம்?

சார்..டீ சாப்பிடுறீங்களா?ன்னுதான் ஆரம்பிப்பாங்க…நீங்க பதில் சொல்றதுக்குள்ளயும் , ஏய்…சாருக்கு ஒரு டீ சொல்லுப்பா…ன்னுடுவாங்க…வேண்டாம்னு நீங்க மறுக்கவும் முடியாது.  இப்டி உட்காருங்க சார்…எங்க நழுவப் பார்க்குறீங்கன்னு இழுத்து உட்கார்த்திடுவாங்க… ரொம்பப் பட்டவர்த்தனமாத்தான் பேச்சு இருக்கும். நகர்ந்தேன்னா அடி விழும்ங்கிறத மறைபொருளாப் புரிய வைப்பாங்க…!

அவுங்க கொடுக்கிற டீயையும் குடிச்சிக்கணும்…கேட்கிற கேள்விகளுக்கும் பொறுமையா பதில் சொல்லியாகணும். அந்த பதில் அவுங்களுக்கு சாதகமா இல்லாட்டாலும் பாதகமா இருக்கிறதாத் தெரியக் கூடாது. அந்த மாதிரி ஒரு பதிலை, அந்த நேரம் சட்டுன்னு சொல்லத் தெரியணும்….அதுக்கு நிரம்ப நிதானமும், பொறுமையும் புத்திசாலித்தனமும் வேணும்….மலர்ந்த முகம்ங்கிறது படு முக்கியம்…! நட்பு ரீதியாத்தான் பேச முடியும். முறைச்சிக்கிற ஜோலியே ஆகாது….இதுக்கெல்லாம் ஒரு பெரிய தந்திரம் தேவை. அத நாம நம்ம புத்தில ஏத்திக்கணும்…

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவர் சிவனே என்று பார்த்துக் கொண்டிருப்பதாய் இவருக்குத் தோன்றியது. ஆனாலும் இருக்கும் நடைமுறைச் சிரமங்களைச் சொன்னால்தான் புரியும் என்று தொடர்ந்தார் ஞானமூர்த்தி. அதிகாரி பெருமாள்சாமி  கோப்பில் மூழ்கியிருப்பதைக் கண்ணுற்றார்.

ஆமா…உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன். எல்லாரும் சொல்றாங்களே…நீங்க டிசிப்பிளினரி கேஸ்கள்ல பிரில்லியன்டாமே…! கரைச்சுக் குடிச்சவராமே…! அப்டியா? -சற்றே தன்னைக் குஷிப்படுத்திக் கொண்டதுபோல் அவர் கேட்டது வித்தியாசமாய் இருந்தது ஞானமூர்த்திக்கு.

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். இருந்தாலும் தன்னடக்கத்தோடு பதில் சொன்னார் ஜாக்கிரதையோடு.

அப்டித்தான் சார் சொல்லிப்பாங்க…அதெல்லாம் ஒண்ணுமில்லே….நானும் எல்லாரும் மாதிரிதான்….

அதான் உங்களை இங்க போட்டாங்களாமே…! நல்லா டீல் பண்ணுவீங்கன்னு….அது சம்பந்தமா இந்த ஆபீசுக்கு மாறுதலில் வந்ததும் நான் என் பொறுப்பிலே வாங்கி வச்ச ஃபைல்ஸெல்லாம் இதோ இந்த டிராயர்லதான் இருக்கு….எப்ப வேணாலும் நீங்க எடுத்துப் பார்க்கலாம். இந்த ஃபைல்ஸ் சம்பந்தமான விஷயங்கள் நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமே ரகசியம்…புரிஞ்சிதா? யார் யார் பேர்ல என்னென்ன கேசிருக்குன்னு ஒரு ரவுன்ட் பார்த்திட்டேன்…உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்….இது நம்ம கைவசம் இருந்தாத்தான் நமக்குப் பாதுகாப்பு. இது எதையும் சீக்கிரம் முடிக்கக் கூடாது. நீட்டிக்கணும்…அதான் சாமர்த்தியம்….ஓகே.யா? அவங்க நம்மைத் தொல்லைப் படுத்துறது இதன் மூலம் கொஞ்சமாவது குறையும்ங்கிறது என் அபிப்பிராயம்.

 அப்படிப் பேசுவார் என்று ஞானமூர்த்தி கொஞ்சங் கூட எதிர்பார்க்கவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று நினைத்துக் கொண்டார். பயந்தவராத் தெரிஞ்சாலும் ஆளு வினயம்தான்…! இதுக்குச் செலவழிக்கிற நேரத்தை அவுங்களுக்கு நல்லது செய்றது எப்படின்னு யோசிக்கலாமே…! நாலுல ரெண்டு செஞ்சாலும் கொண்டாடுவாங்களே…! அந்த எண்ணம் ஏன் மேலிடங்களுக்கு வரமாட்டேங்கது? எய்தவங்க மேலே…நாமதான் அம்பு…! தைக்காத அம்பு…!

 ரெண்டு நாளைக்கொருமுறை அந்தப் பணியாளர்களை எதிர்நோக்கும் கஷ்டங்களை அலுவலருக்கு சுருக்கமாக விவரித்தாலும் அதன் முழுக் காட்சி அவர் கண் முன்னே அப்பொழுதே  விரிந்து அவரைக் கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்தது.

ங்களுக்காகத்தான் பழைய ஸ்டாக் ஃபைலையெல்லாம் எடுத்து நான் விடாது படிச்சிட்டேயிருக்கேன்…உங்க போஸ்டெல்லாம் ஒரே சமயத்துல சாங்ஷன் பண்ணினதுல்லே…அது தெரியுமா உங்களுக்கு…? படிப்படியா தேவை ஏற்பட ஏற்பட உண்டானது. மொத்த மாநிலத்துக்குமில்லே. எங்கெங்கே தேவையிருக்கோ, அதுக்கேத்தாப்ல…உருவாகியிருக்கு.  அது போல ஒவ்வொரு போஸ்டின் எண்ணிக்கையும் அப்பப்போ கூடியிருக்கு…குறைஞ்சிருக்கு….கூடின போது கொண்டாடின நீங்க…குறைஞ்ச போது ஏன் குரல் கொடுக்கலை? ஏன் அதை நிதானமா முன் எடுத்து வைக்கல…எடுத்த எடுப்புல ஸ்டிரைக்…போராட்டம்னு உட்கார்ந்திருக்கீங்க…இந்த ஒரு ஒர்க் ஷாப்புல மட்டும் ஸ்டிரைக் பண்ணினாப் போதுமா? தமிழ்நாடு பூராவும் எத்தனை ஒர்க் ஷாப் இருக்கு நம்ம துறைல… மொத்தமும் போராட வேண்டாமா? எலலாரும் சேர்ந்து கோரிக்கை வைக்க வேண்டாமா? அப்பத்தானே நீங்க கேட்குற பணியாளர் குறைப்புங்கிறதை நிப்பாட்ட முடியும்? இங்க வெவ்வேறே டெக்னிகல் போஸ்ட்ல இருக்கிற முப்பது நாற்பது பேர் மட்டும் சேர்ந்து  வாசல்ல மறிச்சு உட்கார்ந்திருக்கிறீங்க…ஊருக்கு வெளில முப்பது கி.மீ. தள்ளி அத்துவானமா இருக்கிற இந்தக் காட்டுல  நீங்க பண்ற ஸ்டிரைக்  எவனுக்குத் தெரியும்? யார் காதுக்குப் போகும்? இந்த ஆபீஸ் மூலமா செய்தி போனாத்தான் ஆச்சு. இல்லன்னா காத்தோட காத்தாப் பறந்து மறைஞ்சிடும்…

போதாக்குறைக்கு சி.எம். இந்தப் பக்கமா கார்ல போன போது மறிச்சு…உங்க கோரிக்கையை வேறு எழுதிக்  கொடுத்திருக்கீங்க…சி.எம்.கிட்டயே நேரடியாக் கொடுத்திட்டோம்னு ஆபீசை பயமுறுத்துறீங்க…இத மாதிரி எத்தனாயிரம் விண்ணப்பங்களை அவுங்க வாங்கியிருப்பாங்க…? உங்க சிறு கும்பலக் கண்டு நிறுத்தி உங்க கோரிக்கைகளை வாங்கிட்டுப் போனது அவுங்க  பெருந்தன்மை…அரசியல். வழி மறிச்சுக் கொடுத்ததே வெற்றின்னா என்ன அர்த்தம்?

கிரேடு-2வுல இருக்கிறவங்கள கிரேடு-1ஆ மாத்தணும்ங்கிறீங்க…டேரக்ட் அப்பாய்ன்மென்ட்டைத்தான் கிரேட் 1 க்குக் கொண்டு போக முடியும். ப்ரமோஷன் கொடுக்க முடியும். அப்படித்தான் ஆர்டர் இருக்கு. கீழ்நிலைலருந்து படிப்படியா வந்தவுங்க…கிரேட்-2 வரைக்கும்தான் வர முடியும். வேறே சில போஸ்ட்களுக்கு இந்த மாதிரி விதி இல்லைன்னு சுட்டிக் காண்பிக்கிறீங்க…அது போல உங்களுக்கும் வேணும்னா அதுக்கு ஆணை வேணும். மேலிடத்துக்குத்தான் விண்ணப்பிக்கணும்…இங்க செய்ய முடியாது. உங்க விண்ணப்பங்களை ஒருங்கிணைச்சு…பரிந்துரை வேணும்னா செய்யலாம். அதுக்கு நான் கியாரன்ட்டி. அதை அனுப்ப முடியாதுன்னு ஆபீசர் சொன்னா, எடுத்துச் சொல்லி நான் ஒப்புதல் வாங்கித் தர்றேன்….அதுதான் என்னால செய்ய முடியும்….

என்னா சார்…இப்டி பல்டி அடிக்கிறீங்க…? உங்களுக்கு வேணும்ங்கிறதையெல்லாம் செய்து கொடுக்கத்தான் நான் இங்கே வந்திருக்கேன்னு சொன்னீங்களே சார்…இப்போ இப்டிப் பேசுறீங்களே…?

இல்லைன்னு சொல்லலையே…இந்த ஆபீஸோட விதிகளுக்குட்பட்டு உள்ளதைக் கண்டிப்பா, தாமதமில்லாமச் செய்து கொடுப்பேன். அது உறுதி. அதுக்கே இதுக்கு முன்னாடி நீங்க திண்டாடினதெல்லாம் எனக்கும் தெரியும். எல்லாத்தையும் விசாரிச்சு, மண்டைக்குள்ள போட்டுக்கிட்டுத்தான் நான் இந்த ஆபீசுக்குள்ளயே நுழைஞ்சேன். அதை முதல்ல தெரிஞ்சிக்குங்க…என் கைக்கு மீறினதை நான் எப்டிச் செய்றது? அதுக்கு நீங்க என்னை பிரஷர் பண்ணலாமா? அது சரியா? அப்டியே குருட்டாம் போக்குல, பாஸைக் கன்வின்ஸ் பண்ணிச்  செய்தாலும் அந்தப் ப்ரபோசல் துறைத் தலைமைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தும் ரெக்கமன்ட் ஆகி மேல போயி ஆர்டராகணுமே…! அப்பத்தானே செல்லுபடியாகும்? நாமபாட்டுக்கு எடுத்தேன் கவிழ்த்தேன்னு  தொட்டதெல்லாம் ராசின்னு செய்துட முடியுமா?

இந்த ஆபீசுக்கு வந்து போறவுங்களெல்லாம் ஆரம்பத்துல மலையையே புரட்டிப்புடுவேன்னு சொல்லிட்டுத்தான் வருவாங்க…போகப் போக தேஞ்சு மாஞ்சு தேவட்டையாப் போயிடுவாங்க…நீங்களும் அந்த ரகம்தான்ங்கிறது எங்களுக்கு இப்பத்தான் புரியுது…..ஒரே குட்டை…ஒரே மட்டை…!

மன்னிக்கணும்…நான் சொல்றதை நீங்க இன்னும் சரியாப் புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன். புரிஞ்சிருந்தா என் மேலே உங்களுக்குக் கோபமே வராது….சார் என்னங்க செய்வாரும்பீங்க….இல்ல..புரிஞ்சிருந்தும் பிடிவாதம் பண்ணனும்னு நிக்கிறீங்களோ என்னவோ…?

பிடிவாதம் என்ன சார் பிடிவாதம்…? பாம்பும் தேளும் நட்டுவாக்காளியும் ஓடுற இந்தக் காட்டுப் பகுதில ஒர்க் ஷாப்புங்கிற பேர்ல இங்க வந்து கெதியாக் கெடக்கமே…எங்களச் சொல்லணும்…ஒரு நல்ல தண்ணி உண்டா இங்க தாகம் தீர்க்க…?அத்துவானக் காடு.  எங்க கோரிக்கைக்கு செவி சாய்க்கிறதுக்கு ஒரு ஜீவன் இல்லே….! எத்தனையோ ராத்திரி நாங்க வீட்டுக்குக் கூடப் போனதில்லே. அவ்வளவு மெஷினரீஸ் வரிசையா வந்து கெடக்கு. போன மழையின் போது பார்த்திங்கல்ல கண்ணால…எத்தனை மெஷின்களை ரிப்பேர் பண்ணி அனுப்பிச்சோம்னு…மத்த மாவட்ட வண்டிக பூராவும் இங்கதான சார் வந்திச்சு. கலெக்டர் ஆபீசு ஜீப்பும், கார்களும் இங்கதான வரிச போட்டாங்க…அப்போ நாங்க மனசு வச்சிருந்தா…எங்க காரியத்தை நிறைவேற்றியிருக்க முடியாதா? அது முறையில்லைன்னு விட்டுட்டோம்…அவ்வளவு வண்டிகளும் இங்கயே ஏன் வந்திச்சு?  நாங்க நல்லா வேல பார்ப்போம்ங்கிற நம்பிக்கை…அதுக்கெல்லாம் எங்களுக்கு அவார்டா கொடுத்தாங்க…அட…ஏதாச்சும் ஊக்கத்தொகை?  எதுவுமில்லையே…தமிழ்நாட்டுலயே நம்ப ஒர்க் ஷாப்தான் சார் நம்பர் ஒன்! அவ்வளவு  ஒர்க் ஆர்டராகியிருக்கு…ஆனா எங்க நிலைமை? விதிகளைத் தளர்த்தி கிரேடு-1 தான் கொடுத்தா என்னா சார் குடிமுழுகிடும்? சம்பளம் என்ன அப்டியா உயர்ந்திடப் போவுது? ஒரு ஆயிரத்துக்குள்ள…கூடுமா? நாங்க ஸ்டேட் பூராவும்  என்ன ஒரு நூறு  பேரு தேருவோமா? அடஇருநூறுன்னே வச்சிக்குங்க…. கொடுத்தா என்ன சார்…டிபார்ட்மென்டே கவுந்திடுமா…? அநியாயம் பண்றீங்களே சார்….நாங்களும் வருஷக் கணக்கா தொண்டத் தண்ணி வத்தக் கத்திக் கத்திப் பார்த்துட்டோம். எல்லாவிதமான ஸ்டிரைக்கும் பண்ணியாச்சு….மலையசைஞ்சாலும் அசயும்…உங்க மனசு அசையாது போல்ருக்கே சார்…வயித்தெறிச்சல்….

ஞானமூர்த்திக்குச் மயக்கமாய்த்தான் இருந்தது. இரக்கம் பிறந்தது. மனது கசிந்தது. அவர்களின் பிரஷர் தாங்காமல் ஒரு பிரேரணையைத் தயார் செய்து, எப்படியோ அலுவலரைத் திருப்தி செய்து அனுப்பத்தான் செய்தார். உள்ளூரிலேயே ரெண்டு படியைத் தாண்டியாக வேண்டுமே…!

நான் அனுப்பிச்சாச்சு…போய், பார்க்க வேண்டியவங்களப் பாருங்க…இனிமே என் பொறுப்பில்லே….- விலகிக் கொண்டார்.

என்ன சார் இப்டிக் கைவிரிச்சா எப்டி சார்…? நீங்கதான் அடுத்தடுத்த கட்டத்தத் தாண்டுறதுக்கு ஒதவணும்…!எங்களுக்கு நீங்க செய்யாம வேறே யார் சார் செய்வாங்க….நாங்களும் போய்ப் பார்க்கிறோம்…இல்லைங்கலே…!

சர்வ சாதாரணமாய்ச் சொல்லி விடுகிறார்கள். கண்ணையும் கருத்தையும்  மூடிக்கொண்டுதான் பேசுகிறார்கள். ஆனால் இவர் வாங்கிய திட்டுக்களை அவர்கள் அறிவார்களா?

ன்யா….நாளைக்கு அட்மோ ஆகப் போகுற நீங்க…செய்ற காரியமா இது? அவுங்க எதக் கொடுத்தாலும் கண்ணை மூடிட்டு அனுப்பிடுவீரா? என்ன ஏதுன்னு பார்க்க மாட்டீரா? உம்மாலயே சொல்லி அங்கயே நிறுத்த முடிலன்னா அப்புறம் எதுக்குய்யா உமக்கு மானேஜர் போஸ்ட்? அதுக்கொரு சம்பளம், அலவன்சு, வருஷா வருஷம் இன்கிரிமென்ட்….கண்டதையெல்லாம் கண்ணை மூடிட்டு இங்க அனுப்பிட்டு, பெரிய லொள்ளு பண்றீரே….? இந்தத் தபாலுக்கு இந்த ஆபீஸ்ல சீலே விழுகாது….இப்டியே உம்ம கைல எடுத்துட்டுப் போயிரும்…அவுங்களுக்கு நீரு என்ன பதில் சொல்லுவீரோ எனக்குத் தெரியாது…எதையாச்சும் சொல்லிச் சமாளிச்சிக்கும்….கண்ட ப்ரபோசலையெல்லாம் குருட்டாம் போக்குல ரெக்கமன்ட் பண்ண முடியாது. அப்புறம் மேலிடத்துல எவன்யா பேச்சு வாங்குறது? ஃபோனப்போட்டு சீஃப் என்ன வாங்கு வாங்குவாருங்கிறது உமக்குத் தெரியமா தெரியாதா? செக்ரட்டரி காதுவரைக்கும் போச்சோ…அப்புறம் என் சீட்டு கிழிஞ்சிது…என் ப்ரமோஷன் நின்னு போகும்யா….அப்புறம் நான் உம்மட்டயா வந்து நிற்க முடியும்? திரும்பிப் பார்க்கமாப் போயிரும்….அவ்வளவுதான்….

சொல்லியவாறே அவர் கையால் தள்ளிவிட்ட அந்தப் பிரேரணை ஞானமூர்த்தியின் காலடியில் வந்து விழுந்தது. அதை எடுக்கக் குனிந்தபோது பதட்டத்தில் மேஜை நுனியில் தலையில் ஒரு இடியையும் வாங்கிக் கொண்டார் அவர்.  தான் செய்யாததை அது செய்து விட்டதாக நினைத்துக் கொண்டாரோ என்னவோ…எந்த ரியாக் ஷனும் இல்லை எதிர்த் தரப்பில்.

ன்று தலை குனிந்து வெளியேறியவர்தான். இன்று இதோ தனது பாஸின் எதிரே அவருக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு, அவரைத் தைரியப்படுத்தி எதிரே குத்துக் கல்லாய் அமர்ந்திருக்கிறார் ஞானமூர்த்தி. புதிய தலைவலி ஆரம்பித்திருந்தது.

மேஜைத் தொலைபேசி அலற பதற்றத்துடன் அதை எடுக்கிறார். என்னவோ ஏதோ என்ற பதற்றத்தில் எதிரே தனது பாஸ் பார்த்துக் கொண்டிருப்பதை நோக்கியவாறே உறலோ என்கிறார் ஞானமூர்த்தி.

நான்தான்யா எஸ்.இ. பேசறேன்….எப்டிய்யா நடந்தது இது? எல்லாரும் என்ன செஞ்சிக்கிட்டிருந்தீங்க…? – எடுத்த எடுப்பில் அந்த அர்த்தமில்லாத உளறலை எதிர்கொண்டார் ஞானமூர்த்தி.

எப்போது ஃபோன் எடுத்தாலும் வாய்யா…போய்யா…தான். மரியாதையாக விளித்தல் என்பதே கிடையாது. இதற்கே இவரை என்ன வேணாலும் செய்யலாம்…!

சார்…வணக்கம். நான் மானேஜர் பேசறேன்…அது பொங்கல் அஞ்சு நாள் லீவுல நடந்திருக்கு சார்…தகவல் தெரிஞ்சு உடனே எல்லாரும் வந்திட்டோம்…உடனே வேணுங்கிற நடவடிக்கை எடுத்தாச்சு…..

என்னய்யா  நடவடிக்கை எடுத்தீங்க பெரிஸ்ஸா? லட்ச ரூபா ஸ்பேர் பார்ட்ஸ்  திருடு போயிருக்கு…புல்டோசர் பிளேடுகளக் காணலங்கிறாங்க…ஸ்டோர் ரூமைத் திறந்து எடுத்திருக்கானுங்க…இருந்த பேரிங் பூராவும் காணோம்ங்கிறாங்களேய்யா…இப்பத்தான ரெண்டு நாளைக்கு முன்னாடி புது ஸ்டாக் வந்திச்சு….குறிப்பா திருடுனவங்களுக்கு அது மட்டும் எப்டித் தெரிஞ்சிச்சு? கூட்டுக் களவாணிங்களா எல்லாரும்….ஸ்டோர் சூப்பிரன்ட் என்ன தூங்குறாரா? மொத்தச் சாவியும் அவர்ட்டத்தான இருக்கும்? எப்டி உடைச்சாங்க…எதப் போட்டுத் திறந்தாங்க…? இல்ல தண்ணியப் போட்டுட்டு மூடாமயே போயிட்டாரா? யார் யார் சம்பந்தப் பட்டிருக்காங்களோ அத்தனை பேருக்கும் ரெக்கவரி ஆர்டர் போடுங்க…இரக்கம் பார்க்காதீங்க…!  நாளைக்கு ஆடிட் வந்தா, ஏ.ஜி.வரைக்கும் போயிடும் விஷயம்…ஜாக்கிரதை….

சார்….நான் சொல்றதை தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாக் கேட்கணும்…உங்ககிட்டச் சொல்லாம வேறே யார்ட்டப் போய் நாங்க அழ முடியும்? நடந்தது இதான் சார்…

எங்களக் கட்டிப் போட்டுட்டு வேன்ல எடுத்திட்டுப் பறந்திட்டாங்கன்னு சொல்றாங்க சார்….வாட்ச்மேன் பூதலிங்கம் உள்ளே மாடில ஆபீசர் ரூம் வாசல்ல படுத்திருந்திருக்கான்….அவனக் கேட்டா எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கிறான். காலைல எழுந்திரிச்சி வந்துதான் ரெண்டு பேரையும் கட்டவிழ்த்து விட்டதாச் சொல்றான்…சார்…..சீனியர் மெக்கானிக்குகள் சார்…

காலைலவரைக்கும் மரத்துல கட்டினமேனிக்கு இருந்திருக்கானுங்களா? எவனுமே வர்லயா அந்தப் பக்கம்? எவன்யா நம்புவான் இதை? ராத்திரி ஷிப்ட் வாட்ச்மேன் என்னானான்?

….பூதலிங்கம்தான் முதல் ஆளாப் பார்த்திருக்கான்…சார்….

அவுங்க மூணு பேத்தையும் சஸ்பென்ட் பண்ணிட்டீங்களா?

எதுக்கு சார்….திருட வந்தவங்ககிட்ட அடியையும் வாங்கிட்டு,  கட்டிப்போட்டுக் கிடந்தவங்களை எப்டி சார் சஸ்பென்ட் பண்றது? ரெண்டு நாளா நைட் ட்யூட்டி பார்த்து நாளைக்கு வண்டிகளை டெலிவரி கொடுத்தாகணும்னு இருந்தது  தப்பா சார்? அவுங்க போலீசுக்குப் போயிட்டாங்க சார்….புகார் கொடுக்க…எங்க ஐயாவுக்கு எந்த பாதகமும் வரக்கூடாதுன்னு சொல்லி அழுவுறாங்க சார்…

அப்போ அந்த பூதலிங்கம்? அவன் ஏன்யா அங்க தூங்கினான்? பதினோரு மணிக்கு அவன் ஷிப்ட் முடிஞ்ருச்சில்ல…ஊரப் பார்த்துப் போக வேண்டிதான….? ஸ்பாட்டுல இருந்தா அவனும்தானே பொறுப்பு…?

கடைசி வண்டிய நிறுத்தாமப் போயிட்டான்னு வந்து படுத்திட்டதாச் சொல்றான் சார்…பாவம் சார்…அவன்….அப்பாவி …ஏதுமறியாதவன் சார்…அவன் கெட்ட நேரத்தப் பாருங்க….!

அதுக்காக? பூதலிங்கத்த சஸ்பென்ட் பண்றதுக்கு பதிலா இப்டி சார்ஜ் மெமோ கொடுப்பீங்களா? இந்த ரூல்ஸெல்லாம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா?   என்னமோ பிரமாதமாச் சொன்னாங்க உங்களப்பத்தி?  

அதிகாரி புரிந்து கேட்கிறாரா அல்லது மேலிடத்தின் நொச்சுத் தாங்கமாட்டாமல் அந்த வற்புறுத்தலில் கேட்கிறாரா? சற்றே தடுமாறினார் ஞானமூர்த்தி. பிறகு நிதானித்துக் கொண்டார்.

சஸ்பென்ட் பண்ணனும்னு எங்கிருக்கு சார்? எதுலயும் அப்டி இல்லை…..அதனாலதான் சார்ஜஸ் போட்டு மெமோ கொடுத்திருக்கேன்…..பஸ் கிடைக்காமப் போயி அங்கயே அவன் தங்கிட்டதுதான் இப்பத் தவறாப் போச்சு….அதுக்கு அவனுக்கு சஸ்பென்ஷனா? என்ன சார் அநியாயமா இருக்கு? அவன் வாங்குற கொஞ்ச சம்பளத்துக்கு, அதுலயும் பாதிய சப்சிஸ்டன்ஸ் அலவன்ஸ்ங்கிற பேர்ல நிறுத்திட்டா அப்புறம் அவன் குடும்பம் என்னதான் சார் செய்யும்? வேறே வழியில்லாம அங்கயே படுத்திட்டது ஒரு பழியா? எனக்குச் சந்தேகம் கட்டிப் போட்டுக் கிடந்தவங்க மேலதான்….புது ஸ்டாக் பேரிங் எல்லாத்தையும் கடத்தி வித்துட்டா செமையான காசு…புல்டோசர் ஸ்பேர்சும் நல்ல விலை போகும். கனம்மா  பணம் பார்க்கலாம்னு திட்டம். …லெவன் டூ செவன்… ராத்திரி ஷிப்ட் லட்சுமணன் வந்து அவிங்களோட சேர்ந்து இந்தக் காரியத்தச் செய்திட்டு, அவுங்களையும் கட்டிப் போட்டுட்டு  எதுவும் தெரியாத மாதிரி கமுக்கமா வெளியேறியிருக்கணும்… பயங்கரமான டிராமா சார் இது…! மேலேர்ந்து சொல்லச் சொல்லி நாலு மொத்து மொத்தி, நோண்டி  நொங்கெடுத்தா  எல்லா உண்மையும் வெளிய வந்திரும்..அப்டி அப்டியே கக்கிடுவானுங்க..….அதத்தான் சார் செய்யணும் உடனடியா…..! இல்லன்னா போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்திட வேண்டிதான். அவுங்க கவனிச்சிப்பாங்க…!பளிச்சென்று தீர்வை எட்டியிருந்தார் ஞானமூர்த்தி.

நம்பிக்கையான வேலையாட்கள்தான். ஆனால் இது நம்பும்படியாகவா இருக்கிறது? ஏன் புத்தி இப்படி வக்கரித்தது?  இதுநாள் வரை இப்படி எதுவும் நடந்ததில்லையே? ஒர்க் ஷாப் சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவை…!   பூதலிங்கம் அவன் பொஞ்சாதியோடு  வீட்டுக்கு வந்து கதறியது அவர் கண் முன்னே நிழலாடியது. நாலு குழந்தைகள்….குய்யோ முறையோ என்று வந்து கதறி நின்ற காட்சி இவரை உலுக்கியது.

நா அவுங்களக் காலைலதான்யா பார்த்தேன்.கடைசி பஸ் நிக்காமப் போயிட்டான். ஏற முடில. அப்டியே வந்து படுத்தவன்தான். அடிச்சிப்போட்ட மாதிரித் தூங்கியிருக்கேன்.  சத்தியமா, குலசாமி ஒண்டிக்கருப்பு  மேல சத்தியம்…எங்க ஆத்தா தலமேல சத்தியம்…அவிங்களக் கட்டிப் போட்டுட்டு நழுவினது லட்சுமணன்தான்…தவறாம டூட்டிக்கு வந்திடுற அவன் அன்னைக்கு மட்டும் எங்க போனான். ஏன் வெளில ஓடிட்டான்?  இருந்தா மாட்டிக்குவோம்னுதானே? மூணு பேரும்தான்யா கூட்டுக் களவாணிங்க….என்ன நம்புங்கய்யா…..! எந்தக் கோயில்ல வேணாலும் வந்து சத்தியம் பண்றேன். சூடத்த அணைக்கிறேன்…! இனிமே எனக்குப் பகல் ட்யூட்டியே கொடுங்கய்யா…ராத்திரி வேணாம்…முடியாதுன்னா என்னை எங்கயாச்சும் மாத்தி விட்ருங்க…சம்மதம்…இந்த மாதிரி ஆளுகளோட இருக்கிறது என்னைக்குமே ஆபத்து…எனக்கு வேணாம்யா…வேணவே வேணாம்…என் வேல போயிராமக் காப்பாத்துங்கய்யா…நீங்கதான் தெய்வம்…!

திருட்டு நடந்த அந்த இரவு ஸ்பாட்டில் இருந்த வாட்ச்மேன் பூதலிங்கத்தை ஏன் சஸ்பென்ட் பண்ணவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றும் ஞானமூர்த்தியின் மேல் உண்டுதான். அப்படி எங்கயிருக்கு? ரூல்ஸ் இருந்தா காண்பிங்க என்ற அவரின் திடமான எதிர்க் கேள்விக்கும் இன்றுவரை எந்த திசையிலிருந்தும் பதிலில்லைதான். விதி முறைகள் புத்தகத்தில்தானே பத்திரமாக உறங்குகின்றன…அவற்றை மண்டையில் ஏற்றினால்தானே? எதிரிகளின் பலவீனமே ஒருவனுக்கு பலம். ஆனாலும் அந்தக் கேள்வி அவர் மேல் விழுந்த கறை. அதுபற்றிஅவர் கவலைப்படவில்லை. தன் அடுத்த பதவி உயர்வு  பாதிக்குமோ என்பது பற்றியும்  பொருட்படுத்தவில்லை. அதற்குள், தான் ஓய்வு பெற்றாலும் போச்சு…!

இதனிலும் அதிசயம்  அதற்குப்பின் அந்தத் தரம் -1 உயர்த்தி வழங்கல் சர்ச்சை எழவேயில்லை என்பதுதான். ஏனிப்படி மௌனித்துப் போனார்கள்? காரணம் புரியவில்லைதான். அலை ஓயட்டும் என்று காத்திருக்கிறார்களோ?                                                                         

-------------------------------------

 

 

 

 

கருத்துகள் இல்லை:

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...