“தபால் ரயில்“ –
தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை - விமர்சனம்
– உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.
இக்கடிதம் படித்தவுடன் இருபது பேருக்கு
இதனைப் பகிர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையில் துன்பம் நேரிடும்…என்றும்….இறையருளைப்
பெற…இக்கடிதத்திலான ஸ்தோத்திரங்களை அவரவர் பத்துப் பத்துப் பேருக்கு எழுதி அனுப்புமாறும்
அதன் மூலம் அந்த பாக்கியவான் அளவிலடங்கா செல்வம் பெறுவார் என்றும் அஞ்சலட்டைகள் பலருக்கும்
வந்ததுண்டு. அதைக் கண்டு பயந்து செயல்பட்டவர்களும், பதுங்கி மறைந்தவர்களும் நிறைய உண்டு.
பெரியவர், காலம் சென்ற திகசி அவர்கள் எனது
முதல் சிறுகதைத் தொகுதியான “உள்ளே வெளியே“ தொகுதியை சிலாகித்து நெருக்கி நெருக்கி ஒரு
பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அது அவரது
பெருந்தன்மை. அந்தக் கடிதம் அளித்த ஊக்கம் அளவிடற்கரியது என்று சொல்லலாம். அதுபோல்
சுந்தர ராமசாமி அவர்கள் தனது உடல் நலம் பற்றித் தெரிவித்து மனதுக்கு மிக நெருக்கமாக
எழுதிய ஒரு அஞ்சலட்டையும் என்னிடம் உண்டு. அந்த ஒன்றுதான் அவரோடு எனக்குக் கிடைத்த
தொடர்பு. வண்ணதாசனின் கடிதங்களைப் படித்திருக்கிறீர்களா?
சு.ரா. அழகிரிசாமிக்கு எழுதிய கடிதங்கள், கி.ரா,வுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்கள்
புதுமைப் பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் என்று நிறையப் பொக்கிஷங்கள் நம்மிடம்
இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை அஞ்சலட்டையே. அவையே பெரும் இலக்கியங்கள் எனலாம்.
பெருமை தரும் இலக்கியங்கள் என்றும் மகிழ்ந்து போற்றலாம்.
இப்படி மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்து
நிற்கும் அஞ்சலட்டையின் வரலாறு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிச்சயம் இருக்கும்.
உறவுகளை மதித்து அஞ்சலட்டைக் கடிதங்களைச்
சேர்த்து வைக்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது. உடனே கிழிக்க மாட்டார்கள். அது
மரியாதைக் குறைவான செயல் என்கிற ஒழுக்கமான எண்ணமிருந்த காலம் அது. துக்கச் செய்தியைத்
தாங்கி வரும் கார்டுகளை மட்டும் படித்தவுடன், தகவல் அறிந்தவுடன் கிழித்து விடும் பழக்கம்
உண்டு.
அப்பாவோட அந்தக் கால மரப்பெட்டியைப் பார்த்தீங்கன்னா
அதுல கட்டுக் கட்டா அஞ்சலட்டைக் கடிதங்கள் இருக்கும். அதப் பொக்கிஷமா பாதுகாப்பாங்க…அந்த
அஞ்சலட்டையை வைத்து ரயில் செய்து குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் பெரியவர்கள்
நம் வீட்டில் உண்டு. குறிப்பா அப்பா தன் குழந்தைகளுக்கு அந்தக் கார்டை மடக்கி மடக்கித்
தரையில் தொடர்ச்சியாக நீள அடுக்கி முதல் கார்டைத்
தள்ளிவிட, அது வரிசையாகச் சாயும் அழகு ரயில் போவதை நினைவு படுத்தும்.
இதை “தபால் ரயில்“ என்று தலைப்பிட்டு தஞ்சாவூர்
கவிராயர் அவர்கள் அற்புதமான ஒரு சிறுகதையை வடித்திருக்கிறார். அவர் முகம் நமக்கு நினைவுக்கு
வரும்போது, ஜெயகாந்தன் அவர்களும் மனதில் தோன்றுவார். உருவ ஒற்றுமை…கொஞ்சம் ஊன்றிப்
பார்த்தால்தான் அது கவிராயர் என்பது புலப்படும். இந்த அஞ்சலட்டை எத்தனை விதங்களில்
பயன்பட்டிருக்கிறது என்பது இக்கதையில் விவரிக்கப்படுகிறது. மகிழ்ச்சி, சோகம், துக்கம்…நட்பு…உறவு…ஆகியவைகளை
இது ஒன்று சேர்க்கிறது. ஒரு கதையை விமர்சனம் செய்வது என்பது அக்கதையை அப்படியே படித்த
வழி சொல்வது என்பதை விட அதிலுள்ள சிறப்பம்சங்களை விவரித்து, அதை உடன் தேடிப் படிக்கத்
தூண்டுவதே நன்று என்று நான் நினைக்கிறேன்.
சோக பாவத்திற்குதான் இலக்கியத்தில் அதிக
மதிப்பு உண்டென்பேன் நான். சென்டிமென்டான விஷயங்கள் நன்றாய் எடுபடும். கதைகளிலும்.
நாவல்களிலும், திரைப்படங்களிலும் இதற்கான பெருமையே தனி. இதனால் வெற்றியடைந்த திரைப்படங்கள்
அநேகம். காரணம் சோக பாவம்ங்கிறது நன்னெறிகளை அடிப்படையாகக் கொண்டது. அன்பு, பாசம்,
நட்பு, உறவு, சிநேகம், நன்மை, கருணை இப்படிப் பலவற்றையும் தாங்கி வருவது.
இந்தக் கதைல அஞ்சலட்டைக்கான மதிப்பும்
மரியாதையும் சின்னச் சின்னச் சம்பவங்களால் சரம் சரமாகக் கோர்க்கப்பட்டுள்ளது. ஒரு அஞ்சலட்டையை
போஸ்ட்மேன் கொடுத்துட்டுப் போனாலே அந்த வீடே ஏதோ செல்வம் கிடைச்ச மாதிரி அன்றைக்கு
சந்தோஷத்துல மூழ்கிக் கிடக்கும். சோகச் செய்தியைத் தாங்கி வந்தாலும் வீடே இருண்டு போன
நிகழ்வுகளும் உண்டுதான். ஆனால் வயதில் பெரியவர்கள் இளையோர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில்
ஆலோசனைகளை மன நெருக்கமாக பாசத்தோடும் நேசத்தோடும் சொல்லி, தைரியப்படுத்தி எழுதும் பதில்
கடிதங்கள் மிகவும் முக்கியம். அந்தப் பதில் கடிதங்கள் மூலம் ஊக்கம்பெற்று, மனம் தளராது
செயல்பட்டு தங்கள் காரியங்களில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம்.
மனதை நெருடும் விஷயங்கள் இக்கதையில் பல
இடங்களில் உண்டு
ரேவதி
அக்காவுக்கு ரொம்ப வருஷங்களாகவே கல்யாணம் ஆகவேயில்லை. எப்போதும் பாசி படிந்த தண்ணீர்த்தொடடியைப்
பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கும்…இந்த வரிகளைப் படிக்கும்போது அந்தப் பெண்ணின்
உருவமும், ஏக்கமும், சோகமும் நம் மனதில் நிழலாடும்.
ரேவதி
அக்கா கையெழுத்தும் தபால் ரெயிலில் ஓடும். ஓடும் நிஜ ரயிலில் ஜன்னலில் தெரிந்தவர் முகத்தைப் பார்ப்பதுபோல்
ரேவதி அக்கா முகம் தெரியும். இதமான கற்பனை இது என்பதை மறுக்க முடியாது.
சில
கார்டுகள் தபால் ரெயிலில் சேராது விழுந்து விடும். இதற்கும் எழுதியிருக்கும் விஷயத்திற்கும்
ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ…? பின் அவை மட்டும் நிற்காமல் விழுவானேன்….
கார்டுகளுக்கும்
மனம் உண்டு, உணர்ச்சி உண்டு, உயிருண்டு என்று காட்டும் இடம் இது. எழுத்தாளரின் மன உணர்வுகள் பேசும் இடம் இது.
எந்தப்
பிரச்னையானாலும் தீர்த்து வைக்க அப்பாவுக்கு ஒரு கார்டு போதும். இது சத்தியமான உண்மை. அஞ்சலட்டைகள் அதுவும் அப்பாவிடமிருந்து,
அம்மாவிடமிருந்து வந்த மனதுக்கு நெருக்கமான வரிகளைத் தாங்கிய கடிதங்கள் சட்டைப் பையில்
நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்து ஊக்கத்தோடு செயலாற்ற உதவியிருக்கின்றன. நேரடியான வாய் வார்த்தைகளை விட இந்தக் கடிதங்களின்
வரிகளுக்கு சக்தி அதிகம்.
பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் அவைகள்
என்றே கூறலாம். ஆனால் எத்தனை பேர் அவைகளைப் பொக்கிஷங்களாக வைத்திருக்கிறோம்? காலம்
நம்மை எங்கெங்கோ கடத்திக் கொண்டு போய் எறிந்து விடுகிறது. விழுமியங்களாக விஷயங்களை
நாம் நிறையத் தவற விட்டிருக்கிறோம். இப்போதும்
தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதில் பழம் பெரும் தபால் அட்டைகளை, ஐயோ…அநியாயமாக்
கிழிச்சி எறிஞ்சிட்டமே…காணாமப் போக்கிட்டமே…! என்று வருத்தமேற்படுத்தும் பல முக்கியக்
கடிதங்கள் நம் மனதை நெருடிக் கொண்டுதான் இருக்கின்றன.
கடிதங்கள் மிகப் புனிதமான விஷயங்களைத்
தாங்கி நின்று ஜெயித்ததுண்டு. நேற்று தஞ்சாவூர்
திலகர் திடலில் மகாத்மா காந்திக்கு வரவேற்புக்
கொடுத்தோம். நான் கொடுத்த கதர்ச் சட்டையை வாங்கிக் கொண்டார். அன்று மௌன விரதம்…என்னும்
நண்பர் சிவப்பிரகாசத்தின் அஞ்சலட்டை வரிகள்
காலத்தின் அழியா அடையாளங்களில் ஒன்று என்று நான் உணர்கிறேன். தேசீயமும் தெய்வீகமும்
கருத்தூன்றி நின்ற காலம் அது.
குழந்தை பாக்கியம் இல்லாத ரங்கராஜனின்
புதல்வரின் பார்வையில் இக்கதை விரிந்து பரந்து நிற்கிறது. வாழை என்கிற ஆதரவற்ற குழந்தைகள்
காப்பகத்திற்கு அன்பளித்த தொகைக்கு நன்றி தெரிவித்து அவர்களிடமிருந்து வந்த கடிதம்
இவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிறது. அவர்களுடன் சிற்றுண்டி அருந்தச் செல்லும் செய்தியில்
திருப்தி கொள்கிறார்கள் இருவரும்.
சேகரித்து வைத்திருந்த கார்டுகளை வைத்து
ரயில் செய்து விளையாடி ஆறுதல் கொள்கிறார்கள்.
கடைசிக் கார்டைத் தள்ளிவிட்டு அது வரிசையாய்ச் சாய்ந்து விழும் காட்சி ரயில்
ஓடும் குதூகலத்தை மனதில் ஏற்படுத்த, அவர் மனைவி குழந்தைபோல் துள்ளிச் சிரித்து மகிழ
அந்த சந்தோஷத்தில் தன்னை மறக்கிறார் இவர்.
எனக்கு நீ குழந்தை…உனக்கு நான்….. என்கிற
முதிர்ச்சி அலைகளோடு கதை முடிவடைகிறது.
தஞ்சாவூர் கவிராயரின் நேசமான கருணை மனம், அன்பின் செழுமை, அனுபவ முதிர்ச்சி இந்தச்
சிறுகதையின் மூலம் அவரை நமக்குத் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது.
நன்றி…!
------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக