06 ஏப்ரல் 2024

 

வழி விட்டவள் - சிறுகதை - பிரசுரம் தினமணி கதிர் 07-04-2024

வழி விட்டவள்






ன்னோட கொஞ்ச நேரம் அங்க உன்னால உட்கார்ந்திருக்க முடியுமாம்மா?- -என்று  கேட்டான் சந்துரு.

வெயில்ல நடந்துட்டே இருந்தாத்தான் தலை சுத்தும். விழுந்துடுவோமோன்னு பயம்மா இருக்கும். உட்கார்ந்திருக்கிறதுக்கு என்ன? – பிச்சு என்கிற பிச்சம்மாள் பையனைப் பார்த்துச் சொன்னாள். தன் நிலை உணர்ந்து அவன் கேட்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அதுக்கில்லம்மா….அங்க திண்ணைல உன்னை உட்கார்த்திட்டு, மாடிக்குப் போய்  நான் ஜாதகப் புத்தகங்களைக் கேட்டு வாங்கி…எழுத ஆரம்பிக்கணும்…குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும்…எதிர்த்தாப்புல ஐயப்பன் கோயில் இருக்கில்லையா…அங்க ராஜேந்திரா காபிக் கடை…இருக்கு….  வாங்கிட்டு வர்றேன். சூடாக் குடி…தாங்கும்….அப்புறம் நான் மேலே போய் எழுத  உ ட்கார்றேன்….சரியா…..? உன்னால மாடிப்படி ஏற முடியாது. ஒடுக்கமா பலகைல படி அமைச்சிருப்பாங்க அங்கே…! அதனால சொன்னேன்…

 காப்பி எதுக்குடா கண்ணா?   இந்த ஃபிளாஸ்க்ல வெந்நீர் வச்சிருக்கனே…அது போறாதா? கொண்டு வந்த பிளாஸ்கைக் காட்டினாள் பிச்சு.

இப்டித் தொட்டதுக்கெல்லாம் காசு செலவழியுமேன்னு பார்க்கப்பிடாது.  வெளில வந்தா…தேவையானதை சிலது செய்யத்தான் வேண்டியிருக்கும்.  வெட்டிச் செலவுன்னு நினைக்கப்படாது. உட்காரு இங்கே…இதோ வர்றேன்…..என்று சொல்லிவிட்டு, அந்தக் கடையை நோக்கி நடந்தான் சந்துரு.

உள்ளே நேர் உறாலில் மேஜை போட்டு உட்கார்ந்திருப்பவர் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே   பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஜாதகம் பதிவு பண்ணியிருக்கேளா? கேட்டார்.

ஜாதகமும் பதிவு பண்ணியிருக்கோம்…மாசப் பத்திரிகைக்கும் பணம் கட்டியிருக்கோம்…..-பிச்சு அவரைப் பார்த்துச் சொன்னாள்.

அப்போ எதுக்கு  இங்கே வந்து எடுத்துண்டு. அதான் தபால்லயே வருமே?

அது போறலை…ஒண்ணும் அமையலை….இங்க நிறைய இருக்குமாமே…என் பையன்தான் சொல்லி கூட்டிண்டு வந்தான்.

அது சரி….நீங்க எதுக்கு அலையறேள் இந்தப் பதைபதைக்கிற வெய்யில்ல…? …அவன் குறிப்புகளை எடுத்துண்டு வரமாட்டானா?

வருவான் மாமா….இங்கே கோயிலுக்கு வந்தோம்…அப்டியே இதையும் முடிச்சிண்டு போவமேன்னு…நல்ல ஜாதகமா இருந்தாச் சொல்லுங்களேன்…எம் பொண்ணுக்கு….பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா…வைதேகின்னு பேரு…

அப்டியா….இந்தக் காலத்துல எல்லாம் ஐ.டி. சாப்ட்வேர் இன்ஜினியர்ங்கிறா…அவாளுக்கே பையன் ஜாதகம் கிடைக்க மாட்டேங்குறது. பசங்களுக்கு ஏத்த பெண் ஜாதகமும் வறட்சிதான். வெறும் டீச்சருக்கு என்ன கிடைக்கும்?-அவர் பரிதாபப்படுகிறாரா அல்லது பரிகாசம் செய்கிறாரா? – பிச்சு அவரைக் கருணையோடு பார்த்தாள். வெறும் டீச்சர் என்றால்? என்ன அர்த்தம்? யோசித்தாள்.

என்னவோ மாமா…ஒரு கவர்ன்மென்ட் ஆபீஸ்ல வேலை பார்க்குற கிளார்க் கிடைக்க மாட்டானா? அதுக்குக் கூடவா என் பொண் தகுதியில்லாமப் போயிட்டா?

அவனும், வர்றவ தனக்கு சமமா சம்பாதிக்கணும்…அப்பத்தான் வண்டியோட்ட முடியும்ங்கிற நிலைமை வந்தாச்சு….ஏன்னா முன்னமாதிரி பென்ஷன் கிடையாதோல்லியோ? இப்பத்தான் பங்கு பென்ஷன்ங்கிறாளே? அதுவும் கைக்குக் கிடைக்காமே நிறையப் பேர் திண்டாடிண்டிருக்கா? இப்டியிருக்கச்சே…பிரைவேட் ஸ்கூல் டீச்சரை யார் கட்டுவா சொல்லுங்கோ….?

பிச்சு அமைதியானாள். இவரென்ன இப்படிப் பேசறார்? என்றிருந்தது. அவாவாளுக்குன்னு கடவுள் ஒண்ணைப் போட்டு வச்சிருக்க மாட்டாரா? அந்த அவனைக் கண்ணுல காமிக்காமயா போயிடப் போறார்? பார்த்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

அம்மா…இந்தா..சூடு ஆர்றதுக்கு முன்னாடி குடி….-சொல்லியவாறே காபிக் கப்பை நீட்டினான் சந்துரு. இருக்கும் சூட்டில் பிளாஸ்டிக் கப்பு நெளிந்தது. சற்று அழுத்திப் பிடித்தால் எகிறிச் சிதறி விடும். பார்த்துப் பதவாகமாய் வாங்கி உதட்டில் வைத்து உறிஞ்சினாள் . போன உசிர் திரும்பி வந்தது போலிருந்தது.

முன்னால நிக்கிறது நகர்ந்தாத்தானே அடுத்தடுத்து வெளியேறும்…அதுக்கு நல்ல நேரம் வரணும்…

பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள். இந்தப் பாழாப் போனவ லேசுல வெளியேற மாட்டா போல்ருக்கே…! இப்படி எத்தனையோ முறை நினைத்துக் கொண்டாயிற்று.  அதுவே பாவம். அவளென்ன செய்வாள் இதற்கு? அமைந்தால்தானே?

து வேண்டாம்…அது வேண்டாம்னு ஒவ்வொண்ணையும் ஒதுக்கித் தள்ளினா…அப்புறம் உன்னை ஒதுக்க ஆள் வராதுன்னு நினைச்சியா?

அதுக்காக? எனக்குப் பிடிக்கலைன்னாலும் சரின்னு சொல்ல முடியுமா? என் மனசுக்குப் பிடிக்கணும்…அப்பத்தான் ஒத்துக்குவேன்…ஆள் அழகு பார்க்கலை நான்…அவன் பேச்சு குணம் எப்டியிருக்குன்னு பார்க்கிறேன்…அஞ்சு நிமிஷம் பேசினேன்னா,  லட்சணம் தெரிஞ்சு போகும் எனக்கு…ஒத்துப்போமா வேண்டாமான்னு….! குறைஞ்ச சம்பளக்காரனா இருந்தாலும் பரவால்ல…சிக்கனமா இருந்து சமாளிச்சிப்பேன். பொறுப்பான ஆளாங்கிறதுதான் முக்கியம்….உனக்கெப்படி அப்பா அமைஞ்சார்…ஆயிரம் கஷ்டம் வந்தாலும் கலங்காத மனுஷனா நீ பிடிச்சிட்டே….நானும் அப்டி ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கணும்னு நினைக்கிற போது அதிலென்ன தப்பு?  ஏன் அலுத்துக்கிறே? உனக்கென்ன அப்டி அவசரம்? என்னை வீட்டை விட்டு சீக்கிரம் கழுத்தைப் பிடிச்சு தள்றதுதான் உனக்குக் குறிக்கோளா? நான் வெளியேறிட்டேன்னா மத்ததெல்லாம் சரியாயிடுமா? உன் கஷ்டமெல்லாம் தீர்ந்திடுமா? உன் தரித்திரம் போயிடுமா? கொஞ்சம் பொறு…எனக்கேத்த ஆளாப் பார்த்துத் தேர்ந்தெடுத்துண்டு நானே போயிடுறேன்…அதுவரை கொஞ்சம் பொறுமையாயிரு…..! குணநலன்தான் எனக்கு முக்கியம். பணநலனில்லே…! அது அளவா இருந்தாப் போதும்…சமாளிச்சிப்பேன். அந்த தைரியம் எனக்கு உண்டு. எனக்கப்புறம் மீதம் ரெண்டு பேர் இருக்காங்கிற நினைப்பும் உண்டு…பொறுப்பும் உண்டு…புரிஞ்சிதா?

யப்பா…யப்பா…யப்பா…என்னா வாய்டீ உனக்கு? ஆனாலும் சாமர்த்தியம்தாண்டீ நீ! ஒண்ணு சொன்னா ஒம்பது பேசறியே? எங்க காலமெல்லாம் இப்டியில்லடியம்மா? யாரக் கை காட்டுறாளோ அவாதான்…மறு பேச்சுப் பேசாம தலையை நீட்டணும். மறுத்துப் பேசினா கலகம்தான்….இந்தக் காலத்துல நீங்கல்லாம் இப்டி நீட்டி முழக்கி பேசுவேள்னா நாங்க மூணோடயே நிறுத்தியிருப்போம்…பொண்ணு வேணும்…பொண்ணு வேணும்னு அதுவும் ஒண்ணுக்கு மூணாப் பெத்துத் தள்ளியாச்சு…ஊரெல்லாம் ஏழெட்டுப் பத்து அலையறதேன்னு பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டோம். .இப்போ முழிச்சிண்டிருக்கோம்? ஏதோ உபாயமாக் கொடுத்து வெளியேத்துவோம்னா  நீங்க இப்டித் தீட்டிண்டு நிக்கிறதப் பார்த்தா எங்களுக்குப் பெரிய மலைப்பாத்தாண்டியம்மா இருக்கு….ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு நினைக்கணும்…

நீங்க வாழ்ந்து முடிச்சவா…நான் இனிமேதான் ஆரம்பிக்கணும். கைல பிச்சைச் சட்டியத் ஏந்திண்டு அலைய முடியுமா? ஓரளவுக்கு நார்மலா குடும்பம் நடத்தறமாதிரி ஒருத்தன் கிடைக்க வேண்டாமா? அதுக்கு ஒருத்தன் அகப்படாமலா போறான்? மனசுக்கு உகந்தவனா வருவான்….மாட்டுவான்…..

மாட்டுவானா? நல்ல பேச்சுடி….தைரியம்தான் உனக்கு…ரொம்ப நம்பிக்கைதான்…அவன் உன்னை அடக்கி ஆளப் போறானோ அல்லது நீ அவனுக்கு மூக்கணாங்கயிறு போடப் போறியோ? யார் கண்டது….என்னவோ பண்ணிக்கோங்கோ…சலுப்பக் குடியாட்டமா சண்டைக்கு நிக்காம…சமாதானமாக் குடும்பம் நடத்தினாச் சரி….உன் மனசுக்கு எவன் சரியோ அதுதான் எனக்கும் சரி…!

வைதேகியுடனான முந்தைய  சம்பாஷனை பிச்சுவை அதிர வைத்தது. இங்கேயிருந்து எத்தனை ஜாதகக் குறிப்புகள் எடுத்துண்டு போனா என்ன…அவளுக்குப் பிடிக்கணுமே…பொண்ணைப் பையனுக்குப் பிடிக்கிறதாங்கிறதைவிட, பையனை என் பொண்ணுக்குப் பிடிக்கிறதாங்கிறதுதான் இப்போ அதி முக்கியமாப் போச்சு….எப்டி நடக்கப் போறதோ…யாரைத் தேரந்தெடுக்கப் போறாளோ? ஈஸ்வரா….!  - என்று எதிரே  சற்றுத் தள்ளி, உயர் கட்டிடங்களையும் மீறி வானளாவ நின்ற கோயில் கோபுரக் கலசங்களைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் பிச்சு.

பொண்ணு ஃபோட்டோ வச்சிருக்கேளா….? – உள்ளிருந்து குரல் வந்தது மீண்டும்.   பேச்சு நின்று ஒரு மணி நேரம் ஆகப் போகிறது. இதென்ன திடீரென்று? திரும்பிப் பார்த்தாள் பிச்சு.

ஃபோட்டோ இருக்கான்னு கேட்டேன்….அதைத்தானே கொண்டாங்கிறா இப்போ…!  – மறுபடியும் கேள்வி வேகமாய் வந்தது.

இருக்கே மாமா….இதோ….ஒரே ஒரு காப்பிதான் இருக்கு….அதுவும் எப்பயோ எடுத்தது….என்று தான் வைத்திருந்த ஒரு பழைய பர்ஸின் உள் பகுதியில் பார்வையாய் வைத்திருந்ததை உருவி நீட்டினாள் பிச்சு.

ரொம்பப் பழசு போல்ருக்கே…லேட்டஸ்டா எடுத்து ஒரு பத்துக் காப்பி கைவசம் வச்சிக்க மாட்டேளா? இதெல்லாம் சொல்லித் தரணுமா?  .இப்போ உங்க பொண்ணுக்கு என்ன வயசிருக்கும்? – சளைக்காமல் கேட்டார்.

முப்பது ஆயிடுத்து மாமா….அதான் சொல்றனே…நாலஞ்சு வருஷமாப் பார்த்திண்டிருக்கேன்…அமையலை…என்னைப் பிடிச்சு ஆட்டி வைக்கிறது…என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ…எதிலயும் மாட்டிக்காமே அவர் போய்ச் சேர்ந்துட்டார்..புண்ணியவாளன்…நா மாட்டிண்டு முழிக்கிறேன். இன்னிக்குத் தேதிக்கு இதைவிட அழகாயிருப்பா நேர்ல….நிறம்தான் கொஞ்சம் மட்டு…ஆனா முகம் திருத்தமாயிருக்கும் மாமா….உங்களப் பார்த்த விசேஷம்…எம்பொண்ணுக்கு ஏதாச்சும் ஒண்ணு அமையட்டுமே…உங்களுக்குக் கோடிப் புண்ணியம்…முடிச்சு வையுங்கோ…-கையெடுத்துக் கும்பிட்டாள்.

வருத்தப்படாதீங்கோ….சொல்றேன்…..அதான் இத்தனை நாள் கழிச்சி இங்க தேடி வந்திருக்கேள்…இந்த ஜாதகப் பரிவர்த்தனை சங்கம்பத்தி யாருமே உங்களுக்குச் சொல்லலை போல்ருக்கு? நம்மடவாளுக்குன்னு வருஷக் கணக்கா இயங்கிண்டிருக்கு…தெரியுமோல்லியோ?  இப்பவாச்சும் வழி தெரிஞ்சிதே…எவ்வளவோ பேருக்குக் காரியம் கைகூடின அதிர்ஷ்டமான இடமாக்கும் இது…! புண்ணியச் சேத்திரம்னு சொல்லணும்…

ஆகட்டும் மாமா…உங்க வாய் முகூர்த்தம்….அவளுக்கு மாங்கல்யதாரணம் ஆகணும்…அந்த அம்பாள் மீனாட்சிதான் கருணை செய்யணும்…

ஆகும்…ஆகும்…எல்லாத்துக்கும் வேளை கூடி வரணுமோல்லியோ…..மனுஷப் பிரயத்தனங்கள் மட்டும் போறாதே…!

தேஜஸோடு கூடிய அவர் முகத்தை ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொண்டாள் பிச்சு. நல்லதாவே பேசுறார் மனுஷன்.  பகவானே முன்னே வந்து கேட்குற மாதிரியிருக்கு….நல்ல நேரம்  கூடி வரட்டும்….-நினைத்துக் கொண்டாள். கண்களில் நீர் கசிந்தது.

ஆஞ்சநேயர் கோயில், பஜனை மடம், விஸ்வவிநாயகர் கோயில் ன்னு சனி, ஞாயிறுகள்ல ஜாதகம் சார்ட்டக் கொண்டு வந்து படலம் படலமாக் காட்டத்தான் செய்யுறா….எதுவுமே நமக்குப் பொருந்தி வரலை…முடிஞ்சதெல்லாம் நீக்குவாளோ மாட்டாளோ? பட்டியல் நீண்டுண்டேதான் போறது.  .ஏழெட்டு ஜாதகம்னு கஷ்டப்பட்டு குறிச்சிண்டு போனாலும் லெட்டர் போட்டா பையன்  ஜாதகக் காப்பி அனுப்ப மாட்டேங்கிறா…பதிலே போட மாட்டேங்கிறா…நாமளே பொண்ணு ஜாதகத்தைக் காப்பியா எடுத்து எடுத்து அனுப்பினாலும் பதில் எதுவும் வர்றதில்லை. ஒரு போட்டோ அனுப்புங்கோன்னாவது யாராவது கேட்கமாட்டாளோ? மூச்….நாயா அலைஞ்சதுதான் மிச்சம்…மலப்பா போச்சு மாமா….எங்காத்து மொதப் பொண்ணை என்னைக்கு வெளில தள்றேனோ அன்னைக்குத்தான் விடியல். அப்புறம்தான் மத்ததை நகர்த்த முடியும் என்னால…இன்னும் ரெண்டு வச்சிண்டிருக்கேனே…புத்தி கெட்டவ….! என்ன பண்ணச் சொல்றேள்…பெத்தாச்சு…கழுத்த நெரிச்சா கொல்ல முடியும்? இல்ல விஷம் வச்சுக் கொல்ல முடியுமா? இந்தக் காலத்துல எல்லாரும் ரொம்ப உஷாரா இருக்கா….ஒண்ணே ஒண்ணு…கண்ணே கண்ணுன்னு இருந்துடறா…ரொம்பத் தப்பினா ரெண்டு…கண்ணுல படறது….பெரும்பாலும் ஒண்ணுதான்….ஒண்ணுக்கு ஒண்ணு துணை வேண்டாமோ? வேண்டாம்ங்கிறா…அதுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தா துணை தானா வந்துட்டுப் போறதுன்னு விட்டுட்டா…இந்தப் புத்தி மூத்த தலைமுறைக்கு இல்லாமப் போச்சு பாருங்கோ….

தன்னை மறந்து…அவர் கேட்கிறாரா என்பதைக் கூடக் கவனிக்காமல் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாள் பிச்சு. புலம்பல்தான் என்று மனசு உறுத்திற்று. எந்தவழியிலாவது காரியம் ஆகாதா என்ற ஆதங்கம் தெறித்தது.

அம்மா…வா…போகலாம்….எடுத்தாச்சு……-சொல்லியவாறே கீழே இறங்கி வந்தான் சந்துரு. மரப்படிகளில் இறங்கி வருவது சத்தத்தைக் கிளப்பியது.  அவன்தான் பொறுமையோடு அலைகிறான். விடாமல் ஜாதகங்களை எடுத்து வருகிறான்.  வண்டிக்கு அச்சாணிபோலக் கடமையைச் செய்கிறான்.

ஆச்சா…போகலாமா…? நாங்க வரோம் மாமா….நீங்கதான் சொல்லணும்…தெரிஞ்சவா சொன்னாத்தான் புண்ணியம்….காரியம் ஆகும்…

இருங்கோ…இருங்கோ…நீ எடுத்த குறிப்புகளைக் கொண்டா பார்ப்போம்…என்றார் அவர்.

உள்ளே நுழைந்தான் சந்துரு. அவர் மேஜைக்குப் பின்னே கைலாசநாதன், காரியதரிசி…என்ற போர்டு இருப்பதைப் பார்த்தான்.

ஒவ்வொன்றாகக் குறிப்பாய் கவனித்தார். பிறகு சரி…..கொண்டு போய் உங்க பொண்ணோட ஜாதகத்தோட பொருந்தறதா பாருங்கோ….எட்டுப் பொருத்தம், ஒன்பதுன்னு அலையாதீங்கோ…ஆறு, ஏழு பொருந்தினாப் போதும். குறிப்பா வம்ச விருத்தி வேணும்..அதான் முக்கியம்…கவனத்துல வச்சிக்குங்கோ…என்றவர் ஒரு குறிப்பிட்ட குறிப்பினைச் சுட்டி, இது பொருத்தமா இருக்கான்னு பார்த்திட்டு வந்து எனக்குச் சொல்லுங்கோ….என்றார்.

ஆகட்டும் மாமா…..…-பிச்சு நம்பிக்கையோடு  கிளம்பினாள். வரேன் அங்கிள்…என்று சொல்லிவிட்டு படியிறங்கினான் சந்துரு.

ஒரு நிமிஷம்…உங்க பொண்ணு ஜாதகம் பதிஞ்சிருக்கேளே…அது சீரியல் நம்பர் என்னன்னு சொல்லுங்கோ…கேட்க விட்டுட்டேன்…..

நானூற்றி முப்பத்தியேழு மாமா….வைதேகின்னு பேரு….வோல்டாஸ் காலனில இருக்கோம்…அதான் அட்ரஸ்…..

வந்த கையோடு குறித்து வந்த இடங்களுக்கு எழுதிப் போட்டாயிற்று. இனி பதில் வருமா, போன் வருமா என்று காத்திருக்க வேண்டும். கடிதம் எழுதுவதே குறைந்து போன காலம். இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களுக்கு இன்னும் எழுத்து மூலமான அக்கறை இருக்கத்தான் செய்கிறது. அப்போதுதான் நம்பிக்கையும் வருகிறது. நமக்குத்தான் வேளை வர வேண்டும்.   தினமும் தபால்காரரை எதிர்பார்த்து திண்ணையிலேயே பழி கிடக்க வேண்டும். வெறுமே அவர் கடந்து போகையில்தான் எத்தனை ஏமாற்றம்? இந்த உலகமே இரக்கமற்றதாய்த் தோன்றும் அந்தக் கணம்.

ரு வாரம் கழித்து  மதியம் கடந்த  பொழுதில்….அந்த    ஃபோன் வந்தது.

அதிசயமா இருக்கே…அடடா…சந்துரு கூட இல்லையே…வெளில போயிட்டானே…இந்த நேரம் பார்த்து வருதே…ஈஸ்வரா…என்னவோ ஏதோ….

-மிகுந்த பதற்றத்தோடு அந்தச் சின்னக் கையடக்க சாதா ஃபோனை எடுத்து சந்துரு சொல்லிக் கொடுத்திருந்ததுபோல் பச்சை பட்டனை விரல் நடுங்க அழுத்தினாள் பிச்சு.

உறலோ…உறலோ…என்றாள் ஈனஸ்வரத்தில். லைன் கிடைத்ததா என்ற பதற்றம் வேறு. வேறு என்னென்னவோ சத்தமெல்லாம் குறுக்கிட்டது.  பிறகு நின்றது….லைனில்தான் இருக்கேனா….? யாராயிருக்கும்?

யாரு…பிச்சு மாமி பேசறேளா….நாந்தான் சங்கத்திலேர்நது செக்ரட்டரி பேசறேன். என்னைத் தெரியறதா…? எதிர்க் குரல் சத்தமாக வந்தது.

நமஸ்காரம் மாமா….தெரியாமையா சொல்லுங்கோ…பையன் வெளிய போயிருக்கான்…அதான் கொஞ்சம் பதட்டமா இருந்தது….எடுக்க லேட்டாயிடுத்து…

அதானே பார்த்தேன். மணியடிச்சிண்டே இருக்கேன்னு…பரவால்லே….ஒரு விபரம் சொல்லணும்…அதுக்காகத்தான்…

எப்டி மாமா ஃபோன் நம்பர் கிடைச்சது…? பதற்றம் குறையாமல் கேட்டாள் பிச்சு. 

என்ன இப்டிக் கேட்கிறேள். உங்க பொண்ணு ஜாதகத்துல பின்னாடி எழுதியிருக்கேளோன்னோ….? குறிப்பை வச்சு ஜாதகத்தை எடுத்துட்டேனே? வேறே என்ன வேலை எனக்கு?  மறந்துட்டேளா…! என்னைக்கோ பதிஞ்சது. ஞாபகமில்லை போல்ருக்கு…!

அப்டியா…நினைவில்லே மாமா…பையன்தானே ஃபாரம் வாங்கிப் பதிவு செஞ்சான்…நான் என்னத்தக் கண்டேன்…சொல்லுங்கோ …..- தன்னைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு பேசியவாறே  நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாடா….என்று ஆசுவாசமாய் இருந்தது.

ஒண்ணுமில்லே….உங்க பொண்ணுக்கு ஒரு ஜாதகம் அமைஞ்சிருக்கு…அதான் சொல்லலாமேன்னு…

அப்டியா மாமா…ரொம்ப சந்தோஷம்…நான்தான் அன்னைக்கே சொன்னேனே…உங்களாலதான் விடியணும்னு….விடிஞ்சிடுத்து மாமா….-சற்றே குதூகலமாய்க் கேட்டாள் பிச்சு. அவர் குரல் நம்பிக்கையளித்தது.

அவா வேத்துப் பிரிவுதான். முதல்லயே சொல்லிப்புடறேன்…ஆனா நம்மடவா….பிரிவெல்லாம் பார்க்கப்படாதுன்னு பெரியவாளே சொல்லியிருக்காளோன்னோ? …தெரியுமோல்லியோ…நல்ல மனுஷாளாங்கிறதுதான் முக்கியம்…தெரிஞ்சிதா…..?

சொல்லுங்கோ மாமா…கேட்டுக்கிறேன்….நீங்க சொன்னா சரிதான்…மேலென்ன கீழென்ன…? பரஸ்பர அன்புதான் முக்கியம்….

இந்தக் காலத்துல என்னென்னவோ நடந்துடறது. ஜாதி விட்டுச் ஜாதி கல்யாணமெல்லாம் சர்வ சகஜமா நடந்துண்டிருக்கு….அதப்பத்தி நாம எதுவும் சொல்ல வேண்டாம்…நம்மடவாள்லயே மேல் கீழ்ங்கிறது பார்க்கப் புகுந்துடறா…? அது பிடாதுங்கிறேன்….நல்ல குடும்பமா, மரியாதையான, பொறுப்பான மனுஷாளா…பையன் பொறுப்பா, சமத்தா  பொண்ணை வச்சுக் காப்பாத்துவானா…குடித்தனம் பண்ணுவானா? …ரெண்டு பேரும் சந்தோஷமாயிருப்பாளாங்கிறதுதான் முக்கியம்….புரிஞ்சிண்டேளா….? இன்னொண்ணு…..

என்னது? அதான் எல்லாம் சொல்லிட்டேளே…மாமா? -படபடத்தாள் பிச்சு.

பார்த்தேளா…அதுக்குள்ளேயும் பதட்டப்படுறேளே…பையனுக்கு சித்தே வயசுஜாஸ்தி…முப்பத்தியெட்டு…அதையும்பார்க்கப்பிடாது…தெரிஞ்சிண்டேளா…! உங்க பொண்ணுக்கு அமையாம இழுத்த மாதிரி அவனுக்கும்…!

என்ன மாமா..இப்டிச் சொல்றேள்…? முப்பதெங்கே..முப்பத்தி எட்டெங்கே…? ஒரு முப்பத்தியஞ்சுக்குள்ளன்னாக் கூடப் பரவால்லே…முத்திக் குரங்கான்னா தெரியறது? தாம்பத்யமெல்லாம் குறையில்லாமக் கழியணுமே மாமா…! நாளைக்குக் குழந்தை பிறக்கிறதுல ஏதாச்சும் பிரச்னைன்னா….?

எதிர்த்தரப்பில் அமைதி…என்னவோ முனகுவது போலிருந்தது. கடவுளே என்று வாய் முணுமுணுத்தது. ஏதும் தப்பாய்ச் சொல்லி விட்டோமோ?  பிச்சுவுக்கு. நாக்கை அடக்கு என்றது மனசு.

எடுத்த எடுப்புல நீங்களே இப்படிப் பேசுறது நல்லாயிருக்கா? நாற்பதுலயும் அம்பது ஆரம்பத்துலயும் கூட இந்தக் காலத்துல குழந்தை பெத்துக்கிறா? அது அவா அவா இஷ்டம். வசதி வாய்ப்புகளைப் பொறுத்தது. மெடிக்கலா எவ்வளவோ முன்னேறியிருக்கிற காலமாக்கும் இது! எதுக்கும் அச்சப்படத் தேவையில்லே.  ……முப்பதுகள் வயசு ஜோடிக்குப் போய் இப்டி பயப்படுறேளே? அதெல்லாம் சேமமா நடக்குமாக்கும். நல்லதையே நினையுங்கோ…

பதற்றமாகிப் போனாள் பிச்சு. தப்பாகச் சொல்லிவிட்டோமோ? அஞ்சானா என்ன, எட்டானா என்ன? அமையறதே குதிரக் கொம்பாயிருக்கச்சே…? இதுநா வரைக்கும் ஒண்ணுகூடத் திகையலையே?

உறலோ….உறலோ…மாமா….இருக்கேளா லயன்ல…? சொல்லுங்கோ…நீங்க நல்லதத்தான் சொல்றேள்…கேட்டுக்கிறேன்…சம்மதம்தான்…

வாரிசு இல்லாமப் போயிடுமோன்னு பயப்பட வேண்டாம். அதெல்லாம் அவா பார்த்துப்பா…நன்னாவே நடக்கும்..நீங்க ஒண்ணும் கவலப்பட வேண்டாம்…தெரிஞ்சிதா…! டக்குன்னு முடிச்சு பொண்ணை வெளியேத்தப் பாருங்கோ….இதவிட சல்லிசா ஒரு வரன் அமையாது….நானாக் கண்டு பிடிச்சுக் கேட்டப்போ அவா மறுக்கவேயில்லை….உடனே சம்மதிச்சிட்டா….பையனும் பார்க்க லட்சணமாயிருக்கான்…ரெண்டு பேருக்கும் நன்னாப் பொருந்திப் போறது ஜாதகம்….நீங்க சொல்ற எட்டென்ன…பத்துமே பொருந்தறதாக்கும்…ரஜ்ஜூப் பொருத்தம் அமர்க்களம்…!

அதெப்படி மாமா…எங்கயுமே எல்லாமும் பொருந்தாதே….ஆறேழு பொருந்தறதே துர்லபமாச்சே…? -விடாமல் கொக்கி போட்டாள் பிச்சு. வாய் நின்றால்தானே?

அந்த ஆறேழுலதான் இந்த ரஜ்ஜூ வந்து உட்கார்றது…மனசு பொருந்திப் போனா எல்லாமே பொருந்திட்டமாதிரிதான் அர்த்தம். அதுக்கு முன்னாலே எந்த எந்தக் கிரக விசாரம் நிற்கும்? அதைச் சொல்ல வந்தேன்…

உங்களை மலைபோல நம்பறேன் மாமா….எனக்குப் பரிபூரண சம்மதம்….

மத்த விபரங்களை அப்புறம் அவாளோட பேசிட்டுச் சொல்றேன்.. வச்சிடட்டுமா…? தைரியமா இருங்கோ…எல்லாம் நல்லபடியா முடியும்…..உங்க பொண்ணும் நிச்சயம் சம்மதிப்பா…வேளை வந்தாச்சு….

டொக்கென்று சத்தம் கேட்டது எதிர் வரிசையில். பேச்சு முடிந்தது.

ஒரு நிமிடம் கண்ணை மூடிக் குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டாள் பிச்சு. உடம்போடு உண்டான சிலிர்ப்பு. தன்னை மீறிக் கலங்கிய கண்கள்.

 ங்கே….

உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அங்கிள்….இத முடிச்சுக் கொடுத்ததுக்கு…நீங்களே பார்த்து,   பொறுப்பு எடுத்துண்டு சொன்னதுக்கு என்னோட பணிவான நமஸ்காரங்கள். அவருக்குக் கொஞ்சம் கால் ஊனம்ங்கிறதை மட்டும்  அம்மாட்ட சொல்ல வேண்டாம்…. …அது  அவ்வளவாத் தெரியாது. உன்னிப்பாக் கவனிச்சிப் பார்த்தாத்தான் புரியும்… பின்னாடி நான் சொல்லிச் சமாளிச்சிக்கிறேன்...கல்யாணம் ஆனப்புறம் என்ன…சரின்னு போய்த்தானே ஆகணும்…என் மனசுக்குப் பிடிச்சிப் போச்சு அவரை. மன ஊனம் இல்லாத நல்ல மனுஷன் . ரொம்ப வருஷப் பழக்கம் அவர். துளிக்கூடத்   தெரியாது எங்க அம்மாவுக்கு. எப்டிச் சொல்றதுன்னே சில வருஷத்தைக் கழிச்சிட்டேன்…அவரும் என்னை நம்பியே இருந்திட்டார். அந்தளவுக்கு ரெண்டு பேரும் மனசு ஒன்றிப் பழகிட்டோம்…என் கூட வேலை பார்த்தவர்தான். அப்புறம் ஃபேமிலிக்காக மாறுதல்ல போயிட்டார். ஆனா மனசு மாறவே இல்லை.இனி மீதிக் காலமும் அவரோடவே போயிடட்டும்ங்கிற  முடிவுக்கு நானும் வந்திட்டேன். நான்தானே வழிவிடணும் எங்காத்துக்கு?குத்துக்கல்லா இருக்கிறவ நான்தானே?  அதத்தானே அம்மா சொல்லிச் சொல்லிக் குத்திக் காட்டறா…!  மனசுதான் வாழ்க்கை….மனக்கோணல் இல்லாதவாளோட நிச்சயம் சந்தோஷமா வாழ்ந்திடலாம்ங்கிற நம்பிக்கை எனக்குப் பரிபூர்ணமாயிருக்கு….அது போதும்…-கண்களில் நீர் பனிக்க வைதேகி அவரை விழுந்து நமஸ்கரித்தாள்.

உனக்குப் பெரிய்ய்ய மனசும்மா….என்று நெஞ்சுருகக் கூறி  இருகரங்களாலும் மனசார ஆசீர்வதித்தார் அவர். நீ கொடுத்த அந்தப் பையனோட ஜாதகத்தை உன் தம்பி குறிச்சிருந்தானாக்கும்…அதக் குறிப்பாப் பாருங்கோன்னு நானும் சொல்லியிருந்தேன்….என்ன பண்ணினாளோ? . இப்போ உங்கம்மாட்டயே விலாவாரியாப் பேசியாச்சு….காரியமும் முடிஞ்சமாதிரிதான்…சந்தோஷம்தானே…?

சந்தோஷம்ங்கிறதைவிட திருப்திங்கிறதுதான் சரி. மனசுக்குப் பிடிச்சதுலதானே திருப்தி வரும்… நான் கிளம்பறேன் அங்கிள்…ஏண்டீ  லேட்டுன்னு அம்மா துளைச்செடுப்பா….யாரோட ஊர் சுத்திட்டு வர்றேன்னு கூட ஒரு நாள் கேட்டிருக்கா…!  அப்பா இல்லாத குறைக்கு இப்படிப் பல வசவுகள்…எல்லாம் மரத்துப் போச்சு அங்கிள்….

அடுத்தாப்ல தம்பதி சமேதரா  நீங்க ரெண்டு பேரும்தான் ஒத்துமையா இருந்து உன்னோட தங்கைமார்கள் ரெண்டு பேத்தையும் படிப்படியாக் கரையேத்தணுமாக்கும்….அந்தப் பொறுப்புமே இனிமே உனக்கும் அவருக்கும்தான். அப்புறம்தான் உனக்கு  மொத்தமா விடியும்… ஞாபகம் வச்சிக்கோ…

கண்டிப்பா அங்கிள்…என் கடமையை நான் மறக்கவே மாட்டேன். பொறுப்பா எனக்கு உதவுறதுக்கு ஒரு தம்பியையும் வச்சிருக்கேனே…!  மலைபோல அவன் எனக்கு இருக்கான்! தங்கக் கம்பி…!!-என் மேலே ரொம்ப அக்கறை உண்மையிலேயே அவனுக்குத்தான்னு சொல்லணும்…!! பொருள் பொதிந்த ஒரு புன்னகையை அவரைப் பார்த்து உதிர்த்துவிட்டு விடைபெற்றுக் கொண்டாள் வைதேகி.

ரயில் நிலையம் அருகே அமைந்த அந்தத் திறந்த வெளிக் காலனி வழியே நுழைந்து அவள் நடந்து வந்து கொண்டிருந்த போது விரிந்து கிடந்த  தண்டவாளங்கள் தொலைதூரத்தில் ஒன்றுகூடி நீண்டிருப்பதைக் கண்ணுற்றாள்.    

 ------------------------------

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...