19 மார்ச் 2024

 

============================
உன்னைக் கரம் பிடித்தேன்..நாவல்-விமர்சனம் -

திரு.லோகநாதன் பாலமுருகன்
*************************************
இந்த நாவல், திரு உஷாதீபன் அவர்களால் புனையப்பட்டது. இந்த நிகழ்காலத்திற்கு ஒத்த நாவல் என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் அவர் இந்த நாவலில் எடுத்துக்கொண்ட கதைக்களமானது இன்றைத் தலைமுறைப் பற்றியது. புதியதாகத் திருமணம் முடித்த தம்பதியர், திருமணத்திற்குப் பின் எப்படி நடந்து கொள்கின்றனர், அதனால் என்னென்ன நிகழ்வுகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அவர்களது மனப் போராட்டத்தை அப்படியே ஒரு வெள்ளித்திரையில் படமாகப் பார்த்த மாதிரி சித்தரித்திருப்பார் திரு உஷாதீபன் அவர்கள். நாவல்கள் படித்திருக்கிறேன் அவைகள் குறைந்தது பத்து நாட்களாவது ஆகும் முழுமையாகப் படித்து முடிப்பதற்கு. ஆனால் இவரது நாவல் திரு உஷாதீபன் அவர்பளின் நாவல் எப்படி இருந்தது என்றால்? ஒருவன் நல்ல பசியில் இருக்கும் போது உணவகத்திற்குப் போய், அவன் முன் பல தரப்பட்ட உணவை அவன் முன் வைத்தால் எப்படி இருக்கும்? ஒரு மினி மீல்ஸ் சாப்பிட்டால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது. ஏனென்றால் ஒரு சரியத் தட்டில் புலி சாதம், தேங்காய் சாதம், குழம்பு சாதம், தயிர்ச் சாதம் போன்ற பல தரப்பட்ட கலவையை நம்மால் சுவைத்து உண்ண முடியும் அதுபோல இந்த நாவல் (உன்னைக் கரம் பிடித்தேன்) என்ற அவருடைய நாவலில் பல சுவாரசியமான விஷயங்களைக் கையாண்டிருப்பார்.
புதிதாகத் திருமணம் முடித்த கணவன் மனைவி, அவர்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதனால் உண்டாகும் மனஸ்தாபங்கள், அதனால் வரும் சின்னஞ்சிறு சண்டை சச்சரவுகள் இவை அனைத்தையும் தெளிவாக தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணர்ந்திருப்பார். ஏன் அவர்கள் இடையில் இந்த கருத்து வேறுபாடுகள் என்றால்? இருவரும் படித்தவர்களே ஆனால் கணவனைக் காட்டிலும், மனைவி அதிகமாகச் சம்பளம் வாங்குகிறாள். அதனால் கணவனிடத்தில் ஒரு சிறிய தாழ்வு மனப்பான்மை நிலவி வருகிறது. கணவன் எது கூறினாலும் அதற்கும் ஒரு பதிலைத் தாயார் நிலையில் அவள் வைத்திருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
கணவன் சொல்லும் எந்த ஒரு விஷயமானாலும் அது அவளுக்கு மனைவிக்குப் பிடித்திருந்தால் மட்டுமே பதிலளிப்பது, இல்லையென்றால் பதில் ஒன்றும் கூறாமல் மௌனம் சாதிப்பது போன்ற சிறு சிறு நடவடிக்கையால் அவர்களது வாழ்வில் ஒரு பெரிய பிரிவு ஏற்படுகிறது. திடீரென்று இருவரும் ஒரு முடிவெடுத்து அவரவர் பெற்றவர்கள் வீட்டிற்கு வந்த விடுகின்றனர். எழுத்தாளர் இங்கு தான் அருமையாகக் கையாண்டிருப்பார், பெரும்பாலும் பெற்றவர்கள், தங்கள் பிள்ளை மற்றவர் மீது கூறும் குற்றச்சாட்டை முதலில் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் கதையின் நாயகன் மாதவனின் அம்மவோ அப்படி இல்லை மாறாக தன் மகனுக்கு முடிந்த மட்டும் நல்ல விதத்தில் கூறுகிறாள்.
மாதவனின் அம்மா மேலும் கூறினாள், உன்னை ஒருவனை நம்பி வந்தவள், புதிதாக ஒரு வீட்டிற்கு அவள் வரும் போது சிறு சிறு பேதங்கள் நிலவத்தான் செய்யும். நீதான் சற்று விட்டுக் கொடுத்துப் போகவேண்டும் என்று கூறுவாள். இதே போல் பெண் பிள்ளை வீட்டிலும், அவளிடம் அவளது தாய் நீ தனியாக வந்தது தப்பு, என்னவாக இருக்கட்டும் இங்கு வருவதானால் நீ உன் கணவனுடன் தான் வரவேண்டும் அதுவே முறை என்று அறிவுரை கூறுவார்கள். இந்த சிறிய பிரச்சனையால் அலுவலகத்தில் சரிவர அவனால் வேலை செய்ய முடிவில்லை, அவனது அலுவலகத்திலும் தெரியவந்தது இவர்கள் இடையே ஏதோ ஒரு கருத்து வேறுபாடு நிலவுகிறது அதனாலேயே மாதவனால் வேலை சரிவரச் செய்ய முடியவில்லை தனதானாலேயே விடுப்பு எடுத்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்குத் திருச்சிக்குச் சென்றுவிட்டான்.
எழுத்தாளர் அழகாக, அனாயாசமாக, தெள்ளத்தெளிவாகக் கதைக்களத்தை அமைத்திருப்பார். சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது என்பார்களே அஃது இந்த நாவலுக்குப் பொருத்தமாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவி( மாதவன், காமினி) ஒன்று சேர்த்தனரா, அப்படி அவர்கள் ஒன்று சேர்ந்தால் எந்த காரணத்திற்கு அவர்கள் ஒன்று சேர்த்திருப்பார். சற்று யோசியுங்கள்! ஆம் அஃது வேறு ஒன்றும் இல்லை பிரிந்து இருந்தவர்களை, அந்த பிரிவே அவர்களை ஒன்று சேர்த்தன. தனிமையிலிருந்து சிந்தித்ததனால் அவர்களது தவறை அவர்கள் உணர்ந்தனர், மனமானது தெளிவு பெற்றதனால் பிரிந்தவர் அவரவரைத் தேடி வந்து நாம் செய்தது தவறு. இனியும் இது போன்று தவறுகளைச் செய்கக் கூடாது என்று அவரவர் மனதில் உறுதி பூண்டனர். நாவலை முழுமையாகப் படித்தால் மட்டுமே அதிலிருக்கும் பல நுணுக்கமான விஷயங்கள் புரியவரும்.
-பாலமுருகன்.லோ-

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...