சிறுகதை 'ர ண ம்“ (தமிழ்ப்பல்லவி இதழ்-அக். - டிசம்பர் 2023)
அன்று வீட்டை விட்டு அநாதைபோல் வெளியேறிய
காட்சி கண் முன்னே அப்படியே நிற்கிறது. அதற்குப் பின் அம்மாவின் இறப்பிற்குக் காலடி
வைத்ததுதான்.
ஒரு நாள் இருந்திட்டுப் போகப்டாதா? அம்மா கேட்ட
அந்தக் கடைசிக் கேள்வி. கடைசி ஆசை என்றும் சொல்லலாம்.
எனக்கொண்ணும் இல்ல....அங்க சொல்லு....நா இருக்கிறதை
அவன் விரும்பல....- அம்மாவைப் பார்த்து உட்கார்ந்திருந்தவன்...விரல்களால் சைகை செய்தான்.
அதை அவள் புரிந்து கொண்டாளா என்று தெரியவில்லை.
கொண்டு தள்ளியாச்சு....அவ்வளவுதான்....பொறுப்பு
விட்டுது....என்று கூட நினைத்திருக்கலாம். அல்லது பெரியவன்ட்ட இந்த நிலைமைல என்னால
எப்படிச் சொல்ல முடியும்? எதுக்காக உடனே புறப்படுற? என்று மனதுக்குள் வேதனைப் பட்டிருக்கலாம்.
ஆனால் ஒன்று. அந்த நிலையிலும், தான் இருக்க வேண்டும் என்று அவள் மனம் விரும்பியிருக்கிறது.
அது போதும். அது ஒன்றே சாட்சி...தான் அவளைத் திருப்தியாய்த்தான் வைத்துக் கொண்டிருந்தோம்
என்பதற்கு. அதுதான் தனக்கு மட்டும் தெரிந்த ஒன்றாய்ப் போனதே...! எடுத்துச் சொல்லவே
யாருமில்லையே...! சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படவில்லையே!. ஆனால் அம்மா மட்டும்
புரிந்து கொண்டிருக்கிறாள்..! மூத்தவன் என்ன நினைக்கிறானோ அதுதான் சட்டம். அவன் என்ன
பேசுகிறானோ அதுதான் உண்மை. மற்றதெல்லாம் பொய். மற்றவர்களும் பொய்.
எப்படியோ....அவள் மனது விரும்பிய இடத்திற்கு
அம்மா வந்து சேர்ந்து விட்டாள்...இனி ஆவி பிரிந்தாலும் நிம்மதியாய்ப் போய்ச் சேருவாள்.
ஆத்மா சாந்தியடையும். ஆனால் அப்படி அவள் வந்து சேர்ந்ததற்கு, தான் காரணமில்லை. ஆனால்
நான்தான் காரணம் என்று அவன் சொல்கிறான். யார்...? பெரியவன். நான்தான் காரணம் என்று
ஸ்தாபித்திருக்கிறான். உருவாக்கி நிலை நிறுத்துகிறான். அதில் ஒரு பதட்டம் தெரிகிறது.
அவசரம் புலப்படுகிறது. பிறர் வாயை அடைக்கும் வன்மம் தெறிக்கிறது. யாரும் தன்பால் குறை
சொல்லி விட நேருமோ என்கிற கவனம் தெரிகிறது.முரணாய் நினைத்துவிடக் கூடக் கூடாது என்கிற
கவனம். உள்ளார்ந்த உண்மையை அறியக் கூடுமோ என்று அஞ்சுகிறான். அந்த ரகசியம் அவனுக்கு
மட்டுமே ஆனது. அது அவன் மன நியாயம். அங்கும் அவன் வைத்ததுதான் சட்டம். அது பொது நியாயமா
என்கிற கேள்விக்கு இடமில்லை. அவனது இருப்பே
அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது. அதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தாயிற்று.
பெரியவனுக்கு அந்தச் சலுகை கூட இல்லையென்றால் எப்படி? பெரியவா செஞ்சா பெருமாள் செஞ்ச
மாதிரி...! வாயைத் திறக்கப்படாது யாரும்!
உனக்கு
நீ நினைத்தது நடந்து போனது. ஆனால் எனக்கு? ஏன் இந்தக் கேவலம்? எதற்கிந்த அவமானம்? நான்
புறப்படுறேன்...அம்மாவிடம் கூடச் சொல்லிக் கொள்ள முடியவில்லை. அவள் தூங்குகிறாள் அல்லது
உடல்நோவில் மயங்கியிருக்கிறாள். ம்...கிளம்பு...கிளம்பு...விரட்டாத குறை...கொஞ்சம்
போனால் உன்னைக் கண் கொண்டு பாரக்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை...என்று கழுத்தைப்
பிடித்து வெளியே தள்ளினாலும் போச்சு...! கையில்
சூட்கேஸை எடுத்துக் கொண்டு வெளிப் போந்தபோது வாசல் கேட் வரை பம்மியவாறே பின்னாலே வந்து
சடாரென்று கேட்டை அடைத்துத் தாள்ப்பாளைப் போட்டானே? அந்தக் காட்சி மறக்குமா அல்லது
மறையுமா? அந்தச் சத்தந்தான் அழியுமா? பகைவனா
நான்? அல்லது இழி செயல் செய்தவனா? இனி இந்தப் படி மிதிக்கக் கூடாது என்பதுபோல் வெளியேற்றினால்?
அன்றைய அந்த அவமானம் வாழ்நாளில் மறக்குமா? கண் மூடும் வரை கூடக் கனவிலும் வந்து தாக்குமே?
சபையில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்களே...! வாய் மூடியிருந்தார்களே...!!
சுந்தர்...நீ இரு....நீ கௌம்பு....! கூரான அம்பு...நேராய்
வந்து நடு நெஞ்சிலே பாய்ந்து, பின்புறமாய் வெளியேறி விட்டது. நானென்ன சூடில்லாதவனா...அல்லது
சுரணையற்றவனா? பகைவனா? இதென்ன முகத்திலடித்தாற்போல்...? இப்படியும் நேரடியாக ஒருவனைப்
பார்த்துச் சொல்ல முடியுமா? ரெண்டு அடி கூட
அடித்து விடலாமே? வார்த்தைச் சூட்டினை எவன் தாங்குவது? .-இரவு முழுவதும் தூக்கம் விழித்து,
உட்கார்ந்தமேனிக்கே ஆம்புலன்ஸில் அம்மாவைக் கண்காணித்து விடிகாலை பொழுது புலரும் தருவாயில்
கொண்டு வந்து பாதுகாப்பாய்ச் சேர்த்தவனிடம்
சொல்லக் கூடிய வார்த்தையா இது? உடனே வெளியேறவில்லையாயின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி
விடுவானோ? நீ கிளம்பு... என்ற வார்த்தையின் தீர்மானம் அப்படியல்லவோ இருந்தது. அப்படி
நான் என்ன தவறு செய்தேன்? என்னோடு சேர்ந்து வந்தவன்தானே அண்ணா சுந்தரும்? அவனுக்கு
மட்டும் என்ன சலுகை? எனக்கு மட்டும் ஏன் இந்தக் கேவலம்? அந்த அவமானம் அவனுக்குமில்லையா?
இவன் நினைப்பில் என்னை மட்டும் ஏன் குறி வைக்கிறான்? கண் கொண்டு பார்க்கக் கூடத் தயாரில்லை
என்பதுபோல் வெளியேற்றி விட்டானே? இது ஏன் மற்ற எவருக்கும் பாதிக்கவில்லை? சே...சே...அப்டி
அனுப்பாதே...வெளியேத்துற மாதிரி...! அது தப்பு...! – சொல்ல ஒருவர் இல்லையே? வாழ்நாளில்
மறக்குமா இந்தக் காட்சி? வீடே மயான அமைதி. அண்ணியோ, அண்ணாவோ ஒரு வார்த்தை சொல்லவில்லை.
யாரும் தடுக்கவில்லை.. ஒரு வேளை அவர்களுக்கும் போனால் போகட்டும், தொலையட்டும் என்று
இருந்திருக்குமோ? மனிதர்களின் முக்கியமான பிரச்னையே இந்த மனசுதான். எல்லாம் பௌதீக ரீதியிலானவை.
இதில் இயற்கை எப்போதும் வெல்வதில்லை. அந்த மாதிரி ஒரு கேவலத்தை வாழ்நாளில் எப்போதும்
எதிர்நோக்கியதில்லை. அதுவே முதன் முறை.
டிக்கெட் கூட ரிசர்வ் செய்யவில்லை. திடீரென்று
போனால் எப்படி? போய் நின்றால் எப்பொழுது எந்த
பஸ்ஸில் ஏற முடியுமோ? எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ? கிடைக்குமோ கிடைக்காதோ?
ராத்திரி பூராவும் தூங்கவில்லை. பகலில் விரட்டியடித்தாயிற்று. ஒரு மணித் துளி கூட ஓய்வின்றி
ஆளைக் கிளப்பியாயிற்று. கண்ணிலேயே முழிக்காதே என்பதுபோல்...! கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளக்கூட இல்லை. படுத்தால்
நீட்டி நிமிர்ந்து விடுவான் என்றுதான் விரட்டி விட்டானோ? நல்லவேளை சோறு போட்டான். அதையும் வெட்கமில்லாமல்
தின்றேனே..... பாவி...! பசி பத்தையும் மறைத்து விடுமோ? அதையும் வெளில பார்த்துக்கோ...என்று சொல்லவில்லை.
சொல்லவில்லையா, சொல்லத் தெரியவில்லையா? தெரிந்திருந்தால் சொல்லியிருப்பான்தான்...!
அந்த மட்டும் நெஞ்சின் மூலையில் எங்கோ கொஞ்சம்
இரக்கம் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறது. அது பெரும் பாவமாகிவிடும் என்று தோன்றியிருக்குமோ
என்னவோ? தன் மன நியாயத்தை நிலை நிறுத்தத் துடிப்பவனுக்கு மற்ற எவையும் ஒரு பொருட்டாயிருப்பதில்லை.
அல்லது கோபம் கண்ணை மறைக்கிறது.! ஈகோ முன்னின் தடுக்கிறது. தன் தவறை மறைத்துக் கொள்வதில்
ஏற்பட்ட முனைப்பு அது...! அதே சமயம் யாரும் அதைக் கண்டு பிடித்துவிடக் கூடாது. அதனால்
பழியும், பாவம் ஓரிடத்திலேயே குவியும் அவலம்...!
சட்னு
சோத்தப் போட்டு ஆள வெளில அனுப்பு என்று அண்ணியிடம் சொல்லியிருப்பானோ? எனக்கு மட்டும்
தட்டை எடுத்து வைத்து சாப்பிட வா என்றார்களே...? எதற்கு அத்தனை அவசரம்? ஆளை வெளியேற்றவா?
இத்தனை திட்டமிடலா இதற்கு? வந்து சேரும் முன்னே பேசி வைத்திருப்பார்களோ? அந்தச் சோற்றிலும்
கை வைத்தேனே? என்னைச் சொல்லணும். அந்தப் பொழுது பட்ட கேவலத்தைவிடவா பசி பெரிது? கையை
நனைக்காமல் ஏன் வெளியேற முடியவில்லை? அதுவும் அவன் மீது வைத்திருந்த மரியாதையா? அண்ணி
மீது கொண்ட மதிப்பா?
அறையில்
சுந்தர் அண்ணா நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இருக்கும்
உடல் அயற்சிதானே எனக்கும்? அவனும் என்னோடு பயணித்து வந்தவன்தானே? நானும் சொந்தத் தம்பிதானே?
அவனுக்குக் கிடைத்த அந்தச் சலுகை எனக்கு மட்டும் ஏன் இல்லை? சலுகை வேண்டாம். ஒரு மனிதாபிமானம்
வேண்டாமா? மனித நேயம் வேண்டாமா?
எதை
மறைக்க இந்த நாடகம்? எதை திருப்தி செய்ய இந்தச் செயல்பாடு? எந்தக் கேள்விக்கு பதில்
சொல்லி இந்த நடவடிக்கை? முரணான நடவடிக்கைகளினால் ஒரு தவறான விஷயத்தை மறைத்து விட இயலுமா?
இதுதான் சரி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு செய்வதனால் ஒரு விஷயம் நியாயமாகி விடுமா?
மனசாட்சி ஒன்றைச் சொல்ல, செயல் வேறு மாதிரி இருக்க, அந்த மனசாட்சி மறைந்து விடுமா?
உறங்கப் போய் விடுமா? அல்லது அதற்கு ஒத்தடம்
கொடுத்ததுபோல் ஆகி விடுமா? எது சரி என்று முடிவெடுப்பதிலும் மனிதனின் மனம் தடுமாறி
அங்கேயும் சுயநலம் தலை நீட்டத்தானே செய்கிறது? அது சுயநலம் என்ற பேரில் இல்லாமல் நியாயம்
என்ற பெயரிலான முத்திரை குத்தப்பட்டால் அது நியாயமாகி விடுமா? இதுதான் நியாயம் என்பது
ஒருவன் தனக்குத்தானே நிர்ணயிப்பதா? அவரவர்
மனதுப்படிதான் நியாயங்கள் நிலை நிறுத்தப்படுகின்றன. அவரவர் மனதுப்படிதான் நியாயங்கள்
வரையறுக்கப்படுகின்றன. மனிதன் என்றும் சுயநலமானவன். அவனைப் பாதிக்காதவரை உரக்கச் சொல்லும்
நியாயம் வேறு, பாதிப்பு என்று வரும்போது விவரிக்கப்படும், சித்தரிக்கப்படும் அல்லது
ஒதுங்கும் நியாயங்களும் உருவாக்கும் காட்சிகளும் வேறு வேறு. தன்னைப் பாதிக்காதவரை அது
சரி. அடுத்தவரைப் பாதித்ததென்றால் பரவாயில்லையா? தனக்குத் தேடிக்கொள்ளும் நியாயத்தால்
எதிராளி எந்நிலை அடைந்தாலும், எப்படிச் சீரழிந்தாலும் தேவலையா? அதுபற்றிக் கவலையேயில்லையெனில்
அதுதானே சுயநலம்?
ஏன்
ரமணனை உடனே அனுப்பிச்சே...? – அம்மா கேட்கவா போகிறாள்? அவளே சக்தியின்றிக் கிடக்கிறாள்.
தன் பாடே இன்றோ நாளையோ என்று கிடக்கிறது அவளுக்கு.
பிராணன் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. நாட்கள் எண்ணப்படுகின்றன. உயிர் ஆட்டம் கண்டு போனது.
எதைக் கேட்டு என்ன நடக்கப் போகிறது? அல்லது கேட்டால்தான் மாறி விடப் போகிறதா? வந்து
சேர்ந்ததே போதும். இவன் மன விளையாட்டுக்கு, ஊசலாட்டத்துக்கு, மனைவி சொல்லில் நியாயம்
இருக்கு என்று மதி கெட்டவனுக்கு, இன்னும் கொஞ்ச நாட்கள் மிஞ்சிப் போனால்..! .அதற்குள்
ஒரு மாற்றம் வேணுமா? இது தேவையா? இதைச் செய்யணுமா?
என்று யோசியாமல், அம்மாவின் விருப்பத்தைக்
கேட்காமல், அவளையென்ன கேட்கிறது, போ என்றால் போக வேண்டிதான் என்பதாய் தானே வீராப்பாய்
தீர்மானமாய் ஒரு முடிவு செய்து கொண்டு, கடைசி நேரத்தில் கதியிழந்த தாயை “போய்ச் சின்னவனிடம் இரு...” என்று விரட்டினால் அந்தத் தாய் மனம் என்ன
பாடுபடும்? எவ்வளவு நொந்திருக்கும்? எத்தனை சாபமிட்டிருக்கும்?
இங்கே
இறந்து, கடைசிக் காரியம் அத்தனையும் தங்கள் தலையில் விழும்...அதிலிருந்து தப்பித்ததுபோல்
ஆகட்டும் என்று அதுநாள் வரை பொறுமையாய் வைத்துப் பாதுகாத்தது மறந்து, சரீர ரீதியாய்
உதவிக் கரமாய் இருந்தது மறந்து, கடைசி நேரத்தில் வந்த பொருத்தமற்ற, காலம் ஒப்புக் கொள்ளாத
யோசனையை, காரியத்தை, படுக்கையில் விழும் நிலையில்
தாயை இடம் மாற்றம் செய்யும் விபரீதத்தை சரி
என்று ஒப்புக் கொண்டானே? இதை என்னென்று சொல்வது? மனசு இணங்கிப் போனால் அறிவு வேலை செய்யாதோ?
இக்கால கட்டத்தில் மனையாளின் ஆலோசனை சரியா? என்று ஏன் அவன் மனம் சிந்திக்கவில்லை? சரி
என்று தலையாட்டி எதற்காகக் குருட்டுத்தனமாய் இப்படி ஒப்புக் கொள்ள வைத்தது? கேடு காலம்
என்று வந்தால் புத்தி மந்தித்துப் போகும் என்பது எவ்வளவு உண்மை?
நானேதான்
சாகிற வரைக்கும் வச்சிக்கணும்னு என்ன தலவிதியா? மூத்தவன்னா அவனுக்கு மட்டும்தான் பொறுப்பா?
மத்தவங்களுக்கு இல்லையா? எம் பொண்டாட்டி மட்டும் கிடந்து சாகணுமா? அவங்களெல்லாம் சுகமா
இருக்கணுமா? எங்களுக்குக் குழந்தை எதுவும் இல்லைங்கிறதுக்காக நாங்கதான் பொறுப்பா? நாங்க
ஃப்ரீயா இருக்கக் கூடாதா? இருக்க வேண்டாமா? எங்களுக்கு மட்டும் என்ன தலைவிதி?
இந்த
யோசனை காலம் போன கடைசியிலா வருவது? தள்ளாத வயதில் தாயை அங்க போ, இங்க போ, அவன்ட்டப்
போ, இவன்ட்டப் போ என்று தள்ளி விடுவது தப்பான செயலில்லையா? மனசாட்சியைக் கொன்ற காரியம்
இல்லையா? எப்போதோ யோசித்து, முறை வைத்து செய்திருக்க வேண்டியது...அப்போது அதெல்லாம்
வேண்டாம்...என்னிடமே இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொன்ன மனசுதான் இன்று இப்படிப்
பேதலித்துத் தடுமாறுகிறது. அந்தத் தாயின் மனம் என்ன பாடுபடும்? மூத்தவன்ட்டத்தான் இருக்கணும்
என்று வந்து சேர்ந்தவர்கள், ஆயிரந்தான் இருந்தாலும் அவனுக்குத்தான் பொறுப்பு, அவன்ட்ட
இருக்கிறதுதான் எங்களுக்குப் பெருமை, நீங்க ரெண்டு பேரும் அவனுக்கப்புறம்தான் என்று
தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட பெரியவனா இன்று சீவன் நிற்கும் காலத்தில் இந்தக்
காரியத்தைச் செய்கிறான்? அப்பாவைக் கடைசிவரை வைத்துப் பாதுகாத்துக் கரையேற்றியவன்,
எனக்கு மட்டும் ஏனிப்படி மறுதலிக்கிறான்? தந்தை செய்த பாக்கியம் தாய் செய்யவில்லையா?
பெற்றவளல்லவா நான்? என்னை மட்டும் ஏனிப்படி காலம் போன கடைசியில் மற்ற பிள்ளைகளிடம்
அனுப்பப் பார்க்கிறான். இந்த அலைக்கழிப்பு தகுமா? படுக்கையில் விழுந்து விட்ட என்னைப்
பராமரிப்பது கஷ்டம் என்று முடிவு செய்து விட்டானோ? பீ, மூத்திரம் எவன் எடுக்கிறது?
என்று பழி சொல்கிறானே?
ஒரு நர்ஸ் சொல்லியிருக்கேன்...தினசரி
வந்து அம்மாவுக்கு வேணுங்கிறதைச் செய்துட்டுப் போறதுக்கு...பெட் ஃபேன் வாங்கி வச்சிருக்கேன்....அந்த
நர்ஸ் காலைல ஏழு மணிக்கு வந்து கவனிச்சி, எல்லாம் செய்திட்டுப் போய்டுவா...சாயங்காலம்
ஒருதரம் வருவா....பதினஞ்சாயிரம்....நீங்க ரெண்டு பேரும் பணம் அனுப்பிடணும்....கரெக்டா...தாமதம்
கூடாது.... – இப்படித்தானே சொன்னான். சொல்லியிருந்தான்? அவர்கள் மறுக்கவில்லையே? பின்
ஏன் மாறினான்? இந்த யோசனையை ஏன் மாற்றினான்? தலையணை மந்திரம் தாமதமாக வேலை செய்கிறதா?.
எது நியாயம், எது அநியாயம்? எது சரி, எது தவறு? என்று தொட்டதற்கெல்லாம் விலாவாரியாய்ப்
பேசுபவனுக்கு, நியாயத்தை எனக்கு மட்டுமே கண்டுபிடிக்கத் தெரியும், என்னால் மட்டுமே
செய்ய முடியும் என்று இறுமாப்போடு இருந்தவனுக்கு புத்தி ஏன் இப்படி மாறிப் போயிற்று?
எதற்கு இப்படி பேதலித்தது?
சுந்தர்.....நீ
என்ன செய்வியோ, ஏது செய்வியோ...தெரியாது.....நான் இங்கிருந்து ஃபோன் பண்ணிப் பேசி ஃபிக்ஸ்
பண்ணிட்டேன்.....கித்வாய் நகர் ஆஸ்பத்திரிக்கு அடுத்தாப்ல....நிறைய வாடகை ஆம்புலன்ஸ்
நிற்கும். அதுல இந்த நம்பருள்ள வண்டியப் பேசி முடிவு பண்ணியிருக்கேன். டிரைவர் பெயர்
முத்துப்பாண்டி...அவன்ட்டப் பேசின பணத்தைக் கொடுத்திரணும்...ராத்திரி எட்டரை மணிக்கு
வீட்டுக்கு வந்திடுவான்...ஒன்பதுக்குள்ள அம்மாவோட நீங்க கிளம்பியாகணும். அப்டு மெட்ராஸ்
வரைக்கும் சைரனோடதான் வருவான்....வண்டிலயே ஆக்ஸிஜன், டிரிப்ஸ்க்கு ஏற்பாடு பண்ணியிருக்கு.
ஒரு நர்ஸூம் கூடவே வருவாங்க....அவங்க அம்மா கண்டிஷனக் கவனிச்சிப்பாங்க....காலைல அஞ்சரைலர்ந்து,
ஆறுக்குள்ள மெட்ராஸ் ரீச் ஆயிடும். வீட்டுக்குக் கொண்டு வந்து பேஷன்டை இறக்கிட்டு வண்டி
போயிடும். இதுதான் ப்ளான்....
எதுக்குண்ணா
இப்டி திடீர்னு? நான்தான் பார்த்திட்டிருக்கேனே...டாக்டரை வீட்டுக்கே வரவழைச்சிப் பார்க்க
வச்சு, மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்து, சரியாத்தானே போயிட்டிருக்கு....நா ஒண்ணும்
முடிலன்னு சொல்லலியே...?
எங்க
சரியாப் போயிட்டிருக்கு? ஒரு வாரமாச்சு......நான் தூங்கவேயில்ல....உடம்பு கண்டிஷன்
அவ்வளவு மோசமாயிருக்கு...என்னால முடில....செத்துருவேன் போல்ருக்குன்னு புலம்புறே.....அதென்னவாம்.?
அதுக்கு என்ன அர்த்தமாம்? ....அம்மாவக் கொண்டு விட்டு ஒரு மாசம் கூட ஆகல....அதுக்குள்ளேயும் ஐயோ...அப்பான்னா என்ன அர்த்தம்?
செத்துருவேன்னா என்ன அர்த்தம்? நான் வருஷக் கணக்கா அப்பாவப் பார்த்துக்கல? கரையேத்தல?
நாங்க இத்தனை வருஷமாச் செத்தது பரவாயில்லயா?
செத்துத்தான் போயேன்....தாயாரைப் பார்த்துக்கிறதுல என்ன அத்தனை சலிப்பு? வெட்கமாயில்லே...!
நீ மனுஷன்தானா? நாலு நாள் தூங்காட்டி என்ன, செத்துருவியா? அப்டியே உருகுற...? அப்போ
வருஷக் கணக்கா நாங்க பட்டதெல்லாம் என்னவாம்?
இவன்
அதிர்ந்துதான் போனான். எதற்காக ஒரு பேச்சுக்கு யதார்த்தமாய்ச் சொன்னதை இப்படிப் பெரிதாக்குகிறான்?
பார்க்க மாட்டேன் என்று நான் சொல்லவேயில்லையே...? யாரேனும் ஒருவர் உதவிக்கு இருந்தால்
தேவலை என்றுதானே சொன்னேன்...அது தப்பா? அதை அவனிடம் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாரிடம்?
அதுதான் தகவல் சொல்லி சுந்தர் அண்ணா வந்தாயிற்றே...மாற்றி
மாற்றி ஓய்வெடுத்துக் கொண்டு, நாங்களே பார்த்துக் கொள்ள மாட்டோமா? எதற்காக இந்த அவசரம்?
ஏனிந்தக் கோபம்? என்னைப் பேசவே விடாமல் .போனை வைத்து விட்டானே...? என்ன காரணம்? அத்தனை
வெறுப்பு வந்து விட்டதா? தேவையில்லாமல் எதற்கு இந்த விரட்டு விரட்டுகிறான்? அவனுக்கே
செயற்கையாயில்லையா இது? குறுக்கே பேசவே விடவில்லையே? என்ன காரணம்? மனசாட்சியின் விரட்டல்...!
அதன் படபடப்பு....
கூப்பிட்டுட்டான்
பார்த்தியா? அவனுக்கு மனசு கேட்காது....எனக்குத்தான் தெரியும் அது. மெட்ராஸ்ல அவ்வளவு
பழகியிருக்கேனாக்கும்....தினம் இருபது முப்பது பேர் வரிசையா வந்துண்டேயிருப்பா தெருவுல..என்ன
மாமி...எப்டியிருக்கேள்...ன்னு வீட்டுக்குள்ளே நுழைஞ்சு விசாரிக்காமப் போகவே மாட்டா...அதுதான்
மனசுக்கு ஆரோக்யம் எனக்கு. நீங்க ரொம்பப் புண்ணியம் செய்தவா...பெத்த பிள்ளை இப்டி பக்கத்துலயே
வச்சிக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிறதுக்குக் கொடுத்து வைக்கணுமே...நல்ல பிள்ளையைப்
பெத்துருக்கேள்....ன்னு வாயாரப் புகழ்ந்து சொல்லிட்டுப் போவா...அவனை வாய் நிறைய ஆசீர்வாதம்
பண்ணிட்டுக் கிளம்புவா...அதை இழக்கலாமா? அவனுக்கு மனசு கேட்காது...உங்க மன்னியிருக்காளே...அவளும்
நல்லவதான்...இரக்கச் சிந்தை நிறைய உண்டு அவளுக்கு....அவ என்ன சொன்னா கேட்டியோ...எங்கிட்டப்
பேசினபோது....?
ரெண்டு
மூணு நாளா என்னென்னவோ கெட்ட கனவா வருதுங்கிறார்....தூக்கத்துல கன்னா பின்னான்னு புலம்புறார்....தெரியாமத்
தப்புப் பண்ணிட்டேனேன்னு எங்கிட்ட அழறார்..தவியாத் தவிக்கிறார்.....உன் பேச்சைக் கேட்டு
இப்டி கடைசி நேரத்துல அசட்டுத்தனம் பண்ணிட்டனேன்னு புலம்பறார்..என்னைத் திட்ட ஆரம்பிச்சிட்டார்...இப்டியா
யோசனை சொல்வேன்னு கை நீட்டிட்டார்....வர்றவா போறவால்லாம்....என்னது...அம்மாவ அனுப்பிச்சிட்டேளா....?
தம்பிட்ட அனுப்பிச்சிட்டேளா....? இப்டித் தள்ளாத வயசுல இடமாற்றம் செய்யலாமா மாமா? யாரு
உங்களுக்கு இந்த அசட்டு யோசனையைச் சொன்னா? என்று ஆளாளுக்குக் கேள்வி கேட்டுத் துளைச்சிட்டா... எல்லாருக்கும்
ஒரே வருத்தம். ஒரு மாமி உட்கார்ந்து அழவே ஆரம்பிச்சிட்டா...எங்கம்மாவப் பார்க்கிறாப்ல
இருக்கும்...மனசுக்கு அவ்வளவு ஆறுதல் பாட்டிட்டப் பேசிட்டுப் போனா...அதக் கெடுத்துட்டேளேங்கிறா.....
பாட்டியிருந்தா நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிண்டு போலாம்னு வந்தேன். இப்டியாயிடுத்தேன்னு
மூக்கைச் சிந்திண்டு போறா.....
அதுலேர்ந்து
அவருக்கு மனசே சரியில்லை....ரெண்டு நாளா பைத்தியம் பிடிச்ச மாதிரியிருக்கார்....சரியாச்
சாப்பிடுறதில்லை...தூங்குறதில்லை...ராத்திரி இருட்டுல ஒத்தையா நடமாடிண்டேயிருக்கார்...தப்பு
செய்த மனசு குத்தறது...குத்திக் கிழிக்கிறது....இப்டியே போனா அவருக்கே என்னமாவது ஆயிடுமோன்னு
எனக்கு பயமாயிருக்கும்மா....நீங்க இங்கயே திரும்ப வந்திடுங்கோம்மா....வண்டி ஏற்பாடு
பண்ணச் சொல்லியிருக்கேன்...பண்ணிடுவார்...உடனே கிளம்பி வந்திடுங்கோ...நர்ஸ் வச்சுப்
பார்த்துக்கலாம்...ஒண்ணும் சிரமமில்லை....தயவுசெய்து தள்ளிப் போடாதீங்கோ....இப்டித்
தப்பான யோசனையைச் சொல்ற புத்தி எனக்கு எங்கிருந்துதான் வந்ததோ...? கிறுக்கு மாதிரிச்
சொல்லிட்டேன்...புத்தி மழுங்கிப் போச்சு...என்னை மன்னிச்சிடுங்கோ...நீங்க இங்க திரும்ப
வந்தாத்தான் எங்களுக்கு நிம்மதி......ன்னு அடிச்சிக்காத குறையா அழுது தீர்த்துட்டா...தெரியுமோ?
– அம்மாவின் முகத்தில் அப்படியொரு பெருமிதம். சந்தோஷம். பாதி வியாதி இப்பொழுதே குறைந்து
விட்ட மாதிரி.
இப்பயும்
சொல்றேன்...நீ இங்கயே இருக்கிறதானால் இருக்கலாம். கடைசிவரை நான் உன்னைப் பார்த்துக்கிறேன்...இது
சத்தியம்.....
வேண்டாம்டா...எதுக்கு
வீணா...? எனக்கு அங்கேயிருந்தாத்தான் மனசுக்கு சரியாயிருக்கும். கொஞ்சம் வியாதியே குறைஞ்சா
மாதிரி ஆயிடும். நாலு மனுஷா வந்து போகுற இடமில்லையா? அதுவே ஆரோக்யம்... ஆயிரந்தான்
ஆனாலும் பெரியவன்ட்ட இருக்கிறதுதான் சரி...அதுதான் எங்களுக்கு மதிப்பு..பெருமை..அவனுக்கு
சிரமம்தான்...ஆனாலும் அதுதான் சரி...அதுதான் இடம்....அந்த வீடுதான் என்னோட கோயில்...அவர்
உயிர் போன எடத்துலயே, அந்த வீட்டுலயே என் ஆவியும் பிரியட்டும்....
அம்மாவின்
அந்தக் கடைசி வார்த்தைகள் இவன் வாயை அடைத்து விட்டது. அம்மா உயிரே அங்குதான் இருக்கிறது.
வேற வழியின்றி, வக்கில்லையே என்றுதான் வேதனையோடு
கிளம்பி வந்திருக்கிறாள். ஒட்டாமல் கிடந்த வேளையில் மறு பயணம் சித்தித்து விட்டது.
அதுவும் அவள் பிரார்த்தனையின் பலன்தானோ என்னவோ? இப்போதுதான்
திரும்பவும் அழைத்தாயிற்றே....! போ என்று சொன்னவன் இப்போது உடனே திரும்ப வந்து விடு
என்கிறான். அந்தப் “போ“ இப்போது மறைந்து விட்டது. அதிலிருந்த வன்மம் செத்து விட்டது.
மூத்தவனுக்கு எந்தச் சலுகையும் உண்டு. மற்றவர் எல்லாம் ஒரு படி கீழ்தான்.
வண்டி எப்ப வரும்? கண்டிப்பா வந்திடும்ல...?
ஒன்பதுக்குள்ள கிளம்பிட்டோம்னா, பொழுது விடியறதுக்குள்ள போய்ச் சேர்ந்துடலாம்....ஊர்
முழிக்கிறதுக்குள்ள வீட்டுக்குள்ள புகுந்துக்கலாமே..! ஸ்டெர்ச்சர்ல படுக்க வச்சித்
தூக்கித்தானே வேன்ல ஏத்துவா? இருக்கட்டும் பரவால்ல...நான்பாட்டுக்கு தூங்கிண்டே வந்துடுவேன்....நீ
வர்றதானே? சுந்தரோடு நீயும் வா...அங்க கொண்டு போய் என்னைச் சேர்த்திடுங்கோ...புண்ணியமாப்
போகும்...குழந்தைபோல் புலம்புகிறாள்.
எல்லாம்
சரி...ஆனால்....ஏன் எனக்கு அந்தக் கேவலம், அவமானம்? நீ கிளம்பு என்று, இறங்கிச் சில
மணி நேரத்தில் சொல்லி, ஒரு அநாதையைப் போல்
கையில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு யாருமே விடை கொடுக்காமல் அமைதியாக, தலைகுனிந்தவாறே
ஏதோ கொலைக் குற்றவாளி போல் வாசலைத் தாண்டியபோது, ஆளை வெளியே தள்ளிய வேகத்தில் வெறுப்போடு
அந்தக் கேட்டை டமால் என்று கண் முன்னே, சொந்தத் தம்பியின் மூஞ்சிக்கு முன்பு சாத்தித்
தாழ்ப்பாளைப் போட்டானே...! அது ஏன்? ஏன் அப்படிக் கேவலப்படுத்தினான்? அப்படிச் செய்வது
தவறு என்று ஏன் அன்று அவனுக்குத் தோன்றவில்லை? எது அவன் புத்தியை மறைத்தது? மழுங்கடித்தது?அப்படி
என்ன பாவம் செய்தேன் நான்? என்ன தவறு செய்தேன்? சுந்தர் அண்ணாவும் இந்த மொத்த நிகழ்விலும்
என் கூடவே இருந்திருக்கிறானே.....அவன் மீது ஏன் பொட்டுக் கோபம் எழவில்லை? அதெல்லாம்
வேண்டாம்...நாங்க ரெண்டு பேருமே இங்க இருந்து பார்த்துக்கிறோம்...ஒண்ணும் பிரச்னையில்ல...-அவனும்
சொல்லவில்லையே? அது குற்றமாகப் படவில்லையே? அவன் இந்தப் படத்திற்குள் வரவேயில்லையே?
மொத்த நிகழ்விற்கும் பலிகடா நான்தானா? அவன் மனசாட்சிக்கு அவன் பதில் சொல்லிக் கொள்ள,
ஒத்தடம் கொடுக்க, தன் தவறைத் தானே மறைத்துக் கொள்ள...நான் பலிகடா ஆக்கப்பட்டேனா...?
கல்யாணமாகி, குடும்பம் உள்ள, ஒரு குழந்தைக்குத் தந்தையான என்னை, இந்த வயதில் இப்படிக்
கேவலப்படுத்தி ஒரு அகதிபோல் வெளியேற்றி அனுப்பி
விட்டானே? ஆறுமா எனக்கு?
மறக்க
முடியாதது...!.காலத்தால் அழியாதது....!! அந்த அவமானம் ஆயுசுக்கும் மறக்காது... மறையாது.
உள்ளுக்குள் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கிறேன் நான். யாருக்குத் தெரியும் என் ரணம்?
ஆறப் பொறுக்காத நிகழ்வுகளெல்லாம் இப்படித்தான் விபரீதங்களைத்
தாங்கி நிற்குமோ?
----------------------------------------------------------------
உஷாதீபன், (ushaadeepan@gmail.com) எஸ்.2 – இரண்டாவது தளம்,
(ப்ளாட் எண்.171,
172) மேத்தா’ஸ்
அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்), ராம் நகர்
(தெற்கு)12-வது பிரதான சாலை, - மடிப்பாக்கம், சென்னை – 600 091.
(செல்-94426 84188).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக