சிறுகதை “மீதம்” சிறுகதை -உயிர் எழுத்து நவம்பா் 2023
நான் சொன்னது புரிஞ்சிதா? மனசுல இருத்திட்டியா??
– மாடியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சத்தமின்றிக் கேட்டார் பிரானேஷ்வரன்.
நா
வாயே திறக்கலை…நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம்….என்றாள் மிருணாளினி.
ஆனாலும்
சந்தேகமாகத்தான் இருந்தது எனக்கு. முணுக்-கென்று எதிர்பாராமல் பேசி விடுவதுதானே அவள்
வழக்கம். நாக்கு நுனி வரை வருவதைத் தடுத்து நிறுத்தத் தெரியாதவள்.
ஐயய்ய…அப்படியிருந்தாலும்
தப்பாச்சே….வீட்டுக்கு வந்த ஆள்ட்ட நாலு வார்த்தையாவது பேசாம இருந்தா எப்படி? நாம வந்திருக்கிறது
பிடிக்கலையோன்னு தோணும்ல? ஒரேயடியா வாயை மூடிட்டு இருந்திடாதே…ஏதாச்சும் ரெண்டு வார்த்தையாவது
பேசி வை…. – மனைவியை சகஜப்படுத்துவது போல் சொன்னார்.
நீங்க
சொல்ற அந்த ரெண்டு வார்த்தைல நா ஏதாவது கேட்டு வச்சு, அதுவே தப்பாப் போயிடுச்சின்னா?
–
மிருணா
விளையாட்டுக்கு இப்படிக் கேட்கிறாளா அல்லது உண்மையாகவே பயப்படுகிறாளா? அவள் மேலேயே
அவளுக்கு நம்பிக்கையில்லையோ?
பல
சமயங்கள்ல இடத்துக்குப் பொருத்தமில்லாம, ஆளுக்குப் பொருத்தமில்லாம, யோசிக்காம சகஜமாப்
பேசுறதா நினைச்சிக்கிட்டு நீ எதையாவது தத்துப் பித்துன்னு கேட்டு வச்சிடறே…அதனாலதான்
உன்னை அடிக்கடி எச்சரிக்க வேண்டிர்க்கு….- இது அவர் அவளிடம் பலமுறை சொல்லியிருந்த கூற்று.
சேலத்துக்குப்
பெண் பார்க்கப் போயிருந்தோம்…பையனுக்கு…அந்த
ஊர் மாம்பழத்துக்குப் பேர்போனதாச்சே! அதான் ஒரு டஸன் வாங்கினோம். உங்களுக்குப் பாதி….இந்தாங்கோ…தனியாச்
சாப்பிட சிலபேர் பயப்படுவா…வயித்துக்கு ஒத்துக்காது…மாம்பழம் சூடோல்லியோ? …சாதத்தோட கலந்து சாப்பிடலாமே… தாலத்துல போட்டுக்கலாமே…சாப்பிட்டுப்
பார்த்து சொல்லுங்கோ. ருசி எப்படியிருந்ததுன்னு…-அக்கறையாய் பக்கத்து வீட்டுக்காரர்
எங்களையும் நினைவு வைத்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். ஆறு பழம். எவ்வளவு தாராளம்?
காசு கேட்காதது அதிசயம்.
பட்டென்று
கேட்டுவிட்டாள் மிருணா….இத எதுக்கு அங்கேயிருந்து, வேலை மெனக்கிட்டுச் சுமந்துண்டு
வந்தேள்….இந்த மெட்ராஸ்லதான் கடைக்குக் கடை சீரழியறதே…ரோட்டோரம் கூடாரம் கூடாரமா கூரையைப்
போட்டுத் தடுத்து, பழமுதிர்ச்சோலைன்னு பேர்
வச்சிண்டு, என்னமோ கடைக்கு வந்துதான் எல்லாப் பழமும் பழுக்கிறமாதிரி வச்சு வித்திண்டிருக்கானே….அதுல
கிடைக்காத ஜாதி மாம்பழமா?
வந்தவருக்கு
சப்பென்று ஆகிவிட்டது. ஆனாலும் சமாளித்தார். அன்னன்னிக்குப் பறிச்சுக் கடைக்குக் கொண்டு
வராளாக்கும் அங்கே. எங்கயோ பேக் பண்ணி, என்னைக்கோ கொண்டு வந்து விக்கிறதில்லே…இங்க
மாதிரி….! மரத்துலேர்ந்து நேற்றைக்கு இறக்கிக் கடைக்கு வந்து, இன்னிக்கு உங்க கைக்கு
வந்திடுத்து ….ஃப்ரெஷ்னா ஃப்ரெஷ்…அப்படியொரு ஃப்ரெஷ்…!!-போய்விட்டார்.
என்ன
மிருணா இது…தானம் கொடுத்த மாட்டைப் பல்லப்பிடுங்கிப் பார்க்கிற மாதிரி…கொஞ்சம் யோசிக்க
மாட்டியா பேசறதுக்கு முன்னாடி?
இதிலென்ன
தப்பிருக்கு? சாதாரணமாக் கேட்டேன்… எந்தப் பொருள் எங்கே கிடைக்கலை இன்னைய தேதிக்கு?
நியூயார்க்ல திருப்பூர் பனியன்களும், குழந்தேள் டிரஸ்ஸும் சீறழியறது…உறத்ராபாத் திராட்சை
இங்க கொட்டிக் கிடக்கு…ஆஸ்திரேலியா ஆப்பிள் ரிலயன்சுல சீரழியறது…இந்தப் பாழாப்போன மாம்பழத்த
அங்கேயிருந்து வெட்டியாச் சுமக்கணுமான்னு சொன்னேன்…யதார்த்தமாப் பேசினா அது தப்பா?
– அவளும் விடுவதாயில்லை.
பாழாய்ப்போன
மாம்பழம்….இந்த வார்த்தைகள் கொடுத்தவர் காதில் விழுந்திருந்தால்?
பிரச்னையே
இதுதான். தான் அதிகமாகப் பேசுகிறோமோ? பொருந்தாததைச் சட்டென்று சொல்லி விடுகிறோமோ? என்று
ஒரு கணம் அவள் யோசித்தால் போதும். எல்லாம் சரியாகி விடும். அல்லது குறையவாவது செய்யும். இங்கேதான் தன் முனைப்பு
மூக்கின் நுனியில் படமெடுத்து ஆடுகிறதே…?
சொல்லிக்
கொண்டே அவள் தட்டில் வைத்துத் தந்த இரண்டு டிபன் செட்களை இரு கையிலும் வாங்கிக் கொண்டு
மாடியை நோக்கி நடந்தார் பிரானேஷ்வரன். அதுவே தப்பாகத்தான் தோன்றியது அவருக்கு. வீட்டுக்கு
வந்த விருந்தாளியை மெயின் உறாலில், டைனிங் டேபிளில், பொதுவான இடத்தில் அமர வைத்து சாப்பிட
வைப்பதுதானே முறை, பண்பாடு. இப்படித் தூக்கிக் கொண்டு தனியிடம் தேடிப் போனால்?
என்னாச்சு?
இங்கயே கொண்டாந்திட்டீங்க…? எதுக்கு இப்டித் தூக்கிட்டு? கீழே வாங்கன்னா வந்திட்டுப்
போறேன்…சட்னி, சாம்பார்னு ஒவ்வொண்ணுக்கும் போவீங்களா? – அவன் யதார்த்தமாய்த்தான் கேட்டான்.
டேய்
முத்து…உன்னோட தனியா ஜாலியாப் பேசிட்டு சாப்பிடணும்னு நான் தூக்கிட்டு வந்தா…கீழ வா…மேல
வாங்கிறியே…அங்கயிருந்தா எம் பொண்டாட்டியிருப்பா…நாம சுதந்திரமாப் பேச முடியாதுறா…என்னானாலும்
நமக்குள்ள இருக்கிற அந்நியோன்யம் அங்க கிடைக்குமா? வந்து உட்காரு….பேசிட்டே சாப்பிடுவோம்….
எங்கடா
சாப்பிடுறது? அதான் தொட்டுக்க எதுவுமில்லையே?
ஓகோ…நா
ஒரு முட்டாள்…அத மறந்திட்டு திங்க உட்கார்ந்திட்டேன் பார்… என்று விண்ட தோசையை அப்படியே
வாயில் போட்டுக் கொண்டு படியிறங்கினார் ப்ரானேஷ். கீழே வந்து சாம்பார், சட்னியை எடுத்துக்
கொண்டு…கவனமாய் திரும்பவும் மாடிப் படியேறினார். இடுக்கியில் பிடித்த சாம்பார் பாத்திரம்
நழுவி விடுமோ என்று பயமாயிருந்தது. சூடு வேறு. புதிய அனுபவமாய் இருந்தது .
இதுவரை
மாடியில் வைத்து ஒரு முறை கூட அவர் சாப்பிட்டதேயில்லை. பால்கனியில் வானத்தைப் பார்த்துக்
கொண்டே, வெளி மரங்களில் விளையாடும் பறவைகளை நோட்டமிட்டுக் கொண்டு சாப்பிட்டு மகிழ வேண்டும்
என்கிற ரசனையான ஆசை உண்டுதான் அவருக்கு. மனிதனின் சுதந்திரமான சின்னச் சின்ன ஆசைகள்
எல்லாமும் நிறைவேறி விடுகிறதா என்ன?
வாழ்க்கையில்
மனிதன் நினைப்பது வேறு. அமைவது வேறு. அமைந்ததைச் சரி பண்ணிக்கொண்டுதான் எல்லா மனிதர்களும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாமுமே சரியாய் அமைந்தது என்று ஒரு பிறவியாவது உண்டா?
அன்றைய அனுபவம் அவருக்குப் புதிது.
முதல்ல
இதத்தான் கேட்கணும்னு நினைச்சேன். ஏண்டா…நான் வேலை பார்த்த அதே டிபார்ட்மென்ட்லதான்
நீயும் இருந்திருக்கிறேங்கிற விஷயம் ரிடையர்ட் ஆகுற வரைக்கும் தெரியாமப் போச்சே…எப்டி?
என்னால நம்பவே முடியலப்பா….- பெரிய வருத்தமாய் உணர்ந்து இதைக் கூறினார் ப்ரானேஷ்.
எனக்கும்
இது ஆச்சரியமாத்தான் இருக்கு. இந்தச் சீஃப் இன்ஜினியர் பார்ட்டி இல்லன்னா இதுவும் தெரிஞ்சிருக்காது…அதுவும்
சென்னைத் தலைமையகத்துல வச்சதுனால…நான் டெக்னிகல் சைடு போயிட்டேன். பெரும்பாலும் நார்த்
ஆற்காடு, சௌத் ஆற்காடுன்னு சுத்திட்டேன். நீ மதுரை, திருநவேலின்னு இருந்திருக்கே…அட்மினிஸ்டிரேடிவ்
சைடு வேறே…அதான் தெரியாமலேயே போயிடுச்சி…
நம்ப
சீஃப் இன்ஜினியர் (பிராஜெக்ட்ஸ்) ஆபீஸ் ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி மதுரைக்கு மாற்றல்
ஆகி வரலேன்னா, அவர் ரிடையர்ட் ஆகலேன்னா நாம
சந்திச்சிருக்கவே முடியாது போல்ருக்கே…?
அது
கூட இல்லப்பா…ரிடையர்ட்மென்ட் பார்ட்டிய சென்னைல தலைமை அலுவலகத்துல வைச்சதுனாலதான்னு
சொல்லு. அதுதான் நிஜம்.…ஸ்டாஃப் எல்லாரும் அங்க வந்திங்க பாருங்க…ஒண்ணு கூடினாத்தான
சந்திக்க முடியும்? அப்படித்தான் இது நடந்திருக்கு….-முத்துக்கருப்பன் உற்சாகத்தோடு
கூறியதை மனமுவந்து கேட்டுக் கொண்டிருந்த பிரானேஷ்-தன்
பால்யகால நண்பனைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு…இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கடா….என்றவாறே
அடுக்கிலிருந்து எடுத்து அவன் தட்டில் வைத்தார்.
குளிக்கப்போன மிருணாளினி வந்தாச்சா என்று அங்கிருந்தே எட்டிப் பார்த்தார். இன்னும்
ஆள வெளியே வரவில்லை என்றே தோன்றியது. அதற்குள் சாப்பிட்டு முடித்து விடலாம்தான்.
மறுக்காமல்
அதற்கும் சாம்பாரை விட்டுக் கொண்டு-பயங்கர டேஸ்ட்ப்பா….உங்க வீடுகள்ல இந்த சாம்பார்,
ரசம், வத்தக்குழம்பு, அவியல், பொறியல்னு தனி கைபாகமப்பா…சாப்பாடும் சரி….டிபனும் சரி….உங்க
வீடுகள்னாலே அந்த டேஸ்டு வேறே எங்கயும் கிடைக்காது….-வாயாரப் புகழ்ந்தார் முத்துக்கருப்பன்.
அதுலயும்
இந்தக் ஜவ்வரிசிப் பாயசம்னு ஒண்ணு வைப்பீங்களே….என்னா ருசி…என்னா ருசி…அடடடடா…! அதோட
இன்னொண்ணு…ஊறுகாய் வகைல “வேப்பிலைக்கட்டி”ன்னு ஒண்ணு போடுறீங்களே…எங்கிருந்தய்யா அதப்
பிடிச்சீங்க…திருநவேலில அது ரொம்ப ஃபேமஸாமே? மோர் சாதத்துக்கு அத வச்சி சாப்பிட்டா
ரெண்டு பங்கு சாதம் இழுக்குதப்பா….!
அது
வேறொண்ணுமில்லடா….நார்த்தை இலைப் பொடி இல்லே? அதான். நார்த்தங்காய் ஊறுகாய் போடுவோமே...
அந்த மரத்தோட இலைகளைப் பறிச்சு, அதை எண்ணெய் விட்டு வறுத்து, இன்னும் உப்பு, பருப்பு,
மிளகாயெல்லாம் தனியா வறுத்து சேர்த்து அரைச்சு… கட்டி கட்டியாப் பிடிக்கிறது. நம்ப
தி.நகர் பக்கம் போனேன்னு வச்சிக்கோ…அங்க கடைகள்ல கிடைக்கும். நாலு உருண்டையை வச்சிட்டு
எழுபது எண்பதும்பாங்க…படு கிராக்கி அதுக்கு?
ஒரு
குழந்தையைப் போல மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்த நண்பனை பழைய நினைவுகள் கலந்து நிற்க,
விழி அசையாமல் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பிரானேஷ்.
ஊரில்,
வறுமை மிகுந்த அந்த நாட்களில் அவன் வீட்டுக்கு வரும்பொழுது அம்மா கையால் சாப்பிட்டதை
இன்றும் நினைவு கூறுகிறான். மோர் சாதத்துக்கு நார்த்தங்காய்னு ஒரு உப்பு ஊறுகாய் கொடுப்பீங்களே…அது
ஒண்ணுக்காகவே எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்டா….அவ்வளவு ஜீரண சக்திடா அதுக்கு…மஞ்சளாற்றுல
வெள்ளம் வரும்போது யானைக்கல், குதிரைக்கல்னு குதிச்சுக் குதிச்சு நீச்சலடிப்போமே…அக்கரைக்குப்
போய் தாழம்பூ பறிச்சிட்டு வருவமே…அதெல்லாம் மறக்குமாடா…கோலாட்ட ஜோத்திரை விழாவும்,
ஆடி பதினெட்டும் ஆற்றங்கரைல நீ பசுவனா உட்கார்ந்திருக்கிறதும், உன்னச் சுத்தியிருக்கிற
பாத்திரம் பூராவும் கலந்த சாதம் நிறைஞ்சு வழிய, நம்ப் ஃப்ரென்ட்ஸ் எல்லாரும் உங்க வீட்ல
கூடி, சுத்தி வட்டமா உட்கார்ந்திருக்க, உங்கம்மா நீயும் வாடான்னு என்னையும் உட்காரச்
சொல்வாங்க. கை கையா எடுத்துப் போட்டு ஆசை ஆசையாப்
பறிமாறுவாங்களே…அதெல்லாம் சாகுற வரைக்கும் மறக்கவே மறக்காதுடா….நாம ஊர்ல இருந்தபோதெல்லாம்,
சின்னப்பிள்ளைல நமக்குள்ள எந்த வித்தியாசமுமே இருந்ததில்லே…பெரியவங்களும் அதப்பத்தியெல்லாம்
நினைச்சதேயில்லை. பெரியவனாக ஆகத்தான் எல்லாமும் வந்து சேர்ந்திடுச்சி….விரும்பியோ,
விரும்பாமலோ அதைச் சுமக்க வேண்டியதாப் போச்சு…இல்லே? பழசைப் பேச ஆரம்பித்து அது எங்கேயோ வந்து முடிந்தது. அவன்
முகத்தில் கவலைக் குறிகள்.
நான்
அவனைப் பார்த்து மென்மையாய்ச் சிரித்துக் கொண்டேன். கல்லூரி போக வசதியில்லாமல் நான்
சர்வீஸ் கமிஷன் எழுதி குமாஸ்தா வேலையைப் பிடித்ததும், ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பயன்படுத்தி
படித்துப் படித்து மேலே வந்து அவன் அதிகாரியாய்
நின்றதும் அவனைச் சமீபத்தில் மீண்டும் சந்தித்ததில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.
சலுகைகளை
அக்கறையாப் பயன்படுத்தி உயரத்தை அடையறதுக்கும் ஒரு பெரு முயற்சி தேவைப்படுதுதானே? சும்மா
தூக்கித் தூக்கிப் போட்டுடுவாங்களா எல்லாத்துலயும்? நம்ப திறமையையும் காண்பிச்சாத்தானே
எடுபடும்? நீ இந்த நிலைல உயர்ந்திருக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்டா…-மனதாரக் கூறினார்
பிரானேஷ்.
நம்ப
ஸ்கூல்ல பதினோராம் வகுப்பு முடிய விடாம ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கினவன் நீ. நானெல்லாம்
சுமாராப் படிச்சவன்தான். காலேஜ் போக வசதியில்லாட்டாலும், விடாமுயற்சியா பரீட்சை எழுதி, அரசு வேலை வாங்கி,
டிபார்ட்மென்ட் பிரமோஷன் டெஸ்டெல்லாம் பாஸ் பண்ணி மேலே வந்து, சீனியாரிட்டிப் பிரகாரம்
அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசராவும் உட்கார்ந்து ரிடையர்ட் ஆகியிருக்கே பாரு….அதுதாண்டா பெஸ்ட்…..! உன்னைத் திரும்பச் சந்திச்சதுல எனக்கு
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா…..- ஆத்மார்த்தமான வாழ்த்தோடு முத்துக்கருப்பன் கூறுவதாகப்
பட்டது பிரானேஷூக்கு.
இப்ப
அதெல்லாம் எதுக்கு? அதான் நாம ரெண்டு பேருமே ரிடையர்ட் ஆகியாச்சே… சௌரியமாத்தானே இருக்கோம்…அதுதான்
வேணும்…அன்பு மாறாம இருக்கமே அதுவே போதும்…பால்ய கால நட்புக்கு ஈடு உண்டா? அன்புதான்
பிரதானம்.
உங்கம்மா
மாதிரியே பேசுறடா நீ. இன்னமும் துளிக் கூட
மாறலை. அப்படியே இருக்கே…உங்கம்மாதான் வாய் ஓயாமச் சொல்லுவாங்க….முத்துக்கருப்பன் பாரு…படிச்சு
பட்டதாரியாகி, ஆபீசராகறானா இல்லையா பாருன்னு ஆசீர்வாதம் பண்ணி மனசார வாழ்த்திச் சொல்லுவாங்க…அது
அப்படியே பலிச்சிடுச்சுடா…இல்லன்னா நானெல்லாம் படிச்ச படிப்புக்கு எங்க….? என்னோட ஒவ்வொரு
பிரமோஷனும்போதும் உங்கம்மாவத்தான் மறக்காம நினைச்சிக்கிடுவேன்…அவுங்க மானசீகமான வாழ்த்துதான்
என்னை மேலே கொண்டு வந்திடுச்சு…-முத்துக்கருப்பன் கண் கலங்கியது போலிருந்தது.
மனிதர்களின்
நற்சிந்தனைகள்தான் பிரதானம்.அவைதான் எல்லா ஊக்கத்தையும் வழங்குகின்றன. அதுதான் அவர்களை
மேலே கொண்டு வருகிறது என்று தோன்றியது எனக்கு.
சாப்பிட்டு
முடித்துக் வைகழுவி அவன் உட்கார்ந்தபோது, தட்டில் இரண்டு டவரா டம்ளர்களோடு காபி எடுத்து
வந்தாள் மிருணாளினி. இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. உலக மகா அதிசயம்.
என்ன…நீயே
வந்திட்டியா….அதான் மாடிக்கும் பெல் மாட்டியிருக்கோம்ல….அடிச்சிருந்தீன்னா நானே வந்திருப்பனே…?
பரவால்ல….டிபன்
கொடுத்து நேரமாயிடுச்சேன்னு பார்த்தேன். எவ்வளவு நேரம்தான் காத்திருக்கிறது? பேசிட்டேயிருக்கீங்க…
அடுத்து சமையல் வேலை இல்லயா எனக்கு? அதான் நானே எடுத்து வந்திட்டேன்…என்றுவிட்டு தட்டுகளை இங்கேயே
ஸிங்க்குல போட்டிருங்க…வேலைக்காரம்மா தேய்ச்சிடுவாங்க……என்று விட்டு விறு விறுவென்று
கீழே இறங்கிப் போனாள் மிருணா. அவள் பேச்சில் சின்னக் கோபம் தொனிப்பதை உணராமலில்லை நான்.
முத்துக்கருப்பன்
மகிழ்ச்சியோடு…டிபன் பிரமாதம் மேடம்…சட்னி, சாம்பார் அபாரம்…..புதினாச் சட்னி தூக்கல்
– என்று சத்தமாய்க் கூறினான்…!
காதில்
விழாததுபோலவே போய்க் கொண்டிருந்தாள் மிருணாளினி. தாங்க்ஸ் என்றாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.
காதென்ன செவிடா?
கீழே
அடுப்புல எதாச்சும் வச்சிருப்பாங்க போல்ருக்கு. அதான் ஓடுறாங்க…என்று சொல்லிக் கொண்டான்
முத்துக்கருப்பன். ஏதோ புரிந்துதான் சொல்கிறானோ?
இரு…இத
வச்சிட்டு வந்திடுறேன்…என்றவாறே சாம்பார்…சட்னிப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நானும்
கீழிறங்கினேன்…அடுத்து அவள் டிபன் சாப்பிட வேண்டுமே…!
மிருணாளினி
சொன்னாள் –
சாம்பார்…சட்னிப்
பாத்திரத்தை வச்சமேனிக்கு மொத்தமா அப்டியேவா
தூக்கிட்டுப் போவீங்க…அதுவும் இடுக்கில? பிடி நழுவிடுச்சின்னா? ஒரு கிண்ணத்துல தனியா விட்டுத் தந்திருக்க மாட்டேன்?
மாடில தனியா உட்கார்த்தி வச்சு டிபன் போடத் தெரியுது….இது தெரிலயா? அடுப்படில அன்றாடம்
புழங்குறதையெல்லாம் அப்டி அப்டியேவா தூக்கிட்டுப் போய் பொதுவா வைப்பீங்க?ஆளாளுக்குக்
கை வச்சிண்டு? உங்களுக்கு ஒரு விவஸ்தையே கிடையாது எதிலயும்…! -கோபம்
பளிச்சிட்டது அவள் முகத்தில்.
என்ன
அர்த்தத்தில் இதைச் சொல்கிறாள்? என்னைச் சொல்வதுபோல்
அவனைச் சுட்டுகிறாளா? என்ன ஒட்டிக் கொள்ளுமாம்? தெளிவாய் எதுவும் விளங்காமல், ஏதோ தப்பாய்ச் சொல்கிறாள் என்பது மட்டும்
புரிய …நாய் வாலை நிமிர்த்தவா முடியும்…? சிலபேரை என்றைக்கும் எதிலும் மாற்றவே முடியாது…என்று
முனகிக் கொண்டே மீண்டும் மாடிப்படி ஏறினேன் நான்.
-------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக