“அணி” – ஜெயமோகன் - உயிர்மை ஆகஸ்ட் 2023 சிறுகதை வாசிப்பனுபவம் -உஷாதீபன்
உள்ளடி வேலைகள் என்று நடக்காத இடங்கள்
இருக்கவே முடியாது. கட்சியானாலும், அமைப்புகளானாலும், சங்கங்கள் ஆனாலும், மடங்களானாலும்
– இவ்வளவு எதற்கு – மனிதர்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கே தவறுகள் என்பது இருக்கத்தான்
செய்யும் என்பது பொது விதி.
எவ்வகை இடமானாலும் அங்கே தனக்கென்று சில
நெறி முறைகளை வகுத்துக் கொண்டு விடாது பின்பற்றும்,
நியமங்களைப் பிடிவாதமாகக் கடைப்பிடிக்கும் சிலர் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களை
எதுவும் சலனப்படுத்தாது. எந்த ஆசைகளுமோ, சூதோ, வஞ்சகங்களுமோ ஆட்டி வைக்காது. அப்படியானவர்கள்
மனதளவில் சமனமடைந்திருப்பார்கள். சலனமற்றிருப்பார்கள். தானுண்டு, தன் வேலையண்டு என்று
இருக்குமிடம் தெரியாமல் அமைதியும் சாந்தமும் கொண்டு நாளும் பொழுதும் நன்றே…நன்றே என்று
தன்னை நிலை நிறுத்திக் கொள்வார்கள்.
மனிதனின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்
ஆசை. ஆசையை விலக்கியவன் எந்தச் சிடுக்குகளுமின்றி தன் வாழ்வை நகர்த்த முடியும். போதுமென்ற
மனமே பொன் செயும் மருந்து என்று தன் சிந்தனையையும் செயலையும் ஞானத்தை நோக்கி நகர்த்த
முடியும்.
திருப்பனந்தாள் மடத்தில் தானுண்டு தன்
வேலையுண்டு என்று இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் கனகசபாபதி மீது அப்படி ஒரு பழி
வந்து விழ அதை அவரைச் சேர்ந்த ஆளான தளிகைப்
பணியாளரான சுந்தரலிங்கமே வந்து கூறுகையில் கூட எந்த அதிர்வுமின்றி அதை எதிர்நோக்குகிறார்
கனகு.
தங்கக் கண்டிகையை சாமி எடுத்திருக்கும்னு ஒரு பேச்சு….வேறொன்றை மனதில் கொண்டு வலிய எழுந்திருக்கும்
இப்புகார் இவர்கள் அறியாதது.
இங்கே சொன்னது சாமிக்கு நெருக்கமான தளிகை
சுந்தரலிங்கம்தான் எனினும், அங்கே புகைய விட்டது பெரிய சிவஞானத் தம்புரானுக்கு நெருக்கமான
தளிகை பண்ணும் சாமிக்கண்ணு என்ற கருவி. ஒரே இடத்தில் ஒரே பணியைச் செய்யும் பணியாளர்கள் இருக்குமிடம்
வைத்து, மேல் கீழ் என்கிற வேற்றுமை உணர்தலில் சராசரி மனிதர்களின் துர்க்குணங்களின் வெளிப்பாடாக
இந்தப் புகார் வந்து விழுகிறது. இந்தப் புகாரின் மூலம் வேறொன்றை வெளிக் கொணரும் சூது.
சாமியாரை அண்டி வாழுறவன் பொறுக்கியாகத்தான்
இருப்பான்…அது மடமானாலும் சரி…நடுத்தெருவானாலும் சரி…. இது சுந்தரலிங்கம் கனகசபாபதிக்கு
விளக்கிச் சொல்லி சூதானப்படுத்து இடம்.
ஆனால் எல்லாம் துறந்தவனுக்கு எதுதான் பெரிது,
சிறிது? துறப்பவன் இருக்க வேண்டிய இடம் மேலிடம்தான் என்று ஏதேனும் நிர்ணயம் இருக்கிறதா
என்ன? இல்லை மேலிடத்தில் இருப்போரெல்லாம் மனதளவிலும், உடலளவிலும் எல்லாவற்றையும் துறந்துவிட்டவர்களா
என்ன?
சூதானம்…! எப்படி வருகிறது இந்த சூதானம்?
என்கிட்ட இருக்கிறது மூணு காவி வேட்டி, மூணு கோவணம், ஒரு கப்பரை…! பார்க்கக் கிடைப்பது
இதுதான். இதை விடுத்து தங்கக் கண்டிகையை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? உதட்டில் உதிக்கும் சிரிப்பு அவரது விலகிய சிந்தனையைப்
பிரதிபலிக்கிறது.
மடத்தவிட்டு உன்னைய நீக்குறது முடிவாப்
போச்சு. போகைல கைல காசு வேணாமா? அதனால நீ எடுத்துருப்பேங்கிற நெனப்பு….போய் சன்னிதி
காலிலே விழு…
நா ஒண்ணும் தப்புப் பண்ணலியே…நான் சிவனை
நம்பி இருக்கேன்….சிவன் என் கூட இருக்காரு… - இது கனகசபாபதி.
உன் மேலே அநாவசியப் பழி வரும்….மடத்தனமா
எதுவும் செய்யாதே
அன்பும் தியாகமும் பக்தியும் ஒரு வகையிலே
மடத்தனம்தான்….
பட்டினத்தார் பாடல் கனகசபாபதியின் மனதில்
ஓடுகிறது.
இந்தப் பாடல்தான் இச்சிறுகதையின் அபார உச்சம்…! ஒவ்வொரு வாசகனின் மனதிலும் படிய வேண்டிய
பதிகம்…..
இந்த நிலையில்லாத உடம்பை நெருப்பு எனதென்று
சொல்லும், கிருமிகள் எனதென்னும், மண்ணும் எனதென்னும், தன்னுடைய உணவிற்கு என்று நரியும்
நாயும் இது எனக்கானது என்று வந்து நிற்கும், துர்நாற்றம் பொருந்திய இவ்வுடலைத்தான்
நான் விரும்பி வளர்த்திருக்கிறேன்…இதனால் எனக்கு என்ன பயன்?
இந்தச் சிந்தனையில் மூழ்கித் திளைக்கிறார்
கனகசபாபதி.
மீனாட்சி சுந்தரத் தம்பிரான் வந்துபோதும்
இதே சிந்தனையில் இருக்கிறார் கனகு. ஒவ்வொருவரும் அவரவர் நம்பும் சொற்களை குருதியில்
அடிக்கோடிட்டு நிறுத்தி வைப்பது அவசியமாகிறது. சொற்களில் உறங்கும் தெய்வங்களாய் அவை
நின்று நிலைக்கின்றன.
அதாகப்பட்டது நகை காணாமற்போனது போன ஆடி
மாசம் அமாவாசைக்குப் பக்கத்திலே. ஆனி, ஆடி, ஆவணி மூணுமாசமும் பெரிய சன்னிதானத்துக்கு
திருவடிசேவை பண்ணினது நீங்க…..கூட இருந்த மத்தவங்களை விசாரிச்சாச்சு…நீங்கதான் விசாரிக்கப்படணும்…
இவ்வளவு தீவிரமாய் விசாரணை வர மூல காரணம்
எது? அங்கேதான் இந்தப் பிரிவினைப் பிரச்னை தலையெடுக்கிறது.
பட்டினத்தாரின் பண்டாரப்பாட்டு கனகசபாபதியின்
சைவ ஞானமாய் … அப்போ…அவரு செட்டியார்….நம்மாளில்லை…அதானே….அவருக்கு
எப்படி சிவஞானம் தழைக்கும்….-விஷயம் எங்கே வந்து நிற்கிறது.
மேல் கீழ் நோக்கும் பிரிவினை மனப்பான்மை.
ஞானம் பிறப்பதற்கு இன்ன இடம்தான் என்கிற நிர்ணயம் உண்டா என்ன?
அந்தளவுக்குப் பழுத்திட்டானா அந்தச் செட்டி?
பட்டினத்தாரின் பாடல் தந்த அழுத்தம், அதைச் சொன்ன கனகுவின் மீதான குற்றமாகிறது.
நாயும் நரியும் காத்திருக்கும் இந்த ஊணுடம்பிற்கு
எதற்கு வெற்று நகைகளும், பட்டுப்பீதாம்பரமும்…..சந்நிதானத்தின் மேல் உண்டான புகார்க்
குற்றமாகிறது.
சித்தாந்தத்தை எப்படி மறுப்பது? மறுத்தால்
அது பொய்யென்றாகிவிடாதா?
கண்டிகையை நான் எடுக்கவில்லை. எனவே மன்னிப்புக்
கோர முடியாது. நமச்சிவாயம்….என்று சொல்லி கொதிக்கும் நெய்யிலே கைவிட்டுத் தன்னை நிரூபிக்கிறார்.
எத்தனையோ வகை அணிகள். மனிதர்கள் அவரவர்க்கு
அணிந்து கொண்டிருப்பது அவரவர் விருப்பம். ஆனால் அனைத்தையும் துறந்தவன் தனக்குத்தானே
தீர்மானமாய் அணிந்து கொள்ளும் அணி அத்தனையிலும் பெரியது. அது ஈடு சொல்ல முடியாதது. மற்ற எவராலும் அசைக்க முடியாதது. சலனத்திற்கப்பாற்பட்டது.
அதை எளிய மனிதர்கள், ஆசைகளையும், அதிகாரத்தையும் அச்சாரமாய்க் கொண்டவர்கள் இந்த ஊனுடம்பைப்
பெரிதாய்ப் போற்றுபவர்கள் என்றும் உணருவதில்லை.
ஜெ.யின் இந்த அணி…வாசக மனதைக் கொள்ளை கொள்ளச்
செய்கிறது.
அன்பும் தியாகமும் ஒருவகையிலே மடத்தனம்தான்
என்று கனகசபாபதி சொல்வது,
ஒவ்வொருவரும் அவரவர் நம்பும் சொற்களை குருதியில்
அடிக்கோடிட வேண்டியிருக்கிறது .அதில்தான், அந்த சொற்களில்தான் தெய்வங்கள் உறைகின்றன….
என்பன போன்ற தத்துவ விசாரங்கள் மனதைக் கட்டிப் போட்டு விடுகின்றன.
-------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக