02 செப்டம்பர் 2023

 

 

சிறுகதை                        உஷாதீபன்,  

“மக்கா குப்பை“            (கணையாழி இலக்கிய இதழ் -பிரசுரம் செப்டம்பர் 2023 )                                                                                                                          

ப்பா…நீ ரொம்பத்தான் சொல்ற….. – என்று அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் அலுத்துக் கொண்டார் கருணாகரன். தினமும் திட்டு வாங்கும் மாணவனைப்போல அவர் மனதுக்குள் சலிப்பு ஏற்பட்டது.

அன்றாடம் குப்பை போடும்போதெல்லாம் அவன் ஏதாவது சொல்லிக் கொண்டேதான் இருக்கிறான். ஒரு நாளும் அமைதியாய் இருந்ததில்லை.

மக்கும் குப்பை…மக்கா குப்பை …பிரித்துப் போட்டால் நலமாகும்…. என்று பாட்டுக் கேட்கும்போதே வயிற்றைக் கலக்கி விடுகிறது இவருக்கு. உண்மைதான் வயிற்றைத்தான் கலக்குகிறது. வாத்தியாருக்குப் பயப்படும் மாணவன் போல் ஆகிவிட்டதாக உணர்ந்தார். இன்று என்ன சொல்வானோ?

எதெல்லாம் எரிஞ்சு சாம்பலாகுமோ அதெல்லாம் மக்கும் குப்பை…போதுமா? என்றான் ஒருநாள். எதிர் வரிசையில் வண்டி நின்றிருந்தது. கடந்து போக முடியாத அளவுக்கு வண்டிகள் குறுக்கிட்டுக் கொண்டிருந்தன. அந்தப் படபடப்பு வேறு.

தேங்கா சிரட்டையெல்லாம் மக்கா குப்பைகள்ல போடுறீங்களே…அது மக்கும் குப்பை…தீயில போட்டா எரிஞ்சு போகும்ல….இப்டி வீடு வீடுக்கு வாங்கி நான் பிரிச்சிப் போட்டுட்டேயிருந்தா…எப்போ மத்த தெருவுக்கெல்லாம் போகுறது? எப்போ என் வேலையை முடிக்கிறது? கொஞ்சம் ஒத்துழைங்கம்மா…தெனமுமா சொல்லணும்….நானும் ஆறு மாசமா தவறாம வந்திட்டேயிருக்கேன்….-அவன் அலுப்பில் நியாயமிருந்ததுதான்.  எங்க கவனிக்கப் போறான் என்ற அலட்சியந்தான் நம் ஆட்களுக்கு.

இன்னிக்கு என்ன சொல்வானோ…என்று எண்ணிக்கொண்டேதான் குப்பைப் பையை எடுத்துக் கொண்டு கீழிறங்குகிறார் தினமும். கொஞ்சம் தாமதித்தால் அடுத்து தெருவுக்குள் வண்டி போய்விடும். உருளும் சத்தமே வராது அந்த பேட்டரி வண்டியில். பாட்டுச் சத்தம் காதிலிருந்து மறைந்தால் வண்டி போய்விட்டதை உணர முடியும்.

  அடுக்ககங்களில் அவர்களாகவே கொண்டு போட்டால்தான் ஆச்சு. கீழ் வீட்டுக்காரர்கள் சட்டென்று வெளியேறிப் போட்டு விடுகிறார்கள். அல்லது காம்பவுண்டு கதவை ஒட்டி பையை வைத்து விட்டால் அவனே எடுத்துப் போட்டுக் கொள்கிறான். முனகிக் கொண்டேதான் அதைச் செய்வான். குப்பைகளைப் பிரித்துப் போடுவதில் இன்னும் தெளிவில்லை ஜனங்களுக்கு. எது மக்கும், எது மக்காது என்பதிலேயே நிறைய சந்தேகம். அதனால் அவன் சலிப்பதும், இவர்கள் வாய்மூடிக் கேட்டுக் கொள்வதும் வழக்கமாயிருந்தது. சொல்லிச் சொல்லித்தானே சரி செய்ய வேண்டியிருக்கிறது?

தனி வீட்டுக்காரர்களுக்கோ ராஜோபசாரம். பாட்டுச் சத்தம் கேட்டும் அவர்கள் வெளியே வர மாட்டார்கள். அய்யா…குப்பை வண்டிங்க…என்று அவன் குரல் கொடுத்தாக வேண்டும். அல்லது அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து பாட்டுச் சத்தத்தைக் கூட்ட வேண்டும்.

ஏன்யா இப்டி அலற விடுற…வரமாட்டமா….?  என்றும் சொல்லத்தான் செய்கிறார்கள். அவன் பதில் எதுவும் பேசுவதில்லை. உள்ளடி விஷயம் அது…!

தெருவுக்கே கேட்கணுங்கய்யா…அப்பத்தான் தயாரா எடுத்து வைப்பாங்க…வாசலுக்கு வந்து நிப்பாங்க…இன்னும் ஏழெட்டுத் தெரு இருக்குதுல்ல…எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிக்கிட்டு நா போய்ச்சேர்றதுக்கு பன்னெண்டு தாண்டிடும்ங்க….-என்னவொரு பணிவு அந்த பதிலில்.

கலெக்ட் பண்ணிக்கிட்டு….-பழக்கத்தில் படிந்த ஆங்கில வார்த்தைகள் படிக்காத பாமர மனிதர்களிடம் சர்வ சகஜமாகப் புழங்குவதை நினைத்துக் கொண்டார் கருணாகரன்.  கலெக்டர் ஆபீஸ்னு சொல்றதுதான்யா வசதி…அதான பழகியிருக்கோம்…அங்கதான்யா வரி கட்டுற ஆபீஸ் இருக்கு…..நீங்களே போய்க் கட்டிடலாம்….-என்று ஒரு புதிய கீழ் வீட்டுக்காரரிடம் அவன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கூர்ந்து கேட்டிருந்தார் கருணாகரன்.

அவங்கள்லாம் அப்பப்போ அவனுக்குப் பணம் கொடுப்பாங்க…நீங்க கொடுப்பீங்களா…? தீபாவளி…பொங்கல்னு வந்து நின்றாலே மூக்கால் அழுகுறீங்க..அம்பது ரூபா கொடுக்கிறதுக்கு ஆயிரம்வாட்டி யோசிக்கிறீங்க…இந்தக் காலத்துல ஐம்பது ரூபா ஒரு காசா? குறைஞ்சது நூறாவது கொடுக்க வேணாமா? பிச்சை  வாங்குறவ கூட பத்து ரூபா கொடுத்தாத்தான்…சரின்னு போறா….அஞ்சு ரூபா கொடுத்துப் பாருங்க….நீங்களே வச்சிக்குங்கன்னு…திருப்பிக் கொடுக்கிற காலம் இது…! இல்லன்னா முகத்தச் சிணுங்கிட்டே வாங்கிக்கிடுவா…. – காயத்ரி சொல்லத்தான் செய்கிறாள். ஆனாலும் இவர் ஒரு கணக்கு வைத்திருக்கிறார். யார் தீபாவளி, பொங்கல் என்று வந்து நின்றாலும் ஐம்பதுதான் அவர் அளவு.

ஆபீசிலேயே அவ்வளவுதான் எழுதுவார். சார்…நாங்க நாலு பியூன் இருக்கோம் என்று முனகுவார்கள். அதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும்? ஆளுக்கு ஐம்பதுன்னு இருநூறைத் தள்ள முடியுமா? எனக்கு வசதியில்லப்பா…அப்டிப் பார்த்தா இப்படிக் கேட்கிறதே தப்பு…என்று அவர்கள் வாயை அடைத்து விடுவார்.  வலியப் பிடுங்கினா எப்டி…? எங்களுக்கும் குடும்பம், குட்டின்னு இருக்குல்ல… அமைதியாய் நகர்ந்து விடுவார்கள்.

உள்ளூரிலேயே ஆபீஸ்கள் மாறினாலும் இவர் கணக்கு இதுதான். மாவட்டத்துல இருக்கிற எல்லாரும் சேர்ந்து சேர்ந்து ஆளுக்கொரு நோட்புக்கைத் தூக்கிட்டு வந்தா எப்டி? இந்த ஆபீஸ்ல இருக்கிற பியூனுக்கு மட்டும்தானே நான் கொடுக்க முடியும்? சபார்டினேட் ஆபீசுக்கெல்லாமா அழ முடியும்? அதான் உங்களுக்கு அப்பப்ப கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைச்சிட்டுத்தானே இருக்கு…பெறகென்ன? வெறும் சம்பாத்தியம் மட்டும் போதும்னு இருக்கிறவன் போனாப் போகுதுன்னு கொடுக்கிறதே அதிகம்…

ஆபீசில் பர்சன்டேஜ் பிரித்துக் கொள்ளும்போது இவருக்கான பங்கை இவர் வேண்டாம் என்று சொன்னதில்லை. அதுவே இவரை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. இந்தா பாருங்கப்பா…என் பங்கு இதோ இந்தக் கோயில் உண்டியலுக்கு…என்று காம்பவுன்ட் வாசலில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் உண்டியலில் எல்லோரும் பார்க்க அந்தப் பாவக் காசைத் தவறாமல்  சேர்த்தார். 

ஆனாலும் மனசு உறுத்திக் கொண்டுதான் இருந்தது. எனக்கு வேண்டாம் என்றால் அதோடு நிற்பதுதானே முறை. அதென்ன தன் பங்கை வாங்கி ஊரறிய சாமிக்குச் சேர்ப்பது? வீம்புக்குப் பண்றாம்பாரு இந்தாளு…என்று பின்னால் பேசினார்கள்.

முழுசாப் போட்டாரோ இல்ல பாதியோ? எவ்வளவு போட்டார்னு யாருக்குத் தெரியும்? அப்பப்போ வர்ற இவரோட எல்லாப் பங்கையும் உண்டியலுக்குச் சேர்த்திட்டாராங்கிறதும் தெரியாதே...! ஆசையில்லாத மனுஷன் எவன்யா….?  தனக்கு வேண்டாம்னா அதுல உறுதியா நிக்கணும்…..தில்லா சொல்லணும்…எனக்கு வேண்டாம்னு….-பலபடியான பேச்சுகளும் காதில் விழத்தான் செய்தன.

அப்பொழுதுதான் ஒருமுடிவெடுத்தார். தன் பங்குக் காசை ஆபீஸ் பணியாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று. இல்லன்னா அது கான்ட்ராக்டர் பைக்குத்தானே போகும்? அதற்கு விட மனசில்லை. தனக்கு வேண்டாம் என்றால் அதோடு விஷயம் முடிந்து போயிற்று. அந்தக் காசு எங்கு போனால் என்ன, எப்படி ஆனால் என்ன?  ஆனால் கருணாகரன் வழி இதுவாயிருந்தது.

அதற்குப்பின்  ஆபீசே மிகவும் சுறுசுறுப்பானது. வேலைகள் சொல்லாமலே நடந்தன. வழக்கத்திற்கு மீறின பணிவு இருந்தது. பார்க்கவில்லையோ என்று, கூட ஒருதரம் வணக்கம் போட்டார்கள். சிரித்த முகத்தோடு எதிர்கொண்டார்கள். எல்லாம் காசு பண்ணும் மாயம்…! அந்த மரியாதையே தனிதான்…!

பணமே…உன்னால் என்ன குணமே…? சற்றும் என் கண்ணின் முன் நில்லாதே…! -சஞ்சயின் பாட்டு எப்போதும்  மனதுக்குள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

 எங்குதான் பணம் தன் வேலையைக் காட்டவில்லை? அது ஆடும் ஆட்டம் என்ன கொஞ்ச நஞ்சமா? பின்னால் அந்தப் பழக்கமும் நின்று போனது. எனக்கு வேணாம்…அவ்வளவுதான். என்று உறுதியாய் நின்று விட்டார். நிம்மதியான பாடு. ஆனால் எங்கும் பணம்தான் என்றும் பிரதானமாய் நிற்கிறது.

குடியிருக்கும் தெருவில் கோயில் கொடை என்று வந்து நின்றார்கள். வெள்ளையும் சொள்ளையுமாய்க்  கூட்டமாய் வந்து பயமுறுத்தினார்கள். குறைந்தது ஐநூறு என்றதும் பிரமித்துப் போனார் இவர். வீட்டுக்கு ஐநூறு என்றால் என்னாச்சு? என்று யோசனை போனது. சரியான வசூலாச்சே?. நாலு நாள் கூத்து என்று நோட்டீசை நீட்டினார்கள். நாலு பக்கத்துக்கு இருந்தது விழா நோட்டீஸ். சற்று அழுத்திப் பிடித்தால் கிழிந்து பறக்கும் காகிதத்தில் அச்சடித்திருந்தார்கள். ஆனால் இருபக்க அச்சும் தெளிவாய் இருந்தன.  சூரன் வதம், வள்ளி திருமணம், கர்ணன் மோட்சம், கண்ணன் பிறப்பு என்று தெருக்கூத்து நாடகங்கள் அரங்கேறின. ஒரு வாரத்துக்கு அந்தப் பகுதி வீடுகளில் யாருக்கும் சரியான தூக்கமில்லை. விடிய விடிய மைக் செட் அலறினால் எங்கிருந்து தூங்க? எல்லா நாளும் சிவராத்திரி. ஒன்றுக்குப் போக எழும்போது கூட தபலாவும், ஆர்மோனியப் பெட்டியும் ரீங்கரித்தக் கொண்டிருந்தன.

ஆனாலும் அருகி வரும் கூத்துக் கலைபற்றியும், அந்தக் கலைஞர்களின் வாழ்க்கை அவலம் குறித்தும் நிறையப் படித்திருந்த இவருக்கு அவர்கள்பால் மிகுந்த இரக்கம் தோன்றிவிட, மனதில்லாமல், தவிர்க்க முடியாமல் எடுத்துக் கொடுத்தார். ஐம்பதோடு ஒரு சைபர் சேர்த்துக் கொடுத்தபோது பணத்தை வேண்டுமென்றே காணாமல் போக்கியதாகத்தான் அவருக்குத் தோன்றியது. ஐநூறை வீட்டுக்குச் செலவழித்தால் என்னென்னெல்லாம் வாங்கலாம் என்று மனம் கணக்குப் போட்டது.

தெருக் கூத்து வெறும் பொழுது போக்காக இல்லாமல் கோவில் விழாக்களின் ஒரு பகுதியாகவும், பக்தியைப் பரப்பும் ஒரு முக்கியக் கருவியாகவும் இருப்பதை உணர்ந்து அவர் மனது சமாதானம் கொண்டது.

காசே கொடுக்காத வீடுகளும் இருக்கத்தான் செய்தன.  அவர்கள்தான் ஐநூறுக்குக் குறைத்து வாங்குவதேயில்லையே…! அவர்களை மட்டும் எப்படிக் கைவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த லிஸ்டில் தன்னையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதா? பரிதாபப்பட்டது மனது.. என்ன முக்கியத்துவம் கருதி தன்னிடம் பிடிவாதம் பிடிக்கிறார்கள்? புரியாத புதிர்தான். ஒரு வேளை தான் வேலை பார்க்கும் துறை அவர்களை அப்படி நினைக்க வைக்கிறதோ? காசு கொழிக்கும் இடம் என்று தெரிந்து வைத்திருப்பார்களோ? இவர்களுக்காக அங்கு வாங்கி இங்கு கொடுக்க முடியுமா? இப்டித்தான் ஒவ்வொண்ணும் கெட்டுப் போய்க் கிடக்கு…! – இருந்தாலும் அவர்கள் வந்து நின்ற விதம்….அடேங்கப்பா…!!

பூஜை முடிந்த மறுநாள்  வீதியில் கை வண்டியைத தள்ளிக் கொண்டு  ஆள் அம்பு படையுடன்  வீடு வீடாய் வந்து (கொடை கொடுத்தவர்களுக்கு மட்டும்தான்)  கோயில் பிரசாதங்களை அவர்கள் வழங்கிய முறையும், விபூதி, குங்குமம், சந்தனம், பொங்கல், பழம், தேங்காய், காரப்பொரி, அவுல்…மிக்சர், முறுக்கு, ரிப்பன் பக்கடா, அப்பம், அதிரசம் என்று என்னென்னவோ  இருப்பதைப் பார்த்தபோது உண்மையிலேயே பயம் பிடித்துக் கொண்டது கருணாகரனுக்கு.  இதெல்லாம் தின்பதற்கா அல்லது பார்ப்பதற்கா என்று  பிரமித்தார். பக்தி ரசம் சொட்டச் சொட்ட மாலை மரியாதையோடு அவர்கள் இதைச் செய்தபோது நெகிழ்ந்து போனார். கூடவே ஒரு கோரிக்கையையும் தூக்கிப் போட்டார்கள். சார்வாள் அடுத்த வருஷம் ஒரு நாள் கட்டளையை மனமுவந்து ஏத்துக்கணும்…என்றார்கள் பவ்யமாய்.  ஓஉறா…சபாஷ்…!! என்று கோரஸாகப் பின்பாட்டு வேறு.  உச்சி குளிர்ந்து போனது இவருக்கு. 

அடுத்த வருஷந்தானே என்கிற நினைப்பில் “அதுக்கென்ன செய்தாப் போச்சு…“என்று சொல்லி வைத்தார் கருணாகரன். ஐம்பது ரூபாய் தர்மகர்த்தாவான தனக்கா இந்த நிலை? என்று அவருக்கே படு  துக்கமாக இருந்தது. ஐநூறு தள்ளியது தப்போ? அநியாயத்துக்கு உள்ளே இழுத்து நிறுத்தி விட்டார்களே?  புகழ்ச்சிக்கும், மரியாதைக்கும் மசியாத மயங்காத  மனுஷன்தான் உண்டா? ? பட்டென்று விழுந்து விட்டார் கருணாகரன்  !!…

அவர்கள் என்னைக் கவனித்ததுபோல, இந்தக் குப்பை வண்டிக்காரனை மற்ற சில கீழ் வீடுகளைப் போல்  நானும் அவ்வப்போது கவனிக்கணும் போல….அப்பத்தான் இந்தாள் நமக்கு மசிவான் என்றும் இவன்  வாயிலிருந்து தான் தப்ப முடியும் என்றும் ஏனோ ஒருவிதமாக நினைத்துக் கொண்டார் கருணாகரன். தினமும் முகம் பார்க்கும் அவனின் கறார் தன்மை இவரைச் சற்று அதிகமாகவே சங்கடப்படுத்தத்தான் செய்தது. ஒரு சிநேக பாவம் இல்லையே அவனிடம்? தனி பங்களாக்களில் காட்டும் கரிசனத்தை அடுக்ககத்தில் பார்க்க முடிவதில்லையே? ஒரே கட்டிடத்தில் எட்டு, பத்து வீடுகள் இருக்கும் இங்குதானே அதிகக் கவனம் தேவை.

தென்ன சார் இது…? என்று திரும்பி நடந்து கொண்டிருந்த இவரை நிறுத்தினான் அவன். இன்னிக்குத் தப்பிச்சோம் என்று கடந்தவரைப் பிடித்து நிறுத்துகிறானே…!

எது?  என்றார் தயங்கித் திரும்பியவாறே. மாட்டிக்கிட்டனா? போச்சு…!!!

பொட்டுப் பொட்டாய்ச் சொட்டும் டிகாக் ஷன் இறக்கிய  காபிப் பொடி ஈரம் அவரைத் துணுக்குறச் செய்தது. அந்த ஈரத்துக்குக் கசியுது…அம்புட்டுத்தான்… மக்கும் குப்பைதானேப்பா…சரியாத்தானே போட்டிருக்கேன்…? என்றார்.

இப்டி ஈரம் சொட்டச் சொட்டப் போட்டா எப்படி?பால் பைல வேறே போட்டு வச்சிருக்கீங்க…பால்பை மக்கா குப்பைல்ல…? ஒரு காயிதத்துல போட்டு  காய வச்சுல்ல கொண்டாந்து போடணும்? பில்டர்லேர்ந்து அப்டியே கவுத்து எடுத்துட்டு வந்திடுவீங்களா…? அத ஒரு பேப்பர்ல போட்டுத் தனியா வச்சு…காய வைங்க சார்…ஈரம் வடியட்டும்….உலர்ந்து கெட்டியாயிடும்…பெறவு மக்கும் குப்பையோட சேர்த்துக் கொண்டாந்து போடுங்க….பால் பைல வேணாம்….

இதென்னப்பா இது…என்னென்னவோ சொல்றியே …? நீ சொல்றதுக்கெல்லாம் தனியாப் படிக்கணும் போல்ருக்கு…வெறும் குப்பை போடுறதுக்கு இவ்வளவு பாடா?

இப்பல்லாம வெறும் குப்பைல்ல சார்…! பிரிச்சுப் போடுற குப்பை…என்னா சார்…இது கூடத் தெரியாதா ? சொல்லிடேயிருக்கமே சார்…உங்களப்போல நாலு வீட்டுல இப்டி சிமிண்டுக் கலவை கொழைச்ச மாதிரிப் போட்டாங்கன்னு வச்சிக்குங்க…அப்புறம் அதைக் கொண்டு குப்பை மண்டில  சேர்க்கைல  எங்க பாடு நாறிப் போகும்…குப்பை அத்தனையும் இதோட கலந்து பஞ்சாமிர்தம் மாதிரி ஆயிடாதா? அப்புறம் எங்கருந்து பிரிக்கிறது? அந்த மேட்டுக்கு வந்து நின்னு பாருங்க…கஷ்டம் புரியும். படிச்ச நீங்கள்லாம் இப்டி சங்கடப்படுத்தினா எப்டி சார்….பெரிய துயரம் சார்…உங்களோட …!

கொஞ்சம் அதிகம்தானோ என்று தோன்றியது. ஆனாலும் டிகாக் ஷன் இறக்கிய காபிப் பொடியை இப்படிக் கொண்டு வந்து போட்டிருக்கக் கூடாதுதான்…மானாங்கணியா குப்பைதானேன்னு கலந்தடிச்சுத்  கொண்டாந்து போட்டா….? அதான் சுள்ளுன்னு  கேட்குறான்…!

இப்டித்தான் சார்…மிஞ்சின சாம்பார், ரசம்னு பால் பைல ஊத்தி ஒரு ரப்பர் பேன்டைப் போட்டு  குப்பைல சேர்த்துடறாங்க….பால்பை மக்காத குப்பை…ஊசின சாம்பார், ரசம்…மக்குற குப்பை….பிரிக்கிற வேலையெல்லாம் எங்களுதா? அதையெல்லாம் வடிகட்டி …சக்கைகள மட்டும் குப்பைல சேர்க்கலாமுல்ல…எவ்வளவு சொன்னாலும் இப்டித்தான் செய்றாங்க…யாருக்காச்சும் எங்க சிரமம் புரியுதா …? இப்டியே வீட்டுக்கு வீடு சொல்லிட்டே போனா…எங்க வேல எப்ப முடியறது? நாங்க எப்ப வீடு சேர்றது?

என்னப்பா ஒரேயடியா அலுத்துக்கிற? எல்லாக் குத்தமும் எங்கிட்டதானா? அக்கறையா மக்கும் குப்பை, மக்காக் குப்பைன்னு பிரிச்சு வைச்சு ரெண்டு பையாக்  கொண்டாந்து போட்டிருக்கேன்…அதுலயும் குறை சொன்னீன்னா? எத்தனையோ வீடுகள்ல  எப்டி எப்டியோ போடுறாங்க…அதையெல்லாம் நீ கேட்கிறதேயில்ல? வாய் மூடிட்டு வாங்கி வந்து நீயா பிரிச்சுப் போட்டுக்கிறே…அப்டியெல்லாம் நாங்க சிரமம் கொடுக்கிறமா? ஏதோ…இன்னைக்கு இது ஒண்ணு தப்பிப் போச்சு…. நாளைலேர்ந்து நீ சொல்றபடி செய்திடுவோம்….

அவன் என்னையே உன்னிப்பாகப் பார்ப்பது போலிருந்தது. நான் எதைச் சொல்கிறேன் என்று அவன் புரிந்து கொண்டானோ என்னவோ? அப்டியெல்லாம் நீங்களும் இருக்கணும் என்று என்னைத் தூண்டுகிறானோ? கொடுக்கிறத வாங்கிட்டுத்தான் போறான்.. எங்கயும் டிமான்ட் பண்றதில்லையே…! 

அன்பாக் கொடுக்கிறத ஆசையா வாங்கிட்டுப் போனா…அது தப்பா…? தப்போ…தப்பில்லையோ…அது உனக்குத் தெரிலயே…அதுதான் இப்பப் பெரிய தப்பு…!- சட்டென்று நெஞ்சில் தட்டிக் கொண்டார்  கருணாகரன். எண்ணக் கதவை  மூடினார்.

இவனோடு எதற்கு வம்பு என்று தோன்றியது. தெருத் தெருவாய்ச் சுத்தமாக்கி, நகரை சிங்கார வடிவமாக்க வேண்டும் என்று அரசு முனைகிறது. அதற்கு மக்களும் இணங்குகிறார்கள்தான். இயன்றளவு அன்றாட வாழ்க்கையின் பாடுகளைத் தவிர்த்து-அல்லது பொறுத்து-  ஒத்துழைப்பை வழங்கத்தான் செய்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விழிப்புணர்வு ஏற்படும். கண்மூடிக் கண் திறக்கும் சில இரவுகளில் அது நடந்து விடுமா என்ன? இஷ்டம்போல் இருந்துதானே பழகியிருக்கிறார்கள்?? கட்டறுத்த சுதந்திரம் படிந்து கிடக்கிறது…! அதைக் கட்டுக்குள் கொண்டு வருதல் என்பது ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கூட ஊடுருவி இன்றைய அவசியத் தேவையாய் மாறியிருக்கின்றன.

சில நாட்கள் வண்டி வருவதேயில்லை. இன்னும் சில நாட்கள் எல்லா வீதிகளுக்கும் வந்து போவதில்லை. வேறு சில நாட்கள் வண்டி வந்து போவதே தெரிவதில்லை. அதை யாரும் குறையாகவும் சொன்னதாகத் தெரியவில்லை. மக்கள் அவனை அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளப் பழகி விட்டார்கள். சேர்த்து வைத்துப் போட்டால் போச்சு…என்று எண்ணிச் சமாதானம் அடைந்து கொள்கிறார்கள். குப்பை எடுக்க வீட்டு வாசலுக்கு வண்டி வருவதே பெரிதில்லையா? இன்னும் வீடு வீடாகவா வந்து வாங்கிப் போக முடியும்? படிப்படியாகத்தான் எல்லா மாற்றங்களும்  வரும்.

 பாட்டுச் சத்தம் எல்லா நாளும் கேட்பதில்லைதான். உறங்கிக் கொண்டிருக்கும் பல வீடுகளில் அது நாராசமாய்.  உடல் நலமின்றிப் படுத்து முக்கி முனகிக் கொண்டிருக்கும் வயசாளிகளின் திரேக இம்சைகளை இந்தச் சத்தம் பொருட்படுத்துகிறதா என்ன? நகருக்குள் ஏர் உறாரன் அடிக்கக் கூடாது என்பது பொது விதி. யார் பொருட்படுத்துகிறார்கள்? அதுபோல் வீடுகளுள்ள வீதியில், தெருக்களில் நமக்கு நாமேதான் கட்டுப்பாட்டை விதித்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் அரசாங்கம் உபதேசிக்க முடியமா?

சட்டுன்னு நகர மாட்டானா? இந்த  நாலு தெரு சந்திப்புல எவ்வளவு நேரம்தான் வண்டியோட நின்னு அலற விடுவான்? காது ஜவ்வு கிழிஞ்சிறும் போல்ருக்கு….! –குரல்கள் எழத்தான் செய்கின்றன.

ஆனாலும் அவன் கடமையை அவன்  இயன்றவரை சரியாகத்தான் செய்கிறான்.. சொல்லிச் சொல்லிப் பாடம் புகட்டினால்தான் நாளடைவில் படிப்படியாகச் சீராகும். அதனால் விடாமல் சொல்கிறான். அதைக் கேட்கப் பொறுப்பும், பொறுமையும் நமக்கு அவசியம் வேண்டும்.

குப்பைகளைத் தெருவில் போடுவதற்கு, போகும் வழியில் ஓரமாய் வீசியெறிவதற்கு, அங்கங்கே காற்றில் வீசிவிட்டுப் போவதற்கு, திறந்த சாக்கடைகளில் பொட்டணம் பொட்டணமாய் தூக்கி எறிந்து அழுகி மிதந்து கொண்டிருப்பதற்கு, ஓடும் திறந்தவெளிச் சாக்கடையில் அடைத்துக் கொண்டு கிடப்பதற்கு, அங்கங்கே எண்ணிலடங்கா கொசு உற்பத்தி ஆகி வியாதிக்கு வழிகோலுவதற்கு இந்த நடைமுறை எவ்வளவோ பரவால்லியே…! நாம்தானே ஒத்துழைக்க வேண்டும்.

வண்டில உட்கார்ந்திண்டு ஜம்முன்னு போறதப்பாரு….குப்பை அள்றவன் சொகுசு…தெருத் தெருவாக் கூட்டி அள்ளிட்டிருந்ததுக்கு இது எவ்வளவோ பரவால்லியே…! அரசாங்கம் எப்டியெல்லாம் வசதி செய்து கொடுக்குது? அப்டியும் குப்பையை ஒழுங்காப் பிரிச்சு பைல சேகரிச்சு வண்டி வர்றபோது கொண்டு போடுறதுக்கு நமக்கு வலிக்குதா? அத இப்டிப் பிரிச்சுப் போடுங்க சார்….னு அவன் கூட ரெண்டு தரம் சொன்னது, சொல்றது…தப்பா…? எல்லாம் நம்ம நன்மைக்குத்தானே? பொல்யூஷன் கன்ட்ரோல் ஆகணும்ங்கிறதுக்குத்தானே…?  வீடும் நாடும் படிப்படியா சுத்தமாகணும்ங்கிற அடையாளம்தானே…? நோய் வரக் கூடாதுங்கிற அடிப்படைதானே?

…ரொம்ப சிந்திக்க ஆரம்பிச்சிட்டமோ? இப்டியெல்லாம் யோசிக்கிறதே இந்தக் காலத்துல தப்புங்கிற மாதிரில்ல ஆகிப் போச்சு….?  தனி மனுஷன் சரியா இருந்தா வீடு நல்லாயிருக்கும்…வீடு நல்லாயிருந்தா நாடு நல்லாயிருக்கும்….இது நமக்கே தெரிய வேண்டாமா?

யோசித்துக் கொண்டே மாடிக்கு வந்தார் கருணாகரன்.   அவர் குடியிருக்கும் அடுக்ககத்தில் எல்லோரும்  அன்றாடம் குப்பை போடுகிறார்களா…அப்படித் தெரியவில்லையே என்று ஏனோ தோன்றியது. மூட்டை கட்டி டூ வீலர்ல தூக்கிட்டுப் போய் வீதி நுனியிலே இருக்கிற குப்பைத் தொட்டியிலே போட்ருவாங்களோ? அப்படிப்  போடக் கூடாது என்றும், போட்டால் அபராதம் என்று வேறு சொல்கிறார்கள். பிரிக்கப்படாத குப்பை அங்கே மலையாய்ச் சேருகிறதுதான் இன்னும். அவற்றைக் கிளறிக் கிளறி அந்தப் பணியாளர்கள் பிரிக்கும் காட்சி மனசை வதைக்கத்தான் செய்கிறது.  கடந்து செல்கிறவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு நகர்கிறார்கள். அந்த ஊழியர்களுக்கு மட்டும் அது பரவாயில்லையா? அவங்களும் மனுஷங்கதானே?

இனிமே டிகாக் ஷன் அடிச்ச காபிப்பொடியைத் தனியே ஒரு பேப்பர்ல போட்டு வை. ஈரம் நல்லா காயட்டும்…அப்புறம்தான் எடுத்து மக்கும் குப்பைல போடணும்…தெரிஞ்சிதா….? ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூடப் போடலாம். தப்பில்லே…

சரி…. – என்றாள் காயத்ரி. ஓடி ஓடிப்போய் நாலு மாடி இறங்கி ஒரு நாள் தவறாமல் அவர் குப்பையைக் கொட்டி வருவதே அவளுக்குப் பேருதவியாய் இருந்தது. அந்த லிஃப்ட் ஒழுங்காய் வேலை செய்தால்தானே? அவர் அதைப் பொருட்படுத்தாமல் போய் வருவதே பெரிய விஷயம். ஃபேஸ் டூ ஃபேஸ் எதிர்கொள்வது அவர்தானே! நமக்கு அந்தப் பாடு இல்லையே…?  அவளுக்கும் பலபடி சிந்தனை ஓடியது.

றுநாள் – பொழுது விடிந்து வெய்யில் ஏறிய  வேளையில்…..

மக்கும் குப்பை…மக்காக் குப்பை…பிரித்துப் போட்டா நலமாகும்….. – பாட்டுச் சத்தம் பலமாய்க் கேட்க…இரண்டு குப்பைப் பைகளையும் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாய்க் கீழே இறங்கினார் கருணாகரன். அவன் அருகே வரும்முன் போய் நின்று காட்சி கொடுக்க வேண்டும். விருட்டென்று வண்டியை விட்டுக் கொண்டு போய்விட்டால்?

 அன்பார்ந்த பொது மக்களுக்கு பணிவான வணக்கங்கள். மக்கும் குப்பை…மக்காக் குப்பை…அபாயகரமான குப்பை…. என்று பிரித்துப் போட்டு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி நிர்வாகம் உங்களைப் பணிவன்போடு  கேட்டுக் கொள்கிறது. …..உங்களது ஒத்துழைப்பே எங்களது  சீரிய சேவை …

அட…பாட்டுப் போக அறிவிப்பு வேறா ?- காதைத் தீட்டிக் கொண்டார் கருணாகரன். அடிக்கும் காற்றில் சத்தத்தை வேறு திசையில் இழுத்துக் கொண்டு போயிற்று.

அதென்னப்பா அபாயகரமான குப்பை…? என்றார் அவனைப் பார்த்து. புதுசா ஏதோ சொல்றாப்ல இருக்கே…?

புதுசில்ல சார்….எல்லாம் பழசுதான்.  சரியாக் கவனிச்சிருக்க மாட்டீங்க….உடைஞ்ச கண்ணாடி பாட்டில், துருப்பிடிச்ச கம்பிக, ஆணிக…சின்னச் சின்ன இரும்புச் சாமான்ங்க மருந்து மாத்திரை, ஊசிக…நாள்பட்ட மருந்துக…இப்டி உள்ளது சார்…அதையும்  சேர்த்து விட்டுர்றாங்கல்ல இந்தக் குப்பைகளோட….அதுக்காகத்தான் அதுகளையும் தனியாப் பிரிச்சுப் போடுங்கன்னு சொல்றது….நீங்க கவனிக்கலயா சார்….தொடர்ந்து சொல்லிட்டுத்தானே இருக்கோம்…..நிறையப் பேரு உங்கள மாதிரிதான்…கவனிக்கிறதில்ல…

ஓ…!அப்டியா….யாரும் சொல்லலையே…வீட்டுல கூட…மக்கும் குப்பை…மக்காக் குப்பைன்னு ரெண்டு டப்பாதான் வச்சிருக்கோம். அதுதான் மனசுல இருக்கு…. என்றவாறே அந்த எதிர் அடுக்ககத்தின்  காம்பவுன்ட் சுவரில் பளீரென்று தென்பட்ட ஒன்றைக் கூர்ந்து நோக்கினார் கருணாகரன். அதென்ன புதுசா என்னவோ….?

என்ன பார்க்குறீங்க….ரெட் ஸ்டிக்கர் சார்…..தொடர்ந்து எத்தனையோ நாள் சொல்லியும்…அவுங்க கேட்குறாப்ல இல்ல…..மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பைன்னு எதையுமே அவுங்க பிரிக்கிறதேயில்லை….எல்லாம் நீயே பிரிச்சிக்கோன்னு சொல்லிடுறாங்க…ஒரே பையாக் கொண்டாந்து தூக்கி எறிஞ்சிட்டுப் போயிடுறாங்க…பிரிச்செல்லாம் போட முடியாதாம்? .எத்தனை வாட்டி சொல்லியும் கேட்கலேன்னா அப்புறம் நாங்களும் என்னதான் சார் பண்றது….? மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தாத்தானே சார் சரியாச் செய்ய முடியும்?  – என்றான் அவன். மேற்கொண்டு அங்கே நிற்காமல் அவன் வண்டியை விட்டுக் கொண்டு போன வேகத்தைப் பார்த்தால்….சண்டையைத் தவிர்க்க நினைத்தது போலிருந்தது.

வேகமாய்  மாடி ஏறி வீட்டுக்குள் நுழைந்த கருணாகரன், கதவைச் சாத்திவிட்டு மனைவி காயத்ரியின் அருகில்  வந்து நின்று கேட்டார் அதென்னவென்று.

இதையென்னத்துக்கு இத்தனை ரகசியமாக் கேட்குறீங்க…சொல்லச் சொல்லக் கேட்கலேன்னா…எச்சரிக்கிற மாதிரி முதல்ல சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டுவாங்களாம்.  தொடர்ந்து அலட்சியமா இருந்தாங்கன்னு வச்சிக்குங்க…கடைசியா அபராதம் போடுவாங்களாம்….. வேணும்ங்கிறேன்…எத்தனை தரம் சொன்னாலும் பின்பற்ற மாட்டேங்கிறாங்களே? எப்படித்தான் இவங்களத் திருத்தறது? இல்லன்னா லேசுல மசிய மாட்டாங்களாக்கும்…இந்த எச்சரிக்கை சரிதான்…  –ஒரு வகைல பார்த்தா இவங்களும் மக்கா குப்பைதான்னு சொல்லுவேன்.  கூறியவாறே அடுப்பைப் பற்ற வைத்தாள்.

அது இவள் கோபத்தைப் புரிந்து கொண்டது போல் …பக்கென்ற சத்தத்தோடு குபுக்கென்று பற்றிக் கொண்டது.     

நல்ல விஷயத்தைக் கடைப்பிடிக்கிறதுக்கும் நம்ம ஜனங்களுக்கு சுரீர்னு ஏதாவது செய்யத்தான் வேண்டியிருக்கு…-கருணாகரனும் இப்படித்தான் தனக்குள் நினைத்துக் கொண்டார்.                                                           

 

                                                ----------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...