12 ஆகஸ்ட் 2023

 

சிறுகதை                     உயிர் எழுத்து மாத இதழ்  ஆகஸ்ட் 2023 

“அன்பின் வழியது






               பால்கனியில் வந்து உட்கார்ந்து கொண்டுதான் தன்னை மறைத்துக் கொள்கிறார் நாகநாதன். அவரால் சகஜமாக அந்த வீட்டுக்குள் சென்று புழங்க முடியவில்லை. புழங்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். என்னவோ தடுக்கிறது. இனம் புரியவில்லை.  தன்னுடைய கூச்ச சுபாவம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டார். சாதாரணமாக உறாலின் நடுவே சென்று சோபாவில் உட்கார்ந்து கொண்டு டி.வி.யைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லைதான். ஆனாலும் விருந்தாளிதானே என்ற உணர்வு போகமாட்டேனென்கிறது. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பார்கள். அப்படி சர்வ சுதந்திர பாத்தியதையாய் டி.வி.யை உபயோகிக்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அது ஒருவேளை அவர்களுக்கு இ்டைஞ்சலாக இருந்து விட்டால்? வயசான மனுஷனுக்குப் பக்குவமில்லையே என்று ஆகிவிடும்.  விருந்தாளி என்று வெறுமே சொல்லி நகர்ந்து விட முடியுமா? உறவு முறையும் வந்தாயிற்றே? அதான்… சம்பந்தி முறை…அதுவாகவே வந்து உட்கார்ந்து கொண்டது. தானா அழைத்தோம்? மகள் கொடுத்த பரிசு.  அதுவே இன்னும் மனதி்ல் திடமாய்ப் படியவில்லை. அதையும்தான் எதுவோ தடுக்கிறது. யதார்த்த நிலை இப்போதைக்கு வராது என்றுதான் தோன்றியது.

            அப்படித்தான் இரண்டொரு நாள் டி.வி. முன் இருந்தார். சகஜ நிலை ஒட்டவில்லை. வந்தே நாலு நாள்தானே ஆகிறது. இருந்து பார்த்தார் என்பதுதான் சரி. மனதில் எந்த வேற்றுமையான எண்ணமும் இல்லைதான். இருந்து என்ன பயன்?  ஆனால் தயக்கமிருந்தது. செய்யலாமா வேண்டாமா என்றும் கேட்போமா வேண்டாமா என்றும் யோசிக்க வேண்டியிருந்தது. அப்படியான நினைப்பு தீவிரப்பட்டிருந்தால் வந்தே இருக்க முடியாதே?  பரப்பிரம்மம் ஜெகந்நாதம் என்றுதான் அமர்ந்திருந்தார். ஏதாவது அவர்களாகக் கேட்டால் பதில் சொன்னார். அதையும் ஓரிரு வார்த்தைகளில். சுமுகமாய்ச் சொல்லுகிறோமா? அவருக்கே சந்தேகமாயிருந்தது.

வழக்கமாய் நிகழ்ச்சி பார்க்கையில் எதற்காவது சத்தமாகச் சிரிப்பார். அது அவரை மீறிச் சிரிக்கும் சிரிப்பு. சுற்றிலும் மறந்து வெளிப்படுவது. அது அவர் வீட்டில். இங்கு அது முடியுமா? அடக்கிச் சிரித்துக் கொண்டார். அது அத்தனை திருப்தி இல்லைதான். அப்போது அவர் உடல் மட்டும் அவரை மீறிக் குலுங்கியது.  கூடவே வந்து வசுமதியும் அமர்வாள் என்று எதிர்பார்த்தார். அவளைக் காணவில்லை. புது இடம்….அவருக்குக் கொஞ்சம் துணையாய் இருப்போம் என்கிற எண்ணமில்லை அவளுக்கு. அப்படி வந்து அவளும் குந்தியிருந்தால் அதை அவர்கள் விரும்புவார்களோ என்னவோ? புருஷம்பொண்டாட்டி பசையால்ல ஒட்டிட்டிருக்காங்க…என்று எண்ணமிட்டால்? அவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ, தோன்றுகிறதே?

            கொஞ்சம் கூச்ச சுபாவியாயிற்றே…திணறுவானே…!  என்று ஒரு ஒத்துழைப்பு உண்டா அவளிடம்? எனக்கென்ன என்று இருக்கிறாள். உங்களுக்கென்ன நான் கொடுக்கா?

அதற்குள்ளுமா அவர்களோடு ஒன்றி விட்டாள்? அடுப்படியில் ஒத்தாசை செய்கிறாளோ? அது முடியாதே? இவ்வளவு சீக்கிரம் அடுப்படிவரை போய்விட்டாளா என்ன?  அவர்கள் அசைவம் சமைத்தால்? சே…சே…! நாங்கள் இருவரும் வந்திருக்கும் இந்த நாளிலுமா அதைச் செய்வார்கள்? எங்களுக்காக விடவேண்டாம்தான். ஆனாலும் ஒரு பத்து நாளைக்கு அதைத் தவிர்க்க முடியாதா என்ன? அத்தனை பக்குவமில்லாமலா இருக்கிறார்கள்? தினசரி புழங்கும் அதே பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவித்தானே பயன்படுத்துவார்கள். நேற்று மீன் குழம்பு வைத்த சட்டியைத் தேய்த்துக் கவிழ்த்து பின்பு எடுத்து உபயோகித்தால் தெரியவா போகிறது? இல்லை குழம்பும் சேர்ந்து நாறப் போகிறதா? நமக்கு நாற்றம். அவர்களுக்கு அது பழகிய வாசனை.  அப்படி நாறினால்…என்னமோ ஒரு வாடை வருதே? என்று சொல்ல முடியுமா? ஒரு வேளை எதுக்களித்து விட்டால்? வாந்தி வந்து விட்டால்? சங்கடம்தான்.  புழங்கும் பாத்திரங்கள் முழுவதும்  புதியதாக ஒரு செட் வாங்கியா  அடுக்க முடியும்? அதை அவர்களாக உணர்ந்து செய்திருந்தால் ஓ.கே. கேட்கவா முடியும்?

இல்லல்ல…பரவால்ல…விட்ருங்க…ஒண்ணும் பிரச்னையில்ல…சாதம் போட்டு மோர் விடுங்க….ஊறுகாய் இருக்குங்களா…அது போதும்….என்றுதான் சொல்ல வேண்டும். மனதளவில் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுதான் அவரைப் பொறுத்தவரை கிளம்பி வந்திருந்தார். வசுமதிக்கு இந்த யோசனையெல்லாம் கண்டிப்பாய் வந்திருக்காது. சித்தம் போக்கு, சிவன் போக்கு என்றுதான் இருப்பாள். சோறு தட்டில் விழும்போதுதான் தெரியும் சேதி…! ஊறுகாய் ஆகாது அவளுக்கு. என்ன பாடு படப் போகிறாளோ?

டி.வி. பார்த்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்…சட்டென்று கொல்லைப் புறம் பார்வையை வீசினார். அங்கு மாமரம், முருங்கை, மாதுளை, கொய்யா…என்று நிறைய மரங்கள் இருந்தன. காய்களும், பழங்களுமாய்க் காய்த்துக் குலுங்கின. வீட்டைப் போல இரண்டு பங்கு இருக்கும் போல்ருக்கே பின் புறத் தோட்டம் என்று தோன்றியது.

பெருங்கைதான் என்று நினைத்துக் கொண்டார்.  வசதியான இடம்தான். தன் பெண் வசதி வாய்ப்போடுதான் வாழும். அதில் சந்தேகமில்லை. ஆனாலும் பசையுள்ள இடம்…அவளை அதிகாரம் செய்து மிரட்டாமல் இருக்க வேண்டும். அங்கும் இங்கும் என்று வீட்டு வேலைகளில் அலைக்கழிக்காமல் நாளும் பொழுதும் கழிய வேண்டும். முதலில் கொஞ்ச நாளைக்கு மருமகளைத் தாங்குவார்கள்…பிறகு? ஆறின கஞ்சி பழங்கஞ்சி  என்கிற கதைதானே? விரட்ட ஆரம்பித்தால் தன் பெண் தாங்குமா? நினைக்கும்போதே கண் கலங்கியது நாகநாதனுக்கு. தொண்டை அடைத்தது துக்கத்தில். மணையில், மடியில் அமர்ந்து ஊரறியத் தாரை வார்க்க இயலாமல் போன துக்கம். எப்படியெல்லாம் நினைத்து வைத்திருந்தேன்? சீரும் சிறப்புமாய் அனுப்ப வேண்டுமென்று? எல்லாமும் காற்றுப் போன பலூன் போல் ஆகிப் போனது.

வேலை பார்க்கும் பெண்கள் வீட்டு வேலை செய்துதான் ஆக வேண்டும் என்று பெரும்பாலும் எதிர்பார்ப்பதில்லைதான். ஆனாலும் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் கொஞ்சமாவது உடம்பு அசைகிறதா என்று கவனிக்கத்தானே செய்வார்கள். துரும்பையாவது நகர்த்துகிறாளா என்று யாரேனும் ஒருவர் கவனிக்கக் கூடுமே…!  பொறுக்க முடியாமல் ஏதேனும் சொல்லி வைத்தால்? திட்டி விட்டால்? வலியப் போய் நான் செய்றேன் என்று  நிற்கும் ஜோவியல் டைப்பும் இல்லையே தன் பெண்? ஒதுங்கித்தானே இருப்பாள். சொன்னால் செய்வாள். அது நல்ல குணம் இல்லையா?

இதென்ன இப்டி ஒண்ணொண்ணையும் சொல்லிச் சொல்லிச் செய்யுது இந்தப்புள்ள…?

பேச்சு வித்தியாசமாயிருந்தால் பதிலுக்குச் சட்டென்று  கொடுத்து விடுவாளே காஞ்சனா. வாங்கிக் கட்டிக் கொண்டு இனி இவளிடம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒதுங்கலாம். இல்லையென்றால், என்ன எல்லாத்துக்கும் எதிர்த்து எதிர்த்துப் பேசுறே? அடக்க ஒடுக்கமா இருக்கமாட்டியா? வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசுவியா?  என்று எகிறி சண்டையும் களேபரமும் ஆகலாம். இந்த இரண்டுமே இல்லாமல் புகுந்த இடம், இனி இங்குதான் நம் வாழ்க்கை, அதுவும் காதல் திருமணம், ஜாதி விட்டு ஜாதித் திருமணம்….சற்று அடங்கியே போவோம்….எல்லாம் கொஞ்ச நாளில் சரியாய்ப் போகும் என்று தன்னையே மாற்றிக் கொள்ளவும் எண்ணமிட்டிருக்கலாம். தோன்றியதே தவிர அப்படித் தன்னை மாற்றிக் கொள்ளும் குணவதியாகக் காஞ்சனாவை இவரால் நினைக்க முடியவில்லை. எதுவுமே தாங்கள் அந்த வீட்டில் இருக்கும்வரை தலையெடுக்கப் போவதில்லை…அடக்கித்தான் வாசிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்.

எதற்காக இப்படியெல்லாம் நினைத்து மறுக வேண்டும்? இனி அவள் பாடு…அவர்கள் பாடு…ஏதோ வந்தமா…ஒரு கௌரவத்துக்கு, சுமுக நிலைக்கு, நாலு நாள் இருந்தமா என்று போகப் போகிறோம். அநாவசிய டென்ஷன் வேண்டாமே…?. எண்ண அலைகளில் அவர் உடம்பு தளர்வதாய் உணர்ந்தார். எதையும் போட்டு மனதில் உழப்பிப் பிசைந்து கொள்ள தெம்புமில்லை. பெண் திருமணம் முடிந்த கையோடு அவர் உடம்பும் மனசும் அவரிடத்தில் இல்லை. என்னவோ நடமாடிக் கொண்டிருக்கிறார்…அவ்வளவே…!

ஆனால் ஒன்று. இவை எல்லாமும் மாப்பிள்ளை  திலகனின் இருப்பைப் பொறுத்த விஷயம். வேற்று ஜாதி ஆளானாலும், கல்யாணம் என்று ஆகிப் போனது. இனி மாப்பிள்ளை மாப்பிள்ளைதானே…? மாறவா போகிறது? காஞ்சனா திலகன்…சொல்லிப் பார்த்துக் கொண்டார். திலகனா? திலகரா? எது பொருந்துகிறது?

அவன் அவளின்பால் காட்டும் அன்பையும், அக்கறையையும் பொறுத்த விஷயம். பெண்டாட்டி மேல் ரொம்பத்தான் அக்கறை என்று மற்றவர்கள் அறிவதற்கு ஏதுவாக வெளிப்படையாக அவன் நடந்து கொண்டால், மற்றவர்கள் வாய் அடங்கும். அல்லாமல் ஏன்…பெரியவங்க ஏதாச்சும் சொன்னா செய்தா என்ன? குறைஞ்சு போவியா? சின்னச் சின்ன வேலைதானே? உங்க வீட்டுல செய்து பழகியிருப்பேல்ல…அத இங்க செய்…அவ்வளவுதானே….சும்மா மகாராணியாட்டம் மினுக்கிட்டுத் திரியணும்னு மட்டும் நினைக்காதே…அது நடவாது…இங்க இருக்கிறவங்களோட அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கப்பாரு…!.-சொல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

என்னதான் காதல் என்றாலும், அன்பு என்றாலும், பாசம் என்றாலும் – காரியம் என்று வரும்போது குரல் மாறத்தானே செய்யும்? குடும்பத்துக்கு ஏத்தவளா தன் பெண்டாட்டி இருக்கணும்னு ஒரு கணவன் நினைக்கிறதுல என்ன தப்பு? என்றுதான் சொல்வார்கள். காதல் என்பது கண்களை மறைத்த விஷயம். கருத்தையும் மறைத்த விஷயம்தான். காரியார்த்தமாய் இறங்கும்போதுதான் மனிதர்களின் சுயரூபம் வெளிப்படும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு, ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து அட்ஜஸ்ட்  ஆக வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும். அதை இருவருமே உணர வேண்டும். அதுவரை பொறுமையும் வேண்டும்.

அதையெல்லாம் உணரும் முன்தான் குடுமிப்பிடி சண்டை போட்டு, கோர்ட்டு முன் போய் நிற்கிறார்களே? விவாகரத்து என்பது எத்தனை சர்வ சாதாரணமாகி விட்டது இந்நாளில்? கோர்ட் வாசல் படிகளில் கூட்டம் கூட்டமாய் அல்லவா காத்துக் கிடக்கிறார்கள் மன முறிவு ஏற்பட்டு மண முறிவுக்கு வரிசையில் நிற்கிறார்கள். தன் முனைப்பான விஷயமாய்த் தலையெடுத்து, பேயாட்டம் போடுகிறது.  பெத்து, வளர்த்து, ஆளாக்கிக் கட்டிக் கொடுத்த அப்பன், ஆத்தாவை யார் நினைக்கிறார்கள் இன்றைய நாளில்? யார் மதிக்கிறார்கள்?  என் வாழ்க்கை என் முடிவு…என்று முந்திக்கொண்டு போய், எத்தனை திருமணங்கள் நிலைத்திருக்கின்றன?

வீட்டு வேலைகளில் தன் பெண்- என்பது பற்றிச் சிந்திக்கப் போக…எங்கெங்கோ போய் தன் எண்ணங்கள் நிற்பதை உணர்ந்து இயல்புக்கு வந்தார்.

துவே வேலை பார்த்திட்டு, ஆபீஸ்லருந்து அசந்து தளர்ந்து வருது…அதப் போய் வீட்டு வேலை செய்னா எப்படிப்பா  செய்யும்….? ஏதோ லீவு நாள்ல அதுவாப் பிரியப்பட்டு, இன்னைக்கு நா சமைக்கிறேன்  அத்தே….! என்று வந்து நின்னுச்சின்னா சரின்னு விட வேண்டிதான்….கூழுக்கும் ஆசை…மீசைக்கும் ஆசைன்னா எப்டி…? சின்னப் பொண்ணுதான…சந்தோஷமா இருந்திட்டுப் போவுது….! – சொல்வார்களா? சொல்ல வேண்டும் என்று அவர் மனம் அவாவிற்று. யாராவது ஒருத்தரேனும்  இரக்கம் கொள்ள மாட்டார்களா?

எல்லாவிதமான கருத்துக்களையும் மண்டையில் ஊறப்போட்டு ஊறப்போட்டுத்தான் புறப்பட்டு வந்திருந்தார் நாகநாதன். எதாச்சும் பிரச்னை என்று ஆரம்பத்திலேயே வந்து விட்டால்? ஓரளவு தொகுப்பாகப் பேசியாக வேண்டுமே…? அதற்கு மனசுக்குள் அசைபோட்டு வைத்துக் கொண்டால்தானே ஆகும்? சம்பந்தியென்ன விவரமில்லாத ஆளா, இப்டியிருக்காரு என்று யாரும் தன்னை மட்டமாக நினைத்துக் விடக் கூடாதே…!  ஆள் வளர்ந்தால் மட்டும் போதுமா? அறிவும் சேர்ந்துதான் வளர்ந்திருக்கிறது என்பதை எப்படி நிரூபிப்பது? விவரமாயும், விளக்கமாயும் தெளிவாய்ப் பேசுவதிலும்தானே இருக்கிறது பெருமை?

வசுமதி பாடு தேவலை. இந்தப் பெண்கள் எப்படியோ ஒன்றோடொன்று சுலபமாகக் கலந்து விடுகிறார்கள்? சமையல், சாப்பாடு, கோயில், குளமென்று அவர்களுக்குப் பேசுவதற்கும் செல்வதற்கும்  நிறைய இடமும் இருக்கிறது, விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன. ஆண்களுக்குத்தான் கொஞ்ச நேரம் பேசி விட்டால் போதும் என்று அலுத்துப் போகிறது. பிறகு அவர்களாகவே கவனத்தைத் திருப்பி விடுகிறார்கள். அல்லது அமைதியாகி விடுகிறார்கள். டி.வி., நியூஸ் பேப்பர், மொபைல் என்று சுலபமாக இடம் மாறிக் கொள்கிறார்கள். அது சகஜமாகவும் போய்விடுகிறது அவர்களுக்குள். அதுதான் நாள் பூராவும் மொபைலை இணுக்குவதற்கு மனசு துள்ளிக்கொண்டேயிருக்கிறதே…!

அது என்ன இளைஞர்கள், இளைஞிகளுக்கு மட்டும்தானா? எத்தனை வயசான பெரிசுகள்  அதை நோண்டிக் கொண்டே அலைகின்றன? பலிகடா ஆன கதைதான். உலகளாவிய விஷயங்களை உடனுக்குடன் அறிவதற்குத் தங்களுக்கு அந்த ஃபோனைச் சுலபமாக ஆபரேட் பண்ணத் தெரிகிறதாம். சர்வ சாதாரணமாய்க் கற்றுக் கொண்டு விட்டார்களாம். அதில் ஒரு தனிப் பெருமை…! வங்கி கேட்கும் விபரம் என்று வேண்டாததைக் க்ளிக் பண்ணி – பணத்தை இழந்த சீனியர் சிட்டிசன்ஸ் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அந்த வயிற்றெரிச்சலை எங்கே கொண்டு போய்க் கொட்டுவது?

காஞ்சனாவும், திலகனும் திருமணத்திற்கு முன்பு சதா பேசிக்கொண்டேயிருந்ததும்…வாட்சப்பில் செய்தி பறிமாறிக்கொண்டதும், உரையாடல் நடத்தியதும் – தன் பெண்ணின் ஃபோனை ஒரு நாள் வலியப் பிடுங்கிப் பார்த்து அதிர்ந்து  அன்று வீடே கலகக் கூடமானதும், அன்று மாலையே அவள் வீட்டிற்கு வராமலும், எங்கே போனாள் என்று தெரியாமலும் அலறிப் புடைத்து, அழுது புரண்டு-கதறக் கதற அடித்து மறுநாள் காலை வந்து கதவைத் தட்டியபோது – திரும்பக் கிடைத்தாளே என்கிற மகிழ்ச்சியைவிட நேற்று இரவு எங்கிருந்தாய்? என்று கேட்டு நிற்க….இன்றுவரை அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தபாடில்லையே? அதுதான் விரும்பியவனையே திருமணம் செய்தாயிற்று. எல்லாம் முடிந்தது. இனி அதைக் கேட்டுதான் என்ன புண்ணியம்?அந்தக் கேவலத்தை வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா? சொல்ல முடியவில்லை என்றால் கேவலம்தானே? பிறருக்குத் தெரியாமல் நடக்கும் விஷயம் என்றாலே தப்புதானே அது?  காற்றோடு கரைந்ததாக அது இருக்கட்டும்…!  வாழ்க்கையில் அங்கங்கே சிற்சில விஷயங்களை நோண்டாமல் விட்டாலே நிம்மதிதான் போலும்…! இன்று இப்படித்தான் தோன்றுகிறது அவர் மனதுக்கு.

அவனோடதான் போய் இருந்திருக்கா அவ…! அரத முண்ட… - என்னா தைரியம் பார்த்தீங்களா? என்ன விபரீதம் நடந்திச்சோ…? இன்னும் என்னெல்லாம் சிரிப்பாச் சிரிக்கப் போகுதோ? – புலம்பிக்கொண்டே ஒரு வாரம் படுக்கையில் விழுந்து  விட்டாள் வசுமதி. அதை நம்பத் தயாரில்லை நாகநாதன். என்னவோ ஒரு நம்பிக்கை அவர் பெண் மேல் அவருக்கிருந்தது. அதனால் அதுபற்றி அவளிடம் அவர் கேட்கவேயில்லை. இன்றுவரை…!! காதுக்கு வரும் விஷயங்களைக் கேட்டே மனசு அல்லல்பட்டு வாழ் நாட்கள் பூராவும் மன உளைச்சலில் கடந்து வந்தாயிற்று. இன்னும் நாமாக வேறு அள்ளி அபிஷேகம் பண்ணிக் கொள்ள வேண்டுமா?

அப்பா ஏன் தன்னிடம் இதுபற்றிக் கேட்கவில்லை? என்று ஒரு பெண்ணுக்குத் தோன்றாதா? கேட்கவில்லையே? தனக்குத் துணையாக சரியான ஒரு ஆண் மகனைத் தேர்ந்தெடுத்து விட்டோம்…இனிமேல் என்ன…என்கிற தைரியம்…திண்ணக்கம் வந்து விட்டதோ? அதுவே, அப்பாட்ட இதைப் போய்ச் சொல்லாட்டா என்ன? என்கிற அலட்சியத்தை வழங்கி விட்டதோ? யப்பாடீ…! பெற்று வளர்த்து வெளி உலகத்தில் சஞ்சரிக்க விடுவதோடு கடமை முடிந்ததா? மற்றதெல்லாம் அவர்கள் பாடா? பிறகு அவர்கள் சொல்வதற்கெல்லாம், செய்வதற்கெல்லாம்…சரி…சரி…சம்மதம் என்று தலையாட்டி ஒப்புதல் வழங்க வேண்டுமா? காலம் இப்படியா மாறிப் போகும்? காலம் மாறினால் சொல்லி வைத்தாற்போல் பலரும் அதன் பின்னால் வரிசை கட்டி நிற்கணுமா? அத்தனை நன்மையளிக்கும் மாற்றங்களாகவா  இருக்கிறது இன்றைய நடைமுறை? எவ்வளவோ யோசித்து எல்லாமும்  அடங்கிப் போனது. உடம்பிலுள்ள முக்கிய செல்களெல்லாம் அழிந்து விட்டன. அல்லது குறைந்து விட்டன. நரம்புகள் தளர்ந்து விட்டன. எதுவும் இனி முறுக்கேற வழியில்லை. இன்றைய இருப்பு நிலைதான் அவரால் சாத்தியமானது.

சரி…அது விரும்பியவனுக்கே அவளைக் கொடுத்தாயிற்று….அவ்வளவுதான்…நாம் எங்கே கொடுத்தோம்? அவனாகவல்லவோ எடுத்துக் கொண்டான்? அதுவாகவல்லவோ போய்ச் சேர்ந்து கொண்டது? – சிரிப்பவர் சிலபேர், அழுபவர் பலபேர்…இருக்கும் நிலை என்று மாறுமோ?  

சுமதியைப் பார்க்கக் கொல்லைப் புறம் திரும்பிய தலை அப்படியே நின்று விட்டது நாகநாதனுக்கு. மாமரத்தைப் பார்த்ததும் சடை சடையாய்த் தொங்கும் பாம்புகள்தான் இவர் நினைவுக்கு வந்தன. சர்வீசில் இருந்த காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையத்திற்கு இவரை ஆய்வுக்காக அனுப்பிவிட்டார்கள். அங்கேயே இரவும் பகலும் தங்க வேண்டி வந்து விட்டது.பக்கத்திலேயே இருக்கும் நகரத்தில் ரூம் போடவில்லை.  வராண்டாவில் காற்றாடப் படுப்போம் என்று கிளம்பியபோது  ஐயய்யோ…டேஞ்சர்….என்று அலறினார்கள். என்ன என்று கேட்டபோது வெராண்டாவுக்கு வெளியே அடர்த்தியாய், ஆஜானுபாகுவாய் நின்ற மாமரங்களைக் காட்டினார்கள். மரத்தில் தலைகீழாய்த் தொங்கும் பாம்புப் படைகள் அங்கங்கே ஊர்வலம் வரும். வராண்டாவில் படுத்திருக்கும் நம்மை விசாரித்து விட்டுப் போய்விடும் என்று பயமுறுத்தினார்கள். அதனால் அறைக்குள்ளேயே கதவுகளை கிச்சென்று மூடிவிட்டு ஜாக்கிரதையாய்ப் படுத்துறங்க நேர்ந்து விட்டது. அடைத்திருக்கும் கண்ணாடி ஜன்னல்கள் வழி  அந்தப் பக்கம் பாம்பு ஊர்கிறதா என்று கண்காணிப்பதிலேயே தூக்கம் பாழாகி விட்டது. காலையில் எழுந்ததும் மரத்தைச் சுட்டிக் காட்டியபோதுதான் பார்த்து  அதிர்ந்தார். சடை சடையாய்ப் பாம்புகள். தலை கீழாய்த் தொங்கின. அவற்றிற்கு நடுவே மாங்காய்களும், பழங்களும்.  பார்க்கவே குலை நடுங்கியது. நல்ல எடத்துல வந்து மாட்டினோம்யா…என்று நடு நடுங்கிப் போனார். சீக்கிரம் ஆய்வை முடித்துக் கொண்டு வண்டியைக் கிளப்பியதும், அதற்குப் பின் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்காததும்…தனிக்கதை.

அந்தக் காட்சிகளெல்லாம் இப்போது ஏன் நினைவுக்கு வருகின்றன? மனிதனின் மன சஞ்சலங்கள் இம்மாதிரி வக்கிரத்தை ஏற்படுத்துகின்றன. அல்லது தூண்டி விடுகின்றன. இதற்குத்தான் ஏதேனும் சுலோகங்களை வாய் உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார்கள். சிந்தனையை ஒருமைப் படுத்தும் பயிற்சி. செய்து பார்த்தால்தானே பலன் தெரியும்? பயிற்சிதானே ஸ்திரப்படுத்தும்.

வசுமதி கொல்லைப்புறம் புதிய உறவுகளுடனும், தோட்ட மரங்களுடனும் உறவாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. எங்கு சென்றாலும் சட்டென்று கலந்து விடுகிறாள். தலைமை ஆசிரியையாய் இருப்பவள் அப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை என்றுதான் தோன்றியது. பூந்தோட்டமான பள்ளியில் பூத்திருக்கும் எத்தனை ஆயிரம் மாணவ மாணவிகளோடு பழகிக் கலந்திருப்பாள்? அந்த சந்தோஷத்திற்கு ஈடு உண்டா?  இன்னும் மூன்று வருஷம் சர்வீஸ் உள்ளது அவளுக்கு. அதற்குள் அடுத்த ப்ரமோஷனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். திறமையான பெண்மணி. ஆனால் தன் பெண் விஷயத்தில் கவனம் தப்பி விட்டாள். கதி கலங்கி விட்டாள். எல்லாம் காலத்தின் கோலம்.

ஓய்வு பெறுவதற்குள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி விட வேண்டும் என்று ஆன மட்டும் முயற்சி செய்தார் நாகநாதன். நடக்கவில்லை. எல்லாருக்குமா அந்த யோகம் கிடைக்கிறது. வந்த ஓய்வூதியப் பலன்களை வைத்துப் பெண் கல்யாணத்தைப் பண்ணிவிட்டு ஓட்டாண்டி ஆனவர்களெல்லாம் எத்தனை பேர்? கொஞ்சமான ஒற்றைப் பென்ஷன் காசை வைத்துக் கொண்டு, வீட்டுச் செலவு, வைத்தியச் செலவு என்று பற்றாக்குறையாகவேதான் பலரின் வாழ்க்கையும் அமைந்திருந்ததைப் பார்த்து வேதனைப் பட்டிருக்கிறார் நாகநாதன். தான் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்து, எதற்கு அநாவசிய வைத்தியச் செலவு என்று வெறுத்து, ராவோடு ராவாகத் தூக்க மாத்திரை அடித்துவிட்டு, நீட்டி நிமிர்ந்து விட்ட ஓய்வு பெற்ற ஊழியரையெல்லாம் கண்டிருக்கிறார். இருக்கும் சேமிப்பும், ஓய்வுகாலப் பணப்பலனும் ரெண்டு பெண்களின் கல்யாணத்திற்கு என்று மனைவிக்குக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, போய் வருகிறேன் என்று முடித்திருந்த அந்தக் கடிதம் கண் முன்னே இப்பொழுதும் நிழலாடிக் கொண்டிருக்கிறது இவருக்கு. எப்படிப்பட்ட தியாகம்? என்னவொரு தீர்க்கமான கடமையுணர்வு?

இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம், வேண்டாம் என்று ஏன் சொல்கிறாள் என்கிற யோசனை போகாமல் நாட்கள் நகர்ந்து விட கடைசியாய்த்தான் தெரிந்தது “காஞ்சனாவின் காதல்“. எந்த வீட்டிலும் அப்படி உடனே சரி என்று ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனாலும் பெண்ணின் விருப்பத்தை மீறி எப்படிச் செய்வது? என்று அதிர்ந்தார் நாகநாதன். ஏதேனும் தற்கொலை, அது இது என்று போய்விட்டதென்றால்? அதையெல்லாம் எதிர்நோக்க இவருக்கு தைரியமில்லை. காலத்திற்கும் துக்கமாகி விடுமே? மடியில் படுத்துக் குலுங்கிக் குலுங்கி அழும் பெண்ணைக் கண்டு மனம் சட்டென்று இரங்கிப் போனது. தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அனுபூதியாகிப் போனார்.

 ஆயிற்று. சண்டை சச்சரவில்லாமல் அமைதியாய் நடந்தேறிவிட்டது பெண்ணின் கல்யாணம். நினைத்த அளவு சேமிப்புகள் கரையவில்லை. முடிஞ்சதைச் செய்யுங்க…எங்க பையன் சந்தோஷம்தான் முக்கியம் எங்களுக்கு என்றார்கள். இங்கே என்ன நாங்க வேறே மாதிரியா அலையுறோம்…என்று நினைத்துக் கொண்டார் இவர். ஜாதி வித்தியாசம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இவருக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்ததுதான். ….என்ன சொல்வாகளோ…ஏது நடக்குமோ என்று பயந்தது என்னவோ உண்மைதான். அங்க ஏற்கனவே இது மாதிரி ஏதேனும் இருக்குமோ? என்றும் சந்தேகித்தார்.

அந்த விபரமெல்லாம் இனி மெல்ல மெல்லத்தானே அறிய முடியும். வாய்விட்டுக் கேட்க முடியாத, நாமாய் உணர வேண்டிய பின் புலங்கள் என்று இந்த உலகத்தில்தான் எத்தனையோ இருக்கின்றனவே! குடும்பத்திற்குக் குடும்பம், மனிதர்களுக்கு மனிதர் திரையில்லை என்று சொல்லிவிட  முடியுமா?

            ன்ன…ரெகுலரா டி.வி. சீரியல் பார்ப்பீங்களோ? என்றார் சம்பந்தி நமச்சிவாயம். முணுக்கென்று தன் நினைவுக்கு வந்தார். எப்போது தான் பால்கனியிலிருந்து வெளியேறினோம் என்பதே அவருக்கு மாயமாய் இருந்தது. நினைவுகள் போட்டு அப்படி அமுக்குகிறது அவரை. தன்னிடம் உள்ள பெரிய பலவீனமே அதுதான் என்று தோன்றியது.

            முந்தி பார்த்துக்கிட்டிருந்தேன். வேறே பொழுதுபோக்கு? இப்போ விடுபட்டுப் போச்சு… என்றார். அந்த விடுபட்டுப் போச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அது அவர்களுக்குப் புரியுமோ என்னவோ? புரிந்தால்தான் என்னவாகிவிடப் போகிறது இனிமேல்? ஆனது ஆனதுதான்.

            நிச்சலனமில்லாத, நிம்மதியான அந்த நாட்கள் பறிபோய்விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்பவர் நாகநாதன்.  வருவாய்க்கேற்ற சிக்கனமாக செலவு, அளவான அக்கறையான சேமிப்பு…கடன் வாங்காமல் கழியும் வாழ் நாட்கள் என்று இருப்பவர்.

 மனிதன் நிம்மதியைத் தேடிக் கொள்வது அவன் கையில்தானே இருக்கிறது? இப்படி இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவன், தனக்கு மட்டுமா அந்த இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கிறான்? தன் மூலம் தன் சார்பான குடும்பத்திற்கும்தானே கற்றுக் கொடுக்கிறான்? கூட இருப்பவர்களுக்கும்தானே உணர்த்துகிறான்.   அவனின் அடக்கமான, ஒழுங்கான இருப்பைப் பார்த்து, அதையே பாடமாகக் கொண்டு அந்தக் குடும்பத்தின் இருப்பும், நடப்பும் நடந்தேறுகின்றன.  ஒரு குடும்பம், வழி நடப்பது தலைவனின் இருப்பை வைத்துத்தானே?

அப்படித்தான் நிம்மதியாக ஓடிக் கொண்டிருந்த அவர் வாழ்வில் அந்த நிம்மதியைக் குலைக்கும் வண்ணம்தான் மகளின் திருமணம் நடந்தது. மனிதனின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் ஆசை. ஆசைகளைத் துறந்தவன் நிம்மதியாக இருக்க முடியும். தனக்குத்தானே ஒருவன் அப்படியிருந்தாலும், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தான் நம்புபவர்கள் எல்லோரும், தன் நம்பிக்கைப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா என்ன? அதே சமயம் பெற்ற மகளின் ஆசை நிராசையாக விட முடியுமா? இதுவே பையனாக இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? கத்திக் குடியைக் கெடுத்திருக்க மாட்டோமா? பையனுக்கு ஒரு விதி, பெண்ணிற்கு ஒரு விதியா? அதென்ன பெண் என்றால் மட்டும் ஒரு மென்மையான அணுகுமுறை? பெற்றோர்களே அப்படித்தான் இருப்பார்களோ? தன் மனைவி அப்படியில்லையே? ஆர்ப்பாட்டம் செய்தாளே? ஆனால் கடைசியில் அடங்கித்தானே போனாள்?

            ஒற்றுமையான நினைப்பு இன்னும் கூடி வரவில்லையே! ஒற்றுமை என்ற வார்த்தை அத்தனை பொருந்தாதுதான். அந்நியோன்யம்…அதுதான் சரி. அது வரக் கொஞ்ச நாள் ஆகும். பிறகுதான் அது சாத்தியப்படும். முதல் முதலாக அப்போதுதான் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். அந்த வீட்டிற்கென்ன, அந்த ஊருக்கே என்பதுதான் சரி. 

 பேருந்தில் அந்த வழி போக நேர்ந்த போதெல்லாம் கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டதோடு சரி. வானுயர்ந்த கோபுரமாக இருக்கிறதே…பிரபலமான கோயில் போலிருக்கிறது….சுற்று மதில் சுவர்கள் பிரம்மாண்டமாய் இருந்தன. எவனும் அதில் கால் வைத்து ஏறவே முடியாது.  கோயிலின் பழமை தெரிந்தது. உண்மையே உயர்ந்து நிற்கும் நிமிர்ந்த கோபுரங்கள. எத்தனை காலப் பழம் பெருமை?

            மனிதர்களும் இந்தப் பழமைக்குப் பழகிப் போனவர்கள்தான். பழமையில்தான் சீர்மை ஆழப் பதிந்திருக்கிறது. வந்த இடம் நல்ல இடம் என்றே நினைப்போமே…! எதற்கு அதையும் இதையும் அநாவசியமாய் நினைத்து அலட்டிக் கொண்டு மனதைக் குழப்பிப் கொள்ள வேண்டும்?

 நல்லதே நினைப்போம்…நல்லதே நடக்கும்… - என்று நினைத்த கணம்….வாங்க சம்பந்தி சாப்பிடுவோம்…இலை போட்டாச்சு….என்று மாசிலாமணி வந்து  அழைத்ததோடில்லாமல் அருகே நின்று தன்னைக் கைதூக்கி விட்டு எழுப்பியது இவரைச் சிலிர்க்க வைத்தது.

மனைப்பலகை போட்டு அதன் எதிரே  அகண்ட வாழை இலை விரித்து, தண்ணீர் தெளித்துச் சுத்தமாய்ப் பளபளவென்றிருந்த காட்சி இவர் மனதை திருப்திப் படுத்தியது.   சுத்தம் சோறு போடும்…. பதம் மனதில் ஓடியது.

என்ன பார்க்கிறீங்க….நூறு சதவிகிதம் படு சுத்தமான சைவம்தான் நம்ம வீட்ல….உங்க பெண்ணுக்காக எங்க பையன் கோரிக்கைப்படி  நாங்க எல்லாரும் விட்டுக் கொடுத்தாச்சு…..இனிமே யாருக்கும் என்னைக்காச்சும் நாக்கு இழுத்திச்சின்னா எல்லாமும் வீட்டுக் வெளிலதானேயொழிய, எங்க வீட்டு மகாலெட்சுமி வந்திருக்கிற இந்த கிரஉறத்துல சத்தியமா இல்லை….இதை நீங்க நூற்றியோரு சதவிகிதம் நம்பலாம்….

மாசிலாமணி அழுத்தம் திருத்தமாக இதைச் சொன்னபோது கூடியிருந்த எல்லோரும் திருப்தியோடு ஆமாம் என்று ஆமோதித்துத் தலையாட்ட,  நாகநாதனுக்கும், வசுமதிக்கும் மனசு நிறைந்து வழிந்தது அப்போது.

                                                ------------------------------------

     

           

 

கருத்துகள் இல்லை:

கடைநிலை  நாவல்  சென்னை-2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரையிலான புத்தகக் கண்காட்சி வெளியீடு   பின் அட்டைக் குறிப்பு -     கடைநிலை நாவல்...