12 ஆகஸ்ட் 2023

 

சிறுகதை       “வயிறு”                    ஜீரணம் என்ற தலைப்பில்      


ஆவநாழி ஆகஸ்ட்-செப்டம்பர் 2023 மூன்றாமாண்டு சிறப்பிதழில்       ----------------




ன் மனது வெட்கியது. சம்மணமிட்டு அமர்ந்து தலை குனிந்திருக்க,  கண்கள் கலங்கிப் போய்  முன்னால் விரிக்கப்பட்டிருந்த வாழை இலையை மறைத்தது. அந்த ஒரு கணத்தில் என்னென்னவோ எண்ணங்கள் படையெடுத்து வந்து என்னைக் கலங்கடித்தன. ஒரு காலத்தில் சோற்றுக்கே வழியின்றி அலைக்கழிந்த நாட்களும், தாய் தந்தையரின் தியாகங்களும் மனதில் தோன்றி அழுகையை வரவழைத்தது எனக்கு.  சோற்றுக்காக வாழ்வா, வாழ்வதற்காகச் சோறா…?

உயிர் வாழ்வதற்காகச் சோறு தின்றால் போதுமே? அந்த உயிரை நிலை நிறுத்துவதற்காக இவ்வுலகில் எத்தனையோ உயிர்கள் என்னென்னமாதிரியெல்லாம் பாடாய்ப் படுகின்றன? உடலுக்காக உணவு.  அந்த உணவுக்காக உழைப்பு.

அருகே ராமமூர்த்தி, சுந்தரமூர்த்தி பிசைந்த சாதத்தை விழுங்குவதில் கவனமாய் இருந்தார்கள்.  இலையில் விட்டிருந்த குழம்பு வழிந்தோடித் தரையைத் தொட்டிருந்தது. எதற்கு இத்தனை அவசரம்? யாரேனும் தூக்கிக்கொண்டு ஓடப் போகிறார்களா என்ன? கவளம் கவளமாய் நன்றாகச் சவைத்து, நிதானமாய் உண்ண வேண்டியதுதானே? நன்றாய் மென்று தின்பதற்காகத்தானே பற்கள்?

அன்லிமிடெட் சார்….ஒரு நாளைக்கு வந்து பாருங்க எங்க மெஸ்ஸூக்கு! –

ஒரு வேளைக்கு வந்துதான் சாப்பிடுங்களேன்….எங்க வார்த்தைக்காக வரக் கூடாதா? இது ராமமூர்த்தி.

போவோம்…போவோம் என்றிருந்த எனக்கு அதற்கு வேளை வரவேயில்லை.

நாம சொல்லியெல்லாம் சாரு கேட்கமாட்டாரு…அவுருக்கா தோணனும்….டவுனுக்குள்ள மலைக்கோட்டைக்குப் பின்னாடியிருக்கிற ஆண்டாள் வீதி மனைப்பலகை மெஸ்ஸூக்குத்தான் போவாரு…அதுதான் அவருக்குப் பிடிச்ச இடம்….தூரம் தூரமாப் போனாலும் பாலு சாருக்கு க்வாலிட்டிதான் முக்கியம்…க்வான்டிட்டி இல்ல…பெரிய எடம்…! தரம் நிரந்தரம் அவர்ட்ட…!-புகழ்ந்து சொல்கிறார்களா, கேலி செய்கிறார்களா?

அவர்கள் அளவை விரும்புபவர்கள். ஓட்டலுக்குப் போனால் அன்லிமிடெட்டிற்கு காசு அதிகம். லிமிடெட் மீல்ஸ் பத்தாது அவர்களுக்கு.. சோற்றால் அடித்த பிண்டமாய் வயிற்றை நிரப்பி முட்டலாம். இதர வகைகளைப் பற்றிக் கவலையில்லை. அதைத்தான் சொல்கிறார்கள்.

அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல….வயித்துக்கு ஒண்ணும் செய்திடக் கூடாதேன்னு ஒரு பயம். ஏற்கனவே வயித்துக் கோளாறு உள்ளவன் நான்…உங்களுக்குத்தான் தெரியுமே…அதுக்குத்தானே தெனமும் லேகியம் சாப்பிடுறேன்….

பெரிதாய்ச் சிரித்துக் கொண்டார்கள் இருவரும்.   இந்தச் சின்ன வயதில் ஜீரண சக்திக்கு, வாய்வுத் தொல்லைக்கு என்று தினமும் அவன் ஊரில் வாங்கிக் கொண்டு வந்து வைத்திருந்த  லேகியத்தை முழுங்குவதைத்தான் அவர்கள் கேலி செய்தார்கள். பிரதி வாரமும் தவறாமல் சனிக்கிழமை இவன் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் வந்து நின்று வேடிக்கை பார்த்துக் கிண்டல் பண்ணுவார்கள்.

என்னடா தம்பி…இந்த ரெட்டப் பசங்க சும்மாச் சும்மா வந்து  நீ வச்சிருக்கிற லேகியத்த உருட்டி வாயில போட்டுப் போறானுங்க…தொடாதீங்கடான்னு சொல்லிடவா…? – மெய்யப்பன் அண்ணன் அக்கறையாய்க் கேட்டார்.

போனாப் போவுதுண்ணே…கூட ஒரு டப்பா வாங்கிட்டா ஆச்சு….விடுங்க….

அது விலை ஜாஸ்தியாச்சேடா…அம்புட்டு விலைக்கே சின்ன டப்பாதான கொடுக்கிறாங்க…தன்வந்திரிதான அது…எனக்குத் தெரியும்…இவிங்க உருட்டிப் போடுறதப் பார்த்தா மாசத்துக்கு நாலு டப்பா வாங்கணும் போல்ருக்கே…?

கேட்டுக் கொண்டே பக்கத்து மூணாம் நம்பர் அறையிலிருந்து சத்தமாய்ச் சிரித்துக் கொண்டே வந்து நின்றார்கள் இருவரும்.

உங்களுக்கென்னண்ணே வந்திச்சி…நாங்க ஃப்ரென்ட்ஸ் என்னவோ பண்ணிக்கிடுறோம்…பாலு சாரே எதுவும் சொல்லலை…நீங்க ரொம்பத்தான் வருத்தப்படுறீங்க…?

            டே…டேய்…அவன் நம்ப பயடா…இந்த ரெண்டாம் நம்பர் ரூம்ல யாரு இருந்தாலும் அவுங்க என் தம்பி மாதிரிடா….அவுங்கண்ணன் இவனப் பத்திரமாப் பார்த்துக்கச் சொல்லி  எங்கிட்டத்தாண்டா விட்டிட்டுப் போயிருக்காரு. ரூமைக் காலி பண்ணிட்டு, சேலத்துக்கு டிரான்ஸ்பர்ல போனாருல்ல….தம்பி நம்ப ஆளு….வீட்ட விட்டுப் பிரிஞ்சி இருக்க முடியாம சதா அழுதிட்டிருந்த பயல…இப்பத்தான் ஒரு மாதிரித் தேத்தி சரி பண்ணியிருக்கேனாக்கும்…யாரு கூடவும் பழகவும் மாட்டான்டா அவன்…தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கிறவன…கோட்டி பண்ணாதீங்க…அப்பாவிடா…அவனைக் கெடுத்துறாதீங்க…

எதற்கு இவ்வளவு சொல்கிறார் என்றுதான் இருந்தது எனக்கு. அங்கு வந்த புதிதில் நான் அவர் சொல்வதுபோல் இருந்ததென்னவோ உண்மைதான். அப்பாய்ன்ட்மென்ட் கிடைத்து என் அண்ணனிருக்கும் அதே திருச்சிக்கு போஸ்டிங் போட்டு நான் வர, தற்காலிகமாக அண்ண சுந்தரேசன் இருந்த அறையிலேயே தங்கிக்கொண்டேன். என் துரதிருஷ்டம் நான் வந்த வேளையில் அவருக்கு மாறுதல் ஆகிப் போனது. நான் அந்த அறையில் நிலைத்துப் போனேன்.

அதுநாள்வரை வீட்டை விட்டு எங்கும் தனியாக  வெளியூருக்குப் போகாமல் உள்ளூரிலேயே கழுதை மாதிரிச் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு சர்வீஸ் கமிஷன் வேலை கிடைத்து அந்தத் திருச்சிக்கு வந்து சேர்ந்ததுதான் முதல் வெளி நடப்பு. மதுரையைச் சுற்றிய கழுதை வெளியேறாது என்பார்கள். நான் விதிவிலக்கு.

கூடத்தான் அண்ணா இருக்கிறாரே என்கிற தைரியம். அவர் ஆபீஸ் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி அருகே இருந்தது. என் ஆபீஸ் கலெக்டர் ஆபீஸ் அருகில் இருந்தது. இருவருக்குமே நடந்து செல்லும் தூரம்தான். அதாவது அந்தச் சிறிய தூரத்தில்தான் எங்கள் அறை அமைந்திருந்தது.  பத்து நிமிடம் முன்னால் கிளம்பினால் போதும்.  இப்போதுதான் அண்ணா இல்லையே…!

வெளியூரிலிருந்து வருபவர்களையெல்லாம் இருகரம் நீட்டி வாரி அணைத்துக் கொள்ளும் விதமாய் அந்தக் கன்டோன்மென்ட் பகுதியில் ரெண்டு மூன்று லாட்ஜ்கள் இருந்தன. கொஞ்சம் தள்ளி பீமநகர். அங்கும் சின்னச் சின்னதாய் நிறைய வீடுகள் தங்குவதற்கு ஏற்றாற்போல் கிடைத்துக் கொண்டிருந்தன. அருகே பாலாஜி தியேட்டர். சற்றுத் தள்ளிப் போனால் பாலக்கரை தாண்டி பிரபாத் தியேட்டர். பிறகு நெடுக நடந்தால் சின்னக்கடை வீதி வழி முடிவில் மலைக் கோட்டை பிள்ளையார் கோவில். இடது புறமாக நடக்க ஆரம்பித்தால் வரிசையாக சினிமாத் தியேட்டர்கள் நம்மை வரவேற்கும். மெயின்கார்ட்கேட் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து கோட்டையின் நுழை வாயிலில் நுழையும் முன் இருக்கும் தலைமை நூலகத்தில் என் மீதிப் பொழுதுகள்.

எங்களுக்குக் கிடைத்தது கிருஷ்ணா லாட்ஜ்.  ஓட்டலோடு இணைந்த லாட்ஜ் அது. அங்கு ரூமெடுத்துத் தங்குபவர்களெல்லாம் அந்த ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள். மாதாந்திரக் கணக்கு உண்டு அங்கே. எனக்கு ஒரே இடத்தில் விடாமல் சாப்பிடுவதில் அலுப்பிருந்தது. அந்தத் திருச்சி நகரில் எங்கெல்லாம் நல்ல தரமான சாப்பாடு கிடைக்கும்  என்று  தேடலானேன். நல்ல உணவாக, தரமான தயாரிப்பாகத் தேடிச் சாப்பிடுவதில் என்ன தவறு? காசு கொடுத்துத்தானே வயிறாருகிறோம்? அலுக்கும்வரை தரம் தரம்தானே?  ஐயர் ஓட்டல் திருவிழாக் கூட்டமே எனக்குப் பெரிய அலர்ஜியாக இருந்தது. ஆனால் அந்த ருசியே பெரிதும் புகழப்பட்டது. கூட்டம் எங்கே மொய்க்கிறதோ அங்கு தரம் நிரந்தரமல்ல என்பதுதானே மரபு?

 “ப” வடிவத்தில் கீழேயும் மேலேயுமாக அமைந்த அறைகள். ஒரு அறைக்கு மூவர். சிலதில் நாலுபேர் கூட இருந்தார்கள். தனியொருவராய் எவரோடும் ஒட்டாமல் இருந்தவர்களும் உண்டு. வெளி வராண்டாவில் படுத்து உருளுவார்கள். காற்று திவ்யமாய் வீசிக் கொசுக்களை விரட்ட, கண்ணைச் சுற்றிக் கொண்டு வரும்.  கீழே நடு வராண்டாப் பகுதியில் ஓட்டலுக்கு வேண்டிய காய்கறிகள், இலைக் கட்டுகள், மாவு மூட்டைகள், எண்ணெய் டின்கள், பலசரக்கு சாமான்கள் என்று வந்திறங்கிக் கிடக்கும். மறுநாள் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை இரவு ரெண்டு மணிவரை உட்கார்ந்து டொக்கு டொக்கு என நறுக்கிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சத்தத்தோடேயேதான் அறையிலிருப்பவர்கள் தூங்கி வழிவார்கள். சத்தம் இல்லையானால் ராத்தூக்கமில்லை என்பதுதான் நிதர்சனம். தினமும் கல்யாணக் களையும் கொட்டு மேளமும்தான் அந்த ஓட்டலுக்கு. ஐயருக்கு அடித்த யோகம் அப்படி யாருக்குமில்லை அங்கே. வானத்தைப் பொத்துக் கொண்டு கொட்டுகிறதோ என்று நினைக்கத் தோன்றும். “கிருஷ்ணா கபே…” – கன்டோன்மென்ட் ஏரியா என்றாலே அந்தப் பெயரைத்தான் அடையாளமாகக் கூறுவார்கள். அண்டா அண்டாவாய் சமைத்துக் கொட்டினாலும் அயராத கூட்டம் வந்துகொண்டேயிருக்கும்.

அங்க மெய்யப்பன்னு ஒருத்தர்…கல்லாவுல உட்கார்ந்திருப்பாரு…அவரப் போய்ப் பாருங்க…என்றுதான் அனுப்புவார்கள். புதிதாக கிராமத்திலிருந்து வழக்கு  என்று வந்து நிற்பவர்களைத் தகுந்த வக்கீலுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் பயத்தைப் போக்கி தைரியமாய் நீதிமன்ற வளாகத்துக்குள்ளே அனுப்பி வைப்பார் மெய்யப்பண்ணன். 

அந்தப் பகுதியில் அவர் எல்லோருக்கும் அண்ணன்தான். காலையில் ஓட்டல் வாசலில் உள்ள குத்துக்கல்லில் உட்கார்ந்து கொண்டு அந்தக் கட்சி தினசரியின் தலைவர் கடிதத்தை அவர் வாய்விட்டுப் படித்து ரசிக்கும் அழகு இருக்கிறதே…சொல்லி மாளாது . நம்பாள அடிச்சிக்கிறதுக்கு இனிப் பொறந்துதான்யா வரணும்…என்று வாய்க்கு வாய் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கடகடவெனச் சிரித்துப் பூரிப்படைவார். வாய்விட்டு தலைவர் தமிழைப் படிப்பதில் அலாதி திருப்தி. அந்தளவுக்கான  கட்சிப்பற்று. வெறி என்றே சொல்லலாம்.  இவர் எப்படி ஐயர் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. காலம் காலமாய் இருந்த ஸ்நேகம் என்பது வேறு. அரசியல் பற்று என்பது வேறு. அதை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.

ஐயருக்கு மெய்யப்பன் இல்லையென்றால்  ஒரு நிமிஷம் ஓடாது. அவரில்லையெனில் அந்தப் பகுதித் திருவிழாக் கூட்டத்தைச் சமாளிக்கத்தான் முடியுமா என்ன? அவ்வப்போது எழும்பும் சலசலப்பை அடக்க அவரை விட்டால் வேறு ஆள்? மெய்யப்பன் கல்லாவில் கம்பீரமாய் உட்கார்ந்து அதிகாரம் பண்ணும் அழகே தனி. அவர் உட்கார்ந்திருக்கிறார் என்றால் வேலைகள் தடங்கலின்றி நடக்கும். ஆனாலும் இவர் அதிகாரம் பறக்கும்.

டேய்…என்னடா ஆச்சு….இந்த வரிசைல எவ்வளவு நேரமா உட்கார்ந்திருக்காங்க பாரு…இலையப் போடு முதல்ல…தண்ணி எடுத்து வை….அங்க சாம்பார் கேட்கிறாங்க…கொண்டு போ….கறி எடுத்திட்டு வா…மோரு ஊத்து இங்க… என்று அதிகாரம் தூள் பறக்கும் அந்த மத்தியான நேரத்தில். உயரம் அதிகமில்லாத சீலிங்கில் வெறும் காற்றாடிதான் சொக்கு சொக்கு என்று  ஓடிக் கொண்டிருக்கும். கையை உயர்த்தினால் தட்டிவிடும் அபாயம்.  வியர்க்க விறுவிறுக்க சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால், கொஞ்சம் தாமதித்திருந்தால் சோறு இல்லை என்று விரட்டியிருப்பார்கள் என்பதுபோல் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டிருப்பார்கள். கல்யாண சமையல் சாதம்…காய்கறிகளும் பிரமாதம்…அந்த கௌரவப் பிரசாதம்…இதுவே எனக்குப் போதும்….-அந்தக் கடையில் சாப்பிட்டு திருப்தி கொள்ளாதவர்தான் யார்? கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனே அங்குதான் நிற்கும். அய்யருக்கு அநியாயப் பாதுகாப்பு. ஆத்தோட போறதை அம்மா குடி, அய்யா குடி…என்கின்ற கதையாய்- ஒரு போலீஸ் கை நனைத்துக் காசு நீட்டியதாய் சரித்திரமில்லை. எல்லாவற்றையும் பகாசுரனாய் விழுங்கி நிமிர்ந்து நிற்கும் அன்னசத்திரம் அது.

ஆனால் அந்த ஐயர் ஓட்டல் கிருஷ்ணா கபேக்கென்று ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்தது. சாப்பாடும், டிபன் ஐட்டங்களும், இனிப்பு வகையறாக்களும் அப்படி ஒரு பர்மனென்ட் ருசி அங்கே லபித்திருந்தது. அதை அடித்துக் கொள்ள அந்தப் பகுதியில் வேறு எந்த ஓட்டலுக்கும் வக்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனையோ அசைவ ஓட்டல்களும் வந்து பார்த்துப் போட்டிக்கு நின்று ஓய்ந்துதான் போயின. நாற்பது ஐம்பது வருஷ அனுபவம் ஐயர் ஓட்டலைத் தூக்கி நிறுத்தியிருந்தது. அங்கு அமைந்ததுபோலான கைப்பக்குவமுள்ள சமையல் மாஸ்டர்கள் வேறு எங்கும் இல்லாததே முக்கிய காரணம்.. எங்கிருந்துதான் சாமி ஆளுகள இழுத்திட்டு வர்றீங்க…? என்று வியப்பார்கள். எல்லாம் தஞ்சாவூர் கைப்பாகமைய்யா…நமக்கு வேண்டப்பட்டவாதான் என்பார் பெருமையோடு.! எனக்குத்தான் ப்ரீதி இல்லை. .

இனிப்பு வகையறாக்களை தட்டு தட்டாகக் கொண்டு வந்து காலை பதினோரு மணி வாக்கில் உறாலின் பிரதான ஸ்டாலில் அடுக்கி, பளிச்சென்று மஞ்சள் உருண்டை பல்ப்பை எரிய விட்டால், பளபளவென்று ஒளிரும் வகை வகையான அன்றைய ஸ்வீட்களும், ஸ்பெஷல் பலகாரங்களும் கொஞ்ச நேரத்திலேயே கல்லாக் கட்டிவிடும். இரண்டாவது சுற்றும் வந்து ஸ்டாலை நிரப்பும்தான். அது மாலை நாலு மணியோடு ஓயும். தூள் பக்கோடா போட்டுக் கொண்டு வந்து மலைபோல் அடுக்கினால் கோர்ட் வளாகம் உள்ளே அந்த மணம் புகுந்து ஆட்களை இழுத்து வந்து நிறுத்தி விடும். கோர்ட் ஆபீஸ்களில் பார்ட்டி என்றால் அமர்க்களப்படும் அன்று. அன்றைய ஸ்வீட்களும், கார வகைகளும்  அன்றன்றைக்கே தீர்ந்து போய் மாலை வீட்டுக்கென்று வாங்கத் தேடி வரும் ஆபீஸ் முடிந்த பெண்மணிகளுக்கு அதிர்ஷ்டமிருந்தால்தான் கிடைக்கும். போடும் கல்யாணச் சாப்பாட்டிற்காக வருகிறார்களா அல்லது அந்த இனிப்புகளுக்காக இப்படி மண்டுகிறார்களா என்று நினைத்துப் பார்க்கும் முன் கண் பார்வையிலிருந்து மறைந்து போகும் அளவுக்கான வியாபார வெற்றி கிருஷ்ணா கபே ஓனர் பிச்சுமணி அய்யருக்கு வாய்த்திருந்தது. அவருக்கு நொச்சியம் பகுதியில் இன்னொரு ஓட்டல் இருந்தது. அது அத்தனை ஓட்டம் இல்லை என்று சொன்னார்கள். வந்து போகும் போக்குவரத்து என்பது வேறு. வந்து அடையும்  ஜனப் பரிவாரம் என்பது வேறு.

கேஸ் ஜெயிக்குதோ இல்லையோ சாமி…உங்க ஓட்டல்ல கை நனைக்கிறதுக்காகவேனும்  இங்க வந்து போகணும்… என்று விநோதமாய்ச் சொல்வார்கள். ருசி கண்ட பூனையாய் மேய்வார்கள். வாய்தா வாய்தா என்று அலைந்து சோர்ந்தாலும், அவர்களைத் தெம்பாக நம்பிக்கையோடு ஊருக்குத் திருப்பி அனுப்பும் சாமர்த்தியம் ஐயர் ஓட்டல் உணவுக்கு உண்டுதான்.

நம்ப கடைல கை நனைச்சவாளுக்கு எப்பவுமே ஜெயம்தான். அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? வயிறு நெறைஞ்சா மனசும் நெறையும்.  கேசுல ஜெயிச்சு…ஊருல கொண்டாடுறதுக்கு…இங்கருந்து ஸ்பெஷல் ஆர்டர் பண்ணி எல்லாவகை இனிப்பையும் வாங்கிண்டு போவாளாக்கும்…என் ஓட்டல்ல காலடி வச்சு கேசுல தோத்துப் போனவான்னு எவருமில்லை….எல்லாம் அந்த பகவானோட அனுக்கிரகம்….ஜீவ கடாட்சம்….!! நன்னாயிருக்கட்டும் என்று வாழ்த்துவார் ஐயர்.

எதிரே கீழைமை நீதி மன்றங்கள். ஏகப்பட்ட ஆபீஸ்கள். ஜே…ஜே…என்றிருக்கும் ஜனக் கூட்டம். பெரிய வளாகம்.  மனிதர்கள் எல்லோரும் ஏன் இப்படி கோர்ட்டு, கேசு என்று திரிகிறார்கள்? என மனம் வியக்கும். அச்சப்படும்.   பொழுது விடிந்து மணி எட்டானால் போதும்…கூட்டமான கூட்டம் அலை மோதும். பஸ் பஸ்ஸாகக் கொண்டு வந்து இறக்குவார்கள்  ஆட்களை.  ஐயர் ஓட்டலுக்கு அப்படியொரு கொள்ளை வியாபாரம். சமைத்துப் போட்டு மாளாது. காலை பத்து, பத்தரைக்கெல்லாம் சாப்பாடு ஆரம்பித்து விடும். சாப்பாடு ரெடி என்ற போர்டு வாசலுக்கு வந்ததுதான் தாமதம். மண்டி விடுவார்கள்.  கூட்டமாய் வந்து வரிசையில் டோக்கனுக்கு நிற்பார்கள். இடத்தைப் பிடித்தபின் டேபிளுக்கும் டோக்கன்கள் வரும். மாலை நாலரை ஐந்து மணி வரை ஓட்டல் நிரம்பி வழிய சாப்பாட்டுக் கடை பிய்த்துக் கொண்டு ஓடும். அறைகளில் தங்கியிருக்கும் நாங்களே சாப்பாடு தீர்ந்து போகும் என்று ஓடோடி வருவோம். கூட்டத்தோடு கூட்டமாய் வரிசையில் நின்று இடம் பிடித்தால்தான் ஆயிற்று. எங்களுக்கென்று தனிச் சலுகையோ, தனி அறையோ கிடையாது. சாப்பிடுபவர் பின்னால் ஆட்கள் எப்போதும் நின்று கொண்டேயிருப்பார்கள். சாப்பிட்ட கையோடு எழுந்து நடப்பவர்கள் அவர்கள் மீது மோதிக் கொள்ளாமல் விலகிச் சென்றால் துர்லபம்.

நீதித்துறையில்தான் வேலை பார்த்தார்கள் ராமமூர்த்தியும் சுந்தரமூர்த்தியும். இருவருமே டைப்பிஸ்ட்கள்தான். இன்று ஓடிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயிலை விட வேகமானது அவர்கள் டைப் அடிக்கும் வேகம். அதை வெறும் வேகம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. வாயு வேகம்…மனோ வேகம்…!!. ஜட்ஜ்மென்ட் அடிப்பதற்கெல்லாம் தனி அனுபவம் வேண்டும். அங்கங்கே குறிப்புகளைத்தான் கொடுத்திருப்பார்கள். அதற்கென்று உள்ள ஃபார்மேட்டில்  தீர்ப்பை  விரைவாகத் தட்டச்சு  செய்து தாமதமின்றி நீட்டும் திறமை அவர்களைப் போல் யாருக்கும் வரவே வராது.

இந்த ரெண்டு பேரையும் எங்கயும் மாத்தக் கூடாது. என் கண் முன்னாடிதான் இருக்கணும். இது என் ஆணை என்று ஜட்ஜ் செல்வவிநாயகம் இவர்கள் இருவருக்கும் சிறப்புத் தீர்ப்பு சொல்லியிருந்தார். இந்த வளாகத்துல இவங்க மவுசே தனி..என்று கம்பீர நடைபோட்டார்கள். ஆங்கிலம் கரதனப்பாடம். பல வருட வழக்கு  மொழி அனுபவம்…விளையாடும் அங்கே. ஒரு இடத்தில் கூட தப்பித் தவறி கிராமர் மிஸ்டேக் என்று எவனும் சொல்லி விட முடியாது. நாலு பக்கம்  அஞ்சு  பக்கம் படிவங்களையே கடகடவென்று ஒப்பிப்பார் ராமமூர்த்தி. அசாத்தியத் தொழில் பக்தி. அர்ப்பணிப்பு.

அநியாய வேலைக்கார ஆளுங்கய்யா…நீங்க ரெண்டு பேரும் என்று சொல்லிக் கொண்டு எதாச்சும் ஒரு வழக்காடி  மதியச் சாப்பாட்டிற்கு இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள் அவர்களை. விட்டால் போச்சு. பிறகு ஒரு வாரம், பத்து நாள் ஓடி விடும் அபாயம். எனக்குத் தெரிய ராமமூர்த்தியும், சுந்தரமூர்த்தியும் கையில் காசு கொடுத்து சாப்பிட்டு நான் கண்கொண்டு பார்த்ததேயில்லை. இன்னிக்கு இந்த ஸ்வீட் என்று எனக்கு ஆபீசுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லி விடுவார்கள். அந்த இனிப்பு ருசிக்காக நானும் ஓடோடி வந்திருக்கிறேன். அங்கேயே நாக்கு ஊறும். அந்த இனிப்பு ஐட்டங்கள் திருச்சியிலேயே அந்த ஓட்டலில் அமைந்த மாதிரி வேறு எங்கும் பிரசித்தமாய் எனக்கு அங்கிருக்கும் வரை தோன்றியதேயில்லை. தினமும் விடாமல் ஸ்வீட் சாப்பிடும் இவர்களுக்கு உடம்புக்கு ஏதேனும் உபாதை ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்று நான்தான் வருத்தப்படுவேன்.  ஓசி கிடைப்பதில் ஒன்றைக் கூட குறை வைக்கக் கூடாது என்று மல்லுக்கு நின்றால்? அம்பது வயசு வரைக்கும் நல்லா சாப்பிடணும் சார். பிறகுதான் வயித்தக் கட்டுப்படுத்தறதெல்லாம்…என்பார்கள்.

மாதாந்திரக் கணக்கு லெட்ஜரைத் திறந்தால் ராமமூர்த்திக்கும் சுந்தரமூர்த்திக்கும் சொற்பத் தொகைதான் கணக்கில் ஏறியிருக்கும். அதாவது அவர்கள், சொந்தச் செலவில் சாப்பிட்டிருப்பது என்பது சனி, ஞாயிறு தினங்களிலான கணக்குதான்.  அந்த இரு நாட்களில் கூட ஆபீஸ் வேலை என்று போய் உட்கார்ந்து கொள்வார்கள் எவனாவது வரமாட்டானா என்று. கோர்ட்டுக்கு வர-போக ஆளா இல்லை? சொல்லவே வேண்டாம்…கேட்கவே வேண்டாம்…தானாகவே நடக்கும் எல்லாமும். பதினோரு மணி டீ என்ன, மதியச் சாப்பாடென்ன, மாலை பஜ்ஜி, வடை காபி என்ன…கை நீட்டிப் பணம் வாங்காதது மட்டும்தான் அவர்களின் சிறப்பு. அதை மட்டும் வேண்டாம் என்று விடுவார்கள். அதுதான் எனக்கு அவர்களிடம் மிகவும் பிடித்த ஒன்று. சபலத்துக்கு ஆட்படாத ஊழியர்களை அங்கே பார்ப்பது மிகக் கடினம். ஆனால் இந்த இரட்டையர்கள் அதில் சிறப்பிடம் பெற்றவர்கள். ஒருவேளை அதுதான் அவர்கள் சார்பான தீர்ப்பாக அவர்களை அங்கேயே மாறுதலின்றி நிறுத்தி வைத்திருக்கிறதோ என்னவோ?

நாக்கு நீளமாகி விட்டது. ருசியைக் கட்டுப்படுத்த வாய்ப்பில்லை. வாங்கிக்கொடுத்து, வாங்கிக்கொடுத்து வழக்காடிகள் வளர்த்து விட்டார்கள். ஆனால் பசி? ராத்திரி போஜனம்? சனி, ஞாயிறு சிக்கனம்? காலை டிபன் சமயங்களில் என்று உள்ளதுதானே? ஜட்ஜ்மென்ட் தீர்ப்பு சொல்ல தாமதமானா பொழுதுகளில் கிருஷ்ணா கபே விடுபட்டுப் போகம் அபாயமும் உண்டே…!

அதற்குத்தான் ஆபத்பாந்தவனாக  இவர்கள் கண்டுபிடித்த மெஸ். இருக்கிறதே?  இன்னும் சிலரும் அங்கே சாப்பிடத்தான் செய்தார்கள். ஏதோ சிலரை வைத்து அந்த ஜீவனம் ஓடிக் கொண்டிருந்ததுதான். அப்படித் தேடிச் செல்பவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். எல்லாவகையிலுமான வழிமுறைகளும் இங்கே பொதுதானே…!

நான்தான் இந்தச் சோற்றிற்காக எவ்வளவு அலைந்திருக்கிறேன்? வயிற்றை அக்கறையாய் கவனிப்பதில் எத்தனை குறியாய் இருந்திருக்கிறேன்?  எந்தெந்த இடத்திலெல்லாம் வாய்க்கு ருசியாக டிபன் கிடைக்கும், மீல்ஸ் கிடைக்கும் என்று எவ்வளவு பேரை விசாரித்திருக்கிறேன்?  ஓடித் தேடிப் போயிருக்கிறேன். பசிக்கு அலைந்தேனா, ருசிக்கு அலைந்தேனா? இப்படியொரு ஓட்டமா?

சரியான போஜனப்ப்ரியன் என்றார்கள் என்னை. காசு கொடுத்துச் சாப்பிடும்போது நல்ல சுகாதாரமான மெஸ் எங்கிருக்கிறது என்று தேடுவதும், ருசியான சாப்பாடு எங்கு கிடைக்கிறது என்று விசாரிப்பதிலும் என்ன தவறு? நல்ல ஓட்டலாப் பார்த்து சாப்பிடு…அம்மா அடிக்கடி உஷார்படுத்துவாளே…!

பஸ்-ஸ்டான்டு பக்கம் சாரதா மெஸ் போவோமா? உயர்தர உணவகம்…

அங்க விலை ஜாஸ்தி சார்…என்று இரட்டையர் திரும்பியே பார்க்க மாட்டார்கள்.  மனைப்பலகை மெஸ் போவோம் என்றால் அவ்வளவு தூரம் போய்த்தான் ஆகணுமா? என்பார்கள். சரி…தில்லை நகர் மெஸ் போவோம் என்றால் அவன் காய் ஒருவாட்டிக்கு மேலே போட மாட்டான் சார்…என்று சிணுங்குவார்கள். மோர் சாதத்திற்கும் காய் கேட்பவர்கள் இவர்கள். பத்மா கபேல ராத்திரி, இட்லிக்கு வத்தக் குழம்பு விடுவான்…டிபனுக்கு அங்க போவோம்…என்றபோது ஓரிரு முறை வந்தார்கள். அத்தோடு சரி…அவர்களுக்கு கப்பில் சாம்பார் எடுத்து வந்து அப்படியே கவிழ்த்த வேண்டும். பசிக்கு உணவு. ருசிக்கல்ல. நன்றாய் பசிக்க வைத்துத்தான் சாப்பிடவே கிளம்புவார்கள். அவர்கள் செய்யும் அசுர வேலைக்கு வயிறும் அகவானாகத்தான் கேட்கும்.

ஆண்டாள் தெரு மனைப்பலகை மெஸ்ஸை நானாகத்தான் கண்டு பிடித்தேன். அங்கே ஐந்து ரூபாய் விலை அதிகம்தான். அன்றைய நாளில் அது பெரிதுதான். ஆனாலும் சாப்பாடு ருசி தனிதான். ராத்திரியும் சாப்பாடு உண்டே அங்கே… இவர்களை எதிர்பார்த்து ஆகாது என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து விடுவேன் . சுத்தம் சோறு போடும் என்பதற்கிணங்க…அங்கே மனைப் பலகை வரிசையாய்ப் போட்டு, சுத்தமான, அகலமான, நீளமான இலை விரித்து பாங்காய்ப் பரிமாறுவார்கள். இரண்டு காய், ஒரு கூட்டு, வறுவல்,  பச்சிடி…அப்பளம், ஊறுகாய் என்று இலையில் வரிசையாக அவர்கள் வைக்கும் அழகே தனி. பெரிய பெரிய கல்யாணங்களுக்குப் பழகியிருப்பார்களோ என்று தோன்றும் எனக்கு. பரிமாறுவதில்  ஒரு வரிசை உண்டு. எதை எதை இலையில் எங்கே வைக்க வேண்டும் என்று. அது தப்பவே தப்பாது. அங்கே சாப்பிடும் பலரும் நீர் சுற்றுவார்கள். வலதுகையைக் குழியாக்கி, துளி நீர் விட்டு மூன்று சுற்றுச் சுற்றி, மீதத் தீர்த்தத்தை வாய்க்குள் விட்டுக் கொண்டு, ஐந்து முறை துளித் துளி பருக்கைகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு  பிறகுதான் சாம்பார் என்று கேட்பார்கள். இதையெல்லாம் வரைமுறையோடு உணர்ந்து செய்யும் மெஸ் ஆண்டாள் தெரு மெஸ்.  தவறாமல் ஒவ்வொரு அமாவாசைக்கும் பாயாசம் இருக்கும். இது போக செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் பாயாசம் உண்டு. ஏன், ஞாயிற்றுக் கிழமை லீவு நாட்களில் கூடத் தவறாமல் கப்பில் பாயாசம் வந்து உட்கார்ந்து விடும்.

நான் தங்கியிருக்கும் அறையிலிருந்து தூரம்தான். ஆனால் அந்த வயசுக்கு எனக்கு அதெல்லாம் பெரிதாய்த் தெரியவில்லை. என்ன ஒரேயொரு கஷ்டம் என்றால் தெப்பக்குளத்தைச் சுற்றியிருக்கும் இடங்களில் ஏதேனும் ஒரு இடுக்கில் சைக்கிளைப் பாங்காய் நுழைத்துப் பூட்டிவிட்டுப் போக வேண்டியிருக்கும். அங்கிருந்து நடைதான். மலைக்கோட்டையின் பின் பகுதியின் குறுகிய சந்துகளில் நுழைந்து அந்த மெஸ்ஸை அடைய வேண்டியிருக்கும். அது ஒன்றுதான் சற்று சிரமமாய் நினைக்க வைக்கும். ஆனாலும் அதையெல்லாவற்றையும் மறக்கடிக்கும் வாய்க்கு ருசியான மனைப்பலகை மெஸ்ஸின் சாப்பாடு நம்மை திருப்திப் படுத்தி விடும். ஒரே மாதிரியே சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியுமா? சற்றே மாறுதலும் வேண்டாமா? மனம் எதிர்பார்க்குமே?

இதோ நானிருக்கிறேன் என்று ஸ்ரீரங்கத்திலிருந்து அந்த ஐயங்கார் ரெகுலராக வந்து கொண்டிருந்தார். இதென்னடா அதிசயம்? இத்தனை நாள் தெரியாமல் போயிற்றே? தேங்காய் சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, கல்கண்டு சாதம், தயிர் சாதம், சமயங்களில் புதினா கொத்தமல்லி சாதம்…ஏன் காரட் சாதம் என்று கூடக் கொண்டு வந்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். உச்சிப்பிள்ளையாரை வணங்கி விட்டு ஆசுவாசமாய் இறங்கி சாலைக்கு வந்தபோது கோயில் வாசலில் ஒரே கூட்டம். கொஞ்சம் தாமதித்தால் எல்லாம் காலி. காக்காய்க் கூட்டம் போல் மொய்க்கும் ஜனம். தாமரை இலையில் வைத்து அங்கே இங்கே என்று முடிவில்லாமல் எடுத்து நீட்டிக் கொண்டேயிருந்தார். அந்தச் சாதம், இந்தச் சாதம் என்று விடாமல் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் கரெக்டாகப் பணத்தைக் கொடுப்பார்களா என்கிற சந்தேகம் வந்தது எனக்கு. அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான். எல்லா வாளிகளும் காலி. அவை அத்தனையையும் ஒன்றுக்குள் ஒன்று வைத்துக் கோர்த்து ஒன்றாய்க் கட்டி இறுக்கி, முதுகில் தொங்க விட்டுக் கொண்டு நடையைக் கட்டி விடுவார் அவர்.

என் காலம் அங்கேயும் இங்கேயுமாய்க் கழிந்து கொண்டிருந்தது. இப்படியாகத் திருச்சி மாநகரத்தில் நான் சாப்பிடாத இடமேயில்லை. ஒரு கட்டத்தில் ஓட்டல் சாப்பாடே மொத்தமும் வெறுத்துப் போய், ஓடி ஓடிச் சென்று எத்தனை காலம்தான் சோற்றுக்காக அலைவது என்று ஸ்தம்பித்து…வெறும் பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு அறையிலேயே சாப்பிட்டுப் படுக்க ஆரம்பித்தேன். அந்த அளவுக்கு ஓட்டல் உணவின்மேல் வெறுப்பு மண்டி விட்டது.

எத்தனை நாளைக்குத்தான் பழம் தின்று கொட்டை போடுவது? அதற்கும் ஒரு நாள் கேடு வந்தது. அந்த வேளையில்தான் ராம-சுந்தரமூர்த்தி இரட்டையர் என் பரிதாப நிலையைப் பார்த்து பாட்டி மெஸ்ஸூக்கு என்னை அழைத்தனர்.

என்னது பாட்டியா? என்ன சுந்தரமூர்த்தி…பாட்டின்னா சொன்னீங்க? -அந்த வார்த்தையே என்னை ஆட்டிப் பார்த்தது. எனக்கு வீட்டில் புகைப்படமாய் அமர்ந்திருக்கும் என் பாட்டியின் உருவம் மனதில் நிழலாடியது. நான் பார்த்த ஒரே பாட்டி அப்பாவைப் பெத்த அந்த மரகதம் பாட்டிதான். பெரிய கற்சட்டியில் சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு மொட்டை மாடியில் வைத்து நிலா வெளிச்சத்தில் எங்கள் கையில் அளவு மாறாமல் சாதம் போட்ட பாட்டி. வெறும் மோர் சாதத்திற்கு அந்த ருசியா அல்லது அதைப் பிசைந்தெடுத்து வந்த பாட்டியின் கைக்கு வந்த ருசியா? அடிக்குழம்பு ஆனைபோல…..என்று வழித்தெடுத்துப் பிழிந்து விடும் அந்தக் கடைசி வாய் உணவுக்காக எனக்கு எனக்கு என்று பரபரப்போம் நாங்கள்.

என்ன ராமமூர்த்தி…நீங்களாவது சொல்லுங்களேன்…வயசான பாட்டியா மெஸ் வச்சு நடத்துறாங்க…? அதிசயம் மாறாமல் கேட்டேன். ஐயோ பாவம்…ஐயோ பாவம் என்று அப்பொழுதே மனம் இரக்கப்பட ஆரம்பித்து விட்டது.

ஆமா சார்….அதான் வாங்க…வாங்கன்னு விடாமக் கூப்டிட்டிருக்கோம்…நீங்க என்னடான்னா திரும்பியே பார்க்க மாட்டேங்கிறீங்க…! வந்து ஆதரவு கொடுங்க சார்…

 எங்கெங்கோ அலைந்து நாக்கை வளர்த்து சுவைத்து எல்லா ருசியும் அமுந்து போய்க் கிடக்கும் என்னை பாட்டி மெஸ் எப்படித் தூக்கி நிறுத்தி விடும்? வயதான கிடு கிடுப் பாட்டியால் அப்படி வடித்துக் கொட்டி, வருபவர்களைத் திருப்திப்படுத்தி விட முடியுமா என்ன? எனக்கு நம்பிக்கையில்லைதான். இதுவரை காணாத புது ருசியை என் நாக்குக்கு உணர்த்திவிட முடியுமா? பாட்டி…பாட்டி…என்று சொல்லிச் சங்கடப்படுத்துகிறார்களே?

 நட்புக்கு மதிப்பு வைத்து இரட்டையரோடு ஒரு நாள் போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பித்தான்…இதோ இங்கு வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். பாட்டியின் மெலிந்த, தலைக்கு முக்காடு போட்டு, தோல் துவண்ட அந்த உருவம் என்னை முதல் பார்வையிலேயே கலங்கடித்துவிட்டது.

வாங்கோ…இவா சொல்லிண்டேயிருந்தா…நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்….என்று பொக்கை வாய் திறந்து பாட்டி கொடுத்த மகிழ்ச்சியான, சத்தமான வரவேற்பு எனக்கு ஒரு மன நெருக்கத்தை சட்டென்று ஏற்படுத்திவிட்டது. அந்தக் கணத்தில் வேறு எதையும் பொருட்படுத்தாத என் வயிற்றுப் பசி ஆற ஆரம்பித்தது.

ன்ன…சாப்பிடாம ஏதோ யோசனைல மூழ்கியிருக்கேள்? இலைக்கு முன்னால உட்கார்ந்துண்டு யோசிச்சிண்டிருந்தா எப்டி? சாப்பிடுங்கோ….நானும் உங்களை ரெண்டு மூணு நாளாக் கவனிச்சிண்டுதான் வரேன். அணில் கொறிக்கிற மாதிரிக் கொறிக்கிறேளே? நன்னா கை நிறைய எடுத்து, வாய் நிறையப் போட்டுண்டு சாப்பிடுங்கோ….அன்னத்தைக் கொறிக்கிறது, பழிக்கிறதுக்கு சமானம். இந்த உணவை எனக்குக் கொடுத்த அன்னலெட்சுமியே உனக்கு  அனந்தகோடி நமஸ்காரம்னு மனசுல ஆத்மார்த்தமா வேண்டிண்டு கவளம் கவளமா கைவிளங்க எடுத்து, வாய்க்குள்ள செலுத்திச்  சாப்பிட்டு முடிக்கணும்னு பெரியவா சொல்லுவா…!  என்கிட்ட வந்துட்டேளோன்னோ…இனிமே உங்க ஒடம்புக்கு எந்த பங்கமும் வராது. அதுக்கு நான் பொறுப்பு…மனசோட சவரணையா அமுந்து உட்கார்ந்து சாப்பிட்டு முடிங்கோ…பாட்டி சொல்லிக் கொண்டேதானிருந்தாள். அந்த வார்த்தைகளே அப்படியொரு திருப்தியைத் தந்தன. உபசரிப்பு என்கிற உள்ளார்ந்த  தன்மை ஆத்மார்த்தமாய் வெளிப்படும்போது அந்த அன்பின் சாரம் அனைத்துத் திருப்தியையும் வழங்கிவிடுகிறது. மூத்த தலைமுறையினரின் பண்பாட்டு அசைவுகள் நம் குடும்பங்களின் கட்டமைப்பை  காலத்துக்கும் நிலை நிறுத்தியிருக்கின்றன. பாட்டியின் குடும்பப் பின்னணி,  அனுபவச் செழுமை, அவளை இங்கே அடையாளப் படுத்தி நிலைநிறுத்தியிருப்பதாக இருக்கலாம் என்று அந்தக் கணத்தில் எனக்குத் தோன்றியது.

  அருகே ரெட்டையர்கள் சாம்பார், ரசம் முடித்து மோருக்கு வந்திருந்தார்கள். அவர்கள்தான் உண்மையிலேயே சாப்பிடப் பிறந்தவர்கள். சற்று முன் பாட்டி சொன்னாளே…அந்த முறைமை… மனசோடு சாப்பிடும்போதுதான் உணவு உடம்பில் ஒட்டும் என்பார்கள்.  உணவைப் பழிக்கக் கூடாது என்பது நம் முன்னோர் வாக்கு. அதன் மீது ஒரு மரியாதை வைத்து உள்வாங்க வேண்டும். அப்போதுதான் அது திரேக சக்தியாய்ச் சேரும்.  அதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும்தான்!  ஏலாதவன் கொஞ்சமாவது சுணங்கத்தானே செய்வான்? நான் இனி என்னைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமோ? வயதான அன்னலெட்சுமியின் ஆக்ஞை இனி என்னைப் பதப்படுத்தும் என்று ஒரு நம்பிக்கை அந்தக் கணத்தில் என்னுள் எழுந்தது.

அந்தத் தள்ளாத வயதிலும் ஒற்றை ஜீவனாய்க் குனிந்து குனிந்து அடியெடுத்து வைத்து நடந்து அடுப்படிக்கும் உறாலுக்குமாய் ஓயாமல் திரும்பிச் சென்று பொக்கைவாய்ச் சிரிப்பின் திருப்தியோடு, தான் தயாரித்த உணவைத் தன்னை நம்பி வந்தவர்களுக்குப் படைக்கும் அந்தத் தொண்டு கிழப்  பாட்டியின் அயராத உழைப்பும், தன்னம்பிக்கையும், சாகும்வரை தன் உழைப்பிலேயே பிழைத்து இறுதி மூச்சை விட வேண்டும் என்கிற வைராக்கியமும் என்னை அநியாயத்துக்கு யோசிக்க வைத்தது.  இத்தனை நாள் இந்த வயிற்றை நிரப்புவதற்கு எப்படியெல்லாம் தேடித் தேடி  எங்கெங்கெல்லாம் தாறுமாறாய் அலைந்திருக்கிறோம். எப்படியெல்லாம் மனக்குறைப் பட்டிருக்கிறோம்.  இந்தச் சோற்றுக்காக எவ்வளவெல்லாம் ஓடி ஓடி நேரத்தை வீணடித்திருக்கிறோம்  என்று எண்ணி மனது வெட்கமுற,  பாட்டியின் அந்த செம்மாந்த உழைப்பின் மீது மதிப்பும், மரியாதையும் வைத்து, இனி அந்த ஊரில் இருக்கும்வரை  அங்குதான் சாப்பிட்டுக் கழிப்பது என்கிற தீர்க்கமான முடிவில்-அட்வான்ஸ் கொடுத்திடுறேன் பாட்டி…வாங்கிக்குங்கோ என்றவாறே கையைக் கழுவிவிட்டு வந்து பர்ஸைத் திறந்து பணத்தை எடுத்து நீட்டினேன். சின்ன வயிற்றை நிரப்ப மனக்குறைகளோடு, சுணக்கங்களோடே போராடியவனின் முன்னே, வாழ்க்கையின் மீதத்தைக் கழிக்க தணியாத உற்சாகத்தோடு இயங்கிக் கொண்டிருந்த அந்த ஜீவனின் கரங்கள் மகிழ்ச்சியோடு நீண்டன. ஒரு புதிய வாடிக்கையாளன்.  

எதுக்கு இவ்வளவு பணம்? …என்ன உண்டோ…அது மட்டும் கொடுத்தாப் போறும்…எல்லாரும் கொடுக்கிற அட்வான்சை நீங்களும் தாங்கோ…அது போதும்… மாதாந்திரக் கணக்குதான் இருக்கவே இருக்கே…!!

உழைப்பை மதிக்கும் பாட்டியின் தன்னம்பிக்கையான ஆசையில்லாத மனச்சோர்வற்ற பண்பான பேச்சு. ஒரு மூத்த தலைமுறையின் அடிப்படை ஒழுக்கமும், தளராத முனைப்பும் என்று அடையாளப்படுத்தின எனக்கு.

ஒரு நாள் இரவுச் சாப்பாட்டுக்குத் தனியாக வந்து, அல்லது இரட்டையரோடு வந்து அமர்ந்து, பாட்டியை வற்புறுத்தி  கற்சட்டி மோர்ச் சாதம்  பிசைந்து கையில் போடச் சொல்லிச் சாப்பிட வேண்டும்.  விநோத ஆசை எழுந்தது என்னுள்.  மாட்டேன் என்றா பாட்டி சொல்லிவிடப் போகிறாள்? அன்பின் பரிமாணத்திற்கு அளவுண்டா என்ன? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்…!

சார் இப்பத்தான் நம்மளோட செட் ஆகியிருக்கார்…-என்று சுந்தரமூர்த்தி குஷியோடு சொல்ல …கொஞ்சம் முன்னமேயே சாரை இங்க கூட்டியாந்திருக்கலாமோ? என்றார் ராமமூர்த்தி.

இனிமே நாம மூணு பேரும் சேர்ந்தே தினமும் இங்க வரலாம் என்று தொடர்ந்து  கூற, அதனை ஆமோதித்ததுபோல் நானும் இணக்கமாய்ப் புன்னகைக்க,  குனிந்து பரவலாய் டெட்டால் கலந்த தண்ணீர் தெளித்து சாப்பிட்ட இடத்தைச் சுருணை கொண்டு அக்கறையாய் நகர்ந்து நகர்ந்து, ஒரு நீள் சதுரத்திற்கு   அழுந்தத் துடைக்கும் பாட்டியின் தடையற்ற  இயக்கத்தையே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

தூல தேகமான இந்த எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்கிற புதுமொழி சட்டென்று  மனதில் தோன்றியது அந்தக் கணத்தில்.

                                    ------------------------------------------------

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...