03 டிசம்பர் 2021

குறுங்கதைகள் - “முதுகு”

 

குறுங்கதைகள் -


   “முதுகு”                                                      ---------------------

      ஸார்....லேசா கொஞ்சம் பென்ட் பண்ணி உட்காருங்க... மறைக்குது.....- சொன்னான் சரவணன்.                         

     படம் ஓடும் சத்தத்தில் காதில் விழுந்ததா தெரியவில்லை. வந்தது முதல் முன்னால் உட்கார்ந்திருக்கும் அவர் அப்படித்தான் இருக்கிறார். முதுகில் தப்பை வச்சுக் கட்டிய மாதிரி நிமிர்ந்து. இப்டி வளர்த்தியான ஆளுகல்லாம் ஒண்ணு கடைசி வரிசைல உட்காரணும்...இல்ல இடது ஓரம், வலது ஓரம்னு போயிடணும்...அப்பத்தான் பின்னால உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு மறைக்காது. இவரு இருக்கிற வளர்த்திக்கு நாலு வரிசைக்கு மறைப்பார் போல்ருக்கே? எரிச்சலாக இருந்தது இவனுக்கு.

     போதாக்குறைக்கு தலை “பம்“மென்றிருந்தது. முடி வெட்டி வருஷக் கணக்காகும் போல....- நினைத்துக் கொண்டான். தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டு படம் பார்க்க முனைந்தான். ஆனாலும் திரை முழுக்க பார்வையில் விழவில்லை. வசனங்களை வைத்து படத்தை அறிய முயற்சித்தான். இடது புறம் கொஞ்சம், அந்தாள் தலைக்கு மேலே கொஞ்சம், வலது புறம் கொஞ்சம்...இதுதான் தெரிந்தது. பல சமயங்களில் அது  வெட்ட வெளியாய் இருந்தது. மரமும், வானமும், வீடு உத்திரமும் காட்சிகளாய்ப்  பட்டன.

     படம் போட்டதிலிருந்து ரெண்டு மூணு முறை சொல்லி விட்டான். ஒரு தடவை மட்டும் லேசாய் அசைந்தது போலிருந்தது. அவ்வளவுதான். ஆஜானுபாகுவான ஆள். எந்திரிச்சு சண்டைக்கு வந்தான்னா? பொழுது போக்க ஒரு சினிமாவுக்கு வந்துட்டு இதெல்லாம் தேவையா?                                                   அப்படி இப்படி அசைந்து அசைந்தே நேரம் பூராவும் போனதுதான் மிச்சம். வேறு எங்கும் போய் உட்கார வழியில்லை. உறவுஸ் ஃபுல். வேண்டுமானால் வெளியேறும் கதவு பக்கத்தில் போய் நின்று கொண்டு பார்க்கலாம்...தியேட்டர் ஊழியன் போல...அது சாத்தியமா? எவ்வளவு நேரம் அப்படி நிற்பது? காசையும் கொடுத்து அப்படிப் போய் நிற்க என்ன தலைவிதியா?                                                      இந்த நினைப்பிலேயே படம் முடிந்து விட்டது. கதவு திறக்க கூட்டம் வெளியேற ஆரம்பித்தது.                                         வயிற்றெரிச்சலில் முன்னே போகும் அந்தாளை வெறித்தபடியே நடந்தான். ஆளும் மூஞ்சியும்....! கொஞ்சமாச்சும் அறிவு வேணாம்....பின்னாடி உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு மறைக்குமேன்னு...அறிவு கெட்ட முண்டம்....!                              முனகிக் கொண்டே வந்த இவனை பின்னால் கேட்ட அந்தக் குரல் தடுத்தது.                                                              தலையத் தலைய ஆட்டி ஆட்டியே படம் பார்க்க விடாமப் பண்ணிட்டான்யா இந்தாளு.....ஒரு நிலைல சீட்ல உட்காருராங்கிற?ஆட்டிக்கிட்டே இருக்கான்யா.... போறாம்பாரு....தட்டக்குச்சி கணக்கா.....? “பூ”ன்னு ஊதி விட்ரலாம் போல்ருக்கு....

     அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்பதை தட்டக்குச்சி சரவணன் உணர்ந்தான்.  

                           ---------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...