04 அக்டோபர் 2021

“வழிகாட்டி..!.” சிறுகதை உஷாதீபன், பதாகை இணைய இதழ் 4..அக்...2021

 

சிறுகதை                                  உஷாதீபன்,                                              “வழிகாட்டி..!.”         



                          

சார்...சார்....என்று சத்தமிட்டுக் கொண்டே பிளாட்பார நடைவாசிகள் கூட்டத்தில் முன்னேறினான் நல்லதம்பி. என்றுமில்லாமல் அன்று நிறையப் பேர் நடந்து போவதாகத் தோன்றியது. இடித்துக் கொண்டுதான் கடக்க வேண்டியிருந்தது. தன்னைத்தானோ என்று சிலர் திரும்பிப் பார்த்தார்கள். உங்களையும் தாண்டி.... என்பதாய் சைகை செய்து கொண்டே சார்...என்று மீண்டும் அழைத்துக் கொண்டு முன்னால் போனான்.

      அடடே....நல்லதம்பியா....! பார்த்து ரொம்ப நாளாச்சு...நல்லாயிருக்கியா....? என்றார் வைத்தீஸ்வரன்.

நல்லாயிருக்கேன் சார்...காந்தி சிலைலர்ந்து கூப்பிட்டிட்டு வர்றேன். உங்களுக்குக் காதிலே விழலை...

      அப்டியா....! நா ஏதோ சிந்தனைல போய்ட்டிருக்கேன்...இந்த டிராஃபிக் இரைச்சல்ல எப்டிப்பா...? அது கிடக்கட்டும்... இந்த கூட்டத்துல தள்ளிப் போயிட்டிருக்கிற என்னை எப்டி அடையாளம் கண்டு பிடிச்சே...? – சிரித்துக் கொண்டே கேட்டார் வைத்தீஸ்வரன்.

      உங்க உயரமும், நடையும் உங்களைக் காட்டிக் கொடுத்திடுமே சார்...உங்க தலை பின் பக்கம் இன்னொரு அடையாளம்....! சரிதானா ....?

      தலைமுடி அழகாயிருந்து என்ன செய்ய? -தலைக்குள்ளேதான் விஷயம் வேணும்...!

      சார்...சார்...நீங்கள்லாம் இப்டி சொன்னா எப்டி...? உங்ககிட்டதான சார் நாங்கள்லாம் வேலை கத்துக்கிட்டோம்...எதுவுமே தெரியாத மண்ணா இருந்தமே சார்....உங்கள மாதிரி எல்லாரையும் அரவணைச்சு, பொறுமையா சொல்லிக் கொடுக்கிறதுக்கு இன்னிக்கு யார் சார் இருக்காங்க....?

      அப்போ இப்பயும் வேலைகளைக் கத்துக்கிற நிலைமைலதான் இருக்கீங்களா? இன்னும் அப்டேட் ஆகலையா? – மீண்டும் சிரித்தார் வைத்தீஸ்வரன்.

      கேலி பண்ணாதீங்க சார்...ஏதோ ஓட்டிட்டிருக்கோம் அவ்வளவுதான்....மாமி எப்டியிருக்காங்க சார்...அவங்களும் எம்ப்ளாய்ட் ஆச்சே... டெலிஃபோன்னு சொன்னதா ஞாபகம்...

      இருக்கா...அவளுக்கென்ன...? மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு மாத்திரைகளை முழுங்கிட்டு சௌகரியமா இருக்கா....? ஆனா ஒண்ணு....அதைப்பத்தி அவ எப்பயும் குறைப்பட்டுட்டதே கிடையாது... அதுபாட்டுக்கு அது......வீடு, ஆபீஸ், வேலைன்னு அதெல்லாம் தனி. சுறுசுறுப்பா இயங்கிட்டிருக்கா....அதெல்லாம் ஒரு ஸ்பெஷாலிட்டிப்பா...சில பேருக்குத்தான் அந்த மாதிரி மனசு அமையும்....மனக்குறை இல்லாதவங்கள கடவுள் ஆரோக்யமா வச்சிருப்பான்....மனசு பாதிச்சாத்தானே வியாதி, வெக்கை எல்லாம்....!

      அருமை சார்...நான் ஒரு வாட்டி உங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ மாமி பாயசம் கொடுத்தாங்க...ஜவ்வரிசிப் பாயசம்...சூப்பரா இருந்திச்சு...நீங்க கூட ஜாவா அரிசிதான் ஜவ்வரிசி  ஆயிடுச்சின்னு விளக்கம் சொன்னீங்க... புக்ஸ் நிறையப் படிப்பீங்களே சார்...இப்பயும் அதெல்லாம் உண்டா?

      இதென்னப்பா இப்டிக் கேட்குற? அது சின்ன வயசுலர்ந்து இருக்கிற பழக்கமாச்சே...? ....

      அதுக்கில்ல சார்... புத்தகங்களா அடுக்கியிருப்பீங்க...மாசம் ரெண்டுவாட்டி உங்க வீட்டு மொட்டை மாடில, வொயர் இழுத்து லைட் போட்டு  மீட்டிங்கெல்லாம் போடுவீங்க...நாங்கூட ஒருதரம் வந்திருந்து கடவுள்... வாழ்த்துப் பாடினேன். எனக்கு ஒரு புக் கொடுத்தீங்க...ஞாபகம் இருக்கா சார்...?

      அடேங்கப்பா......இன்னும் ஞாபகம் வச்சிருக்கியே...அது பரிசளிப்பு விழாக் கூட்டமாச்சே...! எதையாச்சும் செய்திட்டேயிருக்கணும்பா...இல்லன்னா இந்த வாழ்க்கை போரடிச்சிடும்...சோம்பேறி ஆயிடுவோம்...எல்லாம் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கத்தான்...

      அதான் சார்....உங்க கைக்காசைப் போட்டு செய்திட்டிருப்பீங்களே...அது இன்னும் தொடருதான்னு....

      டிரான்ஸ்பர்ல வெளியூர் போயிட்டேனேப்பா...எங்கேருந்து நடத்துறது? இப்போ ரிடையர்ட் ஆயிட்டேன். திரும்பவும் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்....சொல்லி அனுப்பறேன்...வருவேல்ல....?

      கண்டிப்பா சார்.....! நீங்க இருக்கைல நம்ம ஆபீஸ்ல இருந்தாரே செல்வம்னு அவர் இறந்துட்டார் சார்...? உங்களுக்குத் தெரியுமா?

      யாரு...நம்ப  அஸிஸ்டென்ட் செல்வமா...? அய்யனார் டிராவல்ஸ்ன்னு அவர் மாமனார் கூட டிரான்ஸ்போர்ட் வச்சிருந்தாரே....அந்தப் பையன்தானே...? கான்சர்னு தெரியும்... இறந்துட்டானா? அடப் பாவமே....! பெரிய கொடுமைப்பா...! ரொம்பச் சின்ன வயசு...எல்லா வசதியும் இருக்கு...ஆனா பாரு....வாழறதுக்குக் கொடுத்து வைக்கல...?

இறக்கறதுக்கு ரெண்டு நாள் வரைக்கும் வேலைக்கு வந்திட்டிருந்தார் சார்....டிரஷரிக்குக் கூடப் போய் பில் பாஸ் பண்ணிட்டு வந்தாரு...சுறுசுறுப்பா இயங்கிட்டிருந்தாரு...மறுநா ஆபீஸ் வந்தா இப்டி நியூஸ்....ஒரே சோகமாப்  போச்சு சார்....உங்களைத்தான் அடிக்கடி சொல்வாரு...

அருமையான பையன்ப்பா....வேலை கத்துக்கிறதுல எவ்வளவு ஆர்வம் அவனுக்கு? ஒபீடியென்டான பையன்.....டிஸிப்பிளினரி கேஸ் டீல் பண்ண எங்கிட்டதான்ய்யா ஓடி ஓடி வருவான்....தரவ் ஆயிட்டானே...ஸ்டேட்லயே அவன அடிச்சிக்க ஆளில்லேன்னில்ல இருந்தான்...தான் சீக்கிரம் செத்துடுவோம்னு தெரிஞ்ச ஒருத்தனோட வேகமா அது? இம்பாஸிபிள்....யாருக்கும் அமையாது.....மனசு நிறைஞ்ச பையன் அவன்....! சொர்க்கத்துக்குத்தான் போயிருப்பான் நிச்சயம்...!

நாங்கள்லாம் உங்க மாணவர்கள்தானே சார்...நீங்க க்ளாஸ் எடுக்கலைன்னா எங்க சார் ப்ரமோஷன் எக்ஸாம்லாம் பாஸ் பண்ணப்போறோம்? என்னமாச் சொல்லித் தருவீங்க...? உங்களப் போல அக்கௌன்ட் டெஸ்ட் க்ளாஸ் எடுக்கிறதுக்கு இப்ப ஆள் கிடையாது சார்...ஒருத்தர் சொல்லித் தறாரு...சத்திரம் ஸ்கூல்ல...ஊழியர்கள் அட்டெம்ட்தான் போடுறாங்க...யாரும் ஒரே சிட்டிங்க்ல பாஸ் பண்றதுல்ல.....அந்தக் காலம்லாம் போச்சு சார்...இப்ப பணம்தான் முன்னாடி நிக்குது.....ஃபீஸ்ஸை ஒவ்வொரு டேர்முக்கும் ஞாபகமா உயர்த்திடுவாங்க...அது மட்டும் கரெக்டா நடந்திடும்...ஆனா சொல்லித்தர்றது? அதக் கேட்கவே கூடாது....

படிக்கணும்...பாஸ் பண்ணனும்...ப்ரமோஷன்ல போயாகணும்ங்கிறவன் எப்படியும் படிச்சிடுவாம்ப்பா....இப்போ நீங்கள்லாம் இல்லே? அக்கறைதான் வேணும்....என்னை வேணும்னே வெளியூருக்குத் தூக்கினாங்க... வகுப்பு எடுக்கிறதெல்லாம் நின்னு போச்சு....சோர்ந்தா போயிட்டேன்...? போடா...சொக்கான்னு நாம்பாட்டுக்குக் கிளம்பிப் போகலே? ஒரே மாதிரியாவா இந்த வாழ்க்கை நகரும்...? திருப்பங்களும் வரத்தானே செய்யும்?....எம்பொண்டாட்டி தனியாத்தான் இருந்தா......கழியாமயா போச்சு?...அதெல்லாம் அவனவன் மனசைப் பொறுத்தது...எங்க போனாலும் நம்ப கடமையை நாம சரியாச் செய்யணும்னுங்கிற ஒரே நினைப்புல  இயங்கிறவனுக்கு என்னைக்கும் குறைவு வராதுப்பா...! மனசு நிறைஞ்சு வேலை செய்யணும்.......வாழ்க்கைங்கிறது பலதும்தானே...எல்லாம் கடந்து போகும்...!

உங்களத்தான் சார் நாங்கள்லாம் வழிகாட்டியா நினைச்சிக்கிறது. நல்லா வேலை பார்க்கணும்ங்கிறதே நீங்க கத்துக் கொடுத்ததுதான் சார்....தெரியாததைக் கண்டு பயப்படக் கூடாது, ஓடி ஒளியக் கூடாது, பொறுப்பைக் கை கழுவக் கூடாது... கஷ்டப்பட்டுக்  கத்துக்கணும்னு அடிக்கடி நீங்க சொல்வீங்க..அப்டி வளர்ந்தவங்க சார் நாங்க...உங்க  கெய்டென்ஸ் இல்லன்னா நாங்கள்லாம் இந்த சிட்டில நிற்க முடியாது சார்...அவ்வளவு போட்டா போட்டி...யாரை...எப்போ எங்கே தூக்குவாங்களோங்கிற பயம்....! ஒரே அரசியல் உள்ளே... அதையும் மீறி நிலைச்சு நிற்கிறோம்னா,   அதுக்குக் காரணம் எங்க வேலைல நாங்க காண்பிக்கிற அக்கறைதான் சார்....அந்தத் திறமையை எங்களுக்குள்ளர்ந்து வெளில கொண்டு வந்தது நீங்க...எங்களை வடிவமைச்சது நீங்க....உங்களை எங்க யாராலயும் மறக்கவே முடியாது சார்...எங்க குருன்னா அது  நீங்கதான்....!

அடேயப்பா...புகழ்ச்சி ரொம்ப பலமா இருக்கே? அப்டியெல்லாம் சொல்லிக்க வேண்டாம்...நான் என் கடமையைத்தானே செய்தேன். இப்போ நீங்க  இதைச் சொல்ற போது மனசுக்கு எவ்வளவு திருப்தியா இருக்கு. அது போதும்.  இதுக்குத்தான் உழைக்கிறது...ஆத்ம திருப்தி.....ஒரு மனுஷனுக்கு இதெல்லாம்தான் சாதனை, சமாதானம்... சந்தோஷம்...அவனவன் மனசளவுல திருப்தியா இயங்கினா, ஆரோக்கியமா இருக்கலாம்....ஆல் தி பெஸ்ட்....பார்த்தியா பேசிட்டே இங்க போஸ்டாபீஸ் வரைக்கும் வந்திட்டோம்...அதுவும் நல்லதுக்குத்தான்....மினி பஸ் வரும்...நான் ஏறிப் போயிடறேன்....ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாங்க...ஞாபகம் இருக்கில்லியா? வள்ளுவர் காலனி - ஸ்ருதி இல்லம்...

நல்லா ஞாபகம் இருக்கு சார்...பெண் குழந்தை இல்லைன்னு வீட்டுக்கு இந்தப் பேரு வச்சதாச் சொல்லியிருக்கீங்களே !...

பஸ்ஸில் ஏறி அமர்ந்து, நல்லதம்பியை நோக்கிக் கையசைத்தார் வைத்தீஸ்வரன். கண்களில் நீர் பளிச்சிட்டது. இன்னும் நிறையப் பேசணும்...இன்னொரு நாள் சந்திப்போம்..- அவர் கத்துவது இவன் காதில் விழுந்தது.

பஸ் கிளம்பி மெதுவாய்ப் போய்க் கொண்டிருந்தது....! பாசமான மனுஷன்... ஆள் சோர்ந்துட்டாரே...? நினைத்தவனுக்கு, சுரீரென்று மூளையில் ஏதோ உரைத்தது. எதைக் கேட்க வந்தோமோ அது விட்டுப் போச்சே? தலையில் பலமாய்க் குட்டிக் கொண்டான் நல்லதம்பி. வண்டி மறைந்து விட்டது. அவராகச் சொல்வார் என்ற நினைப்பில்...எதிர்பார்ப்பில்....எப்படிக் கேட்காமல் விட்டேன்....?

மனைவி காலமாகி ஒரு மாதம்போல்...! கொஞ்சம் கூடக் காட்டிக் கொள்ளவில்லையே? துக்கம் அடங்கிக் கிடக்கிறதோ? மகன் குடும்பத்தோடு வெளி நாட்டில். சாவுக்கு  வரவில்லை என்று கேள்வி.  ஆள் இப்போ தனிக்கட்டை? அடக் கடவுளே...!

தனக்குப் பையன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியான தகவலையும் பகிர மறந்து போனதை எண்ணியவாறே குழப்பத்தோடு நடந்து கொண்டிருந்தான் நல்லதம்பி. அவரைக் கண்ட,  பேசிய திருப்தியே இந்த இரண்டையும் மறக்கடித்து விட்டதோ?  துளியும் ஞாபகம் வரவில்லையே?..

                             

                 

                              ------------------------------------

 

 

     

     

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...