01 அக்டோபர் 2021

“பழைய செருப்பு கடிக்கும்” சிறுகதை -01.10.2021 கல்கி வார இதழ்

 

சிறுகதை                                                                                                                       பழைய செருப்பும் கடிக்கும்”  

  




       ம்மா.ஆஆஆ....!  கால்ல ஆணி வந்திருச்சு..!!.. – வலி தாங்கமாட்டாமல் அலறிக்கொண்டே ஒரு மாதிரி நொண்டியவாறே அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள் அஞ்சனா. அந்த அலறலில் பதறிப்போனான் ஆறுமுகம்.

       என்னது கால்ல ஆணியா....? அதென்ன திடீர்னு... நோக்காடு? – ஆறுமுகம் சலித்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்துக் கேட்டு, திரும்பவும் குனிந்து கொண்டான்.. அவனது காலை பால் போடும் வேலை அப்போதுதான் முடிந்திருந்தது. எல்லா வீட்டுக்கும் விடுபடாமல் போட்டு விட்டோமா என்று மொபைலில் இருக்கும் முகவரிகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பாக்கெட் மிஞ்சுகிறது...எப்படி? புரியவில்லை. என்றும் அவன் கணக்கு சரியாகத்தான் இருந்திருக்கிறது. இன்றுதான் இந்தத் திகட்டல்.

       நா வலில துடிச்சிட்டிருக்கேன்...நீங்க என்னடான்னா ஃபோனை நோண்டிக்கிட்டிருக்கீங்க...? – எரிச்சலில், இடது காலைச் சரியாக ஊன்றாமல் தடாலென்று தரையில் உட்கார்ந்தாள் அஞ்சனா.

       ஏய்...பார்த்து...பார்த்து... சாய்ஞ்சிறப் போற....!  பின்னாடி செவுரு. தலைல இடிச்சிராம...?

       அய்யோடா...ரொம்பவும் கவலதான்...அய்யாவுக்கு .?-அடி ஆத்தீ....என்னா வலி வலிக்குது....என்று சொல்லிப் பாதத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். எல்லாம் உங்களால வந்த வினை...!

       ஒரு பாக்கெட் மிஞ்சிதுப்பா...எங்க விட்டேன்னு தெரில....ஒரே டென்ஷனாயிருக்கு...

       தன் பேச்சு காதில் வாங்கப்டாமலேயே அவன் பேசுவதைக் கண்டு அவளுக்கு மேலும் எரிச்சல் கூடியது. ஒவ்வொரு  வீடுகளுக்கும்  எத்தனைன்னு குறிச்சி வச்சிருப்பீங்கல்ல....? அப்புறம் என்ன தீங்கு? எதாச்சும் தப்புப் பண்ணிட்டேயிருக்கணும்?

       சும்மாக் கெட்டி  எல்லாம் தெரிஞ்சாப்ல...!...அப்பப்ப குறிச்சி வைக்கிறதுதான்....சில வீடுகள்ல தெனமும் மாத்திட்டேயிருக்காங்கல்ல....? ஒண்ணு குறையும், ஒண்ணு கூடும்....சமயங்கள்ல ரெண்டு அதிகம் வேணும்பாங்க...சில பேர் பாலே வேண்டாம்பாங்க....அதெல்லாம் நோட் பண்ணி லிஸ்ட் போடுறதே தினசரி பெரிய வேலை. தெரியுமா? ....அதுலதான் எதுவும் தப்பாயிடுச்சோன்னு பார்க்குறேன்.....ஒண்ணு கூட வாங்கிப்புட்டமான்னும் தோணுது...இப்பப் போய்த் திருப்பிக் கொடுத்தா...ஏஜென்டம்மா வாங்காது...அது ஒரு பேயு....காட்டுக் கத்து கத்தும்.

       ... யாரும் கேட்கலேல்ல...அப்ப விடு.... நாம காய்ச்சிக் குடிப்போம்....

       புத்தி போகுது பார் உனக்கு? ஒரு வேள...அந்த வீடா இருக்குமோ...? ஏதோ சொல்ல வந்தவன்.. சட்டென்று நாக்கை உள் இழுத்துக் கொண்டான். அவங்கதான் ரெண்டு நாளைக்கொருதரம் மாத்திட்டே இருப்பாங்க....! அதுல குழம்பிட்டமோ?  இவ்வளவு நேரம் ஆச்சு... ஒண்ணும் ஃபோன் பண்ணிக் கேட்கலயே...?

       யம்மா.டீ..கால ஊணவே முடிலயே....என்னா வலி வலிக்குது....இதுக்குத்தான் சொன்னேன். இப்டிப் பழைய செருப்பெல்லாம் தூக்கிட்டு வராதய்யான்னு....கேட்டாத்தானே.....? ஏற்கனவே அமுங்கிக் கிடந்தது இப்போ தலையக் காட்டுது.. அத்தன நா அந்தச் செருப்பைப் போட்டவுகளுக்கு என்ன வியாதி இருந்திச்சோ...? சில பேரு கால்ல ஆணியோடவே ஆயுசு பூராவும் திரிவாக...அந்த மாதிரி ஆளுக போட்ட செருப்ப நாம போட்டம்னா நமக்கும் ஆணி வந்திடும்...நிறையப் பேரப் பார்த்திருக்கேன்......அவுக கால்ல தோல் வியாதி ஏதும் இருந்திச்சின்னா...நமக்கும் தொத்திக்கிடும்....ஏற்கனவே  எடம் தெரியாம இருந்த ஆணி...இப்பப் பெரிசாயி உயிர எடுக்குது....ஒருத்தர் போட்ட செருப்ப இன்னொருத்தர் போட்டா இப்டித்தான்..யானைக்கல் பாலத்துல வச்சி விற்பான்...பார்த்திருக்கியா? பழைய செருப்போட அடிய ரெண்டு மூணை சேர்த்துத் தச்சு, மேல் வார் மட்டும் பொருத்தி, பாலிஷ் போட்டு புதுச்செருப்பாட்டம் வித்துப்புடுவான்...அங்க செருப்பு வாங்கினா இப்டித்தான் வியாதி வரும்....இது அதுக்கும் மோசம்...

       உனக்கென்னாடி தெரியும்....உசிரக் கைல பிடிச்சிட்டு, ஊரே தூங்குற வேளைல,  விடி காலைல பற பறன்னு நா பறந்திட்டிருக்கேன்......நீ என்னடான்னா எதையோ பேசிட்டிருக்கே....பொழுது விடியுற ஆறு மணிக்குள்ளாற அத்தனை வீட்டுலயும் பால் பாக்கெட் போட்டாகணும்...இல்லன்னா கத்துவாக....சில வீடுகள்ல லேட்டாகுதுன்னு நிறுத்திப்புட்டாக தெரியுமா சேதி....ஆறுக்குள்ளாற சுடச் சுடக் காபி குடிச்சாகணுமாம்...சனம் அப்படிப் பழகியிருக்கு....

       அதுக்கு என்னை என்னய்யா பண்ணச் சொல்றே...? நீ சரியாக் குறிச்சு வச்சிப் போடலைன்னா நான் என்னா செய்யட்டும்? என் கால் ஆணிக்கு பதில் சொல்லு...உன்னாலதான வந்திச்சு....! என் அவஸ்த நீ பட்டீன்னா தெரியும் உனக்கு?

       போடீ...போக்கத்தவளே...வௌயாட்டுத்தனமா பேசிட்டிருக்கே...இங்க உட்கார்ந்திட்டு நீ ஏன் பேச மாட்டே...? ஒரு அப்பார்ட்மென்ட்ல...அவுகதான் புதுச் செருப்பு வாங்கிட்டாகளேன்னு இந்தப் பழைய செருப்ப ஆட்டையப் போட்டுட்டு வந்தேன் உனக்காக...நீ என்னடான்னா கால்ல ஆணி, தோல் வியாதின்னு புலம்புறே....அவுகளா கொண்டுட்டுப் போய் எங்கயானும் தூக்கி எறியத்தான் போறாக...அதனால கண்டுக்க மாட்டாங்கன்னு நைஸா எடுத்திட்டு வந்தா....நீ என்னென்னவோ சொல்றியே...? மனசு எவ்வளவு திக்கு...திக்குன்னுச்சு தெரியுமா? பழசானாலும் திருட்டு திருட்டுதானடீ...கேட்டிருந்தாக் கூட இந்தா எடுத்திட்டுப் போன்னு கொடுத்திருப்பாகல்ல...? அந்த நேரம் அந்தப் புத்தி வரல்லயே...!

       ஆமாய்யா...நா சொல்றதுல என்னா தப்புங்கிறேன்...? எடுத்ததுதான் எடுத்தே.... புதுச் செருப்பா லவுட்டிட்டு வந்திருக்கக் கூடாது? உனக்கு சாமர்த்தியமில்ல...எதுக்கெடுத்தாலும் ஒரு பயம்...!  அவுகள்லாம் எதையும் கண்டுக்க மாட்டாங்கய்யா...வசதியுள்ளவுக...இல்லன்னா...வராண்டாவுல வர்றவுக போறவுக கண்ணுல படறாப்ல அப்புடிப் புதுச் செருப்பப் போட்டு வைப்பாகளா...? அடுக்கு மாடி பூராவும் அப்டித்தான்யா கிடக்கும்...புரியாமப் பேசுற...?  இருந்தா இருக்கு...போனாப் போவுதுங்கிற அலட்சியம்தான? எவன் எடுக்கப் போறான்ங்கிற மெத்தனம்தான? நம்மள மாதிரி ஒரே ஒரு ஜோடியா வச்சிருப்பாக...? நாலஞ்சு கெடக்குமாக்கும்...கட்டிட்டுப் போற சேலைக்கேத்த மாதிரியெல்லாம் கலர் கலரா வாங்கி வச்சிருப்பாகளாக்கும்....

       செய்தது தப்பே இல்லை என்பதுபோல் அஞ்சனா சொல்லிக் கொண்டேயிருந்தாள்.! எனக்கும் கடைல புதுசு வாங்கிக் கொடுன்னு கேட்டாலும் பரவால்ல...திருடச் சொல்கிறாளே? இவள் புத்தி ஏன் இப்படி வக்கரித்துப் போகிறது? சரி...அவள்தான் சொன்னாள்...தான் செய்யலாமா? தனக்கு எங்கே போயிற்று அறிவு?

..ஆறுமுகத்திற்கு  சட்டென்று உறுதியாகி விட்டது. கவனப் பிசகில், பயத்தில், பதட்டத்தில், அந்த வீட்டுக்குத்தான் ஒரு பாக்கெட் குறைத்துப் போட்டு விட்டோம் என்பது மனதிற்குள் உறுதியானது.அந்தத் தப்புக்குப் பிறகுதான் தன்னிடம் இந்தப் பதட்டம் வந்திருக்கிறது. நாளைக்கு ஒரு பாக்கெட் கூடப் போடுங்க என்று ஃபோனில் சொல்லியிருந்தது..இப்போது பளிச்சென்று பொறி தட்டியது. குறித்துக் கொள்ள விட்டுப் போச்சு..அடடா...!

.நாலு நாளைக்கு முன்னால் திருடிய செருப்பு. யாரும் எதுவும் இதுவரை கேட்கவில்லைதான். ஒரு வேளை அமைதியாய்  வாட்ச் பண்ணுகிறார்களோ...? இருட்டில்  நின்று கண்காணிக்கிறார்களோ? எதுக்கு இந்த பயம்? தேவையில்லாத பயம்?

       இத வந்திட்டேன்.....காலில் செருப்பை மாட்டிக் கொண்டு  சைக்கிளில் ஏறிப் பறந்தான் ஆறுமுகம். அவன் காலிலும் ஏற்கனவே ஆணி உண்டு. அதைப் பொருட்படுத்தியது இல்லை. பிளாஸ்டர் வாங்கிக் கொடுத்து அவள அந்த எடத்துல ஒட்டிக்கச் சொல்லணும்...சரியாப் போயிரும்....

       என்னாங்க...அந்த மிஞ்சின பால் பாக்கெட்டைக் கொடுத்துட்டுத்தான் போங்களேன்....என்னா இந்த ஓட்டம் ஓடுறாரு....? – புரியாமல் திகிலோடு பார்த்துக் கொண்டேயிருந்தாள் அஞ்சனா. ஆணி இருந்த இடத்தில் விண் விண் என்று கடுத்தது. கவனிக்காமல் போகும் கணவன் மேல் கோபம் கிளர்ந்தது.

       அந்தச் செருப்புக் கூட்டத்துல பழச நிச்சயம் யாரும் கண்டுக்கப் போறதில்ல. கேட்டா......திருடுறவன் பழசையாம்மா திருடுவான்னு சொல்லிச் சமாளிக்கலாம். எனக்குத் தெரியாதுன்னு ஒரே வார்த்தைல சொல்லிடலாம். இனி இந்தத் தப்பைப் பண்ணக் கூடாது... ஆனா இன்னைவரைக்கும் எதுவும் கேட்கலியே? போனாப் போகட்டும்னு விட்டுட்டாகளோ?    நல்ல வேளை...புதுச் செருப்புல கை வைக்கல...வச்சிருந்தா நிச்சயம் மாட்டிக்குவோம்...உடனே விசாரிச்சிருப்பாங்க.....இப்பத்தான் ஏதோ கொஞ்சம் வருமானம் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். முக்கி முக்கி நூறு வீடு வரைக்கும் சேர்த்திருக்கேன். அதையும் கெடுத்துக்கக் கூடாது....இந்தப் பொழப்பே பிறகு கைவிட்டுப் போயிரும்...காப்பாத்துனடா சாமி...!. புத்தி வந்திச்சு...!..- எண்ணியவாறே கடவுளுக்கு நன்றி சொல்லி  சைக்கிளை ஓங்கி மிதித்து விரைந்து கொண்டிருந்தான் ஆறுமுகம்.      

                           ---------------------------------------------------------                                                 

 

 

 

      

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...