புதுமைப்பித்தனின் "கண்மணி கமலாவுக்கு" - வாசிப்பனுபவம்
-----------------------
வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம் என்றார் புதுமைப்பித்தன்.
அந்த அளவுக்கான ஆழ்ந்த ரசனையோடுதான் தனது ஒவ்வொரு படைப்பினையும் வடித்தெடுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அதனால்தான் இலக்கியம் என்பதன் முழு அர்த்தத்தை உள்ளடக்கியதாக நம்மை பிரமிக்க வைக்கிறது அவரது ஒவ்வொரு படைப்புக்களும்.
இல்லையென்றால் தனது மனைவிக்கு எழுதும் கடிதங்களைக் கூட இத்தனை ரசனையோடும், பிடிப்போடும், உள்ளார்ந்த அனுபவச் செறிவோடும் அன்பையும், பாசத்தையும், பொறுப்புணர்ச்சியையும், கடமையுணர்ச்சியையும் நுணுகி நுணுகி உணர்ந்து, அனுபவித்து அதன் ஆழமான உட்பரிமாணங்களில் மனமுவந்து பயணித்து, தனக்கு ஊனாகவும், உடலாகவும் இருந்து பரிமளித்திடும் தன் மனையாளிடம் அதன் மொத்த சாரத்தையும் வடித்துக் கொடுத்துக் கடிதங்கள் எழுதியிருப்பாரா?
கண்மணி கமலாவுக்கு – புதுமைப்பித்தன்
இதுதான் புத்தகம். இத்தனை கடிதங்களைத் தொகுக்கும் பணி என்ன சாதாரணமா? என்ன விலையோ அதைத் தயங்காமல் கொடுத்து, ஆர்வமாகப் படித்து முடித்து விடுகிறோம். ஆனால் அந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு அந்தத் தொகுப்பாளர் என்ன ஒரு உழைப்பையும், முனைப்பையும் காட்டியிருப்பார்? திரு இளையபாரதி அவர்கள் நிரம்பவும் பாராட்டுக்குரியவர்தான்.
நாமெல்லாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்றுதான் தோன்றுகிறது நமக்கு. முணுக்கென்றால் முன்னூறு முறை கோபித்துக் கொள்ளும், முகத்தைத் திருப்பிக் கொள்ளும், சண்டைக்கு சதிராய்ப் பறக்கும் சாதாரண மானிடப் பிறவியாய் அன்றாட வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
இத்தனைக்கும் பொருளாதாரத் தேவை என்பது நிறைவடைந்திருக்கும் நிலையில், எதடா சாக்கு என்று ஒன்றுமில்லாததற்கெல்லாம் முறுக்கிக் கொண்டு அலைகிறோம். என்னதான் புத்தகங்கள் படித்தாலும், உணர்ந்தாலும், மனிதனின் இயல்பான கோணல் புத்தி என்ன அத்தனை சீக்கிரமாகவா தன்னை மூடி மறைத்துக்கொள்கின்றன? அல்லது எல்லா முரண்களிலிருந்தும் விலகிக் கொள்கின்றனவா?
அன்றாட வாழ்க்கையே பிரச்னையாக இருந்த நிலையில், பொருள் ஆதாரத்தை முற்றிலுமாக நம்பி நின்ற பொழுதில், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அவரவருக்கான மனச் சங்கடங்களைக் கூட நேரில் பகிர்ந்து கொள்ள முடியாது வெகு தூரம் பிரிந்து நின்ற வேளையில், எத்தனை கரிசனத்தோடும், அன்போடும், கருணையோடும், பாசத்தோடும், பரஸ்பரம் எப்படியெல்லாம் உறவாடியிருக்கிறார்கள்? மனதுக்குள்ளே எப்படி ஆரத் தழுவியிருக்கிறார்கள்? இதுதான் உண்மையான அன்பு என்பதோ?
மூத்த தலைமுறையினரின் அடிப்படையான விழுமியங்கள் அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் செழுமைப் படுத்தியிருக்கின்றன! ஒழுக்கமும், பண்பாடும், கடமையுணர்ச்சியும், கட்டுப்பாடும், இந்த வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றல்லவா நமக்குப் பாடம் கற்பிக்கின்றன! சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும் என்கிற உண்மை இங்கே எப்படியெல்லாம் பரிணமிக்கின்றன!
பொருளீட்டுவதற்கான நமது உழைப்பு என்பது எங்ஙனம் இருக்க வேண்டும், ஈட்டிய பொருள் எத்தனை அர்த்தபூர்வமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும், பொருள் ஆதாரம் என்பது அதற்கான தேவைகளை நீட்டித்துக் கொண்டே போகாமல் அவசரம், அவசியம் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தவிர்க்க முடியாதவைகளாயும், தவிர்க்கக் கூடியவைகளாகவும் எப்படிப் பொறுப்போடு உணரப்பட வேண்டும், என்பதாக வாழ்க்கையின் நிகழ்வுகளை எத்தனை அக்கறையோடு போதிப்பதாக உள்ளன!.
வாழ்க்கையில் மனிதனுக்கு எல்லாவிதமான அனுபவங்களும் கிட்டி க்ஷவவிடுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் ஒருவனுடைய வாழ்க்கை எல்கை மிகக் குறுகிய அளவிலானதாக இருப்பதுதான். வீடு, அங்கிருந்து பொருளீட்டும் நிறுவனம் வரையிலான தூரம். வீடு, அங்கிருந்து பணியாற்றும் அலுவலகம் வரையிலான தூரம். இடைப்பட்ட மற்றும் பணியாற்றும் இடங்களில் பழகும் மனிதர்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் நடத்தைகள், பழக்க வழக்கங்கள், அனுபவங்கள் என்று மிகக் குறிப்பிட்ட அளவிலான மனிதர்களின் சந்திப்புகளோடு பெரும்பாலும் முடிந்து போகின்றனவாய் அமைந்து விடுகின்றன.
அப்படியானால் ஒரு மனிதன் முழுமையான அனுபவம் வாய்ந்தவனாக, இந்த சமூகத்தை, அதன் நிகழ்வுகளை முற்றிலுமாகப் புரிந்து நடந்துகொள்பவனாக ஒரு முழு மனிதனாக எப்பொழுது, எப்படி உலா வருவது?
அதற்குத்தான் வாசிப்பு அனுபவம் என்பது பெரிதும் உதவுகிறது எனலாம். வாசிப்பு ஒரு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. அவனது சளசளப்பைப் போக்கி அவனை அமைதியானவனாக்குகிறது. வாசிப்பனுபவத்தினால் மிகப்பெரிய விவேகியானவர்கள் பலர் என்று கூறுகிறார் திரு சுந்தரராமசாமி அவர்கள். இதுதான் சத்தியமான உண்மை.
மேற்கண்ட புத்தகத்தின்பால் ஏற்பட்ட வாசிப்பனுபவம்தான் இந்த அளவுக்கான தொகையறாவை முன்னே வைக்கும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டது.
திரு இளையபாரதி அவர்கள் தொகுத்து புதுமைப்பித்தன் அவர்கள் தனது துணைவியாருக்கு எழுதிய கடிதங்கள்தான் கண்மணி கமலாவுக்கு என்கிற பெயரில் அற்புதமான ஒரு இலக்கியப் பெட்டகமாக இங்கே மிளிர்கிறது.
வாழ்வதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மையில் வாழ்கிறோமா? என்று கேட்ட கலைஞனின் வாழ முடியாமல் போன வாழ்வு அவன் வாக்கு மூலமாய் இங்கே ஒலிக்கிறது என்று தனது முன்னுரையில் முன் வைக்கிறார் திரு இளையபாரதி அவர்கள்.
புதுமைப்பித்தன் என்கிற மகாகலைஞனின் இன்னொரு பரிமாணம் இந்தக் கற்பூர ஆரத்தியில் தரிசனமாகிறது என்கிறார்.
ஆம்! அவர் சொன்னது போல் தன் இருதயத்தை, அதன் தவிப்பை, தணலைக்கொட்டி முழக்கியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
வாழ்க்கை எப்படியெல்லாம் நீண்ட காலத்திற்குப் பிரிந்து நின்றது, எப்படியெல்லாம் சிதைந்து போனது, தேவைகள் எங்ஙனமெல்லாம் குன்றிப் போயின, சுயபூர்த்தியில்லாமலே நாட்கள் எத்தனை வேதனையாய்க் கழிந்தன, அவற்றினூடே மனம் தன்னை, தன் எண்ணங்களை அகல விரித்து எப்படியெல்லாம் ஆறுதல் தேடிக் கொண்டன என்பனவாக விரிந்து செல்லும் கண்மணி கமலாவுக்கு என்னும் இந்த இலக்கியப் பெட்டகம் நம் மனதைப் பிழிந்து எடுத்து விடுகிறது என்பது சத்தியமான உண்மை.
இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்ட ஒருவனின் வாழ்க்கை எப்படித்தான் சிதைந்தாலும், அந்தக் கனவின்பால் ஏற்பட்ட பிடிப்பு ஒருவனை எங்ஙனம் ஆட்டிப் படைக்கிறது என்பதைத் தன் மனைவிக்கான ஒவ்வொரு கடிதம் மூலமாக அப்படியே வடித்தெடுத்திருக்கிறார் பு.பி. அவர்கள்.
பழைய திரைப்படங்களிலும், நாவல்களிலும், கடிதம் எழுதும் முறைமையில் கண்டவற்றை தன் மனைவிக்கான முதல் அழைப்பின் வாயிலாக பு.பி. அவர்கள் முன் வைக்கும்போது இம்மாதிரியெல்லாம் விளித்து நாம் எழுதியதேயில்லையே என்று தோன்றத்தான் செய்கிறது. அப்படி எழுதியிருந்தால் அது ஒரு செயற்கையான விஷயமாகத்தானே பட்டிருக்கும். எல்லோராலும் விரும்பப் பட்டிருக்குமா, மனைவியால் கூட விரும்பத் தக்கதாக இருந்திருக்குமா என்றெல்லாம் கூடத் தோன்றினாலும், பு.பி. அவர்கள் கடிதத்திற்குக் கடிதம் அப்படியே தன் மனைவியை விளித்து, தன் ஆழமான அன்பை, பாசத்தை, தன் குடும்பத்தின்பாலான தன் நேசத்தை நிலைநிறுத்தும்போது ஒரு மனிதன் முதலில் தன்னை நேசித்தால்தான் தன் நெருக்கமான சொந்தத்தை, சுற்றத்தை இப்படி நேசித்து, அரவணைக்க முடியும் என்கிற மன நியாயம் நம்மைக் கட்டுப்படுத்தி நிலை நிறுத்தி விடுகிறது.
கண்மணி கமலாவுக்கு…. எனதாருயிர்க் கண்ணாளுக்கு… எனதாருயிருக்கு… கமலாளுக்கு… எனது கட்டிக் கரும்பான ஆருயிர்க் கண்ணாளுக்கு, என் கண்ணம்மா… கண்ணா… கண்ணாளுக்கு… எனது கண்ணாளுக்கு… கண்ணான எனது உயிருக்கு… எனது கண்ணுக்குக் கண்ணான கட்டிக் கரும்புக்கு… எனது உயிருக்கு உயிரான கட்டிக் கரும்புக்கு… எனது கண்ணான கட்டிக் கரும்புக்கு… எனது அருமைக் கண்ணாளுக்கு….
கடிதத்தின் முதல் அழைப்பே எவ்வளவு அன்பைப் பொழிந்து நிற்கிறது?
…. பொருளை மட்டுமே ஆதாரமாக வைத்து வாழும் தற்போதைய வாழ்க்கையில் விழுமியங்களான விஷயங்கள் எங்கிருந்து எடுபடும்?
பழைய மதிப்பு மிக்க விஷயங்கள் இன்றும் அந்த மூத்த தலைமுறையினரால் மட்டுமே உணரப்படுகிறது என்றால் அதுதான் உண்மை. இவற்றையெல்லாம் நாம் நம் வாரிசுகளுக்குச் சொன்னோமா? அப்படியே சொல்லப் புறப்பட்டால்தான் யார் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாராயிருக்கிறார்கள்?
. 1938 களிலிருந்து 1948 வரையிலான சுமார் பத்தாண்டு கால கடிதப் போக்குவரத்துகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இக்குறிப்பிட்ட பத்தாண்டு கால இடைவெளியில் புதுமைப்பித்தன் அவர்கள் சென்னையில் வெவ்வேறு முகவரிகளில் மாறி மாறி இருந்திருக்கிறார். மதுரை, புனே, பெங்களுர், என்று பல இடங்களுக்கும் சென்றிருக்கிறார். அதுவே அவரின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஆரம்ப அடையாளங்களாக, காரண காரியங்களை முன்னிறுத்தியதானதாய் நமக்குத் தோன்றி மனதை மிகவும் கஷ்டப்படுத்தி விடுகிறது.
மனிதன் வறுமையோடு போராடுவது என்பது மிகக் கொடுமை. பொருளாதாரக் கஷ்டத்தினால் ஒருவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளே சீர்குலைந்துதான் விடுகிறது. கையில் கிடைக்கும் பணத்தைக் கண்ணும் கருத்துமாகக் கணக்கிட்டு, கவனமாகச் செலவு செய்து, விரயங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து, குடும்பத்திற்கு என்று கரிசனத்தோடு அனுப்பி வைத்து மன நிறைவு கொள்ளுதலும், கடிதத்திற்குக் கடிதம் அன்பையும், ஆறுதலையும், அரவணைப்பையும் தந்து பக்கத்தில் இல்லாத குறையைப் போக்க முயலுதலும், அருகில் இல்லாவிட்டாலும் என் கடிதங்கள் கட்டாயம் உன்னை ஆறுதல்படுத்தும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு கடிதத்தையும் அவர் வடித்திருக்கும் பாங்கு….பின்னால் இது இலக்கியமாகப் பேசப்பட வேண்டும் அல்லது பேசப்படும் என்கிற எதிர்பார்ப்பிலா எழுதப்பட்டது?
மன ஆழத்திலிருந்து உண்மையான அன்பின், பாசத்தின் வெளிப்பாடல்லவா அவைகள்! அதிலும் குழந்தை குஞ்சு இறந்து போய்விட அவர் அந்தத் துயரத்தை மறக்க தன் மனைவிக்கு எழுதும் வரிகள் நம் நெஞ்சத்தை அறுத்து எடுக்கின்றன.
தொலைபேசி வசதி கூட இல்லாத அந்தக் காலத்தில் வெறும் கடிதங்கள் மட்டுமே தொடர்பு படுத்துபவை என்கிற அளவில், கடுமையான வேலைகளுக்கு இடையில் அடுத்தடுத்து விடாமல் அவர் தன் மனைவிக்கு எழுதியுள்ள கடிதங்கள், வீட்டின் தொடர்ந்த நடவடிக்கைகளை சென்னையிலிருந்தே எவ்வளவு பொறுப்பாக இயக்க முடியுமோ அந்த அளவுக்குக் கட்டுப்பாட்டோடு இயக்கி, மனைவியையும் ஆறுதல்படுத்தி, தான் இல்லாத குறையைப் போக்க அவர் எடுத்திருக்கும் முயற்சிகள், மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை சீர்பட நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்பதற்கான அற்புதமான அடையாளங்களாகப் பரிணமிக்கின்றன.
எப்படியும் வாழலாம் என்பது எந்தக் காலத்திலும் எவருக்கும் பொருந்தியதாக இருந்ததில்லை. நமது குடும்ப அமைப்பு கற்றுக் கொடுத்த பாடங்கள் அவை. இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும், அதுதான் ஒரு மனிதனின், அவன் சார்ந்த குடும்பத்தின் நன்னடத்தைகளின் அடையாளங்களாகக் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதுதான் சத்தியமான உண்மை.
அம்மாதிரியான விழுமியங்களை அவற்றின் அடையாளங்களை வறுமையும், பொருளாதாரப் பற்றாக்குறையும் குலைக்க முயலும்போது மனிதன் முரண்படாமல், அந்தப் பேரலையில் அடித்துச் செல்லப்படாமல், அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறுகிறான் என்பதுதான் வறுமையிற் செம்மை என்ற தத்துவ நிகழ்வாகக் காலத்துக்கும் இகருந்து வந்திருக்கின்றன. இந்த அடையாளங்களின் பிரதிநிதியாய் பு.பி. அவர்கள் இந்தப் புத்தகத்தில் தான் வரைந்த கடிதங்களின் மூலம் நம் மனக் கண்ணில் திகழ்கிறார்.
கமலா கண்ணே! கட்டிக் கரும்பே! மறந்து விடாதே. உனக்கு ஏற்படும் துன்பம் எனக்கும்தான். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிக்கிறோம். அதனால் உனக்கென்று ஒரு வழி என்னும் அசட்டு யோசனைகளை விட்டுவிடு. மனசை மாத்திரம் தளர விடாதே! அது எனக்கு எவ்வளவு கவலை கொடுக்கிறது தெரியுமா? உன்னுடன் தவிக்கும். உனது சொ..வி.
விடாமல் கடிதத்திற்குக் கடிதம் அவர் தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் விதம், அடக் கடவுளே, ஒரு அற்புதமான படைப்பாளிக்கு வாழ்க்கைப் போராட்டம் எத்தனை கொடுமையாக அமைந்து விட்டது என்று நம்மைப் பிழிந்து எடுத்து விடுகிறது.
மனைவியை ஊக்கப்படுத்தும் நிமித்தம், அவர் எழுதும் கதைகளைத் தனக்கு அனுப்பிவைக்கச் சொல்கிறார். அடுத்தடுத்து விடாமல் எழுது என்று உற்சாகப்படுத்துகிறார். உன் கதைகள் நன்றாகவே உள்ளன, ஓரிரு வார்த்தைகளை மாற்றிப் போட்டால் போதும். அவற்றை நான் சரி பண்ணி, பிரசுரத்திற்குக் கொடுத்து விடுகிறேன் என்று கூறி, இன்னும் ஏதாவது எழுதியிருந்தாயானால் உடன் எனக்கு அனுப்பிக் கொடு என்று கேட்கிறார்.
1947 ஆரம்ப வரையிலான காலங்கள் சென்னையிலேயே கழிந்து விடுகின்றன. பிறகுதான பட விஷயமாக என்று மதுரைக்குப் பயணிக்கிறார். சூழ்ந்திருந்த இருள் விலக ஆரம்பித்து விட்டது என்று மகிழ்ச்சியை மனைவியோடு பகிர்ந்து கொள்கிறார்.
மதுரை சித்திரகலா ஸ்டுடியோவில் பட வேலைகளைக் கவனிக்க என்று கிளம்புகையில் அவர் மனம் பெரிதும் உவகை கொள்கிறது. அப்பொழுது கூட அங்கிருந்து உன் மனக் கவலை தீர்க்கும் தகவலை உனக்கு அனுப்ப முடியும் என்று நினைக்கிறேன் என்று மனைவிக்குத் தெரிவிக்கிறார்.
மதுரையில் மேலமாசி வீதியில் இருந்த உடுப்பி Nஉறாட்டலில்தான் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் வந்தால் தங்குவார்கள் என்று கேள்விப் பட்டதுண்டு. அங்கு அறை எண் 13ல் பு.பி. வந்து தங்கியிருக்கிறார் என்கிற தகவல் இன்று பெரிய ஜவுளி நிறுவனமாயும் வேறு பல கடைகளாயும் இருக்கும் அவ்விடத்தைப் பார்க்கும்போது நம் மனதை கனக்க வைக்கிறது.
எல்லாவிதமான பழைய அடையாளங்களும்தான் பணம் என்கிற புள்ளியில் இங்கே படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டனவே! காலத்தின் வேக ஓட்டத்தில் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனவே!
1948 களில் புனாவிற்கும் பிறகு பெங்களுருக்கும் செல்லும் வாய்ப்புக் கிட்டிய பு.பி. அவர்கள் பெங்களுரிலிருந்து எழுதும் ஒரு கனமான கடிதத்தோடு இப்புத்தகம் நிறைவு பெறுகிறது. நம் மனதையும் அது நிறைத்து கனக்க வைத்து விடுகிறது.
அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப் பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டுக் கிழித்து விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம்தான் முடிவு. என்பதாக அந்தக் கடிதத்தின் வரிகள் விரிகின்றன.
முக்கியமான செய்தி ஒன்றைத் தரும் ஒரு கடிதத்தையும் நாம் இங்கே கவனித்தாக வேண்டும். அது புனேயிலிருந்து எழுதப்படுகிறது.
5.2.48 என்று தேதியிட்ட அந்தக் கடிதத்தில் மகாத்மாவைச் சுட்டுக் கொன்றுவிட்ட செய்தியைப் பெரும் அதிர்ச்சியோடு தெரிவித்து, அதன் தொடர்பான கலகங்களைச் சுருக்கமாக விவரிக்கிறார்.
கொன்றது உறிந்து, புனா நகரத்து ஆள் என்று சொன்னார்கள். புனாவில் உறிந்து மகாசபை பத்திரிகை நடத்தியவன் என்று தெரிந்ததும், நகரம் கொந்தளித்துப் போயிற்று. உறிந்து மகா சபைக்காரர்களைக் குத்தி அவர்கள் வீடுகளை எரித்தார்கள். காந்தியைச் சுட்டவன் பத்திரிகாலயத்தை ஜனங்கள் எரிக்கும்போது நெருப்பு அணைக்கும் யந்திரம் வந்தது. அணைக்கக் கூடாது என்று ஜனங்கள் தடுக்க, ராணுவம் துப்பாக்கி பிரயோகித்து எட்டுப் பேர் மரணம். எங்கு பார்த்தாலும் பிராமணர்களை அடித்துக் கொல்லுவது அவர்கள் வீடுகளைக் கொளுத்துவது என்ற காரியம் நாலு நாட்களாக நடந்து வருகிறது. காந்தி மாண்டதற்காகச் சர்க்கரை கொடுத்த ஒருவன்ய கடை தீ. வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை. நான்கு நாட்கள் எனக்கு வெற்றிலை இல்லை என்றால் நிலை எப்படி என்று யோசித்துக் கொள் என்று முடிக்கிறார். இருக்கும் அதிரடியைச் சொல்லி அவருக்கான வெற்றிலையோடு முடிக்கும் பாங்கு எத்தனை சரளமும் யதார்த்தமும் நிறைந்தது. நல்லிலக்கியம் என்பது தானே கூடி வருவதாய்த்தானே இருக்க வேண்டும். காலம் பின்னால் உணரும் என்று அவர் நினைத்திருப்பாரா? அவரது உள்ளக் கிடக்கை அத்தனை தத்ரூபமாய்ப் பரிணமித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரு முயற்சி செய்து இந்தக் கடிதங்களைத் தொகுத்தளித்த திரு இளையபாரதி மிகவும் பாராட்டுக்குரியவர்.
இந்தக் கடிதங்களில் காணக் கிடைக்கும் புதுமைப் பித்தன் நமக்கு முற்றிலும் புதியவர். ரொம்பவும் நெகிழ்ச்சியானவர். தமிழ் இலக்கியத்தின் எல்லாவிதமான பரிசோதனைகளுக்கும் என்னிடம் வாருங்கள் என்று களம் அமைத்துக் கொடுத்த பெருமை பு. பி. அவர்களைச் சாரும். அவரைத் தொடாமல் இந்த இலக்கிய வானுக்குள் எவரும் சஞ்சாரம் செய்ய இயலாது. தன் மனைவிக்கு அவர் எழுதிய இக்கடிதங்கள் காலத்தால் இலக்கியமாகப் பரிணமிக்கும் என்ற நினைத்தெல்லம் அன்று அவர் எழுதவில்லை. ஆனால் இன்று அவையும் அந்தத் தகுதியைப் பெற்று தலை நிமிர்ந்து நிற்கின்றன. நாம்தான் அவற்றை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியத்தை விரும்பும் ஒவ்வொருவர் நூலகத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம் இது!
வ.வு.சி. நூலகம், ஜி-1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை,சென்னை-14 ன் அற்புதமான வெளியீடு இது. இந்தப் பதிப்பகம் எத்தனையோ நல்ல நூல்களைத் தேடித் தேடி வெளியிட்டு வருகிறது. அதில் இது அதி முக்கியமானது.
-------------------------------------------
,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக