“மனைவியின் நண்பர்“ - வண்ணநிலவன் - சிறுகதை - வாசிப்பனுபவம்
மிகுந்த கௌரவம் பார்க்கும் ஒருவர், அதற்கு எந்தவிதமான பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாய், அதே சமயம் தன் சபலத்தை விட முடியாதவராய், யாருக்கும் தெரிந்துவிடலாகாதே என்பதில் மிகுந்த ஜாக்கிரதை உணர்வு கொண்டவராய் நின்று அலைக்கழியும் ஒரு பெரிய மனிதனின் கதை இது.
நூல் மேல் நடப்பது போலான எழுத்து. கொஞ்சம் அப்படி இப்படி நகர்ந்தால் கூட விரசம் தட்டிவிடும். …இவ்வளவு ஆபாசமா…? என்று எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ளக் கூடும். அதற்கெல்லாம் இடம் கொடுக்காது, தன் ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு, பல்லாண்டு கால வாசிப்பு அனுபவத்தின்பாற்பட்டு, ரொம்பவும் அநாயாசமாய் இக்கதையின் கருவைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் வண்ணநிலவன். வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது, கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது என்கிறார். எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்து அவரது எழுத்து பல படைப்புகளில் நம்மை பிரமிக்க வைப்பதாக அமைந்து விடுகிறது என்பதுதான் சத்தியமான உண்மை.
“சிகரங்களைத் தொட்ட சிறுகதைகள்” என்ற தலைப்பில் அந்நாளைய தாய் வார இதழில் கவிஞர் பழனிபாரதி அவர்கள் தொகுத்தளித்த பல அற்புதமான சிறுகதைகளில் வண்ணநிலவனின் இந்த “மனைவியின் நண்பர்“ என்ற சிறுகதை முக்கிய இடம் பெறுகிறது.
வரிக்கு வரி தன் எழுத்துத் திறமையால் விளையாடியிருக்கிறார் ஆசிரியர்.. கதையின் ஆரம்பம் முதல் கடைசி வரி வரை அந்த ரங்கராஜூவின் நடவடிக்கைகளில் ஒளிந்திருக்கும் சபலம், திருட்டுத்தனம், போலித்தனம், அதை மறைக்க முயலும் பெரியமனிதத் தனம், அதைப் பறைசாற்றிக் கொண்டேயிருக்கும். அவர்தான் அந்தக் கடைக்காரனின் மனையாள் மேல் தவிர்க்க முடியாத மோகம் கொண்டு தனக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறாரே…! அவளைப் பார்ப்பதற்காகத் தினமும் வந்து வந்து அவர் தனக்குள் அவமானப்படும் அந்தச் சுய பச்சாதாபம் நம்மையே சங்கடப் படுத்த வைக்கும். எதுக்கு இந்த மனுஷன் இப்டி அலையறாரு? என்று தோன்றும். ஆனாலும் என்னதான் செய்றார் பார்ப்போம் … என்று நகர வைக்கும். ஒரு பெண்ணை ரசிப்பதிலும், அவளுக்காக ஏங்குவதிலும்தான் வரிக்கு வரி எத்தனை விதமான நுட்பங்களை நுழைத்திருக்கிறார் ஆசிரியர். முறையற்ற செயலில் என்னதான் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்தாலும் அது தன்னை மீறி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் என்பதை எத்தனை சூட்சுமமாக வெளிப்படுத்துகிறார்.
அவரின் தேவை அவர்களுக்கு இருந்தது. பொருளாதாரத் தேவை. கொடுக்கல் வாங்கல். குறிப்பாக அவளின் கணவனுக்கு. ஈடு செய்து வியாபாரத்தை மேலெடுத்துச் செல்ல. தேவைப்படும் நிலையில், மனைவியின் அவர்பாலான நெருக்கத்தையும், அது வரம்பு மீறிப் போகாமல் கழிகிறதா என்கிற கவனத்தையும் கொள்கிறது. குறிப்பிட்ட அளவிலான பழக்கமானால் இருந்து தொலைத்துவிட்டுப் போகட்டும் என்கிற தவிர்க்க முடியா நிலையில் அவரின் சுதந்திரமான வரவு அவர்கள் இருவரையுமே தடுக்க விடாமல் செய்து விடுகிறது. அது அவருக்குப் பயனளிக்கும் விதமாய், லாபகரமானதாய், அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்ளும் அதிகாரமாய் நாளுக்கு நாள் மாறி விடுகிறது. சிவகாமி, சிவகாமி என்று மனதுக்குள் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கத்தை நேரில் சென்று அனுதினமும் கண்டு, களித்து, அடைய தவியாய்த் தவிக்கும் அந்தப் பொழுதுகள் வயதுக்கு மீறிய வெட்கங்கெட்ட செயலாயினும், விட முடியாமல் மையலில் கொள்ளும் தவிப்பு, விடாத பதற்றத்தை அவருக்குள் ஏற்படுத்தும் தருணங்கள் நம்மையே அவருக்கு நிழலாய் மாற்றிக் கொண்டு உருமாறி நின்று கதை முழுக்க அவரோடு வலம் வரச்செய்கிறது.
அவளைப் பார்ப்பதும், கிளம்பி வருவதும்தான் கதை என்று கொண்டாலும், அந்த அரிய சந்திப்பிற்காக ஒருவன் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எச்சில் வழிய வழிய அலைந்து எடுத்துக் கொள்ளும் எத்தனங்கள் இந்தப் பித்துப் பிடித்தவனுக்கு எதுவுமே வெட்கமாய்த் தோன்றாது என்கின்ற முனை மழுங்கிய உண்மையை நம் முன்னே உரித்துப் போட்டு விடுகிறது. அடப் பாவமே என்று பரிதாபம் கொள்ளும் நிலைக்குக் கூட வாசகனைத் தள்ளும் இரக்கச் சிந்தையை மனதில் ஊட்டி விடுகிறது.
ஆழ்ந்த ரசனையோடு படிப்பது என்பது வேறு. படிப்பவர்களின் ரசனையைத் தன் எழுத்துத் திறத்தின் மூலம் வளர்ப்பது என்பது வேறு. வண்ணநிலவனின் எழுத்து இரண்டாம் வகையினைச் சேர்ந்ததாக இருக்கிறது.
.பச்சை வண்ண ராலே வண்டியில் வந்து இறங்குகிறார் ரங்கராஜூ. புத்தம் புதியதாய்த் துடைத்துப் பராமரிக்கும் அதை அவரின் கௌரவத்தின் அடையாளமாய்க் கொண்டு கடைக்கு முன்னே நிறுத்துகிறார். அந்தக் காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் அதிலும் அதிக விலையுள்ள ராலே வண்டி வைத்திருப்பவர்கள் பெருமைக்குரியவர்கள்…வசதியானவர்கள்….அது அவரின் அடையாளமாய்க் காட்டப்படுகிறது.. அவர் அவனைக் (அந்தக் கடைக்காரனை…அதாவது சிவகாமியின் கணவனை) கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. அதுதானே எடுத்துக் கொண்ட உரிமை. அவசரத்துக்கு செய்யும் பண உதவி, இந்த உரிமையைத் தந்து விடுகிறது.அவனை மீறி அவன் மனைவியோடு பழகும் உரிமையையும் தருகிறது. அடிக்கடி வந்தாலும், தற்செயலாய் வந்ததுபோல் வருவதும், நிதானமாய் வண்டியை நிறுத்துவதும், தெருக்கோடி வரை பார்வையை ஓட விடுவதும், அவசரமோ, பதட்டமோ இல்லாதது போலத் தன்னைக் காட்டிக் கொள்வதும், அவரின் கௌரவத்தின் அடையாளமாய் நாடகமாடினாலும், விசேஷ அர்த்தம் என்று அவனுக்கும், ஏன் அவருக்குமே ஏதுமில்லாவிடினும், கடையில் உட்கார்ந்திருக்கும் அந்த அவனுக்கு அவரது செய்கைகள் அருவருப்பூட்டுவதாகவே அமைகிறது.. எதிர்க்க முடியாத நிலையில், வாய் விட்டுச் சொல்ல முடியாத இயலாமையில், மனதுக்குள் நினைத்துக் கொள்ளத் தடையில்லையே…! இவனெல்லாம் ஒரு பெரிய மனுஷன்….! வெட்கங்கெட்ட ஆளு….
கடைக்கு வெளியே கிடக்கும் ஸ்டூலில், கழுத்திலிருந்து கைக்குட்டையை உருவி அலட்சியமாய்த் தூசி தட்டிவிட்டு உட்கார்ந்த பிறகும் அவனைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாதது….தவறேயாயினும் அதையும் கௌரவமுள்ளவனாய் நின்றுதான் செய்ய முடியும் என்கிற அவரது மிதப்பான போக்கு….இத்தனையும் சேர்ந்து அந்த இடத்திலான சகஜத் தன்மையைப் போக்கி விடுவதானது….அவர்களுக்குள்ளே நிகழும் உள்ளார்ந்த நாடகமாகப் பரிணமிக்கிறது. அங்கு வருவதும், அப்படி சுதந்திரமாய்த் தன் இடத்தைப் பிடித்துக் கொண்டு இருப்பதுவும் தன் உரிமை என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது.
தடுக்க முடியாத நிலையில் அவரின் அவ்வப்போதைய உதவியை வேண்டி நிற்கும் அவன், அதற்காக இந்த அளவிலான உரிமையை ஒருவர் தானே எடுத்துக் கொள்வது எப்படிச் சரி என்று தட்டிக் கேட்க முடியாதவனாய் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் அவன், அவரின் ஒவ்வொரு செய்கைகளையும் கண்டு கண்டு வெறுக்கிறான். விட்டு உதற முடியாமல் தவிக்கிறான். உதவி என்ற ஒன்று தேவைப்படுகிறதே…!
எட்டு முழு வேட்டியின் ஒரு தட்டை மட்டும் மடித்துக் கட்டிக் கொண்டிருப்போரைப் பார்த்தால் முன்பெல்லாம் பிடிக்கும்தான் அவனுக்கு, ஆனால் அவர் அவ்வாறு கட்டிக் கொண்டு அநாயாசமய் நிற்பது பார்க்கப் பிடிக்காமல் போகிறது. அது போக்கிரிப் பயல்களின் செயலாய்த் தோன்றுகிறது. மனதுக்குள் வெறுப்பை ஏற்படுத்த, அதை உணர்ந்து தன்னை மீறிய சிந்தனையில் “போக்கிரி” என்று சொல்லி விடுகிறான். காதில் விழுந்து விடுகிறது அவருக்கு. இரண்டு குழந்தைகளோடு ஒரு குடும்பம் என்று உள்ள அவர், கொடுக்கல் வாங்கல் வசதி படைத்த அவர், ஒரு நாணயச் சங்கத்தின் தலைவராக இருந்து அதன் மூலம் தன் கௌரவத்தை உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கும் அவர், கழுத்தில் சட்டைக் காலர் அழுக்காகி விடக் கூடாது என்று மட்டுமே கைக்குட்டை செருகி வைத்திருப்பது என்பதான அடையாளங்களை வைத்து அவரை அப்படி அழைத்து விட முடியுமாயின் அவர் அப்படித்தான் என்று ஒரு நீண்ட சிந்தனைச் சரத்தில் அவன் மூழ்கியிருக்கும்போது “போக்கிரிதான்” என்று தன்னை மீறி உளறிவிடுகிறான். தீர்மானமாய் விழுகிறது அந்த வார்த்தை. சந்தேகத்தோடும் புதிரோடும் அவர் அவனையே உற்றுப் பார்ப்பதும்….அவரை சற்றே அதிர வைக்கும் அற்புதமான இடங்கள். கௌரவத்தைப் பாதுகாக்கும் இவர், அந்த வார்த்தையை அவன் வாயால் கேட்டால், கேட்க நேர்ந்தால் என்னாவது? என்னது… என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அதற்குமேல் போனால் அவருக்குத்தானே அசிங்கம்…என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
இது வெளி நடவடிக்கைகள். ஆனால் வந்த காரியம் அதுவல்லவே. அவளையல்லவா பார்க்க வேண்டி அப்படி வந்து காத்திருக்கிறார்! இந்தச் சத்தத்திற்கு அவள் இந்நேரம் வெளிப்பட்டிருக்க வேண்டும்….அப்படி அவள் வந்து நிற்பதுதானே அவருக்குக் கௌரவம். வந்து அவரை வரவேற்றால்தானே கௌரவமாய் உள்ளே நுழைய முடியும்? தடம் மாறாமல் நிலைத்து நிற்கும் கௌரவ நிலை அதுதானே….! ஆட்டுவிக்கும் சபலம்…தன் தடத்தை உணர்ந்து தடுமாறுகிறதுதான்…நேரம் வீணாகிறதே…!
தன்னியல்பாக வந்ததுபோல் “இப்பத்தான் வந்தீகளா…” என்றவள்…தான் ரொம்பவும் இயல்பாக இருப்பதுபோல் காண்பித்துக் கொள்ள கடையிலிருந்த ஒன்றிரண்டு பொருட்களைச் சரி செய்து வைப்பதுபோல் இடம் மாற்றி வைத்து பாவனை செய்கிறாள். அவளால் அவரை அழைக்காமல் இருக்க முடியாது. அவனும் அதற்கு மறுப்பு சொல்ல ஏலாது. ஏதோவொரு வகையிலான தேவையும் இருக்கிறது…தவிர்க்க முடியாமலும் நிற்கிறது. இது அவளின் வழக்கமான வெளிப்பாடு. அன்று ரங்கராஜூ வந்து காத்திருப்பதில் குட்டிகூரா பவுடர் மணம் அவரை வரவேற்று அவளின் வெளி வரவை அறிவிக்கிறது. தொடர்ந்து கொலுசுச் சத்தமும் கேட்கிறது. காதில் விழுகிறதுதான். ஆனால் அவரால் அந்த மகிழ்ச்சியைப் பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்திவிட முடியாது. அந்த நாசிச் சுகத்தைக் கண்மூடி வெளிப்படையாய் அனுபவித்து விட முடியாது, உடையவன் ஒருவன் முன்னே அத்தனை சாத்தியமல்ல. அது அத்தனை கௌரவமாயும் அமையாது. காட்டிக் கொள்ளாமல் யதார்த்தமாய் இருப்பதுதான், இருந்து தொலைப்பதுதான் ரங்கராஜூவின் அவஸ்தை. இத்தனை உதவிகள் செய்தும் வர போக என்று ஒரு சுதந்திரமில்லையே…! அவளின் அந்த வருகை மனதுக்குள் குதூகலம் என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாத தர்ம சங்கடம். அது வேறு இடம் என்பதில் அவருக்கிருக்கும் லஜ்ஜை, அதை மறைக்க அவரின் தவிர்க்க முடியாத கள்ளத்தனத்தை மீறிய கௌரவத்தின் திரை..அநியாயம்…இவனுக்கெல்லாம் இப்டி ஒரு அழகியா? கடவுள் ரொம்பவும் இரக்கமற்றவன். எங்கு கொண்டு எதை வைத்திருக்கிறான்?
அவள் கண்ணெதிரே வந்துவிட்ட பிறகு அவனோடு பேசுவது என்பது சாத்தியமில்லாமலும், ,அத்தனை அவசியமில்லாததும்தான் எனினும் அவனை வைத்துதான் அவள் என்கிற தவிர்க்க முடியாத உண்மையின் வெளிப்பாடாய், அவனையும் மதித்தது போலாகட்டும் என்று “மணி நாலு ஆவப் போவுது…இன்னும் வெயில் இறங்கலியே…” என்று அவர் கேட்க…“வந்து ரொம்ப நேரமாச்சுதா…?” என்று அவளும் அதே சமயம் வினவ….அவர் அவனிடம் கேட்ட கேள்விக்கு அங்கே பதில் இனித் தேவையில்லை என்று ஆகிப் போகிறது., …இப்பத்தான் வந்தேன்…என்று சிரிப்புடன் அவர் சொல்வதும்…அவள் பளிச்சென்று வந்து நிற்பதைப் பார்த்து…இப்பத்தான் குளிச்சீங்களா? என்று கேட்டுவிட்டு பவுடர் எல்லாம் ரொம்பப் பெலமா இருக்கே….? என்று அவர் வழிவதை எழுதுகிறார் வண்ணநிலவன். பலமா இருக்கே…இல்லை “பெலமா“….அந்த வார்த்தையைப் போடும் அழகைப் பாருங்கள்…. அதுவே நாக்கு வெளித் தெரியும் ஆசையின் அடையாளம். ஒரு அழகியிடம் தன் கௌரவத்தைப் பொருட்படுத்தாது வலியச் சென்று இளித்து நிற்பதான துர்லபம். சபலம் படுத்தும்பாடு
நீ என்று ஒருமையில்தான் அழைக்க அவருக்கு ஆசை என்றாலும் என்னவோ ஒரு கௌரவம் தடுக்கிறது. ஒரு சகஜ பாவத்தை, அந்நியோன்யத்தை, நெருக்கத்தை பின் எப்படித்தான் ஏற்படுத்திக் கொள்வது? இவ்வளவு தூரம் ஒருத்தன் வந்து உட்கார்ந்திருக்கானே…ஒரு வாய் காப்பித் தண்ணி கொடுப்போம்னு தோணுதா உங்களுக்கு? என்று கேட்கிறார். அப்படிக் கேட்பதன் மூலம் தன் சகஜபாவத்தையும், நெருக்கத்தையும் உணர்த்தும் கட்டம் அது. தன்னை அந்த வீட்டுக்கு ரொம்பவும் பழகியவனாய்க் காட்டிக் கொள்வதன் மூலம் மறை முகமாய் அந்த ஆசையை வெளிப்படுத்திக் கொள்வது.
அவரின் செல்லப் பேச்சுக்கள் அவளுக்கு அலுத்துவிட்டனதான். என்றாலும் என்ன அப்படி யாரோ எவரோ மாதிரிப் பேசுறீங்க…உள்ளே வாங்களேன்…” என்று கண்களை ஒரு வெட்டு வெட்டி அழைக்கிறாள். அதுவே போதும் அவர் கிறங்கிப் போயிருப்பார் என்று தோன்றுகிறது அவளுக்கு. மையல் கொண்ட ஒருவன் எதில் விழுவான் என்று யார் கண்டது? அது அவருக்கே தெரியாதே. அவர் வயதுக்கு சொல்லவும் வேண்டுமா?
ரங்கராஜூவை வீட்டுக்குள் வரச்சொல்லிவிட்டு உள்ளே போகும் அவள் கடையிலிருக்கும் அவன் மூக்கைச் செல்லமாக நிமிண்டிவிட்டுப் போகிறாள். வலிய அவன்பால் ஒரு நெருக்கத்தை அப்படி ஏன் அவள் காட்டிக் கொள்ள வேண்டும்? அவளின் அந்தச் செயலுக்கு, அவன் கொடுத்த சுதந்திரத்தின் அடையாளமா அது? அந்தச் செயல் அவனுக்கு சற்று சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவர் முன்னால் தனக்கும், தன் மனைவிக்கும் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படையாய் எப்படிச் சுட்டி விட்டாள் என்று அவன் உணர்ந்து மகிழ்ந்தாலும், வீட்டிற்குள் அவரிடமும் அவள் இப்படித்தான் நடந்து கொள்வாளோ என்று அவனுக்குத் தோன்றுகிறது. பாவம் அவன் நிலை அப்படி.நோய் நாடி…நோய் முதல் நாடி…என்பது போல்…பணம் நாடி…பணத்தால் உந்திய மனம் நாடி….. ஆனால் அவர் ஒருபோதும் சிவகாமியிடம் ரசாபாசமாக நடந்து கொள்பவரல்ல என்று நம்புகிறான் அவன். அது அவருக்கு அவள் கொடுத்த சமிக்ஞை. நிமிண்டும்போதான பார்வை இவர் மீது இருந்திருக்கிறதே…! பெண்கள் வசீகரம் பண்ண என்னவெல்லாம் முறையைக் கையாள்வார்கள் என்பதற்கு ஒரு பொருத்தமான இடமாக இது அமைவதும், ரங்கராஜூ அவளின் அந்தச் செய்கையில் தன்னை மறந்து ஏக்கப் பெருமூச்சு விடுவதும்….நம்மைத் தவிக்க வைக்கிறது. போயேன்யா உள்ளே…அதான் கூப்பிட்டாச்சுல்ல….!
சிவகாமி அத்தனை அழகாய் இல்லாவிட்டால் ரங்கராஜூ அவளைப் பார்க்க இப்படி அடிக்கடி வரமாட்டார்தான். அவரை மீறிய ஒரு சபலம் அப்படி ஆட்டிப் படைக்கிறது. அவர் லேவாதேவி செய்யும் பிற இடங்களில் இம்மாதிரி அவர் நடந்து கொள்வதில்லை. சிரித்துச் சிரித்துப் பேசும் சிவகாமியை அவரால் தவிர்க்க முடியவில்லை. நாலு முறை முகத்தை முறித்துக் கொண்டால் இப்படி அவர் நாய்போல் வருவாரா? வாலை ஆட்டிக் கொண்டு அலைவாரா? நாற்பது வயதிலும் அவளின் அழகும், வனப்பும் அவரைக் கிறங்கடிக்கிறது.
கடையைச் சுற்றிக் கொண்டு வீட்டுக்குள் செல்கிறார். உள்ளே போய் காபியை ஒரு கை பார்த்திட்டு வாரேன் என்று சிரிக்கிறார். உள்ளே போவதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? வெறுமே எழுந்து திறந்த வீட்டுக்குள் ஏதோ போல் நுழைந்து விட முடியாதே? அவனுக்கு அவர் இளித்தது போலிருக்கிறது. இப்டியே போக வேண்டிதானே என்று கடைவழியாக உள்ளே நுழையச் சொல்லியிருக்கிறான் அவன். அது அவரது வருகை எரிச்சல் தராத காலம். அவரால் கிடைத்த ஆரம்ப கால உதவிகள் மகிழ்ச்சி தந்த காலம். சீதேவியை, கல்லாப் பெட்டியைத் தாண்டக் கூடாது….என்று சொல்லி விடுகிறார். தனது செய்கைகளில் அவ்வப்போது ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்துக் கொண்டேயிருப்பது, அதை மற்றவர்களுக்கு, குறிப்பாக அவர்களுக்குப் பரைசாற்றிக் கொண்டேயிருப்பது அவசியமாகிறது அவருக்கு. அவரின் தவிர்க்க முடியாத அடையாளமாய், அந்த சபலப் புத்திக்குப் போடும் பலமான திரையாக அமைந்து விடுகிறது. ஒன்றைப் பலமாக ஸ்தாபித்துக் கொண்டால்தான் இன்னொன்றை அறியாமல் செய்ய முடியும்…என்பது அவரின் கணிப்பாக இருக்கிறது. எனக்கான கௌரவத்தை அத்தனை எளிதில் யாரும் நெருங்கி விட முடியாது, கூடாது என்பதற்கு அவரின் எச்சரிக்கைகளே பொருத்தமான சமிக்ஞைகளாக நிற்கிறது.
உள்ளே இடப் பக்க அறையில் ஃபேன் ஓடும் சத்தம். சரோஜா…படிக்கிறியாம்மா….என்று கேட்கிறார். யார் உள்ளே என்று அதன் மூலம் உறுதிப் படுத்திக் கொள்கிறார். ஒருவரா, பலரா என்ற கேள்வியும் அங்கே மறைந்து நிற்கிறது. சற்றுப் பொறுத்து பதில் வருகிறது. யாரு மாமாவா…? நான் ஜாக்கெட்டுக்கு துணி வெட்டிக்கிட்டிருக்கேன்..என்று. அப்படியாம்மா…நடக்கட்டும்…நடக்கட்டும் என்ற அவரது கண்கள் சிவகாமியைத் தேடுகிறது. பதில் சொல்வதில் இருக்கும் பெரிய மனுஷத் தன்மை செய்யும் செயலில் ஒளிந்து கொள்கிறது. ஒப்புக்குக் கேட்ட கேள்விதான் அது. அவரின் தேவை சிவகாமி மட்டும்தான். நடு வீட்டுக்குள் வந்து அமர்ந்து விட்டதனால் ஏற்பட்ட பாதுகாப்பில், சிவகாமி என்று ஆசையாய் அழைக்க மனம் விழைகிறது. அடுப்படியில் இருக்கும் சிவகாமிக்கு அவர் உள்ளே வந்திருப்பது தெரிகிறதாயினும் சற்றுத் தாமதித்தே வெளிப்படுகிறாள். மகள் பக்கத்து அறையில் இருப்பதிலே, அவளின் அந்தத் தாமதம் அர்த்தபூர்வமாகிறது. அதே சமயம் அவளுக்கும் ஒரு கௌரவம் இருக்கிறதுதானே? அத்தனை சுலபமாய் விலையில்லாமல் போய் விட முடியுமா?
அங்கே சற்று நேரம் அமைதி உலாவுகிறது. என்ன பேசாம இருக்கீங்க? என்று முகத்துக்கு நெருக்கமாக வந்து கேட்கிறாள் அவள். அந்த அந்நியோன்யம் தந்த மதுரம் அவரைக் கிறங்கடிக்கிறது. குனிந்தவாறே இருக்கும் அவரின் பார்வை அவளின் அர்த்த சந்திர வடிவில் சதைக்குள் பொருந்தி இருக்கும் அவள் பாத விரல் நகங்களையே நோக்குகிறது.
வேற ஒண்ணுமில்லே…உங்க வீட்லயும் சமைஞ்ச பொண்ணு இருக்குது…என் வீட்லயும் கல்யாணத்துக்கு ஒண்ணு நிக்குது…நான் அடிக்கடி இங்க வந்து போறதுனால ரெண்டு வீடுகளுக்கும் அகௌரவம் வந்திருமோன்னு…..என்று இழுக்கிறார். பதிலுக்கு அவள் தன் சதைப்பற்றான கைகளால் முடிகள் நிறைந்த அவர் கைகளைப் பற்றிக் கொள்கிறாள். அந்த நெருக்கம் தந்த மதுரத்தில் தன்னை இழக்கிறார் அவர்.
ஆனாலும், தன்னைப் புனிதனாய்க் காட்டிக் கொள்வதிலும், கௌரவத்தை நாட்டிக் கொள்வதிலும், அப்போதும் அவரது கவனம்….சரியான கள்ளன்யா….என்றுதான் நினைக்க வைக்கிறது.
ஏது சாமியாராப் போறாப்பலே இருக்கு..? என்று அவள் கேட்க…ஏதோ தோணிச்சு…அதே நேரம் உங்களைப் பார்க்காமலும் இருக்க முடில…என்று பரிதாபமாய் ஏக்கத்துடன் கூறுகிறார்….உங்களுக்கே உங்க மேலே நம்பிக்கை இல்ல போலிருக்கு…என்று ஒரு போடு போடுகிறாள் அவள். நா ஏதாச்சும் தப்பா சொல்லிட்டனா? என்க…இதிலே தப்பு எங்கிருந்து வந்தது…என்னானாலும் நாம அன்னிய ஆட்கள்தானே…என்று சொல்லிவிடுகிறாள். இருவருமே பயந்ததுபோல் பேசிக் கொள்ளும் இக்கணமே இக்கதைக்கான முடிவான தருணமாக அமைகிறது. சற்று நேரத்தில்….
பூனை போல் கிளம்பி வெளியே வந்து விடுகிறார் ரங்கராஜூ. வெறுமே பார்த்துப் பேசுறதே தப்பாயிடுமோன்னு…என்று நினைக்க…அதுவும் தங்கள் செயலுக்குப் போட்டுக் கொள்ளும் திரையாக நிற்க…ஏதாச்சும் தப்பு நடந்திடுச்சின்னா….? என்று தொடர்ந்து நினைக்க வைக்க….
என்ன எந்திரிச்சு வந்திட்டீங்க…? என்று அவள் கேட்கிறாள். உள்ளே ஒரே புழுக்கமா இருந்திச்சு…அதான் என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்கிறார் அவர். அவன் ஒன்றும் புரியாமல் அவள் முகத்தைப் பார்க்க, கண்கள் கலங்கியிருக்கிறது அவளுக்கு. ஏதோ கோபமாப் போறார் போல்ருக்கே? என்ற அவன் கேட்க…அதுக்கு நா என்ன பண்ண முடியும்? இனி வரமாட்டார்…என்றுவிட்டு விருட்டென்று உள்ளே போய் விடுகிறாள். இனியும் அங்கிருந்தால் அழுதுவிடுவோமோ என்று தோன்றிவிடுகிறது அவளுக்கு.
தான் காணாத ஒரு உலகத்தைக் கண்டடைந்ததை வாசகனுக்கு படைப்பாளி சொல்லும்போது, தனது தேர்ந்த வாசிப்பு அனுபவத்தினால், தீவிர ஆழமான மெனக்கெடலினால், வாசிப்பை ஒரு உழைப்பாய்க் கருதி தன்னை மேம்படுத்திக் கொண்ட வாசகனால் படைப்பாளி தனக்குத் தெரிவிக்க முனைந்த சொல்லப்படாத புதிய உலகத்தைப் உய்த்துணர முடியுமாயின் அது அந்தப் படைப்பிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கொள்ளலாம். வாசிப்பிற்கான கௌரவம் என்று அடையாளப்படுத்தலாம். அந்தப் புதிய உலகத்தை சிருஷ்டித்திருக்கிறார் வண்ணநிலவன். பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடுகளில் ஒன்று என்கிறார் எழுத்தாளர் சமயவேல். இதைக் கதைப் பரப்பில் சாதித்த எழுத்தாளர்கள் சிலரே.
கதாபாத்திரங்களின் விவரணைகள், எழுத்தாளன் சுவைபடக் கோர்த்துக் கோர்த்துச் சொல்லும் சம்பவங்கள், அவற்றின் நுட்பங்கள் அதன் மூலமாக வாசகன் படைப்பினை உணர்ந்து உள்வாங்கும் பயிற்சி….சொல்லப்பட்டிருப்பவைகளை வைத்து சொல்லப்படாதவைகளை ஆய்ந்து உணரும் தன்மை….இவையெல்லாம் ஒரு நவீனத் தமிழ் இலக்கிய வாசகனின் தீவிர லட்சணமாக அமைகிறது. கலை கலைக்காகவே என்கிற கோட்பாட்டின் கீழ் அடங்குகிறது. படைப்பினைப் பொறுத்து அந்த இலக்கணம் பூரணத்துவம் பெறுகிறது.
அப்படியான பல கதைகள் வண்ணநிலவனின் இந்த முழுத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. ஒரு சோறு பதம் போதும் என்று மிகச் சிறப்பான சிகரங்களைத் தொட்ட சிறுகதை ஒன்றினைத் தேர்வு செய்து இங்கே விவரித்திருப்பதே இத்தொகுதிக்கு நாம் அளிக்கும் கௌரவம் மிகுந்த மதிப்பீடாக அமையும் என்பது திண்ணம்.
-------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக