04 ஜனவரி 2021

அசோகமித்திரனின் “விமோசனம்” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்             

    



விமோசனம்....!  யாருக்கு விமோசனம்? அவளுக்கா...அவனுக்கா? அவளுக்கு அவனிடமிருந்தா அல்லது அவனுக்கு அவளிடமிருந்தா? அவனிடமிருந்தா அல்லது இந்த வாழ்க்கையிலிருந்தா? எந்த விமோசனமும் அவனுக்குத் தேவையில்லைதான். அந்தச் சொல்லையே, அந்த எண்ணத்தையே மனதில் ஏற்படுத்தியவன் அவன்தான். அவனிடமிருந்து அல்லது அவனுடன் கூடிய அந்த வாழ்க்கையிலிருந்து அல்லது அவனுடன் இணைந்த அந்த இடர்பாடுகளிலிருந்து -  இப்படிப் பலவகையிலும் நினைக்கும் வண்ணமாக அவள் தேடுகிறாளே...அதுவே அவளுக்கான விமோசனம்...!

     எளிய வாழ்க்கைதான்....கஷ்டம் நிறைந்த, பற்றாக்குறைமிக்க வாழ்க்கைதான். ஆனாலும் அதற்குள் சந்தோஷம் என்பது பரஸ்பரம் நாம் ஏற்படுத்திக் கொள்வதுதானே? சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ உண்டுபண்ணுவது நம் கையில்தானே இருக்கிறது? நம்மைச் சுற்றித்தானே இந்த உலகம்?  வீட்டிற்குள் இருக்கும் இரண்டு உயிர்களுக்குள்ளேயே, அவைகளுக்கு நடுவேயே அன்பும், பிரியமும், கருணையும், நேசமும் விட்டுக் கொடுத்தலும், பகிர்தலும் நிகழவில்லையானால் பிறகு வெளியே அதை எங்கு போய்த் தேடுவது? யாரிடம் போய்ச் சொல்லி வரவழைப்பது? எங்கு போய்ப் புலம்பி அதை மீட்டெடுப்பது?

     எல்லாமும் கிடக்கட்டும். எத்தனை காலம்தான் இந்தக் கொடுமைகளைப் பொறுத்திருப்பது? எதற்கும் ஒரு அளவில்லையா? விரும்புவதற்கும், வெறுப்பதற்கும், ஒதுங்குவதற்கும், ஒதுக்குவதற்கும் ஒரு காரண காரியம் வேண்டாமா?

     எதுவொன்றும் தனக்கான வலுவான காரணம் எதுவுமின்றி வீறிட்டெழுமானால் அது அங்கே தன் மதிப்பு இழந்து போகும்தானே?

     அவர்கள் வீடு போய்ச் சேர்ந்த நேரத்தில் தெரு விளக்குகள் மட்டும் தூங்காமல் இருக்க, வீட்டுக் கதவைத் திறக்க இடுப்பில் சாவியைத் தேடுகிறாள் சரஸ்வதி. குழந்தை இடுப்பில் அவள் ரவிக்கையை இறுகப்பற்றியபடியே தூங்கிக் கொண்டிருந்க, செருகியிருந்த சாவி எங்கே?

     வாயில் குதப்பியிருந்த புகையிலைக் காவியைத் துப்பிவிட்டு அவன் கேட்கிறான் சாவி எங்கேடி? இன்னும் சற்று நேரத்தில் சாவி கிடைக்கவில்லையானால் நிச்சயம் அவன் இரைய ஆரம்பித்து விடுவான்.

     இந்த ரெண்டு வரியில் அவனை முழுமையாய் அறிமுகப்படுத்தி விடுகிறார் அசோகமித்திரன். அவளின் பரிதாப நிலையைச் சட்டென்று புரிந்து கொள்கிறோம். கதாபாத்திரங்கள் தங்கள் இயல்புக்கும், சூழலுக்கும் ஏற்ப நடந்து கொள்ளும் தன்மை அ.மி. எழுத்தில் அநாயாசமாய் விரிகிறது. அவன் எப்பொழுதுமே அப்படித்தான். அவன் செய்கைகளுக்குக் காரணங்கள் இருக்கின்றனவா என்ன? தான் ஏன் அப்படி நடந்து கொள்கிறோம் என்று அவன் உணர்ந்தா செய்கிறான்? எதற்காக அவளை அப்படிக் கடிந்து கொண்டோம், எதற்காக அவளை இப்படி அடிக்கடித் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறோம்? எதற்காக அவளைக் காரணமில்லாமல் கரித்துக் கொட்டுகிறோம்? எதற்காக அவளை வார்த்தைகளால் வறுத்து எடுக்கிறோம்? ஏன் இப்படிப் புண்படுத்திக் கொண்டேயிருக்கிறோம்? எதுவும் அவன் உணர்ந்தானில்லை. அவன் செய்கையே அப்படி.அவன் நடத்தையே அப்படி. அவன் குணமே அதுதான்......என்று எதிராளி தனக்குத்தானே உணர்ந்து பொறுத்துக் கொள்ள வேண்டுமா? உணர்ந்து கொண்டு அவனோடு இணங்கி அல்லது அடிபணிந்து அல்லது அழுது, கதறி அல்லது அமைதி காத்து-அப்படித்தான் அந்தந்த நாட்களைக் கடத்தியாக வேண்டுமா?

     எந்த இடத்திலும் அவன் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டானா? தன்னை உணர்ந்து தணித்துக் கொள்ள மாட்டானா? தன் தவறுகளை உணர்ந்து அமைதி கொள்ள மாட்டானா? தனது அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு வெட்கி, அடங்க மாட்டானா?

     கைவிளக்கு ஒரு முறை சுடர் விட்டெரிந்து தணிகிறது. சரஸ்வதி தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்க்கிறாள்.வாய் திறந்தபடி இருக்கிறது. குப்புறப் படுத்து, கை கால்களை விரித்துக் கொண்டு எங்கோ பறப்பவனைப் போல திரேகம் தெரியாமல் தூங்குகிறான். ஜமுக்காளமும், போர்வையும் எங்கோ ஓர் மூலையில்....அவன் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது அவளுக்கு.

     இப்படித் தன் நிலை தெரியாமல் கிடப்பவன் எப்படி என்னை விரட்டுகிறான். கையில் குழந்தையோடு நடக்கவும் முடியாமல் ஓடவும் வழியின்றி பஸ்ஸைப் பிடிக்க விரையும் என்னை, பொறுப்பின்றி தனியே ஓடிப்போய் முதலில் தொத்தி ஏறிக்கொண்டு பிறகு நான் வரவில்லையே என்று கத்துகிறானே...! எப்படி பத்துப் பதினைந்து பேர் பார்க்க இவனால் இப்படி ஏச முடிகிறது? காது கூசும்படி வைகிறானே? வேறு மனிதர்கள் இல்லையெனில் அடிக்கக் கூடச் செய்திருப்பானோ?

     இவன் படுத்திய அவசரத்தில் பூஜைக்குப் போன இடத்தில் குழந்தைக்கான பால் புட்டியை மறந்து வந்தாயிற்று? இப்படி ஒவ்வொன்றுக்கும் கோபப்பட்டு, கத்தி, கூப்பாடு போட்டு, பொறுமையின்றி இரைந்து, திட்டித் தீர்த்து...பொழுதுக்கும் ரகளை பண்ணினான் என்றால் இவனோடு எப்படித்தான் வாழ்ந்து கழிப்பது? நரகம் என்று ஒன்று இதற்கு மேலும் உண்டா?

     ஏய் என்ன அங்கே சத்தம்?                                                       குழந்தை பால் குடிக்குது....                                                              அந்த அலறலை நிறுத்து.....மூதேவிக்கு குழந்தைக்குப் பால் குடுக்கிறதுக்குக் கூடத் துப்புக் கிடையாது. ஒரு நிமிஷம் அழாமல் வைத்துக் கொள்ளத் தெரியாது...சனியன்....

     இதோ அரை டம்ளர்தான் இன்னும் மீதம். அதற்குள் குழந்தை வீறிட்டு அலறுகிறது. புரை ஏறிவிட்டது.  அதோ அவன் எழுகிறான். வரும் வேகத்தைப் பார்த்தால்...பயத்தில் .தலையைக் கவி்ழ்த்துக் கொள்கிறாள் அவள். முதல் அடி தலையில்....என்றாலும் காது விண்ணென்று தெறிக்கிறது. அடுத்த அடி தவடையில்...அப்புறம் ஒன்று....பிறகு ஒன்று. அதற்கடுத்து இன்னொன்று...மேலும் ஒன்று....அடி தொடர்ந்து மாறி மாறி விழுந்து கொண்டேயிருக்கிறது. மனுஷனா மிருகமா? தலை முடியைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து, கதவில் ஒரு முட்டு.....அப்ப்ப்பா.ஆஆஆஆஆ.....

     திடீரென்று சரஸ்வதி எழுந்து நிற்கிறாள். “உம்..!..”   என்கிறாள் அவனைப் பார்த்து. அவன்...அவள் கணவன் திடுக்கிட்டுப் பயந்து பின் வாங்குகிறான்.... கண்களை அகல விரித்து அவனைப் பார்த்து “உம்....ஜாக்கிரதை...” என்கிறாள். ஸ்தம்பித்து நிற்கிறான். சில விநாடிகள் அப்படியே...யாருக்கு என்ன என்று தெரிய நிலை....குழந்தையும் அழுகையை நிறுத்தியிருக்கிறது. அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்கும் இடத்திலேயே காற்றடித்தால் கூட விழுந்து விடுவான் போலிருக்கிறது. அவ்வளவு பலவீனப்பட்டு...!!

     அவ்வளதுதான் அவன் வெளியேறி விடுகிறான்.

     “அந்த “உம்...“  - ஒரு வார்த்தை...அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது...ஆனால் அந்த அதிர்ச்சி அவனுக்குத் தேவையாயிருக்கிறது. சாது மிரண்டால்? சாது என்று நினைத்து அவள் நேர்மையை, அவள் அடக்கத்தை, அவள் ஒழுக்கத்தை, அவள் குண விசேஷத்தை மதிக்காமல், புரியாமல் எடைபோட்டு அறியாத கூகையாகவல்லவா அவன் இருந்திருக்கிறான். அந்த குணசீலியை அறியாத, புரியாத அவனும் ஒரு கணவனா? அன்பு செய்யத் தெரியாதவன்....கருணை இல்லாதவன்..., பொய்யான புரிதல் கொண்டவன்...-இவற்றையெல்லாம் அசோகமித்திரன் சொல்லவில்லை. தன் எளிய, குறைந்த எழுத்தின் வழி நமக்கு உணர்த்துகிறார்.

     அவளுக்கு விழுந்த அடியா பெரிசு? அந்த “உம்”தான் பெரிசு. “ஊம்...ஜாக்கிரதை...” அந்த ரெண்டு வார்த்தை ஆயுளுக்கும் மறக்குமா அவனுக்கு?

     அப்படியும் அவள் அவன் மீது கருணை கொள்ளத்தான் செய்கிறாள். இரக்கம் கொள்கிறாள். தான் செய்தது தவறோ என்று நினைத்து தனக்குத்தானே குமுறுகிறாள். கொஞ்ச நாளாய் எதுவும் அவன் பேசவதில்லை. எதுவும் அவன் கேட்பதில்லை. அவனுக்கும் அவளுக்கும் இடையிலான ஓரிரு வார்த்தைப் பரிமாற்றங்களுக்குக் கூட இடமில்லை. என்ன கொடுமையான வாழ்க்கை இது? எதற்கு இந்தப் பரிதாப நிலை? பெருமூச்செறிகிறாள் சரஸ்வதி. இதற்கெல்லாம் விடிவுதான் எப்போது? இப்படியேதான் தன் வாழ்க்கை கழிய வேண்டுமா? இவனோடு காலத்துக்கும் இப்படித்தான் கழித்தாக வேண்டுமா?

     வீட்டுக்கு வராமலிக்கிறான். வேளைக்கு சாப்பிட மறுக்கிறான். வந்தாலும் வாய் திறக்காமல் இருந்து, வெளியே புறப்பட்டு விடுகிறான். என்ன குற்றம் செய்தேன் நான்? நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமாய் இருக்கிறதா? என்று அவனுக்கு உணர்த்தியது தவறா? அவன் தன்னுணர்வை எழுப்பியது குற்றமா?

     ஓடிப்போய் அவன் காலில் விழுந்து கதறுகிறாள். ஏன் இப்படி என்னோடு பேசாமல் இருக்கிறீர்கள்? ஏன் சாப்பிட மறுக்கிறீர்கள்? ஏன் நெடிய அமைதி காத்து என்னை வதைக்கிறீர்கள்? எனக்கு எல்லாமே நீங்கள்தானே? உங்களைவிட்டால் எனக்கு யார்தான் இந்த உலகத்தில்? வேறு கதிதான் ஏது எனக்கு?

     எதுவும் அவனை அசைக்கவில்லை. எதுவும் அவன் மனதை இரங்க வைக்கவில்லை. அப்படியானால் அந்த அமைதிக்கு என்னதான் பொருள்? அவன் மனசாட்சி வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? அவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டானா? இதுநாள் வரையிலான தனது இருப்பிற்கு மனதிற்குள் வெட்கித் தலைகுனிகிறானா? அன்பும் ஆதரவுமான பிரியமானவனாய் இருக்கத் தவறி விட்டோமே என்று கூசுகிறானா? தன் தவறுகளை நினைத்து நினைத்து மனதுக்குள் புழுங்குகிறானா?வருந்துகிறானா?  எங்கு சென்று மன்னிப்புக் கேட்பது என்று தவிக்கிறானா?

     சரி...என்னை விடு...-சொல்லி விட்டு அவளைத் தன்னிடமிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே புறப்பட்டு விடுகிறான் அவன்.

     சரஸ்வதி அப்படியே நிற்கிறாள். என்ன அர்த்தமற்ற வாழ்க்கை இது? கணவனுக்கும் மனைவிக்கும் இணக்கமான புரிதல் இல்லையெனில் அந்த வாழ்க்கை எப்படி இனிக்கும்? யார் செய்த பாபம் இது? எப்பேர்ப்பட்ட பிளவு இது? இது எங்கு கொண்டு போய் நிறுத்தும்? எதுவும் புரியாமல் கலங்கி நிற்கிறாள் அந்தப் பேதை.

     எங்கேனும், யார் மூலமேனும் நிம்மதி கிடைக்காதா? அந்த மகானைத் தேடிப் போகிறாள். தள்ளியிருந்து தரிசிக்கிறாள். அவர் கண்களின் ஒளி...அதிலிருந்த கருணை....அவர் கைகள் காட்டும் ஆசி.....அந்த உதட்டின் மந்திரப் புன்னகை..,அவரைச் சுற்றியிருக்கும் அந்த ஒளி....!. - அவளைத் தேற்றுகிறது.

     அவள் வேகமாக நடந்து பஸ் ஸ்டாப்பை அடைகிறாள். மனதில் தோன்றிய ஏதோவொரு நிம்மதியில் பெருமூச்சு கிளர்கிறது அவளிடத்தில். இனியும் தாமதித்தல் கூடாது. வீடு போய்ச் சேர நேரம் ஆகிவிட்டது. அவன் வந்திருந்தால்...காத்திருப்பானே...மனம் வெறுமை சூழ்ந்த நிலையில் மீண்டும் அழுகை  பீறிடுகிறது அவளுக்கு.

     அவள் வீட்டை அடைந்த போது குழந்தை விழித்துக் கொள்ள...அவள் கணவன் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. அதற்குப் பின்

     அவன் என்றுமே வீடு திரும்பவில்லை.

     ---எல்லாவித குணநலன்கள் கொண்ட மனிதர்களின் சமநிலை....கஷ்டங்களும் துயரங்களும் வந்து சூழ்ந்து கொள்ளும் நிலையில் ஏற்படும் அவநம்பிக்கை, துயரம், குற்றவுணர்வு, மனவெறுமை அவற்றுக்கு நடுவே வீழ்ந்து படாமல்  வாழ்ந்து கழிக்கும் மனிதர்கள், வாழத் தூண்டுகிற அம்சங்கள்....என்று அசோகமித்திரனின் இந்த விமோசனச் சித்திரம் நம் நெஞ்சில் அழியா இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.

     பெரிய கதையொன்றின் சிறு சிறு பகுதிகள்தான் என் கதைகள் என்று கூறும் அவர் வாழ்வின் பக்கங்களை நமக்குத் தன் பல்வேறு படைப்புக்களின் மூலம் புரட்டிக் காட்டும்பொழுது ஏதோவொரு தருணத்தில் அது நம்மைப் பற்றியதான் கதையாக மாறிவிடும் நிஜம் வெகு யதார்த்தமாய் நிகழ்ந்து போகிறது. பூரணச் சந்திரனை தரிசித்த நிறைவு நமக்கு.

                     ------------------------------------------------------------------

    

    

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...