17 டிசம்பர் 2020

“மெச்சியுனை...” - தி.ஜானகிராமனைப்பற்றி அவர் மகள் - உமா சங்கரி -வாசிப்பனுபவம் - உஷாதீபன்

மெச்சியுனை...” - தி.ஜானகிராமனைப்பற்றி அவர் மகள் - உமா சங்கரி -வாசிப்பனுபவம் - உஷாதீபன் - வெளியீடு - க்ரியா பதிப்பகம், திருவான்மியூர், சென்னை-41


       தி.ஜா.வின் அருமை பெருமைகளை அவரது வாரிசுகள் விடுத்து வேறு யார் ஆத்மார்த்தமாகக் கூறிவிட முடியும்? அவர் மகள் உமா சங்கரி அவர்கள் இந்தப் புத்தகத்தில் தன் தந்தை பற்றிய நினைவுகளைப் பிரியமும், பாசமுமாய்ப் பகிர்ந்து கொள்கிறார். தி.ஜா. நூற்றாண்டில், அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்தப் புத்தகம் வெளி வந்திருப்பது மிகவும் பொருத்தமும் பெருமைக்குரியதுமாகும்.  

       அவர் இறந்த பிறகு தலைமுறை இடைவெளிகள் தாண்டி விட்டன. எப்படியிருப்பார், எந்த மாதிரி வாழ்ந்தார் என்பது பலருக்கும் தெரியாதிருக்கும். அதனால் கைவசம் இருக்கும் புகைப்படங்களை வைத்து ஒரு ஃபோட்டோ ஸ்டோரி செய்யலாம் என்று இதை உங்கள் முன் வைக்கிறேன் என்கிறார் திருமதி உமா சங்கரி.

       தி.ஜா.வின் பல்வேறு கோணங்களிலான அருமையான புகைப்படங்கள், அதில் வெளிப்படும் அவரது தீட்சண்யம், எளிமை, சிந்தனை, பொறுப்புணர்வு என்று பல அற்புதமான பாவனைகளில் படங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தி.ஜா.வின் பெற்றோர்கள், அவரின் அண்ணா ராமச்சந்திர சாஸ்திரிகள், அண்ணாவும் மன்னியும் (ராஜலட்சுமி) சேர்ந்து நிற்கும் புகைப்படம், தி.ஜா.வின் இரண்டாவது சகோதரி ருக்கு அத்தை அவர் மடியில் அமர்ந்திருக்கும் உமா சங்கரி, மூன்றாவது சகோதரி காமாட்சி அத்தை கணவருடன், தி.ஜா.வின் கடைசி சகோதரி குஞ்சு அத்தை அவர் பேரனுடன், மூத்த சகோதரி ராதை என்று சிலிர்ப்போடு கண்டு மகிழும் முக்கியமான புகைப்படங்களைக் கவனமாக இந்நூலில் சேகரித்துத் தந்திருக்கிறார் திருமதி உமாசங்கரி அவர்கள்.

       தி.ஜா.வுக்கு நான்கு சகோதரிகள், ஒரு அண்ணா. பெரியப்பாவான அவர் தி.ஜா.வை விட இருபது வயது பெரியவர்.. நான்கு சகோதரிகளில் ஒருவரைத் தவிர மற்ற மூவரும் மூத்தவர்கள்.

       அந்தக் காலத்தில் பிராமணக் குடும்பங்களில் அப்பாவை அண்ணா...அண்ணா (ஏன்னா...இப்டி வாங்கோளேன்... ஏன்னா....கூப்பிடுறது காதுல விழலியா என்பதாகக் கேட்டிருப்பீர்கள்-அந்த அன்னா இது)  என்று அம்மா அழைப்பதைப் பார்த்து வீட்டில் குழந்தைகள் முதற்கொண்டு அப்பாவை  அப்படியே கூப்பிட்டுப் பழகியிருப்பார்கள். அப்பாவின் இரண்டாவது சம்சாரத்தை அவரது குழந்தைகள் அம்மா...அம்மா என்று அழைக்காமல்...சித்தி...சித்தி...என்று அழைப்பதையும் கூடப் பார்த்திருக்கக் கூடும். குழந்தே.....குழந்தே...என்று அப்பாவை பாட்டி அழைப்பதைக் கேட்டிருப்பீர்கள். தி.ஜா.வும் அப்படித்தான் அழைக்கப்பட்டிருக்கிறார்.

       தி.ஜா. தினமும் பூஜை செய்துவி்ட்டுத்தான் சாப்பிடுவார். என்றும் திருவள்ளுவர் கோயில் என்றழைக்கப்படும் சிவன் கோயிலில் (எப்படி அந்தப் பெயர் வந்தது என்று தெரியவில்லை என்கிறார்) பூஜைக்கான மலர்களைப் பறித்து எடுத்துக் கொண்டு போவோம் என்று குறிப்பிடுகிறார். 1921 ஜூன் 28 தி.ஜா.வின் பிறந்த தேதி.ஊர் தேவங்குடி.

       இரண்டாவது சகோதரி ருக்மணி. ருக்கு அத்தை. பதினேழு வயதிலேயே கணவரை இழந்து, தலை மொட்டை போட்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு தன் ஒரே பெண் குழந்தையையும் இழக்கிறார். இவர் மேல் மிகுந்த அனுதாபம் உண்டு அப்பாவுக்கு என்றும் இன்னுமுள்ள இரண்டு சகோதரிகளில் ராதை அத்தைக்கும் கணவரை இழந்த போது தலை மொட்டை அடிக்கப்பட்டதென்றும், ராதை அத்தை சீக்காகக் கிடந்தபோது இனி பிழைக்க மாட்டார் என்று குஞ்சு அத்தையையும் கல்யாணம் செய்து கொடுக்க, கடைசியில் கணவர் இறந்தபோது கடைசி அத்தைக்கு மொட்டை அடிப்பதைத் தடுத்துவிட்டார் தி.ஜா. என்ற செய்தியைப் படிக்கும்போது, கடைசிக் காரியங்களின் போது அங்கே நின்ற திருலோக சீத்தாராமை மீறிக்கொண்டு பாய்ந்து தி.ஜா. அதைத் தடுத்தார் என்று பேராசிரியர் கல்யாணராமனின் சொற்பொழிவில் கேட்டதை இங்கே நினைவு கூற வேண்டியிருக்கிறது.

       சமூகவியல் துறையில் தமிழ்நாட்டு கிராம வாழ்க்கை ஆய்வுக்காக வெளி நாட்டிலிருந்து வந்திருந்த கத்லீன் காஃபுடன்  ஏற்பட்ட பழக்கமும், அவருடன் உமாசங்கரி அவர்களும், அவரது அம்மாவும்  எடுத்துக் கொண்ட புகைப்படமும் தி.ஜா.இசை பயின்ற உமையாள்புரம் சுவாமிநாதய்யர் படமும், பிறகு இசை தொடர்ந்த பத்தமடை  சுந்தரம் ஐயர் படமும் பார்க்கும்போது நம் மனதில் மதிப்பு மிகு எண்ணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. மதராசில் இருந்தபோது வாரத்தில் இரு நாட்கள் இசை கற்றுக் கொடுப்பவர் ஒரு வாரமாகக் காணவில்லையே என்று சைக்கிள் எடுத்துக் கொண்டு தேடிப் போகையில் அவர் சாவு ஊர்வலம் வரும் காட்சி கண்டு திடுக்கிடலும்,  அ்ந்த நிகழ்வுக்குப்பிறகு  இனி நான் பாடவே மாட்டேன் என்று தி.ஜா. இருந்ததும் நினைக்கையில் மனம் மிகுந்த துக்கமடைகிறது.

       அப்பாவின் எழுத்துக்களில் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அப்படியொரு மயக்கமுண்டு என்று சொல்லி அவரது “அவலும் உமியும்“ கதையைப் படித்து அழுததையும், தாகூரின் வீடு திரும்புதல் கதையை தி.ஜா.ரேடியோவில் பணியாற்றியபோது வாசித்ததைக் கேட்டு கதையில் ஆழ்ந்து மூழ்கி, பிழியப் பிழிய அழுததை நினைவு கூர்கிறார். பெ.கோ.சுந்தரராஜன், சிட்டி மாமாதான் அப்பாவை ரேடியோவுக்கு மாற வைத்தவர் என்றும் தெரிவிக்கிறார். மதராஸ், ஆல் இந்தியா ரேடியோவின் கல்வி ஒலி பரப்புப் பகுதியில் 15 வருடங்கள் பணியாற்றிவிட்டு, தில்லியில் 15 வருடங்கள் பணியாற்றியிருக்கிறார் தி.ஜா. குழந்தைகளுக்கான நூற்றுக்கணக்கான கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

       1960 ல் சேவா ஸ்டேஜ் குழுவினருடன் (எஸ்..வி. சகஸ்ரநாமம்) பம்பாய் நாடக விழாவிற்குப் போனது, நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியார், தேரும் ஊரும், டாக்டருக்கு மருந்து என்று 4 நாடகங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார் தி.ஜா. மதராசில் இருக்கும்போது ஜப்பானுக்கு ரேடியோவில் ஒரு பயிற்சிக்காகச் சென்றது, ஜப்பான் மிகவும் பிடித்த நகரம் என்று மிகுந்த ஆர்வத்தில் பயண அனுபவமாக “உதய சூரியன்“ என்கிற பயண நூல் எழுதியது, சிட்டி மாமா, கலாசாகரம் ராஜகோபால் இவர்களுடன் சேர்ந்து தலைக்காவிரி வரை பயணம் செய்து “நடந்தாய் வாழி காவேரி” எழுதியது, என்றும், குள்ளன் மற்றும் அன்னை நாவல்கள் மொழி பெயர்ப்பில் வெளியிட்டது என்று தகவல்கள் நீண்டு கொண்டே போகின்றன இந்நூலில்.

       ஒரு பிரபல எழுத்தாளர் தி.ஜா.வை “சாப்ட் போர்நாக்ராபி” என்று விமர்சித்தது தி.ஜா.வை மிகவும் வருத்தியதாகவும், செக்ஸ் என்பது மனிதனின் அடிப்படை விஷயம் , அதை நம் சமூகம் மூடி மறைத்து ஒடுக்கி விகாரப்படுத்துகிறது ஒழுங்காக இருப்பதுபோல் பாசாங்கு செய்கிறது என்கிற பார்வையில் தான் எழுதுவதைப் புரிந்து கொள்ளாமல் இப்படிச் சொல்கிறார்களே என்று வருந்தியதாகவும் தெரிவிக்கிறார் உமா சங்கரி. காமம் என்பது அன்பின் ஒரு அம்சம் என்று தி.ஜா. சொல்லியிருப்பதை நாம் உணருகையில் மெய் சிலிர்த்துப் போகிறது நமக்கு. பிரசார இலக்கியத்திலிருந்து விலகி நின்று கொண்டு, சமூகப் பிரச்னைகள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதை எழுதுவதையே தன் கடமையாகக் கொண்டு தேர்ந்த உரையாடல் உத்தி மூலம் யதார்த்த திசையில் பயணித்தார் தி.ஜா. என்று நிறுவுகிறார்.

       வீட்டில் எல்லோரோடும் உட்கார்ந்து கலகலவென்று பேசி மகிழ்வதையும், குறிப்பாகக் குழந்தைகளோடு குழந்தைகளாக அவர் விளையாடும் காட்சியைக் கண்டு ரசிக்க வேண்டும் என்றும் அவர் போன பின்பு வீட்டில் அந்த சிரிப்பே இல்லாமல் போனது என்றும் வருந்திச் சொல்கையில் நம் மனதையும் அந்தத் துக்கம் பிடித்துக் கொள்கிறது.

       வாசகர் வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியுடன், ஆர்.கே.நாராயணனுடன், தலைக்காவிரியில், வெங்கட் சாமிநாதனுடன், இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு கூட்டத்தில், கோமலுடன் ,பூர்ணம் விஸ்வநாதனுடன், ராஜாஜியுடன், லா.ச.ரா.வுடன், ஆ.மாதவனுடன், நீல.பத்மநாபனுடன், தீபம் நா.பா.வுடன் என்று அரிய புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கும் இப்புத்தகம், இலக்கிய வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம் என்று கூறலாம்.

       கெட்டி அட்டையில் தி.ஜா.வின் ஓவிய உருவத்துடன், வழவழப்பான தாளில் பளபளவென்று அழகுற அச்சிடப்பட்டு சிறந்த ஆவணமாக வெளியிடப்பட்டிருக்கும் இப்புத்தகத்தைக் கையில் ஏந்திப்  படிப்பதே நமக்கு ஒரு பெருமை. அவரது
நூற்றாண்டில் “மெச்சியுனை” வெளியிட்ட தி.ஜா.வின் மகள் திருமதி உமாசங்கரி மிகுந்த பாராட்டுக்குரியவர்.  

                            -------------------------------

                                        

 

 

கருத்துகள் இல்லை:

கடைநிலை  நாவல்  சென்னை-2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரையிலான புத்தகக் கண்காட்சி வெளியீடு   பின் அட்டைக் குறிப்பு -     கடைநிலை நாவல்...