“தடங்கள்“- நாவல் - எம்.ஏ.சுசீலா - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1.
நாவல் கலை என்பது மிகப் பெரிய கப்பல் கட்டுவது போன்றது...அது உங்களுக்குக் கை வருகிறது என்று ஜெயமோகன் ரப்பர் நாவல் எழுதி முடித்திருந்தபோது சுந்தர ராமசாமி கூறினார். இயற்கையுடன் மனிதனின் போர், இயற்கையுடன் ஒத்திசையும் மானுட வாழ்க்கை...என்பதாக ஞானி அவர்கள் விரித்துரைத்தார். நாவல் என்பது மக்களால் பெரிதும் விரும்பப்படும் இலக்கிய வடிவமாக இருந்து வருகிறது என்று சொல்லலாம். புனைகதையாக உருப்பெறுதல் உரை நடையாக எழுதப்படுதல்....இவையே இன்றைய நாவல்களின் இயல்புகளாயிருக்கின்றன.
நாவல் என்றால் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களோடு அறிமுகமாகி, அந்தக் கதாபாத்திரங்களின் குண விசேஷங்களின் வழி சிறு சிறு நிகழ்வுகளோடு நகர்ந்து அங்கங்கே கதையின் சம்பவங்களுக்கேற்ப வெவ்வேறு அறிமுகமும், முக்கியத் திருப்பங்களுமாக மாறி, ஆழமாகவும், அழுத்தமாகவும் விரிந்து ஒரு இடத்தில் தன் முடிவைத் தானே தேடிக் கொள்ளும் அர்த்தபூர்வமான ஆவணமாகத் திகழும் வகை என்று கொள்ளலாம். நாவலுக்கான படிமங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது ஒரு வகையிலான புரிதல். தேவைக் கேற்றாற்போல் ஒவ்வொன்றும் வேறு வேறு மாற்றங்களைக் கண்டுதான் வந்திருக்கின்றன. வடிவ ரீதியாகவும் மாறியிருக்கின்றன. வாசக மனத்தைக் கொள்ளை கொள்ளும் விதமாய் புதிய முயற்சிகளாய் பிரமிக்க வைத்திருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் தன் பார்வையிலேயே கதையைச் சொல்லிக் கொண்டு போவதாய் நாவல் விரிந்திருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரமும், அதைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளுமாயும் கதை வந்திருக்கிறது. மிக நீண்ட நெடுங்கதைகளாய்த் தோற்றமளித்து, நாவல் என்கின்ற பெயரினைத் தாங்கி, அரிய, புதிய சம்பவங்களாலும், சம்பாஷனைகளாலும் நிமிர்ந்து நின்ற படைப்புக்களும் உண்டு. வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு விதமான முயற்சிகள் இவ்வாறு நடந்தேறியிருக்கின்றன. பெரியவர் க.நா.சு. தன் நாவல்களில் இவற்றைப் பரீட்சை செய்து பார்த்திருக்கிறார் என்பதை அவரை விடாது படித்தவர்கள் உணர்வார்கள்.
பேராசிரியர் திருமதி எம்.ஏ.சுசீலா அவர்கள் “தடங்கள்” என்ற இந்த நாவலை புதிய முயற்சியாய், வடிவ ரீதியாய் மாற்றங்களைப் புகுத்தி, இரு பெண்களுக்கு இடையில் நிகழும் மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்களாய் விரித்து, உடன் பணியாற்றியவர்கள், மாணவிகள் மற்றும் அன்றாட வாழ்வின் உடன் பயணித்தவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை, நேர்ந்த அபாயங்களை, நிகழ்ந்த நல்லவைகளை, ஏமாற்றங்களை, துயரங்களை என்று பகிர்ந்து கொண்டு, மிகப் பரந்த மனதோடும், உதவும் கரங்களோடும், அவர்களோடு பயணித்த, அவர்களுக்கு உதவியாய் முனைப்போடு செயல்பட்ட வெவ்வேறு சம்பவங்களை நினைவு கூர்ந்து, சரம் சரமாய்க் கோர்த்து, அழகான, மணமுள்ள ஒரு கதம்ப மாலையாய் நம் முன்னே காட்சிப் படுத்தியிருக்கும் அழகு கடந்து வந்த பாதையில் பதிந்த தடங்களாய் நம் மனதில் அழியாது இ்ந்த நாவலை நிற்க வைக்கிறது.
நந்தாவுக்கு சிந்து எழுதும் கடிதமாய்த் துவங்கி, சித்ராவின் வாழ்க்கைப் பயணம் பற்றியதான பரிமாற்றங்களாய் விகசித்து, வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் துயரங்களைச் சந்திக்க நேர்கிறது, உடல் ரீதியாயும், மன ரீதியாயும், பொருளாதார ரீதியாயும், வாழ்க்கைப் பயணம் எத்தனை கரடு முரடான பாதைகளில் எதிர்பாரா இலக்குகளில் நம்மை இழுத்துக் கொண்டு போய் விடுகிறது என்பதைக் கண்ணுறும்போது, இம்மாதிரியான அரிய படைப்புக்களால், இலக்கியம் மனிதனைப் பக்குவப்படுத்தலில், சிறந்த விவேகியாய் மாற்றுதலி்ல் எத்தனை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நம்மால் ஆத்மார்த்தமாய் உணர முடிகிறது.
பிரம்புப் பின்னல் போட்ட ஒற்றை சோபாவில் உட்கார்ந்தபடி, கல்லூரியின் வெளிவாசல் வரை பந்திப்பாயை உதறி விரித்துப் போட்டது போல ஒரே சீராக நீண்டு கிடக்கும் பாதையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் என்று படைப்பாளி எழுதும்போது, தன்னோடு பயணித்த பெண்களின், மாணவிகளின் வாழ்க்கையையும் அதே அளவுக்கு நீ்ண்டு கூர்ந்து நோக்கியிருக்கிறார் என்பதை நாம் அறிகிறோம்.
சோலையம்மா தன் மகன் மீது வைத்திருந்த பாசம், அதற்கு நேர் மாறாய் அமைந்த அவளின் கணவன், அவனின் குடி மூர்க்கம், அதனால் ஏற்படும் சோலையம்மாவின் கொலை, இந்த அவலங்களை நந்தா சிந்துவுக்கு பதிலஞ்சலைாய் எடுத்துரைக்கும்போது நம் மனது உருகிப் போகிறது. எளிய மனிதர்களின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத அவலமும், போதிய பொருளாதாரத் தன்னிறைவு இல்லாத நிலையில் வாழ்க்கை தாறுமாறாய்க் கழன்று கொள்ளும் பயங்கரமும் நம் மனதை வேதனை கொள்ள வைக்கிறது.
குடும்பங்களில் ஏற்படும் இவ்வாறான வன்முறை, உறவு ரீதியான பாலியல் வன்முறைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் வன்மம், கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் இளம் பிராயக் கனவுகள், ஏக்கங்கள், அதனால் ஏற்படும் அத்து மீறல்கள், ஏமாற்றங்கள், இவை பலவற்றிலுமிருந்து மீண்டு எழுந்து, தனக்கான ஒரு தனிப் பயணத்தை ஏற்படுத்திக் கொள்ளும் திறமை, தன்னை உணர்ந்த நிலையில் தன்னைச் சார்ந்தவர்களின் மனப்போக்கினைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை, கல்லூரி, படிப்பு, காதல், திருமணம் என்று வெவ்வேறு நிலைகளில் ஏற்படும் சங்கடங்களை, பயத்தோடு எதிர்நோக்குதலும், அவற்றை வெற்றி கொள்ள முடியாமல், உதவியை நாடும் மனத்தோடும், தாண்டித் தப்பித்துச் செல்லும் சாமர்த்தியத்தோடும் மாணவிகளின் வாழ்க்கைப் பாதை எப்படியெல்லாம் திசை மாறி எங்கெங்கு அவர்களைக் கொண்டு நிறுத்தி விடுகிறது என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் இருவரின் கடிதப் பரிமாற்றங்களாய் ஆசிரியர் சொல்லிச் செல்லும்போது நமக்குக் கிடைக்கும் புதிய வாசிப்பு அனுபவத்தின் அருமையை, அதன் செழுமையை ஆழ்ந்து உணரமுடிகிறது.
வெவ்வேறு விதமான சிறுகதைகளை ஒன்று சேர்த்து அவை ஒரு நாவல் உருப் பெறும்பொழுது அங்கு ஒரு மிக நீண்ட வாழ்க்கைப் பயணம் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து போகிறது என்கிற உண்மைதான் அது. எந்த நாவலுமே சிறுகதைகளை உள்ளடக்காததாய் இருந்ததில்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். ஐநூறு, அறுநூறு பக்க நாவல்களிலே குறைந்தது ஏழெட்டு சிறுகதைகளாவது பொருத்தமாய்ச் செருகப்பட்டிருக்கும் திறமையை ஒரு தீவிர வாசகன் எளிமையாய் கண்டு பிடித்து விட முடியும். ஆனால் கதையின் போக்கில் அது எவ்வாறு பொருந்தி நிற்கிறது என்பதிலேயே அது நாவல் என்கிற வடிவத்திற்கு செழுமை சேர்த்திருக்கிறது என்பதை வலுவாய் உணர்த்தப்படும்பொழுது ஒரு நல்ல வாசகன் சமாதானமாகிறான்.
மாடசாமிக்கு ஆயுள் தண்டனை வந்துவிடுமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் சோலையம்மாவின் பிள்ளை முத்துவைப் பல வகையிலும் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது. பம்பாயில் இருக்கும் என் சிநேகிதியின் குடும்பத்திற்கு அவளை அனுப்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று நந்தா சிந்துவுக்கு எழுதும் அந்த அஞ்சலைப் படிக்கும்பொழுது, அவளின் கருணை மனம் நம்மை நெகிழச் செய்து விடுகிறது. நம் வாழ்க்கை மட்டும்தான் என்று இல்லாமல் நம்மை நம்பியோரின் வாழ்க்கையும், நம்மைச் சார்ந்தோரின் வாழ்க்கையும் என்று சிந்திக்கும், செயலபடும் பெண்களின் மனங்களைப் படம் பிடித்துக் காட்டும் நெறி, படைப்பாளியின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது.
கடைசிவரை மனைவியின் மீது, அவளின் அப்பழுக்கற்ற செயல்களின் மீது சந்தேகம் கொள்ளும் கணவன், அவளை நிம்மதியில்லாமல் அடிக்கும் வன்மம், அவளின் தாய்மையின் மீதே ஒரு கட்டத்தில் சந்தேகம் கொள்ளும் தன்மை..இப்படியான சம்பவங்கள் சித்ரா, சந்திரன் என்கிற கதாபாத்திரங்களின் வழி மிகுந்த மனச் சோர்வையும், வருத்தத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி, எப்பொழுது இந்தப் பெண் இதிலிருந்து முற்றிலுமாக விலகப் போகிறாள், விடுபடப் போகிறாள் என்கிற எதிர்பார்ப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.
பொதுச் சேவையில் மனமுவந்து ஈடுபடும் வாணி, வெளியில் சொல்ல முடியாத மன நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை, வயதிலும், படிப்பிலும், வாழ்க்கை அனுபவத்திலும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டபிறகும் தன் இடம் எது, தன் தேவை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியாதவளாய் நிற்கும் மாலா, தனபாலனை விட்டு முத்தரசி நிரந்தரமாய்ப் பிரிந்து வேறொரு அரசுக் கல்லூரியில் பணியாற்றச் செல்லும் தீர்வு, குடும்பங்களில் இன்றைக்கும் நிகழும் எத்தனையோ வன்முறைகளில் பெண்கள் பலியாகிறார்கள் என்பதும் அது மறைக்கப்பட்டு விடுகிறது என்பதும், ரமணியின் சாவை நாம் படித்துணருகையில் நம்மை வேதனை கொள்ளச் செய்கிறது.
நந்தா சிந்துவுக்கு செந்தாமரை பற்றி எழுதும் கடிதம், கல்லூரி நாட்களில் தான் எழுதிய கவிதைகளைப் பத்திரப்படுத்தி, தன்னிடமுள்ள கவித்துவம் வற்றி விடாமல் தொடர்ந்து காப்பாற்றி பெரிய கவிதாயினியாய் வளம் பெறும் தாழை என்கிற செந்தாமரை கல்லூரியில் நடக்கும் முத்தமிழ் விழாவில் பங்கு கொள்ளும் வெற்றி, தமிழ் கேட்டு வளர்ந்த மண்ணில் தானே அரங்கத்தில் அமரும் பெருமை மிகு நிகழ்வ என்று மறக்க முடியாத அனுபவமாய் விரிகிறது செந்தாமரையின் பயணம்.
பிறந்த வீட்டுக்குப் பணம் அனுப்பியே ஆக வேண்டும் என்று கணவன் மதனிடம் ஒற்றைக் காலில் நின்று வாதிடும் மனைவி ரமணி. இந்தக் கல்யாணம் நடந்ததிலே அவளுக்கு ஒப்புதலே இல்லை...கல்யாணமே பண்ணிக்காம அப்பா அம்மாவோட இருந்தே வாழ்க்கையைக் கழிச்சிடணும் என்றுதான் அவள் ஆசைப்பட்டா என்று ஜமீலா சொல்லும்போது இந்தப் பெண்களுக்கு அவரவர் வாழ்க்கையில் எப்படியெல்லாம் துன்பங்கள் வந்து விடுகிறது என்றும், காலம் காலமாய் பெண் என்கிற ஜென்மம் ஒடுக்கப்பட்டே வந்திருக்கும் கொடுமையை நினைத்து நம் மனம் வேதனை கொள்கிறது. குடும்பத்தில் கணவன்களால் ஏற்படும் தொடர்ந்த வன்முறைகளைப் பொறுக்க முடியாத மென்மையான மனது படைத்த பெண்கள் ஒன்று தற்கொலை செய்து கொள்கிறார்கள், அல்லது அந்தக் கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் அமைதி காத்து, அனுபவித்து, கொஞ்சம் கொஞ்சமாய்த் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். ரமணிக்கு அந்த முடிவுதான் ஏற்படுகிறது.
தன்னை சுதந்திரமாக நிறுத்திக்கொள்ளும் பெண், ஆணின் பொய் முகங்களைக் கிழித்தெறியத் துடிக்கும் தைரியமான மனம் படைத்த பெண்கள், எவனுக்கும் சிக்காமல் தன்னைப் பொறுப்பாய்ப் பாதுகாத்துக் கொள்ளும் தைரியசாலிகள், ஆசைகளே துன்பத்திற்குக் காரணம் என்று அறிந்துணர்ந்து, எளிய வாழ்க்கையை மேற்கொண்டு நிம்மதியை நாடும் ஜீவன்கள் என்று இப்படிப் பல்வேறு கதாபாத்திரங்களை நாவலினூடாகத் திறம்பட ஓடவிட்டு, தன் எழுத்துப் பயணத்தை மொழி பெயர்ப்பின் வழி என்று மட்டுமல்லாது புனைவின் வழியும் வெற்றி கொள்ள முடியும் என்பதை இந்தத் தடங்கள் நாவல் மூலம் நீக்கமற நிரூபித்திருக்கிறார் திருமதி எம்.ஏ.சுசீலா அவர்கள். இந்த நாவலுக்கான களமாய் மதுரை மாநகரம் அமைந்து, அதில் இந்தக் கதாபாத்திரங்கள பவனி வரும் அழகு, அந்த நகரை நன்கறிந்த வாசகர்கள் , சுவாரஸ்யமாய்ப் படித்து மகிழவும், அவர்களும் இணைந்து பயணிக்கவும் பேருதவியாய் விளங்குகிறது.
இவரது யாதுமாகி என்கிற முதல் நாவல் வெளிவந்து அது சமீபத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தி இவருக்குப் பெருமை சேர்ப்பது. ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” , “அசடன்” போன்ற அரிய மொழி பெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்த பெருமைகி்குரியவர். மொத்தம் ஏழு மொழி பெயர்ப்பு நூல்களில் “அசடன்” நாவலுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது பெற்றவர். மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக தமிழ்ப் பேராயத்தின் ஜி.யூ.போப் விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது ஆகிய மூன்று விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். பெண்ணியம் சார்ந்த ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். கதை நிகழும் கல்லூரியும், கதை மாந்தர்களாய் உலவும் ஆசிரியர்களும், மாணவிகளும் ஒரு புதிய அனுபவமாய், கல்லூரி நிகழ்வுகளை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை வெறும் பொழுது போக்கு அம்சங்களாய் அமையாமல், கருத்துள்ள வாழ்க்கைப் பயணத்தை நமக்கு போதிப்பதாய் மொத்த நாவலும் ஆழமான சம்பவக் கோர்வைகளாய் அழகுறக் கோர்க்கப்பட்டிருப்பது நமக்கு மிகுந்த திருப்தியளிக்கிறது.
இரு தோழிகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் கடிதங்களாய் (மின்னஞ்சல்) இந்த நாவல் புதிய உத்தியில் அமைந்திருப்பதும், நாவலின் கதாபாத்திரங்களின் வாழ்க்கை நிகழ்வுகள் பின்னோக்கு உத்தியில் செழுமையான உரையாடல்களோடு திறம்படக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும், இந்த நாவலுக்காக வெற்றியாக அமைகிறது என்பது திண்ணம்.
----------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக