29 நவம்பர் 2020

“நலமறிதல்” - அவதானிப்புகளும் விவாதங்களும் - ஜெயமோகன் -வாசிப்பனுபவம்-உஷாதீபன்

நலமறிதல்” - அவதானிப்புகளும் விவாதங்களும் - ஜெயமோகன் -வாசிப்பனுபவம்-உஷாதீபன்





      வாதம், பித்தம், கபம் என்ற மூன்று கூறுகள் நம் உடலில் சம நிலையில் இருக்க வேண்டும். இந்தச் சமநிலை குலையும்போது நோய் வருகிறது. ஆயுர்வேதம்,  சித்த மருத்துவம் போன்ற இந்திய மருத்துவ முறைகள் இதைத்தான் வலியுறுத்துகின்றன. தத்துவ சிந்தனையான சாங்கிய யோக தரிசனத்திலும் இது கூறப்பட்டிருக்கிறது.

      சத்வ குணம். தமோ குணம், ரஜோ குணம் என்னும் மூன்று குணங்களின் சமநிலை குலையும்போது பிரபஞ்ச இயக்கம் நடைபெறுகிறது என்கிறது  சாங்கிய தரிசனம். பிரபஞ்சத்தை-இயற்கையை-மனித உடலை இந்தக் கோணத்தில் அணுகும் ஆயுர்வேதம் மிகச் சிறந்த வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறது.

      இப்படியாக மாற்று மருத்துவம் குறித்த  அவதானிப்புகளும், விவாதங்களுமாக உடல் நலம் பேணுதல் பற்றி இப்புத்தகத்தில்  விரிவாகச் சொல்லிச் செல்கிறார் ஜெயமோகன்.

      ஸெலின் என்ற சாதாரண விட்டமின் C மாத்திரைகளுக்கு  ஒரு கட்டத்தில் இங்கு ஏற்பட்ட பஞ்சம், விலை குறைந்த அந்த மாத்திரைகளை வெளி நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரும் நிலையில் இருந்ததும், கீழை நாடுகளிலும், சீனாவிலும் கடுமையாகப் பரவிய ஃப்ளூ காய்ச்சலுக்கு என்று அவை மொத்தக் கொள்முதலாக நகர்ந்து விட்ட கொடுமையினையும் விளக்குகிறார்.

      வாசனையை வைத்தே நோயை அடையாளம் காண்பது  என்று கற்பித்த டாக்டர் கெ.வி.திருவேங்கடம் அவர்களின் கூற்று இங்கே கவனிக்கப்படத்தக்கதாகிறது. முற்றிய நீரிழிவு நோயாளியின் மூச்சில் எழும் இனிப்பு கலந்த நகப்பாலீஷ்  வாசனை, டைபாய்ட் நோயாளியில் இருந்து வரும் புதிய ரொட்டியின் வாசனை ஆகியவற்றைச் சொல்ல  அறியும்போது நவீன மருத்துவ இயந்திரங்கள்பால் அவநம்பிக்கை எழுகிறது என்கிறார் ஜெ. இந்தத் தகவல்கள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன.

      தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த மருத்துவநூல் என்றால் க்ரியா வெளியீடாக வந்த “டாக்டர் இல்லாத இடத்தில்“ என்ற மொழி பெயர்ப்பு நூல் என்று பரிந்துரைக்கிறார். அலர்ஜி போன்ற நெடுநாள் சிக்கல்கள்,உடல்நிலை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றுக்கு  ஓமியோபதி சிறந்த மருந்தை அளிக்கிறதென்று தன் அனுபவங்கள் காட்டுவதாகத் தெரிவிக்கிறார்.

      குடியின் சீர்கேடுகள் பற்றி ஒரு கட்டுரையில் விளக்கப்படுகிறது சிகிச்சை பெறுபவர்களில் மீண்டும் குடிக்குத் திரும்பாமல் இருப்பவர்கள் கால்வாசிப்பேர்கள்தான். குடி சார்ந்து உருவாக்கி வைத்திருக்கும் உலகை விட்டு வெளியே வர அவர்கள் விரும்புவதில்லை. கள்ளுண்டு பிதற்றும் குடிமகன்களை மணிமேகலையில் காண்கிறோம். கள்ளுக்கடை தலித் வாழ்விடங்களில்தான் அதிகமிருக்கிறது என்றும் அதை விற்றுக் கொழிப்பவர்கள் வேற்று ஜாதியினர் என்றும் தலித் சிந்தனையாளரான ரவிக்குமார் தெரிவிக்கும் கருத்து இங்கே சுட்டப்படுகிறது. தமிழக மீனவர்கள் குடியால் விலங்கிடப்பட்டவர்கள் என்றும், சுனாமிக்குப் பிறகு குடி உச்சத்திற்குச் சென்றதுதான் உண்மை...என்றும் எடுத்துரைக்கிறார்.. கடற்கரை சமூகத்தில் 65 சதவிகிதம் ஆண்கள் குடிகாரர்கள், அவர்களில் 40 சதவிகிதம் பேர் குடியடிமைகள்....பிற நோய்களைப் போல் அதற்கும் மருத்துவ உதவி தேவை...என்று தெரிவிக்கிறார். குடி நோயின் விளைவுகளுக்கு மட்டுமே மருந்து உண்டு, குடி நோய்க்கு அல்ல...குடிபோதை-புனைவுகள்.தெளிவுகள்-அ.கா.பெருமாளின் தமிழினி வெளியீடான புத்தகம் மிகவும் முக்கியமான ஒன்று. என்று பரிந்துரைக்கிறார்.

      1992 ல் மலையாள மனோரமாவில் வந்த “எரியும் சிறுவர்கள்” என்ற தலைப்பிலான செய்தி பற்றி எடுத்துரைக்கையில், அந்தச் சிறுவர்களுக்கு வியர்வைச் சுரப்பியே தோலில் ஏற்படாததும், அவர்களால் உடலின் வெப்பத்தை ஆற்ற முடியாது என்பதும், தவழ்ந்து போய் தண்ணீரிலேயே கிடப்பார்கள் என்பதும் அதிர வைக்கும் செய்தியாகிறது. தோல் வளர்ச்சியடையாமல் இருந்தமையால் வியர்வைச் சுரப்பிகளும், துளைகளும்,  ஏற்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. ஆயுர்வேத முறைப்படி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும், வயிற்றை முதலில் சுத்தம் செய்யும் சிகிச்சை முதலில் துவங்கி, விடங்கரஜனி என்ற கிருமி நீக்கி மருந்து், கசப்பு மருந்துகளும் வழங்கப்பட்டதும், உடம்பில் சுரப்பிகள் ஏற்படாததற்கு ஒருவகை எண்ணெய் தொடர்ந்து தேய்க்கப்பட்டதும்...அவர்கள் குணமடைந்ததும் கேள்விப்படுகையில் ஆயுர்வேத சிகிச்சையில் நமக்கு மிகுந்த நம்பிக்கை வருகிறது.

      அலோபதி உடலைப் பழுது பார்க்கிறது. ஆயுர்வேதம் உடலைத் தன் இயல்பான நிலைக்கு கொண்டு செல்ல முயல்கிறது. அலோபதி நோயாளியின் வாழ்க்கைக்குள் நுழைகிறது. ஆயுர்வேதம் நோயாளியை தன் வாழ்க்கை நோக்குக்குள் கொண்டுவர முயல்கிறது.

      காஞ்சிரக் கட்டையால் செய்யப்பட்ட கட்டில்கள் வாதத்திற்கு சிறந்த மருந்து என்று ஒரு தகவல் தரப்படுகிறது. மரங்களை லக்கினங்களுடன் இணைப்பது ஆயுர்வேத மரபு என்றும் காஞ்சிரம் அஸ்வதி லக்கினத்தைச் சேர்ந்தது என்றும் அந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் மரம் இது என்றும் ஒரு தகவல் கிடைக்கிறது.

      காஞ்சிரம் வேர் முதல் அனைத்துமே சிறந்த மருந்து என்றும், அதன் கொட்டை ஆளைக் கொல்லும் விஷம் என்றும், வேரும், பட்டையும், காயும் ஆயுர்வேதம் என்றும் ஓமியோபதி, சீன மருத்துவம் இரண்டிலும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது என்றும் கபத்தைக் கட்டுவதும், வாதத்தை இல்லாமல் செய்வதும் இவற்றின் பலாபலன்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

      கொட்டம் சுக்காதி எண்ணெய் பற்றிச் சொல்கிறார். உடல் உளைச்சல், தலைவலி, தூக்கமின்மை போன்றவற்றுக்குப் பயன்படும் இது என்ற தகவல் கிடைக்கிறது. வர்ம மருத்துவம் பற்றித் தெரிவிக்கையில் கை சுட்டி ஒருவரைக் கொல்ல முடியும் என்று அதிர்ச்சித் தகவல் அளிக்கிறார். அப்படியான ஆசான்கள் இருந்தார்கள் என்றும் மண்ணில் விண்ணில்  மனித உடலில் உள்ள பல நூறு ரகசியங்களை அறிந்த மூதாதையர் அவர்கள் என்றும் ஒரு யுகமே முழுமையாக அழிந்து வருவதாக  உணர்வதாகவும் தெரிவிக்கிறார்.

      மாக்ரோபயாடிக்ஸ் -முழுமை வாழ்க்கை பற்றி ஆராய்கையில் பல தகவல்கள் கிடைக்கின்றன. காய்கறிகளை எந்தப் போக்கில் நறுக்க வேண்டும், நாராயண குருகுலத்து சமையல் என்னவெல்லாம் போதிக்கின்றன எப்படி நறுக்கினால் உயிர்ச்சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும் என்பதும், மூன்று வெள்ளைப் பிசாசுகளை நாம் தவிர்க்க வேண்டும்..எனவும் அவை ஜீனி, உப்பு, பால்...நவீன மனிதனின் பெரும்பான்மையான நோய்களுக்கு இவையே காரணம் என்றும் தெரிவிக்கிறார்.

      மூச்சுத் திணறல் பிரச்னைக்கு கொல்லைப்புறத்தில் தூதுவளைச் செடியை வளர்த்து தினமும் சில இலைகளைத் தின்று வந்தாலே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்து காணாமல் போகும் என்றும் இது அவர் அனுபவத்தில் கண்டது என்றும், சித்த மருந்துகளில் சிலவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதென்றும் டாபர் போன்ற கம்பெனிகளின் டப்பாவில் அடைக்கப்பட்ட மருந்துகள் (ஸ்யவனப்பிராசம்) தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் தெரிவிக்கிறார். உணவைக் கட்டுப்படுத்துதலும், தேவையான அளவு நீர் அருந்துதலும், லேசான சூடான நீர் எப்போதும் நல்லது என்றும், இரவு பழங்கள் மட்டுமே உண்டு படுக்கைக்குச் செல்லும் பழக்கமும் நன்று என்றும் நடைமுறையில் கண்ட உண்மைகளை எடுத்துரைக்கிறார். மலச்சிக்கல், செரிமானமின்மை, தூக்கம் குறைவு மூச்சுச் சிக்கல்கள் இப்படியான உபாதைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியே இயற்கையாக நம்மை நாம் சரியாகப் பேணுவதற்கு பெரும் உதவியாய் இருக்கின்றன என்கிறார்.

      மண்ணில் வாழப்படும் வாழ்க்கையைவிட பெரிய அக வாழ்க்கை நம்முள்ளே நடந்து கொண்டிருக்கிறது. இந்து ஞான மரபின்படி எல்லா ஆற்றலும் ஒன்றே. காமமும், வன்முறையும், ஞானமும், மோனமும் எல்லா ஆற்றலும் ஒரே ஆற்றலின் வெளிப்பாடுகளே...ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் செல்ல முடியும். ஒன்றை இன்னொன்றாக ஆக்கிக் கொள்ளவும் முடியும்.இந்து யோக முறையில் காமம் மூலாதார சக்தி. அங்கிருந்துதான் பிற அனைத்து ஆற்றல்களும் தொடங்கப்பட வேண்டும் அதுவே பிற அனைத்தையும் பற்ற வைக்கும் முதல் பொறி.ஆற்றும் தொழிலே ஆற்றல். செயல் வடிவே சக்தி. நம் சொற்களில் சக்தி எழுக.....-என்று படிக்கையில் நாம் எழுச்சியுறுகிறோம்

      சிந்திக்கும் ஒரு மனிதன் தன் உடலை அவதானித்து அடைந்த சில சிந்தனைகளை முன் வைக்கும் பயனுள்ள நூலாக இந்த உடலறிதல் விளங்குகிறது. மாற்று மருத்துவம் அறிய விரும்பும் நண்பர்கள் இந்நூலைப் படித்தல் அவசியம்.

                                    --------------------------

 

 

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...