22 நவம்பர் 2020

“நெருப்பு தெய்வம்-நீரே வாழ்வு”- வாசிப்பனுபவம் - உஷாதீபன்

                 நெருப்பு தெய்வம்-நீரே வாழ்வு”- வாசிப்பனுபவம் - உஷாதீபன்        


                (வெளியீடு:- தன்னறம் - குக்கூ காட்டுப்பள்ளி, புளியனூர், சி்ங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்)

        கங்கை நதியைப் பாதுகாப்பதற்காக 2011 ம் ஆண்டில் தொடர் உண்ணாவிரதம் இருந்து 114 நாட்கள்  கடந்த போராட்டத்தில் ஈடுபட்ட துறவிகளைப் பற்றி விவரிக்கிறது இப்புத்தகம்.

      சுவாமி நகமானந்தா, ஜி.டி.அகர்வால், சிவானந்த சரஸ்வதி, ஆத்ம போனந்த் இவர்கள்தான் அவர்கள். உண்ணாவிரதம், தியாகம் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் ஏதேனும் அர்த்தம் உண்டா? என்கிற கேள்வி எழும் அளவுக்கு இவர்களின் போராட்டங்கள் கவனிக்கப்படாமல் இருந்திருப்பது தெரிய வருகிறது.

      கங்கையைக் காப்பாற்ற மத்ரி சதன் ஆசிரமம் (சாதுக்களின் அமைப்பு) 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்திருக்கிறது என்று அறியப்படுகிறது. கங்கையைப் பாதுகாப்பதை மட்டுமே தங்களின் முழுக் கடமையாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறது இந்த அமைப்பு. குறிப்பிட்ட 100 கி.மீ. பகுதியினை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. அத்தோடு கங்கையின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வந்திருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு நிறைய அச்சுறுத்தல்களும், கொலை முயற்சிகளும் நடந்திருக்கின்றன. அரசு இயந்திரம், கார்ப்பொரேட்கள் என்று பலதரப்பிலிருந்தும் பிரச்னைகளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். தொடர் உண்ணாவிரதம் என்று 60 முறைக்கும் மேலாக அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆசிரமத்தின் மதிப்பு மிகு மூன்று உயிர்களை இழந்தும், சோர்வின்றி அடுத்தவர், அடுத்தவர் என்று உண்ணாவிரதம் தொடர்ந்திருக்கிறது. ஒரு சாது கடத்தப்பட்டதாகவும், இன்றுவரை அவரின் இருப்பிடம் அறியப்படாமலும் இருப்பதாக அறிய முடிகிறது.

      ஆஸ்ரமத்தின் சாதுக்களின் குருவாக விளங்கிய சிவானந்த சரஸ்வதி அவர்கள் பலமுறை கொலை முயற்சிக்கு உள்ளாகியுள்ளதாகவும், பலமுறை ஆஸ்ரமம் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது இப்புத்தகம். பிரபலமான துறவி நிகமானந்தா மரணத்திற்குப் பிறகுதான் மத்ரி சதன் ஆஸ்ரமம் குறித்து வெளியுலகிற்குத் தெரிகிறது. உலக நன்மைக்காகவும், பூமி அமைதிக்காகவும் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

      ஊழலுக்கு எதிராகச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாபாராம்தேவ் 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொது அங்கு கேட்பாரற்றுப் பிணமாகக்  கிடந்த சுவாமி நிகமானந்தாவைக் கண்டு பத்திரிகையாளருக்குத் தெரிவித்திருக்கிறார்.  மரணம் இயற்கையானது அல்ல என்று உறரித்துவாரில் உள்ள மத்ரி சதன் ஆஸ்ரமம் தொடர்ந்து போராடி வருகிறது என்று தெரிகிறது. நிகமானந்தா இறப்புக்குப் பிறகு குரு சிவானந்த் 11 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார். அதன்பின்பே உத்தரகண்ட் அரசாங்கம் இறங்கி வருகிறது. கனிம வளங்கள் சூறையாடப்படும் சுரங்கங்களுக்குத் தடை விதிக்கிறது.

      இதைத் தொடர்ந்து ஜி.டி.அகர்வால் சுற்றுச்சூழல் ஆய்வாளர், கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் சாதுவாக மாறி போராட்டம் தொடர்ந்திருக்கிறார். கங்கையில் கழிவுகள் தொடர்ச்சியாகக் கலப்பதை எதிர்த்தும், அது அத்தனை நீர்நிலைகளையும் சீரழித்துவிடும் என்றும் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்.

      கங்கை அதிலிருக்கும் படிவுகளையும் நுண்ணுயிர்களையும் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளப் பயன்படுத்துகிறது. அது வெறும் தண்ணீருக்கான நதியல்ல என்பது இவர்கள் கருத்து. சூழலையும் தூய்மைப் படுத்தும் திறன் கொண்டது கங்கை நதி என்பது இவர்களின் பலமான வாதம். தொடர்ந்து 109 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 87 வது வயதில் மரணித்திருக்கிறார் திரு.அகர்வால்.கலிபோர்னியா பல்கலைக் கழகம் தனது மாணவரின் மரணத்திற்காக அஞ்சலி செலுத்தியிருக்கிறது. ஆஸ்ரமத்தில் அடுத்தடுத்த சாதுக்கள் விரதத்தின் வழியே நாங்களும் உயிர்துறப்போம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். நிகமானந்தா, ஜி.டி.அகர்வால் இவர்களின் ஆத்மா சொல்ல நினைத்த கடைசி வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்று முடிகிறது இந்நூல்.  “நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு.....“

      ஆன்மீக அனுபவம் என்பது மக்களின் நன்மைக்கானது. இயற்கையின் வளங்களைப் பாதுகாப்பதற்கானது. பூமியின் தீங்கற்ற சூழ்நிலைக்கானது. இது இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படை. அந்தக் கலாச்சாரம் வீழ்ச்சியடையாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும் என்கிற பலமான கருத்தை முன் வைக்கிறது இப்புத்தகம்.

                                    --------------------------

     

       

 

 

 

 

கருத்துகள் இல்லை: