14 அக்டோபர் 2020

எழுத்தாளர் இமையம் எழுதிய “வாழ்க...வாழ்க...” - குறுநாவல் வாசிப்பனுபவம்  - ( வெளியீடு :-  க்ரியா, திருவான்மியூர், சென்னை )

     இந்தக் குறுநாவலை எழுதிய எழுத்தாளர் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். இன்னொரு அரசியல் கட்சியைப் பற்றியும், அதன் தலைவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட ஊருக்கு கெலிகாப்டரில் வந்து இறங்க, அந்தப் பிரச்சார மைதானத்திற்கு பொது மக்களை, குறிப்பாகப் பெண்களைப் பணம் கொடுத்து அழைத்துச் சென்று, பிரியாணிப் பொட்டலம், தண்ணீர், கட்சிச் சின்னம் போட்ட தொப்பி, பதாகை என்று கொடுத்து உட்கார வைத்து, அடிக்கும் கோடை வெயிலில் நெடு நேரம் காக்க வைத்து, கூடியிருக்கும் சனம் இருக்கவும் முடியாமல், போகவும் முடியாமல் தவித்து, செத்துச் சுண்ணாம்பாகி நிற்க கடைசியில் கட்சித் தலைவி வந்து தன் பிரச்சாரத்தை துவக்குவதோடு முடிகிறது கதை. தலைவியின் வருகையில் தங்கள் துன்பங்களையெல்லாம் மறந்து வாழ்க கோஷமிடும் மக்கள்.

     தமிழக உழைப்பாளர் முன்னேற்றக் கழகம் என்று பெயரை மாற்றி வைத்து கதை சொல்லப்படுகிறது. ஆனாலும் எந்தக் கட்சியைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பது நமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறதுதான். கட்சித் தலைவி என்று சொல்லும்போதே எல்லோருக்கும் புரிந்து போகும் தானே? கட்சியின் பெயரை மாற்றி வைத்துக் கதை சொன்னால் மட்டும் தெரியாமல் போகுமா? அதுவும் தெரியும்தான் படைப்பாளிக்கு.

     ஆனாலும் இருக்கும் கட்சிகளின் பெயர்களையே சொல்லி எப்படிக் கதை எழுத முடியாதோ அதுபோல இப்படி எழுதினால் எங்கே தெரியப் போகிறது என்று நினைத்தும் எழுத முடியாது. குறிப்பிட்ட இதை நான் சொல்லவில்லை என்றும் உறுதிபட வாதாடவும் முடியாது.

     கதையில் கட்சித் தலைவி வரும் தேர்தல் பிரச்சார நிகழ்விற்கு கிராமத்துப் பெண்டுகளை ஆளுக்கு ஐநூறு ரூபாய் பணமும், கட்சிக் கறை போட்ட புடவையும் கொடுத்து வேனில் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தி, கூட்டம் சேர்த்தல் என்பதான செயல்பாடுகள் இன்றைய தேதியில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது. ஒரு கட்சியை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லுதல் என்பதை ஏற்கவே முடியாது. ஆட்களைச் சேர்த்தல் என்கிற கலாச்சாரம் எப்பொழுதோ துவங்கி விட்டது. அதை இமையமும் சொல்லத்தான் செய்கிறார்.

     இரண்டு தெருக்கள் சந்திக்கும் முக்கில், ஒரு தற்காலிக மேடையமைத்து, நான்கு புறமும் மைக்கைக் கட்டி அலறவிட்டால் போதும் கூட்டம் தானாகவே வந்து நிற்கும் என்கிற காலமெல்லாம் என்றோ மலையேறி விட்டது. அரசியல் கட்சிகளின்பாலான மக்களின் நம்பிக்கைகள் நிரம்பவும் குறைந்து போய், இவை இப்படித்தான் இருக்கும், இதற்குள்தான் நாம் காலத்தை ஓட்டியாக வேண்டும் என்கிற மனச் சமநிலைக்கு மக்கள் என்றோ வந்து விட்டார்கள்தான். அவர்களோடு எந்த வழியிலெல்லாம் கூடிக் குலவி நமக்குள்ளதை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற சமரசத்தைக் கண்டுபிடித்தவர்கள்தான்  இன்றைய மக்கள்.

     ஆனாலும் பாமர மக்களை எப்படியெல்லாம் ஆசை காட்டி, அதையும் இதையும் சொல்லி, அப்படி இப்படி என்று அவ்வப்போது  ஏதாவது செய்து கொடுத்து, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று  காட்டிக்கொண்டே காலத்துக்கும் ஓட்டும் அரசியல்வாதிகளை நினைக்கையில், இந்தக் கதை சொல்லப்பட்டிருப்பதன் தாத்பர்யம் புரிய  ஐயோ...பாவமே என்கிற பரிதாபம் நமக்கு எழாமலில்லை.  

     ஏழை எளிய மக்கள் எப்போதும் பணப் பற்றாக்குறையுடனும், சோற்றுக் கஷ்டத்துடனும், போதிய சுகாதாரமற்ற வாழ்வில்,  உடல் நலமின்மையில் விதியே என்று  சிறந்த சகிச்சைக்குக் கூட வசதியின்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இந்தத் தேவை  நிலையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு ஆசை காட்டி, ரூபாய் ஐநூறும், புடவையும், சாப்பாடும் யார் தருகிறார்கள்? என்று எடுத்துச் சொல்லி, அக்கா, தங்கச்சி, அம்மா, அத்தை என்று நெருக்கமாய் உறவு முறையாய்ச் சொல்லி விளித்து கூட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். அங்கு போன பின்னால்தான் தெரிகிறது...இப்படி வந்து நேரம் காலமில்லாமல் பழி கிடந்து சாகிறோமே என்று....இம்சையாய் வெயிலில் பழிகிடக்கும்  பெண்கள், இயற்கையைக் கழிக்க ஒதுங்கக் கூட வழியின்றித் தவித்தலும், இடம் கிடைக்காமல் இடித்துப் பிடித்து, நான்...நீ...என்று உட்காரும் நாற்காலிக்குச் சண்டை போடுவதும், கூட்ட நெரிசலில் குழந்தைகள் மயங்கி விழ, தூக்கிக் கொண்டு ஓடுவதும், எதிர்பாராக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் சில சாதாரண உயிரும் என....நிகழ்வு யதார்த்தமாயும், சற்றே மிகைதானோ என்று நினைக்கும் வண்ணமும், சொல்லப்பட்டிருப்பது, இமையத்தின் எழுத்துத் திறமையில் மூழ்கிப்போய் நம்மை லயிக்க வைத்து மன வருத்தம் கொள்ள வைக்கிறது.

     பெற்ற குழந்தை காய்ச்சலால் துடிக்கிறது என்று இந்தக் காசை வாங்கி அதற்கு ஆஸ்பத்திரியில் காண்பித்து, மருந்து வாங்கிக் கொடுத்துக் காப்பாற்றலாமே என்று நினைக்கும் பெண், ஐநூறும் புடவையும்  யார் தர்றாங்க சும்மா என்று ஆசைப்பட்டுக் கிளம்பும்  மக்கள், ஏற்கனவே தேர்தலுக்குத் தேர்தல் வீட்டுக்கு இத்தனை பேர் என்று கணக்கிட்டு வாங்கி வாங்கிப் பழகிவிட்ட பழக்கம், இந்த முறை அதுலேர்ந்து கூட்டிக் கொடுத்தால்தான் ஆச்சு என்று தீர்மானமாய்ப் பேசும் முடிவு...வந்து கூப்பிடுகிறவனை எண்ணிப்பார்த்து, சும்மா வெத்து வேட்டா இருந்த பய இன்னிக்கு இப்டி வசதியா ஆயிட்டானே என்று கொடுத்தா என்ன குறைஞ்சா போறான், கட்சிப் பணம்தானே...கொள்ளையடிச்ச காசுதானே...கொடுக்கட்டும் என்று தங்களைச் சமரசப்படுத்திக் கொண்டு, அவனையும் பகைத்துக் கொள்ள முடியாமல், அவ்வப்போதைய பணத் தேவைக்கு இவனை விட்டால் வேற ஆளில்லை என்று ஒத்துப் போகும் மனநிலை, அவர்கள் என்னதான் பேசினாலும், திட்டினாலும் எதற்கும் அசைந்து கொடுக்காமல், எந்த மான ரோஷமும் பார்க்காமல், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், அப்படியிருந்தால்தான் தன் அரசியல் வாழ்க்கை ஓடும் என்று அவர்களோடேயே தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டு, வசதிகளைப் பெருக்கிக் கொண்டு,  விடாமல் வண்டி ஓட்டி வரும் சாமர்த்தியமான அரசியல்வாதி....என்று கதையோட்டத்தில் நாம் அறிந்தவர்களை உணரும்போது, இந்த மாய்மாலங்களெல்லாம்  என்று ஒழியும், என்று இதற்கெல்லாம் விடிவு என்கிற கேள்வியே நமக்குத் தோன்றுகிறது. வெங்கடேசப் பெருமாள் என்று பெயர் வைத்திருப்பதில் கூட ஒரு சூட்சுமம் உள்ளது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

     பணிக்காலத்தில் எனக்கும் இம்மாதிரி ஒரு அனுபவம் ஏற்பட்டதும், பொதுமக்களோடு ஊரில் உள்ள அலுவலகங்கள் எல்லாமும் அங்கே போய் நின்றதும், எதற்கு குய்யோ முறையோ என்று நம்மையும் அழைத்துப் போகிறார்கள், ஆபீசில் உட்கார்ந்து அமைதியாய் வேலையைப் பார்ப்பதுதானே நம் வேலை என்று நினைத்துக் கொண்டே தவிர்க்க முடியாமல் போய் நின்று பழி கிடந்ததும்......எல்லாமும் நினைவுக்கு வந்தது எனக்குள்.

     இமையம் எழுதிவிட்டார்......!

                     ----------------------------------------------

 

    


 

கருத்துகள் இல்லை: