27 ஆகஸ்ட் 2020

குறுங்கதைகள் - 4 = சட்டி சுட்டது

    

     சட்டி சுட்டது             


         
குறுங்கதைகள் - 4                       ------------------------

     ரஸ்வதி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தாள். அருகே சோகமே உருவாய் மாசிலாமணி அமர்ந்திருந்தார். இப்படிக் கண்ணே திறக்காமல் கிடக்கிறாளே என்றிருந்தது..  கொஞ்சம் நினைவு வரும் வேளையில் அதைச் சொல்லிவிட வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.

     சொல்லுவோமா அல்லது வி்ட்டுவிடுவோமா என்று இன்னொரு மனசு கேட்டது. கடைசி நேரத்தில் சொல்லி  மூச்சு சட்டென்று நின்று போனால்?  பிழைத்து எழுந்தால்தான் தேவலை என்று இப்போது அவர் மனசு சொல்லியது.  இன்னும் கொஞ்ச காலம் அவள் இருந்தால், என்றாவது ஒரு நாள் சாவகாசமாய்ச் சொல்லிக் கொள்ளலாமே.....! என்று நினைத்தார். கிளு கிளுப்பு இன்னும் அடங்கல உனக்கு, அதானே! தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.            

     பையனும் மருமகப் பெண்ணும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள். வந்து ஒரு வாரம் ஆன பொழுதில் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது இவளுக்கு.                                                   உங்கப்பாவுக்கு என்னதான் தெரியும்? சீரியஸ்னு சொல்லி இப்டி நம்மளையும் வரவழைச்சு உயிர வாங்குறாரே...? என்று அவள் கணவனிடம் பொறுமுவது கேட்டது. நீ வேணும்னா கிளம்பிப் போ...காரியம் முடிஞ்சிடுச்சின்னா திரும்ப வந்துக்கிடலாம்...என்று சமாதானம் சொன்னான் அவன்.

     பிறகு எங்க வர்றது....எல்லாத்தையும் நீங்களே இருந்துமுடிச்சிட்டு வர வேண்டிதான்....என்னாலெல்லாம்  முடியாது....என்றாள் அவள்.

     காதலித்தவள் வேறொருவனைக் கட்டிக் கொண்டாள் என்று மனமுடைந்திருந்த பையனுக்கு, இவர்தான் இந்தப் பெண்ணைப் பார்த்து முடித்து வைத்தார். அதுவும் இப்படிக் கிடந்து படுத்துகிறதே...!    

     இதெல்லாம் சரஸ்வதி காதில் விழாமல் இருப்பதே மேல். விழுந்தால் அவள் உயிர் உடனே போய் விடும், சத்தியம். மகன் மீது அவ்வளவு பாசம் அவளுக்கு. அவன் மனைவி இப்படிக் கோணலாய் இருக்கிறாளே என்று தாங்கமாட்டாமல் மூச்சை நிச்சயம் நிறுத்திக் கொள்வாள்.

     சரசு...சரசு.....அவள் கண்கள் மெல்ல விலகுவதைக் கண்டார் இவர். என்னை மன்னிச்சிடு சரசு.....மன்னிச்சிடு....என்று அவள் முகத்துக்கருகில் சென்று அழுதார். தெ...தெ.....தெ.......என்று ஏதோ சொல்வது போல் உதடுகள் துடித்தன. அப்போதும் அதைச் சத்தமாய்ச் சொல்லக் கூச்சமாய் இருந்தது மாசிலாமணிக்கு. வீட்டில் வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாதே என்று பயந்தார். தெ...தெ.....தெழியும் எனக்கு.......என்று குழன்றாள் சரஸ்வதி. கண்களில் கடைசியாய் நீர் வழிந்து உலர்ந்தது. மூச்சு நின்று போனது.                 சரசூ...சரசூ...போயிட்டியா சரசூ.....இந்தப் பாவி கூட இருக்கப் பிடிக்காமப் போயிட்டியா.....? உடலை அணைத்துக் கதறினார் மாசிலாமணி.                      பையனும், மருமகளும் பதறியடித்து வந்து நின்றனர். கூடவே அந்த இன்னொருத்தியும் அங்கிருந்தாள்.

     வெளியே போடீ முண்ட...  - வெறி பிடித்தவர் போல் கத்தினார் மாசிலாமணி. நின்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். வேலைக்காரி ரஞ்சிதம் வாசலை நோக்கி நகர்ந்தாள்.

                     --------------------------------------

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...