31 மே 2020

“சொல்லத் துடிக்குது…!” கட்டுரை


கட்டுரை                        உஷாதீபன்,                                                                            
 “சொல்லத் துடிக்குது…!”                
 -----------------------------------------                                      
     லகமயமாக்கலின் தாக்கத்திலும், ஐ.டி. கலாச்சாரத்தின் நடைமுறையிலும்  குடும்பங்களுக்குள் எத்தனையோ விதமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சொல்லலாம். அந்த மாற்றங்கள் பொருளாதார ரீதியாக சற்று விசாலமாக மேம்பட்டிருந்தாலும், ஒழுங்கு, பண்பாடு, செயல்முறை என்கின்ற வகையில் நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
     ராத்திரித் தூக்கம் இல்லாதவன் காரியம் எதுவுமே, வௌங்காது, உருப்படாது…. என்பார்கள் கிராமத்தில்.. ஐ.டி. பணியாளர்கள் பெரும்பாலும் இரவில் பணிபுரிபவர்களாகத்தான் இருக்கிறார்கள். பன்னிரெண்டு மணி, ஒரு மணி, ரெண்டு மணி என்று வீடு வந்து சேருபவர்கள் அதற்கு மேற்கொண்டு வேளை கெட்ட வேளையில் டிபனை முழுங்கிவிட்டு உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். தொலைக்காட்சியிலோ அல்லது செல்ஃபோனில் சேமித்து வைத்திருப்பதை நேர் தொலைக் காட்சிக்குக் கொண்டு சென்று அகன்ற திரையில் பார்க்கிறார்கள். இப்பொழுதுதான் என்னென்னவோவெல்லாம் வசதி வந்துவிட்டதே…அதுதான் வினையே…! நன்மையும் நிறைய இருக்கே என்று சொல்வதும் காதில் விழுகிறதுதான். வினைக்குத்தான் பயன்படுகிறது பலவும் என்பது மூத்தோர் சொல் வார்த்தை. மூன்றாம் ஜாமத்திற்குமேல்  மூன்றரை, நாலு என்று தூங்க ஆரம்பித்து மறுநாள் பகல் பன்னிரெண்டு போல் எழுந்து, குளிக்க, சாப்பிட கிளம்ப என்று புறப்பட்டு விடுகிறார்கள். ஒரு வார்த்தை வீட்டிலுள்ளோரிடம் முகம் கொடுத்துப் பேசக் கூட இந்த இளைஞர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நேரம் இருக்கும் வேளைகளில் பேசப் பிடிப்பதில்லை. இவர்களுக்குத்தான் வயதாகித் தொங்கிப் போன முகங்களையே பார்க்கப் பிடிப்பதில்லையே? அதிலும் அவர்கள் தப்பித் தவறி வாயைத் திறந்து விட்டால்…கேட்கவே வேண்டாம். ஓட்டமாய் ஓடி விடுகிறார்கள். இந்த நடைமுறை இன்று பல வீடுகளில்.
     பக்கம் பக்கமாய் அவர்களது துணி மணிகளைத் அவிழ்த்து வீசுவது, துவைத்தது எது, கழித்துப் போட்டது எது என்று தெரியாதபடி, போட்டது போட்டபடி, இருந்தது இருந்தபடி என்று எதுவொன்றிலும் இவர்களிடம் ஒழுங்கோ, கட்டுப்பாடோ இருப்பதில்லை. ஒரு செய்தித்தாள் புறட்டுவதானாலும் சரி, விறுவிறுவென்று புரட்டியெடுத்துவிட்டு பக்கவாட்டில் வீசிவிட, அது மேலே ஓடும் ஃபேன் காற்றில் நாலா பக்கமும் வீடுகளில் பறந்து கொண்டிருக்கிறது. இன்னின்ன பொருளை இப்படி இப்படித்தான் வைக்க வேண்டும், இங்கிங்கேதான் வைக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் எதுவும் இல்லை இவர்களுக்கு. தூக்கி கண்டமேனிக்கு வீச வேண்டியது, கொஞ்சம் மங்கிப் போச்சா, ஒதுக்கிவிட்டுப் புதுசு வாங்க வேண்டியது…அதுவும் அளவு சரியில்லையா, போய்த் திரும்பவும் கேட்டுப் பார்ப்போம் என்ற யோசனைகூட அன்றி (கேட்டால் கேவலமாம்)வாங்கிய புதிதை அப்படியே போட்டு வைத்து விடுவது, அடேயப்பா…காசு தண்ணீராய்த்தான் ஐயா செலவு ஆகிறது இவர்களுக்கு…அதற்கு ஒரு மரியாதை என்பதே இல்லாமல் போனது இவர்கள் மத்தியில்தான்.   அவர்களுக்குத்தான் வீட்டிலுள்ளோர்களிடம் மனது விட்டு ரெண்டு வார்த்தை பேசக் கூடப் பொறுமையிருப்பதில்லையே? ஏதாவது பேசினால்தானே ஆலோசனை சொல்ல…? ஒருவேளை நம்மை இவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று வயதானவர்கள் மனதுக்குள் குமையும் நிலைதான் இன்று பல வீடுகளிலும் உள்ளன.
     இந்த இளைஞர்கள் அவரவர் வீட்டிற்கென்று எந்த உதவியும் செய்வதாய்த் தெரியவில்லை. கடைக்குப் போய் ஒரு காய்கறி வாங்குவதென்றாலும் அதையும் வீட்டிலுள்ளவர்களேதான் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. மளிகை சாமான்கள், காய்கறிகள், இதர அயிட்டங்கள் என்று எதுவுமே என்னென்ன மாதிரி விற்கின்றன என்று தம்பிடி கூடத்  தெரியாது. தெரிந்த ஒரு சிலரும் கேட்டதைக் கொடுத்துவிட்டு வரும் ரகம்தான். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கணினி ஒன்றுதான். அதற்கு முன்னால் உட்கார்ந்து மணிக்கணக்காய் அதோடு பேசிக் கொண்டிருப்பார்கள். வீட்டிலுள்ளோரிடம் தப்பித் தவறிக் கூட ரெண்டு சொல் உதட்டை அசைத்து விட மாட்டார்கள். அத்தனை பிஸியாம். எதையாவது நாம் அசட்டுப் பிசட்டு என்று கேட்டு வைத்தால் “உனக்கொண்ணும் தெரியாதுப்பா….” என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள். மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார வேண்டியதுதான். நம்மைத்தான் ”பெரிசு…பெரிசு…” என்கிறார்களே…!
அட, அன்றாடம் அந்த சோற்றின் முன்பாவது சற்றுப் பொறுமையோடு அமர்ந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை.  சாப்பாட்டின் வகையிலும் இவர்களுக்கு எல்லாமும் படு காரசாரமாய் வேண்டியிருக்கிறது. அலுவலகக் கேன்டீனிலும் நகர்ப்புறங்களின் நாகரீகமான உணவகங்களிலும் தின்று தின்றே (அதுதான் மாதா மாதம் பார்ட்டி…பார்ட்டி என்று சென்று விடுகிறார்களே…! காசு தண்ணீராய்த்தான் பாய்கிறது அங்கே)  பழகியவர்களாய் இருப்பதால் அம்மாதிரியான மசாலா ஐட்டங்கள் கொண்டதாயும், நல்ல கனமான நிறப்பிரிகைகளோடு உப்பு, உரப்பு, புளிப்பு என்று எல்லாமும் தூக்கலாகவும் சாப்பிட்டே பழகிப் பழகி, வீட்டில் பதமாய், வயிற்றுக்கு உபத்திரவம் செய்யாததாய்ப் பக்குவமாய்,  தயார் பண்ணி வைத்திருக்கும் உணவு வகைகள் இந்த இளைஞர்களுக்கு இறங்குவதில்லை. மண்ணு மாதிரி இருக்கு என்று கமென்ட் வேறு. எப்பப்பாரு…சாம்பார்…ரசம்…கூட்டு…கறி…இத விட்டா வேறே சாப்பாடே கிடையாதா? ச்சே….ஒர்ரே போரு….என்று அவர்கள் அந்த சோற்றுத் தட்டைத் தள்ளி விடும் அழகைப் பார்க்க வேண்டுமே…! அடா…அடா…அடா…காணக் கண்கோடி வேண்டும் அதற்கு….! அப்படியொரு வெறுப்பு அந்த முகத்தில்.  காலையிலிருந்து பாடாய்ப்பட்டுச் செய்து வைத்த அந்தத் தாயின் முகம் வதங்கின கத்தரிக்காய் போல் இம்புட்டாய்ச் சுருங்கிப் போகிறது. பெத்த மனம் பித்து…பிள்ளை மனம் கல்லுடீ பாவி…!  வியட்நாம் வீடு வசனம்தான் நினைவுக்கு வருகிறது எனக்கு….
     இந்த இளைஞர்களுக்கு புத்தியில் இருக்கும் எண்ணமெல்லாம் சதா ஆபீஸ் வேலைபற்றித்தான். கொடுத்திருக்கும் ப்ராஜக்டை எப்படி நேரத்தில் முடிப்பது. குறிப்பிட்ட கால அளவுக்குள் முடித்து விட முடியுமா, முடியாதா? எதாகிலும் பிரச்னை ஆகிப் போச்சுன்னா என்ன செய்வது? டெக்னிகல் லீடிடமிருந்து வரும் கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்வது, எப்படி சாமர்த்தியமாய்ச் சொல்லி சமாளிப்பது அல்லது எவனைச் சாட்டி விட்டுத் தப்பிப்பது அல்லது தான் நல்ல பெயர் எடுத்துக் கொள்வது என்பதாகத்தான். நீங்கள் நன்றாகக் கவனித்தீர்கள் என்றால் போட்டியும் பொறாமையும் செழித்து வளர்ந்து மண்டிப் புதராய்க் கிடக்கும் இடம் இதுதான் என்று தெரியும். எப்பொழுது பார்த்தாலும் தன்னை மீறி ஒருவன் போய் விடக் கூடாது என்ற சிந்தனையும், இவனைக் கீழே தள்ளினால் அவன் என்ன செய்வான், அவனோடு தொடர்பு கொண்டால் இவன் என்ன நினைப்பான், இவனுக்குத் தெரியாமல் அதை எப்படிச் செய்வது, செய்து முடித்து விட்டு எப்படிச் சொல்லிச் சமாளிப்பது என்கின்ற வகையிலான குயுக்தியான புத்தி இவர்களுக்கு மத்தியில் வேலை செய்வது போல் வேறு எங்கும் இருக்காது எனலாம். நம்பியாரின் வில்லத்தனம் நாராசமாய்ப் பரவிக் கிடக்கும் இடங்கள்தான் இந்த ஐ.டி. நிறுவனங்கள்.
இதனாலேயே இந்த இளைஞர்கள் வீட்டில் ஒரு சின்னக் காரியத்திற்குக் கூடப் பொறுமையற்றவர்களாய் இருக்கிறார்கள். மனம் விட்டு யாருடனும் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் மூத்த தலைமுறையின் விலாவாரியான பேச்சு இவர்களுக்குப் பிடிப்பதில்லை, அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை மதிப்பதில்லை அல்லது காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை.
குறிப்பாக இவர்களுக்குப் பெரியவர்கள் அட்வைஸ் பண்ணுவது பிடிப்பதேயில்லை. இந்த இளைஞர்களுக்குத் தங்களுக்கு எல்லாமும் தெரியும் என்ற நினைப்பில், எல்லாமும் கணினியில்தான் என்று  வேலை செய்பவர்களாய் இருப்பதனாலேயே, அதனை இந்த மூத்த தலைமுறை அறியாததனாலேயே அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் நாம் செய்யும் வேலைபற்றியெல்லாம் எதுவும் இவர்கள் புரிந்து கொள்வதற்கில்லை என்கிற வகையிலும், ஏதாவது நாம் சொல்லப் புகுந்தால் ”மொக்கை போடாதே…” என்று தற்காலத்தில் இவர்களுக்கு மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தையை அலட்சியமாய் நம்மை நோக்கி வீசிவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். வெறுமே நகர்ந்து விட்டாலும் கூடப் பரவாயில்லை. ரூமுக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறார்கள். பெற்றோர்களை, வீட்டில் உள்ள மற்றோரைப் பார்ப்பதைக் கூட இவர்கள் விரும்புவதில்லை என்பதுதான் ஜீரணிக்க வேண்டிய உண்மை.
இந்தக் கால இளைஞர்களுக்கு மத்தியில் எத்தனையோ கொச்சையான வார்த்தைகள் புழங்குகின்றன. அவை எவையும் ஒழுக்கத்தின்பாற்பட்ட சொற்கள் அல்ல என்று அடித்துச் சொல்லலாம். அப்பா, அம்மாவிடம், பெரியோர்களிடம், குடும்பத்தின் இதர உறுப்பினர்களிடம் இம்மாதிரி வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்திப் பேசக் கூடாது என்பது கூட இவர்களுக்குத் தெரிவதில்லை. அது மரியாதைக் குறைவானதாக அமையும் என்று இவர்கள் உணர்வதில்லை. எங்கேயிருந்து யார் கொண்டுவந்து இறக்குமதி செய்தார்கள் என்றும் தெரியவில்லை.
சப்ப மேட்டரு….என்கிறார்கள். மொக்கையாப் பேசாதே….கடல போடாதே…..ஜல்லியடிக்காதே…. தீயா இருக்கு, பத்திக்கிச்சு…செம கட்ட…. … லவுட்டிக்கிட்டு … - இன்னும் என்னென்னவோவெல்லாம் பேசுகிறார்கள். நான் ரொம்பக் கொஞ்சம்தான் சொல்லியிருக்கிறேன்.  யாருக்கு ஞாபகம் இருக்கிறது? நல்ல வார்த்தையே நிற்கமாட்டேன் என்கிறது? இல்லை, இதையெல்லாம் வலைத்தளத்தில்தான் தேட முடியுமா? டிக்-ஷ்னரியா போட்டிருப்பார்கள்?
அப்படி ஜாலியாய் இருக்கிறார்களாம். நாளைக்கு இவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா, அந்தப் பொண்ணு இவனைப்பத்தி என்ன நினைக்கும்? என்னா இப்டிப் பிள்ளை வளர்த்திருக்காங்கன்னு கேவலமா நினைக்காது? என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் படுபாவம். ஏனென்றால் பெண் பிள்ளைகளே இன்று அப்படித்தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் வீட்டிலுள்ள பெண் குழந்தைகள் அம்மாவிற்குக் காரியத்தில் உதவியாய் இருந்தன. இன்று? உபகாரம் இல்லாட்டாலும், உபத்திரவம் இல்லாம இருந்தாச் சரி…என்கிற கதைதான். என்னவோடியம்மா….வேலைக்குப் போயிட்டா…இன்னும் கொஞ்ச நாள்ல எவனாவது ஒருத்தன்டப் பிடிச்சுக் கொடுத்தாப் பொறுப்பு விட்டுது….என்றுதான் பெற்றோர்கள் நினைக்கும் நிலையிருக்கிறது.
சரி, அதாவது ஒழுங்காப் போயி, சரியான இடத்தில் முடியும் என்கிறீர்களா? அதற்கு சதா சர்வகாலமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா? எதிர்பாராத வகையில் காதல் நிகழ்வுகள் நடந்து போகின்றன. கொஞ்சம் நாகரீகமாய்ச் சொல்வோமே என்று சொல்கிறேன். ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்பதற்குப் பதிலாக ஒன்றும் ரெண்டும் மூன்று என்று ஆகிப் போகின்றன. ஒன்றும் ஒன்றும் என்பதிலேயே இந்த ஒன்றும் அந்த ஒன்றும் என்று நடந்து போகிறது. எதையும் வாய்விட்டுச் சொல்வதற்கில்லை.  காது கொடுத்துக் கேட்பதற்கில்லை. யாரும் மறுப்பதற்கில்லைதான். பலமாதிரியும்தான் இருக்கும் என்கிற காலமாகிப்போனது. பாவம் இன்றைய பெற்றோர்கள். ஈஸ்வரோ ரக்க்ஷது…! ஐ.டி. கலாச்சாரம் கொண்டு சேர்த்திருக்கும் இடம் இதுதான்….! மறுக்க முடியுமா?
மேலே சொல்லியிருப்பதெல்லாம் ரொம்பவும் சுருக்கம். கோடிட்டுக் காட்டியவை.  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். அது நல்லதற்கு!   இது?
                     -----------------------------------------------
            

கருத்துகள் இல்லை: