18 அக்டோபர் 2019

“தப்ப முடியாது” - அசோகமித்திரன் சிறுகதை - வாசிப்பனுபவம்“தப்ப முடியாது” - அசோகமித்திரன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்                வெளியீடு:- காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (அசோகமித்திரன் சிறுகதைகள்-2 தொகுதிகள்)                                                                                                       --------------------------------------------------------------------------------------
      1962 ல் வெளிவந்த இந்தச் சிறுகதை இன்றும் பொருந்தக் கூடியதாகத்தான் இருக்கிறது. இதில் சொல்லப்படும் அவலம் இன்றும் நீடிக்கிறது. கதையில் சொல்லப்பட்ட அளவை விட, மிகத் தீவிரமாக, மிக மோசமாக இப்போது சீர் கெட்டுப் போய்க் கிடக்கிறது. அன்றிருந்த மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதனிலும் மோசமாக புதிய தலைமுறையினரின் கைகோர்ப்போடு  சீரழிகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இளைய தலைமுறை அந்தக் குறிப்பிட்ட அவலத்தினால் கெட்டுப் போய்த்தான் கிடக்கிறது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.
      அன்று எந்த சுயநலம் ஒருவனைத் தடுத்ததோ அதே சுயநலம் அதனிலும் தீவிரமாக இன்றும் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருக்கிறது. அன்றாவது தட்டிக் கேட்க ஓரிருவர் இருந்தனர் என்று நினைத்துப் பெருமைப் படலாம். இன்றோ நமக்கெதற்கு வம்பு என்று கண்டு கொள்ளாமல் ஒதுங்கிப் போகிறவர்கள்தான் அனைவரும். காரணம் சமுதாய் அப்படி சிதலமடைந்த நிலையில். அதில் நீயும் ஒரு அங்கம்தானே? என்ற கேள்வி தெரிகிறதுதான். ஆனால் முடியாது.  வெறுமே வாய் கிழியப் பேசுவதற்கு என்றால் எந்தத் தடையும் இல்லை. வாயால் வழிய விடுதல்தானே...! செலவொன்றும் இல்லையே...சொற் செலவு தானே...! நாம் பின்பற்றுகிறோமோ இல்லையோ அடுத்தவனுக்குச் சொல்வதில்தான் எத்தனை சுகமிருக்கிறது? ஆனால் அப்படியாவது துணிந்து சொல்லிவிட முடிகிறதா? இல்லை.
      கண்கொண்டு பார்க்கும் அநியாயங்களையெல்லாம் அழித்தொழிக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் எதிர்க்க தைரியமில்லையே? தனி மனிதனாய் எப்படி எதிர்ப்பது? வீரியமாய்ப் பேசி அதை எப்படித் தடுப்பது? எதிர்ப்பதனால் நமக்கு ஏதேனும் பாதகம் வந்தால்? எத்தனையோ பேர் போகிறார்கள் வருகிறார்கள்...அவர்களுக்கில்லாத அக்கறை நமக்கு மட்டும் எதற்கு? நாம் எதிர்க்கிறோம் என்றால் யாராவது கூட முட்டுக் கொடுக்க வருவார்களா? ஒருத்தனும் வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் கடைசி வரை கூட நிற்பார்களா? அப்படியே நின்றாலும் நமக்கு ஏற்படும் நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வார்களா?
      ஏன் எனக்கு மட்டும் அந்தக் கோபம் வர வேண்டும்? நான் மட்டும் ஏன் பீறிட்டு எழ வேண்டும். எல்லோருக்கும் உள்ளது எனக்கு. இவ்வளவு எதற்கு? அது அவனுக்கும் அவளுக்கும் உள்ள பிரச்னை. நாம் ஏன் அனாவசியமாய் தலையிட வேண்டும்? என் ஜோலியைப் பார்த்துக் கொண்டு நான் போகவேண்டியதுதானே? உனக்கேன்யா இவ்வளவு அக்கறை? நீ யாரு இவளுக்கு? நீ யாரு எனக்கு? எங்களுக்கு? மாமனா, மச்சானா? நாங்க புருஷன் பொண்டாட்டி ஏதோ சண்டை போட்டுக்கிறோம், தீர்த்துக்கிறோம்...உனக்கேன்யா வந்தது? நீபாட்டுக்குப் போக வேண்டிதானே? உன்னை சமரசத்துக்கு நாங்க கூப்டமா?
      அவள் அரும்பாடுபட்டு சேர்த்து வைத்த காசை அவள் அசந்த வேளையில் அவன் திருடிக் கொண்டு விட்டான். அவளுக்குத் தெரியும்....அவன்தான் எடுத்திருப்பான் என்று. குடிகாரக் கணவனின் செயல்கள் புரியாதா என்ன? அவனோடுதானே இந்த வாழ்க்கைப் பாடு கழிகிறது. பைசா சம்பாதிக்க வழியில்லை. என்றேனும் சம்பாதித்ததையும் குடித்து குடித்து அழித்து, வீட்டிற்கு என்று எதுவும் கொடுப்பதேயில்லை. தெரிந்தால் தங்காது என்று தெரிந்துதானே ஒளித்து வைத்திருந்தேன். அதுவும் இவன் கண்ணில் எப்படிப் பட்டது?
      பணத்தை எடுத்தியா?                                                                       நான் எடுக்கல.....                                                                            பொய் சொல்லாத.... வயித்துப்பாட்டுக்குன்னு என் வாயைக் கட்டி வயித்தக் கட்டி...இந்தக் கொழந்தையக் காப்பாத்தணுமேன்னு....சிறுகச் சிறுக கொஞ்சம் சேர்த்து வச்சிருந்தா...அதையும் நீ திருடிட்டுப் போறியா.... நீ நல்லாயிருப்பாயா? குடு....குடுத்துடு....                                         நா எடுக்கலடி....சும்மா கத்தாத....நா எடுக்கலன்னா எடுக்கல....                               அடப் பாவி......இப்டி என்னப் படுத்துறியே....உன்னக் கட்டிக்கிட்டு நான் என்ன சொகத்தக் கண்டேன்?  என் பொழப்பு எப்டி நாசமாப் போச்சு..... - சட்டையைப் பிடித்து இழுத்து...குடு...குடு...என் காசைக் குடுத்திடு...கதறுகிறாள். - அவன் காதில் விழுந்தால்தானே...?
      அவளை அடிக்கிறான். தள்ளி விடுகிறான். அவள் பிடியை விடாமல் கதறுகிறாள். எட்டி உதைக்கிறான்....ரோட்டில் விழுந்து புரளுகிறாள். திரும்பவும் அவனிடம் சென்று சண்டைக்கு நிற்கிறாள். என் காசைக் குடுத்திடு...நீ நல்லாவேயிருக்க மாட்டே...குழந்தை பட்டினி கெடக்குது...அதுக்குப் பால் வாங்கப் பைசா இல்ல...தயவுசெய்து குடுத்திடு....                              அவன் கேட்பதாயில்லை. சண்டை தொடர்கிறது.  குறுக்கும் நெடுக்குமாகப் பலர் வந்து, போய்க்கொண்டிருக்கிறார்கள். அவரவர் பாட்டுக்கு வேடிக்கை பார்த்தவாறே நகர்கிறார்கள்.                 இவனும் பார்க்கத்தான் செய்கிறான். ஆம்...வெறுமே பார்த்துக் கொண்டுதான் நிற்கிறான். கையில் புகையும் சிகரெட். அந்த லைட் கம்பத்தின்  வட்டமான வெளிச்சத்திலிருந்து விலகி ஓரமாய் இருள் சூழ்ந்திருக்கும் பகுதியில் நின்று தன்னை மறைத்துக் கொண்டு பார்க்கிறான் அந்தக் காட்சியை.      இருள் தரும் பாதுகாப்பா அது? தன்னை இந்த சமுதாய நிகழ்வுகளிலிருந்து, கொடுமைகளிலிருந்து மறைத்துக் கொள்ளும் சுயநலம். எனக்கென்ன என்கிற மனோபாவத்தின் அடையாளம்...! வெறுமே வேடிக்கை பார்ப்பதில்தான் எத்தனை சுகம்? எவனுக்கோ நடக்கிறது. அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?
      இவன் குடிகாரன் என்பது தெரியாமல் அவள் ஏன் இவனுக்குக் கழுத்தை நீட்டினாள்? குடிகாரன் என்று தெரிந்த பின்பும் ஏன் இவனோடு வாழ்கிறாள்? ஏன் அவனை விட்டுப் பிரியமுடியவில்லை? குடி குடியைக் கெடுக்கும் என்று தெரிந்தும் அவன் ஏன் இந்தப் பழக்கத்திற்கு அடிமையானான்? ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பின்பும் இப்படி இருத்தல் தகுமா? என்ற அறிவு அவனுக்கேன் இல்லை? குடும்பம் சீரழியுமே என்கிற பயம் ஏன் அவனிடம் விட்டுப் போனது? சமுதாயம் தன்னைப் பரிகசிக்குமே என்கிற அவமானம் அவனுக்கு ஏன் மனதில் தோன்றவில்லை? அவனுக்கே தோன்றவில்லையெனில் வேடிக்கை பார்க்கிற எனக்கு மட்டும் ஏன் தோன்றவேண்டும்? அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன?       பாவி...என்னமோ ஆகிறாள்...எப்படியோ போகிறாள். அவள் மேல்...அந்தக் குழந்தை மேல் ஏன் எனக்கு இரக்கம் பிறக்கிறது? இரக்கம் பிறந்தும், கருணை சுரந்தும் ஏன் எதுவும் செய்ய இயலாதவனாய், கையாலாகவனாய் ஏன் மரம் மாதிரி இப்படி நிற்கிறேன்? அப்படியா ஒரு சுயநலம் ஒருவனுக்கு? கேள்விகள் கேள்விகளாய்....பயன்? மனத்தில் நினைத்தால் மட்டும் போதுமா? செயல்...? ஏதாவது செய்தால்தானே ? அவளை விடுவி...அவனை விரட்டு....பணத்தைப் அ வனிடமிருந்து பெற்றுக் கொடு....ஏன் மனம் துணியவில்லை...? எல்லாம் வேஷம்...சுயநலம்...மனிதர்களே ஒவ்வொருவரும் சுயநலக்காரர்கள்தான்...! தனக்கு வராதவரை எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஒதுங்கிப் போவதில் அப்படி ஒரு திருப்தி...! தனக்கு வரும்போது மட்டும் மற்றவர்கள் உதவிக்கு வர வேண்டும்...எப்படி வருவார்கள்? உனக்குத் தோன்றும் இதே மனநிலை அன்று அவர்களுக்கும் தோன்றாதா?
      நான் மட்டும் வாழ்ந்தால் போதும். என் மனைவி, என் பிள்ளைகள். என் குடும்பம்...தனி மனிதனின் சிந்தனைகள் இப்படித்தான் இருக்குமா? இது சராசரி மனிதனின் நடப்பியலா? எதிலும் தலையைக் கொடுக்காமல் தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மையா? அவனவன் ஒழுங்கா இருந்தா சமுதாயம் ஒழுங்கா இருந்துட்டுப் போகுது...நான் ஏன் இதைப் போய் திருத்த முனையணும்? எனக்கு என்ன அக்கறை? எக்கேடும் கெடட்டும்...நானா அவனைக் குடிக்கச் சொன்னேன். நானா அவள் சம்பாதித்து வைத்த பணத்தைத் திருடச் சொன்னேன். இவ்வளவு எதற்கு...அவன் குடிகாரன் என்று தெரிந்து நானா அவனை மணக்கச் சொன்னேன்...? அவளுக்கு எங்கே போயிற்று அறிவு?           
      பாவி....என்னமாய் அடம் பிடிக்கிறான். இவனெல்லாம் ஒரு ஆம்பளையா...இவனுக்கு ஒரு குடும்பமா? இவனுக்கும் ஒரு மனைவியா? கேடு கெட்டவன்...ஒரு பிள்ளையையும் வைத்துக் கொண்டு இப்படி ஊதாரித்தனமாய் இருக்கிறானே...இவன் விளங்குவானா? எத்தனை பேர் போகிறார்கள் வருகிறார்கள்? யாராவது ஒரு வார்த்தை கேட்கிறார்களா? எனக்கென்ன என்று கடந்து செல்கிறார்களே? இவர்கள் வீட்டில் இப்படி ஒன்று நடந்தால் சும்மாயிருப்பார்களா? இப்படிப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? இவர்கள் சகோதரி, தாய் என்று யாரேனும் இப்படி வதைப்பட்டால் மனசு கேட்குமா? இவர்கள் தந்தை இவ்வாறிருந்தால் அனுமதிப்பார்களா?
      யாருக்கோ வந்த துன்பம்...நமக்கென்ன வந்தது? யாரோ ரெண்டு பேர்...கணவன்...மனைவி...சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்....அதை எப்படி நாம் தடுக்க முடியும்? அவர்கள் என்ன எனக்கு உறவா? தெரிந்தவர்களா? யாரோ ரெண்டுபேர்தானே?  புருஷன் பெண்டாட்டி சண்டை வீட்டுக்குள் இருந்தால் பரவாயில்லை...வீதிக்கு வந்தால்?கேட்க வேண்டாமா? கேட்கவில்லையே...! எவருக்குமே மனசாட்சி இல்லையா?  இந்த அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிவு ஏன் எவருக்கும் இல்லாமல் போயிற்று? இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேரும் அப்படியா சுயநலமிக்கவர்களாய் மாறிவிட்டார்கள்? யாருக்கும் யார் கஷ்டத்தைப்பற்றியும் கவலையில்லையா? அவரவர் சுகமாய், நிம்மதியாய் இருந்தால் போதுமா? அவனவன் சரியா இருந்தா, சமுதாயம் சரியாத்தானே இருக்கும்? அதை இவுங்க ரெண்டு பேரும் கெடுத்துக்கிட்டா, ரெண்டு பேருமென்ன...அந்தப் பொம்பளை என்ன செய்திச்சு? எடுத்த காசைக் குடுன்னுதானே கேட்குது அதிலென்ன தப்பு? அவனத்தான் உதைக்கணும்....அவனுக்குத்தான் அறிவில்லை...புத்தியில்லை....தான் சம்பாதிக்க, சம்பாதிச்சு குடும்பத்தக் காப்பாத்த துப்பில்லைன்னாலும்  பொண்டாட்டி சேமிச்சு வச்ச காசை எடுத்து குடிச்சிட்டுக் கூத்தாட மட்டும் தெரியுது? இதுக்கு மட்டும் என்ன உரிமை? இவனெல்லாம் பிடிச்சு...அடிச்சு நொறுக்கணும்...
      அவள் அடிக்க விடுவாளா? ஓடிவந்து தடுப்பாளே...! வேண்டாங்க...பாவம்ங்க...உசிர விட்டிடப் போறாரு...அப்புறம் எனக்கிருக்கிற ஒத்த துணையும் போயிடும்...-இவனை அவள் இன்னும் துணையாய் நினைக்கிறாள். என்றேனும் அவன் திருந்துவான் என்று நம்புகிறாள். இந்தப் பழக்கம் யார்ட்டதான் இல்லை என்று அவனை சகித்துக் கொள்கிறாள். நான் வச்சிருந்த காசைக் கொடுத்திடு என்று மட்டும்தான் கேட்கிறாள். கொடுத்திட்டான்னா...அத்தோடு சரி...அவனை விட்டு விடுவாள். இரவில் வந்து அவன் அவளை அன்பு செய்தால் ஏற்றுக் கொள்வாள். அவளை ரசித்தால் தன்னையே கொடுப்பாள். இந்த ஒரு வாட்டி மட்டும் என்று ஏமாற்றி அவன் அவளிடம் இருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட முடியும்....பாவம்..இந்தப் பெண்கள்...என்ன ஒரு அப்பாவித்தனம்? கணவன் மேல் என்ன ஒரு அக்கறை...ஆயிரந்தான் ஆனாலும் எனக்கு அவர்தாங்க...! என்ன சொல்கிறாள் இவள்? தாலி கட்டிய தோஷத்திற்காக தெய்வமாவா கொண்டாடுவது? அவனும் மனிதன்தானே...! மனுஷன்தான்...ஆனா நல்லவனாயில்லையே? இல்லாட்டி என்ன...திருந்த மாட்டாரா? என்னவோ துரதிருஷ்டம்...இந்தப் பழக்கத்துக்கு அடிமையாயிட்டாரு....எங்களுக்கும் நல்ல காலம் வராமலா போகும்?
      ஐயோ...எனக்கு உறக்கம் வரவில்லையே...! அவள் நினைப்பாகவே இருக்கிறதே...! இப்படி அவனை எதுவும் கேட்காமல், அவனை கண்டிக்காமல், அவனிடமிருந்த பணத்தைப் பறித்து அவளிடம் கொடுக்காமல்....எனக்கென்ன என்று வந்து விட்டேனே...? இவ்வளவுதான் என்னால் முடியுமா? நான் கோழையா? நமக்கெதற்கு வம்பு? என்று நினைத்துவிட்டேனா...? நான் மட்டுமா நினைத்தேன்...அந்த வீதியில் சென்று கொண்டிருந்த அத்தனை பேரும்தானே நினைத்திருப்பார்கள்? யார்தான் காப்பாற்ற முன் வந்தார்கள்? ரெண்டு பேர் வந்து நின்று பார்த்துக் கொண்டேயிருந்தார்களே? ஆனால் அவர்களும் ஒன்றும் செய்யவில்லையே... தங்கள் வெள்ளை சட்டை வேட்டி அழுக்காகி விடக் கூடாது, கசங்கி விடக் கூடாது என்பதுபோல் சற்று நேரம் வேடிக்கை பார்த்து விட்டுச் சென்று விட்டார்களே...! .
      இதுதான் இந்தச் சமுதாயத்தின் யதார்த்தமா? இதுதான் இன்றைய உலகின் நடப்பியலா? என் மனதைப் போட்டு இப்படி வாட்டுகிறதே இந்த விஷயம்? இன்று பார்த்து அங்கு ஏன் போனேன்? அந்தக் காட்சியை ஏன் பார்த்தேன்? ஒரு வேளை அவர்கள் கணவன் மனைவியே இல்லையோ...வேறு ஏதேனும் உறவோ? சகோதரனோ? அல்லது அவள் தவறானவளோ? அவன் தவறானவனோ? அதுவே சந்தேகம்தானே...! பிறகு நான் ஏன் இவ்வளவு வருந்த வேண்டும்...அடடா...! இந்த மனசுதான் என்னெல்லாம் நினைக்கிறது? எப்படியெல்லாம் எண்ணி எண்ணிப் புழுங்குகிறது? எனக்கு நானே கேள்விகளாய் கேட்டு, எனக்கு நானே எதையேனும் புளுகிக் கொண்டு...சமாதானம் பண்ணிக் கொள்ள வேண்டியதுதானா? மனசாட்சி உறுத்தும் இந்தக் கேள்விகளிலிருந்தெல்லாம் யாரும் தப்பிக்க முடியாதோ? எனக்கென்ன என்று இருந்து விட முடியாதோ? - கேள்விகள் தொடர்கின்றன.
      அப்படியே உறங்கிப் போகிறான் அவன். மறுநாள் எப்பொழுதும் போல் ஒரு புதிய நாளாக விடிகிறது.
      கதையை தயவுசெய்து படித்து விடுங்கள்...மேற்குறித்த கருத்துக்களெல்லாம் கதையின் சாரத்தில் எனக்குள் எழுந்த ஏராளமான கேள்விகள். அசோகமித்திரன் எழுப்பி விட்ட மனசாட்சியில் எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்விகள். யாரும் மனசாட்சியைத் தட்டிக் கழிக்க முடியாதுதான். அதே சமயத்தில் ஒரு சராசரி மனிதன், அப்பாவி மனிதன்....இவ்வளவுதான் செய்ய முடியும் என்பதே யதார்த்தம்....ஆனால் ஒன்று. இம்மாதிரிக் கேள்விகள் ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தொடர்ந்து எழுமானால் அவன் தவறுகள் செய்யாதவனாய், ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்ளக் கூடியவனாய் இருக்க வாய்ப்புண்டு.. ஒவ்வெரு தனி மனிதனும் தனக்குத்தானே இம்மாதிரிக் கேள்விகளைக் கேட்டுக் கொள்வானேயாகில் அவன் தவறுகள் செய்ய மாட்டான். நேர்மையான, அப்படிப்பட்ட மனிதர்கள் ஒன்று சேரும்போது இந்த சமுதாயம் மேம்படும். இதைத்தான் அசோகமித்திரன் “தப்பிக்க முடியாது“ என்று தலைப்பிட்டு நமக்கு வழங்குகிறார்.
      இதைப் படிக்காமல் நீங்கள் யாரும் தப்பிக்க முடியாது....தப்பிக்கக் கூடாது. இது என் அன்பு வேண்டுகோள்....வாசக நண்பர்களே...!!! அசோகமித்திரன் சொல்கிறார்:-
      “நான் எழுதும் எழுத்தை, நான் புரிந்து கொள்ளும் வகையில் புரிந்து வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் என்றுதான் நான் எழுதுகிறேன். மனித மனநிலை ஓயாமல் ஊசலடிக் கொண்டிருப்பது என்பது என் அனுபவம். அதனால் அடுத்தடுத்து வரும் இரு வாக்கியங்கள் கூட அந்த ஊசாட்டதைப் பிரதிபலித்தால்தான் எழுத்து உண்மையானது என்று நான் நினைப்பேன்”
     எத்தனை உன்னதமான படைப்பாளி...?!!!
     ஓயாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும் மனசாட்சியின் கேள்விகளாய் “தப்ப முடியாது” என்ற இந்தச் சிறுகதை எப்படிப் பொருந்திப் போகிறது அவரது கூற்றுக்கு?
                           ----------------------------------------------------
     கருத்துகள் இல்லை: