01 அக்டோபர் 2019

“ஒட்டாத செருப்பு” - சிறுகதை - கரிச்சான் குஞ்சு - வாசிப்பனுபவம் - உஷாதீபன்


ஒட்டாத செருப்பு” - சிறுகதை - கரிச்சான் குஞ்சு - வாசிப்பனுபவம் - உஷாதீபன்
வெளியீடு:- காலச்சுவடு மாத இதழ்- அக்டோபர் 2019                                             


                                     --------------------------------
       சின்ன வயதிலிருந்தே எனக்கு வெள்ளைச் சட்டை என்றால் விருப்பம் அதிகம். ஆனால் இன்றுவரை அதைப் போட வாய்க்கவேயில்லை. போட என்றால் போட்டு நன்றாக அனுபவிக்க. எந்த முறை ஆசைப்பட்டு வெள்ளைச் சட்டை எடுத்தாலும், அல்லது துணி வாங்கித் தைத்தாலும், போட்டுப் பத்து நாட்களுக்குள் அதில் கறை படிந்து விடும். பளிச்சென்று தெரியும். கறை என்றால் சோப்புப் போட்டுக் கசக்கினால் போய்விடும் கறை அல்ல. எதைப் போட்டு, என்ன கசக்குக் கசக்கினாலும் போகாத கறையாக நிரந்தரமாகத் தங்கிவிடுகிற கறையாகப் படும். அது எனக்கான ராசி. அதுவும் மார்புக்கு நேரே நம்மைப் பார்ப்பவர் கண்களில் பளீரென்று அதுதான் முதலில் படுவதுபோல் படிந்து விடும். ஆகையினால் வெள்ளை நிறம் என்பது விலக்கான நிறமாகி விட்டது எனக்கு.
       என் சித்தப்பா மேல் எனக்குக் கொள்ளைப் பிரியம். சகோதரர்களான எங்களோடு அத்தனை பாசமாக இருப்பார் அவர். மன்னி, மன்னி என்று எங்கள் அம்மா மேலேயும், மன்னி பிள்ளைகளான எங்கள் பேரிலேயும் அவ்வளவு அன்பு அவருக்கு. பெரியகுளத்தில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார் அவர். எங்களையெல்லாம் பெரியகுளத்திற்கு வரவழைத்து ஒரு நண்பரோடு சைக்கிள் எடுத்துக் கொண்டு வைகை டேம், கும்பக்கரை, சினிமா என்று கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்தார்.
       பெரியகுளம் ஜெயா தியேட்டரில் அன்று நாங்கள் பார்த்த படம் பாலும் பழமும். சினிமாவுக்குப் போவதற்கு முன் எனக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுத்தார் சித்தப்பா. வாங்கி்ன உடனே போட்டுக் கொள்ள வேண்டியதுதானே....நான் மாட்டேன் என்று விட்டேன். புதுச் செருப்பு அழுக்காயிடும் என்று தியேட்டரில் படம் பார்த்தபொழுது மடியில் தூக்கி வைத்துக் கொண்டேன். அந்தச் செருப்பு என்னிடம் வந்த பிறகு ராத்திரித் தூக்கம் கூடச் சரியாயில்லை எனக்கு. யாரேனும் வராண்டாவிற்கு வந்து செருப்பைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்களோ என்றெல்லாம் பயந்தேன். இத்தனைக்கும் வாசல் கதவு பூட்டித்தான் கிடந்தது. வீட்டிற்கு யார் வந்து போனாலும், அவர்கள் போன பிறகு அந்தச் செருப்பு அங்கே இருக்கிறதா என்று போய்ப் பார்ப்பேன். மற்ற பழைய செருப்புகளிலிருந்து என் செருப்பைத் தனியாய்ப் பிரித்து வைப்பேன். அதெல்லாம் பழசு...இது புதுசு....இதுதான் என் எண்ணம். அத்தோடு யார் கண்ணிலும் சட்டென்று பட்டுவிடாதபடிக்கு கதவுக்குப் பின்புறமாய்ப் போட்டு வைப்பதும் என் வழக்கமாயிருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் அந்தச் செருப்பு பிய்ந்து போய் படிப்படியாய் தன் வாழ்வை முடித்துக் கொண்டது.
       இத்தனை முஸ்தீபு எதற்கு? கேட்கிறீர்கள்தானே? படிக்கும் கதைகளை நம் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளுதல் என்பது வாசக மனதின் அனுபவம். ஸ்வாரஸ்யம். படைப்புக்களின் தன்மையை, படைப்பாளியின் ரசனையை அப்பொழுதுதான் ஆழ்ந்து உணர முடியும். அவன் உருவாக்கிய உலகத்திற்குள் போய் வர முடியும். அதுதான் நம் உழைப்பைச் செலுத்தி ரசிக்கும் படிப்பு. நவீன இலக்கிய வாசிப்பு என்பது இந்த வகையைச் சார்ந்ததுதான்.
       கரிச்சான் குஞ்சு கதையைப் படித்தபோது இந்தப் பழைய நினைவுகளெல்லாம் கிளர்தெழுந்து வி்ட்டது எனக்கு. அநேகமாக எல்லோர் வாழ்க்கையிலும் இந்த மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். நம் செருப்பை இன்னொருவர் போடப் பிடிக்காது நமக்கு. அதுபோல் அடுத்தவர் செருப்பையும் போட நமக்குப் பிடிக்காது. ஒட்டுவாரொட்டி போல் அவர் காலில் இருந்த ஏதேனும் ஒரு வியாதி அந்தத் தோலில் படிந்து கிடந்து, அதை நாம் போடப்போக அது நம் காலில் ஒட்டிக் கொண்டு தொற்று வியாதி ஆகிவிட்டால்? ஒருவர் செருப்பு இன்னொருவருக்கு அளவும் சரியாக இருப்பதில்லையே? ஆனாலும் அங்கங்கே செருப்புகள் தொலைந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்யாண மண்டபங்களில், கோயிலுக்குப் போன இடங்களில் என்று. எங்கெங்கே செருப்புக்களை கழற்றி வாயிலில் போடும் நிலை வருகிறதோ அங்கெல்லாம் நம் செருப்பின் மீது நம் கவனம் சற்றுக் கூடத்தான் இருக்கும். உள்ளே சந்நிதியில் கை கூப்பி கண்மூடி நிற்கையில் வாசலில் போட்ட செருப்பு ஞாபகம் மனதில் நிறைத்திருப்பதைச் சொல்லும் பழைய புதுக் கவிதை கூட ஒன்று உண்டு.  
       போனாப் போகுது என்றால் அரதப் பழசாய் இருந்தால் அந்த எண்ணம் ஏற்படும். சரி என்று தொலைந்து போனால்தான் தெரியும் அந்தக் கஷ்டமும். புதுச் செருப்பு வாங்க உடனடியாகப் பணம் இருக்க வேண்டும், கடை பக்கத்தில் இருந்தாக வேண்டும், அதுவரை செருப்பில்லாத காலோடு நடந்தேற வேண்டும். பலருக்கு செருப்பில்லையென்றால் நடக்கவே வராது. ஐயோ, அம்மா...என்று ஒவ்வொரு தப்படிக்கும் வலி வலியென்று துடித்துப் போவார்கள். அதுவும் கோயில் பிராகாரத்தைக் கொதிக்கும் கல் வரிசையில் சுற்றி வரும்போது ஏற்படும் அனுபவமே தனிதான். நம்மில் ஏறக்குறைய எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டுதானே...!
       “ஒட்டாத செருப்பு“ - இது கரிச்சான் குஞ்சு எழுதிய பழைய கதை. அக்டோபர் 2019  மாதக் காலச்சுவடு இதழ் கைக்கு வந்ததும் ஆர்வமாய் நான் முதலில் படித்தது இந்தக் கதையைத்தான்.  சாமாவுக்கு முதலில் வாங்கிய புதுச் செருப்பு தங்கவில்லை. தொலைந்து போகிறது. வெகுநாளைக்கு வெறுங்காலோடேயே அலைகிறான். வாங்கி பத்து நாளைக்குள் தொலைந்தால்? சொளையாய் எட்டு ரூபாய் கொடுத்து வாங்கியது. அந்தக் காசைச் சேர்ப்பதற்காக அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்? ஆகையினால் கொஞ்ச நாளைக்கு வெறுங்காலோடேயே இருந்தால்தான் மனசு ஆறும். அந்தச் செலவு தண்டச் செலவாகிப் போனதிலிருந்து மனசு விடுபடும்.
        நடந்து நடந்து பாதம் வலியெடுத்துப் போகிறது. உட்(ற்)பாதம் வலியெடுத்தால் எத்தனை நாளைக்குத்தான் தாங்குவது. கல் அழுத்துகிறது. கால் வலி பின்னுகிறது. விலை குறைந்த செருப்பு ஒன்றை வாங்குகிறான். அதுவோ காலைக் கடித்து, புண்ணாக்கி விடுகிறது.  புண் ஆறிய பிறகு போட்டுக் கொண்டு ரெண்டு மூன்று நாள்தான் நடந்திருப்பான். ஆணி பிடுங்கிக் கொள்கிறது. தையல் பிரிகிறது. உள்ளே செருகப்பட்டிருக்கும் அட்டை உதிர ஆரம்பிக்கிறது. அந்தச் செருப்பும் நிற்கவில்லை.
       அநியாயமா ஏமாத்தியிருக்கான்..சாமி......என்று சொல்லி, குறைந்த விலைக்கு அதுவும் ரெண்டு ரூபாய்க்கு நான் தர்றேன் புதுச்செருப்பு என்று தருகிறான் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி.. அதையும் போட்டுக் கொண்டு அலைகிறான் சாமா. சில்லரை சில்லரையாய் பழுது பார்க்க ஆன செலவைக் கூட்டிப் பார்த்தால் அது பன்னிரெண்டு ருபாய்க்கு மேல் வருகிறது.  செருப்பு ராசியே இல்லை போலும்...!
       ஆனால் ஒன்று. இந்த அனுபவத்தில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.. அந்தத் தோல் தொழிலாளர்கள் பேசுபவைகளைக் கேட்டபோது கிடைத்த அனுபவம் மிகப் பெரியது. மருந்து மாத்திரை வாங்கி வாங்கி எந்த வியாதிக்கு என்ன மருந்து என்று அனுபவம் ஆகிப் போவது போல....!
       ஆனால் ஒன்று. இனி செருப்பு வாங்கினால் ஸோலோவாக ஒரே தோலில் ஒட்டியும், தைத்தும் இருக்கும் “கான்பூர்” இங்கிலீஷ் செருப்புதான் வாங்க வேண்டும் என்று மனதுக்குள் வைராக்கியம் பிறக்கிறது. பொருளாதார வசதி கூடிவரவேண்டுமே...!
       ஐந்து கதைகள் எழுதி முடித்தவன் ஆறாவதாய் ஒரு கதையையும் எழுதுகிறான். பணம் கிடைக்கிறது. ஆனால் சாமாவின் மனைவி அந்தப் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு போய் பத்திரப்படுத்தி விடுகிறாள். வருஷத்துக் அஞ்சுதானே எழுதுவீங்க...அஞ்சுன்னே நினைச்சுக்குங்க....என்கிறாள். புதிய செருப்பு வாங்கும் ஆசை பட்டுப் போகிறது. மனைவியைப் போட்டு அரிக்கிறான். தாங்கமாட்டாமல் பத்து ரூபாயை எடுத்து நீட்டுகிறாள் அவள். புதுச் செருப்பு வாங்குகிறான்
       செருப்பில்லாமல் இருந்தபோது நிம்மதியான பாடாய் இருந்தது. இப்போது புதுச் செருப்பு வந்ததும், அதைப் பாதுகாக்க வேண்டுமே என்கிற கவலையும் கூடவே வந்து தொலைத்து விட்டதே....! ஆனவரை வெளியே போவதைத் தவிர்க்கிறான். தொட்டதற்கெல்லாம் செருப்போடு போக, போகும் இடத்தில் கழற்றிப் போட, தொலைந்து போனால்....? எவனிடம் ஐவேஜூ இருக்கிறது திரும்பத் திரும்ப வாங்க...? செலவு செய்யலாம்...விரயம் பண்ணலாமா? தொலைந்தால் அது விரயம்தானே?
       ஏற்கனவே வீட்டில் திட்டு. குழந்தைகளுக்கு ஒரு நல்ல சட்டை இல்லை. எனக்கு ஒரு புதுப்புடவை இல்லை. அரைப் பழசைக் கட்டிக்கொண்டு அலைகிறேன். இதில் எட்டுக்கும் பத்துக்கும் புதுச் செருப்பா? ரொம்ப அநியாயம்....
       கண்டிப்பாய் இந்தச் செருப்பை ஜாக்கிரதையாய் வைத்துக் கொண்டே ஆக வேண்டும். பழி பாவத்துக்கு ஆளாக முடியாது. பத்தினி சாபம் பலித்தே தீரும். ஸ்ரீராமநவமி உத்சவம், சங்கீதக் கச்சேரி, கோயில், குளம் என்று எங்கும் நகர பயமாகவே இருக்கிறது. இருந்தாலும் தொல்லை...இல்லாவி்ட்டாலும் தொல்லை. வெறுங்காலோடு வெயிலில் வேகு வேகுவென்று எப்படிப் போய்விட்டுத் திரும்புவது? உபந்நியாசம், பஜனை, நாட்டியம் என்று எல்லாமும் இப்போதுதான் தடபுடலாய் இருக்கிறது.
       மனதைத் திடப்படுத்திக் கொண்டு செருப்போடேயே கிளம்பி விடுகிறான் சாமா. யாரோ முக்கியமானவருடைய லெக்சர். என்ன ஒரு கூட்டம்? புதுசுபுதுசாய் ஆட்கள் தென்படுகிறார்களே? ஒரே செருப்புக் கூட்டம்.... இதற்கு நடுவில், இந்தப் பழஞ்செருப்புகளுக்கு நடுவில் நம் புதுச் செருப்பு, பளிச்சென்று தெரியுமே? செருப்புத் திருட, அதுவும் புதுச் செருப்புத் திருடவென்று எத்தனை பேர் அலைகிறான்? படிப்பது ராமாயணம், இடிப்பது? கோயிலும், குளமும், உபந்நியாசமும், லெக்சரும் மனசை சுத்தப்படுத்தாதா? அவர்களா இந்தக் காரியத்தைச் செய்வார்கள்? போய் உட்கார்ந்து விடுகிறான் சாமா.
       பார்வை எத்தனை குறிப்பாய் வாயிலில் இருந்தாலும், திரும்ப வந்து பார்த்தபோது பயந்தபடியே செருப்பைக் காணவில்லை.   பரபரவென்று தேடிப் பார்த்தான். ஊறீம்.....ஒவ்வொன்றாய் ஒதுக்கிப் பார்த்தான். புதுசு மாதிரி இருந்ததையெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்த்தான். இவன் செருப்பைப் போல சில இருந்தன. ஆனால் இவன் செருப்பல்ல. அது கருக்கழியாமல் இருந்ததே...! அநியாயமாய் அதற்குள்ளாகவா? வீட்டில் கேட்பாளே? என்ன பதில் சொல்வது? கொஞ்ச நாள் அனுபவித்துத் தொலைந்து போயிருந்தாலும் பரவாயில்லை. வாங்கி, போட்டு, அந்த சந்தோஷம், திருப்தி இன்னமும் தீரவில்லை...அதற்குள் தொலைந்தால்? ச்சே...! செருப்பு ராசியே இல்லை.....! என்ன ஜென்மம்? வெறுத்துப் போகிறான்.
       பால்ய நண்பன் முத்துவிடம் கேட்க....கவலைப் படாதே...அடுத்தாப்ல ராதாகிருஷ்ணா நாட்டியம் இருக்கு...அதுக்கு திரும்ப எல்லாரும் வருவாங்க...இது ஒரு சின்ன ப்ரேக்...அவ்வளவுதான்...எடுத்துப் போனவன் கண்டிப்பா போட்டுட்டு வருவான். அப்போ உன் செருப்பை அடையாளம் கண்டு பிடிச்சிடலாம்....
       புத்தம் புதுச் செருப்புடா...ஏழரை ரூபா....
       புலம்பாதே...பீடை தொலைஞ்சிதுன்னு விடுவியா...?
       நல்லாச் சொன்னடா...உன்னுதுன்னா அப்டி இருப்பியா? தெய்வ பக்தியாம்..தெய்வபக்தி...! தெய்வபக்தி உள்ளவனுக்கு திருட்டு புத்தி...!
       அதுக்கில்லடா...எடுத்திட்டுப் போனவன்...உடனேயும் கால்ல மாட்டிட்டு இங்க வருவானா? அவனுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு...?
       நான் உள்ளே வரலை...நீ போ என்று சாமா சொல்ல...கடைசியில் இருவரும் தாழ்வாரத்திலேயே உட்கார்கிறார்கள். வருபவர்களின் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கிறான் சாமா. உன்னிப்பாய்...ச்சே...இதென்ன பிழைப்பு...நாறப் பிழைப்பு...? இறைவன் இன்று என் பொழுதை இப்படி வைத்து விட்டானே...!  என்ன பாவம் செய்தேன்?
       அதோ ஒருவர் வருகிறார்....உறா.....என் செருப்பு....? என்னுடைய செருப்பேதான்.....அடப் பாவி மனுஷா....புத்தம் புதுச் செருப்பை எடுத்திட்டு, என்ன கம்பீரமா வர்றான் இந்தாளு? திண்ணையருகே கழற்றிவிட்டு உள்ளே போனவர் சற்றுப் பொழுதில் திரும்பவும் வெளியே வர....இந்தச் செருப்பு உங்களுடையதா...? சாமாவைப் பார்த்துக் கேட்க...விழித்துப் போகிறான்.  பிறகு நிதானிக்கிறான்.
       ஆமா...என்னோடதுதான்....இல்ல...இல்ல....ஆனால்.....?
       மன்னிச்சிக்கணும் சார்....இது உங்களோடதுதான். என்னுடைய செருப்பும் இதே அச்சு. ஆனா இவ்வளவு புதிசு இல்லை....தெரியாம, சரியா கவனிக்காம மாட்டிக் கொண்டு போயிட்டேன். என்னோடத தேடினேன்...காணோம்....ஒருக்கால் நீங்கள்...உங்களுடையதை எங்கே போட்டிருக்கிறீர்கள்?
       அதெல்லாம் இல்லை...கெட்டுப் போனதுதான் என் செருப்பு. இது என்னோடது இல்லை. இது உங்களுடையதுதான்....என்றான் சாமா. முத்துவிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் வெறுங்காலோடு கிளம்பினான்.
       செருப்பெங்கே...? மனைவியின் கேள்வி....வாசலில் தடுத்து நிறுத்துகிறது. அவளுக்கும் அதே ஞாபகம்தான்.
       ஒண்ணும் கேட்காதே...! இனிமே செருப்பே வாங்கப்போறதில்லை....
       புரிந்து கொண்டாளோ...!இனிமே ஒஸ்தியா வாங்காதீங்கோ....சனியன் ஒட்ட மாட்டேங்கிறதே...! - சாமாவின் மனக் கண்ணில் அந்தக் காட்சி....திரும்பத் திரும்ப.....
       அந்தக் கால்...தன் புதுச் செருப்பைப் போட்டு வந்த அவரின் கால்...கால்...கால்....ஒரு மாதிரியாய் இருந்ததே...! நினைத்தபோது இப்பொழுதும் அருவருப்பாய் இருக்கிறது அவருக்கு!!!!
       காணாமப் போனதுதான் என் செருப்பு...இது என்னோடது இல்ல....? - சொன்னாரே...!  
       கதை சொல்லியின் ரசனையோடு, காலச்சுவடு அக்டோபர் இதழ் கிடைத்தால் உடனே படித்து விடுங்கள். ஒரு நல்ல செய்தி -
       கரிச்சான் குஞ்சுவின் மொத்தச் சிறுகதைகள் விரைவில் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கிறது
                                  ------------------------------------------------
      

      




கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...