01 அக்டோபர் 2019




பசி”  - வண்ணநிலவன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்                            வெளியீடு:- காலச்சுவடு அக்டோபர் 2019 இதழ்
     கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே ரொம்ப காலம் எழுதாமல் இருந்த ஒருவர், மறுபடியும் இப்போது எழுதும்போது, அந்தப் பழைய எழுத்துத்தான் இது என்று ஏனோ மனதில் தோன்றி விடுகிறது.
     அத்தோடு கதாபாத்திரங்கள் பேசும் மொழியில், தலைமுறைகள் கடந்த வேளையில் இப்போதும் இந்த வழக்கு பேசும் ஆட்கள் இருக்கிறார்களா  என்று ஏனோ சந்தேகம் வருகிறது. அந்த வட்டார பாஷை பேசும் மக்கள் முற்றிலுமா அழிந்து போனார்கள்? அல்லது அவர்களின் வழி வழி இளைய தலைமுறையினர் அதைத் தொடராமல் விட்டார்களா? இன்னும் சிலரேனும் மிஞ்சித்தானே இருக்கக் கூடும் என்கிற சமாதானத்துடனேயே தொடரலாம்தான்.
     இவர் நம் ஆதர்ஸ எழுத்தாளர் என்கிற மதிப்பில் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கி றோம். அந்தப் பழைய கதை சொல்லும் பாணிதான் என்றாலும்.... என்கிற உணர்வுடனேயே தொடர்கிறோம்.
     பழைய கதையை -  என்று எப்படிச் சொல்லலாம்? இப்போதும் அந்த நடைமுறைகள் இல்லாமலா போயிற்று? சாமி கும்பிடுதலும், வேண்டுதலும், படையலும் அழிந்தா போயின? குல தெய்வ பழிபாடும், கோயில் கொடையும் இல்லாமலா ஆகி விட்டன? அதைச் சொல்லித் தூக்கி விடுவதற்கு சில பெரியவர்களேனும் மூத்த தலைமுறையினராய் இன்றும் இருக்கத்தானே செய்கிறார்கள்? அந்த வழி முறைகளை விடக் கூடாது என்று வலியுறுத்தி, நினைவுபடுத்தி, அவையே நம்மைக் காக்கும், நம்குலத்தைக் காப்பாற்றும் கவசங்கள்,  நம்பிக்கைகள் என்பதை அழியாது பாதுகாக்கத்தானே செய்கிறார்கள்?
     அதை அப்படியே வெறும் கதையாய்ச் சொல்வதைவிட சற்றே மாற்றம் செய்து கொஞ்சம் மாய யதார்த்தம் கலந்து  அதன் மூலம் அந்த நம்பிக்கைகளை நிலை நிறுத்தலாமே என்று முயன்றிருக்கிறார் பழம் பெரும் படைப்பாளியான மதிப்பிற்குரிய திரு வண்ணநிலவன்.
     காலச்சுவடின் அக்டோபர் 2019 இதழின் “பசி” சிறுகதை இன்று படித்ததில் மனதுக்குள் வட்டமிட ஆரம்பிக்கிறது.
     அன்றாடம் பொழுது எப்படி விடிகிறதோ அது போல் நம் வீடுகளும் விழிக்க வேண்டும். இல்லையென்றால் அதையே நியமமாய் வைத்திருப்பவர்களுக்கு வீட்டில் மற்றவர்கள் முடங்கிக் கிடந்தால் எரிச்சல்தான் வரும். உரிமையுள்ளவர்கள் என்றால் ரெண்டு வார்த்தையும் வெளிப்படும். ரொம்பவும் நெருக்கம் என்கிற உறவு இருக்குமாயின் அது திட்டுதலாய் மாறும். இது இயற்கை.
     வழக்கமான காலை ஷிப்டுக்குப் போகாமல் மதிய ஷிப்டுக்குப் போய்க்கொள்வோம் என்று  இன்னும் எழாமல் இருக்கிற புருஷன் கந்தசாமியைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் ரத்தினம்.
     மனிதர்கள் எப்படி பசி பொறுக்க முடியாமல் வேளா வேளைக்குத் தவறாமல் சாப்பிட்டுப் பசியாறுகிறோமோ அதுபோல குலதெய்வ சாமியையும் கிராம மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். இல்லையென்றால் சாமியே பசியெடுத்து அலைய ஆரம்பித்து விடும் அபாயம் உண்டு.
     அப்படியான ஒரு பசியில் ஏழுவீட்டு சாஸ்தா இவர்கள் வீட்டுக்குள் நுழைந்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டு கம்பி நீட்டி விடுகிறார். சொம்பில் இருந்த பாலைக் குடிக்கும்முன் பூனை தட்டி விட்டு அதை நக்கிக் கொண்டிருக்கிறது. தண்ணி எடுக்கப்போன ரத்தினம் பால் சொம்பு உருண்டு கிடப்பதையும், அடுப்பில் அடுக்கியிருந்த சோறு குழம்பெல்லாம் வழித்துத் துடைத்துக் காலியாகக் கிடப்பதையும் பார்த்து அதிசயிக்கிறாள்.
     சுருட்டி மடக்கி எழுந்த கந்தசாமிப் பூசாரி, கார்சேரிக்காரர் கோயிலுக்கு பூசைக்காக வரேன் என்றிருந்தாரே என்று அவசர அவசரமாகக் குளிக்கப் போகிறான். வெகு நாளாய் முறையான கால இடைவெளியில் படையல் போடும் வைபவம் எதுவும் நடக்கவில்லையே என்று பசியோடு காத்திருந்த ஏழுவீ்ட்டு சாஸ்தா, கந்தசாமி வீட்டுக்குள் ரகசியமாக வந்து அவர்கள் அறியாமலே பசியாறிவிட்டுச் செல்கிறார். இக்கதை கிராமத்து நம்பிக்கை சார்ந்த விஷயமாகவும், சாஸ்தா ப்ரீதி கொண்ட பயத்தின் அடையாளமாகவும், கிராமங்களின் அடியொட்டிப் போயிருக்கின்ற இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு என்றும் அழிவில்லை என்பதையும் இக்கதை மூலம் நமக்குச் சொல்லும் செய்தியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கோயில் கொடையையும், அந்தப் பூஜைகளையும் வேலைக்குப் போவதைத்  தள்ளிப் போடுவது போல், நினைக்க நேரமில்லாமல், அல்லது அக்கறையில்லாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தால், தனக்குச் சேர வேண்டிய பங்கினை சாமி எப்படியும் எடுத்துக் கொள்ளும் என்கிற கால காலமான நம்பிக்கையை இக்கதை மூலம் நினைவு படுத்தியிருக்கிறார் வண்ணநிலவன்.
                           -----------------------------------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...