14 செப்டம்பர் 2019

“தாசில்தாரின் நாற்காலி” - விமலாதித்த மாமல்லன் -சிறுகதை வாசிப்பனுபவம் - உஷாதீபன்


தாசில்தாரின் நாற்காலி” - விமலாதித்த மாமல்லன் -சிறுகதை                                வாசிப்பனுபவம் - உஷாதீபன். 
வெளியீடு:-சிறுகதைத் தொகுப்பு இளநிலைப் பட்டப் படிப்பு (கருவமுறை) முதலாண்டு முதல் பருவம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
       அரசு அலுவலகங்களில் வேலைகள் எப்படித் தேங்கிக் கிடக்கின்றன என்பதையும், ஒரே மாதிரியான வேலைகளைச் செய்து செய்து அலுத்துப் போய்க் கிடக்கும் பணியாளர்களையும், அதிலேயே தவிர்க்க முடியாமல் சோம்பேறித்தனம் எப்படி மண்டிப் போய்க் கிடக்கிறது என்பதையும், அடுத்தடுத்த பணியாளர்களின் மாற்றத்தின் போதும் கூட எந்தவித மாறுதலும் ஏற்படுவதில்லை என்பதையும் பூடகமாக ஒரு தாசில்தாரின் நாற்காலி தன் குறையைச் சொல்லிக் கடிதம் எழுதுவது போல் புனைந்து அற்புதமாக ஒரு சித்திரத்தைத் தீட்டியிருக்கிறார் விமலாதித்த மாமல்லன்.

       ஒரு வலை பின்னப்பட்ட நாற்காலி, அதில் உட்கார்ந்து உட்கார்ந்து அது தொய்ந்து போய், நாளாவட்டத்தில் பிசிர் பிசிறாக ஒவ்வொரு இழையாகப் பிரிந்து போய் அதைச் சீர் செய்வதற்குக் கூட நேரமின்றி, வழியின்றி, இருக்கட்டும் பார்ப்போம் என்று அன்றாடம் காலில் கஞ்சியை ஊற்றிக் கொண்டாற்போல் வந்து, உறரிபரியாகத் தன் வேலைகளைக் கவனித்து விட்டு, வேறு எதையும் நினைக்க நேரமின்றிச் சென்று கொண்டிருக்கும் ஒரு அரசு அதிகாரியின், தாசில்தாரின் நிலை எவ்வளவு பரிதாபத்திற்குரியது என்பதை, நாற்காலி தனக்குத்தானே நொந்து போய் என்னைக் கவனிக்க ஆளே இல்லை என்று தனக்குத்தானே புலம்பித் தவித்து, கடைசியில் தலைமைச்செயலகத்திற்கே ஒரு கடிதத்தை எழுதி விடுகிறது. அதில் தன் மனக்குறையையெல்லாம் விண்டு விரித்துத் தெரிவித்து, சீக்கிரம் எனக்கு மோட்சம் கொடுக்க ஆவன செய்யுங்கள் என்ற தனது மூன்றாவது கோரிக்கையாய்ச் சொல்லி, பூச்சி பொட்டு அண்டாத நல்ல அறைக்கு என்னை மாற்றுங்கள், என்னை பழுது நீக்க ஆவன செய்யுங்கள் அல்லது ஒரேயடியாய் அந்திமக் கிரியை செய்து விடுங்கள் என்று கோரிக்கை விடுத்து மாஜி தாசில்தாரின் நாற்காலியாகத் தன்னை வரித்துக் கொண்டு கடிதத்தை முடிக்கிறது.

       நாற்காலியைக் குறியீடாக வைத்து, அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஒரே மாதிரியான வட்டச் சுழற்சியில் உள்ள பணி முறைகளையும்,  அரக்கப் பரக்க ஓடித் திரியும் அதிகாரிகளின் பணி அவசரங்களையும் மறைபொருளாக விவரித்துள்ளார் என்றுதான் இந்தச் சிறுகதையைப் படிக்கும்போது நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

       பொதுவாக அரசு அலுவலகங்களில் எந்தவொரு சின்ன விஷயங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் கூட அதற்கென்று வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, நிதி வரம்பு இருப்பின்படி, நிதிநிலை எதிர்பார்த்து ஒவ்வொரு சிறிய காரியத்திற்கும் தக்கபடி காத்திருந்து, அதற்கான அனுமதிக்கு மேலதிகாரிகளுக்கு எழுதி, ஒப்புதல் பெற்று, போதிய நிதி ஆதாரத்தைப் பெற்ற பின்பே எந்தக் காரியத்தையும் செய்வதற்கு தைரியமாக இறங்க முடியும். நிறைவேற்றும் பணிகள் அதற்கான வழிமுறைகள் (quotation) பெற்று, அரசு நிதி வீணாகிவிடாதபடி குறைந்த பட்ச விலையை ஒப்புதல் செய்து, அந்த அட்டவணை வழங்கிய நிறுவனத்திற்கே வேலையை வழங்கி, முழுவதும் வேலையை முடித்து, அதன் பின்பே பட்டியலிட்டுப் பணத்தை வழங்க வேண்டும் என்கிற நடைமுறைதான். இத்தiனை வழிமுறைகளையும் பின்பற்றி, துல்லியமாய்ச் செய்ய வேண்டிய வேலைகளை மலைப்பாய்க் கருதி, அவை நடைபெறாமலே போகும் அபாயம் உண்டு.

       மர நாற்காலிகள் இருந்த காலம் போய் வலை பின்னப்பட்ட நாற்காலிகள் உபயோகத்திற்கு வந்த பின்பும், உட்கார்ந்து உட்கார்ந்து வலை தொய்ந்த, ஒவ்வொரு இழையாய் அறுந்த நாற்காலிகள் ஒவ்வொன்றாய்ச் சேர, அவைகளை தளவாட சாமான்கள் இருப்பு அறையில் கொண்டு கிடாசிக் கிடாசி , அது ஒவ்வொன்றாய்க் கணக்கில்லாமல் சேர்ந்து, என்று அவைகளுக்கு விமோசனமோ என்று திகைக்கும் வண்ணம் வருஷக் கணக்காய்க் கிடந்து இற்றுப் போய், பூச்சி அரித்து, காலுடைந்து, கையுடைந்து ஒன்றுக்கும் ஆகாமல் போன நிலையில் சற்றே விழித்துக் கொள்ளும் அலுவலகங்கள், இனி உட்கார நாற்காலியே இல்லை என்கிற நிலையில் எதெது ரிப்பேர் என்று ஆய்வு செய்து, வலை பின்னிச் சீர் செய்ய ஒருவரை அழைத்து வந்து, அவர் மாதக் கணக்கில் அலுவலக வளாகத்தில் ஒரு ஓரமாய் உட்கார்ந்து செவனே என்று சாவகாசமாய் வலைகளைப் பி்ன்னிக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் அநேக அலுவலகங்களில் பார்க்க நேரிடும். அப்படியான தொழிலாளியைப் பார்த்து, மனசு உருகி நொந்து போகிறது இந்த உடைந்த நாற்காலி.

        காட்சிப் படிமம் படைப்பாளி மனதில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த உடைந்த, சிதலமடைந்த நாற்காலியை வைத்தே புலம்ப விட்டு, தன் நிலையைத் தானே சீர்படுத்திக் கொண்டால்தான் ஆயிற்று, இவர்களால் ஒன்றும் கதை ஆகாது என்ற முடிவுக்கு வந்து, அதை தலைமைச் செயலகத்துக்குக் கடிதம் எழுதுவது போலான வடிவத்தில் சித்தரித்து, அரசு அலுவலகங்களிலல் இருக்கும் வேலைப் பளுவையும், பணியாளர்களின் உற்சாகமற்ற போக்கினையும், செக்குமாடு போன்ற உழலும் தன்மையையும், எதற்குமே உடனடியாக தீர்வு என்பது சாத்தியமில்லை என்கிற நிதர்சனமான உண்மையையும், காலப் போக்கில் அதுவாய் சரியானால் உண்டு என்ற தேங்கிய குட்டை நிலையையும் ஒரு நாற்காலி தன் புலம்பலைச் சொல்வது போலான இந்தச் சிறுகதை விமலாதித்த மாமல்லனின் சிறந்த படைப்புக்களில் ஒன்று.

       இளநிலைப் பட்டப்படிப்பு (பருவமுறை) முதலாமாண்டு, முதல் பருவம் தொகுதிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றிருப்பதைக் (1999) கொண்டே இக்கதையின் சிறப்பினை நாம் உணரலாம்.




       விமலாதித்த மாமல்லனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. அத்தொகுப்பில் இக்கதையும் இடம் பெற்றுள்ளது.
                     ------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...