“தேஜஸ் ரயிலின்
தேவை”
மதுரை-சென்னை தேஜஸ் ரயில் கடந்த ஆறு மாதங்களாக
சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. லட்சக் கணக்கான மக்கள் இந்த அதிவேக, நவீன
ரயிலின் பயன்பாட்டை உணர்கின்றனர் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம். இந்திய ரயில்வே குறிப்பாகக்
கவனித்து வந்து அவ்வப்போது தேவை கருதி சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்தும் பணியை செவ்வனே
செய்து வருகிறது.
அதி நவீன வசதிகளுடன் இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதுதான்
தேஜஸ் ரயில். புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் நோக்கம் என்பது பயணிகளின் பயன்பாட்டிற்கு
அவை முழுமையான அளவில் பயன்பட வேண்டும் என்பதே. இந்த நோக்கம் நிர்வாகத்துக்குத் தெரியாததல்ல.
அதை முன் வைத்துத்தான் புதிய ரயில்களே அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஆனால் மதுரை-சென்னை தேஜஸ் ரயில் இன்னும் சாதாரண
மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக வரவில்லை, ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நவீன வசதிகள் கொண்ட ரயில் என்பதால் பயணக் கட்டணத்தை இதற்கு மேல் மாற்றிக் குறைக்க இயலாது
என்பதான ஒரு கருத்து இருக்கலாம். ஆனால் இருக்கும் கட்டணத்திலேயே அந்த ரயில் பயணத்தை
அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கின்றன என்பதுதான் இங்கே சொல்ல வந்த விஷயம்.
முதல் காரணம் அது திருச்சி மற்றும் கொடைக்கானல்
ரோடு ஆகிய இரு நிலையங்களில் மட்டும்தான் நிற்கும் என்பது. அதிவேக ரயிலான வைகை எக்ஸ்பிரஸ்
திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் என்று நின்று காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு மதியம்
இரண்டே கால் மணிக்குத் தாம்பரம் நிலையம் வந்து விடுகிறது. ஆனால் திருச்சி, கொடைக்கானல்
ரோடு இரண்டு நிலையங்களில் மட்டுமே நிற்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆறரை மணி நேரத்தில் (ஏழு
என்று கூடச் சொல்லப்படுகிறது) சென்னை எழும்பூர் ஸ்டேஷனை அடைகிறது என்பது எப்படிப் பெருமைப்
படும் விஷயமாக இருக்க முடியும்? இத்தனைக்கும் அது தாம்பரம் நிலையத்தில் இறங்கும் 80 சதவிகிதப் பயணிகளை அங்கு இறக்கி விடுவதில்லை.
நிற்காமல் நேரே எழும்பூர் நிலையம் சென்று விடுகிறது
மீதி 20 சதவிகிதப் பயணிகளுடன் மட்டுமே…!
இதுதான் சத்தியமான உண்மை.
கொடைக்கானல் ரோடு நிறுத்தம் என்பது அங்கு இறங்கி கொடைக்கானல்
மலைக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று கணித்து அந்த
நிறுத்தத்தை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டுக்குள் நம் மாநில மக்களின்
பயன்பாட்டிற்காக ஓடும் ரயில். மற்ற எல்லா இரயில்களும்
(சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ரயிலைத் தவிர) எண்பது சதவிகிதப் புற நகர்ப் பயணிகள் முழுக்க இறங்கி விடும் தாம்பரம் ரயில் நிலையத்தில்
நிற்கும் போது, இந்தத் தேஜஸ் ரயிலை மட்டும் அங்கு நிறுத்தாமல் நேரே எழும்பூர் நிலைய
கடைசி நிறுத்தம் வரை கொண்டு செல்லுவதால் ஏற்படும் பயன்தான் என்ன? புற நகர் வாசிகள்
எழும்பூர் நிலையத்தில் இறங்கி டாக்ஸி பிடித்து வீடடைய அதற்குப்பின் இரண்டு மணி நேரம்
கண்டிப்பாக வேண்டும். குழந்தை குட்டிகளோடுடைய
தம்பதியர், வயதான ஆண்கள், பெண்கள், அன்றே வேலைக்குச் செல்ல வேண்டிய இளைஞர்கள், இளைஞிகள்,
என்று எத்தனை ஆயிரம் பேருக்கு சிரமமான விஷயம்
இது? சற்றே ரயில்வே நிர்வாகம் சிந்தித்துப் பார்த்தால் நலம்.
அது போல் விடிகாலை 6.00 மணிக்கு சென்னையிலிருந்து
புறப்படுவதாய் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதியில் குடியிருக்கும் சென்னைவாசிகள்
இந்த ஆறு மணி ரயிலைப் பிடிக்க வேண்டுமெனில், விடிகாலை மூணு மணிக்கு அல்லது குறைந்த
பட்சம் நாலு மணிக்காவது எழுந்தால்தான் ஆகும். அப்படி எழுந்து தயாராகி, டாக்ஸி வைத்து,
அவதி அவதியாய் எழும்பூர் ரயில் நிலையத்தை அடைவதென்றால்
அது எத்தனை பரபரப்பான, ரத்தக் கொதிப்பான விஷயமாக இருக்கும் என்பதைத் தயவுசெய்து நிர்வாகம்
நினைத்துப் பார்க்க வேண்டும்.
தாம்பரத்தில் ஏறிக் கொள்வோமெனில் அங்குதான்
நிறுத்தம் கிடையாதே மற்ற ரயில்களைப் போல்…? பயண நேரம் குறைய வேண்டுமென்பதற்காகத்தான்
இதெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது என்று நிர்வாகம் சொல்லலாம். ரயில்களின் நிறுத்தங்களையும்
குறைத்து, பயணிகளின் வசதிகளையும் விடுத்து, எதற்கு இந்த நேரச் சுருக்கம்? அதி நவீனம்
சரி, அதி வேகம் என்பதை இப்படித்தான் உறுதிப்படுத்தி ஆக வேண்டுமா? பயணிகள்
வசதியை மேம்படுத்தல் என்ற ஒரு புள்ளியில் இவையெல்லாம்
ஒரு காரணமாய் அமையாதே…? ஆறரை மணி நேரம் என்பது
அரை மணி கூடுதலாக ஏழு மணி நேரப் பயணமாகப் போகிறது. தேஜஸ் ரயில் என்பது அதன் நேரக் குறைவை
விட, அது பயணத்திற்கு மிகவும் சௌகரியமான குளுகுளு வசதி கொண்ட நவீன ரயில் என்பதுதானே…!
அரை மணி கூடினால் என்ன குடியா முழுகும்?
எனவே காலை 7.00 மணிக்கு சென்னை எழும்பூர் ஸ்டேஷனில் தேஜஸ் ரயில் கிளம்புவதுபோல் வைப்பதே
நலம். தாம்பரம் ரயில்நிலையத்தில் நிறுத்தம் உண்டு என்கிற வசதியை உடனடியாக நிறைவேற்றுதல்
என்பது அதி முக்கியம். காரணம் மதுரையில் “மதுரை
மெயின்” என்கிற ஒரு ஜங்ஷன்தான். சென்னை அப்படிக் கிடையாது. புறநகருக்குத் தாம்பரம்
மற்றும் உள் நகருக்கு எழும்பூர் நிலையம் ஆகிய இரு நிலைகளைக் கொண்டிருக்கிறது என்பதே
உண்மை.
எனவே தேஜஸ் ரயிலை சென்னையிலிருந்து கிளம்பும்போது
காலை 7.00 மணி என்று நேரத்தை மாற்றியமைக்கவும், மதுரையிலிருந்து சென்னை வந்தடையும்போது
தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கிச் செல்லவும் உடனடியாக நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்
என்பது பெருவாரியான மக்களின் கோரிக்கையாகிறது. ரயில்வே நிர்வாகம் இந்த வசதியை விரைவில்
நம் பயணிகளுக்குச் செய்து கொடுக்கும் என்று
எதிர்பார்ப்போம்.
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக