“சரஸ்வதியின்
குழந்தைகள்“ - சிறுகதை உஷாதீபன்
புத்தகத்தை வரிசையில் வைத்துவிட்டு நகர்ந்தான். மனதுக்குச்
சற்றே நிம்மதிப்பட்டது. எந்தெந்தப் புத்தகங்கள் அதன் அருகில் இருந்தன என்பது ஓரளவுக்கு
ஞாபகம் இருந்ததால் சரியான இடத்தில் வைக்க முடிந்தது. இரும்பு அலமாரி சரியாகத் தரையில்
பதிந்து நிற்காததால் ஏற்பட்ட ஆட்டத்தில் கீழே விழுந்திருந்த மேலும் ஒன்றிரண்டு புத்தகங்களையும்
எடுத்து அடுக்கினான்.
என்னாச்சு
சார்....பார்த்து மெதுவாச் செய்ங்க... - அவசரப்படாதீங்க... - அந்தக் குரலின் கண்டிப்பு
இவனைத் துணுக்குறச் செய்தது.
தோழர்களோடு சேர்ந்து கொண்டதுபோல் முதலில் வைத்த புத்தகம் வரிசையோடு
பாந்தமாக ஒன்றியிருந்தது. இப்போது. தள்ளி நின்று
பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டான். வெகு நாளாய் அந்த வரிசைப் புத்தகங்களை யாரும்
கை வைக்கவில்லை என்பது போலிருந்ததாய்த் தோன்றியது.
ஏதோ எழுதிக்
கொண்டிருந்த அந்தப் பெண் நூலகர் ஏதும் சொல்லும் முன்பே, எதிர் வரிசைக்கு வந்து “ஆய்வு
நூல்கள்” என்று போட்டிருந்த இரண்டாம் அடுக்கினில் தேட ஆரம்பத்தான். ஒரு அலமாரியில்
மொத்தமுள்ள ஏழு அடுக்குகளில் மேலிருந்து இரண்டாம்
அடுக்கினில், புத்தகத்துக்கும் மேல் பலகைக்கும் நடுவழியாக அந்தப் பெண்மணியின் பார்வை
இங்கே பதிந்திருந்தது. அப்படி அவர்கள் கூர்மையாக அடிக்கடி கவனித்துக் கொண்டிருப்பது
என்னவோல்தான் இருந்தது. தொட்டதற்கெல்லாம் சந்தேகம்தானா?
அதென்னங்க
அந்தம்மா அப்படிப் பார்க்குது? நாமென்ன புத்தகத்தைத் தூக்கிட்டா ஓடப் போறோம்?
சற்று நேரத்துக்கு
முன் கடைசி வரிசையில் புத்தகம் தேடிக் கொண்டிருந்தபோது அருகிலே கூடவே நின்று அலசிக்
கொண்டிருந்த ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது. அருகிலே தொங்கிக் கொண்டிருந்த அட்டையில்
எழுதியிருந்த வாசகத்தைப் பார்த்தான் இவன்.
“புத்தகங்களை
வரிசை குலையாமல் எடுக்கவும். எடுத்ததை எடுத்த இடத்தில் மீண்டும் வைக்கவும்“
அந்த வாக்கியங்களில்
இருந்த அழுத்தத்தை எண்ணிச் சிரித்துக் கொண்டான். “எடுத்ததை எடுத்த இடத்தில்....” -வைத்தால்தானே
வரிசை குலையாது....!
சற்று முன்னுள்ள
முதல் வரிசை அலமாரியில் “அமைதி காக்கவும்“ “நூல்கள் உங்கள் கண்கள்“ என்று எழுதியிருந்தன.
கடந்த இரு
மாதத்தில்தான் இந்த மாற்றங்களெல்லாம். இந்தம்மா வந்த பிறகுதான். அதற்கு முன் இருந்த
ஆண் நூலகரிடம் இத்தனை கவனமும் கரிசனமும், கண்டிப்பும் இல்லை. திறந்து வைத்து விட்டு,
அவரே நூலகத்திற்குப் படிக்க வந்தவர் போல் சிவனே என்று ஏதேனும் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருப்பார்.
இந்தப் பெண்மணிக்கோ கண்காணிப்பதே வேலை என்று ஆகிப் போனது. அதிலும் சந்தேகப்படுவது என்பதுதான்
முக்கியப்புள்ளி. சற்றே நாகரீகம் இருக்கலாம் என்று தோன்றியது. வந்து, புத்தகம் தேடுவோர்
எல்லாருமே திருடர்கள்தான் என்பதுபோல் ஐயமாகவே பார்த்துக் கொண்டிருந்தால்? புத்தகம்
படிக்கும் நல்ல பழக்கம் உள்ளோர் அப்படி இருப்பார்களா?
கொஞ்சமேனும் யோசிக்க வேண்டாம்? எதற்கடா இப்படி வரிசையாய்ப் புத்தகம் எடுக்க வந்து தொல்லை
கொடுக்கிறார்கள்? இவர்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா? என்பதாய் ஒரு சலிப்பு, கோபம்....?
எனக்கென்னவோ அப்படித்தான் தோன்றியது. அந்தம்மாவின் முக பாவங்கள் இதைத்தான் பிரதிபலித்தன.
ஒருவர் புத்தகம்
மாற்ற வந்தபோது வாயிலில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திடாமல் நுழைந்ததைப் பார்த்து “கையெழுத்துப்
போட்டுட்டு நுழையுங்க...“ என்றது அந்தப் பெண்மணி.
நான் படிக்கப்
போகலைங்க...புத்தகம் மாற்றத்தான் வந்தேன் - என்றார் அவர்.
இருக்கட்டுமே...
- லைப்ரரிக்குள்ளே என்டர் ஆகறீங்கல்ல...உள்ளே நுழைஞ்சாலே போட்டாகணும்...போடுங்க...
- மறு பேச்சில்லாமல் கையெழுத்திட்டார் அவர்.
புது புக்ஸ்
எல்லாம் வந்திருக்கு சார் - இதோ இந்த ரேக்குல இருக்கு பாருங்க...”
அட...இந்தம்மாவா
சொல்லுது இப்டி...? - ஆச்சரியமாய் இருந்தது இவனுக்கு.
எப்படி ஒழுங்கு
முறை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக உள்ளதோ, அது போலவே புத்தகங்கள் எல்லாமுமே
வாசகர்களால் படிக்கப்பட வேண்டியதே என்கிற நல்ல பரந்த எண்ணமும் அவர்களிடம் இருப்பதாக
உணர்ந்தான்.
முந்தைய ஆண்
நூலகர் புதிய புத்தகங்களைத் தொடவே விடமாட்டார். “அந்த வரிசை பூராவும் இன்னமும் பதியலை
சார்... அதை எடுக்காதீங்க...பதிஞ்ச பின்னாடிதான்....“ - என்றார் ஒரு நாள்.
இப்படியே
அவர் பலமுறை சொன்னதும், அவற்றில் முக்கால்வாசிப் புத்தகங்கள் ஏற்கனவே சீல் அடித்திருப்பதும்,
எண்ணிட்டிருப்பதும், தெரிந்த சிலருக்கு என்று மட்டுமே அவர் அவைகளைக் கொடுத்தனுப்புவதும்,
மற்றவர்களுக்குக் கையை விரிப்பதும் பார்த்தான். அந்தக் கையை விரிக்கும் லிஸ்டில் இவனும்
இருந்ததுதான் கனன்றது மனதில். நாகரீகம் கருதி அமைதி காத்தார்கள் பலர். நூலகமே அமைதியான
இடம்தானே...!அந்த இடம் தந்த கட்டுப்பாடாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தக் கட்டுப்பாடே
அவருக்கு ஒரு பாதுகாப்பாகவும், தன்னிச்சையானதுமாக அமைந்திருப்பதும்தான் விநோதம் என்று
தோன்றியது.
சமீப காலமாகத்தான்
அங்கே ஒரு சுபிட்ச நிலை நிலவுகிறது. “சார்...“ - அழைப்புக் கேட்டு புத்தகத்திலிருந்து
விலகி அந்த நூலகரைப் பார்த்தான்.
அந்த பேக்கை
இப்படி வச்சிட்டுத் தேடுங்க சார்....- என்றவாறே தன் மேஜையைக் காண்பித்தது அது. லேசாகப்
புன்னகைத்துக் கொண்டே சொன்னால் கூடப் பரவாயில்லை. என்ன கறார்த்தனம்? பொட்டில் அடித்தது
போலிருந்தது இவனுக்கு. வெளி வேலையா கிளம்புற போது பல வேலைகளைக் கைல வச்சிட்டு வர்றோம்...பாங்க
பாஸ் புக்செல்லாம் கிடக்கு...எப்டி கீழே வைக்கிறது...இது பாட்டுக்குச் சொல்லுது...?-நினைத்துக்
கொண்டே போய் வைத்தான் இவன்.
கடந்த வாரம் நகரில் இவன் வழக்கமாய்ச் செல்லும் ஒரு புத்தகக்
கடையில், புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் கடைக்காரர் சொன்னார்.
புத்தகங்களைத்
திருடறாங்க சார்...எங்கேயாவது பார்த்திருக்கீங்களா....?
இவனுக்குத்
தூக்கி வாரிப் போட்டது. என்ன சொல்றீங்க...? என்றான்.
ஆமா சார்...உண்மையாத்தான்
சொல்றேன்...போன வாரம் ஒரு செட் வந்திச்சில்ல....நீங்க கூடப் பார்த்தீங்களே...எண்ணிப்
பார்த்தேன்...ஏழு புத்தகம் குறையுது சார்...என்ன அநியாயம்? படிச்சவங்களே இப்படிச் செய்தா?
பார்சல் வந்ததை
சரியாக எண்ணிப் பார்த்துத்தானே எடுத்து வச்சீங்க? விற்றுப் போயிருக்கும்...நல்லா பாருங்க.....
இல்ல சார்...திருடுதான்
போயிருக்கு....எனக்குத் தெரியாதா? படிச்சவங்க நாகரீகத்தைப் பாருங்க....எவன நம்புறது?
ஏன், படிச்சவங்களுக்கு
திருட்டுப் புத்தி இருக்கக் கூடாதா?
அவர் இவனையே
கூர்மையாகப் பார்த்தார். தன்னையே சந்தேகப்படுகிறாரோ என்று இவனுக்குத் தோன்றியது. வினயமான
கேள்வியாயிற்றே...!
என்னங்க நீங்க...அது
வந்திடுச்சா...இது வந்திருச்சான்னு ஆர்வமா ஓடி ஓடி வந்து கேட்டுட்டுப் போறாங்க...புத்தகங்கள்
அறிவை வளர்க்கிற பொக்கிஷம். மனுஷனைப் பக்குவப்படுத்துற கருவி. அதைப் பணச் செலவா நினைக்காதவங்க...இப்படி
அநாகரீகமா நடந்துக்குவாங்களா?
தெரிஞ்சாத்தானே
அநாகரிகம்....தெரியலேன்னா? ஆர்வம் இருக்கிற இடத்துல ஆசை புகுந்திடுச்சின்னா? ஆசையே
துன்பத்துக்குக் காரணம். யாருக்கு...இங்கே உங்களுக்கு...!ஆசை தவறு பண்ணத்தானே து’ண்டும்...!
தற்கொலை பண்ணிக்க, பெரிய தைரியம் வேணுமுங்க மனுஷனுக்கு...! திருடுறவங்களைச்
சொன்னேன்...- ஏதோ பெரிய ஜோக்கைச் சொல்லிவிட்டவன் போல் சிரித்துக் கொண்டான் இவன்.
அவர் ஒன்றும்
பதில் சொல்லவில்லை. சார் சொல்றது போலவும் இருக்கலாமோ? யோசிக்க ஆரம்பித்திருக்கக் கூடும்.
ஜாக்கிரதையா
இருங்க...பிஸி ஏரியா....நீங்க ஒராள்தான் இருக்கீங்க....கவனம்....சொல்லிவிட்டுக் கிளம்பினான். அதற்கு அடுத்த முறை இவன் அந்தக் கடைக்குப் போயிருந்தபோது அங்கே ஒரு போர்டு தொங்கியது.
“கொண்டு வரும்
சாமான்களை இங்கே வைக்கவும்”
“பேக்கை இப்டி
வைக்கிறேன் சார்...” - சொல்லியவாறே அலுவலகத்திற்குக் கொண்டு போகும் தோல்பையை நுழையும் இடத்தில் கீழே வைத்தான் இவன்.
தினசரி அங்கே நுழைந்து தலையைக் காட்டிவிட்டுத்தான் அலுவலகமே செல்வான்.
சார்...சார்...நீங்க
சும்மா அப்டியே உள்ளே போங்க... - சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்.
ந்நோ...நோ....விதி
முறைன்னா அது எல்லாருக்கும் பொதுதானே...‘! எனக்கு மட்டும் என்ன கன்செஷன்? நாளைக்கு
எம்மேலேயே சந்தேகம் வந்திடுச்சின்னா?
அவர் முகம்
சட்டென்று சுருங்கியது. ஒரு வேளை சந்தேகச் சுருக்கமோ?
நானும் அடிக்கடி
கடைக்கு வர்றவன்...புத்தகம் வாங்குகிறவனாச்சே...அசிங்கம்தானே...! வேணாஞ்சாமி....!
- அவர் தலை குனிந்து புன்னகைத்துக் கொண்டதைப் பார்த்தான்.
அதற்கு அடுத்த
வாரம் கடை அமைப்பிலேயே சில மாற்றங்களைச் செய்திருந்தார் அவர். தான் அமர்ந்திருக்கும்
இடத்திலிருந்தே கடையின் எல்லாப் பகுதிகளும் நன்றாகத் தெரிவது போல்...தெளிவாய்ப் பார்ப்பது
போல்....யார் சொல்லிக் கொடுத்தது இத்தனை கச்சிதமாய் வடிவமைக்க? - இவன் கேட்டான்.
இவ்வளவு சிரமம்
என்னத்துக்கு? உங்க முன்னாடி ஒரு டி.வி. வாங்கி வச்சு கனெக் ஷன் கொடுத்தாப் போதுமே...!
இந்த நாலு டைரக் ஷனையும்...பிரிச்சு செட் பண்ணிட்டீங்கன்னு வச்சிக்குங்க...எவனும் தப்பிக்க
முடியாதாக்கும்....கடைக்கு வர்றவங்க...புத்தகம் தேடுறபோது, எடுக்கிறபோது, திரும்ப வைக்கிறபோது,
வலமும் இடமும் நகர்ற போது, எந்த திசைல திரும்பினாலும் உங்க முன்னாடி பளிச்சின்னு தெரியுமே...!
கையும் களவுமாப் பிடிச்சிடலாமே...!
அப்டி இருந்தா,
சுதாரிச்சிடுவாங்க சார்.....! ஆள் அலெர்ட் ஆயிடுவாங்க....
நல்லதுதானே...!
உங்களுக்குத் தேவை புத்தகங்கள் திருடு போகாம இருக்கணும்...அவ்வளவுதானே...?
அதுக்கெல்லாம்
ஏது துட்டு சார்...! இந்தப் பாழாப் போன புத்தகங்களே மெது மெதுவாத்தான் நகருது....!
இன்னும் அத வேறே கட்டிட்டு அழணுமாக்கும்...? இதுகள வித்து காசு பார்க்கிறதுக்குள்ள
தாலி அந்து போகுது.....!
இப்பத்தான்
கண்காட்சியெல்லாம் நடத்துறாங்களே...அடிக்கடி...! மாவட்டத்துக்கு மாவட்டம் நடக்குதே...!
அதுனாலதான்
சார் கொஞ்சம் டெவலப்மென்ட்..ஆனாலும் அங்கேயும் ரொம்ப ஜாக்கிரதையாத்தான் இருக்க வேண்டிர்க்கு...கூட்டத்துல
லவுட்டிட்டுப் போயிடுறாங்கல்ல....? இங்க விட அங்கதான் சார் திருடு ஜாஸ்தி....ஜனக் கூட்டம்
திரள் திரளா வர்ற எடமுல்ல...? கண்ணுக்கு வௌக்கெண்ணைய் விட்டுட்டுப் பார்க்க வேண்டிர்க்கு...சார்...
எந்த பிஸ்னஸானாலும்
அதுலயும் சில கஷ்டங்கள் இருக்கத்தான் இருக்கு...இல்ல....? இது பிஸ்னஸா...சேவைல்ல....சர்வீஸ்
சார் இது...சர்வீஸ்...!!!
என்ன சர்வீசோ
போங்க....! எங்கப்பா காலத்துலேர்ந்து பழகிப் போச்சு...விட முடில்ல....!
அந்தப் புத்தகக் கடைக்காரர் சொன்னது பளீரென்று இப்பொழுது
நினைவுக்கு வர, புத்தக அடுக்குகள் பகுதியிலிருந்து வெளியே வந்தான் இவன். வியர்த்து
விறு விறுத்திருந்தது.
யப்பாடி...என்ன
ஒரு புழுக்கம்...என்னா ஒரு தூசி....? ரோட்டுப் புழுதி பூராவும் இங்கதான் அடையும் போல்ருக்கு....!
டோக்கனைக்
காண்பித்தவாறே “ஒரு புத்தகமும் எடுக்கலை மேடம்...” என்று சொல்லிவிட்டு, கீழே வைத்திருந்த
தனது பேக்கை எடுத்துக் கொண்டான் இவன். அந்தப் பெண் தலையாட்டியது போலிருந்தது.
ஒரு வாரம்
கழிந்த பொழுதில் அந்த சனிக்கிழமையன்று வழக்கம்போல் இவன் நூலகத்திற்கு வந்தபோது, அந்தப் பெண் நூலகர் புலம்பிக் கொண்டிருந்ததைக்
கண்டான். முகத்தில் வருத்தத்தோடு எதிரே சிலர்.
பார்த்தீங்களா
சார்...இந்தப் புத்தகத்தை ரெண்டு மாசமாத் தேடிட்டிருக்கேன்...இந்த லைப்ரரில நான் சார்ஜ்
எடுத்தபோது ஸ்டாக்குல இந்தப் புத்தகம் இல்லாததைக் கண்டு, ரிஜிஸ்டர்ல கையெழுத்துப் போடமாட்டேன்னு
சொல்லிட்டேன். மத்த புத்தகங்களின் இருப்புக்குத்தான் கையெழுத்துப் போட்டேன். இப்போ
பாருங்க கிடைச்சிருக்கு....
சரியாப் பார்த்திருக்க
மாட்டீங்க மேடம்...
போன வார லீவு
வரைக்கும் யாருக்குமே புத்தகம் கொடுக்கலியே! ஸ்டாக் டேக்கிங்தானே...அன்றைக்குக் கிடைக்காதது
இன்னைக்குக் கிடைச்சிருக்கு பாருங்க...! யாரோ திருட்டுத் தனமா எடுத்திட்டுப் போயி,
கமுக்கமாக் கொண்டு வந்து வச்சிருக்காங்க...என்ன அநியாயம் சார் இது? இங்க படிக்க வர்றவங்களை
நம்பித்தானே நான் இருக்கேன்...இப்படிச் செய்தாங்கன்னா?
எதிரே நின்று
கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அவர்களே குற்றம் சாட்டப்பட்டவர்கள் போல் அமைதியாக நின்றார்கள்.
எந்தப் புத்துல
எந்தப் பாம்பு இருக்கும்னு யார் கண்டது? யார் நல்லவங்க...யார் கெட்டவங்கன்னு நெத்தில
எழுதியா ஒட்டியிருக்கு....லைப்ரரிக்கு வர்றவங்க ஓரளவுக்கு படிச்சவங்கதானே? ஒழுக்கம்
உள்ளவங்கதான் நூலகத்துக்கு வருவாங்க...அப்படித்தானே நி்னைக்க வேண்டிர்க்கு...அவங்களே
இப்படிச் செய்யலாமா? புத்தகம் சரஸ்வதியில்லையா? அதைப் போய்த் திருடலாமா? - தொடர்ந்து
புலம்பியது அது.
இவன்தான்
அந்த இறுக்கமான சூழலைத் தளர்த்தினான். “பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு சொன்ன மாதிரி,
திருடிப் புகினும் படித்தல் நன்றேன்னு செய்திட்டாங்களோ என்னவோ? - அவனது அந்த நகைச்சுவைக்கு மெல்லிய சிரிப்பலை பரவத்தான்
செய்தது.
அப்படீன்னா,
திருடினவன் அதை ஏன் சார் திரும்பக் கொண்டு வந்து வைக்கணும்...? - தைரியமாகக் கேட்டார்
ஒருவர். சரிய்ய்ய்யான கேள்வி.....! என்றார் இன்னொருவர்.
மனசாட்சி
உறுத்தியிருக்கலாம். அந்தப் புத்தகம், அதைப் படிச்ச வாசனை, அதோட சக்தி அவரை உசுப்பி
விட்டிருக்கலாம்....
இத மாதிரி
நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்கிறவங்க...திருடுறதுக்கு வாய்ப்பே இல்ல சார்....நான்
நம்பவே மாட்டேன்...நீங்க சொல்றது அந்தப் புத்தகத்தைக்
களங்கப்படுத்துற மாதிரி இருக்கு...அப்புறம்
அவன் புத்தகம் படிக்கிறதுக்கு, அந்தப் பழக்கம் உள்ள ஆளா இருக்கிறதுக்கு என்னதான்
அர்த்தம்? அந்தப் புத்தகத்துக்குத்தான் என்ன மதிப்பு? அத எழுதின ஆசிரியரையே சந்தேகப்பட்ட
கதையால்ல போச்சு?
நமக்கு மத்தியிலே
ஒருத்தருக்கொருத்தர் இரவல் வாங்கிட்டுப் போகிற சொந்தப் புத்தகங்களையே எத்தனை பேர் திருப்பிக்
கொடுக்கிறாங்க...? அது மாதிரிதான் இதுவும்....
அதுவாவது
போனாப் போகுதுன்னு விடலாம். இவங்களுக்கு ரெக்கவரில்ல வரும்...
இந்தப் புத்தகம்
நல்ல கருத்துள்ள, அறிவு பூர்வமான கட்டுரைத் தொகுப்பால்ல தெரியுது? அந்தப் புத்தகத்தை
என் டோக்கனுக்குப் போட்டுக் கொடுங்க மேடம்...நான் படிச்சிட்டுத் தர்றேன்.....-வேறு
யாரும் கேட்கத் தயங்கியது போலிருந்தது.
திருடு போய்த்
திரும்பி வந்த புத்தகத்தை நாம் ஏன் வாங்கிக் கொண்டு, வெட்டி வம்பு என்று பயந்து விட்டார்களோ?. திருஷ்டி பட்ட புத்தகம்
என்று நினைத்துக் கொண்டான் இவன்.
ஏதேதோ மேலும்
சில பதிவுகளைச் செய்து விட்டு, இருப்பை உறுதி செய்து கொண்டு, கால அவகாசத்திற்கான தேதியையும்
குறிப்பிட்டு, இவனிடம் நீட்டியது அந்தப் பெண்மணி.
நல்ல புத்தகங்களைத்
தேடிப் படிக்கிறவங்களை அடையாளம் கண்டு, மதிச்சு, புத்தகம் கொடுக்கிறதுக்கு ரொம்ப நன்றி
மேடம்....
நன்றி இருக்கட்டும்
சார்....புத்தகம் பத்திரம்...உங்களுக்குத்தான் முதன் முதலாத் தர்றேன்...
இல்லையே...நீங்க
சொல்ற பிரகாரம் இது ரெண்டாவது முறைன்னுல்ல தெரியுது...? - எல்லோரும் சிரித்தனர். தொடர்ந்து
இவன் சொன்னான்.
அதெல்லாம்
கச்சிதமா வந்து சேர்ந்திடும் மேடம்....இந்த லைப்ரரில பத்து வருஷமா மெம்பர் நான்...நீங்க
இன்னொண்ணு கூடச் செய்யலாமே...இந்த மாதிரி விலையுயர்ந்த புத்தகங்களை வெளில கொடுக்கிறபோது,
ஒரு தனி ரிஜிஸ்டர் போட்டு, பதிவு செஞ்சு, கையெழுத்து வாங்கிட்டுக் கூடக் கொடுக்கலாமே...!
இன்னும் சேஃப்டி ஆச்சே...!
அதெல்லாம்
ஏற்கனவே நடைமுறைல இருக்கத்தான் இருக்கு..எங்களுக்குத் தெரியாதா? .அதையும் மீறித்தான்
இது நடந்திருக்கு...! திருடுறபோது எங்கேயிருந்து பதியறது? ஸ்டாக் எடுக்கிறபோது “திருடு
போனது”ன்னு வேணாப் பதியலாம். அம்மாள் நொந்து சொன்னதுபோல் இருந்தது.
வெளியே வந்தான்
இவன்.
பஸ் ஸ்டாப்பை
நோக்கி ஓரமாய்,மெல்ல நடந்து கொண்டே திரும்பவும் படிக்க வேண்டுமென்றிருந்த, அந்தக் கட்டுரை,
அவன் மனதை மாற்றிய கட்டுரை இருந்த பக்கம் எது என்று பொருளடக்கத்தைப் பார்த்துப் புரட்டியவாறே
போய்க் கொண்டிருந்தான்.
அந்த நூலகத்தின்
இரண்டாவது அலமாரி அடுக்கில் புதுப் புத்தகங்களின் வரிசையில், தங்கள் நண்பனை நீண்ட நாட்களுக்குப்
பின் மீண்டும் உடனடியாகப் பிரிந்த வருத்தத்தில் மீதிப் புத்தகங்கள் அனைத்தும் சற்றே
வரிசை குலைந்த நிலையில் தங்கள் உடல்களை நெகிழ்த்திச் சாய்த்துச் சரிந்து கொண்டன.!!
---------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக