10 செப்டம்பர் 2019

மாறாட்டம் - மௌனி சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்


மாறாட்டம் - மௌனி சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்                                
வெளியீடு:- பீகாக் பதிப்பகம், வடக்கு கோபாலபுரம், சென்னை-86.                                           ------------------------------------------------------------------------------------------------------------                                               


ன்ன கதை சொல்கிறார் என்று பார்ப்பதைவிட, என்ன சொல்கிறார் இவர் என்றுதான் பார்க்க வேண்டியதிருக்கிறது. சொல்வதை உள்வாங்க - புரிந்து கொள்ள என்று குறைந்தது நான்கைந்து தடவையாவது படிக்கத்தான் வேண்டியிருக்கிறது. அந்த நடை கொஞ்சம் நமக்குப் புரியாத நடையாகத்தான் இருக்கிறது.
       நமக்கு மட்டும்தான் அப்படியா அல்லது எல்லோருக்குமே அப்படித்தானா என்ற சந்தேகம் வருகிறது. சாதாரணமாய்ச் சொல்ல வேண்டியதை எதற்கு இப்படித் திருகிச் சொல்கிறார் என்று தோன்றுகிறது. ஒரு வேளை அப்படிச் சொல்வதையே தன் நடையாய் வைத்துக் கொள்வோம் என்கிற தீர்மானத்தில்தான் எழுதியிருப்பாரோ என்றும் நினைக்க வைக்கிறது.
       தமிழில் நாம் நன்கறிந்த வார்த்தைகளைத்தானே.அவரும் பயன்படுத்துகிறார்....இதில் புரியாமல் போவதற்கு என்ன இருக்கிறது? என்ற கேள்வி காதில் விழத்தான் செய்கிறது. அப்படிக் கேட்பவர்கள் மௌனியை முழுவதுமாய்ப் புரிந்து கொண்டுதான் பேசுகிறார்களா என்று சந்தேகம் வருகிறது.
       கதையைச் சொல்வதைவிட, மன ஓட்டங்களை விவரிப்பதில், ஒன்றை ஒன்பதாக்கி நினைத்துப் பார்ப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம் போலும்...ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் கதைதான் இவரது கதைகளின் ஓட்டம் என்று உணர வைக்கிறது.
       கூடப் பழகுபவனுக்கெல்லாம் நமக்கு இருக்கும் அல்லது நாம் உணரும் நாசூக்கு இருக்க வேண்டும்  என்று எதிர்பார்க்க முடியுமா? அப்படியாப்பட்டவர்கள்தான் தன் நண்பனாக இருக்க முடியும் என்று வரையறுக்க முடியுமா? அல்லாதவனை வாயில் வந்தபடி அல்லது மனதில் தோன்றியபடி திட்டித் தீர்க்க முடியுமா? அல்லது கந்தல் கந்தலாக ஆக்க முடியுமா?
       ஆக்கணும் என்கிறார் மௌனி. ஆக்கணும் என்கிற இந்தத் தாத்பர்யத்தைப் புரிந்து கொள்ளவே அந்த இரண்டு பக்கத்தை நான்கு முறைகள் படிக்க வேண்டியிருக்கிறது. எனக்கு மட்டும்தான் அப்படியா? அல்லது படிப்பவர்கள் எல்லோரும் இந்த ரீதியில்தான் உணருவார்களா? உணருகிறார்களா தெரியவில்லை. ஒரு வேளை ஒரே வீச்சில் படித்துப் புரிந்து கொள்ளும், கற்பூர முல்லைகளாக கூட இருக்கலாம்...யார் கண்டது? போகட்டும்...அந்த திறம்பட்ட வாசகர்களை வாழ்த்துவோம்.
       நேற்று சாயந்திரம்  வெகு நேரம் அயர்ந்து தூங்கியவனே போன்று.....என்று ஆரம்பிக்கிறார். நன்றாகக் கவனியுங்கள். முதல் நாள் மாலை.....என்பதை நேற்று சாயந்திரம் என்று எதிரே இருப்பவரிடம் பேசுவது போல் சொல்லுவதே இவரது நடையாய் இருக்கிறது.
       தினம் செல்வதை விட குறைந்த நேரத்திலேயே ஆடைகளைணிந்து கொண்டு.....என்று விவரிக்கிறார். வேட்டியையும், சட்டையையும் எடுத்து மாட்டிக் கொண்டு சட்டென்று கிளம்புவதை நேரக் கணக்கிட்டு, குறைந்த நேரத்திலேயே ஆடைகளணிந்து கொண்டு என்று இவர் சொல்லும்போது ஏதோ ஏகப்பட்ட ஆடைகளை எடுத்து  உடம்பில் அடுத்தடுத்து வரிசையாக அணிந்து கொண்டு என்று சொல்வதைப்போல் தோன்றுகிறது நமக்கு. நீங்களாக அப்படி நினைத்துக் கொண்டால் எப்படி? என்று கேட்டால் அவர் எழுதியிருக்கும் விதம், படிக்கும் வாசகனுக்கு அப்படியான எண்ணத்தைத் தோற்றுவிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று உறுதியாகச் சொல்வேன் நான். மாலை நேர நடையின்போது சந்திக்க வேண்டியதாகி விடும்  பொறுக்கி எடுத்த பிரமுகர்களை ஒரே வார்த்தையில் ஊரின் பொறுக்கிகளை என்று விளிப்பது  அந்தக் கதாபாத்திரத்தின் மிடுக்கான அல்லது திமிரான  கௌரவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
       வழியில் நட்ட நடு ரோட்டில் கைதட்டி அழைக்கும் அவனை, அவனது நாசூக்கற்ற தன்மையை வெறுக்கிறார். அநாகரிகம், காட்டுமிராண்டித்தனம் என்றும் அப்படிக் கூப்பிடுபவர்கள் கீழ்த்தரமானவர்கள், கூப்பிட வைப்போரும் அப்படியே...என்று சொல்லி அந்தவகையில் தன்னை யாராவது அழைக்க நேர்ந்தால் அவன் எத்தனை ஆப்தனாக இருந்தாலும், அந்த சிநேகிதத்தை இழக்கத் தயார் என்றும், விட்டுச் சொல்லி விடுகிறார்.
       மௌனியே அந்த மாலை நேரத்தில், அவருக்குப் பழக்கப்பட்ட ஊர் வீதியில் நடந்து செல்வதாக நினைத்துக் கொள்ளுங்களேன்....அப்போது என்னவெல்லாம் அவரது மன ஓட்டங்களாய் இருக்கும் என்பதே இந்தக் கதையாக உருவெடுத்திருக்கிறதோ என்றுதான் நினைக்க முடிகிறது.
       பின்னாலிருந்து ஒருவர் கைதட்டிக் கூப்பிட்ட சப்தம். திடீரென்று பிடரியில் அடித்ததுபோல்.. திரும்பிப் பார்க்கும்போது, குறுக்காக அந்த ரிடையர்ட் ஜட்ஜ் போகிறார். பிரளயம் வந்தால் கூட அவ்வளவு பீதி அடைந்திருக்க மாட்டேன்...அப்படியொரு கொதிக்கும் மனநிலையில் அவருக்கு ஒரு “குட் ஈவினிங்” ...அவர் தன்னைப்பற்றி என்ன நினைத்துக் கொள்ளக் கூடும்...?
       பக்கத்தில் வந்து உங்களைத்தானுங்க...என்று உரத்துச் சொல்கிறான். ஆமாம்...உன்னைத் தேடிக்கொண்டுதான் போகிறேன் என்கிறான் இவன். உள்ளிருந்து எழும் ஆத்திரமோ அவன் மூக்கைப் பிடித்து அழுந்த நிமிண்ட வேண்டும்போல் இருக்கிறது. ஒரு வேளை முடிச்சுமாறியாக (மொள்ளமாறி...முடிச்சவிக்கி - கேள்விப்பட்டிருப்பீர்களே...இது மௌனியின் முடிச்சு மாறி...!) இருப்பானோ என்று ஒரு சந்தேகம். தன் ஷர்ட்டுக்குப் பை இல்லை. ஒருக்கால் தாசி வீட்டுத் தரகனோ?அப்படியானால் அங்கே தன்னைப் பார்க்கும் நண்பர்கள், தன்னைப் பற்றி என்ன நினைக்கக் கூடும்...? நினைப்புத்தானே பொழப்பைக் கெடுக்கிறது என்று ஒரு முதுமொழி நம்மிடையே உண்டு. அது கௌரவமானவர்களுக்கும் பொருந்தும் சமயங்கள் உண்டுதான். ஒருவேளை அவன் தான் மறந்துவிட்ட ஊர்ப் பண்ணை ஆளோ? இந்தத் தானாகப் பிடித்துக் கொண்ட சனி...யாராக இருக்கும்? கூட நிற்கும் இன்னொரு  நண்பனுக்கும் தெரியவில்லை.
       சரி...இங்கேயே இரு...அவசரமாக கடைத்தெரு போக வேண்டும் என்று கிளம்பி நழுவி விடுகிறான். நேரமாகி, அந்த ஆளையே மறந்து வீட்டிற்குச் செல்லக் கிளம்பியபோது, மறுபடி அந்தச் சத்தம்....உங்களைத்தானுங்க...
       அவன் ஒரு கவரை நீட்டுகிறான். ஐயா கொடுத்தாரு....என்று....தேடி வந்தது வக்கீல் சுப்ர திவ்யம் ஐயங்கார். அவரைப் போலவே அடையாளம் கொண்டதான இவர்தான் அவர் என்கிற தவறான முடிவில் கையில் வந்து நிற்கும் அந்தக் கவர். கொஞ்ச நேரம் முன்பு கடைத் தெருவில் குறுக்கே சென்ற அவர்தான் அந்த அவர்.
       எழுத எழுத...படிக்கப் படிக்க...ஒவ்வொரு பத்தியும் புரிகிறதுதான்.   ஆனால் ஒட்டுமொத்தக்  கதை என்று எதைச் சொல்கிறார், என்ன சொல்ல வருகிறார்.....இலக்கியம் இலக்கியத்திற்காகத்தான் என்பதில் இவ்வளவு அழுத்தமாய் இருந்தால் யார்தான், எப்படித்தான் புரிந்து கொண்டு கரையேறுவது? பாடாய்ப் படுத்தத்தான் செய்கிறார். சில்க் சட்டையிலும், விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்திலும், தினம் தினம் சாயங்காலம் அவர் போகும்போது...மேடையேறும்போது .வேஷம் மாறுகிறதே...! சாயங்கால நடைப் பொழுதுகளில், அவர் தினம் பார்க்கும் காட்சிகளில் மனிதர்களை, அடிக்கடி சந்திப்பவர்களை எப்படி மனதளவில் எட்டி நின்று பார்க்கிறார் என்பதைத்தான் இந்தப் படைப்பு நமக்கு உணர்த்துகிறது. எழுத்தாளனின் சுதந்திரம் நமக்குப் புலப்படுகிறது.
       கதர் ஜிப்பாவும், குல்லாவும் உயிர் பெற்று உலாவும் அந்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே...மேடையின் மீது போடும் ஆசனங்களில் ஒன்றில் உட்காரும் அந்தஸ்து....
       நான் அல்ல அவர்.....இப்படியே போய் வலது பக்கம் இரண்டாவது வீதி....18-ம் நம்பர் வீடு. அங்கே போ....
       தன்னையே ஒரு தரம் பார்த்துக் கொள்கிறான். தனிமையில் நிற்கும் மைதான வாயில்...உள்ளே பிரசங்கம். தான்தான் பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறோமோ....ஒரு கணம் இந்த எண்ணம்...உலகமே பைத்தியக்காரத்தனத்தோடுதான் அலைகிறது....யார்...யார்...எப்படி என்பதை எவனால் முழுதும் உணர்ந்து விட முடியும்?
       எதை எப்படி எழுத வேண்டும் என்பது எழுத்தாளனுடைய உரிமை. இப்படிச் சொன்னால்தான் இது பூர்த்தி பெறும் என்பதில் அவன் அடையும் திருப்தியும், நிம்மதியும் முழுக்க முழுக்க அவனுக்கே சொந்தமானது. எதெல்லாம் இலக்கியம் என்பதைக் கூட முடிவு செய்யும் உரிமையும் அவனுக்கானதே...! போலிகளை உரித்துக்காட்டும் இச்சிறுகதை சுருக்கமான வார்த்தைப் பிரயோகங்களில் புகுந்து புறப்படும் அர்த்த பாவங்களைப் புரிந்து கொள்ளுதல் என்பதே மௌனியின் வெற்றி.
                           ---------------------------------------------------------------கருத்துகள் இல்லை: