09 செப்டம்பர் 2019

சிறுகதை உஷாதீபன், “ யாருக்குச் சொந்தம் ” ---------- ------------------------



சிறுகதை                       உஷாதீபன்,     “குறி” ஜூலை-ஆகஸ்ட்-செப்.2019 இதழில்                                                   

                 யாருக்குச் சொந்தம் ”         
                ----------     ------------------------  
                                                    
     ந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு…  எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட மூணு நாலு வயசு பெரியவ அந்த மீனாப்பொண்ணு.  அவள நிமிந்துகூட நா பார்த்ததில்ல…என்னாத்துக்குங்கிற நெனப்புதான்….ஏற்கனவே படிக்காத கழுத, ஊரச் சுத்துற நாயின்னு அம்மா திட்டுது என்னை…எட்டு வரைக்கும்தான் நா படிச்சேன்…என்னத்தப் படிச்சேன்…அவுகளாத் தூக்கித் தூக்கிப் போட்டாக…அம்புடுதே…அதுனால என்னா பிரயோசனம்? எனக்குத்தான் படிப்பே செல்லலியே! சும்மா சினிமாவாப் பார்த்துப் பார்த்துக் கெட்டுப் போயிட்டேனாம்…அம்மாதான் வயித்தெறிச்சலாச் சொல்லும் தினப்படிக்கு. படிப்பு அப்போ செல்லலை, ஆனா பெறவு  செல்லாமயா…தெனசரி பேப்பர் படிக்கிறேனே….அதென்னவோ சினிமா விளம்பரம் பார்க்கிற பழக்கத்துல அப்டியே தலப்புச் செய்தியா படிக்கிற பழக்கத்த உண்டாக்கிச்சி…எழுத்துக் கூட்டிக் கூட்டிப் படிச்சிப் படிச்சி இப்போ நல்லா வந்திடிச்சி….அட…நாங்கூடப் படிக்கிறனா….?
தெரு முக்குல ஒரு கூரை செட்டுப் போட்டு கட்சி ஆபீசு ஒண்ணு இருக்குது…அங்கதான் கெதியாக் கெடப்பேன்…நா முணுமுணுத்துக்கிட்டே படிக்கிறத பலபேரு பார்த்திருக்காக….ஆனா யாரும் ஒண்ணுஞ் சொன்னதில்ல…அதுனாலதான் நா அங்கயே போயிட்டிருக்கேன்…எங்க ஊர்ல வாசகசாலை ஒண்ணு இருக்குதுங்க…அதான் லைப்ரரின்னுவாகளே….கேட்டுக் கேட்டு எனக்கும் அது சொல்ல வந்திடுச்சி…ஆனா சுவத்துல  வாசகசாலைன்னுதான் போட்டிருக்கும்…எப்பவோ எழுதினதுபோல…மங்கி தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கும்…அங்க நா போக மாட்டேன்…ஏன்னா நா எழுத்துக் கூட்டி முணு முணுக்கிற சத்தம் வருதுன்னு தொந்தரவா நினைச்சாங்க…கப்சிப்னு இருக்கும் அங்க…எதுக்கு சங்கடம்னுட்டு இந்த கட்சி ஆபீசுக்கே போயிடுறது…அதுல ஒருத்தரு….எப்டி வருதோ அப்டியே படிங்கன்னாரு….டீ கூட வாங்கிக் கொடுத்தாருன்னா பாருங்களேன்….
அங்க எல்லாப் பேப்பரும் இருக்காது….கட்சிப் பேப்பர்னு சொல்லுவாகல்ல…அதுல ரெண்டு மூணு கெடக்கும்…அப்புறம் ஒரு இங்கிலீஷ் பேப்பர் பார்த்திருக்கேன்…இத எதுக்கு வாங்குறாகன்னு தோணும்…அத யாருமே தொட மாட்டாக…. ஆனா ஒண்ணு…சாயங்காலமா ஒருத்தர் தினப்படிக்கு வருவாரு…வந்தவுடனே அவுரு அந்த இங்கிலீஷ் பேப்பரத்தான் எடுப்பாரு….மனுஷன் மூலை முடுக்கு விடாமப் படிச்சித் தள்ளிடுவாரு…பல நாளு அவர வேடிக்கை பார்த்திட்டே எம்பொழுது போயிருக்கு….அவுருக்காகவே வாங்குறாக போலிருக்குன்னு நெனச்சுக்குவேன்…அவர் மூஞ்சி பளபளன்னு இருக்கும்…அறிவா இருப்பாரு மனுசன்…எனக்கு அவரோட பேசணும்னு ஒரே ஆச…ஆனா நிமிர்ந்து பார்த்தாருன்னா பயம்மா இருக்கும்…அவரு சாதாரணமாப் பார்க்குறதே அப்படியிருக்குதோ என்னவோ? எனக்கும் அவருக்கும் என்னா வந்திச்சி…நானா நெனச்சிக்கிடுறேன் போலதான் தெரியுது…சும்மாவாச்சும் ஒருத்தர் இன்னொருத்தர் மேல கோபப்படுறதுக்கு என்னா இருக்கு? நா படிக்காத ஆளா…அதுனாலயே இப்டியெல்லாம் நெனப்பு வருதோன்னு தோணுது எனக்கு…ஏன்னா படிச்ச ஆளுக பலபேரப் பார்த்திருக்கேன் நா…அவுக நிமிந்து பேசற அழகே தனியாத்தான் இருக்கும்…ஆனா அந்தப் பேச்சுலதான் என்ன ஒரு அடக்கம்…படிக்கப் படிக்கத்தான் அப்டி வரும் போலயிருக்கு…அர குறைகதான கத்திட்டுத் திரியுது…அதுக்குச் சொன்னேன்…
எனக்கு நியூசுலயே பிடிச்சது உள்ளுர்ச் செய்திதான். மூல முடுக்கு விடாம எங்கெங்க என்னென்ன நடந்திச்சுன்னு பாத்திடுவேன்…அப்பிடிப் பார்த்துப் பார்த்துத்தான் நானும் அந்த எண்ணத்துக்கு வந்தேன். சும்மா செய்தியா தெரிஞ்சிக்கிட்டு என்னா பிரயோசனம்? ஒரு செய்தியிலயாவது நாம இருந்திருக்கமா? நம்ம பேரு வந்திருக்குதான்னு தோண ஆரம்பிச்சிச்சு…பெறவுதான் அந்த வேலய ஆரம்பிச்சேன்…
எங்க ஏரியாவுல குழா போடறேன்…குழா போடறேன்னு சொல்லிக்கிட்டிருந்தாக பஞ்சாயத்துல… ஏரியா கவுன்சிலரு ஒருத்தன் எல்லார்ட்டயும் பரப்பி விட்டு காசப் புடுங்கிட்டான் பலபேர்ட்ட… அவம்பேரு பாரிவள்ளல். இத நம்பி எங்க தெரு வீட்டுக்காரவுகளெல்லாம் முந்திட்டுப் போயி நாலாயிரம், நாலாயிரம்னு  பஞ்சாயத்துல பணத்தைக் கட்டிட்டு வந்திட்டாக…முதல்ல எத்தினி வீட்டுக்குக் கனெக் ஷன் கொடுக்கிறாகன்னு பார்ப்போம்னுட்டு நா விட்டுட்டேன்…அப்பா கூடச் சத்தம் போட்டாரு…அம்மாவும் திட்டிச்சி…உனக்கென்னடா நீ பாட்டுக்குப் போயிருவ…நானில்ல அலை அலைன்னு அலைஞ்சு தண்ணி எடுத்திட்டு வர வேண்டிர்க்குன்னு சொல்லிச்சி…நீ பேசாம இரு…உனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். என்னவோ எம்மனசுல உறுத்திட்டேயிருந்திச்சி…ஏன்னா நா பாரிவள்ளல பல எடத்துல பார்த்திருக்கேன்…அவென் போறது வர்றது எதுவுமே எனக்குச் சரியாப் பட்டதுல்ல…பஞ்சாயத்துல கட்டுன பணத்துக்குப் பில்லுக் கொடுத்திட்டாக…ஆனா தண்ணிதான் எப்ப வரும்னு யாருக்கும் தெரில…
திடீர்னு ஒரு நா ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்த கண்மாய் பக்கத்துல ஒரு மேல் நிலைத் தொட்டிய கட்டினாக….போர்த்தொளை போட்டு ஆழ்குழாய்க் கிணறு  இறக்கி கம்மாத் தண்ணியப் பூராவும் உறிஞ்சி ஏத்த ஆரம்பிச்சிட்டாக….சனமும் நம்பிடுச்சி…வீட்டுக் குழாய்லயே தண்ணி வந்திரும்னுட்டு…கம்மால தண்ணி நெறஞ்சு இருந்தப்ப எல்லா வீட்டுலயும் நெலத்தடி நீரு பக்கமா இருந்திச்சு…அத உறிஞ்சினாலும் உறிஞ்சினாக…எல்லா வீட்லயும் அடில போயிடுச்சு…முன்னூறு அடி, நானூறு அடின்னு. ஆளாளுக்குக் கொதிச்சுப் போயிட்டாக….ரெண்டே மாசத்துல நடந்ததுதான் இது…நம்ப முடியுதா? ஏரியாவுல பக்கத்துக்குப் பக்கம் போரிங் மிஷின் பல வீடுகளுக்கு ஓட ஆரம்பிச்சிடுச்சி….மூவாயிரம் வீடுவரைக்கும் காச வசூல் பண்ணிப்பிட்டு நூறு வீடுதான் இருக்கும்…தொட்டிய ஒட்டின ஏரியாவுல சில தெருக்கள்னு குழாயப் போட்டு  கனெக்சனக் கொடுத்துப்பிட்டான்…அவுகளும் நல்ல தண்ணி வந்திடுச்சி…நல்ல தண்ணி வந்திடுச்சின்னு குதிக்க ஆரம்பிச்சிட்டாக…கனெக்சன் கொடுத்த ஏரியாவுலதான் பாரிவள்ளலோட வீடும் இருக்குது….கடசில பார்த்தா என்னா செய்தின்னா, சோறு வடிச்சா, சாதம் மஞ்சளா வருது, தண்ணி கடுக்குது…ருசியில்ல…வாடை வருது, அது இதுன்னு  சொல்ல ஆரம்பிச்சிட்டாக….ஒரு சாக்கடைத் தண்ணி கலந்திடுச்சின்னு பேச்சு வந்திச்சு…ஒரு நா புழுவா மெதக்குதுன்னு புலம்புறாங்க…அந்தத் தொட்டியவாவது சுத்தஞ் செய்தாத்தான…?அதுனால குளிக்கவும், தொவைக்கவும்தான் அந்தத் தண்ணி லாயக்குன்னும், யாரும் குடிச்சிற வேணாம்னும் தண்டோரா போட்டாங்க…என்னா பார்க்குறீக…தண்டோராதேன்…எங்க பக்கம் இப்பயும் அப்டித்தான்.. நல்லவேள…சனம் பொழச்சிச்சு…இப்போ அந்தத் தண்ணியும் வரலன்னு பேசிக்கிறாக…கம்மாய்ல தண்ணி இருந்தாத்தான…அந்த நெலத்தடியும் வத்திப் போச்சு போலன்னு நாங்க நெனச்சிக்கிட்டோம் …
வேணும்…நல்லா வேணும்னு குழா போடாத வீட்டுக்காரவுக பழிக்க ஆரம்பிச்ச கத தனி….. இன்னைக்கு வரைக்கும் டாமுலேர்ந்து கொழா இழுத்து தண்ணிக்கு ஏற்பாடு பண்ணல பஞ்சாயத்துலர்ந்து….அது எம்பது நூறு கிலோ மீட்டர் வரணும்…ஆனா ஒண்ணு கொழா எல்லாம் அங்கங்க எறங்கிக் கெடக்குது…கேட்டா அதுக்குத்தான்னு சொல்றாக…பல மாசமா அப்டியே கெடக்குற அந்தக் கொழாய்ல பலபேரு குடியே இருக்காகன்னு பேசிக்கிறாக…வேறே என்னென்னவோ தப்பெல்லாம் நடக்குதாம்…ஒரு எடம் சீண்ட்ரமா கெடக்குன்னு வச்சிக்குங்க…அங்க பாம்பும் பல்லியும் தானா வந்து அடையும்னு சொல்வாக..அது போல ஆயிடுச்சி …வசூல் பண்ணுன காசை என்னா பண்ணினாகன்னு எதுவும் தெரில….ஏன்னா கொழா போடுறதுன்னா அதப்போல இன்னொரு பங்குக் காசு அவுக போட்டாகணும்ல…இவுக எப்பப் போட்டு எப்பத் தண்ணி வர்றது எங்க சனத்துக்கு…
இதுதான் சமயம்னு நா கூட்டத்தக் கூட்ட ஆரம்பிச்சேன்…எங்க ஏரியாவுல அரசு பஸ்ஸை நுழைய விடுறதில்லங்கிறது எங்களோட மொதப் போராட்டமா இருந்திச்சு….ரோட்டு நுனில போய் பிளாஸ்டிக் கொடமாக் கொண்டாந்து கலர் கலரா அடுக்கி வழிய மறிச்சு உட்கார்ந்துடிச்சிங்க எல்லாப் பொம்பளைகளும்…கூட்டமான கூட்டம்…இம்புட்டுச் சேரும்னு நானே எதிர்பார்க்கல….ஏற்கனவே சனம் துடிச்சிப் போயிருக்குன்னு தெரிஞ்சிச்சி…யாருடா பூனைக்கு மணி கட்டுறதுன்னு எதிர்பார்த்திட்டு இருந்தாப் போல அம்புட்டுப் பேரும் மொத்தமா வந்திட்டாக…

தண்ணி கொடு…தண்ணி கொடு….சுத்தமான தண்ணி கொடு….
ஏமாற்றாதே…ஏமாற்றாதே….ஏழை சனத்தை ஏமாற்றாதே….
காசு வாங்கின அண்ணாச்சி…..                                                கொழா போடுறது என்னாச்சி…..
எங்க பணம் என்ன ஆச்சு…?                                             யார் வயித்துல செரிச்சிச்சு?                                     

இன்னும் என்னென்னவோ கோஷங்களைப் போட்டுக்கிட்டு நாறடிச்சிட்டாக பகுதி சனங்க…மொதல்ல பயந்தவன்.பாரிவள்ளல்தான்.  இத எதிர்பார்க்கல போல….அவந்தான் சேர்மனோ இல்ல தலைவரோ என்னவோ பேர் சொல்றாக…அவரோடக் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு காசக் கொள்ளையடிச்சிட்டான்ங்கிறது ஏற்கனவே பேச்சு…அது இப்போ உறுதியாயிடிச்சு போல …ஏன்னா நாந்தான் சொன்னனே….வெறும் சைக்கிள்ல போயிட்டிருந்தவன் இப்போ ஒரு புது டூவிலர் வாங்கியிருந்தான்….வட்டிக்குப் பணம் கொடுக்கிறான்னு வேறே பேச்சு….திடீர்னு வெள்ளையும் சொள்ளையுமாத் திரிய ஆரம்பிச்சா…? யாருக்குத்தான் சந்தேகம் வராது…அந்தச் சேர்மன்காரரைப் பத்திக் கேட்கவே வேணாம்…..ஏற்கனவே அந்தாள் பெரிய ரௌடிங்கிறது நம்ம ஆளுகளுக்குத் தெரியும்…இப்பல்லாம் அப்டித்தான பதவில இருக்காக…இப்போ அவுருக்கு இவன் பாடிகாடு. கேட்கணுமா…? . 
அப்பத்தான் மொத மொறையா எம்பேரு பேப்பர்ல வந்திச்சி…..ஏன்னா விசயத்த ஆரம்பிச்சவனே நாந்தானே….பிரச்னையே பெறவுதான் ஆரம்பமாச்சு…போலீஸ் வந்திச்சி…கலைஞ்சு போகச் சொன்னாக…யாரும் கேட்கல…ரொம்பப் பிஸியான எடம்…காரு, ஆட்டோ, ஸ்கூல் பஸ், டூ வீலர் இப்டி எதுவும் போக முடியல்ல…நானு,பாருங்க வெறுமனே நானு நானுக்கிட்டிருக்கேன்…எம்பேரு சேதுங்க…சரிங்களா…! நானு,  மணிகண்டன், அமாவாசை, கோரி,சஞ்சீவி இன்னும்  நாலஞ்சு பேரு…எங்களப் பிடிச்சி உள்ள போட்டா எல்லாம் சரியாப் போயிடும்னு யார் சொன்னாகளோ…விறு விறுன்னு வண்டில ஏத்திட்டாக எங்களை….நாங்களும் ஏறிட்டோம்….எங்க கூடவே பத்துப் பன்னிரண்டு பொம்பளைகளும் முண்டிக்கிட்டு ஏறிடிச்சி….எங்களையும் கூட்டிட்டுப் போய்யா…எங்களுக்குத்தான இந்தத் தம்பிக போராட்டம் பண்ணினாக…நாங்களும் வர்றோம்… அவுக மட்டும் கஸ்டப்படவான்னு ஏறிட்டாங்க. அந்த வேகத்துல புதுபுதுன்னு நிறையப் பேரு ஏறி வண்டியே நெறஞ்சு போச்சு…இன்னொரு வேனும் வந்திச்சி. அதுலயும் அம்புட்டுப் பேரும் உட்கார்ந்தாச்சு….பொட்டுத் தண்ணியில்ல…தெனம் சனம் பாடாப் படுது….எத்தினி மாசம் ஆச்சு…யாரும் கண்டுக்கல….என்னதான் செய்வாக….எதுவுமே ஒரு அளவுதான…கவனிக்கிலேன்னா கடாசிலே இப்டித்தான வரும்?
எங்க எல்லாத்தையும் கொண்டுபோய் ஒரு மூடிக் கெடந்த ஓடாத சினிமாத் கொட்டாய்ல  கொண்டு அடச்சாக…வாசல்ல நாலு போலீஸ் நின்னிச்சு…சனம் அங்கங்க கூடிக் கூடிப் பேச உட்கார்ந்துட்டாக…பொழுது போகணும்ல…ஆளாளுக்கு வெளிய போகவும் உள்ள வரவும் டீயக் குடிக்கவும், வாங்கிட்டு வரவும்னு இருக்க ஆரம்பிச்சிட்டாங்க…போலீசும் கண்டுக்கல…போறவன் போறான்…இருக்கிறவன் இருக்கான்ன மாதிரி இருந்திச்சி…அவுக நோக்கம் கூட்டத்தக் கலைக்கணும்…ஏரியா டிராஃபிக்க ஓ.கே. பண்ணனும்…அவ்வளவுதான்…சாயங்காலம் எங்க எல்லாத்தையும் விட்டுட்டாகன்னு வச்சிக்குங்க….
ஒழுங்கா இருந்துக்குங்க…அடுத்தாப்புல ஏதாச்சும் மறியல் அது இதுன்னு பண்ணினா காப்புதான்…ஞாபகமிருக்கட்டும்….சப் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வந்து கத்திட்டுப் போயிட்டாரு…
ரெண்டு ஆள    அனுப்பிச்சி என்னக் கூப்பிட்டு விட்டான் பாரி…தான் கூப்பிட்டா வருவனோ மாட்டனோன்னு சேர்மன் அய்யா கூப்டாருன்னு வந்தவுக சொன்னாங்க….
இவன் என்ன கூப்டுறது…நானென்ன போறதுன்னு நினைச்சிட்டு, போங்க வர்றேன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன்….அப்பருந்துதான் அவனுக்கும் எனக்கும் பகை ஆரம்பமாச்சு….
என் வேல, மனு எழுதறது…வீடு வீடாப் போயிக் கையெழுத்து  வாங்குறது….கலெக்டர்ட்டப் போயிக் கொடுக்கிறது…இப்டி இருந்திச்சி….படிக்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன்…இப்போ மனுவெல்லாம் நல்லா எழுதக் கத்துக்கிட்டேன்னுதான் சொல்லணும்….
அம்மா கூடச் சொல்லிச்சி….இந்த வேலைய கலெக்டர் ஆபீஸ் வாசல்ல கைல பேப்பரோட போயி உட்கார்ந்தீன்னா     நாலு காசாவது கெடைக்கும்டா…இப்டி வெட்டிக்கி ஊர்க் காரியத்தச் சொமந்துக்கிட்டுத் திரியுறியே…
எனக்கென்னவோ நல்லதான வேல செய்றதுல ஒரு சந்தோசம் இருந்திச்சு…எங்க கலெக்டரு நல்லவரு…நேர்மையானவரு…அவரு வந்தப்பிறவு கலெக்டர் ஆபீசுல லஞ்சம் படுவேகமாக் குறைஞ்சிடுச்சின்னு சொல்றாவ…யாராச்சும் வாங்கிப் பிடிபட்டா அவ்வளவுதான்….கதை முடிஞ்சிச்சு….அவுரு மேலயே என்னென்னவோ குறை சொல்லிப் பார்த்தாக…எதையும் சனம் நம்பல….ஏரியா ஏரியாவா மனுசன் என்னா அலைச்சல் அலையறாரு….கார்லதான வர்றாருன்னு சொல்றாக…கார்ல வந்து எறங்காம,ஒரு கலெக்டரு நடந்தா வருவாரு? கொஞ்சமாச்சும் நியாயம் வாணாம் பேச்சுல…என்னத்தையாவது வாய்புளிச்சதோ, மாங்கா புளிச்சதோன்னு பேசிப்புடறதா?  தெருத் தெருவா, சந்து சந்தா என்னா அலைச்சல்….தண்ணி ஒழுங்கா வருதா? சாக்கடை சரியா ஓடுதா…கொசுத் தொல்லை இல்லாம இருக்கா…ரோடு போட்டிருக்கா…தெரு லைட் எரியுதா…ரேஷன் அரிசி கரெக்டாக் கிடைக்குதா….மண்ணென்ணெய் ஒழுங்கா ஊத்துறானா….பஸ்சு டயத்துக்கு வருதா? எல்லா ரூட்லயுமிருந்து இருக்குதா?தெனம் வீதிய சுத்தம் பண்றாகளா?  எத விட்டாரு அவுரு? இப்டிச் சொல்லிக்கிட்டே போகலாம்….
இந்த மாதிரிச் சின்னச் சின்ன விஷயத்தக் கூடவா ஒரு கலெக்டர் பார்ப்பாரு? அப்டித்தான வச்சிருக்காக…மத்த பயலுவ எல்லாம் சொகுசுப் பயலுவ…எவன்டா என்னத்தத் தூக்கிக்கிட்டு நம்மகிட்ட வருவான்…எவன் தலைல மொளகாய் அரைக்கலாம்…எம்புட்டுக் காசத் தேத்தலாம்னுதான அலையுறானுங்க…எத்தன வாட்டி எங்க ஏரியா டீக்கடைல எங்க கலெக்டரப் பார்த்திருக்கேன் தெரியுமா? ஆளோட ஆளா நின்னு டீ குடிக்கிறத எங்கயாச்சும் பார்த்திருக்கீகளா? மழை தண்ணி ஊத்திச்சுன்னு வச்சிக்குங்க…மனுசன் பொத்திக்கிட்டு வீட்டுல மொடங்கிடுவாருன்னு நினைக்கிறீகளா…எந்தக் கலெக்டருதான் அப்டி இருப்பாக…? இருக்க முடியாதுல்ல… எங்க ஆளும் அப்டியில்லைதான்….ஆனா ஒண்ணு ரொம்ப வித்தியாசமா வருவாராக்கும்…வெள்ள நிவாரணத்தப் பார்வையிட ஆபீசர்கள முன்னாடி அனுப்பிச்சிட்டு, தலைல முண்டாசோட வேட்டிய மடிச்சிக் கட்டிக்கிட்டு யாருன்னே தெரியாம கூட்டத்தோடு கூட்டமா வந்து நின்னிருப்பாரு….அவுருக்கு எந்நேரமும் சனத்தோட சௌக்கியந்தான் முக்கியம்…
.மனுசன் யாருக்கும் வளைஞ்சு கொடுக்கமாட்டாராம்…அத வேறல்ல சொன்னாக…இப்டி இப்டித்தான் செய்வேன்….அநாவசியமா யாரும் குறுக்கிடக் கூடாதுன்னு கட்சி ஆளுக வந்தாக் கட்டன் ரைட்டா சொல்லிப்புடுவாராம்…எவனும் எதுவும் கெடைக்கும்னு அவருட்ட வந்து நிக்க முடியாது….அப்டி கண்டிஷனா இருந்துதான் பிடிக்காம இப்போ பதிமூணாவது எடமா எங்க ஊருக்கு வந்திருக்காரு…அவரு வர்றப்பவே எல்லாச் செய்தியும் முன்னாடி வந்திடுச்சி…அவரா…அவரா…ன்னு பேப்பர்லயும், டி.வி.லயும் அவரப் பத்திப் படிச்ச நம்ம ஆளுங்க மனுநீதி நாளின்போது குமிஞ்சி போய்ட்டாக…
என்னா ஒரு பொறுமை அவருக்குத்தான்…? கூட்டமான கூட்டம்…ரோட்டைத்தாண்டி நிக்குது…அந்தச் சிரிச்ச மொகம் மதியம் மூணுவரைக்கும் மாறவேயில்ல…எங்க எல்லார்ட்டயும் மனுவ வாங்கி என்ன ஏதுன்னு கேட்டு சம்பந்தப்பட்ட ஆபீசர்ட்டச் செய்யச் சொல்லி, நாளைக்கே எனக்கு பதில் வேணும்னுல்ல சொல்லிப்புட்டாரு….மூன்றரைக்கு மேலதான மதியச் சாப்பாடே சாப்பிடப் போனாரு….சனங்க சந்தோசந்தான் அவுரு சந்தோசம்…அவுக அம்மாச்சி அப்டித்தான் அவர வளர்த்ததா ஒரு மீட்டிங்ல சொன்னாரு…இப்டிப்பட்ட ஒருத்தரப் பார்த்தாவது நாம திருந்த வேணாமா?
எங்க அம்மா இருக்கே அது ரொம்பப் பாவம்…பெத்த வயிறு கலங்குற மாதிரி எப்பயாச்சும் புலம்பும்…அப்பா எதுவுமே சொல்லாது…அதுபாட்டுக்கு அது இருக்கும்…அம்மா ரொம்பச் சத்தம் போட்டா, நல்லதுதான செய்றான்…அப்டின்னும்….அது மில்லுல வேல பார்த்திச்சி…ஒரு கட்டத்துல  நெறையப் பேர வெளில அனுப்ப ஆரம்பிச்சாக….அதுல அப்பாவும் வந்திட்டாரு…அதான் முப்பது வருசம் பார்த்தாச்சில்ல…கொஞ்ச நாளைக்காவது டென்சனில்லாம இருப்போம்னுக்குவாரு….பாவமாத்தான் இருந்திச்சி எங்களுக்கும்…நா நல்லா படிச்சி வேலைக்கிப் போயிருக்கணும்….அதுக்கு நமக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சி….சின்ன வயசுல சேர்க்கை சரியில்ல…நா யார் யார்கூடச் சேர்ந்து வெட்டிக்கி அலஞ்சனோ அவனெல்லாம் இப்ப நல்லாயிருக்கானுக…எல்லாப் பசங்களும் எங்கூடச் சேர்ந்து சினிமாப் பார்த்திட்டே அலைஞ்சவுங்ஞதான்..
என்ன கலாட்டாவெல்லாம் பண்ணியிருக்கோம் சினிமாத் தியேட்டர்ல… எங்கூட இருந்தானே சஞ்சீவி அவென் பண்ணாத கூத்தா…படம் ஓடிட்டிருக்கைல ஒரு பொம்பளப் புள்ளைய இழுத்திட்டு கக்கூசுக்குள்ள ஓடிட்டான்னா…அது குய்யோ முறையோன்னு கத்த, சுத்தம் பண்ண வந்த தோட்டிச்சி பார்த்துப்பிட்டு கை வாளில இருந்த பினாயில் தண்ணிய அவன் மேல தூக்கியடிக்க, அப்டியே செவுறேறிக்குதிச்சு கரம்பக் காட்டுக்குள்ள விழுந்து ஓடிட்டான்ல…மறுநா பார்த்தா ஒடம்பு பூராக் காயம்…என்னாடான்னு கேட்டா காம்பவுன்ட் சொவுரு கண்ணாடி கிழிச்சிடுச்சின்னான். எங்க ஊரு சினிமாத் தியேட்டர் பின்னாடி காம்பவுன்ட் சொவுரு உயரம் கம்மி. எவனும் ஏறிக் குதிச்சு வந்து ஓசி சினிமாப் பார்த்துடக் கூடாதுன்னுட்டு கண்ணாடிச் சில்லுகளா காம்பவுன்ட் சுவத்து நெத்தில பதிச்சு வச்சிருப்பாக…பார்க்கவே பயங்கரமா இருக்கும்…அதுல போயி பயத்துலயும், பதட்டத்துலயும், கையை ஊண்டி, கால வச்சி எகிறி ஓடினான்னா? சொகுசாவா இருக்கும்…? ஆனா ஒண்ணுங்க…அவென் கூட இப்ப மிலிட்டரில இருக்கிறதாக் கேள்வி…வர்ற தைல அவனுக்குக் கலியாணமாம்….
நாந்தான் சுதாரிக்காமப் போயிட்டேன்….அப்பயே புத்தி இல்லாமப் போச்சி…..அப்பாவும்தான் எவ்வளவு சொல்வாரு…ஏதாச்சும் கேட்டாத்தான…எதச் சொன்னாலும் எதுத்துப் பேசினா….?சாப்பிடாமப் போறது…பாத்திரத்தை விட்டெறியறது… சாமான உடைக்கிறது…இப்டியே இருந்தா? யாருக்குத்தான் பிடிக்கும்? விட்டிட்டாரு…ஆனா ஒண்ணு சொல்லணும்…ஒரு நா கூடக் கை நீட்டினதுல்ல…அதுதான் எங்கப்பாட்ட எனக்குப் பிடிச்ச குணம்…அது ஒண்ணுக்காகவே அவருக்கு என் ஒடம்பச் செருப்பாத் தச்சுப் போடலாம்…இன்னைக்கு வரைக்கும் வெட்டியாத்தான் நா இருக்கேன்…அப்பாவோட சேமிப்பு, பிராவிடன்ட் பணம், இன்னும் என்னென்னவோ சொல்றாகளே…எல்லாமும் சேர்ந்துதான் பாங்குல போட்டு வச்சி, அந்த வட்டிலதான் குடும்பம் ஓடிக்கிட்டிருக்கு…
உடம்பு முடியாத ஆளுன்னு என்ன வெளில தள்ளிப்புட்டான்…நான் கொஞ்சம் முயற்சித்திருந்தா நீடிச்சிருக்கலாம். போதும்ங்கிற எண்ணம் எனக்கும் வந்திடுச்சி….முப்பது வருஷம் சர்வீஸ் போட்டாச்சுல்லங்கிற அலுப்பு வந்திடுச்சி…ஒருவேளை அந்த அலுப்புக்கு என் ஒடம்பும்தான் காரணமோன்னு இப்பத் தோணுது…இப்டியே இருந்தமா, போய்ச் சேர்ந்தமான்னு இருக்கணும்…படுக்கைல விழுந்துரக் கூடாது….அதான் நா சாமிட்ட வேண்டிக்கிறது…..எங்கய்யா பொலப்பம் இப்டி….அவுரு உட்கார்ந்து சாப்பிடுறதுக்காவது ஒரு அர்த்தம் இருக்கு…ஆனா என்னோட இருப்புக்கு ஏதாச்சும் அருத்தம் இருக்குதான்னு இப்பல்லாம் பல சமயம் மனசு அழுகுது. போற போக்கப் பார்த்தா ஏதாச்சும் தற்கொல கிற்கொல பண்ணிக்குவேனோன்னு எனக்கே பயமாயிருக்கு… …என்னவோ இருக்கேன்னு வையுங்களேன்…
இப்ப நா செய்ற முக்கியமான வேல பாதாளச் சாக்கடை போடுறது….அதாவது அதுக்கு மனு எழுதி எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கணும்….ஒரு வீடு விடக் கூடாதுன்னு வச்சிருக்கேன்….அந்தப் பாரி இருக்கிற தெருக்காரவுகதான் என்ன செய்வாகளோ….அவனுக்குப் பயந்துக்கிட்டு மாட்டேன்னுட்டாகன்னா….வெறும் கவுன்சிலர் அவன். என்னமா பயமுறுத்தி வச்சிருக்கான்னு நினைக்கிறீக….அதுக்கெல்லாம் காரணம் ரௌடி ராஜ்யம்தான்….மக்கள பயத்துலயே வச்சிருக்கணும்ங்கிற தந்திரம். எவனையும் வாயத் திறக்க விடக் கூடாதுங்கிற சாதுர்யம்….
எல்லார்கிட்டயும் பணிவா இருக்கிற மாதிரியும், நம்பாளுக….நம்பாளுகன்னு சொல்லிக்கிட்டு நடிச்சிக்கிட்டே திரியறது…உண்மையான மனசுங்கிறதெல்லாம் கிடையவே கிடையாது….எத்தன நாளைக்குத்தான் செல்லுபடியாகுதுன்னு பார்ப்பம்னுட்டுதான் நானும் இருந்தேன். அடுத்த தேர்தல்ல இவனத் தூக்கியடிக்கணும்டா….ன்னு எங்கூட இருந்த சாமிக்கண்ணு சொன்னான்.
நாங்க கோஷ்டியா ஏழெட்டுப் பேரு சேர்ந்திருந்தோம்….எப்பவும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் நிப்போம்…ஒண்ணாத்தான் போவோம்…வருவோம்….இதுவே அவனுக்குப் பிடிக்காமப் போயிடுச்சோ என்னவோ…..அவனோட மொறப்பொண்ணுதான் அந்த மீனாங்கிறவ…இப்பத்தான் அடிக்கடி எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சிருக்கா… அவனுக்குக் தெரியுமோ தெரியாதோ…தெரிஞ்சா விடுவானா…?
ஏ மீனாளு…ஏ மீனாளுன்னு அம்மாவும் ஏந்தான் இப்டி அவள இழுத்துக்கிட்டுத் திரியுதோ…ரெண்டு பேரும் சேர்ந்து தள்ளிப் போயி யானைக்குழாய்ல தண்ணி எடுத்திட்டு வர்றத நா பார்த்திருக்கேன்…அப்பல்லாம் நா அந்த கட்சி படிப்பகத்துல உட்கார்ந்திருப்பேன்…அத ஒட்டி வர்றப்ப அதும் பார்வை ஏன் அப்டித் திரும்புது…பேசாம எப்பயும் போல அம்மாச்சி கூடப் பேசிட்டே போக வேண்டிதான…அது பார்க்குறது அம்மாவுக்குத் தெரியாது போல…அந்த எடம் வர்ற போதுமட்டும் அது கொஞ்சமா பேக் அடிக்கிறத நா கவனிச்சிருக்கேன்…அது சரி அது அப்டிச் செய்றது எனக்கெப்படித் தெரிஞ்சிச்சு…நா பார்க்கக் கண்டுதான…ஆனாலும் வேணா…அது அவனோட மொறப் பொண்ணு…எதுக்கு வம்பு…? அத்தோட அதான் முன்னமயே சொன்னனே…வயசு பெரிசுன்னு….அதுக்காச்சும் தெரிய வேணாமா?
ஒரு வேள தம்பி மாதிரி நெனச்சுப் பார்க்குதோன்னு கூட யோசிச்சேன்….அப்டிப்பார்த்தா அந்த மாதிரி நாக்க உள்ளவிட்டு சுழட்டுமா…? என்னா உருட்டு உருட்டுது…ஆனாலும் தைரியந்தான் அதுக்கு… அந்த நேரம் பார்க்காமப் போனா நஷ்டந்தான் நமக்கு…ஏன்னா ஓரக் கண்ணுல அவ நாக்கு சொழட்டுற அழகு இருக்கே….அதுலதான் நா விழுந்துட்டனோ…பக்கத்து சாவடில ஆளுக எந்நேரமும் உட்கார்ந்திருப்பாக…அவுக கண்ணுல படாதா? யாராச்சும் நோட் பண்ணிற மாட்டாக…?இந்நேரம் நிச்சயம் கவனிச்சிருப்பாகதான்…என்னைக்கு வம்பு வரப்போவுதோன்னுதான் கெடக்கேன் நா…
அப்டி ஆளுக கவனிச்சிருந்தா அது பாரி காதுக்குப் போயிருக்கும்ல…ஏற்கனவே அவன் ஒரு பொறுக்கி…அத வெட்டிப் போட்டாலும் போட்ருவான்…ஆனா அந்த மாதிரிப் பயம் எதுவும் இதுகிட்டக் காணலியே…அதுதான எனக்கு ஆச்சரியமா இருக்குது…
ஒன்வயசுதாண்டா இருக்கும் அதுக்கும்…எப்டி வீட்டுக்குப் பொறுப்பா இருக்கு பார்த்தியா…?ன்னாரு அப்பா. எனக்கா ஒரே ஆச்சரியம். இத எதுக்கு எங்கிட்டச் சொல்றாருன்னு தோணிச்சு…
அன்னைக்குச் சந்தைக்குப் போனப்ப அப்பாரு, அது அய்யாகூடப் பேசிட்டிருந்ததப் பார்த்தேன்…அவுக ரெண்டு பேரும் ஒரே மில்லுல வேல பார்த்தவுகதான்…ஆனாலும் அய்யாவுக்கும் அவுருக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. எங்கப்பாரு போராட்டம், உண்ணாவிரதம்னு திரியறவரு…ஆனா அந்த மீனாப் பொண்ணு அப்பா அப்டியில்ல…அவுரு வேறே ஒரு யூனியன் ஆளுக… நிர்வாகத்தோட எப்பவும் ஒத்துப் போயிடுற கட்சி அது…அவுங்கெடக்கான்…நரிப்பயன்னு எத்தினியோ வாட்டி அப்பா வீட்ல கத்துனத நா கேட்டிருக்கேன்….ஒரு முறை அப்பா செயிலுக்குப் போறதுக்குக் கூட அவுருதான் காரணமா இருந்தாருன்னு தெரியும்…அந்த நேரம் அப்பா சஸ்பென்ஷன்ல இருந்தாரு…ஒரு ஒண்ணரை வருஷத்துக்கு மேல வேலயில்ல…தரித்திரத்துல எங்க வூடு திண்டாடித்  தெருவுல நின்ன நேரம்….பெறவு எல்லாஞ் சரியாப் போச்சுன்னு வைங்க…ஆனா ஒண்ணு இப்போ ரெண்டு பேரும் ரிட்டையர்ட ஆயிட்டாக…அவுருக்கும் ஒடம்பு முடியாமப் போயி அவுகளே வெளியேத்தித்தான் வந்தாருன்னு தெரியும்…கடாசியா அவுகளுக்கு பிரிவுபசார விழா நடத்தின அன்னைக்கு எல்லார் முன்னாடியும் அப்பா கால்ல விழுந்தாரு அவுருன்னு கேள்விப்பட்டேன்…நா பார்க்கல…ஏன்னா நா அன்னைக்கு ஊர்ல இல்ல…அந்த ஒறவுதான் இப்பத் திரும்பவும் ஒட்டிக்கிச்சோன்னு தோணுது…
இது நடந்து ஒரு வாரம் இருக்கைல அந்தத் திங்கக் கெழைமை அந்தச் சேதி எங்க காதுக்கு வந்திச்சு…ஊரே பரபரப்பாக் கெடக்குதுன்னாக….மீனா அப்பாரு காத்தமுத்துவ யாரோ அவுரு நெல்லு மண்டில வச்சி வெட்டிப்புட்டாகங்கற சேதிதான் எங்களக் குலுக்கிப் போட்டிருச்சி…நெல்லு மண்டி அவுக பாட்டன் காலத்துலர்ந்து இருந்திட்டிருக்குது…ஆனா அங்க என்ன நடக்குது…ஏது நடக்குதுன்னு எனக்குத் தெரியாது இன்னை வரைக்கும்…வெளில போற போக்குல பார்த்தா நெல்லுப் பரத்தி சிமிண்ட் களத்துல காயப் போட்டிருக்கிறது மட்டும்தான் கண்ணுக்குப் படும்…எத்தினியோ குடும்பம் அதவச்சிப் பொழைக்கிறதாச் சொல்லுவாக…ஒடம்பு பூராம் வெட்டுக் காயங்களோட கையி துண்டாயிப் போச்சின்னு தெரிஞ்சி, அப்பா நாங்கள்லாம் அசுபத்திரிக்கு ஓடினோம்…அங்க போனப்பெறவுதான் தெரிஞ்சிச்சி, அவுர வெட்டுன ஆளு அங்க வேல பார்க்குற வாட்ச்மேன் செல்லையாதான்னு…
தூண்டித் தொளச்சுப் பார்த்தப்ப விஷயமே வேறவா இருந்திச்சி….நா ஒண்ணு மனசுல நினைக்க, அப்பா ஒண்ணு மனசுல வச்சிருக்க…எங்கம்மா, அப்பா நெனப்புல சந்தோசப்பட்டிட்டிருக்க நடந்ததென்னவோ சம்பந்தமில்லாமல்ல இருக்குன்னு நாங்கள்லாம் விக்கிச்சிப் போனோம்…நாங்கள்லாம்னா யாரு….எங்கப்பாரா? இல்ல எங்கம்மாரா…? ம்ம்ம்ம்….என் ஃப்ரென்ட்சுகதான்….டேய்….ஒன் வருங்கால மாமனாரு படா ஆள்டா…..எத்தினி வருஷமா மனுசன் என்னா வேலை பார்த்திருக்கார் பார்த்தியா…..ன்னு என் கொடுக்குகள்லாம் சிரிக்க ஆரம்பிச்சிட்டானுக…
நா ஒன் வீட்டுக்கு வரல்ல…இங்கதான் இருப்பேன்….இவுரு காலடிலதான் கெடப்பேன்…நீ என்ன வேணாப் பண்ணிக்கோ….ன்னிருச்சாம்…அந்த வாட்ச்மேன் சம்சாரம்….
.இத்தினி வருஷமா என்னை ஏமாத்திரிக்கியேடீ…..உன்னச் சும்மா விடுறதா….நா செயிலுக்குப் போனாலும் பரவால்ல…உன்ன உயிரோட விட மாட்டண்டீ….எங்கூடவும் படுத்திட்டு, ரெண்டு பிள்ளைகளையும் பெத்திட்டு, அவுரு கூடவும் பாய் விரிச்சிரிக்கியேன்னு பாய்ஞ்சிட்டானாம்….
என்னடா பொண்டாட்டிக்கும் மண்டில வேல போட்டு கைநிறையச் சம்பளத்தையும் கொடுத்து நம்மள இப்டி வாழ வைக்கிறானேன்னு நன்னியோட இருந்தவன ரெண்டு பேருமாச் சேர்ந்து இளிச்சவாயனாக்கிட்டீங்களேடி…..என்னால அவனக் கொல்ல முடியாது….ஆனா தொட்டுத் தாலிகட்டி இத்தினி வருஷம் எம்பொண்டாட்டிங்கிற பேர்ல உலாத்திக்கிட்டு எனக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணியிருக்கியே….உன்னைக் கைவைக்க முடியும்ல…அத எவனாவது தடுத்துப் பார்க்கட்டும் பார்ப்போம்…ன்னு சொல்லி புலியாப் பாய்ஞ்சிருக்கான் செல்லையா.
நம்ம பசங்க எங்கிருந்துதான் முழுக்க இப்டி விசயத்தக் கலெக்ட் பண்ணுவானுங்களோ…வரி விடாமச் சொல்றானுக…..அவிஞ்ஞளுக்கு சினிமாப் பார்க்குறாப்ல இருக்கு….எனக்கு? என்ன ரோசனை போயிருக்கும் மனசுக்குள்ள? இப்ப அந்தப் பிள்ளையக் கட்றதா வாணாமா? இப்டி நினைச்சப்ப அவ நாக்கு சுழட்டுற சிரிப்புத்தான் என் மொகத்து மின்னாடி வந்திச்சு….அத விடுங்க விசயத்துக்கு வாங்க….
டே…டே…டே…ன்னு விரட்டிக்கிட்டே குறுக்கப் பாய்ஞ்சிருக்காரு காத்தமுத்து. எம்பொண்டாட்டியத் தடுக்கிறதுக்கு நீ யார்றா நாயேன்னு ஒர்ரே வீச்சு…. வீசின வேகத்துல கை துண்டாத் தெறிச்சி விழுந்திருச்சாம்….கோபம் தலைக்கேறிப் போயி வர்றது வரட்டும்னு தாறுமாறாப் பிடிச்சி வெட்ட ஆரம்பிச்சிட்டானாம்…அவம் பொண்டாட்டிக்கு பயங்கரமான காயமாம்….துடிச்சுக் கெடந்தாளாம் ரொம்ப நேரத்துக்கு ஆளுக யாரும் பக்கத்துலயே வரலையாம்…. பயந்துபோயி ஓடி ஒளிஞ்சிட்டாகளாம்….
யாராச்சும் பக்கத்துல வந்தீக ஒங்களுக்கும் இந்த கதிதான்டான்னு சந்நதம் வந்த ஆளு போல சிலிர்த்தானாம் செல்லையா. மண்டில வேல செய்ற ஆளுக யாரும் அசையவே இல்லையாம்….துடிக்கத் துடிக்க ரெண்டு பேரையும் போட்டுப்பிட்டு போலீஸ் ஸ்டேசனப் பார்த்து நடந்துட்டான் செல்லையா… பொண்டாட்டி செத்திட்டா….அவுரு ஒத்தக்கையோட குத்துயிரும் குலையுயிருமா கெடக்குறதாச் சொன்னாக…..
நாங்க காத்தமுத்துவப் பார்த்திட்டு வெளில வந்தப்ப இருட்டிப் போச்சி…அன்னிக்கு….பிரக்ஞை இருந்திச்சி அவுருக்கு….சுத்தியும் போலீசு நிக்குது…சீக்கிரம் சீக்கிரம்னு வெரட்டிக்கிட்டே இருந்தாக….அப்பாரு கையப் பிடிச்சிக்கிட்டே என்னவோ கண்ணால வேண்டுன மாதிரி இருந்திச்சு….அப்போ பக்கத்துல அந்த மீனாளும் அழுதுக்கிட்டே நின்னிச்சி…என்ன சொன்னாரோ அது அவுக ரெண்டு பேருக்கும்தான் தெரியும்…ரொம்ப வருசப் பழக்கமாச்சே…நமக்கென்னா புரியும்…என்னென்ன பேசி வச்சிருந்திருப்பாகளோ…போலீசு விரட்டிடிச்சு எங்கள…ஒரு இன்ஸ்பெக்டரும், ரெண்டு கான்ஸ்டபிளும் இருந்தாக அப்ப…அவுரு பக்கத்துல ஒக்காந்து அவர்ட்ட என்னவோ கேட்க ஆரம்பிச்சாக… நாங்க வெளிய வந்திட்டோம்….காத்தமுத்து உயிரில்லாம என்னவோ சொல்றதும், அத பக்கத்துல இருந்த ஒரு போலீஸ்காரரு எழுதறதுமா ஆரம்பமாச்சு…எல்லாரையும்  போகச் சொல்லிட்டாக…
ஆசுபத்திரி வாசலுக்கு வந்தப்பக் கூட அப்பா எதுவும் பேசல…டேய் சேதுன்னு கூப்பிட்டு ஏதாச்சும் சொல்லீற மாட்டாரான்னு தவிச்சேன் நானு…அப்டி எதுவும் நடக்கல… வீட்டுக்கு வந்துட்டோம்…
அந்த மீனாப் பொண்ணு  மொகம் மட்டும் என் மனசுக்குள்ள இருந்திட்டே இருக்குது…அப்பாவும் ஒண்ணும் இதுவரைக்கும் சொல்லல…என்னா யோசிக்கிறாருன்னு புரிஞ்சிக்கவும் முடியல……என்ன முடிவு சொல்லப் போறாருன்னு தெரில….அதுதான்னு என்னால உறுதியா நெனைக்கவும் முடியல…ஏன்னா மீனாவ எனக்குக் குடுக்கணும்னு அவுரு சொன்னதா நானா நினைச்சிக்கிட்டிருந்தேன்னா…இத்தன நாள் தெளிவா இருந்திட்டு இப்பப் போயி நா ஏன் அநாவசியமாக் கொழம்பணும்? அதுக்குத்தான் ஒருத்தன் இருக்கான்ல…கேனத்தனமாப் போயிடாதா…அதான் சுதாரிப்பாவே இருக்கேன் நானு…

அப்பா இரக்கம் உள்ளவருதான். சிநேகிதத்துக்கு மதிப்புக் கொடுக்கிறவருதான். காத்தமுத்து சம்சாரம் நாமகிரி வந்து நின்னப்பக் கூட அப்பா எதுவும் சொல்லல…அவுக அம்மா கையப் பிடிச்சிக்கிட்டு அழுதிட்டிருந்ததை நா பார்த்தேன்…மனசுக்கு ரொம்பச் சங்கடமாயிடுச்சி…பேசாம நாமளே வாய் விட்டுச் சொல்லிப்புடலாமான்னு கூடத் தோணிச்சி…இத்தனைக்கும் நா மீனா கூட இன்னைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை கூடப் பேசினதுல்ல…பார்த்ததோட சரி…அதுவும் அதுவாப் பார்க்கிறத நா பார்த்தது…அவ்வளவுதான்….ஆனா ஒண்ணு அந்த நாக்கு சொழட்டுற சிரிப்பு இருக்கு பாருங்க…அதுக்குக் கோடி கொடுக்கலாம். அதான் என்ன மடக்கிடுச்சு…அதுலதான் நா விழுந்தேன்…என்னடா சும்மா இவன் இதையே சொல்றானேன்னு கூடத் தோணலாம்…அது ஒண்ணுதான் என்னை அவ விரும்புறாளோங்குறதுக்கு எனக்கு உள்ள ஆதாரம்…..
மனுசன் பொம்பளைய நினைக்கக் கூடாது….நினைச்சிட்டான் அது அவனக் கீழயும் வீசும்…மேலயும் தூக்கும்….இதுக்கெல்லாம் பக்குவமா வளர்ந்திருக்கணும்…நமக்குத்தான் அது இல்லையே….தாய் தகப்பன் நல்லதத்தான் சொன்னாக…இல்லேங்கல…ஆனா அத மீறின நம்ம நெனப்புன்னும், இருப்புன்னும் ஒண்ணு இருக்குல்ல…அதுதான பொழப்பக் கெடுக்குது…..என்னா நடக்கப் போவுதோ யாரு கண்டா….மீனா எனக்கோ அல்லது அந்தப் பிக்காலிப் பயலுக்கோ…
யாருக்காச்சும் தெரிஞ்சா தயவு செஞ்சு சொல்லுங்க…புண்ணியமாப் போகும்….ஆனா ஒண்ணுங்க…அவள மட்டும் நா கலியாணம் கட்டிட்டேன் பெறவு நிச்சயம் ஒழுங்கா பொறுப்பா இருப்பேனுங்க…இது சத்தியம்….சரி….சரி…நா புறப்படுறேன்…அந்தப் பாரிப்பய இங்க வர்றா மாதிரி இருக்குது….வந்துட்டான்…வந்துட்டான்….வந்துட்டானே….அச்சச்சோ…தப்ப முடியாது போலிருக்கே…
யே…பங்காளி….எங்கடா ஓடுற….நில்லு வாரேன்….நம்மாள்ரா நீ இப்ப…!
என்னது? நம்மாளா? என்னா சொல்றான்…
தூக்கி வாரிப் போடுது எனக்கு.
.என்னைத்தான் சொல்றானா…? பங்காளின்னு கூப்பிடுறான்…? என்னாச்சு அவனுக்கு….? அப்டீன்னா என்னா அர்த்தம்?  -
ஏ….சேது…உன்னத்தான்…என்னா கூப்பிடக் கூப்பிட காதுல விழாத மாதிரிப் போற…? நில்லுப்பூ….அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில நம்மாள்ட்டயே கைவச்சிட்டேல்ல….சேதி வந்திடுச்சுடீ… கன்ஃபார்ம் பண்ணிட்டுத்தான் வர்றேன்…
சொல்லியவாறே தோளில் வந்து விழுந்த கையைப் பட்டுன்னு தட்டி விட்டேன். அவன் சேக்காளியா நானு…இப்டி வந்து கை போடுறான்…?
இதுவரைக்கும் பொம்பள விஷயத்துல எந்தத் தப்பும் எப்பவும் செய்ததுல்ல நா…எங்கம்மா என்ன அப்டி வளர்க்கல…இப்போ நீ சொல்ற இதயே தகவலா எடுத்துக்கிட்டு சொல்றேன்…மொத மொதலா இந்த விஷயத்த, நீ என்ன சொல்ல வர்றேங்கிறத உன் வாயால நா கேட்குறதுல எனக்குக் கொஞ்சம் வருத்தந்தான். ஆனாலும் ஒண்ணு….இது பெரியவங்களாச் செய்த முடிவு. நானா எதுவும் முனையல….அப்டி அலையுற ஆளும் கெடையாது நானு…உனக்கே தெரியும்….அவசரப்படாத…சொல்லிப்புட்டேன்…
நீ முனைஞ்சயோ முனையலயோ அதல்லாம் எனக்கெதுக்கு….ஆரம்பத்துலேர்ந்தே உனக்கும் எனக்கும் பிடிக்காமப் போயிடுச்சி…இப்போ எனக்குக் குறுக்கவே வந்திட்ட நீ… இது என் வாழ்க்கைப் பிரச்னை….இந்தக் கலியாணம் எப்டி நடக்குதுன்னு பார்க்குறேன்….மீனா என்னாளு…..அத யாரும் பங்கு போட விடமாட்டேன்… அப்டி மீறிப் போட்டே நா பங்காளியாயிடுவேன்…ஜாக்கிரத……புரியுதுல்ல நா சொல்றது? எதுவும் செய்வேண்டியோவ்….பாரு வேடிக்கைய…..
சொல்லிவிட்டு அசால்ட்டாய் போய்க்கொண்டிருந்தான் பாரி. அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டு விக்கித்து நின்றான் சேது.
பங்காளீ…! என்னா  நின்னுட்டே திகைச்சு? போ பங்காளி…சும்மாப் போ…ஜாலியா போ…பார்த்துக்கிடுவோம்….அதான்.சொல்லிட்டேன்ல….பங்காளி….   தைரியமாப் போ…..இனி அவ நம்மாளு…எப்டீ…? நம்மாளுன்னேன்……சர்த்தானா…? ஆமடியோவ்வ்வ்……
மூச்சு நின்றுவிடும்போல் இருந்தது சேதுவுக்கு.                          
                     -------------------------------------------------




                          

    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...