24 ஜூலை 2019

“தட்டா முட்டி” – சிறுகதை – வா.மு.கோமு – வாசிப்பனுபவம் – உஷாதீபன்தட்டா முட்டி” – சிறுகதை – வா.மு.கோமு – வாசிப்பனுபவம் – உஷாதீபன்       


    வெளியீடு :- நடுகல் – இலக்கிய  மாத இதழ் – ஜூலை 2019
       போகிற போக்கில், அசால்ட்டாக, இந்தா வச்சுக்கோ….என்பதுபோல் ஒரு சிறுகதையை வீசி விட்டுப் போய்விடும் திறன் படைத்தவர் எழுத்தாளர் வா.மு.கோமு. இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதுவதாக நான் எப்போதுமே சொல்லிக் கொண்டதில்லை. என் படைப்புக்கள் ஜனரஞ்சகமானவைதான் என்று கூறும் அவர், பல இலக்கியத் தரம் வாய்ந்த கதைகளையும் எழுதியிருக்கிறார். எழுதிக்கொண்டுமிருக்கிறார். அவரது சரளமான நடையும், உருட்டுப் பிரட்டலும் படிப்போரை பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. அதை வாய்விட்டு, மனம் விட்டுச் சொல்வோர் எத்தனை பேர் என்பது வேண்டுமானால் கேள்வியாக இருக்கலாம்.
       தமிழ் இலக்கியச் சூழலில் ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றித் தாராளமாகச்  சொல்லிவிட்டால் (தாராளம் வேண்டாம்…சும்மா ரெண்டு வரி…ரெண்டு வார்த்தை) எங்கே தங்கள் தரம் குறைந்து விடுமோ என்று நினைக்கிறவர் பலர். அவர்கள் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருப்பதாக நினைப்பு.  சொன்னாலும் தனிப்பட்ட முறையில் முனகிக் கொள்வார்களேயொழிய பொது வெளியில் வாய் திறக்க மாட்டார்கள். ஒருத்தனை ஒருத்தன் மனம் திறந்து சொல்லாமலேயே அவனவன் தனித் தனியாய் சீரழியும் சூழல். கிடக்கிறது கிடக்கட்டும், கிழவனத் தூக்கி மனைல வையி…என்று நாம் இங்கே கதையைப் பார்ப்போம்.
       சின்ன வயசிலிருந்து பொறுப்பில்லாமல் திரிபவர்கள் சிலர் இருப்பார்கள். அம்மாதிரி உள்ளவர்களை பெற்றோர்களும் உன்னிப்பாய் கவனித்து திசை திருப்பி விட்டிருக்க மாட்டார்கள். அவர்களாகவே திருந்தியும் இருக்க மாட்டார்கள். பொறுப்பில்லாமல் திரிந்தவர்கள் மத்தியில் ஏதாவது ஒரு பழக்கம் விடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அந்தப் பழக்கம் அவனுக்கும், யாருக்குமே நன்மை விளைவிப்பதாய் இருக்காது. ஆனால் விட முடியாது தலையெழுத்தாகத்தொற்றிக் கொண்டு உயிரை வாங்கும். அவர்களை அடையாளப்படுத்தும் வகையில் நிலைத்தும் போகும். அவன் பெயரையே கூடச் சொல்லாமல், அந்தப் பொறுப்பற்ற பழக்கத்தின் பெயரைச் சொல்லி அவனை விளிக்கும் வழக்கம் வந்திருக்கும். பெயரே அதுவாகி விடும் அபாயம். அப்படிச் சொன்னால்தான் ஊரில் உள்ளவர்க்கும் புரியும், அடையாளம் தெரிந்து கொள்ள முடியும்….ஓ. அந்தாளா….?    ஆமா…அந்தப் பயதான…..? என்று.
       அப்படி ஒரு பழக்கம் உள்ளவன்தான் தட்டா முட்டி. இப்போது தட்டா முட்டி என்றால் அநேகமாக நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும். ஒரு படத்தில் மனோரமா அப்படிச் செய்து கொண்டிருப்பார். ரொம்பவும் இயல்பாக இருக்கும் அவரது செய்கை. அவரையறியாமல் செய்துவிட்டு செய்துவிட்டு, ஐயையோ…ஐயையோ….என்று உதறிக் கொள்வார். ஆனால் அவரால் அதைத் தவிர்க்கவே முடியாது. ஒவ்வொரு தடவை அந்தத் தப்பைச் செய்யும்போதும் (ஆமாம்…தப்புதான்) நெளி நெளியென்று நெளிவார்.
       அப்படியான ஒரு பழக்கம் உள்ளவன்தான் தட்டா முட்டி.. இப்போதாவது உணர்ந்து கொள்ள முடிகிறதா? விடுங்கள். அவனின் ஒரிஜினல் பேர் சதீஷ். ஆனால் அந்தப் பெயரைச் சொல்லி ஊரில் எவனும் அழைப்பதில்லை. ஏன், அவன் அம்மாவே அவனை அப்படித்தான் கூப்பிடும். அந்த அளவுக்கு அது நிலைத்துப் போயிருந்தது. சின்ன வயசிலிருந்தே அவன் பெயர் தட்டா முட்டிதான். எதைத் தொட்டாலும், கையில் எதை எடுத்தாலும் – போட்டு உடைத்தால்? உடைப்பதற்காகவே எடுத்ததுபோல் அவன் கைகளில் பொருட்கள் நிலைப்பதில்லை. அதை யாராலும் தடுக்கவும் முடியவில்லை.
       சரி…அதற்காக அவன் பொறுப்பில்லாத மனிதன் என்று சொல்லி விட முடியுமா? அந்த ஒரு பழக்கம் இருக்கிறது என்பதற்காக அவன் எதற்கும் ஆக மாட்டான் என்று சமூகம் ஒதுக்கி விடுமா என்ன? அவனும் பொறுப்புள்ளவன்தான். நாலு தறிகளை வைத்துக் கொண்டு அவன் ஒருவனே விடாமல் அவைகள ஓட்டி நெசவுத் தொழிலைக் கையாண்டு வருகிறான். கடும் உழைப்பின்பாற்பட்டுத்தானே அது? யாராவது நினைக்கிறார்களா?
       அவனுக்கு கல்யாணம் ஆன வேளையும், மாமனார் இறந்த வேளையும் அப்படி அமைந்து போனால் அதற்கு அவனா பொறுப்பாக முடியும்? எவனாவது ரெண்டு வார்த்தை பேசத்தானே செய்கிறான்?
       இவனுக்குப் பொண்ணு கொடுத்த நேரம் செரியில்லே. அவனொரு தோசிக்காலன். இனி அந்தப் பி்ள்ளை என்னத்துக்காகும்னு தெரிலயே…! எழவு வீட்டுல இப்டி காவக்காக்குறானே…!
       தாலி கட்டி முடித்ததும் அதற்காக அந்த மனுஷன் அப்டியா சாவாரு? வண்டி எடுத்திட்டுப் போயி வேன்ல விழுந்து செத்துரு…ன்னு சொன்னமாதிரில்ல போய்ச் சேர்ந்துட்டாரு…? என்னா வேதன…
       இங்க வாங்க மாப்ள…சேர்ந்தடிப்போம்…. – தனிக்குடி பழக்கமில்லாத இவன் அவனோடு சேர்ந்து போய் உட்கார….
       செத்துப் போன மாமனாரு எங்க பங்காளிதானுங்க மாப்ளே….நல்ல மனுஷன்தான்…அட..போனவரு போய்ச் சேர்ந்துட்டாரு…அந்த ஆயாக்காரியாவது உன் புருஷன்கூடப் போயி இருக்கிற வழியப் பாருடின்னு சொல்ல வேணாம்…நீங்க தனிச்சி நின்னு காஞ்சிக்கி்ட்டுக் கெடப்பீகளா…
       சப்போர்ட்டாத்தான் சொல்றான் இந்தாளு…ஆனாலும் அந்த நெனப்புல நான் அவள அப்டிப் பின்னால தட்டியிருக்கக் கூடாது….அம்மாக்காரி அப்டி வேலயாப் போன நிமிஷத்துல கை சும்மா இருந்தாத்தான….அப்டியா மாருக்குள்ள கைய விடுறது…? செஞ்சது தப்புத்தானோ…! அப்பன் செத்த துக்கத்துல கெடக்குற புள்ளக்கு இந்த நெனப்பு எப்டி வரும்? அறிவு கெட்ட மூதி நானு…!
       சும்மாவே திண்ணையில் கிடக்கிறான் சதீஷ் என்கிற தட்டாமுட்டி. என்ன மயித்துக்கு இந்தக் கல்யாணத்தப் பண்ணினது? உள்ளாற போயி தாலிய அத்துட்டு ஓடிருவமா…? எரிச்சல் பற்றிக்கொண்டு வருகிறது அவனுக்கு. மாமியார்க்காரி அடகாக்குற மாதிரிக் கெடக்காளே…!
       தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறாள் கீதா. சாப்பிட வாங்க என்கிறாள் கூடவே..!
நான் ஊருக்குப் போகலாம்னு இருக்கேன். தறிகள் சும்மாக் கெடக்குது நாலு வாரமா…
       சரி… சாப்டுட்டுப் போங்க….
       அப்ப நீ எங்கூட வரல்லியா? – கோபத்தில் முறித்துக் கொண்டு கிளம்வி விடுகிறான். ஊர் போய் நின்று சலம்புகிறான் பெற்றோர்களிடம் – நீங்களா ஒரு முடிவு பண்ணி, நீங்களா பொண்ணு பார்த்து, என் வாழ்க்கைய முடிச்சுப் போட்டீங்க…. என்கிறான் ஆதங்கத்தோடு.
       கீதா வந்து விடுகிறாள். மாமியாரிடம் ஒரு வார்ததை  பேசவில்லை இவன். கல்யாணம் பண்ணிய வேளையும், மாமனார் இறந்ததும், மனைவி இவனைக் கண்டு கொள்ளாததும், மாமியாரும் லட்சியம் பண்ணாததும், தனியாய்க் கிளம்பி வந்ததும் எல்லாமாகச் சேர்ந்து இவனைப் பொறும வைத்து ஆதங்கப்படுத்தி விடுகிறது. இப்போது இவன் வீட்டுக்கு அவன் பெண்டாட்டி வந்தும் அந்தக் கோபம் குறைந்தபாடில்லை. சாப்பிட வாங்க…என்றால் முறுக்கிக் கொள்கிறானே…அட பாலாவது சாப்பிடுங்க…என்கிறாள் கீதா. போகட்டும் என்று வாங்கி கை தவறவிட்டுவிடுகிறான். வெடிக்கிறது அவளுக்கு.
       தட்டா முட்டியா நீயி…? எப்போப்பாரு…எதையாச்சும் தட்டி விட்டிட்டே இருக்க? எங்கூட்ல இருந்தப்பவும் இப்டித்தான் செய்தே….இது பால் சொம்பு…தட்டி விட்டா ஒரு மனுஷிக்கு  கோபம் வருமா வராதா? சகுனமே சரியில்லன்னுதான தோணும்…? எனக்குன்னு எல்லாம் இப்டி நடக்குது…நீ தாலி கட்டுன கொஞ்ச நேரத்துல எங்கப்பன் போயிட்டாரு….நானே அந்தத் துக்கத்துல கெடக்கேன்…நீ என்னடான்னா பின்னால தட்டுற….? மாரப் புடிச்சி கசக்குற..? பொச்சப்புடிச்சிக் கிள்ளிவிடுற…என்னா ஜென்மம் நீ? – புலம்பி அழ ஆரம்பித்து விடுகிறாள். தட்டா முட்டி நிலை தடுமாறிப் போகிறான்.
       சின்ன வயசுல ஏற்பட்ட பழக்கம் எதுக்கெல்லாம் கொண்டு விட்டிடுச்சி…? அதப் போக்கவே முடிலயே? இப்டியா கெட்ட பேர ஏற்படுத்திக் கொடுக்கும்? நானாவா அதச் செய்றேன்….பழக்கத்துல அப்டி நடந்து போகுது? நானென்ன செய்ய? என்னால அத விட முடிலயே…! எல்லாரும் தட்டா முட்டி…தட்டா முட்டின்னே கூப்டுக் கூப்டு நெலச்சே போச்சே அது…! அந்தப் பேரே என்ன அதச் செய்ய வச்சிடுதே…மாத்திக்கவே முடிலயே….என்னா பண்ண? இரக்கம் மேலிடுகிறது அவளுக்கு.
எம் பொண்டாட்டிதானன்னு வெளையாட்டுக்குத்தான் கிள்ளினேன். நான் உன்னக் கட்டுனதுனாலதான் உங்கப்பாரு செத்துட்டாருன்னு ஊர்க்காரவுக பேசுன மாதிரியே நீயும் பேசிப்புட்டியே…இது சரியா? உங்கூட்டுலர்ந்து கௌம்புறப்போ ஏன் வரமாட்டேன்னு சொன்னே? கெடக்கட்டும்னுதான் விட்டேன். திடீர்னு வந்து நிக்குற…? நா இப்டி ஜாமான்களப் போட்டு உடைக்குறதெல்லாம் சாவும் மட்டும் நடந்திட்டேதான்இருக்கும்… உனக்குப் புடிக்கலன்னா நீ உன் ஊருக்குப் போயி இருந்துக்க…வேறே யாரயாச்சும் கட்டிக்க…உனக்கு ஒரு சங்கடமும் வேண்டாம்…நான் இப்டியே இருந்துட்டுப் போறேன்….தட்டா முட்டி என்னைக்கும் தட்டாமுட்டிதான்… - சொல்லிமுடிக்கவில்லை …அவனை இழுத்துக் கட்டிக் கொள்கிறாள் கீதா.
வாழ்க்கையே சமரசம்தான். குறையில்லாதோர் யார்? நம் குறை நமக்குத் தெரிவதில்லை. அல்லது ஒப்புக் கொள்வதில்லை. இதிலே தட்டாமுட்டி நான் அப்டித்தான் என்கிறான். அத விட முடில என்கிறான். அவனது வெள்ளந்தியான தன்மை அவளை ஈர்த்து விடுகிறது எல்லாவற்றிலும். அவன் அவள் மீது கொண்டிருக்கும் அன்பு தெள்ளத் தெளிவாய். அன்பின் அடையாளமாய் ஆசை சற்று எல்கை மீற அதையும் அவள் புரிந்து கொள்கிறாள். வேறென்ன குறை அவனிடம்? நாலு தறியை ஒரே ஆள் கையாளும் அந்த உழைப்பு ஒன்று போதாதா? ஒரு ஆண் மகனின் அந்தப் பொறுப்புணர்ச்சியின் முன்னால் இந்தத் தட்டா முட்டிக் காரியங்கள் ஒரு பொருட்டா என்ன? மனம் ஒப்புக்கொண்டால் எதையும் சகித்துக் கொள்ளப் பழகும். எதுவும் ஒன்றிப் போகும். எதிலும் குறையை ஒதுக்கி நிறையைக் காணும். கீதாவும் தட்டாமுட்டி என்கிற சதீஷூம் அப்படித்தான் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.
இப்படியொரு சந்தோஷமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்த வா.மு.கோமுவை நாம் வாழ்த்துவோம்.
              -----------------------------------------------------------------------------------------------
      


      
        

கருத்துகள் இல்லை: