“காக்காய்க் கதை“ – எஸ்.வைத்தீஸ்வரன் – சிறுகதை
– வாசிப்பனுபவம் – உஷாதீபன் வெளியீடு:- கணையாழி
தொகுப்பு – ஜூலை 1965 to ஜூலை
1966 {டிசம்பர் 1965 இதழ்} -------------------------------------------
முழுக்க முழுக்கப் புனைவாகவே எழுதுவதைவிட, அனுபவத்தை புனைவு கலந்து எழுதுவது சிறப்பாக
அமையும். முழுக்கப் புனைவுதான் என்று சொல்பவர்கள் - கேள்விப்பட்டதை, பார்த்ததை, தனக்கான அனுபவத்தை அல்லது அடுத்தவரின் அனுபவத்தைக்
கேட்டு, கலந்துதான் எழுதியிருப்பார்கள். ஆனால்
அப்படிச் சொல்லிக் கொள்வார்கள். அதில் ஒரு சின்னப் பெருமை அவர்களுக்கு. படைப்பு சிறப்பாய்
இருக்குமெனின் சொல்லிக் கொள்வதும் பெருமைதானே…!
ஆனால் அம்மாதிரி அனுபவத்தை எழுதும்போது
கேள்விப்பட்டதை, பார்த்ததை அல்லது அனுபவித்ததை அப்படியே கொடுத்து விடுவது தட்டையான
படைப்பாகப் போய்விடும் அபாயம் உண்டு. அதில் நம் புனைவாகப் பொருத்தமாகச் சிலவற்றைச்
சேர்த்து, கடைசியில் ஒரு எதிர்பாராத் திருப்பத்தையோ உணர்த்துதலையோ கொடுத்து முடிப்போமானால்
அப்படைப்பு வெற்றி எனக் கொள்ள நிறைய வாய்ப்பு உண்டு. பலரும் அப்படித்தான் எழுதுகிறார்கள்.
ஆனால் அது அவர்களுக்கு மட்டும்தான் புரிகிறது. படிக்கும் வாசகன் முழுதாக உள்வாங்கிவிட்டானா
என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
திரையில் பளிச்சென்ற நடிப்பிருந்தது
அந்தக் காலத்தில். இப்போதோ நடிப்பது போன்ற பாவனைதான் இருக்கிறது. ஆனால் அதைத்தான் நல்ல
நடிப்பு என்கிறார்கள். அது போலத்தான் இலக்கியமும் வலம் வருகிறதோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு கேள்விப்பட்ட விஷயம்தான் இங்கே
கதையாகியிருக்கிறது. எப்படிக் கதையாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று புனைவு செய்திருப்பதுதான்
ஸ்வாரஸ்யம். சாதாரண விஷயம்தான். பலருக்கும் தெரிந்ததுதான், ஏற்படுவதுதான்…ஆனாலும் போகிற
போக்கில் அப்படித் தட்டி விட்டுச் செல்வதுதான் அதிகம். ஆனால் ஒரு படைப்பாளி அதை மனதில்
வைத்து என்றாவது ஒரு படைப்பாக்கி அந்த அனுபவத்தைச் செழுமையாக்குகிறான் தன் எழுத்துத்
திறத்தின் மூலம். அப்படியான பளிச்சென்ற கதைதான் இது. எந்த வரியிலும் யாருக்கும் எந்தச்
சந்தேகமும் வராமல் தெளிவாகக் கதை சொல்லும் முறை. எழுதுபவனுக்கு முதலில் தனக்குத்தானே
ஒரு தெளிவு வேண்டும் என்கின்ற பிரத்யட்ச நிலை.
என்ன ஸார்…பேசாம இருக்கேள்…Bird
watching is a great scientific hobby
ஆச்சே…நான் இதிலே நிறைய ஸ்டடி பண்ணியிருக்கேன்….- என்று வீட்டுக்கு வந்த நண்பர் கேட்க
அது இவருக்கு இன்னும் தலைவலியாகிறது.
இருக்கிற தொல்லையை எப்படிப் போக்குவதுன்னு
யோசிச்சிட்டிருந்தா, இந்த மனுஷன் புதுசா ஒண்ணைக் கேட்டுட்டு வந்து நிற்கிறாரே…? என்று
மனதுக்குள் சலித்துக் கொள்கிறார்.
எனக்கு அந்த மாதிரி விஞ்ஞான ரீதியான
ஆராய்ச்சிலெல்லாம் இன்ட்ரஸ்ட் கிடையாது. மாடிக்குப் போனேன். ஒரு காக்கா வந்து பட்டுன்னு தலைல அடிச்சிட்டுப் போனது. பக்கத்து மரத்துல பார்த்தா
ஒரு கூடு. அதுல முட்டைகள். நான் இதுவரைக்கும் காக்கா முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு
பொறிச்சதையெல்லாம் பார்த்தவனில்லை. அந்த முட்டைகளை லபக்கிடுவேனோன்னு நினைச்சிருக்கும்
போல…யாரோ கல்லை விட்டெறிஞ்சமாதிரி அப்டி ஒரு வலி தலைல….சட்டுன்னு எங்கிருந்தோ தாழப்
பறந்து வந்து சொடேர்னு ஒரு அடி….நல்லவேளை கண்ணக் கிண்ணக் கொத்தாம இருந்ததே…அதுவே பெரிசு….
– என் பதில் சம்பிரதாயமானது என்று நினைத்துவிட்டாரோ என்னவோ…மனுஷன் விடவில்லை.
காக்காய்ல மூணு வகை இருக்கு தெரிமோ?
வெள்ளைக் காக்கா பார்த்திருக்கேளா நீங்க…?
இல்ல…முட்டை வெள்ளையா இருக்கிறதைத்தான்
பார்த்திருக்கேன்…. அந்தாளுக்கு இந்தக் கிண்டல் புரியமோ…புரியாதோ…?
நல்ல ஜாதிக் காக்கா முட்டை…சுமாரா…இந்த
அளவுக்கு…மடிச்ச கையகலத்துக்கு இருக்குமாக்கும்… அதிகமாப் போனா 21 நாட்கள்தான். வெடிச்சிடும்…உங்க
காக்கா முட்டைக்கு எவ்வளவு நாளாச்சு…?
நல்ல ஆளு வந்து சேர்ந்தான்யா….காக்கா
ஆராய்ச்சி பண்ண…இதக் கணக்குப்பண்றதா என் வேலை? என்னையும் காக்காயையும் சேர்த்து முடிச்சுப்
போட்டு பேச இந்தாளுக்கு என்ன உரிமை…? எனக்குக் கூச்சமா இருக்காதா? இந்தாளுக்கு இது
கூடவா சொல்லணும்? போமையா வந்த வழியப் பார்த்துக்கிட்டு…காக்காயுமாச்சு…முட்டையுமாச்சு….-நினைக்கத்தான்
முடிந்தது.
இது இப்படியிருக்க, குழந்தையோடு
மாடிக்குச் சென்று உலர்ந்த துணிகளை எடுக்கச் சென்ற மனைவி அலறியடித்துக் கொண்டு ஓடி
வருகிறாள். குழந்தை தலையில் காக்காய் அடித்துவிட்டது என்று ஓலமிடுகிறாள்.
எல்லாம் உங்க காக்காதான். நாசமாய்ப் போக…..என் குழந்தையை
அடிச்சிட்டுது….. என்று திட்டுகிறாள். பரபரப்போடு பஞ்சையும், மருந்தையும் எடுத்து கட்டுப்
போடுகிறார் இவர்.
நல்லதுக்குதான் சார்…சிரசில் அடிபட்டால்
அரசயோகம்னு சொல்லுவாங்க… என்று நண்பர் சொல்லி வைக்க… எரிச்சலை வெளிக் காட்டாமல் ஓ…அப்படியா?
என்கிறார். அத்தோடு போனால் பரவாயில்லை.
எனக்கு ஒரு காக்கா முட்டை வேணுமே…
என்கிறார். ஆராய்ச்சி பண்ணனுமாம்….வேளையைப் பாருங்கள்.
அந்தக் காக்காய்க்கும் எனக்கும்
ஸ்நானப் ப்ராப்தி கூடக் கிடையாது…வேணும்னா நீங்கதான் எடுத்துக்கணும்…என்று இவர் கழட்டி
விட…ரொம்ப சந்தோஷம் என்று மாடிக்கு ஓடுகிறார் நண்பர். கஷ்டப்பட்டு எப்படியோ மரத்தில்
தொத்தி ஏறி, படிப்படியாக நகர்ந்து, கூட்டுக்கருகில் சென்றுவிடுகிறார். பக்கத்தில் சில
காகங்கள் ஓஓவென்றுஓயாது ஓலமிடுகின்றன. அப்படியும் இப்படியுமாகப் பறந்து அவரை விரட்டுகின்றன.
ஒரு கிளையை ஒடித்து நாலா பக்கமும் சரளமாய்
வீசுகிறார் இவர். அடிக்கும் காற்றில் புயல் கிளம்பியதுபோல் மரமும் கிளைகளும் அசைய,
பிடியை விடாது தொற்றிக் கொண்டு, தன் காரியத்தில் முனைப்பாக இருக்கிறார். வெறி கொண்டு
வீசிய வீச்சில், ஒரு காக்கை அடிபட்டுக் கீழே சாய்ந்து விடுகிறது. கடைசியில் இந்தச்
சண்டையிலும் ராவணனுக்குத்தான் வெற்றி.
ஜீவனற்றுக் கீழே விழுந்து கிடக்கும் காக்கையைப் பார்த்து
கண்ணில் நீர் துளிர்க்கிறது இவருக்கு. நம் வீட்டுக்கு வந்து இந்தாள் இப்படி ஒரு அதர்மத்தைச்
செய்து விட்டானே, இந்தப் பாவத்தை யார் சுமப்பது? என்று மருள்கிறது மனம். இவனை விட்டதே தப்பாய்ப் போயிற்றே…!
என்று மனசுக்குள் குமுறுகிறார்.
மனைவியோ ஓடி வந்து அதைப் பார்த்து.
நன்னா வேணும்…அது பண்ணின அக்ரமத்துக்கு…என்று சபிக்கிறாள்.
சார்…கிடைச்சிடுத்து…கிடைச்சிடுத்து
என்று வெற்றிப் புன்னகையோடு மரத்திலிருந்து இறங்கி ஓடி வந்து நண்பரின் கையில் ஒன்றுக்கு
இரண்டு முட்டைகள். இரண்டில் ஒன்று உடைந்து, ஒரு ஜீவன் தலையைத் துருத்திக் கொண்டு ஈனக்
குரலில் கீச் கீச் என்று கத்துகிறது.
அவளோ அடடே…என்கிட்டே கொடுங்கோ…என்று
ஆவலோடு அதை வாங்கிப் பார்க்கிறாள்.
ஐயய்யோ…! இது குயில் குஞ்சுன்னா…எனக்கு
நிச்சயமாத் தெரியும்….எங்க ஊர்லே நிறையப் பார்த்திருக்கேனே….சின்ன வயசிலே…!
நண்பரின் முகத்தில் பொங்கும் வியர்வையோடு சேர்த்து வேறு ஒன்றும் வழிகிறது.
இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில்
(அறுபதுகளில்) எத்தனை பேர் இதைக் கேள்விப்பட்டிருப்பார்களோ தெரியாது….தெரிந்த உண்மையை
எழுதியிருக்கிறார் என்றும் நினைத்திருக்க வாய்ப்புண்டு…தெரியாமல் இருந்திருக்கவும்
வாய்ப்பு உண்டுதான்.
காக்கைக் கூட்டில் குயில் குஞ்சு
பொறிப்பதும், அதை காக்காய் அறியாமல் அடை காக்கும்
என்பதும் நாமறிந்த தகவலே…! அந்த உண்மை இந்தக் கதைக்கு ஒரு திருப்பத்தைக் கொடுத்து ஸ்வாரஸ்யப்படுத்துகிறது.
இந்த ஒரு புள்ளியை வைத்துக் கொண்டுதான் மேலேயுள்ள கதை புனைவாகியிருக்க வேண்டும் என்று
ஊகிக்க முடிகிறது. ஆனாலும் கதையைச் சலிப்பின்றிச் சொல்லத் தெரிய வேண்டுமே…! அந்த வகையில்
கட்டுக் குலையாத ஒரு தரமான படைப்பாக இந்தக் கதை அமைகிறது என்று சொல்லலாம்.
மூத்தோர் நினைவு நாளில் காக்கையை
பித்ருக்களாக வரித்து உணவு வைத்து மரியாதை செய்யும் வழக்கம் நம்மிடம் உண்டு. காக்கைச்
சிறகினிலே நந்தலாலா…உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா…என்று பாரதி பாடி மகிழ்ந்தான்.
பாட்டி வடை சுட்ட கதையில் காக்கையின் நிலையை நாம் அறிந்தவர்கள். நரி பாடச் சொன்னபோது,
இப்போதுள்ள காக்கை என்றால் வாயில் கவ்வியிருந்த வடையை காலில் இடுக்கிக்கொண்டு பாடி
நரியை ஏமாற்றியது என்றும் கதை சொல்லக் கேட்கிறோம்.
பாண்டிச்சேரியில் ஏற்பட்ட புயல் மழை சேதத்தின் போது, பறவைகளாகத் தேடிக் கொண்டு போய்
இறந்த பறவைகளை எடுத்துச் சென்று (காக்கைகள்
உட்பட) அவைகளை ஒழுங்காக முறைப்படி குழி
தோண்டிப் புதைத்து மரியாதை செய்தான் மகாகவி பாரதி என்கிற பறவைகளைப் பாடுவதோடு மட்டுமல்லாமல்
அவைகளை மனதார நேசித்த உருக்கமான தகவல்களையெல்லாம் அறிகிறோம்.
நம் வீடுகளில் இன்றும் மதிய உணவு சமைத்து முடித்த பின், காக்கைக்கு
அன்னம் வைத்துவிட்டுத்தான் உண்ணும் வழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருவதை
அறிவோம்.
பறவைகளை நேசிக்கும் பழக்கம் நம்மிடையே காலம் காலமாய் இருந்து
வரும் நடைமுறையாகும். நாம் அதற்குக் கேடு செய்யாமல், நம்மை அவை தொந்தரவு செய்வதில்லை.
நம்மின் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் அவைகளின் சுதந்திரம் அவைகளுக்கு முக்கியம்.
இயற்கை தந்த வரம் அது. அதை ரசிப்போமாக….! போற்றுவோமாக…!
----------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக