“மனச் சாய்வு“ வாசிப்பனுபவம் ஜெயந்தன் சிறுகதை
பல சமயங்களில் கதைகள் எழுதுவதைவிட பலராலும் எழுதப்பட்டதைப்
படிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு எல்லோரும் எழுதித்
தீர்த்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. எல்லாவகையிலும் எழுதியிருக்கிறார்கள். ஒருவர்
தவற விட்டதை இன்னொருவர், இன்னொருவர் தவற விட்டதை வேறொருவர் என்று எழுதாதவைகளே இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதே சமயம் நாம் இதுவரை எழுதியது
என்ன என்று நினைத்துப் பார்க்க முற்படுகையில் மனது வெட்கமுறுவதாகவும் இருக்கிறது.
மனசாட்சி உள்ளவனாகப் படைப்பாளி
இருக்க வேண்டும். உள்ளொன்றும் புறமொன்றுமாக இருத்தல் நல்லதல்ல. தன் உண்மையைத் தானே
அறிந்திருத்தல் அவசியம். தான் எங்கே நிற்கிறோம் என்பது புரிந்திருக்க வேண்டும்.
அதை நியாயமாய் எவன் உணர்கிறானோ
அவனே தன் பயணத்தை திடமாய்த் தொடர முடியும். புற வாழ்க்கைச் சிக்கல்கள் அவனைக் கட்டிப்
போடாமல் இருந்தால். அம்மாதிரித் தன் எழுத்து வன்மையை உணர்ந்து நகர்ந்த படைப்பாளிகள்
மிகச் சிலர்தான். அவர்கள் அவர்களிடத்தில் ஆணித்தரமாய் நின்றார்கள். அவர்களைத் தேடி
வருபவர்கள் வந்தார்கள்.
இப்படி ஒருவர் வீர்யமாய்த் தொடர்ந்து
எழுதுகிறாரே…அவரைப் பார்க்க வேண்டுமே….என்று அறிந்து பாராட்டி…நீங்கள் நம் இதழில் தொடர்ந்து
எழுத வேண்டும் என்று சொன்னார் அந்தப் பிரபல
வார இதழின் ஆசிரியர். அந்த மாதிரி ஒரு கௌரவம் கிடைக்க வேண்டும் படைப்பாளிக்கு.
அப்படியொரு ஆணித்தரமான எழுத்து
வன்மை அமைய வேண்டும். எடுத்துக் கொண்ட கருவை
முதலில் தான் உள்வாங்கி, அசை போட்டு, தெளிவு பெற்று –கையில் பேனாவை எடுத்தால்தான்,
சொல்ல வந்ததை, சொல்ல நினைத்ததை பிறத்தியாருக்கும்
தெளிவாகச் சொல்ல முடியும். தனக்கே புரியாமல் எழுதப் புகுந்தால், என்ன சொல்றான் இந்தாளு?
என்று சுலபமாய் நகர்ந்து விடும்-ஒதுக்கி விடும் அபாயம் நிறைய உண்டு.
இவர் ஒரு போதும் அப்படியிருந்ததில்லை.
ஆணித்தரமாய் சொல்கிறேன்-கேட்டுக்கோ – என்று எழுதியவர். பொட்டில் அறைந்ததுபோல் படீர் படீரென்று முன் வைத்தவர். அவனவன்
பக்கம் அவனவன் நியாயம் என்பது உண்மையானால், அதை அவரவர் நிலையில் வாதிட்டு வெற்றி கண்டவர்.
அழுத்தம் திருத்தமான எழுத்து
என்று சொல்வது வெறும் வாய் வார்த்தையல்ல. இவரின் படைப்பில் கல்வெட்டுப் போல் பதிந்து
, அதுதான். இவர மாதிரி இவர்தான். இவர் மட்டும்தான்.அதுதான் வித்தியாசமான,
தனித்துவமான எழுத்து. மிகக் குறைவாக இருந்தாலும் காலத்துக்கும் பேசப்படும் எழுத்து.
“மனச் சாய்வு” என்ற கதையாடலுக்கு
இவ்வளவு முகமன் சொல்லி ஆரம்பித்தால்தான் அந்தப் படைப்பாளிக்குப் பெருமை. திறமை மிகுந்தவர்களைக்
கொண்டாடும் மனம் வேண்டும். நாம் செய்யாததை,
செய்ய நினைத்து ஆகாததை, இவர் செய்து விட்டார்…எப்படியோ பதிவாகிவிட்டது எழுத்துலகில். அந்தவகையில் திருப்தியோடு நிறைவு கொள்ள வேண்டும்.
அந்த மேம்பட்ட மனநிலையில் இந்தக் கதையாடல்:-
ஒரு கதையைப் படிப்பதும், ஆழ்ந்து
ரசிப்பதும் பெரிதல்ல. அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது எவ்வாறு முன் வைக்கிறோம்
என்பதே முக்கியம். படைப்பாளி எழுதியதுபோலவே சொல்லி விடுவது சரியா? எதை மையப்படுத்தி
அந்தக் கதையைக் கட்டமைத்திருக்கிறார் என்பதை
உணர்ந்து அந்தக் குறிப்பிட்ட கருத்தை அங்கங்கே எப்படியெப்படித் தொட்டுச் செல்கிறார்
என்பதை ஊன்றிக் கவனித்து, அப்படியான நகர்த்தல் மூலம் சொல்ல வந்த கருத்து எவ்வாறு பலம்
பெறுகிறது எப்படித் தன்னை முகிழ்த்துக் கொள்கிறது என்பதை வாசக மனத்தில் ஆழப் பதியும்படி
நிலை நிறுத்துவதுதான் கதை சொல்லியின் தலையாய பணி.
சிதம்பரநாதன் அந்தப் பெண்ணைக் கூர்ந்து கவனித்தார். பெண்
மூக்கும் முழியுமாக இருக்கிறாளே தவிர குறிப்பிட்ட ஜாதியாக எந்த முத்திரையும் இல்லை.
கோவிச்சுக்காதேம்மா. இவன் அப்பாவோட
பேசுறதுக்காக ஒரு புள்ளி விவரம் தேவைப்படுது. உங்க ஜாதி பெயர் என்ன?
அந்தப் பெண் பட்டென்று அழுத்தம்
திருத்தமாக பொட்டில் அடித்தாற்போல் சொன்னாள்:-“பறையர்”
அப்பா தங்கள் காதல் கல்யாணத்துக்கு
தடை சொல்றார் என்று ராஜசேகரன் சொல்ல, என்ன பிரச்னை என்று இவர் கேட்க ஜாதி என்று ஒரே
வார்த்தையில் அவன் சொன்னது இப்போது சுரீரென்றது இவருக்கு.
ஒரு கணம் திகைக்கிறார். மறுகணம்
சபாஷ் என்கிறது மனம். எத்தனையோ தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பதவியினால், பொருளாதார மேம்பாட்டினால்
மேலே வந்த பிறகு தங்கள் ஜாதியைப் பற்றிச் சொல்லக் கூச்சப்படுகிறார்கள். அல்லது மெதுவாய்ச்
சொல்கிறார்கள். மறைக்கிறார்கள். மெல்லிய தொனியில் உறரிஜன் அல்லது எஸ்.ஸி., என்று சொல்லக்
கேட்டிருக்கிறார். இவள் பரவாயில்லையே…பட்டென்று சொல்கிறாளே….இந்த அமைப்பை உடைத்து நொறுக்குகிறவரை
எங்கள் கோபாக்னி தணியாது என்று இப்படி உரத்துச் சொல்கிறாளோ…? ஒருவகையில் இது சவாலும்
கூட….
சரி…சேகர்…உங்கப்பாட்டப் பேசறேன்…..
தாங்க்யூ பெரியப்பா…..
நீ போய் நீபாட்டுக்கு உன் வேலைகளைப்
பார்த்திட்டு இரு…பிரச்னையை ஆரம்பிக்காதே…அவுங்க ஆரம்பிச்சாலும்…பெரியப்பா வர்றாருன்னு
சொல்லிடு….
ஒரு பிரச்னைக்கு எத்தனையோ கோணங்கள்
உண்டே…! எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோணங்கள்.ரேகை சாஸ்திரம் சொல்வது போல்
ஒருவனுடைய கைரேகை போல் வேறொரு கைரேகை இருக்கவே இருக்காது. ஒரு கோடாவது மாறியிருக்கும்.
கூட இருக்கும்….குறைய இருக்கும்…இருந்தே தீரும்….பிரச்னை மனிதர்கள் இடையேயும் இப்படித்தான்.
தன் வீட்டுக்குப் போன ராஜசேகரன்
பெரியப்பா சொல்படியே அமைதி காக்கிறான். ஆனால் வீட்டில் பாட்டி என்று ஒருத்தி இருக்கிறாளே…பெரியப்பா
வரும்முன் காரியம் மிஞ்சி விடுகிறது. பாட்டிகள் பிரச்னைகளின் மேல் விவாதங்களை வைப்பவர்கள்.
தாங்கள் இதுகாறும் தலையில் சுமந்தவைகளை, பிறர்பால் ஏற்றி வைக்க நினைப்பவர்கள். தங்களது
சென்ற காலத்தை நியாயப்படுத்திப் பேசுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே சந்தோஷம்.
நான் சொல்றனேன்னு கோவிச்சுக்காதடா
ராஜா….உலகத்துல படிச்சவன்தாண்டா முட்டாள்….
ஆமாம் பாட்டி…..
என்ன ஓமாம்….இல்லாட்டி உன் புத்தி
ஏன் இப்டிப் போகுது?
இருமல் எப்டியிருக்கு பாட்டி…?
ஒரு மட்டா தூக்கிட்டுப் போகாமக்
கெடக்கு….இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்காமப் போய்ச் சேரலாமே…?
மணப்பாற முறுக்கு வாங்கிட்டு
வந்திருக்கேன் பாட்டி…அம்மாட்ட கேட்டு ஒரு பத்து வாங்கிக்க…..
தங்கை சாந்தா சிரிக்க… அம்மா
பிரவேசிக்கிறாள்.
வாயை மூடுடி…அவன் திமிர்தண்டமாப்
பேசுறான்…இவ சிரிக்கிறா…..அவன் செய்ற வேலைனால நாளைக்கு உனக்கு என்ன ஆவும்னு தெரியுமா?
தெரிஞ்சா சிரிப்பு வருமா….? ஒனக்காகத்தாண்டி எங்க அடி வயிறு கலங்குது….ஒரு கீழ் ஜாதியக்
கட்டினவன் வீட்டுல எவன்டி வந்து பொண்ணு கேப்பான்….
ஏன் அவளுக்கும் அந்த ஜாதியிலேயே
மாப்ள தேடுவான்… - இது பாட்டி.
பாத்தா போச்சு பாட்டி…..
விளக்கமாத்தால அடிப்பேன் நாயி…வாயை
மூடுடா…..
சரி…இவர்கள் கிடக்கட்டும். அசலான
பிரச்னை அப்பாதான். அவர் என்ன சொல்லப் போகிறார்?
அப்பா வந்தாச்சு…. – தங்கை சாந்தா.
அப்பாவோடு இந்த விவாதம் எப்படிப்
போகும் என்பதை எவராலும் யூகிக்க முடியாது. யூகித்தாலும் எழுதியவர் எவரும் கிடையாது.
எந்த இடத்தில் நெருடல் என்பதை எவரும் தெளிவுறப் பகன்றது கிடையாது. எப்படியானாலும் ஏற்றுக்
கொள்வது கடினம் என்றுதான் பிரச்னைகள் பயணித்திருக்கின்றன.ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
ஆனாலும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுண்டு….அதுதான் ஜாதிப்புத்தி…..அது எல்லோருக்கும்
உண்டு. அங்கும் உண்டு…இங்கும் உண்டு. எங்கும் உண்டு என்பதனால்தானே பிரச்னையே…!
எப்போ வந்தே…?
கொஞ்சம் முன்னாடிதாம்ப்பா…….
நீ மட்டும்தான் வந்தியா…?
ராஜசேகரன் அப்பாவை அமைதியாய்ப் பார்க்கிறான்.
இல்ல…உன் வருங்கால மனைவியையும்
கூட்டிட்டுத்தான் வந்திருக்கியான்னு கேட்டேன்…
கோபத்தை அடக்கி வாசிக்கிறாரோ…தாக்குதலை
ஆரம்பத்திலேயே கடுமையாக்கும் யுக்தி.
நீங்க இப்டி வரவேற்பீங்கன்னு
தெரிஞ்சிருந்தா கூட்டியாந்திருப்பேன்….
ஒரு விஷயம் ஒரு குடும்பத்தில்
எப்படி வெடிக்கும்….பெரியோர்கள் மத்தியில் அது எப்படி விகசிக்கும்…படிப்படியாக எப்படி
வளரும்….? காட்சிப்படுத்தல் என்பது என்ன அத்தனை சுலபமா? இயல்பான தன்மையிலே பிரச்னையை
மையமாக வைத்து படிப்படியாக அது தன் முதிர்ச்சியை நோக்கி நகர்தல் அல்லது நகர்த்துதல்-இதில்தான்
படைப்பாளியின் எழுத்துத்திறனே அடங்கியிருக்கிறது.
என்னடா சொன்னே…? என்று மகனைப்
பார்த்துத் திரும்பி முறைக்கிறார் நாகசுந்தரம்.
என்னங்க இது…வந்ததும் வராததுமா?
– அம்மா இடையே பாய்கிறாள். எல்லாம் நீங்க செஞ்ச வேலைதான். நீங்க சீர்திருத்தம்…சீர்திருத்தம்னு
பேசினீங்க…அவன் செஞ்சுட்டான்….இப்ப மொறச்சு என்ன பண்ண? – அம்மா பேசுவதை மகன் பிடித்துக்
கொள்கிறான்.
நீங்க ஒரு போலின்னா எங்களுக்கும்
அதையே சொல்லிக் கொடுத்திருக்கணும்…
என்னடா போலி?
ஜாதி இல்லே…மதம் இல்லேன்னு நாள்
பூரா பேசுறது….கலப்புக் கல்யாணம்தான் அசல்னு சொல்றது. தனக்குன்னு வந்தா மட்டும் சீறுறது…..
காலம் பூராவும் புதிய சித்தாந்தம்
பேசியவர் விட்டுக் கொடுப்பாரா என்ன…? நாகசுந்தரம் ஒன்றும் அத்தனை மசிந்தவரில்லை.
இப்பவும் அதையேதாண்டா சொல்றேன்.
கலப்புக் கல்யாணம் செய்யலாம்தான். ஆனா கலாச்சார மோதல் இல்லாம செய்யணும்…
ராஜசேகரன் யோசிக்கறான். இதென்ன
புதுசா ஒண்ணு சொல்றாரு…இதுநாள்வரை இதச் சொன்னதில்லையே….! புது சிந்தனையா…? அல்லது புது சாக்கா….?
வெங்காயம்….ஒரு ஜாதி சைவமா இருக்கு. இன்னொண்ணு அசைவமாயிருக்கு. ஒருத்தன் சாராயத்த சொர்க்கம்ங்கிறான்.
இன்னொருத்தன் அதைப் பாவம்ங்கிறான். நியாய அநியாயம் ஒரு பக்கம் கெடக்கட்டும்….ஒரு ஜாதி
அன் கல்ச்சர்டா இருக்கு…இன்னொன்ணு பெரும்பாலும் எல்லாரும் படிச்ச கல்ச்சர்டா இருக்கு…நாம்
அவங்களுக்கு என்ன சாம்பார் வைக்கிறது? அவுங்க நமக்கு என்ன கொழம்பு வைப்பாங்க…? அவுங்க
சொந்தக்காரங்க நாலு பேரு நாளைக்கி கன்னங்கரேல்னு மேல் சட்டடையில்லாம> நம்ம நடு வீட்டுக்குள்ள
வந்து உட்கார்ந்தா பொருத்தமாயிருககுமா? சோபாவுல கால் வச்சி குந்திக்கி்ட்டு வெத்தில
எச்சியை எங்க துப்புறதுன்னு தெரியாம முழிச்சா எப்படியிருக்கும்? அட அதுதான் போகட்டும்…சமயல்
கட்டுல சம்பந்தி அம்மாக்கள் என்னா பேசிக்கிறது? கலப்புத் திருமணம் நடக்கட்டும்…முதல்ல
அது ஒரே கலாச்சார எல்லைக்குள்ள இருக்க ஜாதிக்குள்ள நடக்கட்டும்…..
ராஜசேகரன் நினைக்கிறான். இந்தியாவில்
ஜாதிப் பகைமை பெருமளவு மறைந்து விட்டாலும், திருமணக் கலப்பில் இன்னும் பிரிந்துதான்
கிடக்கிறது.
கலாச்சாரம் ஒண்ணுதான் உங்க பிரச்னைன்னா
இந்த விஷயம் சுலபமா முடிஞ்சி போகும்ப்பா….அவுங்க நம்மள விட மேம்பட்டவங்க…அவங்க தாத்தா
ஸ்சூல் தலைமையாசிரியர். அப்பா தாசில்தார்.
அண்ணன் ஆர்மில கேப்டன்…அக்காவும் ஒரு டாக்டர்…அமெரிக்காவுல…அவுங்க
யாரும் நம்ம வீட்டு சோபாவுல உட்கார்ந்துக்கிட்டு வெத்தல எச்சிய எங்க துப்புறதுன்னு
முழிக்க மாட்டாங்க….
நாகசுந்தரம் விதிர்த்துப் போகிறார்.
குடும்பமே அவரைப் பார்க்கிறது. என்ன சொல்லப் போகிறார்?
ஆடிப் போகிறார் நாகசுந்தரம்.
தோற்றுப் போய்விட்டோமோ?
சட்டென எழுந்து வேகமாகவும் வெறுப்பாகவும்
சொல்கிறார்.
அதெல்லாம் சும்மாடா….என்னதான்
ஆனாலும் ஜாதிப்புத்தின்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யும்…- விருட்டென்று இடத்தைக் காலி
பண்ணுகிறார்.
ராஜசேகரன் எழுந்து குளியலறைக்குப்
போகிறான். பெரியப்பாவுக்குத் தந்தி கொடுக்கணும். நினைத்துக் கொள்கிறான். வரவேண்டாம்…திருமணம்
நிச்சயமாகிவிட்டதென்று.
அகரமுதல்வன் சொல்கிறார்….மானுட
இருட்டிலிருந்து சம்பவங்களைப் பொறுக்கியெடுத்து எல்லைகளற்ற மேன்மையான வெளிச்சத் தோற்றத்துக்கு அழைத்துப்போகும் சிறப்பம்சம்தோடு எண்ண எழுச்சி மிக்க
படைப்பாளி ஜெயந்தன்.
கதைகள் எப்போதும் நமக்கு ஆறுதலைத்
தரக்கூடிய ஒரு தனி உலகம். இது ஓரான் பாமுக். ஜெயந்தனின் தேர்ந்தெடுத்த இந்தச் சிறுகதைத்
தொகுப்பு….இந்தத் தனிச் சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.
---------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக