இந்திரா
பார்த்தசாரதியின் “வெந்து தணிந்த காடுகள்”–நாவல் வாசிப்பனுபவம்– உஷாதீபன்
வெளியீடு
– கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை-600 014.
பார வண்டியில் மணலை மூட்டை மூட்டையாகக் கட்டி, ஏற்றி, இறக்கி,மூட்டையை
அவிழ்த்து மணலை கீழே கொட்டி மறுபடியும் மூட்டையாகக் கட்டி ஏற்றி, இறக்கி, கொட்டி…….மறுபடியும்
கட்டி ஏற்றி…ஏற்றி…..ஏற்றி…..
எல்லோரும் இந்த வேலையைத்தான் செய்து
கொண்டிருக்கிறார்கள். ஒரு முகத்துக்கும் இன்னொரு முகத்துக்கும் வித்தியாசமில்லாமல்,
கண்ணுக்குத் தெரியாத சாட்டைக்கு பயந்து கொண்டு…..வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவ்வளவுதான் இந்த வாழ்க்கை.
எல்லோரும் சராசரிதான். எந்தெந்த உயரத்திற்கோ போய்விட்டு ஏதோவோர்
சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாமல் கீழே வருகிறவர்கள்தான். ஒரு சாதாரணனின், சராசரியின்
மனநிலையை எட்டுகிறவர்கள்தான்.
இந்த நாவலின் கதாபாத்திரங்கள் அத்தனை
பேரும் அப்படிப்பட்டவர்களாய்த்தான் இருக்கிறார்கள். அனைவருமே பொறியில் அகப்பட்டுக்கொண்ட
எலிகள். படைத்தவனுடைய குரூர உறாஸ்ய உணர்ச்சி.
எப்பொழுது நாம் குடும்பம், சமூகம்
என்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறோமோ அப்பொழுதே நம் சுதந்திர உணர்வுக்கும் வரையறை
ஏற்பட்டுவிடுகிறது. சிந்தனை செல்லும் வழியெல்லாம் வாழ முயல்வது, நம் உடம்பின் ரத்தம்
உஷ்ணமாயிருக்கும் வரையில்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் வாழ்க்கையின் நோக்கங்களை
மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் காலம் நமக்குச் செய்யும் கொடுமை.
குடும்ப வாழ்க்கையின் அடிப்படை நியதிகளை ஏற்றுக்கொண்டு, சமூக வேலிக்குள் வாழ்கின்றவர்களுடைய
கற்பனையற்ற சராசரித்தனம்-ஒரு கால கட்டத்தில் ஒரு மன நிலையில் நமக்கு எரிச்சலைத் தருவதில்
ஆச்சரியமில்லை. ஆனால் இதுதான் சௌகரியமான வாழ்க்கை என்று புரிந்து கொள்வதுதான் விவேகம்.
வாழ்க்கையின் சில அடிப்படையான நியதிகள்,
எந்தக் காலத்துக்கும் பொருந்திய உண்மைகள் தொன்று தொட்டு இருந்து வருகின்றன என்பதால்
அவற்றைப் பின்பற்றுவது பத்தாம்பசலித்தனம் என்று ஆகிவிடாது.
மேற்கண்ட வரிகள் ஒரு கல்லூரி முதல்வரால்
சொல்லப்படுவது. தாய் தந்தையரால் கவனிக்கப்படாது விடப்பட்ட ஒரு புத்திசாலிப் பையன்,
எவ்வாறு கெட்டுப் போய் நிற்கிறான், எதனால் இது நிகழ்ந்தது என்பதைச் சுட்டிக் காட்டும்
இடம். இந்த நாவலின் கதாபாத்திரங்கள் இந்நிலையில்தான் உலவுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களை
அறிவுஜீவிகளாய் நினைத்துக் கொண்டு, தனி மனித சுதந்திரம் என்று வரித்துக்கொண்டு இஷ்டப்படி
இருக்க விரும்பி, கட்டுப்பாடுகளைக் கடந்து செல்கிறார்கள். கணவன்-மனைவிக்கிடையே நிகழும்
சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பரஸ்பரம் பொருட்படுத்தாது விலக்கிச் செல்வதற்குப்
பதிலாக, பொருட்டாக எடுத்துக் கொண்டு விவாதித்து, விபரீதமாக்கிக்கொண்டு பிரிந்து போகிறார்கள்.
இன்னொரு குடும்ப உறுப்பினர்களை நினைத்து தங்களைவிட அவர்கள் மேம்பட்டவர்கள் என்று ஒத்துப்
பார்த்து பலவீனமாய் எண்ணிக் கொள்கிறார்கள்.
சுதந்திர உணர்வினை நிலை நாட்டிக் கொள்கிறேன் என்று கிளம்பி,
சுயநலவாதிகளாய் உலா வருகிறார்கள். ஏதோவோர் வகையில் அவரவர் சுயநலமே விஞ்சி நிற்கிறது.
அதை அறிந்திருந்தும் தவிர்க்க முடியாதவோர் கௌரவம் அவர்களுக்கு வேலி போட, அதை விலக்கிக்
கொண்டு வெளியே வந்து சாதாரணனாய் உலா வருவதற்கு அவர்களின் அறிவு மறுக்கிறது.
மனித சுபாவத்தை இது இது இப்படித்தான்
என்று சட்டம் போட்டு வரையறுத்து ப்ரேம் பண்ணி மாட்டி விட முடியுமா? இக்கதையின் கதா
பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் மற்றவரைப்பற்றி அப்படி நினைக்க முற்பட்டு, அவரவரே வெவ்வேறு
காலகட்டங்களில் மாறிப் போய் விடுகிறார்கள். அன்றையசூழ்நிலையில் அது, இன்றைய சூழ்நிலைக்கு
இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.
எனக்கென்று தனி முகம் இருக்கிறதென்று
காட்ட வேண்டுமென்கிற வெறி, இல்லத்தரசி என்கிற கட்டுப்பாடு மிக்க பட்டத்தைத் துறக்கச்
செய்து, கணவனிடமிருந்து விலகிச் செல்லும் அளவுக்கு துணிகிறது.
தனக்கென்று ஒரு அடையாளம் உண்டு
என்று நினைக்கும் விம்மி, அதை ஏன் தன் கணவன் அருணால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று
நினைத்து நினைத்துப் புழுங்குகிறாள். திருமணமாகி பல்லாண்டுகள் ஆன நிலையிலும் அவளின்
தனித் திறமையை அறியாதவனாய் அவன் இருக்கிறான். அழகுப் பதுமையான மனைவி என்ற ஒன்றே அவனைத்
திருப்திப் படுத்திவிடுகிறது. தன் தொழில் முன்னேற்றத்தின் மிகப்பெரிய அந்தஸ்தாக அதனைக்
கருதுகிறான். தாமோதரன் என்கிற ஓவியனிடம் அவளுக்கோ
நாட்டம் செல்கிறது. அவலட்சணமான உருவ அமைப்பைக் கொண்ட அவனிடம் படிந்திருக்கும் கலை அதையும்
மீறி அவனிடம் நெருங்க வைக்கிறது. தன்னிடம்
படிந்திருக்கும் கலைத் திறமையே அவனோடு சேர்ந்தபின்னால்தான் உணர முடிந்தது என்று நினைத்து,
அவனிடம் ஐக்கியமாகிறாள்.
விம்மியின் அழகில் மயங்கி, தனக்குஅழகான
மனைவி என்கிற பெருமிதத்தில் மிதக்கும் அருண் அவள் தன்னிடமிருந்து விலகும்போது வியப்படைந்து
போகிறான். அழகுப் பதுமையாய் சகலவிதமான வசதி வாய்ப்புக்களோடு அவளைப் பாராட்டி, சீராட்டி
வைத்திருந்ததற்கு இதுவா பலன்? என்று பிரமிக்கிறான். அவர்களுக்குள் பிரிவு நேரிடுகிறது.
அவள் தன்னை அவனுடன் பூரணமாக ஐக்கியப்படுத்திக்கொண்டு
விட்டாள் என்று பெருமையாகக் கருதிக்கொண்டிருக்க, சுருதி பிசகாத வாழ்க்கையில் அபஸ்வரம் ஒலிக்கிறது என்று கருதி சீற்றம் கொள்கிறான்.
ரமேஷூக்கும் ராதிகாவுக்குமே இதே
மாதிரி இன்னொரு பிரச்னை. ராதிகாவின் விரிந்த நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாமல், சகிக்க
முடியாமல் விலகியே நின்று விடுகிறான் ரமேஷ். பெண் சுதந்திரம் என்கிற பெயரில் சிகரெட்
புகைப்பது முதல் மது அருந்துவது வரை பல்வேறு புதிரான அவளது நடவடிக்கைகள் அவனை பயமுறுத்துகிறது.
ஆரம்பத்திலேயே இதை உணர்ந்து விட்ட அவன், அப்பொழுதே
அவளிடமிருந்து விலகி நிற்கிறான். விலகுவதற்குமுன் அவனுக்குள் இருக்கும் சந்தேகத்தை
அவனால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அதை மகனிடமே சொன்னதுதான் பெருந்தவறாய்ப்
போகிறது. மகன் ராகுலிடம், அவன் தன் பிள்ளைதானா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாய்க்
கூறிவிடுவதுதான் அவர்களுக்குள்ளான பிரிவினைக்கு தவிர்க்க முடியாத காரணமாய் அமைகிறது.
ரமேஷ் தன் வேலையை ராஜினாமா செய்துவி-ட்டு துபாய் போய் விடுகிறான். ஏறக்குறைய ராதிகாவிடமிருந்து
பிரிந்து விட்ட நிலையே ஏற்பட்டு விடுகிறது.
மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான்.
ஆனால் நாளடைவில் தளைகள் அவனைப் பிணைத்து விடுகிறது. இந்த நாவல் ஆணாதிக்கத்தைப் பற்றியோ,
பெண் விடுதலையைப் பற்றியதோ அன்று. இந்திரா பார்த்தசாரதி அவர்கள் சொல்வதுபோல் கதாபாத்திரங்கள்
அனைத்தும் பொறியில் அகப்பட்ட எலிகள். நல்லவர்களும் இல்லை. கெட்டவர்களும் இல்லை. அவர்கள்
அப்படித்தான் இருந்தாக வேண்டுமென்று வாழ்க்கை விதிகள், சமூக நடைமுறைகள் அவர்களை அலைக்கழித்து
இழுத்து நிறுத்தி விடுகிறது. அதுதான் இந்நாவல் ஓட்டத்தின் இன்றியமையாத் தன்மை.
ஓவியக் கலைஞன் தாமோதரனின் கருத்துக்கள்
கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாய்…இது ஒரு ஆண் ஆதிக்கமுடைய சமூகம். பொருளாதாரப் பாதுகாப்பு
அளிக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காகக் கணவனின் நடவடிக்கைகளைப் பற்றிக் கேட்க மனைவிக்கு
உரிமை இல்லை. இல்லற தர்மத்தில் விதிக்கப்படும் எல்லா லட்சியப் பண்புகளும் மனைவிக்குத்தான்.
“தெய்வம்“ என்ற சீல் குத்தி அவளைக் கர்ப்பக்கிருஉறத்தில் அடைத்து விட்டால் கணவன், மனிதன்
என்ற முறையில் எப்படி வேண்டுமானாலும் இருக்க அனுமதி அளித்து விடுகிறது இந்தச் சமூகம்.
ஒருவனால் சிந்திக்க முடியும் என்பதுதான்
அவனுடைய சுதந்திரம். சிந்தனைக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாதவாறு ஒருவனால் நடைமுறை
வாழ்க்கையை நடத்த முடிந்தால் அதுதான் அவனுடைய மோட்சம். சுதந்திரவாழ்வின் எல்லை…..
அத்தகைய வாழ்வை இங்கு யாராலும்
நடத்திவிட முடிகிறதா? தனி மனிதனாய் வாழும் பெரும் கலைஞன் தாமோதரனாலும் கூட அப்படி இருக்க
முடியவில்லை. அவனுமே தனக்குள் ஏங்கித் தவிக்கும் ஒரு கதாபாத்திரமாய்த்தான் கடைசியில்
தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். எல்லோருமே சராசரிகள்தான் இந்த உலகத்தில். சந்தர்ப்பம்
கிடைக்காதவரை வெவ்வேறு உருக்களில் வெளிப்படுகிறார்கள்.
வாய்ப்புக் கிட்டும்போது அதைப் பயன்படுத்திக்
கொண்டாக வேண்டும் என்ற உந்துதலுக்கே ஆளாகிறார்கள். அப்போது நிதானிப்பது எவருமில்லை.
கணவனிடமிருந்து பிரிந்து இந்தக் கலைஞனை நாடும் விம்மி கடைசியில் அவனும் சாதாரணனாய்
தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைக் கண்டு மனம் வெறுத்துப் போகிறாள். அவனிடமிருந்து பிரிந்து
விடுவோம் என்று நினைக்கிற வேளையில் அவனின்
மரணம் நிகழ்ந்து விடுகிறது. பிரிந்து விட்ட கணவனைத்தான் அழைக்க வேண்டியிருக்கிறது. அவள் சுதந்திரத்தின்படி
அவளை உலவவிட்ட அவன் அவள் மீது மாறாது தொற்றிக் கொண்டிருக்கும் தன் அன்பை ஒதுக்க இயலாது அவளது அழைப்பை ஏற்று வந்து அவளைக்
காப்பாற்றுகிறான்.
தனக்கென்று ஒரு அடையாளம் உண்டு
என்பதைத் தன் கணவனால் ஏன் உணர முடியவில்லை, ஏற்றுக் கொள்ள முடியவி்லை்லை என்று அருண்
மனைவி விம்மி நினைத்து, அவனிடமிருந்து பிரிந்து கடைசியில் குழப்பங்கள் தெளிந்து அவனிடமே
வந்து சேருகிறாள்.
திருமணத்திற்குப் பிறகு அவரவர்
சுதந்திரத்தை மதிக்க வேண்டுமென்று ஒப்புக்கொண்ட பிறகு, ரமேஷ் தன்னை விட்டு ஏன் பிரிகிறான்
என்று ராதிகாவுக்குப் புரியவில்லை. ரமேஷால் தன் மனைவியின் நடத்தையைச் சந்தேகிக்காமல்
இருக்க முடியவில்லை. அவர்களின் வாழ்வு அப்படியே தொடர்கிறது.
ஓவியத்திறன் அவனுக்கு அசாத்திய
ஆணவத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்திருந்தாலும், தன் உருவத்தைப் பொருத்தவரையில்
ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் தாமோதரனால் இருக்க முடியவில்லை. அதையும் மீறி
அவன் மீது அன்பு செலுத்தும் விம்மியின் அன்பில் சற்றுப் பிசகி விடுகிறான். அவன். அந்தப்
பிறழ்தலுக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்கிறான். அது அவன் மரணத்தில் சென்று முடிகிறது.
இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
அனைவரும் மனப்போராட்ட நெருப்பில் வெந்து தணிந்த காடுகள். சமுதாய உணர்வோடு, நுட்பமானதும்
செறிவுமிக்கதுமான நடைத்திறம் கொண்ட, அரசியல், சமுதாயம், பொருளாதாரக் கண்ணோட்டங்களை
மிகத் துல்லியமாகப் பதிவு செய்யக் கூடிய இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்நூல் இலக்கிய
ஆர்வமுள்ளோரும், வாசிப்புப் பழக்கமுள்ளோரும் தவறாது படிக்க வேண்டிய முக்கிய நாவலாகும்.
---------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக