ஜெயந்தனின்
“இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்”–சிறுகதை – வாசிப்பனுபவம்-உஷாதீபன்
தொகுப்பு–
ஜெயந்தன்-அரும்புகளை/ தொகுதி / வெளியீடு:- நர்மதா பதிப்பகம், தி.நகர். சென்னை-17.
-------------------------------------------------------
கால்நடை ஆய்வாளராக இருந்து ஜெயந்தன் சேகரித்த அனுபவங்கள் அநேகம்.
மனிதனுக்கு வைத்தியம் பார்ப்பது
என்பதே பெரிய விஷயம். இவரு நல்ல டாக்டரா? நல்லா பார்ப்பாரா? உறவி டோசேஜா போட்டுத் தள்றாரே…!
அனுபவஸ்தர் மாதிரித் தெரிலயே…? சின்ன வயசுக்காரரா இருக்காரே…! – இப்படிப் பல.
மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பதென்றால்?
அதுவும் கடைக்கோடி கிராமத்துக்கு வேலையாகி, அங்கு கால்நடை ஆய்வாளராகச் சென்று திக்கு திசை தெரியாமல் அமர்ந்தால்?
எந்த நம்பிக்கையில் மக்கள் தங்கள்
ஆடு, மாடுகளைக் கொண்டு வந்து நிறுத்துவார்கள்? இதையெல்லாம்தான் செய்யணும்…இதையெல்லாம்
செய்யக் கூடாது என்று அவர்களிடம் எப்படிச் சொல்வது? அவர்களை எப்படி நம்ப வைப்பது? அவர்களின்
நம்பிக்கையை எப்படிப் பெறுவது?
இவைகளெல்லாம் இருக்கிறதோ இல்லையோ…அந்த
மனிதர்களை ஒதுக்கி விட முடியுமா? இந்த மாதிரி அறியாதவற்றிற்கெல்லாம் அவர்கள் மீது கோபம்
கொண்டு அவர்கள் மனிதப் பண்பற்றவர்கள் என்று கொள்ள முடியுமா?
கிராமத்து அழகை ரசிக்க ஒரு தனி
மனசு வேண்டும். அவர்களின் மொழியே தனி. நாம் திருத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் பல
வார்த்தைகளை அவர்கள் கொச்சையாக உச்சரிப்பார்கள். அப்படியான ஓரிரு சுருக்க வார்த்தைகளில்
பெரிய பொருள் அடங்கியிருக்கும். இவை ஒவ்வொன்றையும் நுணுகிப் பார்த்து, அவைகளை ரசிக்கக்
கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நம்மைப் பக்குவப் படுத்திக் கொண்டோமென்றால், நம்மை
அவர்களோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம்.
கால்நடை ஆய்வாளரான ராகவன் அப்படித்தான்
படிப்படியாக அந்த மக்களை அறிந்து கொள்கிறான். உணர்ந்து நிதானிக்கிறான். முதல் முறையாக
அந்தக் கிராமத்தைப் பார்த்த அவனுக்கு தலை சுற்றிக்கொண்டுவர சொல்லாமல் கொள்ளாமல ஓடிப்
போய்விடலாமா என்று கூடத் தோன்றுகிறது.
போஸ்டிங் போட்ட ஊர் இது. ஒப்புக்கொள்ளாமல்
என்ன செய்வது? ஒரு ஆறு மாசமாவது இருந்து கழித்துவிட்டுத்தான் வேறு ஊர் இட மாறுதலுக்கு
விண்ணப்பம் கொடுப்பது சாத்தியம். அதுவும் இதனிலும் மேம்பட்டதாக அமையும் என்பது என்ன
நிச்சயம்? இந்த இடம்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்க முடியுமா? அல்லது கிடைத்துத்தான்
விடுமா?
இன்று நண்பர்கள் நான்கு பேர் அவனைப்
பார்க்க வந்திருக்கிற விசேஷத்தில், அனுபவித்த சங்கடங்களெல்லாம் இனிய நினைவுகளாக இப்போது
மாறியிருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொண்டான் ராகவன்.
அந்த கிராமத்தில் இருக்கும் ஒரே
ஒரு பார்பர் ஷாப். அங்கு போய் அமர்ந்திருக்கும் வேளையில்… ரத்தம் தெரிய ஷேவிங் நடந்து
கொண்டிருக்கும் காட்சி….அப்டீங்கிறதுக்குள்ள சட்டுன்னு அசையுறீங்க…செத்த நேரம் கமுக்கமா
இருக்க மாட்டீகளா…ன்னு பார்பர் ஒருவனை சமாளிக்க.. நான் ஷேவிங் செட்டை ஊர்லயே மறந்திட்டு
வந்திட்டேன். சரி…அடுத்தவாட்டி போறவரைக்கும் உள்ளூர்லயே அட்ஜஸ்ட் பண்ணுவோம்னு போய்
நின்னா…ரணகளமாயிருக்கு அங்க….பரவால்லன்னு உட்கார்ந்தா அந்தாளுக்குப் போர்த்துனதையே எனக்கும் போர்த்துறான். நாத்தம் தாங்காம, வேற துணியில்லையான்னு
கேட்டேன். உடனே இப்டித் திரும்பி, அப்டித் திரும்பி சட்டுன்னு ஒண்ணைப் போர்த்தி விட்டுட்டான்.
கண்மூடித் திறக்கிறதுக்குள்ள எம்மேல வெறே துணி. அதுவும் என்னவோ வாடைதான். சரி கழுத
கெடக்குன்னு பொறுத்தக்கிட்டேன். ஷேவிங் முடிச்சி, எழுந்து நின்னா முதல்ல எனக்குப் போர்த்தினாம்பாரு…அது
அவன் இடுப்புல….அசந்து போனேன்….என்னடா விஷயம்னு பார்த்தா…அவன் கட்டுன வேட்டிய எனக்குப்
போர்த்தியிருக்கான்….
ஏண்டா…அன்டர்வேர்…கின்டர்வேர்
எதாச்சும் போட்டிருந்தானா இல்லையா…?
அதான் எனக்குச் சந்தேகம்….அது
இருந்தா ஏன் அந்தத் துண்டைச் சுத்துறான்….-எல்லோரும் சிரிக்கிறார்கள்.
ஆபீசுக்கு வர…..தீவிர கால்நடை
அபிவிருத்தித் திட்டம், செயற்கைமுறை கருவூட்டு நிலையம்….என்று போர்டைப் படிக்கிறார்கள்
நண்பர்கள்.
ஒராள் மாட்டைப் பிடித்துக் கொண்டு
வந்து நின்று அதை இன்னொரு மாடு குத்திவிட்டதாகச்
சொல்ல, என்ன கை மருந்து போட்டீங்க என்று கேட்க…அடுப்புக்கரி, சீனி, கொஞ்சம் ஒட்டட,
மூணையும் ஒண்ணா அரச்சுத் தடவுனேன்….
ஆஸ்பத்திரி இருக்கைல இப்டி கை
மருந்துங்கிற பேர்ல எதையாச்சும் செய்றதா…அதான் அந்த எடம் பச்சப் பசேல்னு இருக்கேன்னு
சந்தேகப்பட்டுக் கேட்டேன்….
என்னமோ எங்க பழக்கங்க….. – வரும்போகும்
ஆட்களெல்லாம் இந்த வார்த்தையையே சொல்லுகிறார்கள்….என்னமோ எங்க பழக்கங்க….!
ஒரு எருமை மாடு வந்து போய், பிடியில்
அடங்காமல் தவ்வி ஓடி விடுகிறது. அந்த எருமையை மனித உறவில் நிறுத்திக் கொண்டு திட்டித்
தீர்க்கிறார்கள. ஒருவன் தத்துவார்த்தமாய் –
இந்தக் கழுதகிட்ட இந்தப் பாலு
மட்டும் இல்லன்னா மனுஷன் இத கழுதையாக் கூட மதிக்க மாட்டான்….
பன்னிரெண்டு மணிக்கு மேல் புறப்பட
யத்தனித்தபோது…ஒருவன் காளமாட்டுக்கு வயிறு ஊதிக்கிட்டு ரொம்ப டேஞ்சரா இருக்குதுன்னு
வந்து நிற்கிறான். எத்தன நாளா?ன்னு கேட்க…
ஒரு வாரமாவே இருக்குது சார்…இந்தா
சரியாப் போவும்…அந்தா சரியாப் போவும்னு இருந்தேன். வெத்தல சாத்தயும், விருவ நெய்யும்
குடுத்திட்டிருந்தேன்…கடைசில இப்படியாயிடுச்சி…(விருவம் என்பது பன்றி)
வயிறு ஊதியிருக்கிறதுக்கும் பன்னி
நெய்க்கும் என்னா சம்பந்தம்?
என்னமோ எங்க பழக்கமுங்க….. –
அவன் புறப்பட, நண்பர்கள் நாங்களும்
வருகிறோம் என்க….கிளம்புகிறார்கள். மாட்டிற்கு வயிறு நான்கு பகுதிகளாய் இருக்குமாம்.
காற்று உப்புசத்திற்கு ரூமன் என்னும் பகுதி. அந்தப் பகுதியிலிருந்து அடைத்திருக்கும்
காற்றை துளை போட்டுத்தான் வெளியேத்தணும்….அப்ப சரியாகும்…
அந்த வீட்டை அடைய மாட்டைச் சுற்றிக்கொண்டு
பெரும் கூட்டம். நெருப்புக் கனலை மாட்டிற்கு முன்னால வைத்து கருவாட்டையோ எதையோ போட்டு
புகை கிளப்பிக்கொண்டிருக்க, ஒரு பெண் முறத்தில் இருந்து புடைத்த சாம்பலை மாட்டின் மீது
கொட்ட, மாட்டின் கழுத்தில் ஏதோ பச்சைக் கொடி மாலையாய்க் கிடக்க…ஒரே அமர்க்களம்.
மாடு கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு….வயித்தப்
பொத்து, காத்த எடுக்கணும்…. – சொல்கிறான். ஒருவேளை மாடு போய்விட்டதென்றால் நாமதான்
கொன்னுட்டோம் என்றல்லவா சொல்வார்கள்.?
எ்னது வயித்தப் பொத்தணுமா…? - மாட்டுக்குச்
சொந்தக்காரன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மாடு சாய்ந்து விடுகிறது. மாட்டைச் சுற்றி
நின்று கை கோர்த்துக் கொண்டு ஒப்பாரி வைக்கக் கிளம்பி விடுகிறார்கள். கூட்டம் சற்று
நேரத்தில் கலைகிறது
ரொம்பக் கைராசி….வந்து கை வைக்கிறதுக்குள்ள
மாடு போயிடுச்சி…. – ஒரு கிழவியின் ஆசீர்வாதம்.
நான்கைந்து பேராகச் சேர்ந்து கிழக்கு
நோக்கிப் போகிறார்கள். என்ன என்று பெட்டிக்கடைக்காரரிடம் கேட்க….கேதத்துக்குப் போறாங்க…மாடு
செத்துப் போச்சில்ல…..அதான்… - மனுஷன் செத்தாலும், மாடு செத்தாலும் கேதந்தான் அந்த
கிராமத்துக்கு. சிரிக்கிறார்கள்.
டேய் நம்ம ராகவன் வேல செய்ற கிராமத்துல
மாடு செத்தாலும் கன்டலன்ஸ் போவாங்கடா… - ஊரில் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்
நண்பன்.
ஒரு நாள் காலையில் ஏழு ஏழரை இருக்கும்.
தண்டோரா போட்டுக்கொண்டு ஒருவன்…சேனாபதி செத்துட்டாரு…சேனாபதி செத்துட்டாரு…..டம….டம….டம….டம…டட்…டட்…..
என்னாடாது…நேத்துவரைக்கும் குத்துக்கல்லாட்டம்
இருந்த ஆளு…ஊருக்கு அந்த ஒரே சேனாபதிதான். அந்தாளு செத்துட்டாரா? எந்தச் சேனாபதிடா…?
அந்த சேனாபதிதான்…சேனாபதி செத்துட்டாரு…சேனாபதி
செத்துட்டாரு…. அடப்பாவி மவனே…!
நாந்தான் கல்லாட்டம் நிக்கிறனடா…எந்தச்
சேனாபதியச் சொல்ற? சேனாபதியே நிறுத்திக் கேட்கிறார்.
யார்ரா தண்டரா அடிக்கச் சொன்னது?
பெரசன்டுங்க….
பஞ்சாயத்து பிரசிடென்டைப் போய்க் கேட்டதும்தான் உண்மை தெரிகிறது.
நம்ம ஜனாதிபதியே இறந்து போய்ட்டாருன்னு…. – ஆத்தாடீ…இன்னும் என்னென்ன கதைதான் இருக்கு?
கெக்கலித்து, விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
காட்டுப் பக்கம் வருகிறார்கள் நண்பர்கள். கம்பஞ்செடியைப்
பார்க்கிறார்கள். கம்பங் கதிர்….ஓடிப் போய் ஒரு கதிரை ஒடிக்கிறான் ராகவன். முற்றிய
கதிரெல்லாம் அறுத்து முடித்து, பிஞ்சுகள் மட்டும் அப்படியே…
காட்டுக்காரன் கண்டா வெரட்டப் போறான்….
நாம என்ன எடத்தையேவா தூக்கிட்டுப் போறோம்…வயக்காடு அப்டியேதான
இருக்கு…-சிரிப்பாய்ச் சொல்லிக் கொண்டு ஆளுக்கொன்றாய்.பறித்து, சிலுப்பி, திருகி, உமியை
ஊதிவிட்டு, மணிகளைக் கையில் குவித்துக் கொண்டு ருசித்து உண்கிறார்கள். பச்சைப் பாலோடு
தொண்டையில் இறங்க ருசியாய்த்தான் இருக்கிறது கம்பங்கதிர்.
பக்கத்துக் கிணற்றிலிருந்து திடீரென்று ஒரு உருவம். அட…பெருமாள்
கவுண்டர்… - குளித்துவிட்டு வருகிறாரா….? அவருடைய
காடல்லவா இது…! திட்டுவாரோ..?
ஏம்ப்பா..படிச்ச புள்ளைங்கதானா நீங்க…இப்டி ஆளுக்கு நாலு
கதிரக் கைல பறிச்சு வச்சித் தின்னா நல்லாவாயிருக்கு? – கேட்பாரோ….கதிரை மறைப்பதற்குள்
நெருங்கி விடுகிறார்.
கம்பு திங்கிறீங்களா ஐயா….ரெண்டு நாளைக்கு முந்தி வந்திருந்தா
முத்துன கதிரா கிடைச்சிருக்கும்… சொல்லிக் கொண்டே போய்க்கொண்டிருந்தார் அவர். ஈரத்
துண்டு போர்த்தின முதுகுதான் அவர்களுக்குத் தெரிந்தது.
அவர்கள் பிறந்து வளர்ந்த நகரத்திற்கென்று ஒரு நாகரீகம் உண்டு.
. பக்கத்து வீட்டுக்காரனை பத்து வருஷமானாலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை
என்பதான சமூகம். அடுத்த வீட்டில் இழவு விழுந்திருந்தாலும், இவர்கள் வீட்டு ரேடியோ அலறிக்
கொண்டிருக்கும். கூடிக் கூடி மணிக்கணக்கில் கதையளக்கிற பெண்கள், கடைசியில் ஒரு குடம்
தண்ணீருக்கு அடித்துக் கொள்வார்கள். அந்த நாகரீகத்தில் பிறந்த இந்த இளைஞர்கள்…அழையா
விருந்தாளியாய், கேளாமலே எடுத்துக் கொண்ட விருந்தைக் கூட பொருட்படுத்தாது கௌரவமாய்
ஏற்று புன்னகையோடு போய்க் கொண்டிருக்கும் கவுண்டரின் கிராமிய உபசரிப்பு. இந்த அனுபவம்
இவர்களுக்கு முற்றிலும் புதிது.
அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு வேளை தாங்கள் காலையிலிருந்து
இந்தக் கிராமத்தார்களைப் பற்றிப் பேசிப் பேசி செய்த கேலிக்கும், கிண்டலுக்கும் இந்த
பெருமாள் கவுண்டர் ஏதும் பதில் சொல்லிவிட்டுப் போகிறாரோ?
இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்… - என்ன ஒரு அருமையான உணர்த்தல்?
ஜெயந்தனின் கருக்கள் எல்லாமே சொல்ல வந்த விஷயத்தை அழுத்தம் திருத்தமாய், பொட்டில் அறைந்ததுபோல்தான்
நிறுவியிருப்பார். கிராமத்து மனிதர்களின் விகல்பமற்ற தன்மையையும், அறியாமையையும், ஆட்களை
உணர்ந்து கௌரவமாய் நடத்தும் தன்மையையும்…..இதற்கு மேல் வேறு எப்படித்தான் சொல்லிச்
செல்வது…?
அது என்னமோ எங்க பழக்கமுங்க….!!!
-----------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக