06 மே 2019

“சிக்கன் பிரியாணியும் சீதேவி படமும்“ பிரபஞ்சன் சிறுகதை வாசிப்பனுபவம் உஷாதீபன்,


“சிக்கன் பிரியாணியும் சீதேவி படமும்“                                                                                         பிரபஞ்சன் சிறுகதை வாசிப்பனுபவம்    உஷாதீபன்,                

வெளியீடு= பிரபஞ்சன் சிறுகதைகள்-1 (டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78)
     நாகராஜன் ஒவ்வொரு தடவையும் மண்ணாங்கட்டியிடம் ரூபாய் வாங்கும்போதும், அங்க கொடு, இங்க கொடு என்று சொல்லி அவனை ஏமாற்றும்போதும் நமக்கு “வதக்“  “வதக்“ என்கிறது. அடப்பாவி…இப்டி ஏமாத்தறானே…இவன் நல்லாயிருப்பானா…? என்று நம் மனம் சபிக்கிறது.
தவறுகளாகவே செய்து பழக்கப்பட்டவர்களுக்கு, காலப்போக்கில் அத்தவறுகளே பழகிப் போவதும், அதன் மீது எந்தவிதக் குற்றவுணர்ச்சியும் இல்லாது சகஜமாகி விடுவதும் நடைமுறையில் பார்த்திருக்கிறோம். ஆனால் அம்மாதிரித் தொடர்ந்து தவறுகளே செய்து கொண்டிருப்பவர்கள் அதைச் சொல்லக் கேட்டிருக்கிறோமா என்றால் இல்லை. எப்படி ஒரு அரசியல்வாதி, தான் செய்யும் ஊழல்களைப் பற்றி வாயே திறவாமல், மக்கள் நலனுக்காகவே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறானோ அது போல.  தவறு என்று தெரிந்தேதான் செய்கிறார்கள். ஆனால் அதை பகிரங்கமாகச் சொல்லிக் கொள்வதில்லை பழகிப் போன பிறகு பயம் இருப்பதில்லை. பயம் இருந்தாலும், மனதில் தோன்றினாலும் காட்டிக் கொள்ளாமல் அதை மறைக்க இன்னொன்று, இன்னொன்று என மேலும் மேலும் தவறுகளைச் செய்து கொண்டே போகிறார்கள். சுரணையற்றுப் போகிறது அவர்களுக்கு. அதுவே வாழ்க்கை என்றும் ஆகிப் போகிறது. ஆனால் அவனிடமும் எங்கோ ஒரு மூலையில் கொஞ்சம் மனிதத் தன்மை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் அது எப்போது வெளிப்படும் என்று அவனுக்கே தெரியாது.
அடுத்தவனை எத்திப் பிழைத்தே காலத்தை ஓட்டும் நாகராஜன், விடிகாலையில் கதவைத் திறந்ததும் நிற்கும் கிராமத்து அழுக்கு மூட்டை ஆளைப் பார்த்து, எடுத்த எடுப்பில் அதிர்ஷ்ட தேவதை என்று கணக்கிட்டு விடுகிறான். அந்தக் கணத்திலிருந்து பொய்யுரைக்க ஆரம்பிக்கிறான். அதை அந்த அப்பாவி வெள்ளந்தி ஆள் அப்படியே நம்புகிறான். என்ன ஒரு நம்பிக்கை இவனுக்கு?
ஏமாறுவதற்கு, ஏமாற்றுவதற்கு இப்படியொரு ஆள் கிடைக்க வேண்டுமே? என்று அந்தக் கணத்திலிருந்து அவன் கொண்டு வந்திருக்கும் பணத்தில் கை வைக்கிறான் நாகராஜன்.
தேடி வந்திருப்பது, ஊரில் வாழா வெட்டியாய்க் கிடக்கும் தன் தங்கச்சிக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுப்பதற்காக சம்பாதித்த காசையெல்லாம் சுருட்டி மடக்கிப் பொதிந்து  எடுத்து வந்திருக்கும் கிராமத்து அப்பாவி மண்ணாங்கட்டி.
அவன் நம்பி வந்திருப்பது அண்ணனைத் தேடித்தான் என்பதை அந்த அண்ணனோடு சேர்ந்து தங்கி ஊழல் செய்யும்  இந்த நாகராஜன், மண்ணாங்கட்டியைப் பார்க்கும் முதல் பார்வையிலேயே புரிந்து கொண்டு எடுத்த எடுப்பில் உஷாராகி விடுவதும்,  பிறகு நிறைவேற்றும் ஒவ்வொரு திகிடு முகிடு வேலைகளும் அத்தனையுமே அவனை முழுக்க முழுக்க நம்ப வைப்பதும், அவன் தங்கச்சிக்கு வேலை வாங்குவதற்கான முயற்சிகள் என்று காட்டுவதற்குமாகவே நகர்ந்து, சிறிது சிறிதாக அவனிடம் அந்தந்த இடங்களில் தேவையான பணத்தைப் பிடுங்குவதாக அமைந்து, அத்தனை முயற்சிகளும் தனக்காகத்தான்…என்று மண்ணாங்கட்டியை மனதார எண்ணிக் கலங்க வைத்து விடுகின்றன.
பொழுது முற்றிலும் விடியாத காலை வேளையில் ஊரிலிருந்து பட்டணத்திற்கு வந்து கண்டு பிடித்து, கதவைத் தட்டும் அந்த அழுக்கு, வெறும் ரயிலழுக்கல்ல,ஒரு கிராமத்து அழுக்குமல்ல, கையில் சாயம் போன மஞ்சள் நிறக் கல்யாணப் பையை  வைத்துக் கொண்டு பயமும், அசட்டுத்தனமும் கலந்த சிரிப்போடு நிற்கும் அதிர்ஷ்ட தேவதை. கொஞ்சம் செலவு ஆகும் என்று சொல்லி நாடி பார்த்து, நம்ப வைத்த அண்ணனை நம்பி “பணத்தோட வர்றேங்க” என்று கிளம்பிப் போன தேவதை இப்போது கண் முன்னே.
அண்ணன் உங்களக் கேட்டுக்கிட்டேயிருந்தாரு…எங்க மண்ணாங்கட்டியக் காணம், மண்ணாங்கட்டியக் காணோம்னு…. என்று எடுத்த எடுப்பில் பொருத்தமாய் வலையை விரிக்கிறான் நாகராஜன்.
கேட்டாருங்களா…? என்று மண்ணாங்கட்டி மகிழ்ந்து போக….
ஆமா…தெனம் ரெண்டு வாட்டியாவது கேட்காம இருக்க மாட்டாரு…தொகுதி மக்களாச்சே…ஓட்டுப் போடுற தெய்வங்களாச்சே…உங்களை மறந்துட முடியுமா? என்கிறான் நாகராஜன்.
மண்ணாங்கட்டிக்கு மயக்கம் வராத குறை. இம்மாம் பெரிய ஊரில், இம்மாம் பெரிய இடத்தில், இம்மாம் பெரிய மனிதர், தன் பெயரை ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி சொல்வதென்றால்…!
செஞ்சுடலாம்…வேலை முடிஞ்சிதின்னே வச்சிக்குங்க…அண்ணன் மத்தியானம் கோட்டைக்கு வந்துடுவாரு…அங்கயே பார்த்திடுவோம்…என்கிறான் நாகராஜன்.
மண்ணாங்கட்டி நிம்மதியாகி விடுகிறான்.
பிறகு மகிழ்ச்சியாக நகர்கிறது நாகராஜனுக்கு அன்றைய பொழுது.  காலை, முதல் டீ சாப்பிடுவதிலிருந்து, அருகே லாண்டரிக்கு போட்ட துணி வாங்குவது என்று வரிசையாகப்… பைசா நகர….
என்ன ஒரு அதிர்ஷ்ட நாள்…தலை இடி, சோர்வு எல்லாம் பறந்து போகின்றன. விஸ்கி, சிக்கன், பிரியாணி, கார் சவாரி…..ஸ்வாகத் ஓட்டல் மல்லிகைப்பூ….
குளித்து முடித்து அந்த லாண்டரி வேட்டியைக் கட்டும் நாகராஜனை வாய் விளந்து பார்க்கிறான் மண்ணாங்கட்டி. எங்க கிடைக்குது இப்டி ஒரு வெள்ளை வேட்டி…? சுண்ணாம்ப விட படு வெள்ளையா, பாம்புத் தோல் போல நெளியுது….? கோழி இறகு போல மினுமினுக்குது….என்று வியந்து கிடக்கும் அவன்…தான் மாற்று வேட்டி எடுத்து வர மறந்ததையும் நினைத்துக் கொள்கிறான்.
ரெண்டு பாக்கெட் கோல்டு ப்ளேக் சிகரெட் டப்பாவோடு அவர்களின் டாக்சி பயணம் தொடர்கிறது. தெரிந்த டாக்ஸி. ஒரு இருநூற முதல்ல டீசலுக்குக் கொடுத்திருங்க…பிறகு அங்க போய் பார்த்துக்கலாம்…என்று சொல்ல…பச்சை நோட்டுக்களை நம்பி உருவிக் கொடுக்கிறான் மண்ணாங்கட்டி. படிக்கும் நமக்கு….ஐயோ…இப்டி ஏமாத்துறானே….இவன் நல்லாயிருப்பானா…வௌங்காமப் போக….என்று மனசு அழுகிறது.
கோட்டைக்குப் போறோம்…அண்ணன் வருவாங்க…பார்த்துப் பேசிட்டீங்கன்னா விஷயம் முடிஞ்ச மாதிரிதான்….
செய்யுங்க…உங்களுக்குப் புண்ணியமாப் போவும்…அண்ணே…தண்ணி காணாத செடியாட்டம் அந்தப் புள்ள வாடி வதங்கி வாசல்ல உட்கார்ந்திருக்கிறதப் பார்த்தா வயிறு எறியிதுங்க….வேலை கிடைச்சா…அது வாழ்வுக்கு உத்தரவாதமாயிடும்…நாம எப்படியும் கையும் காலும் வச்சுப் பிழைச்சிக்கலாம்…
வண்டி ஜெமினியைத் தொட்டுத் திரும்புகையில் மைல் நீளத்துக்கு வைத்திருந்த சினிமா போஸ்டர்களைப் பார்க்கிறான் நாகராஜன். சீதேவி ரொம்பத் தாராளமாய்த் தெரிந்தாள்.
டேவிட்…சீதேவி படம் தமிழா…தெலுங்கா….? – டிரைவரிடம் கேட்கிறான்.
தெலுங்குதாண்ணே…நம்ம படத்துலதான் அந்தம்மா போர்த்திக்கிட்டு நடிக்கிது…
நைட் ஷோவுக்கு டிக்கெட் கிடைக்குமா?
நமக்கில்லாமயா…?
நம்ம ஊருக்கு பதினாறு வயதினிலே வந்திருக்கண்ணே…என்கிறான் மண்ணாங்கட்டி.
நாகராஜன் சொல்கிறான்….ஒரு ஆயிரம் ரூபாய தனியா எங்கிட்ட கொடுத்திடுங்க…நாலு பேரைப் பார்க்க வேண்டியிருக்கும்….மண்ணாங்கட்டி பொட்டலத்தைப் பிரித்து பயபக்தியோடு நோட்டை எடுத்துக் கொடுக்கிறான்.
கோட்டைக்குள் நுழைகையில் மண்ணாங்கட்டிக்கு உடம்பு சில்லிடுகிறது. மேனி முழுதும் புளகாங்கிதம். தன் வாழ்க்கையிலும் தன்னால் கோட்டைக்குள், ஒரு காரில் உட்கார்ந்து இப்படி நுழைய முடியும் என்று நம்பியவன் அல்லவே அவன்.
காரை விட்டு இறங்கியதும் கால் கூடக் கூசுகிறது அவனுக்கு. பெரிய பெரிய மந்திரிகளும், அதிகாரிகளும், எம்.எல்.ஏக்களும் நடக்கிற அந்தப் புண்ணிய பூமியில் நின்றதுமே, தன் பாப்பாவுக்கு வேலை கிடைத்து விட்டது என்றே நினைக்கிறான். எதிர்ப்படும் சிலரை நாகராஜன் வலிய அழைத்துப் பேசுவதையும், தன்னைக் காண்பித்துப் பேசுவதையும் கண்டு எல்லாம் தனக்காகவே என்று நம்புகிறான். தனக்காக இந்தண்ணன் எவ்வளவு பிரயத்தனப் படுகிறார் என்று மனசுக்குள் உருகுகிறான்.
அடடே…நீயா….? என்று மதியம் ரெண்டு மணிக்கு மேல் திடீரென்று எதிர்ப்படும் அண்ணனின் வார்த்தைகளில் சிலிர்த்துப் போன மண்ணாங்கட்டி…என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்து நிற்க, உன் தங்கச்சி விஷயமா பெரியவங்க கிட்டே இன்னிக்கு காலைல பேசினேன்….ஆகட்டும் பார்க்கலாம்னு சொல்லியிருக்காங்க….என்று சொல்ல…கண்களில் கண்ணீர் கசிகிறது மண்ணாங்கட்டிக்கு.
அழாதே….எல்லா விவரங்களையும் நாகராஜ் கிட்டே கொடுத்திடு….இந்தா நாகராஜ்…எல்லா பர்டிகுலர்சையும் வாங்கிட்டு, நீயே ஸ்டேஷனுக்குப் போய் வண்டியேத்தி விட்டு வந்திடு…என்கிறான் அன்பான தொனியில்.
நீங்க சொன்னதக் கொண்டு வந்திருக்கேங்க….என்று ரகசியம்போல் சொல்கிறான் மண்ணாங்கட்டி.
இந்தச் சனியனயெல்லாம் கையிலயே தொடுறதில்ல நான்…எல்லாத்தையும் இந்த நாகராஜ் பார்த்துக்குவான்….கவலையில்லாமப் போங்க மண்ணாங்கட்டி…நான் பார்த்துக்கிறேன்….என்று நம்பிக்கை கொடுக்கிறான்.
மதியம் ஒரு பிரம்மாண்டமான ஓட்டலில் முக்கிய நபர்கள் என்று மண்ணாங்கட்டியிடம் ரகசியமாய்ச் சொன்ன மூவருக்கு விருந்து நடக்கிறது. பெரியய்ய்ய பணமாய் கரைகிறது.
அத்தனையையும் முழுக்க முழுக்க நம்பி வெள்ளந்தியாய் நிற்கும் மண்ணாங்கட்டி….ரயிலடியில்….
அண்ணே…உங்களத்தான் தெய்வமா நம்பியிருக்கேன்…பெத்தவங்களையும் விழுங்கிட்டு, புருஷனையும் விட்டுட்டு அந்தப் பொட்டப் புள்ளைக்கு நீங்கதான் மனசு இறங்கணும்…அதுக்கு ஒரு வேலை வைக்கணும்…என்று சொல்லும் அவன், நாகராஜனோ, சுற்றியிருக்கும் மற்ற எவருமோ யாருமே எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் தடால் என்று அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான். வண்டி கிளம்பும் வரை கூப்பிய கையும், அழுத கண்ணுமாக நிற்கிறான்.
டிக்கெட் கிடைச்சிடுச்சா….? – என்று சினிமாவை ஞாபகப்படுத்தி டிரைவர் டேவிட்டிடம் கேட்கிறான் நாகராஜ். நமக்கில்லாமயா…என்கிறான் அவன்.
இரு சிகரெட் வாங்கி வந்திடுறேன்…என்று கடையை நோக்கி நடக்கிறான் நாகராஜன். பையில் கையைவிடுகையில் ஈரத்தால் நோட்டு பிசுபிசுக்கிறது. மண்ணாங்கட்டியின் அழுத முகம் நினைவில் வருகிறது. கண்ணீரா அது? இல்லை….வியர்வை…..அவன் காலில் விழுந்தபோது ஏற்பட்ட சொரேல் என்கிற உணர்வு மீண்டும் தோன்றுகிறது அவனுக்கு.
என்னதான் மோசமான ஆளாக இருந்தாலும், அவனிடமும் மூலையில் ஒரு மனுஷத் தன்மை ஒட்டிக்கொண்டுதான் இருக்கும் . அது எப்போவாவது, யார் மூலமாவது வெளிப்படும். அப்படியொரு கட்டாயம் நேரிடும்….அது யாரும் எதிர்பாராத ரயிலடியில் அவன் காலடியில் மண்ணாங்கட்டி விழுந்த அந்த ஒரு கணம்…..அது மண்ணாங்கட்டி அவன் மேல் வைத்த நம்பிக்கை, தூய்மையான நம்பிக்கை…கிராமத்து விகல்பமில்லாத நம்பிக்கை….
சூட்சுமம் தெரிந்தவனைக் கூட ஏமாத்தலாம்….ஆனா சதமா நம்பினவனை, தூய்மையான அன்பு செய்தவனை ஏமாத்தக் கூடாது…..அந்த மாசு மறுவில்லாதவனின் செய்கைதான் மண்ணாங்கட்டி காலில் விழுந்து கண்ணீர் சிந்திய அந்த நிமிடம்….இடம், பொருள், ஏவல் பார்க்காமல், நாலு பேர் என்ன நினைப்பாங்க என்று கருதாமல், தன் தங்கையின் வாழ்வு ஒன்றையே மனதில் வைத்து நின்ற மண்ணாங்கட்டியின் தூய்மையான செயல் அது…..
முதல் முறையாக நினைக்கிறான் நாகராஜன்……எப்படியாவது மண்ணாங்கட்டியின் தங்கைக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விட வேண்டும்….!!!
கதையைப் படியுங்கள்….அந்த உணர்வுகளிலிருந்து மீளவே முடியாது தவிப்பீர்கள். இல்லையென்றால் நீங்கள் மனிதரில்லை. தமிழர்கள் தம்மை நேசிக்கும் தமிழனை எப்போதும் நினைவில் கொள்வார்கள். இது பிரபஞ்சன் சொன்னது. நாமும் அவரை அவரது படைப்புக்களின் மூலம் தொடர்ந்து நினைவில் கொள்வோம்.
                                                                     -------------------------------




                                                                  

            
                    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...